உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 8/1 பக். 23-27
  • அருமையான நினைவுகளுக்கு நன்றி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அருமையான நினைவுகளுக்கு நன்றி!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பெரும் போரின் கடினமான வருடங்கள்
  • ஒரு சிறிய தொடக்கம்
  • தீர்மானிக்க வேண்டிய நேரம்
  • சவாலை சந்தித்தல்
  • தொடர்ந்து முன்னேறுதல்
  • பேரழிவு ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தியது
  • ஜிப்ஸி காரவனில் வாழ்க்கை
  • பயனுள்ள பாடம்
  • இன்னுமொரு போரும் அதற்குப் பின்னும்
  • என் ஜீவனைக் கொண்டு நான் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • கொடுக்கப்பட்ட வேலையில் மாற்றம்—80-வது வயதில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • கடவுளிடம் நெருங்கிவருவது சமாளிக்க எனக்கு உதவிற்று
    விழித்தெழு!—1993
  • யெகோவாவிற்கு உரியதை கொடுத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 8/1 பக். 23-27

வாழ்க்கை சரிதை

அருமையான நினைவுகளுக்கு நன்றி!

ட்ரூஸில்லா கேன் சொன்னபடி

அது 1933-⁠ம் வருடம். அப்போதுதான் ஸநோயா கேன் என்பவரை மணம் செய்திருந்தேன். அவரும் என்னைப் போல ஒரு கால்போர்ட்டர், அதாவது முழுநேர ஊழியர். என் கணவருடன் அவருடைய நியமிப்பில் சேர்ந்து ஊழியம் செய்ய அதிக ஆவலோடு இருந்தேன். ஆனால் அதற்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த அந்த கடினமான காலங்களில் ஒரு சைக்கிள் வாங்குவது என்றால் பெரும்பாடு. நான் என்ன செய்வேன்?

என் இக்கட்டான சூழ்நிலையை அறிந்த என் கணவரின் தம்பிமார், உள்ளூரிலுள்ள குப்பைக்கூளங்களின் குவியல்களெங்கும் தேடினர். பழைய சைக்கிள்களின் உதிரி பாகங்கள் கிடைத்தால் அதை வைத்து எனக்கு ஒரு சைக்கிள் செய்து கொடுத்துவிடலாமென நினைத்தனர். அப்படியே ஒரு சைக்கிளை தயார்படுத்திவிட்டனர்! அதை ஓட்ட படித்ததும், ஸநோயாவும் நானும் புறப்பட்டுவிட்டோம். இங்கிலாந்தில் வுஸ்டர் மற்றும் ஹெர்ஃபர்ட் என்னும் மாகாணங்களில் சந்தோஷமாக சைக்கிளில் போய், சந்தித்த அனைவருக்கும் சாட்சிகொடுத்தோம்.

இவ்வாறு விசுவாசத்துடன் எடுத்து வைத்த எளிய படி, சிறந்த நினைவுகள் நிறைந்த ஒரு வாழ்க்கைக்கு வழிநடத்தும் என்று நான் நினைக்கவே இல்லை. எனினும், என் வாழ்க்கைக்கு ஆவிக்குரிய அஸ்திவாரமிட்டது என் அன்பான பெற்றோரே.

பெரும் போரின் கடினமான வருடங்கள்

டிசம்பர் 1909-⁠ல் நான் பிறந்தேன். கொஞ்ச நாட்களுக்குப்பின் காலங்களின் தெய்வீக திட்டம் என்ற ஆங்கில புத்தகத்தை அம்மா பெற்றார்கள். 1914-⁠ல் லங்க்காஷையரிலுள்ள ஓல்டமில் “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” பார்ப்பதற்காக என் பெற்றோர் என்னை கொண்டு போனார்கள். (இவை இரண்டுமே தற்போது யெகோவாவின் சாட்சிகள் என அறியப்படுகிறவர்களால் தயாரிக்கப்பட்டவையே.) சின்ன வயதாக இருந்தாலும், நான் பார்த்த விஷயங்கள் தந்த சந்தோஷத்தில் வழிமுழுவதும் துள்ளி குதித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தது நினைவிருக்கிறது! பின்னர் ஃபிராங்க் ஹீலீ என்பவர் நாங்கள் வசித்துவந்த ராக்டேலில் ஒரு பைபிள் படிப்பு தொகுதியை தொடங்கினார். இந்த கூட்டங்களுக்கு சென்றது, குடும்பமாக வேத வசனங்களைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவியது.

அதே வருடத்தில் முதலாம் உலகப் போர் என்று இப்போது நாம் அழைக்கும் பெரும் போர் மூண்டபோது எங்கள் வாழ்க்கை சின்னாபின்னமானது. அப்பாவை படையில் சேர சொன்னார்கள். அவரோ நடுநிலை வகித்தார். நீதிமன்றத்தில் அவர் “நற்பண்புள்ள மனிதர்” என்று விவரிக்கப்பட்டார். “போராயுதங்களை கையிலெடுக்க அவர் நேர்மையுடன்தான் மறுப்பு தெரிவிக்கிறார் என்று நம்புவதாக அநேகர்” பல கடிதங்களை சமர்ப்பித்ததை உள்ளூர் செய்தித்தாள் அறிக்கை செய்தது.

ஆனாலும், அப்பாவுக்கு முற்றிலும் விலக்களிப்பதற்கு பதிலாக, “போர் செய்வதிலிருந்து மட்டும்” விலக்களிப்பதாக பதிவு செய்தனர். அப்போதிருந்து அவரும் அம்மாவும் நானும் கேலிப் பேச்சுக்கு ஆளானோம். கடைசியில், அவருடைய நிலை, மீண்டும் பரிசீலிக்கப்பட்டது. விவசாயம் செய்யும்படி அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில பண்ணைக்காரர்கள் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைந்த சம்பளம் கொடுத்தார்கள்; அல்லது ஒன்றுமே கொடுக்காமலும் இருந்தார்கள். குடும்பத்தை பராமரிக்க தனியார் சலவை நிறுவனம் ஒன்றில் அம்மாவும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு கடினமான வேலை செய்தார்கள். என்னுடைய இளம் வயதில் கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிக்க பழகியது எவ்வளவு பலப்படுத்துவதாக இருந்தது என்பதை இப்போது உணர்கிறேன்; அதிமுக்கியமான ஆவிக்குரிய காரியங்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்க அது உதவியது.

ஒரு சிறிய தொடக்கம்

அடுத்து ஆர்வமிக்க பைபிள் மாணாக்கர் டேனியல் ஹியூஸ் எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் குடிமாறி சென்றிருந்த ஆஸ்வஸ்ட்ரீயிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ரூயபன் என்ற கிராமத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் அவர் வேலை செய்தார். அங்கிள் டேன் என்று நான் அவரை அழைத்தேன். அவர் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். எங்களை பார்க்க வந்தபோதெல்லாம், வேத விஷயங்களைப் பற்றித்தான் பேசினார். நேரப்போக்குக்காக என்று எதையாவது பேசவே மாட்டார். 1920-⁠ல் ஆஸ்வஸ்ட்ரீயில் ஒரு பைபிள் படிப்பு வகுப்பு தொடங்கப்பட்டது. 1921-⁠ல் கடவுளின் சுரமண்டலம் என்ற ஆங்கில புத்தகத்தை அங்கிள் டேன் எனக்குத் தந்தார். பைபிள் போதனைகள் நான் புரிந்துகொள்ளும் விதமாக எளிய நடையில் இருந்ததால் இதை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்தேன்.

லண்டனில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக ஊழியராக பின்னர் சேவித்த ப்ரைஸ் ஹியூஸ்a என்பவரும் எங்களுக்கு அறிமுகமானார். வேல்ஸ் நாட்டு எல்லைப் பகுதியில், ப்ரானகார்த் என்ற இடத்தில் தன் குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார். அவருடைய அக்கா ஸிஸீ என் அம்மாவின் நெருங்கிய சிநேகிதியானார்கள்.

‘ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்’ என்று 1922-⁠ல் அழைப்பு விடுக்கப்பட்டபோது எழுந்த கிளர்ச்சி நினைவிருக்கிறது. அதற்கு பின்வந்த வருடங்களில், நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதிலும், விசேஷ துண்டுப்பிரதிகளை, குறிப்பாக 1924-⁠ல் குருமார் குற்றஞ்சாட்டப்படுதல் (ஆங்கிலம்) துண்டுப்பிரதியை விநியோகிப்பதில் ஆர்வமாக பங்குகொண்டேன். நினைத்துப் பார்த்தால், அந்த பத்தாண்டு காலத்தில் எத்தனையோ உண்மையுள்ள சகோதர சகோதரிகளுடன் கூட்டுறவு கொள்ள முடிந்தது பெரிய சிலாக்கியமே. அவர்களில், மாட் க்ளார்க்b மற்றும் ஊழியத்தில் அவருக்கு துணையாக இருந்த மேரி க்ரான்ட்,# எட்கர் க்ளே,# ராபர்ட் ஹாட்லிங்டன், கேடீ ராபர்ட்ஸ், எட்வின் ஸ்கின்னர்# ஆகியோரும் கனடாவில் நடக்கும் வேலையில் உதவ அங்கு சென்ற பர்ஸீ சாப்மன்னும் ஜாக் நேத்தனும்# அடங்குவர்.

“இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிப்பதில்லை” என்ற பைபிள் பேச்சு எங்கள் விரிவான பிராந்தியத்துக்கு காலத்திற்கேற்ற சாட்சியாக இருந்தது. 1922, மே 14 அன்று, எங்கள் நகரத்திற்கு வடக்கேயுள்ள சர்க் என்ற கிராமத்திலும் அன்று மாலையில் ஆஸ்வஸ்ட்ரீயிலுள்ள பிக்சர் ப்ளேஹெளஸிலும் இந்த பேச்சைக் கொடுப்பதற்காக ப்ரைஸ் ஹியூஸின் உறவினர் ஸ்டான்லி ராஜர்ஸ் என்பவர் லிவர்பூலிலிருந்து வந்தார். அந்த நிகழ்ச்சிக்கென்று விசேஷமாக அச்சிடப்பட்ட கைப்பிரதி ஒன்றை இன்னும் நான் வைத்திருக்கிறேன். இதே காலப்பகுதியில், ஹர்பர்ட் சீனியர், ஆல்பர்ட் லாய்ட், ஜான் ப்ளேனி ஆகிய மூன்று பயணக் கண்காணிகளின் சந்திப்புகளாலும் எங்கள் சிறிய தொகுதி தொடர்ந்து பலப்படுத்தப்பட்டது. அப்போது அவர்களை பில்கிரிம்கள் என்று அழைத்தோம்.

தீர்மானிக்க வேண்டிய நேரம்

1929-⁠ம் ஆண்டு, முழுக்காட்டுதல் எடுக்க தீர்மானித்தேன். அப்போது எனக்கு வயது 19. நிஜமான ஒரு சோதனையை முதன்முதலாக எதிர்ப்பட்டதும் அதே சமயத்தில்தான். இளம் வாலிபர் ஒருவரை சந்தித்தேன். அவரது தந்தை ஒரு அரசியல்வாதி. நாங்கள் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டோம். அவர் என்னை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். அரசாங்கம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் அதற்கு முந்தின வருடம் வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பிரதியை அவருக்கு கொடுத்தேன். அந்த புத்தகத்தின் மையக்கருவாக இருந்த பரலோக அரசாங்கத்தில் அவருக்கு விருப்பமில்லை என்பது விரைவில் தெரிய வந்தது. அவிசுவாசிகளுடன் எவ்வித திருமண ஒப்பந்தத்தையும் செய்யக் கூடாதென்று இஸ்ரவேலருக்கு கட்டளையிடப்பட்டிருந்ததும் இதே நியமம் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும் என்பதும் நான் படித்தவற்றிலிருந்து எனக்கு தெரியும். ஆகவே, கடினமாக இருந்தபோதிலும் நான் அவருடைய விருப்பத்துக்கு இணங்கவில்லை.​—⁠உபாகமம் 7:3; 2 கொரிந்தியர் 6:⁠14.

அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகளால் பலப்பட்டேன்: “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.” (கலாத்தியர் 6:9) “சோதனைகள் சிறிதானாலும் பெரிதானாலும் ரோமர் 8-⁠ம் அதிகாரத்தின் 28-⁠ம் வசனத்தை பொருத்திக்கொள்” என அருமை அங்கிள் டேனும் கடிதம் எழுதி என்னை உற்சாகப்படுத்தினார். அந்த வசனம் சொல்வதாவது: “அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” அது சுலபமாக இருக்கவில்லை, ஆனால் சரியான தீர்மானத்தையே செய்தேன் என்பதை அறிந்திருந்தேன். அந்த வருடம் நான் கால்போர்ட்டராக ஆனேன்.

சவாலை சந்தித்தல்

1931-⁠ல் நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற புதிய பெயரைப் பெற்றோம். ராஜ்யம், உலகின் நம்பிக்கை (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தை மும்முரமாக விநியோகித்தோம். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், மதகுருவுக்கும், வர்த்தகருக்கும் ஒரு பிரதியை கொடுத்தோம். என்னுடைய பிராந்தியம் ஆஸ்வஸ்ட்ரீயிலிருந்து அதற்கு வடக்கே சுமார் 25 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ரெக்ஸம் வரைக்கும் விரிந்து பரந்திருந்தது. முழு பிராந்தியத்திலும் ஊழியம் செய்து முடிப்பது சவாலாகவே இருந்தது.

அதற்கடுத்த வருடம் பர்மிங்ஹாமில் நடந்த ஒரு மாநாட்டில், 24 வாலண்டியர்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. ஊழியத்தின் அந்த புதிய அம்சம் எது என தெரியாமலேயே எங்களில் 24 பேர் ஆவலுடன் பெயர் கொடுத்தோம். எங்களுக்கு ஆச்சரியத்தை தரும் வகையில், ராஜ்யத்தை அறிவிக்கும் விளம்பர அட்டைகளையும் அணிந்துகொண்டு, ராஜ்யம், உலகத்துக்கான நம்பிக்கை (ஆங்கிலம்) என்ற அதே சிறு புத்தகத்தையும் அளிப்பதற்காக நாங்கள் இரண்டிரண்டு பேராக அனுப்பப்பட்டோம்.

அங்குள்ள தேவாலயத்தை சுற்றியுள்ள பகுதியில் ஊழியம் செய்வது என்னை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. எனினும் அந்த நகரில் யாருக்குமே என்னை தெரியாது என்று சொல்லி என்னை நானே தேற்றிக்கொண்டேன். ஆனால், அந்தப் பகுதியில் முதன்முதலாக என்னைப் பார்த்தது என் முன்னாள் பள்ளி தோழி. அவள் என்னையே முறைத்து பார்த்துவிட்டு, “இந்த மாதிரி டிரஸ் பண்ணிட்டு இங்க என்ன செய்ற?” என்று கேட்டாள். எனக்கிருந்த மனித பயத்தை போக்க அந்த அனுபவம் போதுமானதாக இருந்தது!

தொடர்ந்து முன்னேறுதல்

1933-⁠ல், நான் ஸநோயாவை மணந்துகொண்டேன். அவர் என்னைவிட 25 வயது மூத்தவர்; மனைவியை இழந்தவர். அவருடைய முதல் மனைவி வைராக்கியமான பைபிள் மாணாக்கராக இருந்தவர்கள். அவர்களுடைய மரணத்திற்கு பின்னும் ஸநோயா தன்னுடைய வேலையில் தொடர்ந்து உண்மையாக இருந்து வந்தார். சீக்கிரத்தில் நாங்கள் இங்கிலாந்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு வேல்ஸிலுள்ள எங்கள் புதிய பிராந்தியத்திற்கு போனோம். அட்டைப் பெட்டிகளையும், ஸூட்கேஸ்களையும், மதிப்புள்ள மற்ற சாமான்களையும் சைக்கிளின் ஹான்டில்பாரிலும், குறுக்குக் கம்பிகளுக்கு இடையிலும் செருகி வைத்தும், பின்னால் தொங்கும் கூடைகளில் நிரப்பிக்கொண்டும் அலுங்காமல் குலுங்காமல் ஒரு வழியாக எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டோம்! அந்த நியமிப்பில் சைக்கிள்கள் இல்லையென்றால் முடியாது. அவை எங்களை எல்லா இடத்திற்கும், வேல்ஸ் நாட்டிலுள்ள காடெர் இட்ரிஸ் என்ற சுமார் 900 மீட்டர் உயர்ந்த மலை உச்சிக்கு அருகில்கூட கொண்டு சென்றன. ‘ராஜ்யத்தின் இந்த சுவிசேஷத்தை’ கேட்க காத்திருந்த மக்களை கண்டடைந்தது மிகவும் பயனளிப்பதாய் இருந்தது.​—⁠மத்தேயு 24:⁠14.

நாங்கள் அங்கு போய் கொஞ்ச நாட்களுக்குள், டாம் ப்ரைஸ் என்ற ஒருவர் எங்களைப் போலவே பிரசங்கித்து வந்ததாக அங்குள்ளவர்கள் சொன்னார்கள். வெல்ஷ்பூலுக்கு பக்கத்திலுள்ள லாங் மௌன்டனில் வசித்துவந்த டாமை கடைசியாக கண்டுபிடித்தோம். ஆச்சரியமான விஷயம் காத்திருந்தது! பைபிள் படிப்புக்கு உதவிய ஒப்புரவாகுதல் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை நான் சாட்சி கொடுக்க ஆரம்பித்த காலத்தில் எப்போதோ அவருக்கு கொடுத்திருக்கிறேன். அவர் அதை தானே படித்துவிட்டு, அதிக பிரசுரங்களைப் பெற லண்டனுக்கு எழுதியிருக்கிறார். அப்போதுமுதல் அவர் தான் கண்டடைந்த புதிய விசுவாசத்தை வைராக்கியமாக பிரசங்கித்திருக்கிறார். நாங்கள் மூன்று பேரும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும் வகையில் சேர்ந்து படித்து பல மணிநேர மகிழ்ச்சியான கூட்டுறவை அனுபவித்தோம்.

பேரழிவு ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தியது

1934-⁠ல் வடக்கு வேல்ஸுக்கு அருகிலுள்ள கால்போர்ட்டர்கள் அனைவரும் நீதியுள்ள அரசர் (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தை விநியோகிப்பதற்காக ரெக்ஸம் என்ற டவுனுக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். இந்த விசேஷ அளிப்பை தொடங்குமுன், தேசத்தை உலுக்கிய ஒரு பேரழிவு ஏற்பட்டது. ரெக்ஸமுக்கு மூன்று கிலோமீட்டர் வடக்கில் க்ரெஸ்ஃபர்ட் நிலக்கரி சுரங்கத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதால் 266 சுரங்க தொழிலாளிகள் உயிரிழந்தனர். 200-⁠க்கும் அதிகமான பிள்ளைகள் தகப்பனை இழந்தனர். 160 பெண்கள் விதவைகளானார்கள்.

அன்பானவர்களை இழந்தவர்கள் யார் யார் என பட்டியலிட்டு, அவர்களை தனிப்பட்ட வகையில் சந்தித்து ஒரு சிறு புத்தகத்தை அளிப்பதே எங்கள் வேலை. 19 வயது மகனை இழந்திருந்த திருமதி சாட்விக் என்னிடம் தரப்பட்ட பட்டியலிலிருந்த ஒரு பெயர். அவர்களை பார்க்க போனபோது, அவர்களுடைய மூத்த மகன் ஜாக் தன் அம்மாவுக்கு ஆறுதலளிக்க அங்கு வந்திருந்தார். இந்த இளைஞர் என்னை அடையாளம் கண்டுகொண்டார், ஆனால் அதை சொல்லவில்லை. அதற்குப்பின் அவர் அந்த சிறு புத்தகத்தை வாசித்தார். சில வருடங்களுக்கு முன் நான் அவருக்குக் கொடுத்திருந்த முடிவான போர் (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தையும் தேடியெடுத்தார்.

ஜாக்கும் அவருடைய மனைவி மேயும் இன்னுமதிகமான வேறு சில பிரசுரங்களை பெறுவதற்காக நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்துவிட்டனர். 1936-⁠ல் ரெக்ஸமில் அவர்கள் வீட்டில் கூட்டங்களை நடத்துவதற்கு ஒத்துக்கொண்டார்கள். ஆறு மாதங்கள் கழித்து, ஆல்பர்ட் லாய்ட் சந்தித்துவிட்டு சென்ற பின் ஒரு சபை நிறுவப்பட்டது. அதற்கு ஜாக் சாட்விக் நடத்தும் கண்காணியாக இருந்தார். இப்போது ரெக்ஸமில் மூன்று சபைகள் இருக்கின்றன.

ஜிப்ஸி காரவனில் வாழ்க்கை

இதுவரையாக, இடம்விட்டு இடம் போகும்போது, கிடைத்த இடத்தில் தங்கினோம். இப்போதோ இடம்விட்டு இடம் இழுத்து செல்லத்தக்க சொந்த வீட்டை வைத்திருப்பதற்கான நேரம் வந்ததென்ற முடிவுக்கு வந்தார் ஸநோயா. என் கணவர் ஜிப்ஸி பரம்பரையில் வந்தவர்; தச்சு வேலை செய்வதில் கைதேர்ந்தவர். எனவே அவர் எங்களுக்காக ஜிப்ஸி காரவனை உருவாக்கினார். “மிகுதியின் கடவுள்” என அர்த்தமுள்ள எலிசபெத் என்ற பைபிள் பெயரை அதற்கு வைத்தோம்.

ஒருமுறை நாங்கள் தங்கிய இடம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது ஒரு நீரோடையின் அருகே உள்ள பழத்தோட்டம். எனக்கு அது பரதீஸைப் போலவே தோன்றியது! கொஞ்சம் வசதி குறைவுபட்டாலும் அந்த காரவனில் கழித்த நாட்களின் சந்தோஷத்தை எதுவுமே கெடுக்கவில்லை. குளிர் காலத்தில், படுக்கையில் உள்ள துணியெல்லாம் உறைந்து காரவனின் சுவர்களோடு ஒட்டிக்கொள்ளும். நீராவி நீர்த்துளிகளாக உருவாகி நிற்பதும் ஓயாத பிரச்சினையாக இருந்தது. தண்ணீர் எடுத்துவர வேண்டும்; சிலசமயங்களில் அதற்காக வெகுதூரம் செல்ல வேண்டும். இந்த எல்லா பிரச்சினைகளையும் நாங்கள் சேர்ந்தே சமாளித்தோம்.

ஒருமுறை குளிர்காலத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை. இருந்த உணவும் கொஞ்சம்தான். பணமும் இல்லவே இல்லை. ஸநோயா படுக்கையில் உட்கார்ந்து, என் கையைப் பிடித்துக்கொண்டு சங்கீதம் 37:25-ஐ வாசித்து காட்டினார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.” பின்பு என்னை உற்றுப் பார்த்து இவ்வாறு சொன்னார்: “சீக்கிரத்தில் ஏதாவது நடக்காவிட்டால், நாம் பிச்சை எடுக்க வேண்டியதுதான்; ஆனால் கடவுள் அதை அனுமதிக்கவே மாட்டார்!” அதற்குப்பின் அவர் அக்கம்பக்கத்தாரிடம் சாட்சி கொடுக்க சென்றார்.

மதியவேளையில் குடிப்பதற்கு எதையாவது எனக்கு செய்து தருவதற்காக அவர் திரும்பியபோது, அவருக்காக ஒரு கவர் காத்திருந்தது. அவருடைய அப்பா 75 அமெரிக்க டாலர் பணத்தை அனுப்பியிருந்தார். சில வருடங்களுக்குமுன் பண மோசடி செய்துவிட்டதாக ஸநோயா பொய் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் நிரபராதி என்பது இப்போதுதான் தெளிவானது. அதற்கு ஈடுகட்டத்தான் இந்த பரிசு. தக்க சமயத்தில் கிடைத்து விட்டது!

பயனுள்ள பாடம்

சில நேரங்களில் நாம் பல வருடங்கள் கடந்த பிறகுதான் சில பாடங்களை கற்றுக் கொள்கிறோம். இங்கே அதற்கு ஒரு உதாரணம்: 1927-⁠ல் பள்ளி படிப்பை முடிக்குமுன், என்னுடைய வகுப்பில் படித்த அனைவருக்கும் லாவின்யா ஃபார்க்ளா என்ற ஒரு ஆசிரியைத் தவிர மற்ற ஆசிரியர்களுக்கும் சாட்சி கொடுத்துவிட்டேன். வாழ்க்கையில் நான் என்ன செய்ய தீர்மானித்திருக்கிறேன் என்பதைக் குறித்து எவருக்குமே அக்கறை இல்லை என்பதாலும், அதோடு எனக்கும் மிஸ் ஃபார்க்ளாவுக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாது என்பதாலும் அவர்களிடம் இதைப்பற்றி சொல்ல வேண்டாம் என இருந்துவிட்டேன். சுமார் 20 வருடங்களுக்குப்பின் அந்த ஆசிரியை தன்னுடைய பழைய நண்பர்களையும் மாணவர்களையும் சந்தித்து, தான் இப்போது ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொல்ல வந்ததை அம்மா மூலம் கேள்விப்பட்டபோது நான் பெற்ற ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் கற்பனை செய்து பாருங்கள்!

என் நம்பிக்கையைப் பற்றியும் வாழ்க்கையில் என்ன செய்ய தீர்மானித்திருந்தேன் என்பது பற்றியும் நான் சொல்லாததற்கான காரணத்தை அவர்களை சந்தித்தபோது விளக்கினேன். அவர்கள் பொறுமையாக கேட்ட பின்னர், “நான் எப்போதுமே சத்தியத்திற்காக தேடிக்கொண்டிருந்தேன். அதுவே என் வாழ்க்கையின் வேட்கையாக இருந்தது!” என்றார்கள். இந்த அனுபவம் எனக்கு பயனுள்ள பாடமாக அமைந்தது. அதாவது, நான் சந்திக்கும் எவரிடமும் சாட்சிகொடுக்காமல் இருந்துவிடக்கூடாது; யாரைக் குறித்தும் ஒருபோதும் முன்னதாகவே தீர்மானிக்கக் கூடாது.

இன்னுமொரு போரும் அதற்குப் பின்னும்

1930-களின் இறுதியில் போர் மேகமூட்டம் மீண்டும் திரண்டது. எனக்கு பத்து வயது இளையவனாய் இருந்த என் தம்பி டென்னஸ், தான் செய்துவந்த உலகப்பிரகாரமான வேலையில் தொடர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ராணுவ சேவையிலிருந்து விலக்களிக்கப்பட்டான். அவன் சத்தியத்தில் எப்போதுமே அவ்வளவு அக்கறை காட்டியதில்லை. எனவே உள்ளூர் பயனியர்களான ரூபர்ட் ப்ராட்பெரியிடமும் அவருடைய தம்பி டேவிட்டிடமும் அவனைப் போய் சந்திக்க சொன்னோம். அவர்கள் போய் அவனுடன் பைபிள் படித்தனர். 1942-⁠ல் டென்னிஸ் முழுக்காட்டுதல் பெற்றான். பின்னர் அவனும் பயனியர் ஊழியத்தில் சேர்ந்துகொண்டான். 1957-⁠ல் பயணக் கண்காணியாக நியமனம் பெற்றான்.

1938-⁠ல் எங்கள் மகள் எலிசபெத் பிறந்தாள். குடும்பத்தின் தேவைக்கேற்ப ஸநோயா எங்கள் காரவனை பெரிதாக்கினார். 1942-⁠ல் எங்கள் இரண்டாம் மகள் யூனஸும் பிறந்தபோது நாங்கள் இதைவிட நிரந்தரமான வீட்டை தேடுவதே ஞானமானதென தோன்றியது. இந்த காரணத்திற்காக ஸநோயா ஒருசில வருடங்கள் பயனியர் செய்வதை நிறுத்தினார். ரெக்ஸமுக்கு அருகில் நாங்கள் ஒரு சிறிய வீட்டில் குடிபுகுந்தோம். பின்னர், செஷைர் என்ற பக்கத்து மாகாணத்திலுள்ள மிட்லிஜ்ஜில் தங்கினோம். அங்கு என் அருமை கணவர் 1956-⁠ல் இறந்துவிட்டார்.

என் இரு மகள்களும் முழுநேர ஊழியரானார்கள். இருவருமே திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்கள். யூனஸும் மூப்பரான அவள் கணவரும் இன்னும் லண்டனில் விசேஷ பயனியர்களாக இருக்கின்றனர். எலிசபெத்தின் கணவரும் ஒரு சபை மூப்பர். அவர்களும் அவர்கள் பிள்ளைகளும், என் நான்கு கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் லங்காஷையரிலுள்ள ப்ரெஸ்டனில் என்னருகே வாழ்வது எனக்கு சந்தோஷம்.

என் வீட்டெதிரே ரோடை கடந்து சென்றால் இருக்கும் ராஜ்ய மன்றம் வரை என்னால் நடந்து செல்ல முடிவதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். சமீப வருடங்களில், அங்கேயே கூடிவருகிற குஜராத்தி பேசும் தொகுதியுடன் நான் கூட்டுறவு கொள்கிறேன். அந்த மொழியை படிப்பது எனக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. ஏனென்றால் இப்போது எனக்கு காது கேட்பதில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. தொனியிலுள்ள நயநுணுக்கங்களை இளைஞரைப்போல கேட்டு புரிந்துகொள்வது அவ்வப்போது கஷ்டமாக உள்ளது. ஆனாலும் அது ஒரு சுவாரஸ்யமான சவால்.

என்னால் இன்னும் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்க முடிகிறது. என் வீட்டிலிருந்து பைபிள் படிப்பு நடத்தவும் முடிகிறது. நண்பர்கள் என்னை சந்திக்க வரும்போது, என்னுடைய கடந்தகால அனுபவங்களை பகிர்ந்துகொள்வது எனக்கு இன்பமான அனுபவம். யெகோவாவின் மக்களோடு கிட்டத்தட்ட 90 வருட கூட்டுறவில் பெற்ற ஆசீர்வாதங்களைப் பற்றிய அருமையான நினைவுகளுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

[அடிக்குறிப்புகள்]

a “உண்மையுள்ள அமைப்புடன் இசைந்து செல்லுதல்,” ப்ரைஸ் ஹியூஸின் வாழ்க்கை சரிதை 1963, ஏப்ரல் 1, ஆங்கில காவற்கோபுரத்தில் உள்ளது.

b யெகோவாவின் இந்த உண்மை ஊழியர்களின் வாழ்க்கை சரிதை காவற்கோபுரத்தின் முந்தின வெளியீடுகளில் வந்திருக்கின்றன.

[பக்கம் 25-ன் படம்]

1922, மே 14 அன்று நான் கேட்ட “இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிப்பதில்லை” என்ற பைபிள் பேச்சை விளம்பரம் செய்த கைப்பிரதி

[பக்கம் 26-ன் படம்]

1933-⁠ல் திருமணமாகி கொஞ்ச நாளில் ஸநோயாவுடன்

[பக்கம் 26-ன் படம்]

என் கணவர் உருவாக்கின காரவன் “எலிசபெத்” அருகில் நிற்கையில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்