உங்கள் நம்பிக்கைகளுக்கு ஆதாரம் என்ன?
நம்பிக்கை வைப்பது என்றால் சரியானது, உண்மையானது அல்லது மெய்யானது என ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளின் சர்வதேச உறுதிமொழி, ஒவ்வொரு மனிதனின் “சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமை”யை பாதுகாக்கிறது. அவர் விரும்பினால் “தன்னுடைய மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றிக்கொள்வதற்கான” சுதந்திரமும் இந்த நம்பிக்கையில் அடங்கும்.
ஆனால் ஒருவர் தன்னுடைய மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றிக்கொள்ள ஏன் விரும்புவார்? “எனக்கென்று சில நம்பிக்கைகள் உள்ளன, அதுவே எனக்கு போதும்” என்றே பொதுவாக அநேகர் கூறுகின்றனர். அதோடு, தவறான நம்பிக்கைகளினால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே என்றும் அநேகர் கருதுகின்றனர். உதாரணமாக, பூமி தட்டை என நம்புகிறவர் தனக்கோ மற்றவர்களுக்கோ எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். “வேறுபாடுகள் இருந்தாலும் சர்ச்சை செய்யக்கூடாது” என்றே சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு செய்வது எப்போதுமே புத்திசாலித்தனமான காரியமா? பிணவறையில் பிரேதப் பரிசோதனை செய்த பிறகு நேரடியாக மருத்துவமனைக்கு சென்று வியாதிப்பட்டவர்களை தொட்டு சிகிச்சையளிக்கலாம் என ஒரு டாக்டர் இன்னமும் நம்பிக்கொண்டிருந்தால் அவருடன் பணிபுரியும் மற்றொரு டாக்டர் வேறுபாடுகளைக் குறித்து சர்ச்சை செய்யக்கூடாது என பேசாமல் இருந்துவிடலாமா?
மதம் என்று வரும்போதும், தவறான நம்பிக்கைகளால் விளைந்த பெரும் சேதங்களை சரித்திரம் படம்பிடித்துக் காட்டுகிறது. புனித சிலுவைப் போர்கள் என அழைக்கப்பட்ட இடைக்கால போர்களில் மதத் தலைவர்களால் “தூண்டப்பட்ட கிறிஸ்தவ மதவெறியர்கள் இரக்கமற்ற வன்முறையில்” ஈடுபட்டதால் விளைந்த கொடுமைகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லது சமீபத்திய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட நவீனகால “கிறிஸ்தவ” போர்வீரர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்; “தங்கள் வாள்களின் கைப்பிடியில் புனிதர்களின் பெயர்களை பொறித்து வைத்திருந்த இடைக்கால போர்வீரர்களைப் போல [இவர்களும்] தங்கள் துப்பாக்கிகளின் பின்பக்கத்தில் கன்னி மரியாளின் படங்களை ஒட்டி வைத்திருந்தனர்.” இந்த மதவெறியர்கள் அனைவரும் தாங்கள் சரியானதை செய்வதாகவே நம்பினர். ஆனாலும், இந்த போரிலும் மற்ற மத போராட்டங்களிலும் யுத்தங்களிலும் ஏதோ மிகப் பெரிய தவறு இருந்தது.
இன்று ஏன் இவ்வளவு குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்துள்ளன? பிசாசாகிய சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குவதே’ காரணம் என பைபிள் பதிலளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9; 2 கொரிந்தியர் 4:4; 11:3) வருத்தகரமாக, மத நம்பிக்கையுள்ள அநேகர் ‘அழிந்து போவார்கள்’ என அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்; ஏனெனில், அவர்கள் ‘அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து . . . தீங்கிழைக்கும்’ சாத்தானால் ஏமாற்றப்பட்டிருப்பர். அப்படிப்பட்டவர்கள், “தங்களை மீட்க வல்ல உண்மையின்பால் ஆர்வம் காட்ட மறு”ப்பதால் ‘பொய்யானதை நம்பும்வண்ணம் வஞ்சக ஆற்றலுக்கு உட்பட்டிருப்பர்’ எனவும் பவுல் கூறினார். (2 தெசலோனிக்கேயர் 2:9-12, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, பொய்யை நம்பிவிடாதபடி ஜாக்கிரதையாய் இருப்பது எப்படி? உண்மையில், உங்கள் நம்பிக்கைகளுக்கு காரணம் என்ன?
வளர்ப்பு காரணமா?
ஒருவேளை உங்கள் குடும்பத்தினரின் நம்பிக்கைகளில் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கலாம். அதுவும் நல்லதாகவே இருக்கக்கூடும். ஏனெனில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார். (உபாகமம் 6:4-9; 11:18-21) உதாரணமாக, தன் தாய்க்கும் பாட்டிக்கும் செவிசாய்த்ததனால் இளைஞனாகிய தீமோத்தேயு அதிக பயனடைந்தார். (2 தீமோத்தேயு 1:5; 3:14, 15) பெற்றோரின் நம்பிக்கைகளை மதிக்கும்படியே வேதவாக்கியங்கள் புத்தி சொல்கின்றன. (நீதிமொழிகள் 1:8; எபேசியர் 6:1) ஆனால் உங்கள் பெற்றோர் நம்புகின்றனர் என்பதற்காக நீங்களும் அதையே நம்ப வேண்டும் என உங்கள் சிருஷ்டிகர் நினைக்கிறாரா? முந்தைய சந்ததி நம்பியவற்றையும் செய்தவற்றையும் யோசிக்காமல் பின்பற்றுவது ஆபத்தாகக்கூட இருக்கலாம்.—சங்கீதம் 78:8; ஆமோஸ் 2:4.
இயேசு கிறிஸ்துவை சந்தித்த ஒரு சமாரிய ஸ்திரீ, சமாரியர்களின் மத நம்பிக்கைகளில் வளர்க்கப்பட்டிருந்தாள். (யோவான் 4:20) எதை நம்புவது என தீர்மானிக்க அவளுக்கிருந்த சுதந்திரத்தை இயேசு மதித்தபோதிலும், “நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்” என சுட்டிக் காண்பித்தார். உண்மையில், அவளுடைய மத நம்பிக்கைகளில் அநேகம் தவறானவை. அவள் கடவுளை ஏற்கத்தக்க விதத்தில், “ஆவியோடும் உண்மையோடும்,” தொழுதுகொள்ள விரும்பினால் தன் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவளிடம் கூறினார். அவளும் அவளைப் போன்ற மற்றவர்களும் தங்களுக்கு பிரியமாயிருந்த நம்பிக்கைகளையே பற்றிக்கொண்டிருப்பதற்கு பதிலாக இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய “விசுவாசத்துக்குக் கீழ்ப்படி[ய]” வேண்டும்.—யோவான் 4:21-24, 39-41; அப்போஸ்தலர் 6:7.
போதிப்பு காரணமா?
விசேஷித்த துறைகளைச் சேர்ந்த அநேக போதகர்களும் வல்லுனர்களும் நம் மதிப்பை பெற தகுதியானவர்களே. ஆனாலும், புகழ்பெற்ற அநேக போதகர்களின் நம்பிக்கைகள் முழுக்க முழுக்க தவறாக இருந்ததற்கான ஆதாரங்கள் சரித்திரத்தில் ஏராளம் உள்ளன. உதாரணமாக, அறிவியல் விஷயங்களைக் குறித்து கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் எழுதிய இரண்டு புத்தகங்களை விமர்சித்து சரித்திராசிரியர் பர்ட்ரண்ட் ரசல் இவ்வாறு கூறினார்: “நவீன அறிவியலின் வெளிச்சத்தில் பார்த்தால் இவற்றிலுள்ள ஒரு வாக்கியத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது.” இன்றைய வல்லுனர்கள்கூட அநேக சமயங்களில் முற்றிலும் தவறான தீர்மானங்களை செய்துவிடுகின்றனர். “காற்றைவிட அதிக எடையுள்ள பறக்கும் இயந்திரங்கள் சாத்தியமே கிடையாது” என 1895-ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி லார்ட் கெல்வின் கூறினார். ஆகவே, அதிகாரமுள்ள ஒருவர் சொல்லிவிட்டார் என்றால் அது உண்மையாகத்தான் இருக்கும் என ஞானமுள்ள ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிட மாட்டார்.—சங்கீதம் 146:3.
மத போதனைகளைக் குறித்ததிலும் அதே விதமான எச்சரிப்பு அவசியம். தன்னுடைய மத போதகர்களால் மிக நன்றாக போதிக்கப்பட்ட அப்போஸ்தலன் பவுல், தன் “பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவ”ராயிருந்தார். ஆனால் தன் முன்னோருடைய பாரம்பரிய நம்பிக்கைகளுக்காக அவர் காட்டிய பக்தி வைராக்கியம் அவருக்கே பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அதனால் அவர், “தேவனுடைய சபையை . . . மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி”னார். (கலாத்தியர் 1:13, 14; யோவான் 16:2, 3) அதையும்விட மோசமான செயல் என்னவென்றால், பவுல் பல நாட்களாக ‘தாற்றுக்கோலை எதிர்த்து உதைத்தார்,’ அதாவது இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்க வழிநடத்தியிருக்கக்கூடிய செல்வாக்குகளை எதிர்த்து வந்தார். ஆச்சரியப்படும் விதத்தில் இயேசுவே தலையிட்ட பிறகுதான் பவுல் தன் நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டார்.—அப்போஸ்தலர் 9:1-6; 26:14, திருத்திய மொழிபெயர்ப்பு.
மீடியா காரணமா?
ஒருவேளை மீடியா உங்கள் நம்பிக்கைகளை பெரிதும் பாதித்திருக்கலாம். தங்களுக்கு பயனுள்ள தகவலை பெற முடிவதால் மீடியாவில் பேச்சு சுதந்திரம் இருப்பதற்காக அநேகர் சந்தோஷப்படுகின்றனர். ஆனால், மீடியாவை கைப்பாவையாக பயன்படுத்தக்கூடிய, பெரும்பாலும் அவ்வாறே பயன்படுத்துகிற, வல்லமை வாய்ந்த சக்திகளும் உள்ளன. உங்களை அறியாமலேயே உங்கள் சிந்தனையை பாதிக்கக்கூடிய ஒருதலைப்பட்சமான தகவலே மீடியாவில் அடிக்கடி அளிக்கப்படுகிறது.
அதோடு, அதிகமான ஆட்களை கவர வேண்டும் என்பதற்காக பரபரப்பூட்டுகிற, அசாதாரணமான விஷயங்களுக்கே மீடியா அதிக விளம்பரம் கொடுக்க முனைகிறது. சில வருடங்கள் முன்பு பொது மக்கள் கேட்க அல்லது வாசிக்க அனுமதிக்கப்படாத விஷயங்கள் இன்று சர்வசாதாரணம் ஆகிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக, நடத்தை சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரங்கள் தாக்கப்பட்டு சீர்குலைந்து வருகின்றன. மக்களின் சிந்தனை மெதுமெதுவாக உருக்குலைந்து வருகிறது. அவர்கள் “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும்” நம்ப ஆரம்பிக்கின்றனர்.—ஏசாயா 5:20; 1 கொரிந்தியர் 6:9, 10.
நம்பிக்கை வைக்க உறுதியான ஆதாரத்தை கண்டுபிடித்தல்
மனிதனுடைய எண்ணங்களையும் தத்துவங்களையும் ஆதாரமாக வைப்பது மணலின் மேல் வீடு கட்டுவதற்கு சமமாகும். (மத்தேயு 7:26; 1 கொரிந்தியர் 1:19, 20) அப்படியென்றால், எந்த ஆதாரத்தின் மீது உங்கள் நம்பிக்கைகளை முழு நிச்சயத்துடன் வைக்க முடியும்? உங்களை சுற்றியுள்ளவற்றை ஆராய்ச்சி செய்ய, ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி கேள்வி கேட்க உதவும் அறிவாற்றலை கடவுள் உங்களுக்கு கொடுத்திருப்பதால் உங்கள் கேள்விகளுக்கு சரியான விடைகள் கிடைக்கவும் அவரே ஏற்பாடு செய்வார் அல்லவா? (1 யோவான் 5:20) ஆம், நிச்சயம் செய்வார்! ஆனால் வழிபாட்டு விஷயங்களில் சரியானது, உண்மையானது அல்லது மெய்யானது எது என நாம் எப்படி உறுதிசெய்வது? இதற்கு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள்தான் ஒரே ஆதாரம் என்று சொல்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்.—யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16, 17.
“ஆனால், உலகத்திலுள்ள பெரும்பாலான குழப்பத்திற்கும் சச்சரவுகளுக்கும் பைபிளை வைத்திருப்பவர்கள்தானே மூலகாரணம்” என்று யாராவது சொல்லக்கூடும். பைபிளை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் மதத் தலைவர்களே அநேக குழப்பமான, சச்சரவுகள் நிறைந்த கருத்துகளை உருவாக்கியிருக்கின்றனர் என்பது உண்மையே. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை பைபிள் மீது ஆதாரமாக வைக்காததே இதற்கு காரணம். அவர்கள், “கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளை” உண்டாக்கும் ‘கள்ளத்தீர்க்கதரிசிகள்,’ “கள்ளப்போதகர்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு விவரிக்கிறார். அவர்களுடைய நடவடிக்கைகள் காரணமாக “சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்” என்றும் அவர் கூறுகிறார். (2 பேதுரு 2:1, 2) இருந்தாலும், பேதுரு இவ்வாறு எழுதுகிறார்: “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; . . . இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.”—2 பேதுரு 1:19; சங்கீதம் 119:105.
நம்முடைய நம்பிக்கைகளை பைபிளின் போதனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (1 யோவான் 4:1) அவ்வாறு செய்வது தங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது என இந்தப் பத்திரிகையை வாசிக்கும் லட்சக்கணக்கானோர் நிச்சயம் ஒத்துக்கொள்வர். ஆகவே, நற்குணசாலிகளாய் இருந்த பெரோயா பட்டணத்தாரைப் போல இருங்கள். எதை நம்புவது என தீர்மானிப்பதற்கு முன்பு “தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து” பாருங்கள். (அப்போஸ்தலர் 17:11) இதன் சம்பந்தமாக உங்களுக்கு உதவி செய்ய யெகோவாவின் சாட்சிகள் தயாராய் இருக்கிறார்கள். என்றாலும், எதை நம்ப வேண்டும் என்பது உங்களுடைய தீர்மானமே. ஆனால், உங்கள் நம்பிக்கைகளுக்கு மனித ஞானமும் விருப்பங்களும் அடிப்படையாக இராமல் வெளிப்படுத்தப்பட்ட கடவுளுடைய சத்திய வார்த்தையே அடிப்படையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது புத்திசாலித்தனமான காரியமல்லவா?—1 தெசலோனிக்கேயர் 2:13; 5:21.
[பக்கம் 6-ன் படக்குறிப்பு]
உங்கள் நம்பிக்கைகளை முழு நிச்சயத்துடன் பைபிள் மீது வைக்கலாம்