வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
விபச்சார குற்றத்திற்காக தாவீதும் பத்சேபாளும் அல்லவா கொல்லப்பட்டிருக்க வேண்டும், அதற்குப் பதிலாக அவர்களுடைய குழந்தை ஏன் இறந்தது?
“புருஷனுக்கு விவாகம் பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடு சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாக வேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்” என நியாயப்பிரமாணம் திட்டவட்டமாய்க் குறிப்பிட்டிருந்தது. (உபாகமம் 22:22) பத்சேபாளுடன் தாவீது விபச்சாரம் செய்ததைக் குறித்து நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த மனித நீதிபதிகளை யெகோவா அனுமதித்திருந்தால், இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பார்கள். மனித நீதிபதிகளுக்கு மற்றவர்களுடைய இருதயத்தை அறிய முடியாததால், உண்மை விவரங்களின் அடிப்படையில், தவறு செய்தவர்களுடைய செயலுக்கு ஏற்றபடி தீர்ப்பு வழங்க வேண்டியிருந்தது. விபச்சார குற்றத்திற்கு மரண தண்டனை அளிக்க வேண்டியிருந்தது. அக்குற்றத்தை மன்னிக்க இஸ்ரவேல் நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லாதிருந்தது.
மறுபட்சத்தில், மெய்க் கடவுளால் மனிதருடைய இருதயத்தை அறிய முடியும், தகுந்த காரணம் இருக்கையில் பாவங்களை மன்னிக்கவும் முடியும். தாவீதுடன் யெகோவா ராஜ்ய உடன்படிக்கை செய்திருந்ததால், வழக்கத்திற்கு மாறாக தாமே அந்த வழக்கை விசாரணை செய்யத் தீர்மானித்தார். (2 சாமுவேல் 7:12-16) அவர் ‘சர்வலோக நியாயாதிபதியாக’ இருப்பதால் அப்படி தீர்மானிக்க அவருக்கு உரிமை இருக்கிறது.—ஆதியாகமம் 18:25.
தாவீதின் இருதயத்தை ஆராய்ந்தபோது யெகோவா எதைக் கண்டார்? 51-ம் சங்கீதத்தின் தலைப்பு அதைத் தெரிவிக்கிறது. ‘பத்சேபாளிடத்தில் தாவீது பாவத்திற்குட்பட்ட பின்பு நாத்தான் தீர்க்கதரிசி அவரிடத்தில் வந்தபோது’ தாவீது வெளிப்படுத்திய உணர்ச்சிகளை அந்தச் சங்கீதம் தெரிவிப்பதாக அது கூறுகிறது. சங்கீதம் 51:1-4 இவ்வாறு குறிப்பிடுகிறது: “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்.” இவ்வாறு தாவீது மிகுந்த குற்றவுணர்வால் புழுங்கியதை உள்ளப்பூர்வ மனந்திரும்புதலுக்கு அத்தாட்சியாக யெகோவா கருதியிருக்க வேண்டும்; அதனால், தவறு செய்த அந்த இருவர் மீதும் இரக்கம் காட்டுவதற்குத் தகுந்த காரணம் இருந்ததாக அவர் தீர்மானித்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, தாவீதுதானே இரக்க குணமுள்ளவராக இருந்தார்; அப்படிப்பட்ட குணம் படைத்தவர்களுக்கு யெகோவா இரக்கம் காட்டுகிறார். (1 சாமுவேல் 24:4-7; மத்தேயு 5:7; யாக்கோபு 2:13) ஆகவே, தாவீது தன் பாவத்தை ஒப்புக்கொண்டபோது, நாத்தான் அவரிடம், “நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்” என்று சொன்னார்.—2 சாமுவேல் 12:13.
தாவீதும் பத்சேபாளும் தாங்கள் செய்த பாவத்தின் விளைவுகளிலிருந்து துளியும் தப்பவில்லை. “இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும்” என்று தாவீதிடம் நாத்தான் சொன்னார். தாவீது ஏழு நாட்கள் உபவாசமிருந்து துக்கித்தபோதிலும் பிள்ளை வியாதிப்பட்டு இறந்தது.—2 சாமுவேல் 12:14-18.
உபாகமம் 24:16-ல், ‘பிதாக்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்பட வேண்டாம்’ என சொல்லப்பட்டிருப்பதால், தாவீதின் அந்தப் பிள்ளை ஏன் இறக்க வேண்டியிருந்தது என்பதைப் புரிந்துகொள்வது சிலருக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் அந்த வழக்கை மனித நீதிபதிகள் விசாரித்திருந்தால் தாய், தந்தை, பிள்ளை ஆகிய மூவருமே கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அந்தப் பிள்ளை இறந்தது, பத்சேபாளுடன் செய்த பாவத்தை யெகோவா எந்தளவுக்கு வெறுத்தார் என்பதை நன்கு உணர தாவீதுக்கு உதவியிருக்கும். “தேவனுடைய வழி உத்தமமானது,” ஆகவே அந்த விஷயத்தை யெகோவா நியாயமான விதத்தில் கையாண்டிருப்பார் என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம்.—2 சாமுவேல் 22:31.
[பக்கம் 31-ன் படம்]
தாவீது உண்மையான மனந்திரும்புதலை வெளிக்காட்டினார்