பைபிள் அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்துகிறதா?
“சிறுவனாக இருந்தபோது பைபிள் நெறிமுறைகளை யாரும் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. கடவுளைப் பற்றி எதையுமே சொல்லித் தரவில்லை” என பின்லாந்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் சொல்கிறான். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்தவர்களை இன்று சர்வ சாதாரணமாக காணலாம். அநேகர், முக்கியமாக இளைஞர், பைபிளை பழம்பாணி புத்தகம் என்றும் அதன் ஆலோசனைகள் அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்துபவை என்றும் கருதுகிறார்கள். பைபிளின்படி நடக்க விரும்புகிறவர்களை, கட்டுப்பாடுகளாலும் கட்டளைகளாலும் பாரப்பட்டு நொறுங்கிப் போனவர்களாக மற்றவர்கள் கருதுகிறார்கள். இதனால், பைபிளை அலமாரியிலேயே வைத்துவிட்டு, ஆலோசனையை நாடி வேறெங்காவது செல்வதுதான் நல்லது என அநேகர் நினைக்கிறார்கள்.
பைபிளைப் பற்றிய இப்படிப்பட்ட கருத்துகளுக்கு முக்கிய காரணம், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் பல காலமாக ஜனங்களை அடக்கி ஒடுக்கி வந்திருப்பதுதான். உதாரணமாக, சரித்திராசிரியர்கள் சிலர் இருண்ட சகாப்தம் என அழைத்த காலப்பகுதியில், ஐரோப்பாவிலிருந்த கத்தோலிக்க சர்ச், மக்களுடைய வாழ்க்கையின் ஏறக்குறைய எல்லா அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது. சர்ச்சுடன் ஒத்துப்போகாதவர்கள் எல்லாருமே சித்திரவதை செய்யப்பட்டார்கள், சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். அதன் பிறகு வந்த புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளும்கூட மக்களின் சுதந்திரத்தைப் பெருமளவு பறித்தன. புராட்டஸ்டன்ட் மதங்களைப் பற்றி நன்கு அறிந்த சிலர், அவை மக்களுக்குச் செய்த கொடுமைகளை நினைத்துப் பார்க்கிறார்கள். சர்ச்சுகள் இப்படி அடக்கி ஒடுக்குபவையாக இருந்திருப்பதால், பைபிளின் போதனைகளும் அடக்கி ஒடுக்குபவையாகவே இருக்கும் என்ற தவறான முடிவுக்கு மக்கள் வந்திருக்கிறார்கள்.
சமீப நூற்றாண்டுகளில், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்கு மக்கள்மீதிருந்த செல்வாக்கு பெருமளவு குறைந்திருக்கிறது; சில நாடுகளில் நிலைமை இவ்வாறாக இருக்கிறது. சர்ச்சின் பொதுவான கொள்கைகளை ஒதுக்கித் தள்ளியிருக்கும் மக்கள் மத்தியில், எது சரி எது தவறு என்பதை தாங்களாகவே தீர்மானிப்பதற்கு உரிமை இருக்கிறது என்ற கருத்து உருவாகியுள்ளது. அதன் விளைவு? “அதிகாரத்திற்கு மதிப்பு கொடுப்பது குறைந்துவிட்டது; அதோடு, எது சரி எது தவறு என்பதை மக்களால் சரிவர இனம் கண்டுகொள்ள முடியாமல் ஆகிவருகிறது” என குற்றவியல் மற்றும் நீதித்துறை சார்ந்த சமூகவியல் பேராசிரியரான ஆதி லைட்டினன் விளக்குகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், மதத் தலைவர்கள்கூட இவ்விதமாக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, லூத்தரன் சர்ச்சின் ஒரு பிரபல பிஷப் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒழுக்கம் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் கிடைக்க பைபிளோ மதத் தலைவர்களோ உதவ முடியும் என்ற கருத்தை நான் மறுக்கிறேன்.”
கட்டுப்பாடற்ற சுதந்திரம் நன்மையானதா?
கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்ற கருத்து, முக்கியமாக இளைஞர்களுக்கு கவர்ச்சியூட்டுவதாகத் தெரியலாம். தாழ்வாக நடத்தப்படுவதையோ, எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற நீண்ட பட்டியலுக்கு இசைய வாழ்வதையோ எவரும் விரும்புவதில்லை. என்றாலும், எல்லாருமே தங்கள் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் செய்து சுதந்திரமாக இருக்க வேண்டுமா? இதற்குப் பதில் காண, இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். போக்குவரத்து விதிகளே இல்லாத ஒரு நகரத்தில் நீங்கள் வாழ்வதாகக் கற்பனைசெய்து கொள்ளுங்கள். அங்கு வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸும் தேவையில்லை, அதற்கான பரீட்சையும் தேவையில்லை. மக்கள் தங்களுடைய விருப்பப்படி, குடிபோதையிலும் வாகனத்தை ஓட்டலாம். அல்லது, வேக வரம்பு, நிறுத்துவதற்கான சமிக்கை, டிராஃபிக் லைட்டுகள், ஒற்றை வழி சாலைகள், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடங்கள் என எதையும் பொருட்படுத்தாமலும் வாகனத்தை ஓட்டலாம். அப்படிப்பட்ட “சுதந்திரம்” நன்மையானதா? நிச்சயமாகவே இல்லை! அதனால், குழப்பமும் விபத்துமே ஏற்படும். போக்குவரத்து விதிகள் மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினாலும், அவை ஓட்டுநர்களையும் பாதசாரிகளையும் பாதுகாக்கவே செய்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
அவ்வாறே, யெகோவாவும் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைக் கொடுக்கிறார். இவை நமக்கு நன்மை பயக்குகின்றன. அத்தகைய வழிமுறைகள் இல்லையெனில், நாம் வாழ்க்கையில் அடிபட்டுதான் காரியங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்; அதுமட்டுமல்ல, அப்படிச் செய்யும்போது நமக்கும் மற்றவர்களுக்கும் மோசமான பாதிப்பை நாம் ஏற்படுத்தி விடலாம். தார்மீக ரீதியில் ஒழுங்கற்ற இத்தகைய சூழல், போக்குவரத்து விதிகள் இல்லாத ஒரு நகரத்தில் வாகனத்தை ஓட்டுவதுபோல தீங்கு விளைவிப்பதாயும் ஆபத்தானதாயும் இருக்கும். அப்படியிருக்க, நமக்கு சில விதிமுறைகளும் சட்டதிட்டங்களும் தேவை என்பதே உண்மை, இது பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கிற உண்மை.
‘என் சுமை இலகுவானது’
போக்குவரத்து விதிகளில் எக்கச்சக்கமான, விவரமான விதிமுறைகள் உள்ளன; சில நாடுகளில், வாகனத்தை நிறுத்துமிடம் சம்பந்தமாக மட்டுமே மலைக்க வைக்குமளவுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால், பைபிள் அப்படிப்பட்டதோர் நீண்ட பட்டியலை அளிப்பதில்லை. மாறாக, அடிப்படை நியமங்களை அளிக்கிறது; இந்த நியமங்கள் பாரமானவையோ ஒடுக்குபவையோ அல்ல. இயேசு கிறிஸ்து தம் காலத்து மக்களுக்கு அருமையான ஓர் அழைப்பை விடுத்தார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28, 30) கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவ சபைக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.”—2 கொரிந்தியர் 3:17.
என்றாலும், இந்த விடுதலை, அதாவது சுதந்திரம் கட்டுப்பாடற்றது அல்ல. கடவுள் எதிர்பார்க்கிற காரியங்களில் எளிய கட்டளைகள் சில உட்பட்டிருப்பதை இயேசு தெளிவாக எடுத்துக் காட்டினார். உதாரணமாக, தம் சீஷர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” (யோவான் 15:12) இந்தக் கட்டளையை எல்லாருமே பின்பற்றினால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்! ஆகவே, கிறிஸ்தவர்கள் அனுபவிக்கிற சுதந்திரம் கட்டுப்பாடுகள் அற்றது அல்ல என்பது தெளிவாகிறது. அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்; விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்; கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்.”—1 பேதுரு 2:16, பொது மொழிபெயர்ப்பு.
ஆகவே, விவரமான விதிகள் அடங்கிய ஒரு பட்டியலை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியிராதபோதிலும், எது சரி எது தவறு என்பதைக் குறித்து அவர்களாகவே தீர்மானிப்பதில்லை. கடவுளுடைய வழிநடத்துதலை மட்டுமே அவர்கள் சார்ந்திருக்கிறார்கள். “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல” என்று பைபிள் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறது. (எரேமியா 10:23) கடவுளுடைய வழிமுறைக்குக் கீழ்ப்படிந்தால், நாம் ஏராளமான நன்மைகளைப் பெறுவோம்.—சங்கீதம் 19:11.
அந்த நன்மைகளில் ஒன்று சந்தோஷம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இளைஞன், ஒரு திருடனாகவும் பொய் பேசுபவனாகவும் இருந்தான். ஒழுக்கங்கெட்ட நபராகவும் இருந்தான். பைபிளின் உயர்ந்த நெறிமுறைகளைப் பற்றி அவன் தெரிந்துகொண்டபோது, அவற்றிற்கு இசைய தன் வாழ்க்கையை மாற்றினான். “பைபிள் நெறிமுறைகள் அனைத்தையும் என்னால் உடனடியாகவே பின்பற்ற முடியவில்லை; இருந்தாலும், அவற்றின் மதிப்பை நான் புரிந்துகொண்டேன். இப்போது, எனக்கிருக்கும் சந்தோஷம் என்னுடைய பழைய வாழ்க்கையில் கிடைக்கவில்லை. பைபிள் நெறிமுறைகளின்படி வாழ்வது உங்கள் வாழ்க்கையை எளிமையாக்குகிறது. வாழ்க்கையின் நோக்கத்தையும் எது சரி எது தவறு என்பதையும் நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்” என அந்த இளைஞன் சொன்னான்.
இலட்சக்கணக்கானோருக்கு இதுபோன்ற அனுபவங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, பைபிளின் வழிநடத்துதல், மற்றவர்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதற்கும் வேலையைக் குறித்ததில் சமநிலையான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வதற்கும் தீய பழக்கங்களை விட்டுவிடுவதற்கும் கைகொடுத்திருக்கிறது; இது சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிநடத்தியிருக்கிறது. மார்க்குஸ்a என்ற இளைஞன் ஒருகாலத்தில் பைபிள் நெறிமுறைகளுக்கு எதிராக வாழ்ந்தான், பிற்பாடு அவற்றிற்கு இசைவாக வாழ ஆரம்பித்தான். “பைபிளின்படி வாழ்வதன் மூலம் என்னுடைய சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது” என்று அவன் சொல்கிறான்.b
உங்கள் தெரிவு என்ன?
ஆகவே, பைபிள் கட்டுப்படுத்துகிறதா? ஆம், நம் அனைவருடைய நன்மைக்காக அது கட்டுப்படுத்துகிறது. ஆனால் அது அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்துகிறதா? இல்லவே இல்லை. கட்டுப்பாடற்ற சுதந்திரம் பிரச்சினைகளுக்கே வழிவகுக்குகிறது. பைபிளின் நெறிமுறைகள் சமநிலையானவை; அவை நம்முடைய நலனையும் சந்தோஷத்தையும் கூட்டுகின்றன. மார்க்குஸ் இவ்வாறு கூறுகிறான்: “கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றி நடப்பது எவ்வளவு ஞானமானது என்பதைப் போகப்போக உணர்ந்தேன். மற்ற அநேகருடைய வாழ்க்கைக்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இருந்தாலும், வாழ்க்கையில் முக்கியமான ஏதோவொன்றை இழந்துவிட்டதாக நான் நினைப்பதே இல்லை.”
பைபிளின் நெறிமுறைகள்படி வாழ்வதால் கிடைக்கும் நன்மைகளை நீங்கள் ருசிக்க ஆரம்பிக்கும்போது, கடவுளுடைய வார்த்தையின் மீது உங்களுக்கு நன்றியுணர்வு பெருக்கெடுக்கும். இது இன்னுமதிக நன்மைகளுக்கு வழிவகுக்கும்; அதாவது, பைபிளின் ஊற்றுமூலரான யெகோவா தேவனை நீங்கள் நேசிக்க ஆரம்பிப்பீர்கள். “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”—1 யோவான் 5:3.
யெகோவா நம்மைப் படைத்தவர், அவர் நம் பரலோகத் தந்தையும்கூட. நமக்கு எது மிகச்சிறந்தது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் நம்மைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, நம்முடைய நன்மையைக் கருதி அன்பான வழிமுறைகளை அளிக்கிறார். கவிதை நடையில் அவர் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”—ஏசாயா 48:18.
[அடிக்குறிப்புகள்]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
b பைபிள் குறிப்பிடுகிற வாழ்க்கைமுறை பற்றிய கூடுதல் தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 12-ம் அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் படம்]
கடவுள் எதிர்பார்ப்பவை புத்துணர்ச்சி அளிக்குமென இயேசு சொன்னார்
[பக்கம் 10-ன் படம்]
கடவுளுடைய வழிமுறைகளுக்குக் கீழ்ப்படிவது சந்தோஷத்தையும் சுயமரியாதையையும் அளிக்கிறது