வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மீட்பின் கிரய பலியினுடைய மதிப்பின்மூலம் பாவங்களை மன்னிப்பதற்கு யெகோவா மனமுள்ளவராக இருப்பதைக் கருதுகையில், சபையிலுள்ள மூப்பர்களிடம் கிறிஸ்தவர்கள் அறிக்கையிடுவது ஏன் அவசியம்?
தாவீதும் பத்சேபாளும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தெரிகிறபடி, தாவீதின் பாவம் படுமோசமானதாக இருந்தபோதிலும் அவர் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியதால் தாவீதின் பாவத்தை யெகோவா மன்னித்தார். தீர்க்கதரிசியாகிய நாத்தானிடம் தாவீது: “நான் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்” என்று வெளிப்படையாக அறிக்கையிட்டார்.—2 சாமுவேல் 12:13, தி.மொ.
எனினும், ஒரு பாவியின் உள்ளப்பூர்வ அறிக்கையை யெகோவா ஏற்று, மன்னிப்பை அருளுவது மட்டுமல்லாமல், படிப்படியாக ஆவிக்குரிய சுகநலம் பெறுவதற்கு உதவ அன்புள்ள ஏற்பாடுகளையும் செய்கிறார். தாவீதின் காரியத்தில், அந்த உதவி தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலம் வந்தது. இன்று, கிறிஸ்தவ சபையில், ஆவிக்குரிய முதிர்ச்சியடைந்த ஆண்கள் அல்லது மூப்பர்கள் இருக்கிறார்கள். சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு விளக்கிச் சொல்கிறார்: “உங்களில் ஒருவன் [ஆவிக்குரிய] வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் [“யெகோவா,” NW] அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.”—யாக்கோபு 5:14, 15.
அனுபவம் வாய்ந்த மூப்பர்கள், பாவியின் இருதய வேதனையைத் தணிக்க அதிகம் செய்யக்கூடும். அந்தப் பாவியை அவர்கள் கையாளுகையில் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்ற பிரயாசப்படுகிறார்கள். கண்டிப்பான சிட்சை தகுந்ததாக இருந்தாலும், அவர்கள் ஒருபோதும் இரக்கமற்றவர்களாய் நடந்துகொள்ள விரும்புகிறதில்லை. மாறாக, அந்த நபருடைய உடனடி தேவைக்கு இரக்கத்துடன் சிந்தனை செலுத்துகிறார்கள். கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி, தவறு செய்தவரின் சிந்தனையை சரிப்படுத்த பொறுமையுடன் பிரயாசப்படுகிறார்கள். (கலாத்தியர் 6:1) ஒருவர் தன் பாவத்தை தானாக அறிக்கையிடாவிடினும், நாத்தான் தாவீதிடம் சென்று பேசியபோது அவர் மனந்திரும்பியதைப் போல், மூப்பர்கள் அணுகி விசாரிக்கையில் மனந்திரும்பும்படி உந்துவிக்கப்படலாம். இவ்வாறு மூப்பர்களால் அளிக்கப்படும் ஆதரவு, தவறு செய்தவர் அந்தப் பாவத்தைத் திரும்பவும் செய்வதை தவிர்க்கவும், பழக்கமாய் பாவம் செய்பவராக கடினப்பட்டுப்போகும் ஆபத்தைத் தவிர்க்கவும் உதவிசெய்கிறது.—எபிரெயர் 10:26-31.
ஒருவர் வெட்கக்கேடான செயல்களை மற்றவர்களிடம் தெரிவித்து மன்னிப்பு கேட்பது நிச்சயமாகவே எளிதல்ல. இதற்கு உள்ளப்பூர்வ பலம் தேவைப்படுகிறது. எனினும், அதற்கு மாறானதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். தன் வினைமையான பாவத்தை சபையிலுள்ள மூப்பர்களிடம் வெளிப்படுத்தத் தவறிய ஒருவர் இவ்வாறு சொன்னார்: “என் நெஞ்சம் வலித்தது; வேதனையோ அகலவில்லை. பிரசங்க ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டுப் பார்த்தேன்; அப்படியும் குத்தல் உணர்ச்சியால் உள்ளம் குறுகுறுத்தது.” ஜெபத்தில் கடவுளிடம் அறிக்கையிடுவது போதுமானதென அவர் உணர்ந்தார், ஆனால் அது போதுமானதல்ல என்பது தெளிவாயிருந்தது. ஏனெனில் அரசனாகிய தாவீது உணர்ந்தவற்றைப் போன்ற உணர்ச்சிகளையே அவரும் உணர்ந்தார். (சங்கீதம் 51:8, 11) மூப்பர்கள் மூலம் யெகோவா அளிக்கிற அன்புள்ள உதவியை ஏற்பது எவ்வளவு மேலானது!