தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைத்திருங்கள்
இளைஞருக்கு காலத்திற்கேற்ற போதனை அளித்தல்
எப்பாப்பிரா ரோமுக்கு பயணித்திருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர். ஆனால் அவருடைய மனம் இன்னும் ஆசியா மைனரிலுள்ள கொலோசெ பட்டணத்திலேயே லயித்திருந்ததற்குக் காரணம் இருந்தது. அங்கே நற்செய்தியை பிரசங்கித்து, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாவதற்கு கொலோசெயர் சிலருக்கு அவர் உதவி செய்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. (கொலோசெயர் 1:7) கொலோசெயிலிருந்த சக விசுவாசிகளைப் பற்றி எப்பாப்பிரா ஆழ்ந்த அக்கறையுள்ளவராக இருந்தார். ரோமிலிருந்து அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து இதை அறிந்துகொள்ளலாம்: “எப்பாப்பிராவும் உங்களுக்கு வந்தனஞ் சொல்லுகிறான்; . . . நீங்கள் கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று தன் ஜெபங்களில் இவன் எப்பொழுதும் உங்களுக்காகப் போராடுகிறான்.”—கொலோசெயர் 4:12, தி.மொ.
இதைப் போலவே, தற்கால கிறிஸ்தவ தாய் தந்தையர் தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனுக்காக ஊக்கமாக ஜெபிக்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாக ஆவதற்கு அவர்களுடைய இதயத்தில் கடவுளுக்கான அன்பை விதைக்க இந்தப் பெற்றோர்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள்.
பள்ளியிலும் பிற இடங்களிலும் தாங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் அநேகர் உதவி கேட்டிருக்கிறார்கள். 15 வயதுடைய ஒரு பெண் இவ்வாறு கூறினாள்: “நாங்கள் மிக பயங்கரமான பிரச்சினைகளை எதிர்ப்படுகிறோம். பயந்து பயந்து வாழ்கிறோம். எங்களுக்கு உதவி தேவை!” இப்படிப்பட்ட இளைஞர்களுடைய வேண்டுகோள்களும் தேவபக்தியுள்ள பெற்றோர்களுடைய ஜெபங்களும் பதிலளிக்கப்பட்டிருக்கின்றனவா? ஆம், பதிலளிக்கப்பட்டிருக்கின்றன! ‘உண்மையும் விவேகமுமுடைய அடிமை வகுப்பின்’ வாயிலாக பைபிள் அடிப்படையிலான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. (மத்தேயு 24:45, NW) “தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க” லட்சக்கணக்கான இளைஞருக்கு உதவியாக இருந்த பிரசுரங்கள் சிலவற்றை இக் கட்டுரையில் காணலாம். இந்தப் பிரசுரங்களில் சிலவற்றை இப்பொழுது ஆராயலாம்.
“இதோ . . . 15,000 புதிய சாட்சிகள்!”
1941 ஆகஸ்ட் மாதத்தில், அ.ஐ.மா., மிஸ்ஸௌரி, செயின்ட் லூயிஸில் 1,15,000 பேர் கூடியிருந்தார்கள். இதுவரை நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளிலேயே மிகவும் பெரிய மாநாடு இது. கடைசி நாளில், அதாவது “குழந்தைகள் தினத்தில்,” ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு “ராஜாவின் பிள்ளைகள்” என்ற பொருளில் பேசியபோது சுமார் 15,000 பிள்ளைகள் மேடைக்கு அருகில் அமர்ந்து ஊக்கமாக செவிகொடுத்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவருடைய பேச்சு முடிகிற சமயத்தில், 71 வயது ரதர்ஃபர்டு ஒரு தகப்பனை போன்ற தொனியில் பேசினார்:
“கடவுளுக்கும் அவரால் நியமிக்கப்பட்ட ராஜாவுக்கும் கீழ்ப்படிய . . . ஒப்புக்கொண்டுள்ள பிள்ளைகளாகிய . . . நீங்கள் எல்லாரும் தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்.” பிள்ளைகள் அனைவரும் எழுந்து நின்றார்கள். “இதோ, . . . ராஜ்யத்திற்கு 15,000 புதிய சாட்சிகள்!” என்று சகோதரர் ரதர்ஃபர்டு கூவினார். அப்பொழுது கரவொலி முழங்கியது. “கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல தங்களால் இயன்றதை செய்யும் நீங்கள் அனைவரும், . . . தயவுசெய்து ஆம் என்று சொல்லுங்கள்” என்று அவர் கூறினார். “ஆம்!” என்று சப்தமாக பிள்ளைகள் பதிலளித்தார்கள். பின்பு பிள்ளைகள் (ஆங்கிலம்) என்ற புதிய புத்தகத்தை காண்பித்தார், அதற்குப் பிறகு எழுந்த கரவொலி அடங்க அதிக நேரமானது.
உற்சாகமூட்டும் இந்தப் பேச்சிற்குப் பிறகு, இளைஞர்கள் நீண்ட அணிவரிசையாக மேடைக்குச் சென்றார்கள்; சகோதரர் ரதர்ஃபர்டு அந்தப் புதிய புத்தகத்தை அவர்களுக்கு பரிசாக வழங்கினார். இந்தக் காட்சி பார்வையாளர்களுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதற்கு கண்கண்ட சாட்சியாக இருந்த ஒருவர் இவ்வாறு கூறினார்: “யெகோவா தேவன் மீது முழு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் [காண்பித்த] அந்த இளைஞர்களைப் பார்த்து கனியாதோர் கல்நெஞ்சமுடையோரே.”
மறக்கமுடியாத அந்த மாநாட்டில், யெகோவாவுக்கு தாங்கள் ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக 1,300 இளைஞர்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அவர்களில் அநேகர் இந்நாள்வரை விசுவாசத்தில் உறுதியாக நிலைத்து இருந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளூர் சபைகளுக்கு உதவி செய்கிறார்கள், பெத்தேல் ஊழியர்களாக, அல்லது அந்நிய நாடுகளில் மிஷனரிகளாக சேவை செய்கிறார்கள். உண்மையிலேயே “குழந்தைகள் தினமும்” பிள்ளைகள் என்ற அந்தப் புத்தகமும் அநேக இளைஞர்களுடைய இதயத்தில் அழியாத முத்திரை பதித்துள்ளது.
“அவை ஏற்ற சமயத்தில் வருவதாக தெரிகிறது”
1970-களில், யெகோவாவின் சாட்சிகள் இன்னும் மூன்று புத்தகங்களை வெளியிட்டார்கள், அவை லட்சோப லட்சம் இளைஞர்களுடைய இதயத்தை சென்றெட்டின. அவை: பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல், என்னுடைய பைபிள் கதை புத்தகம். 1982-ல், “இளைஞர் கேட்கின்றனர் . . . ” என்ற தலைப்பில் விழித்தெழு! இதழில் தொடர் கட்டுரைகள் வர ஆரம்பித்தன. இந்தக் கட்டுரைகள் இளைஞர் மற்றும் முதியோருடைய ஆர்வத்தைத் தூண்டின. “இதைப் பிரசுரிப்பதற்காக ஒவ்வொரு இரவும் நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்” என 14 வயது சிறுவன் சொன்னான். “இந்தக் கட்டுரைகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, . . . அவை ஏற்ற சமயத்தில் வருவதாக தெரிகிறது” என 13 வயது சிறுமி சொன்னாள். பெற்றோர்களும் கிறிஸ்தவ மூப்பர்களும் இந்தக் கட்டுரைகள் காலத்திற்கு ஏற்றவையாகவும் பிரயோஜனமாகவும் இருப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள்.
1989-ம் ஆண்டிற்குள் “இளைஞர் கேட்கின்றனர் . . .” என்ற தலைப்பில் விழித்தெழு! இதழில் சுமார் 200 கட்டுரைகள் வெளிவந்திருந்தன. அந்த ஆண்டில் நடைபெற்ற “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டில், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க அந்தப் புத்தகம் இளைஞருக்கு உதவியிருக்கிறதா? மூன்று இளைஞர்கள் இவ்வாறு எழுதினார்கள்: “எங்களுடைய பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை அறிந்துகொள்வதற்கும் இந்தப் புத்தகம் அரிய பொக்கிஷமாக இருந்திருக்கிறது. எங்களுடைய நலனில் அக்கறைகொள்வதற்கு உங்களுக்கு நன்றி.” உலகம் முழுவதிலும் உள்ள எண்ணற்ற வாசகர்கள் இதை ஒத்துக்கொள்கின்றனர்.
“இது எங்களுடைய பசியை போக்கியது”
1999-ல், காலத்திற்கேற்ற மற்றொரு புத்தகத்தை இளைஞர்களுக்காக யெகோவாவின் சாட்சிகள் தயாரித்தார்கள், அதுதான் இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களை பெறுவது எப்படி? என்ற ஆங்கில வீடியோ. அது பலரிடமிருந்து உணர்ச்சி ததும்பும் பாராட்டை பெற்றது. “இந்த வீடியோ நேராக என்னுடைய இதயத்திற்குள் சென்றது” என 14 வயது பெண் கூறினாள். “எங்களுடைய ஆவிக்குரிய போஷாக்கில் இது தவறாமல் ஒரு பாகமாக இருக்கும்” என தனிமரமான ஒரு தாய் கூறினார். “நம்முடைய உற்ற நண்பராகிய யெகோவா தம்முடைய உலகளாவிய அமைப்பிலுள்ள இளைஞராகிய நம்மீது உண்மையிலேயே அன்புகூருகிறார், அக்கறை கொள்கிறார்” என ஓர் இளம் பெண் கூறினாள்.
இந்த வீடியோ எதை சாதித்திருக்கிறது? இளைஞர் கூறுகின்றனர்: “நான் யாரோடு கூட்டுறவு கொள்கிறேன் என்பதைக் குறித்து கவனமாக இருப்பதற்கு, சபையில் எல்லாரோடும் பழகுவதற்கு, யெகோவாவை நண்பராக்கிக் கொள்வதற்கு எனக்கு உதவி செய்திருக்கிறது.” “சகாக்கள் தரும் தொல்லைகளை தைரியத்துடன் சமாளிக்க எனக்கு உதவி செய்திருக்கிறது.” “யெகோவாவை சேவிப்பதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வதில் உறுதியோடிருக்கச் செய்திருக்கிறது.” ஒரு தம்பதியினர் இவ்வாறு எழுதினார்கள்: “இதுபோன்ற ‘உணவை’ எங்களுக்குத் தந்ததற்காக எங்களுடைய இதயப்பூர்வமான நன்றி. இது எங்களுடைய பசியை போக்கியது.”
கடவுளால் கொடுக்கப்பட்ட வேலைக்கு ஏற்ப, ஏற்றுக்கொள்ளும் மனமுள்ள அனைவருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்ட “உண்மையும் விவேகமுமுடைய அடிமை” காலத்திற்கு ஏற்ற ஆவிக்குரிய உணவை வழங்கியிருக்கிறது. இன்றைய இளைஞர் “கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க” இப்படிப்பட்ட வேதப்பூர்வ போதனை எவ்வளவாய் உதவுகிறது என்பதை காண்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது!