இயேசுவைப் போல் “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்”
“பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” —யாக். 4:7.
1. யாரிடமிருந்து தமக்கு எதிர்ப்பு வருமென்று இயேசு அறிந்திருந்தார், அதன் விளைவாக என்ன நடக்கவிருந்தது?
பிசாசிடமிருந்து தமக்கு எதிர்ப்பு வருமென்று இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். எப்படியென்றால், சர்ப்பத்தைப் பயன்படுத்திக் கலகம்செய்த பொல்லாத தூதனிடம் கடவுள் இவ்வாறு சொன்னதை அவர் நன்கு அறிந்திருந்தார்: “உனக்கும் ஸ்திரீக்கும் [யெகோவாவின் பரலோக அமைப்பு], உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் [இயேசு கிறிஸ்து] உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதி. 3:14, 15; வெளி. 12:9) இயேசுவின் குதிங்கால் நசுக்கப்படுவது, பூமியில் இருக்கையில் அவர் அனுபவிக்கவிருந்த மரண அடி தற்காலிகமானது என்பதை அர்த்தப்படுத்தியது; ஏனெனில், யெகோவா அவரை மகிமையான நிலையில் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பவிருந்தார். ஆனால், சர்ப்பத்தின் தலை நசுக்கப்படுவது, சாத்தானுக்குக் கிடைக்கவிருந்த மரண அடி நிரந்தரமானது என்பதையும், அதிலிருந்து அவன் மீளவே முடியாது என்பதையும் அர்த்தப்படுத்தியது.—அப்போஸ்தலர் 2:31, 32-ஐயும் எபிரெயர் 2:14-ஐயும் வாசியுங்கள்.
2. பிசாசை இயேசு வெற்றிகரமாக எதிர்த்து நிற்பாரென்று யெகோவா ஏன் நம்பிக்கையோடு இருந்தார்?
2 பூமியில் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை இயேசு வெற்றிகரமாகச் செய்து முடிப்பார் என்றும் பிசாசுக்கு எதிர்த்து நிற்பார் என்றும் யெகோவா நம்பிக்கையோடு இருந்தார். யெகோவா ஏன் அந்தளவுக்கு நம்பிக்கையோடு இருந்தார்? ஏனென்றால், இயேசுவை யுகாயுகங்களுக்கு முன்பு படைத்த சமயத்திலிருந்தே அவர் எப்படிப்பட்டவரென்று யெகோவா கவனித்துவந்திருந்தார்; ‘கைதேர்ந்த வேலையாளாகவும்’ ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறாகவும்’ இருந்த இயேசு தமக்குக் கீழ்ப்படிந்து நடந்ததையும் உண்மையோடு இருந்ததையும் அறிந்திருந்தார். (நீதி. 8:22–31; கொலோ. 1:15) ஆகவே, தம்முடைய ஒரே பேறான மகனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பி, பிசாசு அவரை மரணபரியந்தம் சோதிக்க அனுமதித்தபோது, அவர் அந்தச் சோதனையை ஜெயிப்பார் என்ற நம்பிக்கை யெகோவாவுக்கு இருந்தது.—யோவா. 3:16.
யெகோவா தம் ஊழியர்களைப் பாதுகாக்கிறார்
3. யெகோவாவின் ஊழியர்களைப் பிசாசு என்ன செய்ய நினைக்கிறான்?
3 பிசாசை, “இந்த உலகத்தின் அதிபதி” என இயேசு குறிப்பிட்டார்; தாம் துன்புறுத்தப்பட்ட விதமாகவே தம் சீஷர்களும் துன்புறுத்தப்படுவார்கள் என அவர் எச்சரித்தார். (யோவா. 12:31; 15:20) பிசாசாகிய சாத்தானின் பிடியில் இருக்கும் இந்த உலகம் உண்மைக் கிறிஸ்தவர்களைப் பகைக்கிறது; ஏனென்றால், அவர்கள் யெகோவாவை வழிபடுகிறார்கள், நீதியைப் பிரசங்கிக்கிறார்கள். (மத். 24:9; 1 யோ. 5:19) பரலோகத்தில் கிறிஸ்துவோடு ஆளுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில் மீந்திருப்போரையே பிசாசு முக்கியமாகக் குறிவைக்கிறான். அதோடு, ஒரு பூந்தோட்டப் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்களையும் அவன் குறிவைக்கிறான். அதனால்தான், “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” என பைபிள் நம்மை எச்சரிக்கிறது.—1 பே. 5:8.
4. நம் நாளில் கடவுளுடைய மக்கள் வெற்றிகரமாகப் பிசாசுக்கு எதிர்த்து நின்றிருப்பதை எது காட்டுகிறது?
4 யெகோவா தேவனின் ஆதரவோடு இயங்கிவரும் ஓர் அமைப்பாக, நாம் வெற்றிகரமாய்ப் பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறோம். சரித்திரத்தில் நடந்த உண்மைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: கடந்த 100 ஆண்டுகளில், யெகோவாவின் சாட்சிகளைப் பூண்டோடு ஒழித்துக்கட்ட வேண்டுமென்று மூர்க்க வெறிபிடித்த சர்வாதிகார ஆட்சியாளர்களில் சிலர் முயன்றிருக்கிறார்கள். ஆனாலும், சாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் வந்திருக்கிறது; தற்போது உலகெங்கும் 1,00,000-க்கும் மேற்பட்ட சபைகளில் அவர்களது எண்ணிக்கை கிட்டத்தட்ட 70,00,000-ஐ எட்டியிருக்கிறது. மறுபட்சத்தில், யெகோவாவின் மக்களைத் துன்புறுத்தின அந்தக் கொடிய சர்வாதிகாரிகளோ இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோய்விட்டார்கள்!
5. ஏசாயா 54:17-ல் உள்ள வாக்குறுதி யெகோவாவின் ஊழியர்களுடைய விஷயத்தில் எவ்வாறு நிறைவேறியிருக்கிறது?
5 பூர்வ இஸ்ரவேல் மக்களை,“சிறுமைப்பட்ட” ஒரு பெண்ணாகக் குறிப்பிட்டுப் பேசுகையில் கடவுள் இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: ‘உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறது.’ (ஏசா. 54:11, 17) இந்த வாக்குறுதி நம்பகமானது என்பது, இந்த “கடைசி நாட்களில்” பூமி முழுவதிலுமுள்ள யெகோவாவின் மக்களுடைய விஷயத்திலிருந்து தெரிகிறது. (2 தீ. 3:1–5, 13) நாம் தொடர்ந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்கையில், கடவுளுடைய மக்களாகிய நம்மை ஒழித்துக்கட்ட அவன் பயன்படுத்துகிற எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம், ஏனென்றால் யெகோவா நம் பக்கம் இருக்கிறார்.—சங். 118:6, 7.
6. பிசாசின் ஆட்சிக்கு என்ன நடக்குமென்று தானியேல் தீர்க்கதரிசி முன்னுரைத்தார்?
6 இந்தப் பொல்லாத உலகம் முழுவதற்கும் வெகு விரைவில் வரவிருக்கும் அழிவின்போது, சாத்தானுடைய ஆட்சியின் பாகமான அனைத்தும் நொறுக்கப்பட்டுவிடும். தானியேல் தீர்க்கதரிசி கடவுளின் சக்தியால் தூண்டப்பட்டு முன்னுரைத்ததாவது: “அந்த [நம் காலத்து] ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த [நம் காலத்து] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானி. 2:44) அந்தச் சமயத்தில், சாத்தானின் ஆட்சியும் அபூரண மனிதரின் ஆட்சியும் சுவடு தெரியாமல் மறைந்துவிடும். பிசாசின் உலகைச் சேர்ந்த அனைத்தும் அடியோடு அழிந்துவிடும்; கடவுளுடைய ராஜ்யம், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் முழு பூமியையும் ஆட்சிசெய்யும்.—2 பேதுரு 3:7, 13-ஐ வாசியுங்கள்.
7. யெகோவாவின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் வெற்றிகரமாகப் பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடியுமென்று நமக்கு எப்படித் தெரியும்?
7 யெகோவாவின் அமைப்பு பாதுகாக்கப்பட்டு ஆன்மீக ரீதியில் செழித்தோங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. (சங்கீதம் 125:1, 2-ஐ வாசியுங்கள்.) நம் ஒவ்வொருவரையும் பற்றி என்ன? இயேசுவைப் போலவே நாமும் வெற்றிகரமாகப் பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடியுமென்று பைபிள் காட்டுகிறது. சொல்லப்போனால், பூமியில் வாழும் நம்பிக்கையுடைய “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” சாத்தானுடைய எதிர்ப்பின் மத்தியிலும், வரவிருக்கும் அழிவைத் தப்பிப்பிழைப்பார்கள் என்று அப்போஸ்தலன் யோவான் மூலமாக கிறிஸ்து உரைத்த தீர்க்கதரிசனம் காட்டுகிறது. அந்த ஜனங்கள், “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் [இயேசு கிறிஸ்துவுக்கும்] உண்டாவதாக” என்று ஆர்ப்பரிப்பார்களென அது சொல்கிறது. (வெளி. 7:9–14) பரலோக நம்பிக்கையுடையவர்கள் சாத்தானை ஜெயிப்பார்களென்றும், அவர்களுடைய நண்பர்களாகிய, ‘வேறே ஆடுகள்’ எனப்படுகிறவர்களும்கூட அவனை வெற்றிகரமாக எதிர்ப்பார்களென்றும் அது சொல்கிறது. (யோவா. 10:16; வெளி. 12:10, 11) ஆனால், இதற்கு ஊக்கமாக முயற்சி எடுப்பதும், ‘தீயோனிடமிருந்து விடுவிக்கும்படி’ உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்வதும் அவசியம்.—மத். 6:13, NW.
பிசாசுக்கு எதிர்த்து நிற்பதில் தலைசிறந்த முன்மாதிரி
8. வனாந்தரத்தில் இயேசுவைப் பிசாசு முதன்முறையாக எவ்வாறு சோதித்தான், அதை அவர் எப்படி எதிர்த்தார்?
8 இயேசுவின் உத்தமத்தன்மையைப் பிசாசு குலைக்கப் பார்த்தான். அவரை யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமற்போகும்படி செய்வதற்காக வனாந்தரத்தில் மூன்று முறை சோதித்தான். என்றாலும், சாத்தானை எதிர்த்து நிற்பதில் இயேசு தலைசிறந்த முன்மாதிரி வைத்தார். அவர் 40 நாட்கள் இரவும்பகலும் விரதம் இருந்த பிறகு, ஏதாவது சாப்பிட மிகவும் ஆசைப்பட்டிருப்பார். அந்தச் சமயம் பார்த்து சாத்தான், “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான். இயேசுவோ, தமக்குக் கடவுள் கொடுத்த வல்லமையைச் சுய லாபத்துக்காகப் பயன்படுத்த விரும்பாமல், “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.—மத். 4:1–4; உபா. 8:3.
9. நமது இயல்பான சரீர ஆசைகளைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளப் பிசாசு எடுக்கும் முயற்சிகளை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
9 இன்று, யெகோவாவின் ஊழியர்களுடைய இயல்பான சரீர ஆசைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பிசாசு வழிதேடுகிறான். ஆகவே, சீர்கெட்ட இவ்வுலகில் சர்வசகஜமாக இருக்கும் தகாத பாலியல் வசீகரங்களை எதிர்க்க நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும். “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்று பைபிள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது. (1 கொ. 6:9, 10) ஆகவே, ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை நடத்துபவர்கள் திருந்தாவிட்டால், கடவுளுடைய புதிய உலகில் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.
10. மத்தேயு 4:5, 6-ன்படி, இயேசுவின் உத்தமத்தைக் குலைக்கச் சாத்தான் கொண்டுவந்த இன்னொரு சோதனை என்ன?
10 வனாந்தரத்தில் இயேசு எதிர்ப்பட்ட இன்னொரு சோதனையைப் பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.” (மத். 4:5, 6) இயேசுவே மேசியா என மக்களுக்குப் பளிச்செனக் காட்டுவதற்கு இது ஓர் அருமையான வழி என்பதுபோல் பிசாசு பேசினான். ஆனால் இயேசு அப்படிச் செய்திருந்தால் அது அகம்பாவமிக்க, தவறான ஒரு செயலாய் இருந்திருக்கும், அதைக் கடவுள் அங்கீகரித்திருக்கவும் மாட்டார், ஆதரித்திருக்கவும் மாட்டார். இந்தச் சோதனையின்போதும் இயேசு யெகோவாவுக்கு உத்தமமாகவே இருந்தார்; ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என அவர் பதிலளித்தார்.—மத். 4:7; உபா. 6:16.
11. சாத்தான் நம்மை எவ்வாறு சோதிக்கலாம், அதனால் என்ன விளைவு ஏற்படலாம்?
11 நாம் பல வழிகளில் மகிமை தேடிக்கொள்வதற்குச் சாத்தான் நமக்கும் ஆசைகாட்டலாம். இவ்வுலக பாணிகளைப் பின்பற்றி ஆடை அலங்காரம் செய்துகொள்ளவோ, தகாத பொழுதுபோக்கில் ஈடுபடவோ அவன் நம்மைத் தூண்டலாம். ஆனால், நாம் பைபிள் ஆலோசனையைப் புறக்கணித்து, இவ்வுலகத்தின் வழியில் செல்லத் துணிந்தால், அதனால் வரும் தீய விளைவுகளிலிருந்து தூதர்கள் நம்மைப் பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? தாவீது ராஜா, பத்சேபாளின் விஷயத்தில் செய்த பாவங்களிலிருந்து மனந்திரும்பினபோதிலும், அதன் பின்விளைவுகளிலிருந்து அவர் பாதுகாக்கப்படவில்லை. (2 சா. 12:9–12) நாம் ஒருவேளை இவ்வுலக சிநேகத்தை நாடினால், அது யெகோவாவைப் பரீட்சை பார்ப்பதாக இருக்கும்; ஆகவே, இதுபோன்ற தவறான வழிகளில் அவரைப் பரீட்சை பாராதிருப்போமாக.—யாக்கோபு 4:4-ஐயும் 1 யோவான் 2:15–17-ஐயும் வாசியுங்கள்.
12. இயேசு எதிர்ப்பட்ட என்ன சோதனைபற்றி மத்தேயு 4:8, 9-ல் குறிப்பிடப்பட்டுள்ளது, அதை அவர் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்த்து நின்றார்?
12 வனாந்தரத்தில் இயேசுவை மூன்றாவது முறை பிசாசு சோதித்தபோது அவருக்கு அரசதிகாரத்தைத் தருவதாக ஆசைகாட்டினான். அவன் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.” (மத். 4:8, 9) யெகோவாவுக்குச் சேரவேண்டிய வணக்கத்தைப் பறித்துக்கொள்வதற்காகவும் அவருக்குக் கீழ்ப்படியாமல்போகும்படி இயேசுவைத் தூண்டுவதற்காகவும் எடுக்கப்பட்ட என்னே ஒரு துணிச்சலான முயற்சி! ஒருகாலத்தில் உண்மையுள்ள தூதனாய் இருந்த அவன், மற்றவர்கள் தன்னை வணங்கினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்து யோசித்து, பேராசைபிடித்து, கொடிய பாவியாய் ஆகியிருந்தான்; இவ்வாறு, விஷமம் நிறைந்த சோதனைக்காரனாகிய பிசாசெனும் சாத்தானாய் மாறியிருந்தான். (யாக். 1:14, 15) இயேசுவோ அதற்கு நேர்மாறாக, தம் பரம தகப்பனுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருக்கத் தீர்மானமாய் இருந்தார்; அதனால், ‘அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே’ எனத் தெள்ளத்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் சொல்லி, மறுபடியும் பிசாசுக்கு எதிர்த்து நின்றார். சாத்தானின் உலகத்திலிருந்த எதையும் பெற்றுக்கொள்ள அவர் ஆசைப்படவில்லை, அந்தப் பொல்லாதவனை அவர் வணங்குவதாகவே இல்லை!—மத். 4:10; உபா. 6:13; 10:20.
‘பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அவன் ஓடிப்போவான்’
13, 14. (அ) இந்த உலகின் சகல ராஜ்யங்களையும் இயேசுவுக்குக் காண்பித்து, அவருக்கு எதை அளிக்கப் பிசாசு முன்வந்தான்? (ஆ) நம்மைக் கெடுக்கச் சாத்தான் எவ்வாறு முயற்சி செய்கிறான்?
13 பிசாசு, இந்த உலகின் சகல ராஜ்யங்களையும் இயேசுவுக்குக் காட்டி, அதுவரை எந்த மனிதனுக்குமே கிடைத்திராத அதிகாரத்தை அவருக்கு அளிக்க முன்வந்தான். அவற்றைப் பார்த்தபின் இந்த உலகிலேயே மிகுந்த செல்வாக்குபெற்ற அரசியல் தலைவராய் ஆகிவிட ஆசைப்பட்டு இயேசு அதற்கு இணங்கிவிடுவாரென்று அவன் எதிர்பார்த்தான். இன்று பிசாசு, ராஜ்யங்களைக் காட்டி நம்மைச் சோதிப்பதில்லை; ஆனால், நாம் காண்கிற, கேட்கிற, யோசிக்கிற காரியங்கள் மூலமாக நம் உள்ளத்தைக் கெடுக்க முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறான்.
14 இந்த உலகம் பிசாசின் கையில் இருப்பதால், அதன் மீடியாவும் அவனுடைய ஆதிக்கத்திலேயே உள்ளது. அப்படியிருக்க, இந்த உலகத்தில் மக்கள் பார்க்கிற, கேட்கிற, வாசிக்கிற எல்லாவற்றிலுமே ஒழுக்கக்கேடும் வன்முறையும் மலிந்திருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த உலகின் விளம்பரங்கள், நமக்குத் தேவையே இல்லாத பொருள்களைக்கூட வாங்கிக் குவிக்க வேண்டுமென்ற ஆசையைக் கிளறிவிடுகின்றன. இவற்றின் வாயிலாகப் பிசாசு, நம் கண்களையும் காதுகளையும் மனங்களையும் சுண்டியிழுக்கும் பொருள்களைச் சதா காண்பித்து, நமக்கு ஆசைகாட்டுகிறான். ஆனால், பைபிள் கண்டனம் செய்கிற காரியங்களைப் பார்க்கவோ கேட்கவோ வாசிக்கவோ மறுத்தோமென்றால், ஒருவிதத்தில் நாமும், “அப்பாலே போ சாத்தானே”! என்று சொல்கிறோம். இவ்வாறு, சாத்தானின் உலகிலுள்ள அசுத்தமான காரியங்களை உறுதியாகவும் தீர்மானமாகவும் ஒதுக்கித்தள்ளுவதில் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். அதோடு, வேலை பார்க்குமிடத்திலோ, பள்ளியிலோ, அக்கம்பக்கத்திலோ, சொந்தபந்தங்கள் மத்தியிலோ, நாம் யெகோவாவின் சாட்சிகள் என்றும் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்றும் தைரியமாய்ச் சொல்வதன் மூலம் நாம் சாத்தானுடைய உலகின் பாகமாக இல்லை என்பதைக் காட்டுகிறோம்.—மாற்கு 8:38-ஐ வாசியுங்கள்.
15. சாத்தானுக்கு எதிர்த்து நிற்க நாம் ஏன் எப்போதும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?
15 இயேசுவின் உத்தமத்தன்மையை முறித்துப்போட பிசாசு எடுத்த மூன்றாவது முயற்சியும் பலிக்காமல் போகவே, அவன் “அவரை விட்டு விலகிப்போனான்.” (மத். 4:11) என்றாலும், இயேசுவைச் சோதிக்காமலேயே இருந்துவிட சாத்தான் நினைக்கவில்லை; ஏனென்றால், “பிசாசானவன் [வனாந்தரத்தில்] சோதனையெல்லாம் முடித்தபின்பு, [மறுபடியும் தக்கதொரு சந்தர்ப்பம் வரும்வரை] சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்” என்று நாம் வாசிக்கிறோம். (லூக். 4:13) பிசாசை எதிர்த்து நிற்பதில் நாம் வெற்றிபெறும்போது யெகோவாவுக்கு நன்றிதெரிவிக்க வேண்டும். அதே சமயத்தில், அவருடைய உதவியைத் தொடர்ந்து நாட வேண்டும்; ஏனெனில், மறுபடியும் தக்கதொரு சந்தர்ப்பத்தில், அதுவும் நாம் எதிர்பார்க்காத சமயத்தில், நம்மைச் சோதிப்பதற்காகப் பிசாசு திரும்பி வருவான். எனவே, நாம் எப்போதும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்; என்ன சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் விடாமல் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்யத் தயாராயிருக்க வேண்டும்.
16. என்ன வலிமைமிக்க சக்தியை யெகோவா நமக்கு அளிக்கிறார், நாம் ஏன் அதற்காக ஜெபிக்க வேண்டும்?
16 பிசாசுக்கு எதிர்த்து நிற்க நாம் முயற்சி செய்யும்போது, கடவுளுடைய சக்திக்காக ஜெபம்செய்து, அதைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; ஏனென்றால், அது சர்வலோகத்திலேயே வலிமைமிக்க சக்தியாகும். நம் சொந்த பலத்தில் செய்ய முடியாதவற்றையும் செய்ய அது நமக்கு உதவும். இயேசு தம் சீஷர்களுக்கு இவ்வாறு உறுதியளித்தார்: “[அபூரணத்தால் ஒரு கருத்தில்] பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியை [அதாவது, தமது சக்தியை] கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா”! (லூக். 11:13) ஆகவே, யெகோவாவின் சக்திக்காக நாம் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். பிசாசுக்கு எதிர்த்து நிற்கத் தீர்மானமாக இருக்கிற நாம், வலிமைமிக்க அந்தச் சக்தியின் துணையோடு வெற்றிகாண்போம். நாம் தவறாமலும் ஊக்கமாகவும் ஜெபம் செய்வதோடு, கடவுள் தரும் ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க” முடியும்.—எபே. 6:11–18.
17. எப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கண்முன் நிறுத்திப் பிசாசை இயேசு எதிர்த்து நின்றார்?
17 பிசாசை எதிர்க்க இயேசுவுக்கு வேறொன்றும் உதவியது, அது நமக்கும் உதவும். பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” (எபி. 12:2) நாம் யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரித்து, அவருடைய பரிசுத்த பெயரை மகிமைப்படுத்தி, நித்திய ஜீவன் என்ற பரிசைக் கண்முன் நிறுத்தும்போது, அதே சந்தோஷத்தைப் பெறுவோம். சாத்தானும் அவனுடைய எல்லா கைவேலைகளும் என்றென்றுமாய் ஒழிக்கப்பட்டு, ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாய்’ வாழும்போது, நமக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும்! (சங். 37:11) ஆகவே, இயேசுவைப் போல் தொடர்ந்து பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.—யாக்கோபு 4:7, 8-ஐ வாசியுங்கள்.
என்ன பதில் சொல்வீர்கள்?
• யெகோவா தம் மக்களைப் பாதுகாக்கிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
• சாத்தானை எதிர்ப்பதில் இயேசு எவ்வாறு முன்மாதிரி வைத்தார்?
• நீங்கள் எவ்விதங்களில் பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடியும்?
[பக்கம் 29-ன் படம்]
உலகத்தைச் சிநேகித்தால் நாம் கடவுளுக்குப் பகைவர்களாகிவிடுவோம்
[பக்கம் 31-ன் படம்]
சாத்தான் காட்டிய உலக ராஜ்யங்களையெல்லாம் இயேசு மறுத்துவிட்டார்