பைபிள் தரும் பதில்கள்
பிசாசு எப்படி வந்தான்?
பிசாசைக் கடவுள் படைக்கவில்லை. முதலில் அவனை ஒரு நல்ல தேவதூதனாகத்தான் படைத்தார். ஆனால், அவன் பிற்பாடு கெட்டவனாகி பிசாசாக மாறினான். சாத்தான் என்றும் அவன் அழைக்கப்படுகிறான். இந்தப் பிசாசு ஒருகாலத்தில் உண்மையுள்ளவனாக, குற்றம் செய்யாதவனாக இருந்தான் என்று இயேசு சுட்டிக்காட்டினார். ஆகவே, பிசாசு ஆரம்பத்தில் ஒரு நல்ல தேவதூதனாக இருந்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.—யோவான் 8:44-ஐ வாசியுங்கள்.
ஒரு நல்ல தேவதூதன் எப்படி பிசாசாக மாறினான்?
இந்தத் தேவதூதன் கடவுளை எதிர்க்கத் துணிந்தான். தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி முதல் மனித ஜோடியைத் தூண்டினான். இப்படித்தான் அவன் சாத்தானாக மாறினான்; சாத்தான் என்றால் “எதிர்ப்பவன்” என்று அர்த்தம்.—ஆதியாகமம் 3:1-5; மற்றும் வெளிப்படுத்துதல் 12:9-ஐ வாசியுங்கள்.
சிந்திக்கும் திறனுள்ள மற்றெல்லா படைப்புகளுக்கும் இருந்தது போலவே இந்தத் தேவதூதனுக்கும் நல்லது கெட்டதைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் இருந்தது. ஆனால், அந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினான். எல்லோரும் தன்னை வணங்க வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொண்டான். கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையைவிட கடவுளைப்போல் ஆக வேண்டுமென்ற ஆசைதான் அவனுக்குப் பலமாக இருந்தது.—மத்தேயு 4:8, 9; யாக்கோபு 1:13, 14-ஐ வாசியுங்கள்.
மனிதர்கள்மீது பிசாசு எப்படிச் செல்வாக்கு செலுத்திவருகிறான்? அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டுமா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள் பைபிளில் உள்ளன. (w13-E 02/01)