ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
அவருடைய கண்ணீரை கடவுள் துடைத்தார்
யெகோவாவின் சட்டதிட்டங்களுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறவர்கள் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். தேவையான மாற்றங்களைச் செய்வது எப்போதுமே எளிதல்ல; ஆனால், அதற்கு உதவியும் உற்சாகமும் எந்த சமயத்திலும் கிடைக்கிறது. (சங்கீதம் 84:11) தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் ஓர் அனுபவம் இதை விளக்குகிறது.
விடுமுறையின் போது பிரான்ஸை சேர்ந்த சகோதரி, கடை வைத்திருந்த கிம்a என்ற பெண்மணியிடம் பூமியின் மீது யெகோவா கொண்டுள்ள நோக்கத்தைப் பற்றி பேசினார். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தையும் கிம்முக்குக் கொடுத்தார். அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகையில், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்” என்ற வார்த்தைகள் பளிச்சென கிம்மின் கண்களில் பட்டன. (வெளிப்படுத்துதல் 21:4) “உண்மையிலேயே இந்த வசனம் என் நெஞ்சைத் தொட்டது. நாள் முழுவதும் கடையில் சிரித்து கலகலவென பேசும் நான் சாயங்காலம் வீடு திரும்பியதிலிருந்து தூங்கும் வரை கண்ணீர் வடித்தது யாருக்குத் தெரியும்?” என நினைவுபடுத்தி சொல்கிறார் கிம். “நான் 18 வருஷம் ஒருவரோடு வாழ்ந்து வந்தேன்; ஆனால் அவர் என்னை கல்யாணம் செய்துகொள்ள மறுத்ததால் துளியும் சந்தோஷமின்றி தவித்தேன். இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு முடிவுகட்ட விரும்பினேன். ஆனால் இத்தனை காலம் சேர்ந்து வாழ்ந்ததால் விட்டுப் பிரியும் தைரியம் எனக்கு இல்லாதிருந்தது” என தான் கவலையாக இருந்ததற்குரிய காரணத்தை விளக்குகிறார்.
கொஞ்ச நாட்களுக்குப் பின், யெகோவாவின் சாட்சியாக இருக்கும் லின் என்ற சகோதரியுடன் பைபிள் படிக்க கிம் ஒப்புக்கொண்டார். “உடனடியாக பைபிள் போதனைகளுக்கு இசைய வாழ்வதில் ஆர்வம் காட்டினேன். உதாரணமாக, குடும்பத்தார் எதிர்க்க ஆரம்பித்த போதிலும் என் முன்னோர்களை வழிபடுவதை நிறுத்தினேன். மேலும், எங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக்க முயற்சி செய்தேன்; ஆனால் என்னோடு வாழ்ந்து வந்தவரோ அதற்கு மறுத்துவிட்டார். இந்த இக்கட்டான காலத்தில் பிரான்ஸை சேர்ந்த அந்த சகோதரி தொடர்ந்து பைபிள் பிரசுரங்களை எனக்கு அனுப்பி வந்தார்; எனக்கு பெரும் உற்சாகத்தை லின்னும் அளித்து வந்தார். என்னோடு வாழ்ந்து வந்தவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்ற நிஜம் தெரியும் வரை இந்த சகோதரிகள் காட்டிய பொறுமையும் அன்பான ஆதரவும்தான் நிலைத்திருக்க எனக்கு உதவின. ஏற்கெனவே அந்த ஆளுக்கு 5 ‘மனைவிகளும்’ 25 பிள்ளைகளும் இருப்பதைக் கண்டுபிடித்தேன்! அவரை விட்டு ஒதுங்க இதுவே எனக்குத் தேவையான தைரியத்தை தந்தது” என்கிறார் கிம்.
“சொகுசான பெரிய வீட்டை விட்டுவிட்டு சிறிய வீட்டில் குடியிருப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதோடுகூட, நான் விட்டுப் பிரிந்த அந்த ஆள் தன்னோடு வந்து வாழும்படி ஓயாமல் தொந்தரவு கொடுத்து வந்தார். நான் வர மறுத்தால் என்மீது ஆஸிட்டை ஊற்றி உருக்குலைக்க போவதாகவும் பயமுறுத்தி வந்தார். யெகோவாவின் உதவியுடன் எது சரியோ அதை செய்ய என்னால் முடிந்தது.” கிம் தொடர்ந்து முன்னேற்றம் செய்து இறுதியில் 1998 ஏப்ரல் மாதம் முழுக்காட்டுதல் பெற்றார். மேலும், அவருடைய சகோதரிகளில் இருவரும் வாலிப வயதுள்ள மகனும் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள்.
“நம்பிக்கை என்ற பேச்சுக்கே என் வாழ்க்கையில் இடமில்லை என நான் நினைத்ததுண்டு. ஆனால் இன்றோ, நான் சந்தோஷமாக இருக்கிறேன். இரவில் இப்போது அழுவதே இல்லை. யெகோவா என் கண்ணீரை இப்போதே துடைத்துவிட்டார்” என்கிறார் கிம்.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.