இளைஞர் பலர் புரட்ட விரும்பாத ஒரு புத்தகம்
“பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தை என்று எனக்கு எப்படி தெரியும்? அந்தப் புத்தகத்தைப் படிக்க எனக்கு விருப்பமே இல்லை” என கூறினாள் பியாட்டா என்ற யுவதி.
ஜெர்மனியில் வாழும் பியாட்டாவை போலத்தான் அங்கு வாழும் பெரும்பாலான இளைஞர்களும் உணருகிறார்கள். பைபிள் வாசிப்பதை அவர்கள் முக்கியமாக நினைப்பதில்லை. இளைஞர்களில் சுமார் 1 சதவீதத்தினர் பைபிளை மிக அடிக்கடி வாசிக்கிறார்கள், 2 சதவீதத்தினர் அடிக்கடி வாசிக்கிறார்கள், 19 சதவீதத்தினர் எப்பொழுதாவது வாசிக்கிறார்கள், சுமார் 80 சதவீதத்தினர் ஒருபோதும் வாசிப்பதில்லை என்பதை அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. மற்ற நாடுகளிலும், ஒருவேளை உங்களுடைய நாட்டிலும், புள்ளிவிவரங்கள் இது போலவே இருக்கலாம். இளைஞர்கள் அநேகர் பைபிளை படிக்க விரும்புவதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
அப்படியானால், பொதுவாக இளைய தலைமுறையினர் பைபிளைப் பற்றி அதிகம் தெரியாதிருப்பதில் ஆச்சரியமே இல்லை! ஒரு சுற்றாய்வைப் பற்றி 2000-ம் ஆண்டின் ஆரம்பத்தில் லாயுஸிட்ஸ ருன்ட்ஷாயு என்ற செய்தித்தாள் அறிக்கை செய்தது. பத்துக் கட்டளைகளைப் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள், வாழ்க்கைக்கு வழிகாட்டியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அந்தச் சுற்றாய்வு காண்பித்தது. 60 வயதைத் தாண்டிய தலைமுறையினரில், 67 சதவீதத்தினர் அந்தக் கட்டளைகளை அறிந்திருந்தார்கள், அவற்றை வழிகாட்டியாக பயன்படுத்தினார்கள், 30 வயதுக்குக் கீழே உள்ள இளைய தலைமுறையினரில் 28 சதவீதத்தினரே அறிந்திருந்தார்கள். சொல்லப்போனால், பெரும்பாலான இளைஞர்களுக்கு கடவுளுடைய வார்த்தை முன்பின் தெரியாத இடத்தைப் போலவே இருக்கிறது.
சிலருக்கு மாறுபட்ட நோக்கு
மறுபட்சத்தில், உலகம் பூராவும், லட்சோப லட்சம் இளைஞர்கள் கடவுளுடைய வார்த்தையை மிக மிக மதிப்புமிக்கதாக கருதுகிறார்கள். உதாரணமாக, 19 வயது அலெக்ஸாண்டர் வேலைக்கு செல்வதற்கு முன்பு ஒவ்வொரு நாள் காலையும் பைபிள் வாசிக்கிறார். “அந்த நாளை ஆரம்பிப்பதற்கு எனக்கு இதுவே சிறந்த வழி” என அவர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு நாள் மாலையும் பைபிளில் ஒரு பகுதியை வாசிக்கும் பழக்கத்தை சான்ட்ரா வைத்திருக்கிறாள். “என்னுடைய அன்றாட காரியங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது” என அவள் கூறுகிறாள். 13 வயது யூலியா, இரவில் படுக்கைக்கு போவதற்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு அதிகாரத்தையாவது வாசிப்பதை ஏற்கெனவே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாள். “உண்மையிலேயே நான் அதை அனுபவித்து மகிழ்கிறேன், தொடர்ந்து வருங்காலத்திலும் இந்தப் பழக்கத்தை கடைப்பிடிக்க விரும்புகிறேன்.”
எந்த நோக்கு சரியானது, ஞானமானது? பைபிள் உண்மையிலேயே வாசிப்பதற்கு ஏற்ற புத்தகமா? இளைய தலைமுறையினருக்கு மதிப்புமிக்கதா, முக்கியமானதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?