யாருடைய தராதரங்களை நீங்கள் நம்பலாம்?
ஆப்பிரிக்காவிற்கு முதன்முறையாக விஜயம் செய்த சுற்றுலா பயணி ஒருவர் சாலையோரத்தில் விறைப்பாக நின்றுகொண்டிருந்த ஒரு மனிதனை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். விறைப்பாக நின்றவாறே சில நிமிடங்களுக்கு ஒருமுறை அந்த மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறிக்கொண்டே இருந்தார். ஏன் அந்த மனிதன் அப்படி செய்துகொண்டே இருந்தார் என்பதை பிற்பாடுதான் அந்த சுற்றுலா பயணி அறிந்துகொண்டார். தந்திக் கம்பத்தின் நிழலில் நிற்பதற்காகத்தான் அந்த மனிதன் அப்படி செய்துகொண்டிருந்தார். பிற்பகல் வெயில் அடிக்கும் திசை மாற மாற, நிழலும் மெதுமெதுவாக இடம் மாறியது.
சூரிய ஒளியால் ஏற்படும் நிழலைப் போல, மனித விவகாரங்களும் தராதரங்களும் சதா மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ‘சோதிகளின் பிதாவாகிய’ யெகோவா தேவன் மாறாதவர். “அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” என சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:17) “யெகோவாவாகிய நான் மாறாதவர்” என்று கடவுளே சொன்னதை எபிரெய தீர்க்கதரிசியாகிய மல்கியா பதிவுசெய்தார். (மல்கியா 3:6, திருத்திய மொழிபெயர்ப்பு) ஏசாயாவின் காலத்தில் இஸ்ரவேல் ஜனத்தாரிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் மாறாமல் அப்படியே இருப்பேன், நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படியே செய்துவந்தேன் [“செய்வேன், NW].” (ஏசாயா 46:4, தி.மொ.) ஆகவே, காலங்கள் கரைவது சர்வ வல்லவருடைய வாக்குறுதிகளில் நாம் வைக்கும் நம்பிக்கையை மாற்றிவிடாது.
நியாயப்பிரமாணத்திலிருந்து பாடம்
யெகோவாவின் வாக்குறுதிகள் நம்பகமானவையாகவும் மாறாதவையாகவும் இருப்பது போலவேதான் எது சரி எது தவறு என்பதைப் பற்றிய அவருடைய தராதரங்களும் மாறாதவை. ஒன்று சரியானதும் மற்றது கள்ளத்தனமானதுமான இரண்டு வகையான எடைக்கற்களை பயன்படுத்தும் வியாபாரியை நம்புவீர்களா? நிச்சயமாகவே நம்பமாட்டீர்கள். அதைப் போலவே, “கள்ளத்தராசு கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.” (நீதிமொழிகள் 11:1; 20:10) யெகோவா இஸ்ரவேலருக்கு கொடுத்த சட்டத்தில், இந்தக் கட்டளையையும் சேர்த்துக்கொண்டார்: “நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக. சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்க வேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW].”—லேவியராகமம் 19:35, 36.
இஸ்ரவேலர் அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிந்ததால் கடவுளுடைய தயவையும் அநேக பொருளாதார நன்மைகளையும் பெற்றார்கள். அதைப் போலவே, யெகோவாவின் மாறா தராதரங்களுக்குக் கீழ்ப்படிவது—எடைக்கற்களிலும் அளவைகளிலும் மாத்திரமல்ல வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கீழ்ப்படிவது—அவரை நம்புகிற வணக்கத்தாருக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. கடவுள் இவ்வாறு அறிவிக்கிறார்: “இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] நானே.”—ஏசாயா 48:17.
ஏன் இன்று தராதரங்கள் தறிகெட்டு போகின்றன?
இன்று தராதரங்கள் தறிகெட்டுப் போவதற்குரிய காரணத்தை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதல் பரலோகத்தில் நடைபெறும் போரைப் பற்றி விவரிக்கிறது, அதன் விளைவு இன்று வரை எல்லா மனிதரையும் பாதித்திருக்கிறது. அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:7-9.
அந்தப் போரினால் உடனடியாக ஏற்பட்ட விளைவு என்ன? யோவான் தொடர்ந்து கூறினார்: “ஆகையால், பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.”—வெளிப்படுத்துதல் 12:12.
1914-ல் முதல் உலகப் போர் வெடித்தபோது ‘பூமியில் குடியிருக்கிறவர்கள் ஐயோ’ என கூக்குரலிட்டார்கள். அது இன்றைய தராதரங்களிலிருந்து மிகவும் வித்தியாசமான தராதரங்களைக் கொண்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. “1914-18 வரை நடைபெற்ற மாபெரும் யுத்தம், நம்முடைய காலத்தையும் அந்தக் காலத்தையும் ஒரு தரிசுநிலத்தைப் போல தெளிவாக பிரித்துக் காட்டுகிறது” என சரித்திராசிரியர் பார்பரா டக்மன் சொல்கிறார். “அது வருங்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டிய பல உயிர்களை பலிவாங்கியது, நம்பிக்கைகளை நாசமாக்கியது, எண்ணங்களை சிதைத்தது, ஏமாற்றமெனும் ஆற்றமுடியா காயத்தை விட்டுச் சென்றது; இவ்வாறு, இரு சகாப்தங்களுக்கும் இடையே நிஜமான மற்றும் மனோ ரீதியிலான பெரும்பிளவை ஏற்படுத்தியது.” சக சரித்திராசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம் இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “1914 முதல், வளர்ந்த நாடுகளில் சரியென எல்லாரும் கருதிய தராதரங்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. . . . இந்தப் பின்னடைவின் வேகம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகவும் தீவிரமாகி வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்முடைய முன்னோர்கள் இதை காட்டுமிராண்டித்தனம் என அழைத்திருப்பார்கள், அதே நிலைமை இப்பொழுது திரும்பியுள்ளது விசனகரமானது.”
மானிடம்—இருபதாம் நூற்றாண்டின் தார்மீக சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் ஜானத்தன் குளோவர் என்ற எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நம்முடைய காலத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று தார்மீக நெறி மறைந்துவருவதாகும்.” மேலை நாடுகளில் மதம் சீரழிந்து வருவதால் வெளிப்புற மூலங்களிலிருந்து வரும் ஒழுக்க சட்டத்தைக் குறித்து அவர் சந்தேகவாதியாக இருக்கிறபோதிலும், அவர் இவ்வாறு எச்சரிக்கிறார்: “நம்மில் மத ரீதியிலான தார்மீக சட்டத்தில் நம்பிக்கை வைக்காதவர்களுக்கும் [தார்மீக சட்டம்] மறைந்துவருவது கவலைக்குரியதாக இருக்க வேண்டும்.”
இன்றைய நம்பிக்கை துரோகமும்—அது வியாபாரத்திலோ அரசியலிலோ மதத்திலோ தனிப்பட்ட அல்லது குடும்ப உறவுகளிலோ இருந்தாலும்—அதன் படுபயங்கரமான விளைவுகளும், பூமியின் குடிகள் மீதான பிசாசினுடைய பொல்லாத சதித்திட்டத்தின் பாகமாக இருக்கின்றன. கடைசிவரை போர் புரிவதற்கும், கடவுளுடைய தராதரங்களின்படி வாழ முயற்சி செய்பவர்கள் அனைவரும் தன்னோடு அழிந்துபோவதற்கும் சாத்தான் திட்டமிட்டிருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 12:17.
வெளியேறுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா, பரவலாக காணப்படும் இந்த நம்பிக்கை துரோகத்திற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு பதிலளிக்கிறார்: “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) அந்த வாக்குறுதியை நாம் நம்பலாம், ஏனெனில் இந்த நோக்கத்தை நிறைவேற்ற கடவுளிடம் வல்லமையும் இருக்கிறது, அதை நிறைவேற்றுவதாக உத்தரவாதமும் அளிக்கிறார். ‘தம்முடைய வாயிலிருந்து புறப்படும் எந்த வசனத்தையும்’ குறித்து யெகோவா இவ்வாறு அறிவிக்கிறார்: “அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” உண்மையிலேயே நம்பகமான வாக்குறுதி!—ஏசாயா 55:11; வெளிப்படுத்துதல் 21:4, 5.
கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்தல்
இன்றைய உலகில் தராதரங்கள் ஊசல்போல ஆடிக்கொண்டிருக்கின்றன, சீரழிந்தும் வருகின்றன. இப்படிப்பட்ட ஓர் உலகில், நடத்தை சம்பந்தமாக பைபிளின் தராதரங்களின்படி வாழ யெகோவாவின் சாட்சிகள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அதன் விளைவாக, பெரும்பான்மையோரிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாக இருக்கிறார்கள், இது மற்றவர்களுடைய கவனத்தை கவர்ந்திருக்கிறது, அதேசமயத்தில் மற்றவர்களுடைய பரிகாசத்தையும் பெற்றிருக்கிறது.
லண்டனில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில், யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே கிறிஸ்தவர்களா என பிரதிநிதி ஒருவரிடம் டிவி ரிப்போர்ட்டர் கேட்டார். அதற்கு அந்தப் பிரதிநிதி இவ்வாறு பதிலளித்தார்: “ஆம், நிச்சயமாகவே கிறிஸ்தவர்கள்தான், ஏனென்றால் இயேசுவே எங்களுடைய மாதிரி. இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் சுயநலமே மலிந்துகிடக்கிறது, நாங்கள் இயேசு கிறிஸ்துவை எங்களுடைய வழியாகவும் சத்தியமாகவும் ஜீவனாகவும் கருதி, அவர்மீதே எங்களுடைய சிந்தையை ஒருமுகப்படுத்துகிறோம். அவர் திரித்துவத்தின் பாகமல்ல, ஆனால் கடவுளுடைய குமாரன் என நாங்கள் நம்புகிறோம், ஆகவே பைபிளைப் பற்றி நாங்கள் அறிந்திருப்பது இன்றைய பிரசித்திபெற்ற மதத்திலிருந்து வேறுபடுகிறது.”
இந்தப் பேட்டி பிபிஸி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டபோது, அந்த ரிப்போர்ட்டர் இவ்வாறு சொல்லி அந்த நிகழ்ச்சியை முடித்தார்: “யெகோவாவின் சாட்சிகள் ஏன் நம்முடைய கதவை தட்டுகிறார்கள் என்பதைப் பற்றி நான் நிறையவே தெரிந்துகொண்டேன். 25,000 ஜனங்களும் மிகவும் நேர்த்தியாக உடையணிந்து, மிகவும் கண்ணியமாக நடந்துகொள்வதை ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் நான் இதுவரை பார்த்ததில்லை.” கடவுளுடைய மாறா தராதரங்களைப் பின்பற்றுவது எவ்வளவு ஞானமானது என்பதற்கு உண்மையிலேயே உலகத்தாரிடமிருந்து சிறந்த அத்தாட்சி!
தாங்கள் உருவாக்காத தராதரங்களின்படி வாழும் எண்ணத்தை சிலர் ஒதுக்கித் தள்ளினாலும், உங்களுடைய பைபிளை ஆராய்ந்து பார்த்து, கடவுளுடைய தராதரங்கள் என்ன என்பதை கற்றுக்கொள்ளும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். ஆனால் மேலோட்டமான ஆராய்ச்சியில் திருப்தியடைந்துவிடாதீர்கள். அப்போஸ்தலன் பவுலின் புத்திமதியை பின்பற்றுங்கள்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12:2) உங்களுடைய பகுதியிலுள்ள ராஜ்ய மன்றத்திற்கு விஜயம் செய்து சாட்சிகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். பைபிளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து, கடவுளுடைய தராதரங்களின்படி வாழ முயற்சி எடுப்பதன் மூலம் அவர் மீதிருக்கும் நம்பிக்கையை செயலில் காண்பிக்கும் சாதாரண ஜனங்கள்தான் அவர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கடவுளுடைய நம்பகமான, மாறா தராதரங்களைப் பின்பற்றுவது உங்களுக்கு நிச்சயமாகவே ஆசீர்வாதங்களை கொண்டுவரும். கடவுளே விடுக்கும் இந்த அழைப்புக்கு செவிகொடுங்கள்: “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”—ஏசாயா 48:18.
[பக்கம் 5-ன் படங்கள்]
இன்று வியாபாரத்தில், அரசியலில், மதத்தில், குடும்ப உறவுகளில் எங்கும் நம்பிக்கை துரோகம்