யெகோவாவைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி காணுங்கள்
“தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW].”—லூக்கா 11:28.
1. மனிதரிடம் யெகோவா பேச்சுத் தொடர்புகொள்ள ஆரம்பித்தது எப்போது?
யெகோவா மனிதரை நேசிக்கிறார், அவர்களுடைய நலனில் அதிக அக்கறை காட்டுகிறார். ஆகவே, அவர் மனிதரிடம் பேச்சுத் தொடர்பு கொள்வதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. இப்படி மனிதரிடம் தொடர்பு கொள்வது ஏதேன் தோட்டத்தில் ஆரம்பமானது. ஒரு சமயம் “இளங்காற்று வீசும் வேளையிலே” ஆதாமும் ஏவாளும் ‘கடவுளாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்டார்கள்’ என ஆதியாகமம் 3:8 (தி.மொ.) குறிப்பிடுகிறது. யெகோவா இந்த வேளையிலே ஆதாமிடம் வழக்கமாக பேசினார்—ஒருவேளை தினம் தினம் பேசினார்—என்பதை இது அர்த்தப்படுத்துவதாக சிலர் கருதுகிறார்கள். எப்படியிருந்தாலும், முதல் மனிதனுக்கு அறிவுரை கொடுப்பதோடுகூட பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற கற்றுக்கொடுப்பதற்கும் கடவுள் நேரத்தை ஒதுக்கியிருந்தார் என பைபிள் தெளிவாக காட்டுகிறது.—ஆதியாகமம் 1:28-30.
2. முதல் மனித தம்பதியினர் எவ்வாறு யெகோவாவுடைய வழிநடத்துதலை புறக்கணித்தனர், அதன் விளைவு என்ன?
2 ஆதாம் ஏவாளுக்கு யெகோவா உயிரளித்தார்; மிருகங்களையும் இந்த முழு பூமியையும் ஆண்டுகொள்ளும் அதிகாரத்தை கொடுத்தார். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை சாப்பிடக் கூடாது என்ற ஒரேவொரு தடையை மட்டுமே அவர்களுக்கு விதித்தார். ஆனால் சாத்தானின் தூண்டுதலால் ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனார்கள். (ஆதியாகமம் 2:16, 17; 3:1-6) சரி எது தவறு எது என்பதை தாங்களே தீர்மானித்து சொந்த காலில் நிற்க தெரிவு செய்தனர். இவ்வாறு, அன்பான படைப்பாளரின் வழிநடத்துதலை முட்டாள்தனமாக புறக்கணித்தனர். இது அவர்களுக்கும் வருங்கால சந்ததியாருக்கும் படுமோசமான விளைவுகளை கொண்டு வந்தது. ஆதாமும் ஏவாளும் முதுமையடைந்து, உயிர்த்தெழுதல் என்ற எந்த நம்பிக்கையுமின்றி மரித்தனர். அவர்களுடைய சந்ததியார் பாவத்தையும் மரணத்தையுமே பரம்பரை சொத்தாக பெற்றனர்.—ரோமர் 5:12.
3. காயீனுக்கு யெகோவா ஏன் அறிவுரை வழங்கினார், ஆனால் காயீன் எப்படி செயல்பட்டான்?
3 ஏதேனில் கலகம் ஏற்பட்டபோதிலும், தாம் படைத்த மனிதருக்கு யெகோவா தொடர்ந்து அறிவுரைகளை வழங்கினார். ஆதாம் ஏவாளின் மூத்த மகனாகிய காயீன் பாவத்தின் பாதையில் அடியெடுத்து வைக்க இருந்தான். அவன் தவறு செய்யப் போவதை அறிந்த யெகோவா அவனை எச்சரித்தார், ‘நன்மை செய்யும்படி’ அறிவுரை கூறினார். காயீனோ அந்த அன்பான ஆலோசனையை உதறி தள்ளிவிட்டு தன் சகோதரனை கொலை செய்தான். (ஆதியாகமம் 4:3-8) இப்படியாக முதல் மூன்று நபர்களும் தங்களுக்கு உயிரளித்து தங்களுடைய நன்மைக்காகவே அறிவுரை வழங்கியவரின் தெளிவான வழிநடத்துதலை ஒதுக்கித் தள்ளினர். (ஏசாயா 48:17) ஆனால் இது யெகோவாவுக்கு எவ்வளவு பெருத்த ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும்!
பூர்வத்தாருக்கு யெகோவா தம்மை வெளிப்படுத்துகிறார்
4. ஆதாமின் சந்ததியார் விஷயத்தில் யெகோவா எதை உறுதியாக நம்பினார், அதனால் என்ன நம்பிக்கை அளிக்கும் செய்தியை அறிவித்தார்?
4 மனிதருடன் வைத்திருந்த தொடர்பை துண்டித்துக் கொள்வதற்கான உரிமை யெகோவாவுக்கு இருந்தபோதிலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. ஆதாமுடைய சந்ததியாரில் சிலர் அவருடைய வழிநடத்துதலுக்கு ஞானமாக கீழ்ப்படிவார்கள் என உறுதியாக நம்பினார். உதாரணமாக, ஆதாம் ஏவாளுக்கு தண்டனை தீர்ப்பளிக்கையில், பிசாசாகிய சாத்தானை எதிர்த்து நிற்கும் ‘வித்தின்’ வருகையைப் பற்றி முன்னறிவித்தார். முடிவில் சாத்தானின் தலை நசுக்கப்படும். (ஆதியாகமம் 3:15) ‘தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களுக்கு’ இந்தத் தீர்க்கதரிசனம் நம்பிக்கை அளிக்கும் செய்தியாக இருந்தது.—லூக்கா 11:28.
5, 6. பொ.ச. முதல் நூற்றாண்டிற்குமுன் யெகோவா தம்முடைய மக்களுடன் எவ்வழிகளில் தொடர்பு கொண்டார், இது அவர்களுக்கு எவ்வாறு நன்மை அளித்தது?
5 நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு போன்ற விசுவாசமுள்ள முற்பிதாக்களுக்கு யெகோவா தம்முடைய சித்தத்தை அறிவித்தார். (ஆதியாகமம் 6:13; யாத்திராகமம் 33:1; யோபு 38:1-3) பிற்பாடு, மோசே மூலமாக இஸ்ரவேல் தேசத்தாருக்கு முழுமையான சட்டத்தொகுப்பைக் கொடுத்தார். மோசேயின் நியாயப்பிரமாணம் பல வழிகளில் அவர்களுக்கு நன்மை அளித்தது. அதற்குக் கீழ்ப்படிவதன்மூலம், இஸ்ரவேலர் கடவுளுடைய விசேஷித்த மக்களாக மற்ற தேசத்தாரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டனர். அந்த நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்தால், அவர்களை பொருளாதார ரீதியில் மட்டுமல்ல ஆவிக்குரிய ரீதியிலும் ஆசீர்வதித்து, ஆசாரிய ராஜ்யமாகவும் பரிசுத்த தேசமாகவும் ஆக்குவதாக இஸ்ரவேலரிடம் கடவுள் உறுதியளித்தார். உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில், உணவு, சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிமுறைகளையும் அந்த நியாயப்பிரமாணச் சட்டம் அளித்தது. அதே சமயத்தில் கீழ்ப்படியாமையால் வரும் ஆபத்தான விளைவுகளைப் பற்றியும் யெகோவா எச்சரித்தார்.—யாத்திராகமம் 19:5, 6; உபாகமம் 28:1-68.
6 காலப்போக்கில், ஏவப்பட்டு எழுதப்பட்ட மற்ற புத்தகங்களும் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்க்கப்பட்டன. தேசங்களிடமும் தனிப்பட்டவர்களிடமும் யெகோவா வைத்திருந்த செயல்தொடர்புகளை சரித்திர பதிவுகள் விவரித்தன. கவிதை நடையிலான புத்தகங்கள் அவருடைய பண்புகளை அழகாக வருணித்தன. யெகோவாவின் சித்தம் எதிர்காலத்தில் நிறைவேறப்போகும் விதத்தை தீர்க்கதரிசன புத்தகங்கள் முன்னறிவித்தன. பூர்வத்தில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர் ஏவப்பட்ட இந்தப் பதிவுகளை கவனமாக படித்து, தங்கள் வாழ்க்கையில் பின்பற்றினர். ஆகவேதான், “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என ஒருவர் எழுதினார். (சங்கீதம் 119:105) செவிசாய்க்க மனமுள்ளவர்களுக்கு யெகோவா கற்பித்ததுடன், தெளிவான ஆவிக்குரிய அறிவையும் அளித்தார்.
ஒளி பிரகாசமடைகிறது
7. இயேசு அற்புதங்களை செய்தபோதிலும், பெரும்பாலும் அவர் எவ்வாறு அறியப்பட்டார், ஏன்?
7 முதல் நூற்றாண்டிற்குள்ளாக, யூத மதத் தொகுதியினர் இந்த நியாயப்பிரமாண சட்டத்திற்குள் மனித பாரம்பரியங்களை புகுத்தினர். நியாயப்பிரமாணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினர். அச்சட்டம் தெளிவான ஆவிக்குரிய அறிவை அளிப்பதற்கு பதிலாக, அதில் புகுத்தப்பட்ட பாரம்பரியங்களால் பாரமானது. (மத்தேயு 23:2-4) இருந்தாலும் பொ.ச. 29-ல் இயேசு மேசியாவானார். அவர் மனிதகுலத்திற்கு தம் உயிரைக் கொடுப்பதற்காக மட்டுமின்றி ‘சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுப்பதற்காகவும்’ வந்தார். அவர் அற்புதங்களை செய்தாலும், “போதகர்” என்றே பெரும்பாலும் அறியப்பட்டார். அவருடைய போதனைகள், மக்களின் மனங்களை மூடியிருந்த ஆவிக்குரிய இருளினூடே பிரகாசிக்கும் ஒளியைப் போன்று இருந்தது. “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்று இயேசு சரியாகவே சொன்னார்.—யோவான் 8:12; 11:28; 18:37.
8. பொ.ச. முதல் நூற்றாண்டில் எந்தப் புத்தகங்கள் ஏவப்பட்டு எழுதப்பட்டன, அவை ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு பயனளித்தன?
8 பின்னர், இயேசுவின் வாழ்க்கை பதிவுகள் அடங்கிய நான்கு சுவிசேஷங்களும், இயேசுவின் மரணத்திற்குப்பின் கிறிஸ்தவம் பரவியதைப் பற்றிய அப்போஸ்தலர் புத்தகமும் சேர்க்கப்பட்டன. இயேசுவின் சீஷர்கள் ஏவப்பட்டு எழுதிய கடிதங்களும், தீர்க்கதரிசன புத்தகமாகிய வெளிப்படுத்துதலும் சேர்க்கப்பட்டன. இவையும் எபிரெய வேதாகமமும் சேர்ந்து, பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல் முழுமையானது. இந்த ஏவப்பட்ட புத்தகங்களின் உதவியால், “சகல பரிசுத்தவான்களோடுங்கூட” சத்தியத்தின் “அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து” கொள்ள கிறிஸ்தவர்களால் முடியும். (எபேசியர் 3:14-18) அவர்கள் ‘கிறிஸ்துவின் சிந்தையோடு’ இருக்கவும் முடியும். (1 கொரிந்தியர் 2:16) இருந்தாலும், அந்த பூர்வ கிறிஸ்தவர்கள் யெகோவாவுடைய நோக்கங்களின் எல்லா அம்சங்களையும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. ஆகவேதான் அப்போஸ்தலன் பவுல், “இப்பொழுது [“உலோகக், NW] கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்” என்று சகவிசுவாசிகளுக்கு எழுதினார். (1 கொரிந்தியர் 13:12) அப்படிப்பட்ட உலோகக் கண்ணாடியில் எதுவும் மங்கலாகவே தெரியும், பளிச்சென்று தெளிவாக தெரியாது. கடவுளுடைய வார்த்தை இனிமேல்தான் பளிச்சென்று தெளிவாக புரிந்துகொள்ளப்படவிருந்தது.
9. ‘கடைசி நாட்களில்’ என்ன தெளிவான ஆவிக்குரிய அறிவு கிடைத்திருக்கிறது?
9 இன்று, “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்” என்று குறிப்பிடப்படும் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) இந்தக் காலப்பகுதியில், “உண்மை அறிவு பெருகிப்போம்” என தீர்க்கதரிசியாகிய தானியேல் முன்னறிவித்தார். (தானியேல் 12:4) ஆகவே, பேச்சுத்தொடர்பு கொள்வதில் தலைசிறந்து விளங்கும் யெகோவா, நேர்மை மனமுள்ளவர்கள் தம்முடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள உதவி அளித்திருக்கிறார். மேலும், 1914-ல் காணக்கூடாத பரலோகத்தில் கிறிஸ்து இயேசு அரசராக முடிசூட்டப்பட்டார் என்பதை இப்போது எண்ணற்றோர் அறிந்திருக்கின்றனர். அவர் வெகு விரைவில் எல்லா துன்மார்க்கத்தையும் ஒழித்து இந்தப் பூமியை பரதீஸாக மாற்றுவார் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கின்றனர். ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியின் இந்த முக்கிய அம்சம் இன்று பூமி முழுவதிலும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது.—மத்தேயு 24:14.
10. நூற்றாண்டுகளினூடே ஜனங்கள் கடவுளுடைய ஆலோசனைக்கு எவ்வாறு பிரதிபலித்திருக்கிறார்கள்?
10 ஆம், சரித்திரம் முழுவதிலும் யெகோவா தம்முடைய சித்தத்தையும் நோக்கத்தையும் பூமியிலுள்ளவர்களுக்கு அறிவித்து வந்திருக்கிறார். அந்த தெய்வீக ஞானத்தைக் கேட்டுப் பின்பற்றியவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றதாக பைபிள் பதிவு விளக்குகிறது. கடவுளுடைய அன்பான அறிவுரையை புறக்கணித்து ஆதாம் ஏவாளின் அழிவுக்குரிய போக்கில் சென்ற மற்றவர்களைப் பற்றியும் அது சொல்கிறது. அடையாள அர்த்தமுடைய இரண்டு வழிகளைப் பற்றிப் பேசுகையில் இயேசு இந்த சூழ்நிலையை விளக்கினார். அதில் ஒன்று அழிவுக்கு வழிநடத்துகிறது. கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்கள் அகலமும் விசாலமுமான இந்த வழியில் செல்கிறார்கள். மற்றொன்று நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. இவ்வழி இடுக்கமானதாக இருந்தாலும், பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்று, அதற்கு இசைவாக வாழ்பவர்கள் அதில் செல்கிறார்கள்.—மத்தேயு 7:13, 14.
நாம் பெற்ற நன்மைகளை மதித்தல்
11. நாம் பைபிள் அறிவைப் பெற்று அதில் நம்பிக்கை வைப்பது எதற்கு அத்தாட்சி அளிக்கிறது?
11 நீங்கள் ஜீவனுக்குச் செல்லும் வழியைத் தெரிந்துகொண்டவர்களில் ஒருவரா? அப்படியானால் நீங்கள் அதில் நிலைத்திருக்கவே விரும்புவீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நீங்கள் எப்படி அதில் நிலைத்திருக்கலாம்? பைபிள் சத்தியங்களை அறிந்ததால் அடைந்த நன்மைகளை மதித்து எப்போதும் தியானியுங்கள். நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருப்பதே கடவுள் உங்களை அங்கீகரித்திருப்பதற்கு அத்தாட்சி. இயேசு தம் தகப்பனிடம் ஜெபிக்கையில் இதைக் குறிப்பிட்டார்: “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.” (மத்தேயு 11:25) மீன் பிடிப்பவர்களும் வரி வசூலிப்பவர்களும் இயேசு போதித்தவற்றின் கருத்தை புரிந்து கொண்டனர். ஆனால் படித்த மேதைகளான மதத் தலைவர்களோ இதைத் துளியும் புரிந்துகொள்ளவில்லை. “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்றும் இயேசு சொன்னார். (யோவான் 6:44) பைபிள் அறிவைப் பெற்று அதில் நம்பிக்கை வைத்து அதற்கேற்ப நடக்கிறீர்கள் என்றால், அதுவே யெகோவா உங்களை தம் பக்கம் இழுத்திருப்பதற்கு அத்தாட்சி. இது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம்.
12. என்னென்ன வழிகளில் பைபிள் தெளிவான ஆவிக்குரிய அறிவை அளிக்கிறது?
12 கடவுளுடைய வார்த்தையில் விடுதலையளிக்கும் சத்தியங்கள் உள்ளன; அவை தெளிவான ஆவிக்குரிய அறிவை அளிக்கின்றன. பைபிளுக்கு இசைவாக வாழ்பவர்கள், கோடிக்கணக்கானோரை ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கைகளிலிருந்தும், பொய் போதனைகளிலிருந்தும், அறியாமையிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். உதாரணமாக, ஆத்துமாவைப் பற்றிய உண்மையை அறிவது, இறந்தவர்கள் நமக்கு தீங்கு செய்வார்களோ இறந்துபோன அன்பானவர்கள் கஷ்டப்படுகிறார்களோ போன்ற எந்தவித பயத்திலிருந்தும் விடுதலை அளிக்கிறது. (எசேக்கியேல் 18:4) பொல்லாத தூதர்களைப் பற்றிய அறிவு, ஆவிக்கொள்கை போன்ற பெரும் ஆபத்துக்களை தவிர்க்க உதவுகிறது. உயிர்த்தெழுதலைப் பற்றிய போதனை அன்பானவர்களை மரணத்தில் இழந்தவர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. (யோவான் 11:25) கால ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. எதிர்காலத்தைப் பற்றி கடவுளுடைய வார்த்தை சொல்கிறவற்றில் நம்பிக்கையையும் அளிக்கின்றன. என்றென்றும் வாழும் நம் நம்பிக்கையை பலப்படுத்தவும் செய்கின்றன.
13. கடவுளுடைய வார்த்தைக்கு கவனம் செலுத்துவது சரீரப்பிரகாரமாக நமக்கு எவ்வாறு நன்மையளிக்கிறது?
13 பைபிளிலுள்ள தெய்வீக நியமங்கள் சரீரப்பிரகாரமான நன்மைகளைத் தரும் வாழ்க்கையை வாழ நமக்குப் போதிக்கின்றன. உதாரணமாக, புகையிலையையும் போதைப் பொருட்களையும் பயன்படுத்துவது போன்ற நம் சரீரத்தை அசுத்தப்படுத்தும் பழக்கங்களைத் தவிர்க்க கற்றுக்கொள்கிறோம். குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதைத் தவிர்க்கிறோம். (2 கொரிந்தியர் 7:1) கடவுளுடைய ஒழுக்க சட்டங்களுக்கு கவனம் செலுத்துவது, பாலுறவால் கடத்தப்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. (1 கொரிந்தியர் 6:18) பண ஆசையைத் தவிருங்கள் என்ற கடவுளுடைய அறிவுரையை பின்பற்றுவதால், செல்வத்தை நாடும் அநேகரைப்போல் நாம் மன சமாதானத்தை இழந்து தவிப்பதில்லை. (1 தீமோத்தேயு 6:10) கடவுளுடைய வார்த்தைக்கு இசைய நடந்ததால் சரீரப்பிரகாரமாக நீங்கள் என்னென்ன வழிகளில் நன்மை அடைந்திருக்கிறீர்கள்?
14. நமது வாழ்க்கையில் பரிசுத்த ஆவி எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது?
14 கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழும்போது நாம் யெகோவாவின் பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம். இரக்கம், பரிவு போன்ற விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட கிறிஸ்துவின் ஆள்தன்மையை வளர்க்கிறோம். (எபேசியர் 4:24, 32) அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய குணங்களையும் கடவுளுடைய ஆவி நம்மில் பிறப்பிக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) இந்த குணங்கள் குடும்பத்தினரிடமும் மற்றவர்களிடமும் மகிழ்ச்சியும் பயனுமிக்க உறவை ஊக்குவிக்கின்றன. நெருக்கடிகளை தைரியத்தோடு சமாளிப்பதற்கு வேண்டிய மன பலத்தையும் நாம் பெறுகிறோம். உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பரிசுத்த ஆவி எவ்வாறு உதவியுள்ளது என்பதை புரிந்துகொள்கிறீர்களா?
15. கடவுளுடைய சித்தத்திற்கு இசைய வாழும்போது நாம் எவ்வாறு நன்மையடைகிறோம்?
15 கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக வாழும்போது யெகோவாவுடன் உள்ள நம் உறவை பலப்படுத்துகிறோம். அவர் நம்மைப் புரிந்துகொள்கிறார், நம்மை நேசிக்கிறார் என்ற நம்பிக்கை மேன்மேலும் உறுதிப்படுகிறது. ஆபத்தான காலங்களில் அவர் நம்மை ஆதரிப்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறோம். (சங்கீதம் 18:18) அவர் நம்முடைய ஜெபங்களை செவிகொடுத்து கேட்கிறார் என்பதை அறிந்துகொள்கிறோம். (சங்கீதம் 65:2) அவருடைய வழிநடத்துதல் நமக்கு பலனளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அதை ஏற்றுக்கொள்கிறோம். உரிய காலத்தில் தமக்கு உண்மையாக இருப்பவர்களை பரிபூரணராக்கி, நித்திய ஜீவன் என்ற பரிசை அருளுவார் என்ற அருமையான நம்பிக்கையும் நமக்கு உள்ளது. (ரோமர் 6:23) “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” என சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:8) யெகோவாவுடன் நெருங்க வந்திருப்பதால் அவரோடுள்ள உங்கள் உறவு பலப்பட்டிருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா?
ஓர் ஒப்பற்ற பொக்கிஷம்
16. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் சிலர் என்ன மாற்றங்களைச் செய்தார்கள்?
16 ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் சிலர் ஒருசமயம் வேசிமார்க்கத்தாராயும், விபசாரக்காரராயும், ஓரினப்புணர்ச்சிக்காரராயும், திருடராயும், பொருளாசைக்காரராயும், வெறியராயும், உதாசினராயும், கொள்ளைக்காரராயும் இருந்ததை பவுல் நினைப்பூட்டினார். (1 கொரிந்தியர் 6:9-11) வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு அவர்களைத் தூண்டியது பைபிள் சத்தியமே; அவர்கள் ‘கழுவப்பட்டார்கள்.’ விடுதலையளிக்கும் சத்தியங்களை நீங்கள் பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உண்மையில் இந்த சத்தியம் ஓர் ஒப்பற்ற பொக்கிஷமே. இப்படிப்பட்ட சத்தியத்தை யெகோவா நமக்கு தெரிவிப்பதால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்!
17. கிறிஸ்தவ கூட்டங்கள் மூலம் யெகோவாவின் சாட்சிகள் எப்படி ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்பட்டிருக்கிறார்கள்?
17 அதோடு, பல இனத்தவர் அடங்கிய நம் சகோதரத்துவத்தில் மகிழ்ச்சி காணும் வழிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஏற்ற வேளையில் அளிக்கும் ஆவிக்குரிய உணவில், எண்ணற்ற மொழிகளில் பிரசுரிக்கப்படும் பைபிள்களும் பத்திரிகைகளும் மற்ற பிரசுரங்களும் அடங்கியுள்ளன. (மத்தேயு 24:45-47, NW) 2000-ம் ஆண்டில், அநேக நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எபிரெய வேதாகமத்தின் எட்டு முக்கிய புத்தகங்களிலுள்ள சிறப்பு குறிப்புகளை சபை கூட்டங்களில் மறுபார்வை செய்தனர். வேதாகமத்தின்பேரில் உட்பார்வை என்ற ஆங்கில பிரசுரத்திலிருந்து கலந்தாலோசிக்கப்பட்ட 40 பைபிள் கதாபாத்திரங்களின் வாழ்க்கை சரிதையை ஆராய்ந்தனர். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தில் சுமார் கால்பகுதியையும் தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தில் ஏறக்குறைய முழுவதையும் அவர்கள் கலந்தாலோசித்தனர். காவற்கோபுரம் பத்திரிகையின் 52 படிப்புக் கட்டுரைகளோடு முப்பத்து ஆறு இதர கட்டுரைகளையும் கலந்தாலோசித்தனர். அத்துடன் நம் ராஜ்ய ஊழியத்தின் 12 வெளியீடுகள் மூலமாகவும் வாரந்தோறும் பல்வேறு பைபிள் தலைப்புகளில் கொடுக்கப்பட்ட பொதுப் பேச்சுகளின் மூலமாகவும் யெகோவாவின் ஜனங்கள் போஷிக்கப்பட்டார்கள். ஆவிக்குரிய அறிவு எவ்வளவு அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கிறது!
18. கிறிஸ்தவ சபை என்னென்ன வழிகளில் நமக்கு உதவுகிறது?
18 உலகம் முழுவதிலுமுள்ள 91,000-க்கும் மேற்பட்ட சபைகள், கூட்டங்கள் மூலமாகவும் கூட்டுறவின் மூலமாகவும் ஆதரவையும் ஊக்குவிப்பையும் அளிக்கின்றன. நமக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவ மனமுள்ளவர்களாக இருக்கும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் ஆதரவையும் அனுபவித்து மகிழ்கிறோம். (எபேசியர் 4:11-13) ஆம், சத்தியத்தைப் பற்றிய அறிவால் பெரிதும் நன்மையடைந்துள்ளோம். யெகோவாவை அறிந்து, அவரை சேவிப்பது சந்தோஷத்தை தருகிறது. சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது: “யெகோவாவைத் தெய்வமாக கொண்டிருக்கிற ஜனம் சந்தோஷமுள்ளது!”—சங்கீதம் 144:15, NW.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கிறிஸ்தவத்திற்கு முன்னான காலங்களில் யெகோவா யாருடன் பேச்சுத்தொடர்பு கொண்டார்?
• ஆவிக்குரிய ஒளி பிரகாசமானது எப்படி: முதல் நூற்றாண்டில்? நவீன காலங்களில்?
• யெகோவாவை அறிந்திருப்பதற்கு இசைவாக வாழ்வதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
• கடவுளை அறிந்திருப்பதில் நாம் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம்?
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
மோசே, நோவா, ஆபிரகாம் ஆகியோருக்கு யெகோவா தம்முடைய சித்தத்தை அறிவித்தார்
[பக்கம் 9-ன் படம்]
நம் நாளில் யெகோவா தம் வார்த்தையின்மீது ஒளி பிரகாசிக்க செய்திருக்கிறார்
[பக்கம் 10-ன் படங்கள்]
பல இனத்தவர் அடங்கிய நம் சகோதரத்துவத்தில் காணும் மகிழ்ச்சியை எண்ணிப் பாருங்கள்