பைபிளை ஏன் படிக்க வேண்டும்?
கல்வித் தகுதியும் பொருளாதாரத்தில் நல்வசதியும் படைத்த துடிப்புமிக்க ஓர் இளைஞர்தான் பில். இருந்தாலும், அவர் திருப்தியாக இல்லை. அவருடைய வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இல்லை, அது அவரை மிகவும் அலைக்கழித்தது. வாழ்க்கையில் நோக்கத்தை கண்டுபிடிக்க பல்வேறு மதங்களை ஆராய்ந்து பார்த்தார், ஆனால் தான் தேடிக் கொண்டிருந்ததை அவர் கண்டுபிடிக்கவில்லை. 1991-ல், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை சந்தித்தார். வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை விளக்கும் ஒரு புத்தகத்தை அந்த சாட்சியிடமிருந்து பெற்றார். வாழ்க்கையின் நோக்கத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி பில் தெரிந்துகொள்வதற்காக ஒரு பைபிள் படிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
பில் சொல்கிறார்: “எங்களுடைய முதல் படிப்பு நடந்தது, நாங்கள் அடிக்கடி பைபிளை புரட்டிப் பார்த்ததால், இதைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன் என்பது எனக்கு தெரிந்தது. பைபிளில் உள்ள பதில்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அந்தப் படிப்பு முடிந்தப்பின், என்னுடைய ட்ரக்கை மலைகளுக்கு ஓட்டிக்கொண்டு போனேன். ட்ரக்கிலிருந்து இறங்கி, அப்படியே சந்தோஷத்தில் சப்தமாக கத்தினேன். கடைசியில் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.”
உண்மைதான், பைபிள் சத்தியத்தை அறிந்துகொள்ளும் அனைவரும் சொல்லர்த்தமாகவே சந்தோஷத்தால் சப்தமாக கத்துவதில்லை. ஆனால், வாழ்க்கையின் இன்றியமையா கேள்விகளுக்கு விடைகளை அறிந்துகொள்வது அநேகருக்கு ஆனந்தமான அனுபவமே. இயேசுவின் உவமையில், வயலில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தை கண்டுபிடித்த ஒரு மனிதனைப் போலவே அவர்கள் உணருகிறார்கள். இயேசு சொன்னார்: “மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.”—மத்தேயு 13:44, பொ.மொ.
அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் திறவுகோல்
வாழ்க்கையின் நோக்கமென்ன? என்ற அடிப்படை கேள்வியை பில் ஆழ்ந்து சிந்தித்திருந்தார். இதை கண்டுபிடிக்க தத்துவஞானிகள், இறையியலாளர்கள், அறிவியலாளர்கள் ஆகியோர் ஆயிரம் ஆண்டுகளாக முட்டிமோதியிருக்கிறார்கள். இதற்கு பதிலளிக்க பலர் எழுதிய புத்தகங்களுக்கு கணக்கு வழக்கே இல்லை. அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் வீணாகத்தான் இருந்திருக்கின்றன, இதற்கு பதில் கண்டுபிடிக்கவே முடியாது என்ற முடிவுக்கு பலர் வந்துவிட்டார்கள். ஆனால் பதில் இருக்கிறது. இது ஆழ்ந்த அர்த்தமுடையது, என்றாலும் சிக்கலானதல்ல. இது பைபிளில் விளக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு திறவுகோல் இதுவே: நமது படைப்பாளரும் பரலோக தந்தையுமாகிய யெகோவாவுடன் நல்ல உறவு வைத்திருக்க வேண்டும். நாம் இதை அடைவது எப்படி?
கடவுளிடம் நெருங்கி வருவதில், முரண்படுவது போல் தோன்றுகிற இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. அவரிடம் அண்டி வருபவர்கள் அவருக்குப் பயப்பட வேண்டும், அவரை நேசிக்க வேண்டும். இதை ஆதரிக்கும் இரண்டு வசனங்களை நாம் ஆராயலாம். வெகு நாட்களுக்கு முன்பு, மனிதகுலத்தைப் பற்றி ஞானியாகிய சாலொமோன் அரசன் கவனமாக ஆராய்ந்து, தான் கண்டுபிடித்ததை பிரசங்கி என்ற பைபிள் புத்தகத்தில் பதிவுசெய்து வைத்தார். தான் கவனித்தவற்றை தொகுத்து, இவ்வாறு எழுதினார்: ‘காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.’ (பிரசங்கி 12:13) பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மோசேக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தில் மிகப் பெரிய கட்டளை எது என இயேசுவிடம் ஒரு மனிதன் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்: ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.’ (மத்தேயு 22:37) கடவுளுக்கு பயப்பட வேண்டும், அதேசமயத்தில் அவரை நேசிக்க வேண்டும் என்பது உங்களுக்கு விநோதமாக தோன்றுகிறதா? பயப்படுவது மற்றும் அன்புகூருவதன் முக்கியத்துவத்தையும், கடவுளுடன் திருப்திகரமான உறவை வளர்த்துக்கொள்ள இவை இரண்டும் எவ்வாறு ஒருவருக்கு உதவி செய்கின்றன என்பதையும் நாம் இப்பொழுது ஆராயலாம்.
கடவுளுக்கு பயப்படுவது என்றால் என்ன?
ஏற்கத்தகுந்த விதத்தில் கடவுளை வணங்க வேண்டுமாகில், மரியாதை கலந்த பயம் ஓர் அடிப்படை தேவையாக இருக்கிறது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.” (சங்கீதம் 111:10, திருத்திய மொழிபெயர்ப்பு) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.” (எபிரெயர் 12:28) அதைப் போலவே, வானத்தின் மத்தியில் பறக்கும் ஒரு தேவதூதன், “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்” என்ற வார்த்தைகளோடு நற்செய்தியை அறிவிப்பதை அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார்.—வெளிப்படுத்துதல் 14:6, 7.
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத இப்படிப்பட்ட தேவபயம், குலைநடுங்க வைக்கும் ஆரோக்கியமற்ற பயமல்ல. கொடூரமும் பயங்கரமுமான குற்றவாளி ஒருவன் நம்மை அச்சுறுத்தினால் நாம் பயந்து நடுங்கலாம். ஆனால் தேவபயம் என்பது படைப்பாளர் மீது காட்டும் ஆழ்ந்த மரியாதை கலந்த பக்தி. இது, கடவுளுக்குப் பிரியமில்லாதவற்றை செய்துவிடக் கூடாது என்ற ஆரோக்கியமான பயத்தோடு இருப்பதை உட்படுத்துகிறது. ஏனென்றால் அவரே உன்னத நீதிபதி, சர்வ வல்லவர்; கீழ்ப்படியாதவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு வல்லமையும் அதிகாரமும் உடையவர்.
பயமும் அன்பும் சேர்ந்து செயல்படுகின்றன
ஆனால், தம்மைக் கண்டு அஞ்சும் காரணத்தால் மட்டுமே மக்கள் தம்மை சேவிப்பதை யெகோவா விரும்புகிறதில்லை. யெகோவா அன்பே உருவான கடவுள். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதுவதற்குத் தூண்டப்பட்டார்: “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) மனிதருடன் யெகோவா தேவன் மிகவும் அன்பாக நடந்திருக்கிறார், அவர்களும் அதேபோல தம்மிடம் அன்பாக நடந்துகொள்ளும்படி விரும்புகிறார். ஆனால், தேவபயத்தோடு இப்படிப்பட்ட அன்பு எப்படி ஒத்துப்போகும்? உண்மையில் இவை இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “ஆண்டவரின் [“யெகோவாவின்,” NW] அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்.”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 25:14, பொ.மொ.
பலமும் ஞானமும் நிறைந்த தகப்பனிடம் ஒரு பிள்ளைக்கு ஏற்படும் மரியாதையையும் பயத்தையும் சற்று எண்ணிப் பாருங்கள். அதேசமயத்தில், அந்தப் பிள்ளை தன் அப்பாவின் அன்புக்கும் பிரதிபலிக்கும். அந்தப் பிள்ளை தன் தகப்பனை நம்புகிறது, வழிநடத்துதலுக்காக அவரையே நோக்கியிருக்கிறது, இது தனக்கு நன்மைகளை கொண்டுவரும் என நம்பிக்கையோடிருக்கிறது. அதைப் போலவே, நாம் யெகோவா மீது அன்புகூர்ந்து அவருக்கு பயப்படும்போது, அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிவோம், அது நமக்கு நன்மையை தரும். இஸ்ரவேலரைக் குறித்து யெகோவா என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்: “அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்”!—உபாகமம் 5:29.
ஆம், தேவபயம் அடிமைத்தனத்திற்கு அல்ல, விடுதலைக்கே வழிநடத்துகிறது, துக்கத்திற்கு அல்ல சந்தோஷத்திற்கே வழிநடத்துகிறது. இயேசுவைப் பற்றி ஏசாயா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.” (ஏசாயா 11:3, பொ.மொ.) மேலும், சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “கர்த்தருக்குப் [“யெகோவாவுக்கு,” NW] பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”—சங்கீதம் 112:1.
நமக்கு கடவுளைப் பற்றி தெரியவில்லையென்றால், அவருக்கு பயப்படவும் முடியாது, அவர் மீது அன்பு செலுத்தவும் முடியாது. அதனால்தான் பைபிளைப் படிப்பது மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட படிப்பு கடவுளுடைய ஆளுமையை புரிந்துகொள்ளவும், அவருடைய கட்டளைகளை பின்பற்றுவது எவ்வளவு ஞானமானது என்பதை நன்றியோடு உணர்ந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது. நாம் கடவுளிடம் அண்டி வருகையில், அவருடைய சித்தத்தை செய்ய விரும்புகிறோம், அவருடைய கட்டளைகள் நம்முடைய நன்மைக்கே என்பதை அறிந்து அவற்றை கைக்கொள்வதற்கு தூண்டப்படுகிறோம்.—1 யோவான் 5:3.
ஒருவர் சரியான வாழ்க்கைப் பாதையில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பில் விஷயத்தில் உண்மையாக இருக்கிறது. சமீபத்தில் அவர் இவ்வாறு கூறினார்: “நான் முதன்முதலில் பைபிளை படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த ஒன்பது வருடங்களில், யெகோவாவுடன் என்னுடைய உறவு வளர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் எனக்கு ஏற்பட்ட உற்சாகம் உண்மையிலேயே மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாக மாறியிருக்கிறது. வாழ்க்கையைப் பற்றி எனக்கு எப்போதும் நம்பிக்கையான மனநிலையே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது, இனியும் மகிழ்ச்சிக்காக திக்கு தெரியாமல் தேடிக்கொண்டிருப்பதில்லை. யெகோவா எனக்கு நிஜமான ஒரு நபராக ஆகியிருக்கிறார், எனக்கு மிகச் சிறந்தது எதுவோ அதுவே எப்பொழுதும் அவருடைய இருதயத்தில் இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறேன்.”
யெகோவாவை பற்றிய அறிவை வாழ்க்கையில் பின்பற்றுவோருக்கு அது எவ்வாறு மகிழ்ச்சியையும் நன்மைகளையும் தருகிறது என்பதைப் பற்றி பின்வரும் கட்டுரையில் நாம் கூடுதலாக சிந்திப்போம்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
கடவுளிடம் அண்டி வருவது என்பது நாம் அவரை நேசிப்பதையும் அவருக்கு பயப்படுவதையும் அர்த்தப்படுத்துகிறது
[பக்கம் 6-ன் படம்]
யெகோவாவுக்கு பயப்படும் பயத்தில் இயேசு மகிழ்ச்சியை கண்டார்