வாழ்க்கை சரிதை
வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்க யெகோவா உதவினார்
டேல் அர்வன் சொன்னபடி
“எதிர்பாராத எட்டு! ஒரே பிரசவத்தில் பிறந்தது நான்கு!! இரட்டித்தது இம்சை!!!” உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் என் குடும்பத்தைப்பற்றி வெளிவந்த தலைப்புச் செய்தி இது; ஏற்கெனவே நான்கு பெண்பிள்ளைகள் இருந்த எங்கள் குடும்பத்தில் கூடுதலாக ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தது பற்றி அது குறிப்பிட்டிருந்தது. இளைஞனாக இருந்தபோது, திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் அப்பாவாக வேண்டும் என்ற நினைப்பும் எனக்கு இருந்ததேயில்லை. இப்பொழுதோ நான் எட்டுக் குழந்தைகளுக்குத் தகப்பன்!
ஆஸ்திரேலியாவிலுள்ள மரீபா நகரில் 1934-ல் நான் பிறந்தேன். மூன்று பிள்ளைகளில் நான்தான் கடைக்குட்டி. பிறகு எங்கள் குடும்பம் பிரிஸ்பேன் நகருக்குக் குடிமாறிச் சென்றது, அம்மா மெத்தடிஸ்ட் சர்ச்சில் ‘சன்டே கிளாஸில்’ கற்பித்து வந்தார்.
1938-ன் ஆரம்பத்தில், உள்ளூர் செய்தித்தாள்களில் யெகோவாவின் சாட்சிகளின் உலகத் தலைமையகத்திலிருந்து ஜோஸப் எஃப். ரதர்ஃபோர்டு ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படலாம் என்ற செய்தி வந்திருந்தது. “ஏன் இப்படிச் செய்கிறார்கள்?” என்று எங்கள் வீட்டிற்கு வந்திருந்த ஒரு யெகோவாவின் சாட்சியிடம் அம்மா கேட்டார். அதற்கு அவர், “தம்முடைய சீஷர்களை மக்கள் துன்புறுத்துவார்கள் என இயேசு சொல்லவில்லையா?” என்று பதிலளித்தார். பிறகு நிவாரணம் (ஆங்கிலம்) என்ற சிறுபுத்தகத்தை அவர்களிடமிருந்து அம்மா பெற்றுக்கொண்டார். உண்மை மதத்திற்கும் பொய்மதத்திற்கும் இடையே உள்ள நிறைய வேறுபாடுகள் அதில் விளக்கப்பட்டிருந்தன.a அதிலுள்ள விஷயங்கள் அம்மாவைக் கவர்ந்ததால், அடுத்த ஞாயிற்றுக்கிழமையே பிள்ளைகளாகிய எங்களையும் கூட்டிக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்குச் சென்றார். முதலில் அப்பா கடுமையாக எதிர்த்தார், ஆனால் அவ்வப்போது பைபிள் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுதி சகோதரர் ஒருவரிடம் பதில் கேட்டு வருமாறு அம்மாவிடம் கொடுத்துவிடுவார். அந்தச் சகோதரர், அவற்றிற்கெல்லாம் பைபிளிலிருந்தே பதில்களை எழுதி அம்மாவிடம் கொடுத்தனுப்புவார்.
யெகோவாவின் சாட்சிகளைத் தனக்குப் பிடிக்கவில்லை என்பதைச் சொல்வதற்காகவே ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு ஒருநாள் அப்பா எங்களோடு வந்தார். என்றாலும், அந்தச் சமயத்தில் சபைக்கு விஜயம் செய்திருந்த பயணக் கண்காணியுடன் பேசிய பிறகு, அப்பா தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார்; எங்கள் வீட்டை வாராந்தர பைபிள் படிப்பு மையமாகப் பயன்படுத்தவும்கூட அனுமதித்தார், அது எங்கள் பகுதியிலிருந்த ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள உதவியாயிருந்தது.
செப்டம்பர் 1938-ல், என்னுடைய பெற்றோர் முழுக்காட்டுதல் பெற்றனர். நியூ செளத் வேல்ஸ், சிட்னியிலுள்ள ஹார்க்ரேவ் பார்க்கில் டிசம்பர் 1941-ல் நடைபெற்ற தேசிய மாநாட்டில் நானும் என் உடன் பிறந்தவர்களும் முழுக்காட்டுதல் பெற்றோம். அப்போது எனக்கு ஏழு வயது. அதன் பிறகு, என் பெற்றோருடன் தொடர்ந்து வெளி ஊழியத்தில் பங்குகொண்டேன். அந்த நாட்களில், யெகோவாவின் சாட்சிகள் ‘ஃபோனோகிராப்’ கருவியை வீட்டுக்குவீடு எடுத்துச் சென்றனர்; பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சுகளை வீட்டுக்காரர்களுக்குப் போட்டுக் காட்டினர்.
பர்ட் ஹார்டன் என்ற சகோதரர் செய்து வந்த ஊழியம் இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அவர் சக்திவாய்ந்த ஒலிபெருக்கிப் பெட்டியை உடைய ஒரு கார் வைத்திருந்தார், ஒரு பெரிய ஸ்பீக்கரும் அதன்மேல் பொருத்தப்பட்டிருந்தது. அவரோடு சேர்ந்து ஊழியம் செய்தது குறிப்பாக அந்த வயதில் எனக்குப் பரபரப்பூட்டியது. உதாரணமாக, ஒரு மலை மேலிருந்து பைபிள் பேச்சை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும்போது, ஒரு போலீஸ் வேன் அந்தப் பக்கம் போவதை அடிக்கடி பார்ப்போம். பர்ட் ஒலிபெருக்கி சாதனத்தை சட்டென அணைத்துவிட்டு, சில கிலோமீட்டர் தூரமுள்ள இன்னொரு மலைக்கு ஓட்டிச் சென்று அங்கே வேறொரு பேச்சை ஒலிபரப்புவார். பர்ட்டிடமிருந்தும் அவரைப்போன்ற உண்மையான, நெஞ்சுரமிக்க சகோதரர்களிடமிருந்தும் தைரியத்தைக் கற்றுக்கொண்டேன்; யெகோவாவில் நம்பிக்கை வைப்பது பற்றியும் நிறையக் கற்றுக்கொண்டேன்.—மத்தேயு 10:16.
எனக்கு 12 வயதானபோது, பள்ளி முடிந்தபிறகு நானாகவே சாட்சிகொடுத்து வந்தேன். ஒரு சமயம், அட்ஸ்ஹெட் என்பவரின் குடும்பத்தைச் சந்தித்தேன். காலப்போக்கில் அவர், அவருடைய மனைவி, அவர்களுடைய எட்டுப் பிள்ளைகள், இன்னும் நிறைய பேரப்பிள்ளைகள் என அனைவரும் சத்தியத்தைக் கற்றுக்கொண்டனர். இந்த அருமையான குடும்பத்திற்கு பைபிள் சத்தியத்தைச் சொல்ல சிறுவனாயிருந்த என்னை அனுமதித்ததற்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்தினேன்.—மத்தேயு 21:16.
இளவயதில் சிறப்பான நியமிப்புகள்
என்னுடைய 18-ம் வயதில் நியு செளத் வேல்ஸ், மைட்லாந்துக்கு முழுநேர பயனியர் ஊழியனாக நியமிக்கப்பட்டேன். 1956-ல் சிட்னியிலுள்ள ஆஸ்திரேலிய கிளை அலுவலகத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்டேன். அங்கிருந்த இருபது ஊழியர்களில், மூன்றில் ஒரு பங்கினர் பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யும் நம்பிக்கையுடைய அபிஷேகம் செய்யப்பட்டவர்கள். அவர்களோடு சேர்ந்து வேலை செய்தது என்னே ஒரு பாக்கியம்!—லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 1:6; 5:10.
ஒரு பெரிய திட்டத்தில் எனக்கு உதவி செய்ய ஓர் அழகான பயனியர் சகோதரி கிளை அலுவலகத்திற்கு தற்காலிகமாக அழைக்கப்பட்டார்; பெயர் ஜூடி ஹெல்பர்க், அவரை சந்தித்ததும் திருமணம் செய்துகொள்ள வேண்டாமென்ற என் தீர்மானம் மெழுகைப்போல் உருகிவிட்டது. நானும் ஜூடியும் ஒருவரையொருவர் காதலித்தோம், இரண்டு வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டோம். அதன்பிறகு, நாங்கள் வட்டார ஊழியத்தை ஆரம்பித்தோம், அதனால் வாரா வாரம் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒவ்வொரு சபையாக விஜயம் செய்து சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த வேண்டியிருந்தது.
ஜூடி 1960-ல் எங்களுடைய முதல் மகள் கிம்மைப் பெற்றெடுத்தாள். இன்றும்கூட, குழந்தை வைத்துக்கொண்டால் வட்டார ஊழியத்தை விட்டுவிட்டு ஒரே இடத்தில் இருந்துவிட வேண்டியதுதான். ஆனால் நாங்கள் அந்த வேலையைத் தொடரும்படி அனுமதிக்கப்பட்டது எங்களுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. நன்கு ஜெபம் செய்த பிறகு நாங்கள் அதற்கு ஒத்துக்கொண்டோம், அடுத்து வந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக பஸ்ஸிலும், விமானத்திலும், ரயிலிலும் 13,000 கிலோமீட்டருக்கு கிம் எங்களோடு பயணம் செய்தாள், ஏனென்றால் ரொம்ப தூரத்திலுள்ள குயின்ஸ்லாந்து சபைகளிலும் வடக்கு பிரதேச சபைகளிலும் சேவை செய்தோம். அந்தச் சமயத்தில் எங்களிடம் சொந்தமாக கார் இருக்கவில்லை.
சகோதர சகோதரிகளின் வீட்டில்தான் நாங்கள் எப்பொழுதும் தங்கினோம். வெப்பமான சீதோஷ்ணநிலை காரணமாக, அந்தக் காலத்தில் படுக்கை அறைகளில் பொதுவாக கதவுகளுக்குப் பதிலாக திரைச்சீலைகளே இருந்தன; இதனால் இரவில் கிம் அழுதபோது தொல்லை இன்னும் அதிகமானது. குழந்தையையும் கவனித்துக்கொண்டு எங்களுடைய நியமிப்பையும் செய்யும் பொறுப்பு உண்மையில் போகப்போக மிகவும் கடினமாகவே இருந்தது. அதனால் நாங்கள் பிரிஸ்பேனிலேயே தங்கிவிட்டோம்; ஓவியம் (sign painting) தீட்டும் வேலை செய்ய ஆரம்பித்தேன். அது விளம்பர ஓவியத்தின் ஒரு வகை. கிம் பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அடுத்த மகள் பெட்டீனா பிறந்தாள்.
சோகத்தைச் சமாளித்தல்
பெரியவள் 12 வயதிலும் சிறியவள் 10 வயதிலும் இருந்தபோது, ஹாஜ்கின்ஸ் நோயால் ஜூடி இறந்துவிட்டாள். இது ஒருவகையான நிணநீர் திசுக்கட்டி. எங்களுக்கு இது தாங்கமுடியாத இழப்பாக இருந்தது. என்றாலும், ஜூடி நோயோடு போராடிக்கொண்டிருந்தபோதும், அவள் இறந்த பிறகும், யெகோவா, தம்முடைய வார்த்தையின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் மூலமாகவும், அன்பான சகோதர சகோதரிகளின் மூலமாகவும் எங்களுக்கு ஆறுதல் அளித்தார். மேலும் இந்தச் சோக சம்பவத்திற்குப் பிறகு சரியான நேரத்தில் வெளிவந்த காவற்கோபுர பத்திரிகையிலிருந்தும் பலம் பெற்றோம். அதில், அன்பானவரைப் பறிகொடுத்த நிலை உட்பட தனிப்பட்ட சவால்களைச் சமாளிப்பது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதோடு சகிப்புத்தன்மை, விசுவாசம், உத்தமத்தன்மை போன்ற தெய்வீக குணங்களை வளர்த்துக்கொள்ள கஷ்டங்கள் எப்படி உதவும் என்பதும் விளக்கப்பட்டிருந்தது.b—யாக்கோபு 1:2-4.
ஜூடியின் மரணத்திற்குப் பிறகு நானும் பிள்ளைகளும் மிகவும் நெருக்கமாக ஆனோம். அதே சமயத்தில் அப்பா, அம்மா என இரு பாகங்களையும் நிறைவேற்றுவது பெரிய சவாலாக இருந்தது. என்றாலும், என்னுடைய அருமை மகள்கள் அந்த வேலையை மிகவும் சுலபமாக்கினர்.
மறுமணமும் பெரிய குடும்பமும்
காலம் கடந்தது, நான் மறுமணம் செய்துகொண்டேன். மரீ என்னுடைய இரண்டாம் மனைவியானாள். எங்கள் இரண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அவளும் தன்னுடைய கணவரை ஹாஜ்கின்ஸ் நோய்க்குப் பறிகொடுத்தவள்தான். அவளுக்கும் காலீன், ஜெனிஃபர் என்று இரண்டு மகள்கள் இருந்தனர். பெட்டீனாவைவிட காலீன் கிட்டத்தட்ட மூன்று வயது இளையவள். அப்போது எங்கள் குடும்பத்தில் 14, 12, 9, 7 வயதுகளில் நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
வளர்ப்புப் பெற்றோரின் புத்திமதியை பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரும்வரை அவரவர் பெற்ற பிள்ளைகளுக்கு சிட்சை கொடுப்பது என மரீயும் நானும் தீர்மானித்தோம். கணவன் மனைவியாக எங்களுடைய உறவில் இரண்டு முக்கிய விதிகளை வகுத்துக்கொண்டோம். ஒன்று, குழந்தைகளுக்கு முன்னால் எங்களுடைய கருத்து வேறுபாடுகளை ஒருபோதும் காட்டிக்கொள்ளக் கூடாது; இன்னொன்று, எபேசியர் 4:26-ல் உள்ள பைபிள் நியமத்திற்கு இசைவாக எவ்வளவு நேரமெடுத்தாலும் காரியங்களைப் பேசித் தீர்த்துக்கொள்வது.
ஆச்சரியமாக, எல்லாருமே நன்றாக ஒத்துழைத்தனர், ஆனால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்பை உடனடியாக மறந்துவிட முடியவில்லை. உதாரணமாக, திங்கள்கிழமை இரவு மரீக்கு “கண்ணீர் இரவாக” மாறியது. குடும்பப் படிப்பு முடிந்து, பிள்ளைகள் படுக்கைக்குச் சென்றபிறகு மரீயின் அடக்கிவைத்த உணர்ச்சிகளெல்லாம் அணை உடைந்து வெளிவரும்.
எங்கள் இருவருக்கென்று ஒரு குழந்தை வேண்டுமென மரீ ஆசைப்பட்டாள். வருத்தகரமாக, அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. மீண்டும் மரீ கர்ப்பமானபோது, எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அல்ட்ராசெளன்ட் ஸ்கேனிங் பரிசோதனையில் மரீ சுமந்து கொண்டிருப்பது ஒன்றல்ல, நான்கு எனத் தெரியவந்தது! நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்தேன். அப்போது எனக்கு 47 வயது; விரைவில் எட்டுப் பிள்ளைகளுக்கு அப்பா ஆகவிருந்தேன்! மரீ கர்ப்பமாகி 8 மாதங்கள் முடிந்தபோது பிப்ரவரி 14, 1982-ல் அறுவை சிகிச்சை முறையில் நான்கு குழந்தைகள் பிறந்தன. பிறப்பின்படி அவர்கள், க்லின்ட், 1.6 கிலோ; சின்டீ 1.9 கிலோ; ஜெரமீ 1.4 கிலோ; டானட் 1.7 கிலோ. குழந்தைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன.
பிறந்த கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, மரீக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் என்னருகில் வந்து அமர்ந்தார்.
“குழந்தைகளை எப்படிக் கவனித்துக்கொள்வது என கவலைப்படுகிறீர்களா?” என்று கேட்டார்.
“இப்படி ஒரு சூழ்நிலை இதற்குமுன் எனக்கு ஏற்பட்டதில்லையே!” என்றேன்.
அப்போது அவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு அசந்து போனேன், உற்சாகமும் அடைந்தேன்.
“உங்களுடைய சபை உங்களைக் கைவிடாது, நீங்கள் தும்மினால் போதும், ஆயிரம் பேர் வந்துவிடுவார்கள்” என்று சொன்னார்.
இந்த மருத்துவரும் அவருடைய குழுவினரும் அபார திறமையோடு பிரசவம் பார்த்ததால்தான் ஆரோக்கியமான நான்கு குழந்தைகளுடன் மருத்துவமனையிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாகவே எங்களால் வீடு திரும்ப முடிந்தது.
இந்த ‘நான்கின்’ சவால்
ஒழுங்கைக் கடைப்பிடிக்க நானும் மரீயும் 24 மணிநேர அட்டவணை போட்டோம். எங்களுடைய மூத்த பிள்ளைகள் நான்கு பேரும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மிகவும் உதவினர். அந்த மருத்துவர் சொன்ன வார்த்தைகள் உண்மையானது; “தும்மினால்கூட” சபையே உதவி செய்ய அணிவகுத்து வந்தது. முன்னாளைய, நீண்டகால நண்பர் ஜான் மேக் ஆர்தர் எங்களுடைய வீட்டைப் பெரிதாக்க தொழில் தெரிந்த சகோதரர்களை ஒருங்கிணைத்திருந்தார். குழந்தைகளை வீட்டுக்கு கொண்டுவந்தபோது, அவர்களைக் கவனித்துக்கொள்ள சில சகோதரிகள் அணிதிரண்டு வந்தார்கள். தயவுடன் செய்யப்பட்ட இந்த அத்தனை உதவிகளும் கிறிஸ்தவ அன்பு செயலில் காட்டப்பட்டதற்கு அத்தாட்சியாக இருந்தன.—1 யோவான் 3:18.
ஒரு விதத்தில் அந்த நான்கு குழந்தைகளும் “சபையின் குழந்தைகளாகவே” இருந்தன. இந்நாள் வரைக்கும்கூட, இந்த நால்வரும் எங்களுக்கு உதவிய அன்பான அநேக சகோதர சகோதரிகளை குடும்ப அங்கத்தினர்களாகவே கருதுகின்றனர். மரீ ஒரு சிறந்த மனைவியாகவும் நல்ல தாயாகவும் தன்னுடைய குழந்தைகளை சுயநலமின்றி கவனித்திருக்கிறாள். அவள் கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அமைப்பிலிருந்தும் கற்றுக்கொண்டவற்றை உண்மையில் கடைப்பிடித்திருக்கிறாள். அவை தருகிற அறிவுரையைவிட சிறந்தவற்றை வேறு எவை தரமுடியும்!—சங்கீதம் 1:2, 3; மத்தேயு 24:45.
நான்கு குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது ஒரு சவாலாக இருந்தபோதிலும்கூட, வாராந்தர வழக்கத்தில் கிறிஸ்தவக் கூட்டங்களும் பிரசங்க வேலையும் மிக முக்கியமானவையாக இருந்தன. அந்தச் சமயத்தில் திருமணமான இரண்டு தம்பதியருக்கு பைபிள் படிப்பு நடத்தினோம்; அவர்கள் எங்கள் வீட்டுக்கே வந்து படித்தனர். இது எங்கள் வேலையை எளிதாக்கினாலும், சில சமயங்களில் மரீ களைப்பு காரணமாக உறங்கும் குழந்தையைக் கைகளில் ஏந்தியவாறே தூங்கிவிடுவாள். சில காலத்திற்குப் பிறகு, அந்த இரண்டு தம்பதியரும் எங்களுடைய ஆன்மீக சகோதர சகோதரிகளானார்கள்.
சிறுவயதில் ஆன்மீகப் பயிற்சி
நானும், மரீயும், எங்கள் மூத்த பிள்ளைகளும் குழந்தைகளை அவை நடப்பதற்கு முன்பேகூட வெளி ஊழியத்திற்கு எடுத்துச் சென்றோம். தத்தித்தத்தி நடைபழகும் பருவத்தில், நானும் மரீயும் இரண்டிரண்டு குழந்தைகளை எடுத்துக்கொள்வோம். அவர்கள் எங்களுக்குச் சுமையாக இருந்ததே இல்லை. உண்மையில், அவர்களே வீட்டுக்காரர்களிடம் சிநேகபாவத்தோடு உரையாடலை ஆரம்பிக்க காரணமாக இருந்தனர். ஒருநாள் ஒரு நபரைச் சந்தித்தேன். அவர், ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட ராசியில் பிறந்திருக்கும் ஒருவருக்கு குறிப்பிட்ட சில குணங்கள் இருக்கும் என்ற கொள்கையுடையவர். நான் அவரோடு வாக்குவாதம் செய்யவில்லை; ஆனால், கொஞ்ச நேரம் கழித்து வரலாமா என கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார், அதனால் நான்கு குழந்தைகளுடன் மீண்டும் சென்றேன். அவர் மலைத்துப் போய்விட்டார்! நான் குழந்தைகளை பிறப்பின் வரிசைப்படி நிறுத்தினேன். பிறகு, தெளிவாகத் தெரியும் உடல் வேறுபாடுகளைப் பற்றி மட்டுமல்ல அவர்களுடைய குணாதிசயங்களில் இருந்த பெரிய வேறுபாடுகளையும் பற்றி சிநேகபாவத்துடன் கலந்துரையாடினோம். அது அவருடைய கொள்கைக்கு ஓர் அடியாக இருந்தது. “இந்தக் கொள்கையை உங்களிடம் சொன்னதில் எந்தவொரு அர்த்தமுமில்லாமல் போய்விட்டது. நானே இதுசம்பந்தமாக இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது, இல்லையா?” என்றார் அவர்.
நடைபழகும் பருவத்தில் இருந்த பிள்ளைகள் சேட்டை செய்தபோது மொத்தமாக வைத்துக் கண்டிப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை, அதனால் தனித்தனியாகத் திருத்தினோம். என்றாலும் எல்லாருக்கும் ஒரே நியதிதான் என்பதைக் கற்றுக்கொண்டனர். பள்ளியில் மனசாட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வந்தபோது பைபிள் நியமங்களில் உறுதியாக இருந்தனர்; ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமலும் இருந்தனர். சின்டீ அவர்கள் சார்பில் பேசுபவளாக ஆனாள். இந்த நால்வரையும் பொறுத்ததில் ஒற்றுமையே பலம் என்பதை மக்கள் விரைவில் அறிந்து கொண்டார்கள்!
அவர்களுடைய பருவ வயதுகளில் யெகோவாவுக்கு உத்தமத்தோடு நிலைத்திருக்க உதவுவதில் மரீக்கும் எனக்கும் வழக்கமான சவால்கள் வந்தன. அன்பான சபையின் ஆதரவும் யெகோவாவுடைய அமைப்பின் காணக்கூடிய பாகத்திலிருந்து கிடைத்த அளவிலா ஆன்மீக உணவும் இல்லையென்றால் இந்தப் பொறுப்பைச் சுமப்பது கடினமாகவே இருந்திருக்கும். ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்பை நடத்த பெரும் முயற்சி எடுத்தோம். வெளிப்படையாக விஷயங்களைப் பரிமாறிக்கொள்வது எப்பொழுதும் சுலபமாக இல்லாவிட்டாலும்கூட அந்த முயற்சி பயனுள்ளதாகவே இருந்திருக்கிறது. ஏனெனில் எங்களுடைய எட்டுப் பிள்ளைகளும் யெகோவாவை சேவிக்கத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
முதிர்வயதைச் சமாளித்தல்
சபை மூப்பர், நகரக் கண்காணி, உதவி வட்டாரக் கண்காணி என பல்வேறு ஆன்மீக நியமிப்புகளை பல வருடங்களுக்கு மேலாகப் பெற்று மகிழ்ந்திருக்கிறேன். மேலும் உள்ளூர் ‘மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழு’வின் (HLC) அங்கத்தினராகவும் சேவை செய்திருக்கிறேன். நோயாளிகளாக இருக்கும் சாட்சிகளுக்கு இரத்தமேற்றுதல் பிரச்சினை எழும்போது மருத்துவர்களுக்கு உதவுவதே அந்தக் குழுவின் பணியாகும். 34 வருடங்களாக திருமணப் பதிவாளராக சேவை செய்யும் பாக்கியமும் பெற்றிருந்தேன். என்னுடைய ஆறு மகள்களின் திருமணம் உட்பட சுமார் 350 திருமண நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.
முதலில் ஜூடியிடமிருந்தும், இப்போது மரீயிடமிருந்தும் பெற்றிருக்கிற உண்மையான ஆதரவிற்காக யெகோவாவுக்கு தொடர்ந்து நன்றி சொல்கிறேன். (நீதிமொழிகள் 31:10, 30) சபையில் மூப்பராக சேவை செய்கையில் எனக்கு ஆதரவாக இருந்ததோடு, ஊழியத்திலும் அவர்கள் நல்ல முன்மாதிரியாக இருந்தனர். ஆன்மீக குணங்களை குழந்தைகளின் மனதில் பதிய வைப்பதற்கும் உதவினர்.
எனக்கு ஒரு வகை மூளைக் கோளாறு இருப்பது 1996-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அது கைநடுக்கத்திற்கும் சமநிலையை இழப்பதற்கும் காரணமானது. எனவே, ஓவிய வேலையைத் தொடர முடியவில்லை. உடல் ரீதியில் நான் தளர்ந்துவிட்டாலும், யெகோவாவின் சேவையில் மிகவும் மகிழ்ச்சி காண்கிறேன். அதில் ஒரு நல்ல அம்சத்தைச் சொல்லவேண்டுமென்றால், வயதான மற்றவர்களுடைய இடத்தில் என்னை வைத்துப் பார்த்து, அவர்களிடம் மிகவும் பரிவோடு நடந்துகொள்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில் எனக்கு உதவியதற்கும் என்னுடைய குடும்பம் நிறைய சவால்களைச் சந்தோஷத்துடன் சமாளிப்பதற்கும் யெகோவா எப்போதும் பக்கத்துணையாக இருந்ததற்காக நன்றி சொல்கிறேன். (ஏசாயா 41:10) மேலும், எங்களுக்கு ஆதரவாக இருந்த அருமையான சகோதர சகோதரிகள் அடங்கிய ஆன்மீக குடும்பத்திற்கு நானும் மரீயும் எங்களுடைய எட்டுப் பிள்ளைகளும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களால் விவரித்துச் சொல்ல முடியாதளவுக்கு அவர்கள் அநேக வழிகளில் தங்களுடைய அன்பை நிரூபித்திருக்கிறார்கள்.—யோவான் 13:34, 35.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, தற்போது அச்சில் இல்லை.
[பக்கம் 12-ன் படம்]
அம்மாவுடன் நானும், அண்ணன் கார்த்தும், அக்கா டானும், 1941-ல் சிட்னியில் நடந்த மாநாட்டுக்கு பயணம் செய்ய தயார் நிலையில்
[பக்கம் 13-ன் படம்]
குழந்தை கிம் மற்றும் ஜூடியுடன் நான் குயின்ஸ்லாந்தில் வட்டாரக் கண்காணியாக இருந்தபோது
[பக்கம் 15-ன் படம்]
நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு, சபையாரும் நான்கு மூத்த பிள்ளைகளும் உதவிக்கு வந்தார்கள்