நம்பிக்கை வைப்பதற்கான உங்கள் உரிமை
நீங்கள் விரும்புவதை நம்ப உங்களுக்கு இருக்கும் உரிமையை நெஞ்சார நேசிக்கிறீர்கள் அல்லவா? அநேகமாக மற்ற அனைவரும் அவ்வாறே உணருகிறார்கள். இந்த உரிமையின் காரணமாகத்தான் பூமியிலுள்ள 600 கோடி மக்கள் வியப்பூட்டும் பல்வேறு நம்பிக்கைகளை வளர்த்திருக்கின்றனர். சிருஷ்டிப்பில் நாம் காணும் பல விதமான நிறம், வடிவம், தன்மை, சுவை, மணம், ஒலி போன்றவற்றைப் போலவே பல விதமான நம்பிக்கைகள் இருப்பதும் வாழ்க்கையில் பொலிவையும், சந்தோஷத்தையும் சேர்க்கின்றன. உண்மையில், அப்படிப்பட்ட வித்தியாசங்கள் இருப்பது வாழ்க்கைக்கு கவர்ச்சியூட்டலாம்.—சங்கீதம் 104:24.
ஆ னாலும் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். சில நம்பிக்கைகள் வித்தியாசமானவை மட்டுமல்ல ஆபத்தானவையும்கூட. உதாரணமாக, யூதர்களும் ப்ரீமேஸன்களும், “கிறிஸ்தவ நாகரிகத்தை தகர்த்து, அவர்களுடைய ஒன்றுபட்ட ஆட்சியில் ஓர் உலக அரசாங்கத்தை ஸ்தாபிக்க” திட்டமிடுவதாக 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிலர் நம்ப ஆரம்பித்தனர். செமிட்டிக் இனத்தவருக்கு எதிரான சீயோனின் புலமைமிக்க மூப்பர்களின் மூல வரைவு என்ற ஆங்கில துண்டுப்பிரதியே இந்த நம்பிக்கைக்கு ஓர் அடிப்படையாகும். அளவுக்கதிகமான வரி சுமத்துதல், போர் தளவாடங்களின் உற்பத்தியை அதிகரித்தல், ‘புறமத செல்வங்களை ஒரே வீச்சில் அழித்துவிடும் நோக்கத்தோடு’ ஒரே நிறுவனத்திற்கு ஏகபோக வியாபார உரிமையளித்தல் போன்றவை அந்தத் திட்டத்தின் பாகமென அந்த துண்டுப்பிரதி குற்றஞ்சாட்டியது. மேலுமாக, ‘புறமதத்தாரை யோசிக்க முடியாத மிருகங்கள் ஆக்குவதற்காக’ கல்வி அமைப்பை கையகப்படுத்துதல், யூத மூப்பர்கள் ‘எதிராளிகளை அழித்து, அவர்களை அடக்கும் நோக்கத்தோடு’ தலைநகரங்களை இணைக்க நிலத்தடி இரயில் பாதைகளை அமைத்தல் போன்றவையும் அதில் உட்பட்டிருந்ததாக அது கூறியது.
இவை அனைத்தும் செமிட்டிக் இனத்தவருக்கு எதிராக வெறுப்பை தூண்டிவிடும் நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட பொய்களே. முதன்முதலாக, 1903-ல் ஒரு செய்தித்தாளில் கட்டுரையாக வெளிவந்த ‘அர்த்தமற்ற இந்த புரளி ரஷ்யாவில் ஆரம்பித்து வெளிநாடுகளுக்கு பரவியது’ என பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த மார்க் ஜோன்ஸ் கூறுகிறார். அது, 1920-ல் மார்ச் 8-ம் தேதி லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாளிலும் பிரசுரிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் பிறகே அந்த ஆவணம் பொய் என்பதை த டைம்ஸ் வெளிப்படுத்தியது. ஆனால் அதற்குள் பெரும் சேதம் ஏற்பட்டுவிட்டது. ‘இதைப் போன்ற பொய்களை தடுத்து நிறுத்துவது கடினம்’ என ஜோன்ஸ் கூறுகிறார். இந்தப் பொய்களை மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டால் அவை மிகவும் கொடூரமான, நஞ்சு நிறைந்த, ஆபத்தான நம்பிக்கைகளை ஏற்படுத்திவிடுகின்றன; அதன் விளைவாக அநேகமாய் பெரும் சேதங்களே ஏற்படுகின்றன. இதற்கு 20-ம் நூற்றாண்டின் சரித்திரமே அத்தாட்சியளிக்கிறது.—நீதிமொழிகள் 6:16-19.
நம்பிக்கைக்கு எதிராக சத்தியம்
என்றாலும், வேண்டுமென்று சொல்லப்பட்ட பொய்கள் இல்லாமலேகூட தவறான நம்பிக்கைகள் வளரலாம். சில சமயங்களில், நாம் காரியங்களை தவறாக புரிந்துகொள்ளலாம். சரியென்று தாங்கள் நினைத்தவற்றை செய்ததால் எத்தனையோ பேர் அகால மரணம் அடையவில்லையா? அதுமட்டுமா, நாம் நம்ப விரும்பும் காரணத்தாலேயே அநேக சமயங்களில் ஒரு காரியத்தை நம்புகிறோம் அல்லவா? விஞ்ஞானிகள்கூட “தங்கள் கோட்பாடுகளையும் முடிவுகளையுமே பெரிதாக மதிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்” என ஒரு பேராசிரியர் கூறுகிறார். அவர்களுடைய நம்பிக்கைகள், பாரபட்சமின்றி ஆராயும் அவர்கள் திறனை மங்கச் செய்கின்றன. அதற்கு பிறகு, அந்த தவறான நம்பிக்கைகளை ஆதரிக்க முயலுவதிலேயே தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கிறார்கள்.—எரேமியா 17:9.
வேறுபாடுகள் மிக்க மத நம்பிக்கைகளின் விஷயத்திலும் இதுவே உண்மை. (1 தீமோத்தேயு 4:1; 2 தீமோத்தேயு 4:3, 4) ஒருவன் கடவுளில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறான். மற்றொருவனோ, மனிதர்கள் எந்த ஆதாரமுமே இல்லாமல் கடவுளில் நம்பிக்கை வைப்பதாக சொல்லுகிறான். மரிக்காமல் தப்பிக்கும் அழியாத ஆத்துமா இருப்பதாக ஒருவன் அடித்துக் கூறுகிறான். மற்றொருவனோ, மரிக்கையில் நீங்கள் முற்றுமுழுக்க இல்லாமல் போய்விடுகிறீர்கள் என நம்புகிறான். எதிரும் புதிருமான இந்த நம்பிக்கைகள் அனைத்துமே உண்மையாக இருக்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. ஆகவே, வெறுமனே நீங்கள் விரும்பும் ஒன்றையல்ல, ஆனால் முற்றிலும் உண்மையான ஒன்றையே நீங்கள் நம்புகிறீர்கள் என உறுதிப்படுத்திக் கொள்வது ஞானமான காரியமல்லவா? (நீதிமொழிகள் 1:5) அதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது? அடுத்த கட்டுரை இதை ஆராயும்.
[பக்கம் 3-ன் படம்]
1921-ல், ‘சீயோனின் புலமைமிக்க மூப்பர்களின் மூல வரைவை’ அம்பலப்படுத்திய கட்டுரை