பிசாசு—வெறும் மூடநம்பிக்கை மட்டுமல்ல
“புதிய ஏற்பாட்டில் எங்கு புரட்டினாலும் ஒருபுறத்தில் கடவுளும் அவருடைய நல்ல சக்திகளும், மறுபுறத்தில் சாத்தானும் அவனுடைய தீய சக்திகளும் என இந்த இரண்டுக்கும் இடையே பெரும் யுத்தம் நடப்பதை பார்க்கலாம். இது ஏதோ ஓரிரண்டு எழுத்தாளர்களுடைய கருத்து அல்ல, ஆனால் பொதுவான கருத்து. . . . ஆகவே, புதிய ஏற்பாட்டின் அத்தாட்சி தெளிவாக இருக்கிறது. சாத்தான் என்பவன் தீய எண்ணம் கொண்ட நிஜமான ஓர் ஆள், எப்பொழுதும் கடவுளையும் அவருடைய ஜனங்களையும் எதிர்ப்பவன்.”—“தி நியூ பைபிள் டிக்ஷ்னரி.”
அப்படியானால், கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் அநேகர்—அதுவும் பைபிளை நம்புவதாக உரிமை பாராட்டும் அநேகர்—உண்மையிலேயே பிசாசு இருக்கிறான் என்ற கருத்தை ஏன் ஒதுக்கித் தள்ளுகின்றனர்? ஏனென்றால் பைபிளை கடவுளுடைய வார்த்தையாக அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. (எரேமியா 8:9) பைபிள் எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றியிருந்த புறதேசத்தாருடைய தத்துவங்களையே எதிரொலித்தார்கள் என்றும், கடவுளுடைய சத்தியத்தை திருத்தமாக எடுத்துரைக்கவில்லை என்றும் இவர்கள் சொல்கின்றனர். உதாரணமாக, கத்தோலிக்க இறையியலாளர் ஹான்ஸ் க்யூங் இவ்வாறு எழுதுகிறார்: “சாத்தானையும் அவனுடைய பேய்களின் சேனைகளையும் பற்றிய புராண கருத்துக்கள் . . . பாபிலோனிய புராணத்திலிருந்து ஆரம்பகால யூத மதத்திற்குள்ளும் பின்பு அங்கிருந்து புதிய ஏற்பாட்டிற்குள்ளும் நுழைந்தன.”—கிறிஸ்தவனாக இருப்பது பற்றி (ஆங்கிலம்).
ஆனால் பைபிள் வெறுமனே மனிதனுடைய வார்த்தை அல்ல. அது உண்மையிலேயே கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை. ஆகவே, பிசாசைப் பற்றி அது சொல்வதை கருத்தோடு எடுத்துக்கொள்வது நமக்கு ஞானமானது.—2 தீமோத்தேயு 3:14-17; 2 பேதுரு 1:20, 21.
இயேசு என்ன நினைத்தார்?
பிசாசு நிஜமாகவே இருக்கிறான் என்பதை இயேசு கிறிஸ்து நம்பினார். இயேசு தனக்குள் இருக்கும் ஏதோ ஒரு தீமையால் சோதிக்கப்படவில்லை. உண்மையான ஒரு நபராலேயே தாக்கப்பட்டார், பிற்பாடு அவனை “இந்த உலகத்தின் அதிபதி” என அவர் அழைத்தார். (யோவான் 14:30; மத்தேயு 4:1-11) வேறுசில ஆவி சிருஷ்டிகளும் சாத்தானுடைய பொல்லாத சதித்திட்டங்களை ஆதரித்தார்கள் என்றும் அவர் நம்பினார். “பிசாசு பிடித்த” ஆட்களை குணப்படுத்தினார். (மத்தேயு 12:22-28) ஏ ரேஷனலிஸ்ட் என்ஸைக்ளோப்பீடியா என்ற நாத்திக பிரசுரமும் இதன் முக்கியத்துவத்தை பின்வருமாறு குறிப்பிட்டது: “சுவிசேஷங்களில் விவரிக்கப்பட்டுள்ள இயேசு எப்படி பேய்கள் இருப்பதாக நம்பிக்கை வைத்தார் என்பதை இறையியலாளர்கள் புரிந்துகொள்வதற்கு கஷ்டமாகவே இருந்திருக்கிறது.” பிசாசையும் அவனைச் சேர்ந்த பேய்களையும் பற்றி இயேசு பேசியபோது, ஏதோ பாபிலோனிய புராணத்தில் சொல்லப்பட்ட மூடநம்பிக்கைகளையே சொல்லவில்லை. அவை உண்மையிலேயே இருக்கின்றன என்பதை அவர் அறிந்திருந்தார்.
இயேசு தம்முடைய நாளிலிருந்த மதத் தலைவர்களிடம் கூறிய வார்த்தைகளை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது பிசாசைப் பற்றி நிறைய கற்றுக்கொள்கிறோம்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.”—யோவான் 8:44.
இந்த வசனம் சொல்கிறபடி, பிசாசு (கிரேக்கில் இப்பெயரின் அர்த்தம் ‘பழிதூற்றுபவன்’) என்பவன் ‘பொய்யனும் பொய்க்குப் பிதாவாகவும் இருக்கிறான்.’ கடவுளைப் பற்றி பொய் சொன்ன முதல் சிருஷ்டி அவனே, அப்பொய்யை ஏதேன் தோட்டத்தில் சொன்னான். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை புசித்தால், ‘சாகவே சாவீர்கள்’ என நம்முடைய ஆதி பெற்றோரிடம் யெகோவா சொல்லியிருந்தார். இது உண்மையல்ல என சர்ப்பத்தின் வாயிலாக சாத்தான் கூறினான். (ஆதியாகமம் 2:17; 3:4) ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பு’ என அவன் அழைக்கப்படுவது பொருத்தமானதே.—வெளிப்படுத்துதல் 12:9.
நன்மை தீமை அறியத்தக்க மரத்தைப் பற்றி பிசாசு பொய் சொன்னான். அந்த மரத்தின் கனியை சாப்பிட தடை விதித்திருப்பது நியாயமல்ல—அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்—என அவன் வாதாடினான். எது நன்மை எது தீமை என்பதை ஆதாமும் ஏவாளும் தாங்களே தீர்மானித்து ‘தேவனைப் போல’ இருக்க முடியும் என சாத்தான் கூறினான். சுயமாக தெரிந்தெடுக்கும் திறமையுடைய அவர்களே சுய தீர்மானம் எடுக்க வேண்டும் என சாத்தான் மறைமுகமாக சொன்னான். (ஆதியாகமம் 3:1-5) கடவுளுடைய ஆளும் முறையின் நியாயமான தன்மையை இப்படி தாக்கியது முக்கியமான விவாதங்களை எழுப்பின. ஆகவே, இவற்றை தீர்க்க யெகோவா காலத்தை அனுமதித்திருக்கிறார். இதனால் கொஞ்ச காலத்திற்கு சாத்தானையும் அனுமதிக்க வேண்டியிருக்கிறது. அவனுக்கு அனுமதிக்கப்பட்ட அந்தக் கொஞ்ச காலம் சீக்கிரத்தில் முடிவடையப் போகிறது. (வெளிப்படுத்துதல் 12:12) இருந்தபோதிலும், தன்னுடைய போதனைகளை பரப்புவதற்கு இயேசுவின் நாளிலிருந்த வேதபாரகர், பரிசேயர் போன்ற ஆட்களை இன்றும் பயன்படுத்தி, பொய்களின் மூலமாகவும் வஞ்சனையின் மூலமாகவும் கடவுளிடமிருந்து மனிதரை தொடர்ந்து பிரித்துவருகிறான்.—மத்தேயு 23:13, 15.
பிசாசு ‘ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாக’ இருந்தான் என்றும், “சத்தியத்திலே நிலைநிற்கவில்லை” என்றும் இயேசு கூறினார். யெகோவாவே பிசாசை ‘மனுஷ கொலைபாதகனாக’ படைத்தார் என இது அர்த்தப்படுத்துவதில்லை. கடவுளை எதிர்ப்பவர்கள் வதைக்கப்படும் எரிநரகத்தை காவல்காக்கும் ஒருவகை அரக்கனைப் போன்றும் அவன் படைக்கப்படவில்லை. அப்படிப்பட்ட ஓர் இடம் இருப்பதாகக்கூட பைபிள் போதிப்பதில்லை. இறந்தவர்கள் எரிநரகத்திலோ அல்லது சாத்தானுடைய வாசஸ்தலத்திலோ அல்ல, மனிதவர்க்கத்தின் பொது பிரேதக் குழியில்தான் இருக்கிறார்கள் என பைபிள் காட்டுகிறது.—அப்போஸ்தலர் 2:25-27; வெளிப்படுத்துதல் 20:13, 14.
பிசாசு ஆரம்பத்தில் “சத்தியத்திலே” இருந்தான். ஒருகாலத்தில் கடவுளுடைய பரிபூரண ஆவி குமாரர்களில் ஒருவனாக யெகோவாவின் பரலோக குடும்பத்தில் இருந்தான். ஆனால் அவன் “சத்தியத்திலே நிலைநிற்கவில்லை.” அவனே தன்னுடைய சொந்த வழிகளையும் பொய்க் கொள்கைகளையும் தெரிந்தெடுத்துக் கொண்டான். ‘ஆதிமுதல்’ என்பது கடவுளுடைய தூதனாக அவன் படைக்கப்பட்ட சமயத்தை அல்ல, ஆனால் யெகோவாவுக்கு விரோதமாக வேண்டுமென்றே கலகம் செய்து ஆதாம் ஏவாளிடம் பொய் சொன்ன சமயத்தையே அர்த்தப்படுத்துகிறது. மோசேயின் காலத்தில் யெகோவாவுக்கு விரோதமாக கலகம் செய்த ஜனங்களைப் போலவேதான் பிசாசும் இருக்கிறான்; அந்த ஜனங்களைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர்களே தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகளாக நிலைத்திருக்கவில்லை; இதற்கு அவர்களே காரணம்.” (உபாகமம் 32:5, NW) சாத்தானைக் குறித்ததிலும் இதையே சொல்லலாம். அவன் கலகம் செய்து ஆதாம் ஏவாளின் மரணத்திற்கு, சொல்லப்போனால் முழு மனிதவர்க்கத்தின் மரணத்திற்கும், பொறுப்பாளியாக ஆனபோது ‘மனுஷ கொலைபாதகனாக’ மாறினான்.—ரோமர் 5:12.
கீழ்ப்படியாத தூதர்கள்
மற்ற தேவதூதர்களும் கலகத்தில் சாத்தானோடு சேர்ந்துகொண்டார்கள். (லூக்கா 11:14, 15) நோவாவின் நாளில் வாழ்ந்த ‘மனுஷ குமாரத்திகளோடு’ பாலுறவு கொள்வதற்காக இந்தத் தேவதூதர்கள் ‘தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு’ மனித உருவெடுத்து வந்தார்கள். (யூதா 6; ஆதியாகமம் 6:1-4; 1 பேதுரு 3:19, 20) ‘வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கு,’ அல்லது ஆவி சிருஷ்டிகளில் சிறுபான்மையினர் அவனுடைய பக்கமாக திரும்பியிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 12:4.
அடையாள அர்த்தங்கள் பொதிந்த வெளிப்படுத்துதல் புத்தகம் பிசாசை “சிவப்பான பெரிய வலுசர்ப்ப”மாக வர்ணிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:3) ஏன்? உண்மையிலேயே அவன் கோரமாக, விகாரமாக இருப்பதால் அல்ல. சொல்லப்போனால், ஆவி சிருஷ்டிகளுக்கு எப்படிப்பட்ட உடல் இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது, ஆனால் இந்த விஷயத்தில் சாத்தான் மற்ற தேவதூதர்களிலிருந்து வித்தியாசமாக இல்லாமல் இருக்கலாம். என்றபோதிலும், ‘சிவப்பான பெரிய வலுசர்ப்பம்’ என்பது சாத்தானுடைய பயமுறுத்தும், சக்திவாய்ந்த, உயிர் வேட்டையாடும் அழிக்கும் குணத்திற்கு பொருத்தமான வர்ணனை.
சாத்தானும் அவனுடைய பேய்களும் இப்பொழுது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் மனித உருவெடுத்தது போல இனிமேல் அவர்களால் எடுக்க முடியாது. கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டதற்கு சற்று பிறகு, அவர்கள் பூமிக்கு அருகில் தள்ளப்பட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 12:7-9.
பிசாசு—வெல்ல முடியாத சத்துரு
அப்படியிருந்த போதிலும், பிசாசு வெல்ல முடியாத சத்துருவே. அவன் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” (1 பேதுரு 5:8) அவன் நம்முடைய அபூரண சரீரத்தில் குடியிருக்கும் ஏதோ ஒரு தீய சக்தி அல்ல. நம்முடைய பாவ சிந்தைகளுக்கு எதிராக நாம் தினமும் போராட வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். (ரோமர் 7:18-20) ஆனால், உண்மையான போராட்டமே “இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்”தான்.—எபேசியர் 6:12.
பிசாசின் செல்வாக்கு எந்தளவுக்கு பரவியிருக்கிறது? “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலன் யோவான் கூறுகிறார். (1 யோவான் 5:19) ஆனால் பிசாசு நம்மை ஆட்கொள்வதற்கு அல்லது அவனைப் பற்றிய மூடநம்பிக்கைகள் சார்ந்த பயம் நம்மை செயலிழக்கச் செய்வதற்கு நாம் விரும்புகிறதில்லை. இருந்தாலும், சத்தியத்திற்கு நம்முடைய கண்களை குருடாக்குவதற்கும் கடவுளுக்கு நாம் காட்டும் உத்தமத்தன்மையை முறிப்பதற்கும் அவன் எடுக்கும் முயற்சிகளைக் குறித்து விழிப்புடன் இருப்பது ஞானமானது.—யோபு 2:3-5; 2 கொரிந்தியர் 4:3, 4.
கடவுளுடைய சித்தத்தை செய்ய விரும்புகிறவர்களை தாக்குவதற்கு எப்பொழுதும் கொடூரமான முறைகளையே பிசாசு பயன்படுத்துவதில்லை. சிலசமயங்களில், அவன் ‘ஒளியின் தூதனைப்’ போலவே தோன்றுகிறான். இந்த ஆபத்தைக் குறித்து கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எச்சரித்து, இவ்வாறு எழுதினார்: “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.”—2 கொரிந்தியர் 11:3, 14.
ஆகவே, நாம் ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், விழித்திருப்பவர்களாகவும், விசுவாசத்தில் உறுதியாயிருந்து அவனுக்கு எதிர்த்து நிற்பவர்களாகவும்’ இருக்க வேண்டும். (1 பேதுரு 5:8, 9; 2 கொரிந்தியர் 2:11) மாயவித்தையோடு தொடர்புடைய எதிலும் சிக்கிக்கொண்டு அவனுடைய கைப்பாவையாக ஆகிவிடுவதை தவிருங்கள். (உபாகமம் 18:10-12) இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்பட்டபோது கடவுளுடைய வார்த்தையை திரும்பத் திரும்ப பயன்படுத்தியதை மனதிற்கொண்டு, கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாக படியுங்கள். (மத்தேயு 4:4, 7, 10) கடவுளுடைய ஆவிக்காக ஜெபியுங்கள். சாத்தான் மிகத் திறமையாக தூண்டுவிக்கும் மாம்சத்தின் கிரியைகளை தவிர்ப்பதற்கு ஆவியின் கனிகள் உதவும். (கலாத்தியர் 5:16-24) அதோடு, பிசாசிடமிருந்தும் அவனுடைய பேய்களிடமிருந்தும் ஏதாவது விதத்தில் நீங்கள் சோதிக்கப்படுவதாக உணர்ந்தால் யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபியுங்கள்.—பிலிப்பியர் 4:6, 7.
பிசாசைக் குறித்து திகிலடைய வேண்டிய அவசியமில்லை. சாத்தான் என்ன செய்தாலும் மெய்யான பாதுகாப்பை தருவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (சங்கீதம் 91:1-4; நீதிமொழிகள் 18:10; யாக்கோபு 4:7, 8) “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். அப்பொழுது, ‘உங்களால் பிசாசின் தந்திரங்களை எதிர்த்துநிற்க முடியும்.’—எபேசியர் 6:10, 11.
[பக்கம் 5-ன் படம்]
பிசாசு ஒரு நிஜமான ஆள் என்பதை இயேசு அறிந்திருந்தார்
[பக்கம் 6-ன் படம்]
‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’
[படத்திற்கான நன்றி]
NASA photo
[பக்கம் 7-ன் படங்கள்]
கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் தவறாமல் ஜெபிப்பதன் மூலமும் பிசாசுக்கு எதிராக உங்களை காத்துக்கொள்ளுங்கள்