உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 8/1 பக். 19-22
  • பழக்கதோஷத்தால் பயன் பெறுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பழக்கதோஷத்தால் பயன் பெறுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நல்ல, கெட்ட பழக்கங்களுக்கான பைபிள் உதாரணங்கள்
  • பழக்கங்களை உருவாக்குதல்
  • கெட்ட பழக்கங்களை தவிர்த்து, நல்லவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள்
  • கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது சாத்தியமா?
    விழித்தெழு!—2004
  • 1 யதார்த்தமாக இருங்கள்
    விழித்தெழு!—2016
  • எல்லாம் பழக்கதோஷம்!
    விழித்தெழு!—2016
  • சிறந்த ஆன்மீகப் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள், அநேக ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 8/1 பக். 19-22

பழக்கதோஷத்தால் பயன் பெறுங்கள்

பன்னிரண்டு வருடங்களாக ஒருவர் ஏதன்ஸின் புறநகர் பகுதியில் வாழ்ந்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பும்போது தினமும் ஒரே பாதையிலேயே வருவார். பின்னர் நகரின் மறுபக்கத்தில் வேறொரு புறநகர் பகுதிக்கு குடிமாறி சென்றார். ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பழைய இடத்துக்கு வந்துவிட்ட பிறகுதான் இடம்மாறி வந்துவிட்டதையே உணர்ந்தார். அவர் பழக்கதோஷத்தில், பழைய வீட்டுக்கு போய்விட்டார்!

பழக்கதோஷம் என்பது ஒருவருக்குள் அமைந்துள்ள இன்னொரு இயல்பாகவே சிலவேளை பேசப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை. இது நம் வாழ்க்கையில் பலமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த அர்த்தத்தில், பழக்கங்களை நெருப்புக்கு ஒப்பிடலாம். இருட்டாக இருக்கையில், நெருப்பானது விரும்பத்தக்க வெளிச்சமாக இருக்கலாம்; உடலுக்கு கதகதப்பூட்டலாம்; உணவை சூடாக்கவும் உதவலாம். என்றாலும், அதே நெருப்பு உயிரையும் உடைமைகளையும் அழிக்கிற கொடிய எதிரியாகவும் மாறலாம். பழக்கங்களைக் குறித்ததிலும் இதுவே உண்மை. சரியாக பயிற்றுவிக்கப்பட்டால், மிகுந்த பயன் தருபவை அவை. ஆனால் அவை அழிவுக்கேதுவாகவும் ஆகிவிடலாம்.

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட அந்த மனிதருடைய விஷயத்தில், பழக்கதோஷம், நகர போக்குவரத்து நெரிசலில் அவரை சிக்க வைத்து கொஞ்சம் நேர இழப்பை மட்டுமே ஏற்படுத்தியது. அதி முக்கியமான காரியங்கள் உட்பட்டிருக்கும்போதோ, பழக்கங்கள் வெற்றி தேடி தரலாம் அல்லது நாசத்துக்கும் வழிநடத்தலாம். கடவுளுக்கு நாம் செய்யும் சேவையிலும் அவரோடுள்ள நம் உறவிலும் பழக்கங்கள் எப்படி உதவியாக இருக்கலாம் அல்லது தடங்கலாக இருக்கலாம் என்பதை பைபிளிலுள்ள சில நிஜ வாழ்க்கை உதாரணங்களிலிருந்து கவனியுங்கள்.

நல்ல, கெட்ட பழக்கங்களுக்கான பைபிள் உதாரணங்கள்

நோவாவும், யோபுவும், தானியேலும் கடவுளுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை அனுபவித்தனர். ‘அவர்களது நீதிக்காக’ பைபிள் அவர்களை மெச்சுகிறது. (எசேக்கியேல் 14:14) இந்த மூன்று பேருமே நல்ல பழக்கங்களை வளர்த்திருந்தவர்கள் என்பதை அவர்கள் வாழ்க்கை போக்கு காண்பிப்பது குறிப்பிடத்தக்கது.

நோவாவிடம் ஒரு பேழையைக் கட்டும்படி சொல்லப்பட்டது. அது ஒரு கால்பந்தாட்ட களத்தைவிட நீளமான, ஐந்து மாடி கட்டிடத்தைவிட உயரமுமுள்ள கப்பல். அப்பேர்ப்பட்ட பிரமாண்டமான கட்டுமான திட்டம், பண்டைய காலத்தில் கப்பல் கட்டும் எவரையும் மலைக்க வைத்திருக்கும். நவீன சாதனங்களின் உதவியின்றி அந்த பேழையை நோவாவும் அவருடைய குடும்ப அங்கத்தினர் ஏழு பேரும் கட்டினர். அதோடுகூட, நோவா தன் காலத்தில் வாழ்ந்தவர்களிடம் பிரசங்கித்தும் வந்தார். தன் குடும்பத்தாரின் ஆவிக்குரிய மற்றும் சரீர தேவைகளை கவனித்தும் இருப்பார் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம். (2 பேதுரு 2:5) இவை அனைத்தையும் செய்து முடிக்க, நோவாவுக்கு வேலையைப் பொறுத்த வரை நல்ல பழக்கங்கள் இருந்திருக்க வேண்டும். மேலுமாக, “நோவா கடவுளோடு நடந்தார். . . . ஆண்டவர் [“யெகோவா,” NW] கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார்” என்பதாக அவரைக் குறித்து பைபிள் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (தொடக்க நூல் [ஆதியாகமம்] 6:9, 22; 7:5; பொ.மொ.) அவரை ‘குற்றமற்றவர்’ என்று பைபிள் சொல்வதால், ஜலப்பிரளயத்துக்கு பின்பும் பாபேலில் யெகோவாவுக்கு விரோதமாக கலகம் மூண்ட பிறகும்கூட நோவா தொடர்ந்து கடவுளோடு நடந்திருக்க வேண்டும். உண்மையில், நோவா 950 வயதில் மரணம் அடையும் வரையாக கடவுளோடு நடந்து வந்தார்.​—⁠ஆதியாகமம் 9:⁠29.

யோபுவை ‘மாசற்றவராகவும் நேர்மையானவராகவும்’ ஆக்க அவருடைய நல்ல பழக்கங்கள் உதவின. (யோபு 1:1, 8; 2:3; பொ.மொ.) தன் பிள்ளைகள் ஒவ்வொருவரும் விருந்து வைத்த பிறகு, ஒருவேளை அவர்கள் “‘பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்’” என்று நினைத்து அவர்கள் சார்பாக பலிகளை செலுத்தி குடும்பத்தின் ஆசாரியராக வழக்கமாக அல்லது பழக்கமாக செயல்பட்டார். ‘யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம்.’ (யோபு 1:5, பொ.மொ.) யோபுவின் குடும்பத்தில், யெகோவாவின் வணக்கத்தை மையமாகக் கொண்ட பழக்கவழக்கங்கள் பிரபலமாக இருந்ததில் சந்தேகமில்லை.

தானியேல் தன் நீண்டநாள் வாழ்க்கையில், யெகோவாவை “இடைவிடாமல்” சேவித்தார். (தானியேல் 6:16, 20) தானியேலிடம் என்னென்ன நல்ல ஆவிக்குரிய பழக்கங்கள் இருந்தன? ஒரு விஷயம் என்னவென்றால், அவர் யெகோவாவிடம் தவறாமல் ஜெபம் செய்தார். இந்த பழக்கத்திற்கு எதிராக அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டபோதும், தானியேல் ‘தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினா[ர்].’ (தானியேல் 6:10) தன் உயிருக்கே ஆபத்தாக இருந்தபோதும் கடவுளிடம் ஜெபிக்கும் பழக்கத்தை அவரால் விடமுடியவில்லை. மிகச் சிறந்த விதத்தில் கடவுளிடம் உத்தமத்தை காத்துக்கொண்ட வாழ்க்கை முறையில் இந்த பழக்கம் தானியேலை பலப்படுத்தியது என்பதில் சந்தேகமேயில்லை. கடவுள் கொடுத்திருந்த ஆர்வமூட்டும் வாக்குறுதிகளை படித்து, அவற்றை ஆழ்ந்து யோசிக்கும் நல்ல பழக்கமும் தானியேலுக்கு இருந்ததாக தெரிகிறது. (எரேமியா 25:11, 12; தானியேல் 9:2) ஜீவனுக்கான ஓட்டத்தில் கடைசிவரை உண்மையாக ஓடி, முடிவுபரியந்தம் சகித்து நிலைத்திருக்க இந்த நல்ல பழக்கங்கள் நிச்சயமாகவே அவருக்கு துணை நின்றன.

மாறாக, தீனாள் கெட்ட பழக்கம் ஒன்றின் காரணமாக மோசமான விளைவை அனுபவித்தாள். அவள் யெகோவாவின் வணக்கத்தாராய் இராத “தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள் [“போய்வருவது வழக்கம்,” NW].” (ஆதியாகமம் 34:1) தீங்கற்றதாக தோன்றிய இந்த பழக்கம் நாசகரமான விளைவுக்கு வழிநடத்தியது. முதலாவதாக, ‘தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாய்’ கருதப்பட்ட சீகேம் என்ற வாலிபனால் அவள் கெடுக்கப்பட்டாள். பின்னர் அவளுடைய இரு சகோதரர்களின் பழிவாங்கும் எண்ணம், ஒரு பட்டணம் முழுவதிலுமுள்ள ஆண்கள் கொல்லப்படுவதற்கு வழிநடத்தியது. எப்பேர்ப்பட்ட பயங்கரமான விளைவு!​—⁠ஆதியாகமம் 34:19, 25-29.

நம் பழக்கங்கள் நமக்கு கேடு விளைவிக்காமல் பயன் தருபவையாய் அமையும் என்று எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?

பழக்கங்களை உருவாக்குதல்

“பழக்கங்கள் நம் தலைவிதி” என்கிறார் தத்துவ அறிஞர் ஒருவர். ஆனால் அவை அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்மிடமுள்ள கெட்ட பழக்கங்களை கைவிட்டு, நல்ல பழக்கங்களை வளர்க்க நாமே தெரிவு செய்யலாம் என்று பைபிள் தெளிவாக காண்பிக்கிறது.

நல்ல பழக்கங்கள் இருந்தால், கிறிஸ்தவ வாழ்க்கை பாதையில் மிக திறம்பட்ட வகையிலும் சுலபமாகவும் தொடர முடியும். கிரீஸ் நாட்டிலுள்ள ஒரு கிறிஸ்தவரான அலிக்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “பல்வேறு வேலைகளை செய்து முடிப்பதற்காக ஓர் அட்டவணையை பின்பற்றும் பழக்கம், மதிப்புள்ள நேரத்தை சேமிக்க உதவுகிறது.” தீயாஃபலஸ் என்ற கிறிஸ்தவ மூப்பர், திட்டமிடும் பழக்கம் தனக்கு பயன் தருவதாக சொல்கிறார். அவர் சொல்வதாவது: “நன்கு திட்டமிடும் பழக்கம் இல்லாவிட்டால் என்னுடைய கிறிஸ்தவ பொறுப்புகளை என்னால் வெற்றிகரமாக கையாளவே முடியாது என்பது என் திடமான நம்பிக்கை.”

கிறிஸ்தவர்களாக நாம் ‘இதே வழக்கமுறையில் தொடர்ந்து ஒழுங்காக நடக்கும்படி’ ஊக்குவிக்கப்படுகிறோம். (பிலிப்பியர் 3:16, NW) வழக்கமுறை என்பது ஏற்படுத்தப்பட்ட செயல்முறை ஒன்றை பழக்கமாக செய்துவருவதை உட்படுத்துகிறது. அப்படிப்பட்ட நல்ல பழக்கங்கள் நமக்கு பயன் தருகின்றன; ஏனென்றால் ஒவ்வொரு படி எடுக்கும்போதும் என்ன செய்ய வேண்டும் என்று நேரமெடுத்து யோசிக்க வேண்டியதில்லை; ஏற்கெனவே நாம் உருவாக்கி வைத்திருக்கிற சிறந்த முறையை பழக்கதோஷமாகவே பின்பற்றிவிடுவோம். ஊறிப்போன பழக்கங்கள் பெரும்பாலும் தானாகவே நிகழும் செயல்களாக ஆகிவிடுகின்றன. ஒரு ஓட்டுநர் சாலையில் அபாயங்களை சந்திக்கையில், உயிர்காக்கும் தீர்மானங்களை உடனுக்குடன் எடுப்பதற்கு பத்திரமாக வாகனம் ஓட்டும் பழக்கங்கள் உதவுவதுபோலவே, கிறிஸ்தவ பாதையில் நாம் நடக்கையில் பொருத்தமான தீர்மானங்களை விரைவாக செய்வதற்கும் நல்ல பழக்கங்கள் நமக்கு உதவும்.

ஆகவேதான் ஆங்கில எழுத்தாளர் ஜெரமி டேலர், “செயல்களால் உருவாகுபவையே பழக்கங்கள்” என்றார். நமக்கு நல்ல பழக்கங்கள் இருந்தால், நல்ல செயல்களை அதிக சிரமமின்றி செய்துவிடலாம். உதாரணமாக, கிறிஸ்தவ ஊழியர்களாக இருக்கும் நமக்கு பிரசங்க வேலையில் தவறாமல் பங்கெடுக்கும் பழக்கம் இருந்தால், வெளி ஊழியத்திற்கு போவது எளிதாகவும் அதிக சந்தோஷமுள்ளதாகவும் இருக்கும். ‘தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்’ என்று அப்போஸ்தலர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 5:42; 17:2) மறுபட்சத்தில், அவ்வப்போது மட்டுமே ஊழியத்தில் பங்கெடுத்தால், நாம் பதற்றமடையலாம்; இந்த முக்கியமான கிறிஸ்தவ நடவடிக்கையில் நம்பிக்கை உணர்வுடன் சகஜமாக பங்கெடுக்க தொடங்குவதற்குள் கொஞ்சநேரம் ஆகிவிடும்.

கிறிஸ்தவ வழக்கமுறையின் மற்ற அம்சங்களைக் குறித்ததிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. தவறாமல் ‘இரவும் பகலும் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதற்கு’ நல்ல பழக்கங்கள் நமக்கு கைகொடுக்கும். (யோசுவா 1:8; சங்கீதம் 1:2; NW) இரவு தூங்கப் போகுமுன் 20-லிருந்து 30 நிமிடம் பைபிளை வாசிப்பது ஒரு கிறிஸ்தவரின் பழக்கம். அவர் மிகவும் களைப்பாக இருந்தாலும், அப்படி வாசிக்காமல் படுக்கைக்கு சென்றால் அவரால் சரியாக தூங்க முடிவதில்லை. மீண்டும் எழுந்து அந்த ஆவிக்குரிய தேவையை கவனித்தே ஆக வேண்டும். இந்த நல்ல பழக்கத்தின் காரணமாக, பல வருடங்களாக அவர் முழு பைபிளையும் ஒவ்வொரு வருடமும் வாசித்து முடித்திருக்கிறார்.

நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் இயேசு கிறிஸ்துவும், பைபிள் கலந்தாலோசிக்கப்படும் கூட்டங்களுக்கு செல்வதை பழக்கமாக வைத்திருந்தார். “தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.” (லூக்கா 4:16) நீண்ட நேரம் வேலை பார்க்கிற, பெரிய குடும்பத்தை உடைய ஒரு மூப்பராகிய ஜோவுக்கு, தவறாமல் கூட்டங்களுக்கு செல்வதற்கான அவசியத்தையும் விருப்பத்தையும் உருவாக்கிக்கொள்ள பழக்கமே உதவியது. அவர் சொல்வதாவது: “இந்த பழக்கமே எனக்கு உதவியிருக்கிறது; சவால்களையும் பிரச்சினைகளையும் வெற்றிகரமாக சமாளிக்க மிகவும் தேவையான ஆவிக்குரிய பலத்தை இதனாலேயே பெற முடிகிறது.”​—⁠எபிரெயர் 10:24, 25.

ஜீவனுக்கான கிறிஸ்தவ ஓட்டத்தில் இப்படிப்பட்ட பழக்கங்கள் மிகவும் அவசியமானவை. யெகோவாவின் மக்கள் துன்புறுத்தப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “நல்ல ஆவிக்குரிய பழக்கங்களையும் சத்தியத்திற்கு ஆழ்ந்த போற்றுதலையும் உடையவர்களுக்கு சோதனைகள் வரும்போது உறுதியாக நிலைநிற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் ‘சாதகமான சூழ்நிலையிலும்’ கூட்டங்களுக்கு செல்லாமல், வெளி ஊழியத்துக்கு ஒழுங்காக போய்வராமல், சிறிய பிரச்சினைகளிலும் விட்டுக்கொடுப்பவர்களே பெரும்பாலும் ‘கடுமையான’ பிரச்சினை வருகையில் விழுந்துபோகிறார்கள்.”​—⁠2 தீமோத்தேயு 4:⁠2, NW.

கெட்ட பழக்கங்களை தவிர்த்து, நல்லவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள்

‘ஒருவர் தன்னை அடக்கி ஆள வேண்டும் என்று விரும்புகிற பழக்கங்களை மாத்திரமே வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. கெட்ட பழக்கங்கள் ஒரு கொடிய எஜமானாக இருப்பது உண்மைதான். ஆனாலும் அவற்றை முறித்துவிடலாம்.

ஸ்டெல்லா சில காலத்திற்கு டிவி பார்க்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்தார். அவர் இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “நான் அடிபணிந்திருக்கும் ஒவ்வொரு கெட்ட பழக்கத்திற்கும் பின்னால் எப்போதும் ஒரு ‘தீங்கற்ற’ காரணம் இருந்தது.” அளவுக்கதிகமாக டிவி பார்க்கும் பழக்கத்திலும் இவ்வாறே இருந்தது. “கொஞ்ச நேர ஓய்வுக்காக” அல்லது “ஒரு மாற்றத்துக்காக” டிவி பார்க்கலாம் என்று நினைத்தே அவர் பார்க்க தொடங்கினார். ஆனால் அந்த பழக்கமோ கட்டுப்பாடின்றி போனதால், பல மணிநேரம் அவரை டெலிவிஷனின் முன்னாலேயே உட்கார செய்தது. “இந்த கெட்ட பழக்கத்தால் என் ஆவிக்குரிய முன்னேற்றம் தாமதமானதுதான் மிச்சம்” என்கிறார் அவர். ஆனால், தீர்மானமான முயற்சியுடன், அவர் டிவி பார்க்கும் நேரத்தை குறைத்தார், நிகழ்ச்சிகளையும் மிகவும் தேர்ந்தெடுத்து பார்த்தார். “இந்த பழக்கத்தை முறிப்பதற்கான காரணத்தை எப்போதும் மனதில் வைக்க முயன்றேன்; மேலும் என் உறுதியான தீர்மானத்தை காத்துக்கொள்ள யெகோவாவை சார்ந்திருந்தேன்” என்கிறார் ஸ்டெல்லா.

காராலாம்பூஸ் என்ற கிறிஸ்தவரை ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதிலிருந்து தடுத்த கெட்ட பழக்கம், காலந்தாழ்த்துதல். “காரியங்களை தள்ளிப் போட்டுக்கொண்டே போகும் பழக்கம் கேடானது என்பதை உணர்ந்ததும், என் வாழ்க்கை போக்கை மாற்றிக்கொள்ள முயன்றேன். இலக்குகளை வைக்கும்போது, அவற்றை குறிப்பாக எப்போது எப்படி தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்பட்டேன். என் தீர்மானங்களையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ஒழுங்கு தவறாமல் செயல்படுவதே இதற்கு மாற்று மருந்தாக இருந்தது; இப்போது வரையாக இது ஒரு நல்ல பழக்கமாக இருந்து வருகிறது.” உண்மையில், கெட்ட பழக்கங்களுக்கு சிறந்த மாற்றீடு நல்ல பழக்கங்களே.

நல்ல அல்லது கெட்ட பழக்கங்களை வளர்க்க நம் கூட்டாளிகளும் காரணமாகலாம். கெட்ட பழக்கங்களைப் போலவே நல்ல பழக்கங்களும் தொற்றிக் கொள்கின்றன. ‘கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கங்களை கெடுப்பது’ போலவே, நாம் பின்பற்றத்தக்க பயனுள்ள பழக்கங்களை நல்ல கூட்டாளிகளிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். (1 கொரிந்தியர் 15:33, NW) மிகவும் முக்கியமாக, கடவுளோடு நமக்கிருக்கும் உறவை, பழக்கங்கள் பலப்படுத்தலாம் அல்லது பலவீனப்படுத்தலாம். ஸ்டெல்லா சொல்கிறார்: “நமக்கு நல்ல பழக்கங்கள் இருந்தால், யெகோவாவை சேவிப்பதற்கான நம் போராட்டம் சுலபமாக இருக்கும். தீங்கானவையாக இருந்தால், அவை நம் முயற்சிகளுக்கு தடங்கலாக அமையும்.”

நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அவை உங்களை வழிநடத்தட்டும். அவை உங்கள் வாழ்க்கையில் பலமுள்ள, பயனுள்ள சக்தியாக செயல்படும்.

[பக்கம் 19-ன் படம்]

நெருப்பைப் போலவே, பழக்கங்கள் பயனுள்ளவையாகவோ அழிவுக்கேதுவானவையாகவோ இருக்கலாம்

[பக்கம் 21-ன் படம்]

ஓய்வுநாளில் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதற்காக ஜெப ஆலயத்தில் இருப்பது இயேசுவின் வழக்கம்

[பக்கம் 22-ன் படங்கள்]

நல்ல ஆவிக்குரிய பழக்கங்கள் கடவுளுடன் நமக்கிருக்கும் உறவை பலப்படுத்துகின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்