பிசாசு நிஜமான ஓர் ஆள் என நம்புகிறீர்களா?
பிசாசு நிஜமான ஓர் ஆள் என பைபிள் சித்தரித்துக் காட்டுகிறது. கடவுளைப் போலவே இவனையும் மனித கண்களால் காண முடியாது. “தேவன் ஆவியாயிருக்கிறார்” என பைபிள் கூறுகிறது. (யோவான் 4:24) பிசாசு ஓர் ஆவி சிருஷ்டி. என்றாலும், பிசாசுக்கு ஓர் ஆரம்பம் இருந்தது, ஆனால் கடவுளுக்கு இல்லை.
மனிதரை படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, திரளான ஆவி சிருஷ்டிகளைக் கடவுள் படைத்தார். (யோபு 38:4, 7) இவர்களைத் தேவதூதர்கள் என பைபிள் அழைக்கிறது. (எபிரெயர் 1:13, 14) இவர்கள் அனைவரையும் பரிபூரணராக கடவுள் படைத்தார்—ஒருவரும் பிசாசாகவோ எந்தவொரு தீய குணமுடையவராகவோ இருக்கவில்லை. அப்படியானால், பிசாசு எப்படி வந்தான்? பைபிள் எழுதப்பட்ட மொழிகளில், “பிசாசு” என்ற வார்த்தையின் அர்த்தம் “பழிதூற்றுபவன்” என்பதாகும்; எனவே இந்த வார்த்தை, மற்றவர்களைப் பற்றி கெட்ட எண்ணத்துடன் பொய்களைச் சொல்கிற ஒருவனைக் குறிக்கிறது. “சாத்தான்” என்பதன் அர்த்தம் “எதிர்ப்பவன்” என்பதாகும். முன்பு நேர்மையாக நடந்த ஒருவர் திருடுவதன் மூலம் எப்படி தன்னை ஒரு திருடனாக ஆக்கிக்கொள்கிறாரோ அது போலவே கடவுளுடைய பரிபூரண ஆவி குமாரர்களில் ஒருவன் தவறான ஆசையை வளர்த்து அதன்படி செயல்பட்டான், இவ்வாறு தன்னை பிசாசாகிய சாத்தானாக ஆக்கிக்கொண்டான். ஒருவர் கெட்டவராக மாறும் விதத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”—யாக்கோபு 1:14, 15.
உண்மையில் இதுதான் நடந்தது. யெகோவா தேவன் முதல் மானிட தம்பதியரான ஆதாம் ஏவாளைப் படைத்தார், அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யவிருந்த தேவதூதன் இதைக் கவனித்தான். நீதியுள்ள மக்களால் இந்தப் பூமியை நிரப்ப வேண்டுமென ஆதாம் ஏவாளிடம் யெகோவா கட்டளையிட்டதையும் அவர்கள் அனைவரும் படைப்பாளரை வணங்குவார்கள் என்பதையும் அவன் அறிந்திருந்தான். (ஆதியாகமம் 1:28) கனத்தையும் மகிமையையும் பெற தனக்கு வாய்ப்பு இருப்பதை அந்தத் தேவதூதன் கண்டான். பேராசையால் தூண்டப்பட்டு, படைப்பாளருக்கே உரிய ஒன்றைப் பெற—மனிதருடைய வணக்கத்தைப் பெற—அதிக ஆசைப்பட்டான். முறையற்ற இந்த ஆசையை விட்டொழிப்பதற்குப் பதிலாக, கடவுளுடைய இந்த ஆவி குமாரன் தன்னுடைய இருதயத்தில் அதை வளர்த்தான்; அந்த ஆசை பொய்யையும் பின்பு கலகத்தனத்தையும் பிறப்பித்தது. அவன் என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள்.
இந்தக் கலகக்கார தேவதூதன் முதல் மனுஷி ஏவாளிடம் பேசுவதற்கு ஒரு சர்ப்பத்தைப் பயன்படுத்தினான். “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? என்று ஏவாளிடம் அந்தச் சர்ப்பம் கேட்டது. அப்பொழுது, கடவுளுடைய கட்டளையையும் அதற்குக் கீழ்ப்படியாவிட்டால் கிடைக்கும் தண்டனையையும் ஏவாள் குறிப்பிட்டபோது, அந்தச் சர்ப்பம் இவ்வாறு கூறியது: “நீங்கள் சாகவே சாவதில்லை; [தோட்டத்தின் நடுவிலுள்ள அந்த மரத்தின் கனியை] நீங்கள் . . . புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” (ஆதியாகமம் 3:1-5) ஆதாமிடமும் ஏவாளிடமும் கடவுள் உண்மையைச் சொல்லவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டு. அந்த மரத்தின் கனியைப் புசித்தால், கடவுளைப்போல் ஏவாள் மாறிவிடுவாள் என்றும், எது நன்மை எது தீமை என்பதை தீர்மானிக்கும் உரிமையைப் பெறுவாள் என்றும் அவளிடம் சொன்னான். அதுவே முதன்முதல் சொல்லப்பட்ட பொய். அதைச் சொன்னதால் அந்தத் தேவதூதன் பழிதூற்றுபவனாக மாறினான். கடவுளை எதிர்ப்பவனாகவும் மாறினான். கடவுளுடைய இந்த எதிரியை “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” என பைபிள் அடையாளம் காட்டுகிறது.—வெளிப்படுத்துதல் 12:9.
“விழித்திருங்கள்”
ஏவாளிடம் பிசாசு சொன்ன பொய் அவன் திட்டமிட்டிருந்தபடியே வெற்றி பெற்றது. பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.” (ஆதியாகமம் 3:6) ஏவாள் சாத்தானை நம்பி, கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனாள். ஆதாமையும் கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்தாள். இப்படியாக, முதல் மானிட ஜோடியை கடவுளுக்கு எதிரான கலகத்தனமிக்க ஒரு பாதையில் செல்ல வைப்பதில் பிசாசு வெற்றி பெற்றான். அதுமுதல், காணக்கூடாத விதத்தில் மானிட விவகாரங்களில் சாத்தான் செல்வாக்கு செலுத்தி வந்திருக்கிறான். அவனுடைய இலக்கு? மக்கள் மெய்க் கடவுளை வணங்காமல் தன்னை வணங்க வேண்டும் என்பதே. (மத்தேயு 4:8, 9) அப்படியானால், நியாயமான காரணத்தோடுதான் பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.”—1 பேதுரு 5:8.
பிசாசு நிஜமான ஓர் ஆவி ஆள்—மோசமானவனாகவும் ஆபத்தானவனாகவும் மாறிய ஒரு தேவதூதன்—என்பதை பைபிள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக சித்தரிக்கிறது! அவன் உண்மையிலேயே இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்வதே நாம் ஜாக்கிரதையாக இருப்பதற்கு எடுக்க வேண்டிய முதல்படி. ஆனால் நாம் தெளிந்த புத்தியுடன் ஜாக்கிரதையாக இருப்பதில் அநேக விஷயங்கள் உட்பட்டுள்ளன. மக்களை மோசம்போக்குவதற்கு சாத்தான் பயன்படுத்தும் ‘தந்திரங்களைப்’ பற்றி அறியாதவர்களாகவும் நாம் இருந்துவிடக் கூடாது. (2 கொரிந்தியர் 2:11) அவனுடைய சூழ்ச்சிகள் யாவை? அவற்றை நாம் எப்படி எதிர்த்துநிற்க முடியும்?
மனிதனின் இயல்பான தேவையை பிசாசு தவறாகப் பயன்படுத்துகிறான்
மனிதர் படைக்கப்பட்டது முதற்கொண்டே அவர்களை பிசாசு உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறான். மனிதனுடைய இயல்பை—அவனுடைய தேவைகளை, விருப்பங்களை, ஆசைகளை—பிசாசு அறிந்திருக்கிறான். மனிதன் ஆன்மீகத் தேவையுடன் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதையும் சாத்தான் நன்றாக அறிந்திருக்கிறான், ஆகவே இந்தத் தேவையை சூழ்ச்சிநயத்துடன் பிசாசு தவறாக பயன்படுத்தியிருக்கிறான். எப்படி? பொய்யான மத போதனைகளை ஊட்டுவதன் மூலமே. (யோவான் 8:44) கடவுளைப் பற்றிய மத போதனைகள் பல முரண்பாடானவையாகவும் குழப்பமூட்டுபவையாகவும் இருக்கின்றன. இதெல்லாம் யாருடைய நோக்கம்? முரண்பாடான போதனைகள் அனைத்தும் உண்மையாக இருக்க முடியாது. அப்படியானால், இந்த மத போதனைகளெல்லாம் மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு சாத்தானால் திறமையாக வடிவமைக்கப்பட்டவையே என்று நம்பலாம், அல்லவா? சொல்லப்போனால், மக்களுடைய மனதைக் குருடாக்கியிருக்கிற ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ என பைபிள் அவனைக் குறிப்பிடுகிறது.—2 கொரிந்தியர் 4:4.
கடவுளுடைய சத்தியம் மத சம்பந்தமான வஞ்சனைகளிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கிறது. கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை, பூர்வ காலங்களில் படைவீரன் அணிந்த கச்சைக்கு பைபிள் ஒப்பிடுகிறது; அது படைவீரனுடைய இடுப்பு பகுதியைப் பாதுகாத்தது. (எபேசியர் 6:14) நீங்கள் ஒரு கச்சையை அணிந்திருப்பது போல், பைபிள் அறிவைப் பெற்று, அதன் செய்திக்கு இசைவாக வாழ்ந்தால், மத சம்பந்தமான பொய்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் கடவுளுடைய வார்த்தை உங்களைப் பாதுகாக்கும்.
மனிதனுடைய ஆன்மீக தாகம் அறியப்படாததை ஆராய அவனை வழிநடத்தியிருக்கிறது. இதனால், சாத்தானுடைய மற்றொரு ஏமாற்று வழிக்கு அவன் இரையாகியிருக்கிறான். வினோதமானதையும் புரியாப்புதிரையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற மனிதருடைய ஆர்வத்தை தவறாகப் பயன்படுத்தி, ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தின் மூலம் சாத்தான் அநேகரை தன் பிடிக்குள் வைத்திருக்கிறான். இரையைப் பிடிப்பதற்கு வேடன் ஒருவன் கண்ணியைப் பயன்படுத்துவதைப் போலவே, உலகிலுள்ள மக்களை கவர்ச்சித்து அவர்களை வலையில் சிக்க வைப்பதற்கு குறி சொல்லுதல், சோதிடம், ஹிப்னாடிஸம், பில்லிசூனியம், கைரேகை, மாயவித்தை போன்ற உபாயங்களை சாத்தான் பயன்படுத்துகிறான்.—லேவியராகமம் 19:31; சங்கீதம் 119:110.
ஆவியுலகத் தொடர்பு பழக்கம் எனும் கண்ணியில் சிக்காமல் உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்? உபாகமம் 18:10-12 இவ்வாறு கூறுகிறது: “தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.”
ஆவியுலகத் தொடர்புடன் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ள வேண்டாம் என பைபிள் திட்டவட்டமாக அறிவுரை கூறுகிறது. ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட ஏதாவது பழக்கத்தில் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள், ஆனால் இப்பொழுது அதிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள் என்றால் என்ன செய்வது? எபேசு பட்டணத்திலிருந்த பூர்வ கிறிஸ்தவர்களின் முன்மாதிரியை நீங்கள் பின்பற்றலாம். ‘யெகோவாவின் வசனத்தை’ ஏற்றுக்கொண்ட ‘மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்’ என பைபிள் சொல்கிறது. அந்தப் புத்தகங்கள் விலையுயர்ந்தவை. அவற்றின் மதிப்பு 50,000 வெள்ளிக்காசுகளாக இருந்தது. (அப்போஸ்தலர் 19:19, 20) என்றாலும், எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் அவற்றை அழிப்பதற்குத் தயங்கவே இல்லை.
மனித பலவீனங்களை சாத்தான் பயன்படுத்திக்கொள்கிறான்
பரிபூரண தூதன் ஒருவன் தன்னை உயர்த்துவதற்கு ஆசைப்பட்டதால் பிசாசாகிய சாத்தானாக மாறினான். கடவுளைப் போலிருக்க வேண்டும் என்ற பெருமையான, சுயநல வேட்கையை ஏவாளுக்குள்ளும் தூண்டினான். பெருமை என்ற குணத்தைத் தூண்டிவிட்டு, சாத்தான் இன்றைக்கும் அநேகரை தன்னுடைய பிடியில் வைத்திருக்கிறான். உதாரணமாக, தங்களுடைய இனமே அல்லது தேசமே மற்றவர்களுடையதைவிட மிகவும் உயர்ந்தது என சிலர் நினைக்கின்றனர். பைபிள் கற்பிக்கும் விஷயத்திற்கு இது எவ்வளவு முரணாக இருக்கிறது! (அப்போஸ்தலர் 10:34, 35) பைபிள் தெளிவாக சொல்கிறது: ‘மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணினார்.’—அப்போஸ்தலர் 17:26.
பெருமையை தூண்டிவிடும் சாத்தானுடைய முயற்சிக்கு எதிராக நம்மை காத்துக்கொள்வதற்கு உதவும் திறம்பட்ட ஆயுதம்தான் மனத்தாழ்மை. ‘நம்மில் எவரும் தங்களைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணக் கூடாது’ என பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. (ரோமர் 12:3) ‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்’ என அது கூறுகிறது. (யாக்கோபு 4:6) மனத்தாழ்மையையும் கடவுளால் அங்கீகரிக்கப்படும் பிற குணங்களையும் உங்களுடைய வாழ்க்கையில் வெளிக்காட்டுவதே சாத்தானுடைய முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு சிறந்த வழி.
தவறான புலன் இன்பங்களுக்கு அடிபணிந்து போகும் மனித பலவீனத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு பிசாசு ஆர்வமுள்ளவனாக இருக்கிறான். மனிதர்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழும்படி யெகோவா நோக்கம் கொண்டார். கடவுள் வகுத்திருக்கும் எல்லைக்குள் ஆசைகளைப் பூர்த்தி செய்யும்போது, உண்மையான மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால், மனிதர்கள் தங்களுடைய வேட்கையை ஒழுக்கயீனமான முறைகளில் திருப்திப்படுத்திக்கொள்ள அவர்களை சாத்தான் தூண்டுகிறான். (1 கொரிந்தியர் 6:9, 10) ஆகவே, கற்புள்ள, நல்லொழுக்கமுள்ள காரியங்கள்மீது மனதை ஊன்றவைப்பது மிகவும் நல்லது. (பிலிப்பியர் 4:8) இது, உங்களுடைய சிந்தைகளையும் உணர்ச்சிகளையும் உறுதியாகக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவும்.
தொடர்ந்து பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்
பிசாசை எதிர்த்து நிற்பதில் நீங்கள் வெற்றிபெற முடியுமா? ஆம், உங்களால் முடியும். “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என பைபிள் உறுதியளிக்கிறது. (யாக்கோபு 4:7) சாத்தானை நீங்கள் எதிர்த்து நின்றாலும்கூட, கடவுளைப் பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவருகையில், இனிமேல் உங்களுக்கு எந்தவித தொல்லையும் தருவதை உடனே அவன் நிறுத்திவிட மாட்டான். ‘வசதியான மற்றொரு நேரத்தில்’ மீண்டும் முயற்சி செய்து பார்ப்பதற்கு பிசாசு வருவான். (லூக்கா 4:13, NW) என்றாலும், பிசாசுக்கு நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து அவனுக்கு எதிர்த்து நின்றால், உண்மையான கடவுளைவிட்டு அவனால் உங்களை விலக்க முடியாது.
என்றாலும், பிசாசை எதிர்த்து நிற்பதற்கு, அவனுடைய சூழ்ச்சிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமல்லாமல், அவன் யார், மக்களை எப்படி மோசம் போக்குகிறான் என்பதைப் பற்றிய அறிவையும் பெற வேண்டும். அத்தகைய அறிவைத் தரும் திருத்தமான ஊற்றுமூலம் ஒன்று மட்டுமே இருக்கிறது, அதுதான் கடவுளுடைய வார்த்தையான பைபிள். கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்ட பைபிளைப் படிப்பதிலும், நீங்கள் படித்தவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதிலும் உறுதியுடனிருங்கள். உங்களுடைய பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு வசதியான நேரத்தில் இலவசமாக உதவ ஆவலோடு இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்புகொள்ளவோ இப்பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதவோ தயங்காதீர்கள்.
நீங்கள் பைபிளைப் படிக்க ஆரம்பிக்கையில், கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தைக் கற்றுக்கொள்வதை நிறுத்துவதற்கு எதிர்ப்பையோ துன்புறுத்தலையோ சாத்தான் பயன்படுத்தக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் பைபிள் படிப்பதால் உங்களுடைய அன்பானவர்கள் உங்கள்மீது ஒருவேளை கோபப்படலாம். ஏனென்றால் அதிலுள்ள அற்புதமான சத்தியங்கள் அவர்களுக்குத் தெரியாது. வேறு சிலரோ உங்களை கேலி செய்யலாம். ஆனால் இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடுவது உண்மையிலேயே கடவுளைப் பிரியப்படுத்துமா? உங்களைச் சோர்ந்துபோகச் செய்வதன் மூலம் உண்மையான கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதை பிசாசு நிறுத்த முயலுகிறான். சாத்தான் உங்களை வெல்ல ஏன் நீங்கள் அனுமதிக்க வேண்டும்? (மத்தேயு 10:34-39) அவனுக்கு நீங்கள் எவ்விதத்திலும் கடன்பட்டில்லை. உங்களுடைய ஜீவனுக்குக் கடவுளுக்கே நீங்கள் கடன்பட்டுள்ளீர்கள். ஆகவே, பிசாசை எதிர்த்து நிற்க உறுதியுடனிருந்து, ‘யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துங்கள்.’—நீதிமொழிகள் 27:11.
[பக்கம் 6-ன் படம்]
கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் ஆவியுலகத் தொடர்பு சம்பந்தமான தங்களுடைய புத்தகங்களைச் சுட்டெரித்தார்கள்
[பக்கம் 7-ன் படம்]
பைபிளைப் படிப்பதற்கு உறுதியான தீர்மானமெடுங்கள்