ஆவிக்குரிய சுகத்தை அளிக்கும் பாவ அறிக்கை
“நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.” (சங்கீதம் 32:3, 4) நெஞ்சை உருக்கும் இவ்வார்த்தைகள், பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் புண்பட்ட மனதை, அதாவது அவர் செய்த மோசமான பாவத்தை அறிக்கையிடுவதற்குப் பதிலாக மறைத்து வைத்ததால் விளைந்த வேதனையை வெளிப்படுத்துகின்றன.
தாவீதிடம் மேலோங்கி நிற்கும் திறமைகள் இருந்தன. அவர் பலம்படைத்த போர்வீரர், திறம்பட்ட அரசியல் மேதை, கவிஞர், இசை கலைஞர். ஆனாலும் அவர் தன்னுடைய திறமைகளின் மீதல்ல, தன் கடவுள்மீதே சார்ந்திருந்தார். (1 சாமுவேல் 17:45, 46) அவருடைய இருதயம், ‘யெகோவாவோடே முழுவதும் இசைந்திருந்ததாக’ விவரிக்கப்படுகிறது. (1 இராஜாக்கள் 11:4, தி.மொ.) ஆனால் அவர் செய்த ஒரு பாவமோ, தண்டனைக்குரிய பெரும் குற்றமாக இருந்தது, இதையே அவர் சங்கீதம் 32-ல் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கலாம். அவருடைய பாவத்திற்கு வழிநடத்தின சூழ்நிலைமைகளை ஆராய்வதன்மூலம் நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். கடவுளுடனான நம் உறவை திரும்பவும் புதுப்பிப்பதற்கு தவிர்க்க வேண்டிய படுகுழிகளை பகுத்தறிவதோடு நம் பாவங்களை அறிக்கையிடுவதன் அவசியத்தையும் காண்போம்.
உண்மையுள்ள அரசர் பாவத்தில் வீழ்ந்தார்
இஸ்ரவேலர் அம்மோனியருக்கு எதிராக போரில் ஈடுபட்டிருந்தனர், ஆனால் தாவீதோ எருசலேமிலேயே இருந்துவிட்டார். ஒருநாள் மாலை வேளையில் தன் அரண்மனை மேல்மாடியில் உலாவுகையில் அருகே இருந்த வீட்டில் ஓர் அழகிய பெண் குளிப்பதைப் பார்த்தார். அவர் தன் ஆசையைக் கட்டுப்படுத்திக்கொள்ள தவறி அவளை காம உணர்வோடு பார்க்க தொடங்கினார். அவள் பெயர் பத்சேபாள், தன் இராணுவத்தில் பணிபுரியும் வீரனாகிய உரியாவின் மனைவி என்பதை அறிந்துகொண்டு அவளை வரவழைத்தார், விபசாரம் செய்தார். கொஞ்ச நாட்களில் பத்சேபாள் தான் கருவுற்றிருப்பதை தாவீதுக்குத் தெரிவித்தாள்.—2 சாமுவேல் 11:1-5.
தாவீது வசமாய் மாட்டிக்கொண்டார். அவர்களுடைய பாவ செயல் வெட்டவெளிச்சமானால் இருவருமே மரணத்தை தண்டனையாக பெறுவார்கள். (லேவியராகமம் 20:10) எனவே அவர் சதித்திட்டத்தில் இறங்கினார். பத்சேபாளின் கணவனாகிய உரியாவை போர்க்களத்திலிருந்து வரவழைத்தார். போரைப் பற்றிய எல்லா விவரங்களையும் உரியாவிடம் விசாரித்தறிந்த பின்பு, வீட்டுக்குச் செல்லும்படி அவனுக்குக் கட்டளையிட்டார். இப்படி செய்வதன் மூலம் பத்சேபாளின் பிள்ளைக்கு உரியாவே தகப்பன் என தோன்றும்படி செய்ய தாவீது நினைத்தார்.—2 சாமுவேல் 11:6-9.
தாவீது நினைத்தபடி உரியா தன் மனைவியிடம் செல்லாததால் அவர் பெரிதும் எரிச்சலடைந்தார். போரின் கொடுமையை படையினர் அங்கே சகித்துவருகையில், தான் மட்டும் வீட்டுக்குப் போவது நியாயமானதல்ல என உரியா சொன்னார். இஸ்ரவேலரின் படை போர்களத்தில் இருக்கையில் ஆண்கள் தங்கள் மனைவிகளுடன்கூட பாலுறவு கொள்வதை தவிர்த்தனர். ஆசாரமுறைப்படி அவர்கள் தங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. (1 சாமுவேல் 21:5) எனவே தாவீது, தன்னுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு உரியாவை அழைத்தார், குடித்து வெறிக்கும் அளவுக்கு மதுபானத்தை அருந்த செய்தார்; இருந்தும் உரியா தன் மனைவியை நாடி வீட்டுக்கு செல்லவில்லை. உரியாவின் உண்மையுள்ள நடத்தை தாவீதின் பெரும் பாவத்தைக் கண்டனம் செய்தது.—2 சாமுவேல் 11:10-13.
தன் பாவச் சங்கிலியே தாவீதை இறுக்கியது. செய்வதறியாது தவித்த தாவீது தப்பிக்க ஒரேவொரு வழியிருப்பதைக் கண்டார். படைத் தலைவன் யோவாபுக்கு ஒரு கடிதத்தை எழுதி உரியாவிடம் கொடுத்து போர் முனைக்கு அவரை அனுப்பி வைத்தார். “மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள்” என்ற அந்த சுருக்கமான கடிதத்தில் அவருடைய உள்நோக்கம் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. அந்த சுருக்கமான கடிதத்தின்மூலம், பலம்படைத்த அரசர் தன் செயல்களை எல்லாம் மூடி மறைத்துவிட்டதாக நினைத்து உரியாவை சாகும்படி அனுப்பி வைத்தார்.—2 சாமுவேல் 11:14-17.
பத்சேபாள் தன் கணவனுக்காக துக்கிக்கும் நாட்கள் முடிந்தவுடன் தாவீது அவளை மணந்துகொண்டார். காலம் உருண்டோடியது, அவர்களுக்கு பிள்ளை பிறந்தது. இவை எல்லாம் நடக்கையிலும் தாவீது தன் பாவங்களைக் குறித்து வாய் திறக்கவில்லை. தன் செயல்களுக்கு நியாயம் கற்பித்துக்கொள்ள அவர் முயற்சி செய்து வந்திருக்கலாம். மற்றவர்களைப்போல் உரியாவும் கௌரவமான முறையில் போரில் மரிக்கவில்லையா? மேலும், தன் மனைவியிடம் செல்ல மறுப்பதன் மூலம் அவன் தன் அரசருக்குக் கீழ்ப்படியாமல் போகவில்லையா? பாவத்திற்கு நியாயம் கற்பிக்க ‘திருக்குள்ள இருதயம்’ எல்லா விதத்திலும் முயற்சி செய்யும்.—எரேமியா 17:9; 2 சாமுவேல் 11:25.
பாவத்தில் வீழ்த்திய முட்டாள்தனம்
நீதியை நேசிப்பவரான தாவீதால் விபசாரத்திற்கும் கொலைக்கும் அடிபணிய எப்படி முடிந்தது? அவருடைய பாவத்தின் விதைகள் கொஞ்ச காலமாகவே விதைக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. தன் வீரர்களுக்குப் பக்கபலமாக இருந்து யெகோவாவின் சத்துருக்களை எதிர்த்து போரிட தாவீது போயிருக்கலாமே என்று நாம் யோசிக்கலாம். அதற்கு மாறாக, தாவீது தன்னுடைய அரண்மனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்; போரைப் பற்றிய நிஜங்கள் அவர் மனதை ஆக்கிரமிக்காததால் உண்மையுள்ள ஒரு வீரனின் மனைவியிடம் எழுந்த ஆசையை உடனடியாக மனதிலிருந்து உதறித் தள்ளவில்லை. இன்று, சபைகளின் ஆவிக்குரிய காரியங்களில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருப்பதும், பிரசங்க ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வதும் உண்மை கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பாய் அமையும்.—1 தீமோத்தேயு 6:12.
நியாயப்பிரமாணத்தின் ஒரு பிரதியை எழுதி வைத்து, அதை தினந்தோறும் வாசிக்கும்படி இஸ்ரவேலின் அரசருக்கு கட்டளையிடப்பட்டிருந்தது. இதற்கான காரணத்தை பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் [“யெகோவாவுக்கு,” NW] பயந்திருக்கும்படி கற்றுக் கொள்ளும்பொருட்டு.” (உபாகமம் 17:18-20) தாவீது இந்த மோசமான பாவங்களைச் செய்த காலத்தில் அந்தக் கட்டளையை அவர் பின்பற்றாமல் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. தவறாமல் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும், தியானிப்பதும் இந்தக் கொடிய காலங்களில் தவறுசெய்வதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நிச்சயம் உதவும்.—நீதிமொழிகள் 2:10-12.
மேலும், “பிறனுடைய மனைவியை . . . இச்சியாதிருப்பாயாக” என திட்டவட்டமாய் பத்துக் கட்டளைகளில் கடைசி கட்டளை குறிப்பிட்டது. (யாத்திராகமம் 20:17) இந்தச் சமயத்திற்குள் தாவீதுக்கு பல மனைவிமாரும் வைப்பாட்டிகளும் இருந்தார்கள். (2 சாமுவேல் 3:2-5) இருந்தும் அவர் இன்னொரு அழகான பெண்ணை அடைய ஆசைப்படாமல் இருக்கவில்லை. “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என்ற இயேசுவின் வார்த்தைகளில் புதைந்துள்ள ஆழமான அர்த்தத்தை இந்தப் பதிவு நமக்கு நினைப்பூட்டுகிறது. (மத்தேயு 5:28) இத்தகைய தவறான ஆசைகளுக்கு இடங்கொடுக்காமல் நம் மனதிலும் இருதயத்திலும் இருந்து அவற்றை ஒழித்துக்கட்டிவிடுவோமாக.
மனந்திரும்புதலும் இரக்கமும்
தாவீதின் பாவத்தைப் பற்றிய ஒளிவுமறைவற்ற பைபிள் பதிவு, ஒருவருடைய பாலின ஆசையைத் திருப்திப்படுத்துவதற்காக நிச்சயமாகவே அங்கு பதிவுசெய்யப்படவில்லை. யெகோவாவின் முதன்மையான பண்புகளில் ஒன்றான இரக்கத்தைப் புரிந்துகொள்ள இந்தப் பதிவு நமக்கு வாய்ப்பளிக்கிறது; அவரது இரக்கம் வல்லமை வாய்ந்தது, நெகிழச் செய்கிறது.—யாத்திராகமம் 34:6, 7.
பத்சேபாள் ஒரு குமாரனைப் பெற்றெடுத்த பின்பு, தாவீதின் குற்றத்தை அவருக்கு நேரடியாக உணர்த்த தீர்க்கதரிசியாகிய நாத்தானை யெகோவா அனுப்பினார். இது இரக்கத்தின் செயலே. இப்படி யாரும் தாவீதை அணுகாது இருந்திருந்தால் அவரும் வாய் திறந்திருக்க மாட்டார், பாவப்போக்கை உணராதவராக ஆகியிருப்பார். (எபிரெயர் 3:13) தாவீது கடவுளுடைய இரக்கத்திற்குச் சாதகமாக செயல்பட்டது சந்தோஷமான விஷயம். நாத்தானின் திறமையான ஆனால் தெளிவான வார்த்தைகள் தாவீதின் மனசாட்சியை உறுத்தியதால் கடவுளுக்கு விரோதமாய்ப் பாவம் செய்ததை தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். உண்மையில், பத்சேபாளுடன் தாவீது செய்த பாவத்தைக் குறிப்பிடுகிற சங்கீதம் 51, அவர் மனந்திரும்பி தன் மோசமான பாவத்தை ஒப்புக்கொண்ட பின்பு இயற்றப்பட்டது. மோசமான பாவத்தை நாம் செய்துவிட்டால், இருதயம் கடினப்பட்டுப் போக ஒருபோதும் நாம் அனுமதியாதிருப்போமாக.—2 சாமுவேல் 12:1-13.
தாவீதுக்கு மன்னிப்பு கிடைத்தது, ஆனால் தண்டிக்கப்படாமலோ தன் பாவத்தின் விளைவுகளை அனுபவிக்காமலோ தப்பித்துக்கொள்ளவில்லை. (நீதிமொழிகள் 6:27) அவரை தண்டிக்காமல் எப்படி விட முடியும்? எல்லாவற்றையும் கடவுள் கண்டும் காணாதவர்போல் இருந்தால், அவருடைய தராதரங்கள் மதிப்பற்றவையாய் போய்விடுமே. அதுமட்டுமல்ல, தன் மோசமான மகன்களை சரிவர கண்டிக்காததால் அவர்கள் தவறான செயல்களைத் தொடர்ந்து செய்ய அனுமதித்த பிரதான ஆசாரியனாகிய ஏலியைப் போல் கண்டிப்பற்றவராய் இருந்திருப்பாரே. (1 சாமுவேல் 2:22-25) எனினும், தன் பாவத்தை எண்ணி வருந்துபவருக்கு யெகோவா தம் அன்பு கலந்த தயவைக் காட்டாமல் இருப்பதில்லை. அவருடைய இரக்கம், புத்துணர்ச்சியூட்டும் குளிர்ந்த நீரைப் போலிருந்து பாவத்தின் விளைவுகளைச் சகிக்க பாவம் செய்தவனுக்கு உதவும். கடவுள் மன்னிப்பதன் மூலம் காட்டும் அன்பும், சகவிசுவாசிகளுடன் கட்டியெழுப்பும் கூட்டுறவும், தவறுசெய்தவனை ஆவிக்குரிய நிலைக்கு மீண்டும் கைகொடுத்து தூக்கிவிடும். கிறிஸ்துவினுடைய கிரயபலியின் அடிப்படையில் மனந்திரும்பினவன் கடவுளுடைய ‘கிருபையின் ஐசுவரியத்தை’ ருசிக்கலாம்.—எபேசியர் 1:7.
‘சுத்த இருதயமும் புதுப்பிக்கப்படும் ஆவியும்’
தாவீது பாவத்தை அறிக்கையிட்ட பின்பு, தன்னை தகுதியற்றவராக கருதி நம்பிக்கையற்ற மனநிலையை வளர்த்துக்கொள்ளவில்லை. அவ்வாறு எல்லாவற்றையும் அறிக்கை செய்த பின்பு எழுதின சங்கீதங்களில் அவர் சொன்ன வார்த்தைகள், அவர் பெற்ற மனநிம்மதியையும், கடவுளை உண்மையுடன் சேவிப்பதற்கான அவருடைய தீர்மானத்தையும் வெளிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சங்கீதம் 32-ஐ ஆராய்வோம். முதலாம் வசனத்தில், “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW]” என வாசிக்கிறோம். எவ்வளவு மோசமான பாவத்தை ஒருவர் செய்திருந்தாலும் உண்மையான மனந்திரும்புதலைக் காட்டுகையில் சந்தோஷமான பலனை பெற முடியும். இப்படிப்பட்ட உண்மையான மனந்திரும்புதலைக் காட்ட ஒரு வழி, தாவீதைப் போல் தன் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகும். (2 சாமுவேல் 12:13) யெகோவாவுக்கு முன்பாக தான் செய்தது சரியே என நிரூபிக்கவோ பழியை மற்றவர்கள்மீது சுமத்தவோ அவர் முயலவில்லை. “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன். தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” என 5-ம் வசனம் சொல்கிறது. மனந்திறந்து அறிக்கையிடுவது மனசமாதானத்தைத் தருகிறது; எனவே கடந்த கால தவறுகளின் நிமித்தம் வாட்டி வதைக்கும் மனசாட்சியின் உறுத்துதலை ஒருவர் இனிமேலும் அனுபவிக்க வேண்டியதில்லை.
யெகோவாவின் மன்னிப்புக்காக கெஞ்சின பின்பு, “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” என தாவீது விண்ணப்பித்தார். (சங்கீதம் 51:10) ‘சுத்த இருதயத்திற்காகவும்’ ‘புதுப்பிக்கப்படும் ஆவிக்காகவும்’ தாவீது வேண்டிக் கொண்டது, தன்னிடம் பாவத்தன்மை இருப்பதையும் தன் இருதயத்தைச் சுத்திகரித்து, புதிய தொடக்கத்திற்கு கடவுளுடைய உதவி தனக்குத் தேவைப்படுவதையும் உணர்ந்ததைக் காட்டுகிறது. அவர் சுயபச்சாதாபத்திற்கு இடங்கொடுங்காமல் கடவுளுக்குச் செய்யும் தன் சேவையில் தொடர்ந்து முன்னேற தீர்மானமாய் இருந்தார். “ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்” என ஜெபித்தார்.—சங்கீதம் 51:15.
தாவீது உண்மையாக மனந்திரும்பி, தம்மைச் சேவிக்க திடதீர்மானத்துடன் முயன்றதைக் கண்டபோது யெகோவா என்ன செய்தார்? “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்ற சந்தோஷம் தரும் உறுதியை அவர் தாவீதுக்கு மீண்டும் அளித்தார். (சங்கீதம் 32:8) மனந்திரும்பினவரின் உணர்ச்சிகளுக்கும் தேவைகளுக்கும் யெகோவா தனிப்பட்ட விதத்தில் கவனம் செலுத்துகிறார் என்பதற்கு இது உறுதியளிப்பதாய் உள்ளது. தாவீதுக்கு மேலுமதிக உட்பார்வை அளிக்க, அதாவது காரியங்களை மேலோட்டமாக நோக்காமல் ஆழமாக ஆராய்ந்தறியும் திறமையை அளிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இதனால் எதிர்காலத்தில் சோதனை வந்தால், தன்னுடைய செயல்களின் விளைவையும், மற்றவர்கள்மீது அவை ஏற்படுத்தும் பாதிப்பையும் கண்டறிந்து கொண்டு விவேகத்துடன் செயல்பட முடியும்.
தாவீதின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மோசமான பாவத்தை செய்திருக்கும் எல்லாருக்கும் உற்சாகத்தை அளிப்பதாய் உள்ளது. நம்முடைய பாவத்தை அறிக்கையிட்டு உண்மையான மனந்திரும்புதலைக் காட்டுவதன்மூலம், யெகோவா தேவனுடனான நம் உறவை, வெகு அருமையான நம் உடைமையை நாம் திரும்பப் பெறலாம். மூடிமறைப்பதால் ஏற்படும் சகிக்க முடியாத வேதனையைப் பார்க்கிலும், அல்லது கலகத்தனமான போக்கில் கடினப்பட்டுப் போவதன் மூலம் பேரழிவை சந்திப்பதைப் பார்க்கிலும் தற்காலிக வேதனையையும் வெட்கத்தையும் சகிப்பது எத்தனையோ மேல். (சங்கீதம் 32:9) ஆகவே, “இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிற” அன்பும் இரக்கமுமுள்ள கடவுளின் மன்னிப்பை நாம் பெறலாம்.—2 கொரிந்தியர் 1:3.
[பக்கம் 31-ன் படம்]
உரியா சாகும்படி செய்வதன் மூலம் தன் பாவத்தின் விளைவுகளிலிருந்து தாவீது தப்பிவிட நினைத்தார்