‘சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்’
“கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானம் பண்ணுங்கள்.”—ரோமர் 12:18, Nw.
1, 2. மனிதன் தரும் சமாதானம் நிலைக்காமல் போவதற்கு சில காரணங்கள் யாவை?
உறுதியற்ற அஸ்திவாரமும், பழுதடைந்த உத்தரமும், தொங்கும் கூரையும் கொண்ட ஒரு வீட்டை கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த வீட்டில் குடி புகுந்து, அங்கு வாழ விரும்புவீர்களா? அநேகமாய் விரும்பமாட்டீர்கள். அந்த வீட்டிற்கு புதிதாக பெயிண்ட் அடித்தாலும், அதன் கட்டமைப்பு பலவீனமானது என்ற உண்மை மாறிவிடாது. என்றாவது ஒரு நாள் அது விழுந்துவிடும்.
2 இந்த உலகம் தரும் சமாதானமும் இந்த வீட்டைப் போலத்தான். அது உறுதியற்ற ஆதாரத்தின் மீதே, அதாவது “இரட்சிக்கத் திராணியில்லாத” மனிதனுடைய வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் மீதே சார்ந்திருக்கிறது. (சங்கீதம் 146:3) சரித்திரத்தின் பக்கங்களை புரட்டினாலே இன, குல மற்றும் தேசங்கள் இடையே ஓயாமல் நிகழ்ந்த சண்டைகளை தெளிவாக காணலாம். சிறிது காலத்திற்கு சமாதானம் நிலவியது உண்மையே, ஆனால் அது எப்படிப்பட்ட சமாதானம்? போரிடும் இரண்டு தேசங்களில் ஒன்று தோற்றுவிட்டால் அல்லது தொடர்ந்து போரிடுவதில் எந்த பயனும் இல்லை என்பதை இரண்டு தேசங்களுமே உணர்ந்த பிறகு சமாதானம் அறிவிக்கப்பட்டால், அது நிலையான சமாதானமா? அந்த போருக்கு காரணமாயிருந்த வெறுப்பும், சந்தேகமும், பொறாமையும் இன்னும் நீங்காமலே இருக்குமல்லவா? பகைமையை ‘பூசி மறைக்கும்,’ போலி சமாதானம் நிலையான ஒன்றல்ல.—எசேக்கியேல் 13:10.
3. கடவுளுடைய மக்கள் அனுபவிக்கும் சமாதானம் மனிதன் தரும் எந்த வகையான சமாதானத்திலிருந்தும் ஏன் வேறுபடுகிறது?
3 என்றாலும், யுத்தத்தால் சீரழிந்த இந்த உலகிலும் உண்மையான சமாதானம் நிலவுகிறது. எங்கே? இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் உண்மை கிறிஸ்தவர்கள் மத்தியில். இவர்கள் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அவருடைய வாழ்க்கைப் பாணியை பின்பற்ற கடினமாய் முயலுகின்றனர். (1 கொரிந்தியர் 11:1; 1 பேதுரு 2:21) பல்வேறு இனங்கள், சமூக நிலைகள், தேசங்கள் ஆகியவற்றை சேர்ந்த உண்மை கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் சமாதானம் நிஜமானது; ஏனெனில், அவர்கள் கடவுளோடு கொண்டுள்ள சமாதான உறவிலிருந்து அது பிறக்கிறது. அந்த உறவும் இயேசு கிறிஸ்துவின் கிரய பலியில் அவர்கள் வைக்கும் விசுவாசத்தின் அடிப்படையிலானது. அவர்கள் அனுபவிக்கும் சமாதானம் கடவுள் தரும் பரிசாகும், எந்த மனிதனாலும் திட்டமிடப்பட்டதல்ல. (ரோமர் 15:33; எபேசியர் 6:23, 24) அவர்கள் “சமாதானப் பிரபு”வாகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதாலும் “அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய” யெகோவா தேவனை வணங்குவதாலும் அதைப் பெறுகிறார்கள்.—ஏசாயா 9:6; 2 கொரிந்தியர் 13:11.
4. ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு சமாதானத்தை “பின்தொடர” முடியும்?
4 அபூரண மனிதர்கள் மத்தியில் சமாதானம் தானாகவே வந்துவிடாது. அதனால்தான், ஒவ்வொரு கிறிஸ்தவனும் “சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” என பேதுரு கூறினார். (1 பேதுரு 3:11) அதை நாம் எப்படி செய்யலாம்? பதிலைக் காண ஒரு பூர்வீக தீர்க்கதரிசனத்தை கவனிக்கலாம். ஏசாயா மூலம் யெகோவா கூறியதாவது: “உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் [“யெகோவாவால்,” NW] போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.” (ஏசாயா 54:13; பிலிப்பியர் 4:9) ஆம், யெகோவாவின் போதனைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கே உண்மையான சமாதானம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, “அன்பு, சந்தோஷம், . . . நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவற்றோடு சமாதானமும் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்றாகும். (கலாத்தியர் 5:22, 23) ஆகவே, அன்பற்ற, சந்தோஷமற்ற, பொறுமையற்ற, தயவற்ற, நற்குணமற்ற, விசுவாசமற்ற, சாந்தமற்ற அல்லது இச்சையடக்கமற்ற நபரால் அதை அனுபவிக்க முடியாது.
“எல்லா மனுஷரோடும் சமாதானம் பண்ணுங்கள்”
5, 6. (அ) சமாதானமாய் இருப்பதற்கும் சமாதானம் பண்ணுவதற்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது? (ஆ) யாருடன் சமாதானம் பண்ண கிறிஸ்தவர்கள் முயலுகிறார்கள்?
5 சமாதானம் என்பது குழப்பமில்லாத, அமைதியான நிலை என விளக்கப்படுகிறது. இந்த விளக்கம், சச்சரவு இல்லாத பல சூழ்நிலைகளை குறிக்கும். ஏன், மரித்தவரும்கூட சமாதானமாய் இருப்பதாக சொல்கிறோமே! ஆனால், உண்மையான சமாதானத்தை அனுபவிக்க ஒருவர் சமாதானமான மனநிலை கொண்டிருந்தால் மட்டுமே போதாது. “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என தமது மலைப் பிரசங்கத்தில் இயேசு கூறினார். (மத்தேயு 5:9) எதிர்காலத்தில், தேவனுடைய ஆவிக்குரிய புத்திரர் ஆகி, பரலோகத்தில் அழிவில்லாத வாழ்க்கை பெறும் நம்பிக்கை உடையவர்களிடம் இயேசு பேசிக்கொண்டிருந்தார். (யோவான் 1:12; ரோமர் 8:14-17) கடைசியில், பரலோகத்திற்கு செல்லும் நம்பிக்கை இல்லாத, மற்ற உண்மையுள்ளவர்கள் அனைவரும்கூட “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீன”த்தை பெறுவார்கள். (ரோமர் 8:20) சமாதானம் பண்ணுகிறவர்களுக்கு மட்டுமே அந்த நம்பிக்கை உள்ளது. அநேக சமயங்களில், சமாதானமாய் இருப்பதற்கும் சமாதானம் பண்ணுவதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. பைபிளின்படி சமாதானம் பண்ணுவது என்றால், ஆர்வத்தோடு சமாதானத்தை முன்னேற்றுவிப்பது, சில சமயங்களில் சமாதானம் இல்லாத இடங்களில் சமாதானத்தை உண்டுபண்ணுவதாகும்.
6 இதை மனதில் வைத்து, அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு கொடுத்த ஆலோசனையை சிந்தித்துப் பாருங்கள்: “கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானம் பண்ணுங்கள்.” (ரோமர் 12:18, NW) அமைதியாக இருப்பது நல்லது என்றாலும், வெறுமனே அமைதியான மனநிலையை காத்துக்கொள்ள வேண்டும் என பவுல் ரோமர்களுக்கு சொல்லவில்லை. சமாதானம் பண்ணும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். யாரோடு? “எல்லா மனுஷரோடும்,” அதாவது குடும்ப அங்கத்தினர்கள், உடன் கிறிஸ்தவர்கள், அவர்களுடைய நம்பிக்கைகளை ஏற்காத மற்றவர்கள் ஆகிய அனைவரோடும். ‘அவர்களாலான மட்டும்’ மற்றவர்களோடு சமாதானம் பண்ணும்படி ரோமர்களை உற்சாகப்படுத்தினார். சமாதானம் பண்ணுவதற்காக அவர்களுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கும்படி அவர் விரும்பவில்லை. தேவையின்றி மற்றவர்களை எதிர்ப்பதற்கு பதிலாக சமாதானத்தை முன்னேற்றுவிக்கும் நோக்கத்தோடு அவர்களை அணுக வேண்டும். சபைக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லாரோடும் கிறிஸ்தவர்கள் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும். (கலாத்தியர் 6:10) இதற்கிசைவாகவே பவுல் பின்வருமாறு எழுதினார்: “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:15.
7, 8. தங்களுடைய நம்பிக்கைகளை ஏற்காதவர்களிடம் கிறிஸ்தவர்கள் எவ்வாறு சமாதானம் பண்ணுகிறார்கள், ஏன்?
7 நம்முடைய நம்பிக்கைகளை ஏற்காதவர்களோடும், அவற்றை எதிர்க்கிற ஆட்களோடும்கூட நாம் எப்படி சமாதானம் பண்ண முடியும்? நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்காமல் இருப்பதே ஒரு வழியாகும். உதாரணமாக, சிலரைக் குறிப்பிட கீழ்த்தரமான பதங்களை உபயோகிப்பது சமாதானம் பண்ணுவதாக இருக்காது. சில அமைப்புகளுக்கும் தொகுதியினருக்கும் எதிராக யெகோவா தமது நியாயத்தீர்ப்பை அறிவித்திருக்கிறார் என்பது உண்மையே. ஆனால், ஒரு தனி நபர் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டதை போல அவரைப் பற்றி பேச நமக்கு உரிமையில்லை. நாம் யாரையும், நம் எதிரிகளைக்கூட நியாயந்தீர்ப்பதில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதைப் பற்றி கிரேத்தாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனை கூறும்படி தீத்துவிற்கு சொன்ன பிறகு, “ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும்” அவர்களுக்கு நினைப்பூட்டும்படி பவுல் கூறினார்.—தீத்து 3:1, 2.
8 நம்முடைய நம்பிக்கைகளை ஏற்காதவர்களிடம் சமாதானம் பண்ணுவது சத்தியத்தைப் பற்றி நல்ல அபிப்பிராயத்தை அவர்களில் ஏற்படுத்த உகந்த வழியாகும். “நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” நட்புறவுகளை நாம் வளர்த்துக்கொள்ள மாட்டோம். (1 கொரிந்தியர் 15:33) என்றாலும், நாம் நாகரிகமாக நடந்துகொண்டு, அனைவரையும் கண்ணியத்தோடும் மனித நேயத்தோடும் நடத்த வேண்டும். பேதுரு இவ்வாறு எழுதினார்: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.”—1 பேதுரு 2:12.
ஊழியத்தில் சமாதானம் பண்ணுதல்
9, 10. அவிசுவாசிகளோடு சமாதானம் பண்ணுவதில் அப்போஸ்தலன் பவுல் என்ன முன்மாதிரி வைத்தார்?
9 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தைரியத்திற்கு பெயர் பெற்றிருந்தனர். தாங்கள் கூறிய செய்தியின் வலிமையை குறைத்துவிடாமலும், எதிர்ப்பு வந்தபோது மனிதனைக் காட்டிலும் அரசராக கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர். (அப்போஸ்தலர் 4:29, 30; 5:29) என்றாலும், அவர்கள் தைரியத்திற்கும் முரட்டுத்தனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்திருந்தனர். இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜாவுக்கு முன்பு தன் விசுவாசத்தை ஆதரித்து பேசுகையில் பவுல் அவரை அணுகிய விதத்தை கவனியுங்கள். ஏரோது அகிரிப்பா தன் தங்கையான பெர்னீக்கேயாளோடு முறை தகாத உறவு வைத்திருந்தார். ஆனாலும், ஒழுக்க தராதரங்களைப் பற்றி அகிரிப்பாவிற்கு ஆலோசனை கொடுக்க பவுல் முயலவில்லை. மாறாக, அவர்கள் இருவருமே ஒத்துப்போகும் பொதுவான விஷயங்களை குறிப்பிட்டார். அகிரிப்பா யூத முறைமைகளை அறிந்திருந்ததையும் தீர்க்கதரிசிகளை விசுவாசித்ததையும் பவுல் பாராட்டினார்.—அப்போஸ்தலர் 26:2, 3, 27.
10 பவுல், தனக்கு விடுதலை அளிக்க முடிந்தவரை வெறுமனே முகஸ்துதி செய்து பேசிக்கொண்டிருந்தாரா? இல்லை. தான் கொடுத்த ஆலோசனைக்கு இசைவாகவே பவுல் சத்தியத்தை பேசினார். ஏரோது அகிரிப்பாவிடம் அவர் கூறியது எதுவுமே பொய்யல்ல. (எபேசியர் 4:15) ஆனால், பவுல் சமாதானம் பண்ணுகிறவர்; அதோடு ‘எல்லாருக்கும் எல்லாமாகும்’ திறமையையும் அறிந்திருந்தார். (1 கொரிந்தியர் 9:22) இயேசுவைப் பற்றி பிரசங்கிக்க தனக்கிருக்கும் உரிமையை பாதுகாத்துக் கொள்வதே அவருடைய நோக்கமாகும். அவர் திறம்பட்ட போதகராக இருந்ததால், அகிரிப்பாவும் அவரும் ஒத்துப்போகும் பொதுவான விஷயங்களை சொல்லி, பேச ஆரம்பித்தார். இவ்வாறு, அந்த ஒழுக்கங்கெட்ட ராஜா கிறிஸ்தவத்தைப் பற்றி சாதகமான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள உதவினார்.—அப்போஸ்தலர் 26:28-31.
11. நாம் எவ்வாறு ஊழியத்தில் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கலாம்?
11 ஊழியத்தில் நாம் எவ்வாறு சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கலாம்? பவுலைப் போல நாமும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் நாம், “பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்[ல],” அதாவது நம் விசுவாசத்தை தைரியமாக ஆதரித்து பேச வேண்டியிருக்கலாம் என்பது உண்மையே. (பிலிப்பியர் 1:14) ஆனால் பெரும்பாலான சமயங்களில் நற்செய்தியை பிரசங்கிப்பதே நமது முக்கிய நோக்கமாகும். (மத்தேயு 24:14) கடவுளுடைய நோக்கங்கள் பற்றிய சத்தியத்தை ஒருவர் உணர ஆரம்பித்தால் பொய் மத கருத்துக்களை புறக்கணித்துவிட்டு, அசுத்தமான பழக்கங்களிலிருந்து தன்னை சுத்திகரித்துக் கொள்ளுவார். ஆகவே, கூடுமானவரை நமக்கு செவிகொடுப்போரின் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களை பேசுவதே சாலச் சிறந்தது. அவர்களும் நாமும் ஒப்புக்கொள்ளக்கூடிய பொதுவான விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பது நல்லது. சாமர்த்தியத்தோடு அணுகினால் நம் செய்தியை கேட்கக்கூடிய ஒருவரை அனாவசியமாக கோபப்படுத்தினால் நம் முயற்சி வீணாகிவிடும்.—2 கொரிந்தியர் 6:3.
குடும்பத்தில் சமாதானம் பண்ணுகிறவர்கள்
12. குடும்பத்தில் நாம் எந்த விதங்களில் சமாதானம் பண்ணலாம்?
12 திருமணம் செய்பவர்கள் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என பவுல் கூறினார். (1 கொரிந்தியர் 7:28) அவர்கள் பல இன்னல்களை எதிர்ப்படுவார்கள். அதில் ஒன்று, சில தம்பதிகள் மத்தியில் எப்போதாவது எழும் கருத்து வேறுபாடுகளாகும். இவற்றை எப்படி சமாளிப்பது? சமாதானமான முறையில். சமாதானம் பண்ணுபவர், ஒரு சச்சரவு விஸ்வரூபம் எடுப்பதை தடுக்க முயலுவார். எப்படி? முதலாவதாக, தன் நாவை அடக்குவதன் மூலம். புண்படுத்தி, அவமதிக்கும் வார்த்தைகளை கூறுகையில் இந்த சிறிய அவயவம், உண்மையில் “அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.” (யாக்கோபு 3:8) சமாதானம் பண்ணுபவர் தன் நாவை, இடித்து தள்ளுவதற்கு உபயோகிக்காமல் கட்டியெழுப்ப உபயோகிக்கிறார்.—நீதிமொழிகள் 12:18.
13, 14. தவறுதலாக பேசிவிடுகையில் அல்லது உணர்ச்சிகள் சூடுபிடிக்கையில் நாம் எவ்வாறு சமாதானத்தை காத்துக்கொள்ளலாம்?
13 அபூரணராக இருப்பதால் நாம் எல்லாருமே சில சமயங்களில் ஏதாவது சொல்லிவிடுகிறோம், அதற்காக பின்னர் வருத்தப்படுகிறோம். இப்படி ஏதாவது நடந்துவிட்டால் சமாதானம் பண்ணுவதற்கு உடனே நடவடிக்கை எடுங்கள். (நீதிமொழிகள் 19:11; கொலோசெயர் 3:13) ‘வார்த்தைகளைப் பற்றிய விவாதங்களிலும்,’ ‘அற்ப விஷயங்களைப் பற்றிய கடும் வாக்குவாதங்களிலும்’ சிக்கிக்கொள்வதை தவிருங்கள். (1 தீமோத்தேயு 6:4, 5, NW) மாறாக, சூழ்நிலையை நன்கு அலசி ஆராய்ந்து, உங்கள் துணையின் உள்ளார்ந்த உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முயலுங்கள். உங்கள் துணை கடுமையான வார்த்தைகளை பேசினால் நீங்களும் அவ்வாறே பேசாதிருங்கள். “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்” என்பதை நினைவில் வையுங்கள்.—நீதிமொழிகள் 15:1.
14 சில சமயங்களில், “விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு” என கூறும் நீதிமொழிகள் 17:14-ல் உள்ள புத்திமதியை நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கலாம். அனல் பறக்கும் அந்த சூழ்நிலையைவிட்டு பின்வாங்குங்கள். பின்னர், உணர்ச்சிகள் தணிந்த பிறகு அந்தப் பிரச்சினையை சமாதானமாக தீர்க்க முடியலாம். சில சந்தர்ப்பங்களில், முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ கண்காணியின் உதவியை நாடுவது ஏற்றதாக இருக்கலாம். திருமணத்தில் சமாதானம் குலைகையில் அனுபவமிக்க, கரிசனையுள்ள இந்த ஆண்கள் புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் உதவியாக இருக்கலாம்.—ஏசாயா 32:1, 2.
சபையில் சமாதானம் பண்ணுகிறவர்கள்
15. யாக்கோபு கூறுகிறபடி சில கிறிஸ்தவர்கள் மத்தியில் என்ன கெட்ட மனப்பான்மை வளர்ந்திருந்தது, அது ஏன் ‘லெளகிக சம்பந்தமானது, மிருகத்தனமானது, பேய்த்தனமானது’?
15 வருத்தகரமாக, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் சிலர் சமாதானத்திற்கு நேர் எதிரான குணங்களாகிய பொறாமையையும் போட்டி மனப்பான்மையையும் காண்பித்தனர். யாக்கோபு இவ்வாறு கூறினார்: “இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கி வருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்துக்குரியதும் [“மிருகத்தனமானதும்,” NW], பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் [“பொறாமையும் போட்டி மனப்பான்மையும்,” NW] எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.” (யாக்கோபு 3:14-16) “போட்டி மனப்பான்மை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சுயநல பேராசையையும் பதவியைப் பெற சூழ்ச்சி செய்வதையும் குறிப்பதாக சிலர் நம்புகின்றனர். நல்ல காரணத்துடன்தான் யாக்கோபு அதை ‘லெளகிக சம்பந்தமானது, மிருகத்தனமானது, பேய்த்தனமானது’ என்று கூறுகிறார். சரித்திரம் முழுவதிலும் உலக தலைவர்கள் சண்டையிடும் மூர்க்க மிருகங்களைப் போல ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டிருக்கின்றனர். போட்டி போடுவது உண்மையில் ‘லெளகிக சம்பந்தமானதும், மிருகத்தனமானதும்’ ஆகும். அது ‘பேய்த்தனமானதும்கூட.’ ஏனெனில், யெகோவா தேவனை எதிர்த்த, அதிகார வெறிபிடித்த தேவதூதன்தான் நயவஞ்சகமான இந்த குணத்தை முதன்முதலில் வெளிக்காட்டினான். இவனே பேய்களின் தலைவனாகிய சாத்தான் ஆனான்.
16. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் சிலர் சாத்தானைப் போன்ற மனப்பான்மையை எவ்வாறு காண்பித்தனர்?
16 போட்டியிடும் மனப்பான்மை வளருவதை தவிர்க்கும்படி யாக்கோபு கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். ஏனெனில் அது சமாதானத்தை ஏற்படுத்தாது. அவர் எழுதியதாவது: “உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா?” (யாக்கோபு 4:1, பொ.மொ.) இங்கே “சிற்றின்ப நாட்டங்கள்” என்பது பொருட்களுக்கான பேராசையை அல்லது முதன்மை நிலை, ஆதிக்கம் அல்லது செல்வாக்கிற்கான விருப்பத்தை குறிக்கலாம். தமது உண்மையுள்ள ஊழியர் ‘சிறியவராயிருப்பர்’ என இயேசு கூறினார்; இதற்கு பதிலாக, சபையிலிருந்த சிலர் சாத்தானைப் போலவே முதன்மையாயிருக்க விரும்பியதாக தோன்றுகிறது. (லூக்கா 9:48) அப்படிப்பட்ட மனப்பான்மை சபையின் சமாதானத்தை கெடுத்துவிடலாம்.
17. இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு சபையில் சமாதானம் பண்ணலாம்?
17 இன்று நாமும் பொருளாசை, பொறாமை அல்லது தற்பெருமை மிக்க பேராசை போன்ற மனப்பான்மைகளை தவிர்க்க வேண்டும். நாம் உண்மையில் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருந்தால், சபையிலுள்ள சிலர் ஏதோ சில விஷயங்களில் நம்மைவிட அதிக திறம்பட்டவர்களாக இருக்கையில் நாம் கீழான நிலையில் இருப்பதைப் பற்றி வருத்தப்படவும் மாட்டோம், அவர்களுடைய உள்நோக்கங்களை சந்தேகித்து மற்றவர்கள் முன்பாக அவர்களுடைய நற்பெயரை கெடுக்கவும் மாட்டோம். நமது திறமையினாலும் அறிவினாலும்தான் சபை வளருகிறது என்பதைப் போல நம்மிடம் உள்ள விசேஷித்த திறமையை உபயோகித்து மற்றவர்களை விஞ்சிவிட முயல மாட்டோம். அப்படிப்பட்ட மனப்பான்மை சமாதானத்தை அல்ல பிரிவினையையே உண்டாக்கும். சமாதானம் பண்ணுகிறவர்கள் தங்கள் திறமைகளை பகட்டாக காட்டிக்கொள்ள மாட்டார்கள், ஆனால் தங்கள் சகோதரர்களுக்கு சேவை செய்யவும் யெகோவாவுக்கு மகிமை கொண்டுவரவும் அவற்றை தன்னடக்கத்துடன் உபயோகிப்பார்கள். முடிவில், திறமையல்ல ஆனால் அன்பே ஓர் உண்மை கிறிஸ்தவரை அடையாளம் காட்டுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர்.—யோவான் 13:35; 1 கொரிந்தியர் 13:1-3.
‘சமாதானம் உங்கள் கண்காணியாக’
18. மூப்பர்கள் தங்கள் மத்தியில் எவ்வாறு சமாதானத்தை முன்னேற்றுவிக்கின்றனர்?
18 சமாதானம் பண்ணுவதில் சபை மூப்பர்கள் முன்னின்று வழிநடத்துகின்றனர். தம் மக்களைக் குறித்து யெகோவா இவ்வாறு முன்னுரைத்தார்: “உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.” (ஏசாயா 60:17, பொ.மொ.) இந்த தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக கிறிஸ்தவ மேய்ப்பர்களாக சேவிப்பவர்கள் தங்கள் மத்தியிலும் மந்தையின் மத்தியிலும் சமாதானத்தை முன்னேற்றுவிக்க முயலுகின்றனர். சமாதானமும் நியாயமுள்ளதுமான ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ உபயோகித்து மூப்பர்கள் தங்கள் மத்தியில் சமாதானத்தை காத்துக்கொள்ளலாம். (யாக்கோபு 3:17) ஒரு சபையின் மூப்பர்கள் பல்வேறு பின்னணியும் வாழ்க்கை அனுபவங்களும் பெற்றவர்களாய் இருப்பதால் அவர்கள் மத்தியில் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் எழும்பும். அப்படியென்றால் அவர்களுக்கிடையில் சமாதானம் இல்லை என்று அர்த்தமாகுமா? அந்த சூழ்நிலையை அவர்கள் சரியாக சமாளித்தால் அவ்வாறு அர்த்தமாகாது. சமாதானம் பண்ணுகிறவர்கள் அடக்கத்தோடு தங்கள் எண்ணங்களை கூறிவிட்டு, மற்றவர்கள் பேசுகையில் மரியாதையோடு கேட்பர். சமாதானம் பண்ணுகிறவர், தான் சொன்னபடிதான் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு பதிலாக தன் சகோதரனின் கருத்தை ஜெபத்தோடு சிந்தித்துப் பார்ப்பார். பைபிள் நியமம் எதுவும் மீறப்படவில்லை என்றால் பல்வேறு கருத்துகளுக்கு இடமுண்டு. அவர் கூறியதை மற்றவர்கள் ஒப்புக்கொள்ளாதபோது, சமாதானம் பண்ணுகிறவர் பெரும்பான்மையினரின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அதை ஆதரிப்பார். இவ்வாறு தன் நியாயத்தன்மையை வெளிக்காட்டுவார். (1 தீமோத்தேயு 3:2, 3, NW) ஒரு விஷயத்தை தன் விருப்பப்படி செய்வதைவிட சமாதானத்தை காத்துக்கொள்வதே அதிமுக்கியம் என்பதை அனுபவமிக்க கண்காணிகள் அறிந்திருக்கின்றனர்.
19. மூப்பர்கள் சபைக்குள் சமாதானம் பண்ணுகிறவர்களாக எவ்வாறு சேவிக்கின்றனர்?
19 மூப்பர்கள் மந்தையில் உள்ளவர்களை ஆதரித்து, அவர்களுடைய முயற்சிகளை அனாவசியமாக குறைகூறாமல் இருப்பதன் மூலம் அவர்களோடு சமாதானத்தை காத்துக்கொள்கின்றனர். சில சமயங்களில் சிலரை சீர்பொருந்த பண்ண வேண்டியிருக்கலாம் என்பது உண்மையே. (கலாத்தியர் 6:1) ஆனால் சிட்சிப்பது கிறிஸ்தவ கண்காணியின் முக்கிய வேலை அல்ல. அவர் அடிக்கடி பாராட்டு தெரிவிக்கிறார். அன்புள்ள மூப்பர்கள் மற்றவர்களின் நல்ல குணங்களை பார்க்கவே முயலுகின்றனர். உடன் கிறிஸ்தவர்களின் கடின உழைப்பை கண்காணிகள் போற்றுகின்றனர். தங்கள் உடன் விசுவாசிகள் தங்களாலான மிகச் சிறந்ததையே செய்கின்றனர் என அவர்களில் நம்பிக்கை வைக்கின்றனர்.—2 கொரிந்தியர் 2:3, 4.
20. அனைவருமே சமாதானம் பண்ணுகிறவர்களாக இருந்தால் சபை எவ்வாறு பயனடையும்?
20 ஆகவே, குடும்பத்தில், சபையில், நமது நம்பிக்கைகளை ஏற்காதவர்களிடம் தொடர்புகொள்கையில் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க முயலுகிறோம், சமாதானத்திற்காக உழைக்கிறோம். சமாதானத்தை வளர்ப்பதில் நாம் ஊக்கமாய் செயல்பட்டால் சபையின் சந்தோஷத்தை அதிகரிப்போம். அதே சமயம், நாம் பல வழிகளில் பாதுகாக்கப்பட்டு, பலமடைவோம். அதைத்தான் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப் போகிறோம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• சமாதானம் பண்ணுவது என்றால் என்ன?
• சாட்சிகள் அல்லாதவர்களோடு தொடர்புகொள்கையில் நாம் எவ்வாறு சமாதானம் பண்ணலாம்?
• குடும்பத்தில் சமாதானத்தை வளர்க்க சில வழிகள் யாவை?
• மூப்பர்கள் சபையில் எவ்வாறு சமாதானத்தை முன்னேற்றுவிக்கலாம்?
[பக்கம் 9-ன் படம்]
சமாதானம் பண்ணுகிறவர்கள், தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ளமாட்டார்கள்
[பக்கம் 10-ன் படங்கள்]
ஊழியத்தில், வீட்டில், சபையில் கிறிஸ்தவர்கள் சமாதானம் பண்ணுகிறவர்களே