யெகோவாவின் ஆசீர்வாதம் உங்களைப் பின்தொடருமா?
“நீ உன் கடவுளாகிய யெகோவாவின் சத்தத்திற்கு தொடர்ந்து செவிகொடுப்பதால், இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் உன்மேல் வரும், உன்னைப் பின்தொடரும்.”—உபாகமம் 28:2, Nw.
1. இஸ்ரவேலர் ஆசீர்வாதங்களையோ சாபங்களையோ பெறுவதை எது தீர்மானிக்க இருந்தது?
வனாந்தரத்தில் தங்கள் 40 ஆண்டு கால பயணம் முடிவடைய இருந்த சமயத்தில் இஸ்ரவேலர் மோவாபின் சமவெளியில் பாளயம் இறங்கியிருந்தார்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அவர்களுக்கு முன்பாக இருந்தது. இந்த சமயத்தில்தான், அடுத்தடுத்து ஆசீர்வாதங்களும் சாபங்களும் குறிப்பிடப்படுகிற உபாகம புத்தகத்தை மோசே எழுதினார். இஸ்ரவேலர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன்மூலம் ‘தொடர்ந்து அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்தால்,’ ஆசீர்வாதங்கள் அவர்களை “பின்தொடரும்.” அவர்களை தம்முடைய ‘விசேஷ சொத்தாக’ யெகோவா நேசித்தார், அவர்கள் சார்பாக தமது வல்லமையை வெளிக்காட்ட விரும்பினார். ஆனால் அவர்கள் அவருக்கு தொடர்ந்து செவிசாய்க்காமல் போனால், சாபங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வருவதும் உறுதி.—உபாகமம் 8:10-14; 26:18; 28:2, 15; NW.
2. உபாகமம் 28:2-ல், ‘தொடர்ந்து செவிகொடுப்பது,’ ‘பின்தொடர்வது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வினைச்சொற்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
2 உபாகமம் 28:2-ல் ‘தொடர்ந்து செவிகொடுத்தல்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கான எபிரெய வினைச்சொல், தொடர்ச்சியான செயலைக் குறிக்கிறது. யெகோவாவின் ஜனங்கள் எப்பொழுதாவது மாத்திரமே செவிசாய்ப்பவர்களாக இருக்கக்கூடாது; எப்போதும் எல்லாவற்றிலும் அவருக்கு செவிசாய்ப்பதையே வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கடவுளுடைய ஆசீர்வாதங்கள் அவர்களைப் பின்தொடரும். “பின்தொடரும்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கான எபிரெய வினைச்சொல், வேட்டையாடுவதுடன் சம்பந்தப்பட்ட வார்த்தை; “எட்டிப் பிடிப்பது” அல்லது “அடைவது” என பெரும்பாலும் அர்த்தப்படுத்துகிறது.
3. நாம் எப்படி யோசுவாவைப் போல் இருக்கலாம், இது ஏன் மிகவும் முக்கியம்?
3 இஸ்ரவேலரை வழிநடத்தி சென்ற யோசுவா, யெகோவாவுக்குச் செவிசாய்ப்பதை தெரிந்துகொண்டார். ஆகையால் ஆசீர்வாதங்களை அனுபவித்தார். “யாரைத்தான் சேவிப்பது என்று இந்நாளிலேயே தெரிந்துகொள்ளுங்கள். . . . நானும் என் வீட்டாருமோ யெகோவாவையே சேவிப்போம்” என யோசுவா கூறினார். இதைக் கேட்ட ஜனங்கள், “வேறே தேவர்களைச் சேவிக்கும்படி யெகோவாவைவிட்டு விலகுவது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக” என பதிலளித்தார்கள். (யோசுவா 24:15, 16, தி.மொ.) யோசுவாவின் சிறந்த மனோபாவத்தால், அந்த சந்ததியாரில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு சிலாக்கியம் பெற்ற சிலரில் அவரும் ஒருவர். இன்று நாம் அதிக மேம்பட்ட வாக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய பரதீஸிய பூமியில் அடியெடுத்து வைக்கும் நிலையில் இருக்கிறோம். கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்ற அனைவருக்கும் யோசுவாவின் நாளில் இருந்ததைக் காட்டிலும் மகத்தான ஆசீர்வாதங்கள் அப்பூமியில் காத்திருக்கின்றன. அந்த ஆசீர்வாதங்கள் உங்களைப் பின்தொடருமா? நீங்கள் தொடர்ந்து யெகோவாவுக்குச் செவிசாய்த்து வந்தால் நிச்சயம் அவை பின்தொடரும். அவ்வாறு செவிசாய்ப்பதற்கான உங்கள் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பதற்கு உதவும் பூர்வ இஸ்ரவேலரின் சரித்திரத்தையும், அதோடுகூட நல்ல முன்மாதிரிகளாக திகழ்ந்த தனிப்பட்டவர்களையும் பற்றி கவனியுங்கள்.—ரோமர் 15:4.
ஆசீர்வாதமா சாபமா?
4. சாலொமோனின் ஜெபத்திற்கு பதிலளிக்கையில், கடவுள் அவருக்கு எதை அளித்தார், அத்தகைய ஆசீர்வாதங்களைக் குறித்து நாம் எப்படி உணர வேண்டும்?
4 ஏறக்குறைய சாலொமோன் ராஜாவின் ஆட்சி காலம் முழுவதிலும் இஸ்ரவேலர் யெகோவா அருளின அபரிமிதமான ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள். பாதுகாப்பையும் நன்மையானவற்றையும் ஏராளமாக அனுபவித்து மகிழ்ந்தார்கள். (1 இராஜாக்கள் 4:25, NW) சாலொமோனின் செல்வசெழிப்பு வெகு பிரபலமானதாக இருந்தபோதிலும், பொன்னையும் பொருளையும் அவர் கடவுளிடம் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, இளைஞராகவும் அனுபவமில்லாதவராகவும் இருக்கையிலேயே கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்காக அவர் ஜெபித்திருந்தார். ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அருளுவதன் மூலம் இந்த வேண்டுதலுக்கு யெகோவா பதிலளித்தார். இது, நன்மை தீமை இன்னதென்று பகுத்தறிந்து, ஜனங்களை சரியான முறையில் நியாயந்தீர்க்க சாலொமோனுக்கு உதவியது. கடவுள் அவருக்கு செல்வத்தையும் மகிமையையும் அளித்தார்; ஆனாலும் இளம் சாலொமோன் ஆவிக்குரிய செல்வங்களின் ஈடிணையற்ற மதிப்பை உயர்வாய்க் கருதினார். (1 இராஜாக்கள் 3:9-13) பொருள் சம்பந்தமாக நம்மிடம் ஏராளம் இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெற்று ஆவிக்குரிய விதத்தில் செல்வந்தர்களாக இருந்தால் அதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்!
5. யெகோவாவுக்கு தொடர்ந்து செவிசாய்க்க இஸ்ரவேலிலும் யூதாவிலும் உள்ளவர்கள் தவறியபோது என்ன நடந்தது?
5 யெகோவாவின் ஆசீர்வாதத்திற்கு இஸ்ரவேலர் போற்றுதல் காட்ட தவறினார்கள். அவருக்கு தொடர்ந்து செவிகொடுக்க தவறியதால், முன்னறிவிக்கப்பட்ட சாபங்கள் அவர்களை பின்தொடர்ந்தன. இதன் விளைவாக சத்துருக்கள் அவர்களை மேற்கொண்டார்கள், இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் நாடுகடத்தப்பட்டார்கள். (உபாகமம் 28:36; 2 இராஜாக்கள் 17:22, 23; 2 நாளாகமம் 36:17-20) யெகோவாவுக்கு தொடர்ந்து செவிசாய்ப்பவர்களுக்கு மட்டுமே கடவுளுடைய ஆசீர்வாதம் பின்தொடரும் என்பதை அத்தகைய துன்பத்திலிருந்து கடவுளுடைய ஜனங்கள் கற்றுக்கொண்டார்களா? பொ.ச.மு. 537-ல் தாயகம் திரும்பின யூத மீதிபேருக்கு, தாங்கள் ‘ஞான இருதயமுள்ளவர்கள்’ என்பதைக் காட்ட வாய்ப்பிருந்தது; தொடர்ந்து கடவுளுக்குச் செவிசாய்க்க வேண்டியதன் அவசியத்தை இப்போது புரிந்துகொண்டிருந்தார்கள்.—சங்கீதம் 90:12.
6. (அ) தம்முடைய ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி, ஆகாயையும் சகரியாவையும் யெகோவா ஏன் அனுப்பினார்? (ஆ) ஆகாயின் மூலமாய் அறிவிக்கப்பட்ட கடவுளுடைய செய்தியில் என்ன நியமம் தெளிவாக்கப்பட்டது?
6 தாயகம் திரும்பிய யூதர்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டி, எருசலேமிலிருந்த ஆலயத்தின் கட்டுமான பணியைத் தொடங்கினார்கள். ஆனால் கடும் எதிர்ப்பு தலைதூக்கியபோது, அவர்களுடைய ஆர்வம் தணிய ஆரம்பித்து கடைசியில் கட்டுமான பணி நின்றேவிட்டது. (எஸ்றா 3:1-3, 10; 4:1-4, 23, 24) மேலும், அவர்கள் சொந்த சௌகரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். எனவே தம்முடைய ஜனங்கள் மீண்டும் வைராக்கியத்துடன் உண்மை வணக்கத்தில் ஈடுபடும்படி தூண்டுவிக்க தம்முடைய தீர்க்கதரிசிகளாகிய ஆகாயையும் சகரியாவையும் கடவுள் அனுப்பினார். “[வணக்கத்துக்குரிய] இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப் பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? . . . உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; . . . கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்” என ஆகாயின் மூலம் யெகோவா சொன்னார். (ஆகாய் 1:4-6) பொருளாதார ஆதாயங்களுக்காக ஆவிக்குரிய அக்கறைகளைத் தியாகம் செய்வது யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு வழிநடத்தாது.—லூக்கா 12:15-21.
7. “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்” என்று யெகோவா ஏன் அந்த யூதர்களுக்குச் சொன்னார்?
7 எதிர்ப்பின் மத்தியிலும் கடவுளுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்தால் மட்டுமே, மழை, பலன்தரும் பருவ காலங்கள் ஆகியவற்றின் வடிவில் கடவுளுடைய ஆசீர்வாதங்கள் தங்களை பின்தொடரும் என்பதை அன்றாட காரியங்களில் மூழ்கிவிட்டதால் யூதர்கள் மறந்துவிட்டிருந்தனர். (ஆகாய் 1:9-11) ஆகையால், “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்” என்ற அறிவுரை எவ்வளவு பொருத்தமாக இருந்தது! (ஆகாய் 1:7) சொல்லப்போனால், யெகோவா அவர்களிடம் சொன்னதெல்லாம் இதுதான்: ‘சிந்தியுங்கள்! வயல்களில் உங்கள் பயனற்ற உழைப்புக்கும், வணக்கத்திற்குரிய என் வீட்டின் பாழான நிலைமைக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ளுங்கள்.’ ஒருவழியாக, யெகோவாவின் தீர்க்கதரிசிகள் பேசிய ஏவப்பட்ட வார்த்தைகள் செவிசாய்த்தவர்களின் இருதயத்தை எட்டின. அந்த ஜனங்கள் ஆலய கட்டுமான பணியை மீண்டும் தொடங்கி பொ.ச.மு. 515-ல் கட்டி முடித்தார்கள்.
8. மல்கியாவின் நாளில் யூதர்களுக்கு யெகோவா என்ன அறிவுரை கொடுத்தார், ஏன்?
8 பின்னால், தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் நாட்களில் யூதர்கள் மறுபடியுமாக ஆவிக்குரிய விதத்தில் தடுமாற தொடங்கினார்கள், கடவுளுக்கு ஏற்கத்தகாத பலிகளையும்கூட செலுத்தினார்கள். (மல்கியா 1:6-8) ஆகையால், தங்களுடைய விளைச்சலின் தசமபாகங்களை தம்முடைய பண்டசாலைக்குள் கொண்டுவரவும், தாம் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமல் போகுமட்டும் அவர்கள்மேல் ஆசீர்வாதத்தை அருளுவாரா மாட்டாரா என தம்மை சோதித்துப் பார்க்கவும் யெகோவா அவர்களுக்கு அறிவுரை கூறினார். (மல்கியா 3:10) அவர்கள் மட்டும் தொடர்ந்து கடவுளுக்கு செவிசாய்த்தால் அவரே அபரிமிதமாக கொடுக்கும் காரியங்களுக்காக அந்த யூதர் அப்படி கடுமையாய் உழைத்தது எவ்வளவு முட்டாள்தனம்!—2 நாளாகமம் 31:10.
9. பைபிள் பதிவிலுள்ள எந்த மூவரின் வாழ்க்கைகளை நாம் ஆராய்வோம்?
9 இஸ்ரவேலரின் தேசிய சரித்திரத்தோடு, அநேக தனிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் பைபிள் பதிவு செய்து வைத்திருக்கிறது; அவர்கள் யெகோவாவுக்குத் தொடர்ந்து செவிசாய்த்தார்களா இல்லையா என்பதைப் பொருத்து அவர்கள் ஆசீர்வாதங்களையோ சாபங்களையோ பெற்றதைப் பற்றி அது கூறுகிறது. இவர்களில் மூவரான போவாஸ், நாபால், அன்னாள் ஆகியோரிடமிருந்து நாம் எதை கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம். இதன் சம்பந்தமாக, ரூத் புத்தகத்தையும், அதோடு 1 சாமுவேல் 1:1–2:21, 1 சாமுவேல் 25:2-42 ஆகிய அதிகாரங்களையும் நீங்கள் வாசிக்க விரும்பலாம்.
போவாஸ் கடவுளுக்குச் செவிசாய்த்தார்
10. போவாஸ், நாபால் ஆகிய இருவருக்கும் பொதுவாக இருந்த சில காரியங்கள் யாவை?
10 போவாஸும் நாபாலும் ஒரே காலப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இராதபோதிலும், இருவருக்கும் பொதுவான சில காரியங்கள் இருந்தன. உதாரணமாக, இருவரும் யூத தேசத்தில் வாழ்ந்தவர்கள். வசதிபடைத்த நில உரிமையாளர்கள்; தேவையிலிருந்த ஒருவருக்கு அன்பு கலந்த இரக்கத்தைக் காட்ட விசேஷித்த வாய்ப்பை இருவருமே பெற்றிருந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு இடையே இவை மட்டுமே பொதுவானவையாய் இருந்தன.
11. யெகோவாவுக்குத் தொடர்ந்து செவிசாய்த்ததை போவாஸ் எவ்வாறு காட்டினார்?
11 இஸ்ரவேலை நியாயாதிபதிகள் நியாயம் தீர்த்துவந்த காலப்பகுதியில் போவாஸ் வாழ்ந்தார். அவர் மற்றவர்களை மரியாதையுடன் நடத்தினார், அவருடைய அறுவடைக்காரர்கள் அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். (ரூத் 2:4) நியாயப்பிரமாணத்திற்கு இசைய, தன் வயலில் அறுவடையின்போது சிந்தப்படும் கதிர்கள் ஏழை எளியவர்களுக்காக விடப்படும்படி போவாஸ் பார்த்துக்கொண்டார். (லேவியராகமம் 19:9, 10) ரூத்தையும் நகோமியையும் பற்றி அறிந்தபோதும், வயதான தன் மாமியாரின் தேவைகளை ரூத் கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொண்டதை பார்த்தபோதும் போவாஸ் என்ன செய்தார்? ரூத்துக்கு விசேஷ சலுகை அளித்தார், சிந்திய கதிர்களை தன் வயலிலிருந்து சேகரித்துக் கொண்டு போக அவளை அனுமதிக்கும்படி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டார். யெகோவாவுக்குச் செவிசாய்க்கும் ஆவிக்குரிய மனம் படைத்தவர் என்பதை தன் சொல்லிலும் அன்பான செயலிலும் போவாஸ் காட்டினார். ஆகையால் அவர் கடவுளுடைய தயவையும் அங்கீகாரத்தையும் பெற்றார்.—லேவியராகமம் 19:18; ரூத் 2:5-16.
12, 13. (அ) மீட்டுக்கொள்வதற்கான யெகோவாவின் சட்டத்திற்கு போவாஸ் எவ்வாறு ஆழ்ந்த மரியாதை காட்டினார்? (ஆ) கடவுளிடமிருந்து என்ன ஆசீர்வாதங்கள் போவாஸை பின்தொடர்ந்தன?
12 மீட்டுக்கொள்வதற்கான கடவுளுடைய சட்டத்தை மதித்து போவாஸ் தன்னலமற்ற விதத்தில் நடந்தார்; அவர் தொடர்ந்து யெகோவாவுக்குச் செவிசாய்த்ததற்கு குறிப்பிடத்தக்க பெரும் அத்தாட்சியாக இது இருந்தது. இறந்துவிட்ட தன் உறவினராகிய நகோமியின் கணவர் எலிமெலேக்கின் சுதந்தரம், எலிமெலேக்கின் குடும்பத்தைவிட்டு கைமாறாதிருக்க தன்னால் முடிந்ததையெல்லாம் போவாஸ் செய்தார். ‘மைத்துனர் விவாகத்தின்’ மூலம் ஒரு விதவை தன் மரித்த கணவனின் நெருங்கிய உறவினனை விவாகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்களுக்குப் பிறக்கும் மகன் அந்தச் சுதந்தரத்தைக் காக்க முடியும். (உபாகமம் 25:5-10, NW; லேவியராகமம் 25:47-49) பிள்ளை பெறும் வயதைத் தாண்டிவிட்ட நகோமிக்குப் பதிலாக ரூத் விவாகம் செய்துகொள்ள முன்வந்தாள். எலிமெலேக்கிற்கு மிகவும் நெருங்கிய உறவினன் ஒருவன் நகோமிக்கு உதவ மறுத்தபோது, ரூத்தைத் தன் மனைவியாக போவாஸ் ஏற்றார். அவர்களுடைய குமாரனாகிய ஓபேத் நகோமியின் பிள்ளையாகவும், எலிமெலேக்கின் சட்டப்பூர்வ சுதந்தரவாளியாகவும் கருதப்பட்டார்.—ரூத் 2:19, 20; 4:1, 6, 9, 13-16.
13 தன்னலம் கருதாமல் கடவுளுடைய சட்டத்திற்கு போவாஸ் கீழ்ப்படிந்ததால், ஏராளமான ஆசீர்வாதங்கள் அவரைப் பின்தொடர்ந்தன. அவர்களுடைய குமாரன் ஓபேத்தின்மூலம், அவரும் ரூத்தும், இயேசு கிறிஸ்துவின் மூதாதையராகும் பாக்கியம் பெற்றனர். (ரூத் 2:12; 4:13, 21, 22; மத்தேயு 1:1, 5, 6) மற்றவர்களுக்கு அன்பு காட்டி, கடவுளுடைய கட்டளைகளுக்கு இசைவாக நடப்பவர்களுக்கு ஆசீர்வாதங்கள் பின்தொடருவதை போவாஸின் தன்னலமற்ற செயல்களிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.
நாபால் செவிசாய்க்கவில்லை
14. நாபால் எப்படிப்பட்டவன்?
14 போவாஸுக்கு நேர்மாறாக, நாபால் யெகோவாவுக்குச் செவிசாய்க்க தவறினான். “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக” என்ற கடவுளுடைய சட்டத்தை அவன் மீறினான். (லேவியராகமம் 19:18) நாபால் ஆவிக்குரிய மனம் படைத்தவன் அல்ல, “முரடனும் துராகிருதனுமாயிருந்தான்.” அவனிடம் வேலை செய்த ஊழியக்காரர்களே அவனை ‘ஒன்றுக்கும் உதவாதவனாக’ (NW) கருதினார்கள். நாபால் என்ற பெயர் அவனுக்கு பொருத்தமானதே, ஏனெனில் “அறிவற்றவன்” அல்லது “மூடன்” என்பது அதற்கு அர்த்தம். (1 சாமுவேல் 25:3, 17, 25) ஆகவே, தேவையிலிருந்த ஒருவருக்கு, யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீதுக்கு, தயவு காட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்தபோது நாபால் எப்படி நடந்துகொண்டான்?—1 சாமுவேல் 16:13.
15. நாபால் தாவீதை எவ்வாறு நடத்தினான், இந்த விஷயத்தில் அபிகாயில் எவ்வாறு தன் கணவனிலிருந்து வேறுபட்டிருந்தாள்?
15 நாபாலின் மந்தைகள் இருந்த இடத்திற்கு அருகே தாவீதும் அவருடைய ஆட்களும் தங்கியிருந்தபோது, கூலியேதும் கேட்காமல் கொள்ளைக்காரர்களிடமிருந்து அந்த மந்தைகளைப் பாதுகாத்தார்கள். “அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்” என்று நாபாலின் மேய்ப்பர்களில் ஒருவன் சொன்னான். எனினும், தாவீதின் ஆட்கள் கொஞ்சம் உணவைக் கேட்டபோது, நாபால் ‘அவர்கள்மீது சீறி’ விழுந்தான், எதையும் கொடுக்காமல் வெறுங்கையோடு அவர்களை அனுப்பிவிட்டான். (1 சாமுவேல் 25:2-16) நாபாலின் மனைவி அபிகாயில் உடனடியாக உணவுப்பொருட்களை தாவீதுக்கு எடுத்துச் சென்றாள். கொதித்தெழுந்த தாவீது, நாபாலையும் அவனுடைய ஆட்களையும் பூண்டோடு அழித்துப் போடவிருந்தார். அபிகாயில் முன் வந்து செயல்பட்டது அநேகருடைய உயிரை காப்பாற்றியது, தாவீதை இரத்தப் பழிக்கு ஆளாகாமல் தடுத்தது. ஆனால், நாபாலின் பேராசையும் இரக்கமற்ற தன்மையும் கட்டுப்பாட்டை மிஞ்சிவிட்டிருந்தன. ஏறக்குறைய பத்து நாளைக்குப் பின், “யெகோவா நாபாலை அடிக்கவே அவன் இறந்தான்.”—1 சாமுவேல் 25:18-38, தி.மொ.
16. நாம் எவ்வாறு போவாஸின் மாதிரியைப் பின்பற்றி, நாபாலின் வழிகளை வெறுத்து ஒதுக்கலாம்?
16 போவாஸுக்கும் நாபாலுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடு! நாபாலின் இரக்கமற்ற, தன்னல வழிகளை நாம் விட்டொதுக்கும் அதேசமயத்தில் போவாஸின் தயவையும் தன்னலமற்ற குணத்தையும் பின்பற்றுவோமாக. (எபிரெயர் 13:16) அப்போஸ்தலன் பவுலின் இந்த அறிவுரையைப் பின்பற்றுவதன்மூலம் அதை நாம் செய்யலாம்: “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) பூமிக்குரிய நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களான இயேசுவின் ‘வேறே ஆடுகள்,’ பரலோகத்தில் அழியாமை வாழ்க்கையைப் பெறும் 1,44,000-ல் மீந்திருக்கும் யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு இன்று நன்மை செய்யும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். (யோவான் 10:16; 1 கொரிந்தியர் 15:50-53; வெளிப்படுத்துதல் 14:1, 4) அவர்களுடைய அத்தகைய அன்புள்ள செயல்களை தமக்கே செய்வதுபோல் இயேசு கருதுகிறார். மேலும், இந்த நற்காரியங்களைச் செய்வது, யெகோவாவின் பெரும் ஆசீர்வாதத்தையும் அள்ளித் தருகிறது.—மத்தேயு 25:34-40; 1 யோவான் 3:18.
அன்னாளின் சோதனைகளும் ஆசீர்வாதங்களும்
17. என்ன சோதனைகளை அன்னாள் எதிர்ப்பட்டாள், என்ன மனப்பான்மையைக் காட்டினாள்?
17 தேவபக்திமிக்க பெண்ணாகிய அன்னாளையும் யெகோவாவின் ஆசீர்வாதம் பின்தொடர்ந்தது. எப்பிராயீம் மலைப்பிரதேசத்தில் லேவியனாகிய தன் கணவன் எல்க்கானாவுடன் அவள் வாழ்ந்து வந்தாள். நியாயப்பிரமாணம் அனுமதித்து, அது விதித்த கட்டுப்பாடுகளுக்கு இசைவாக, பெனின்னாள் என்ற மற்றொரு பெண்ணையும் எல்க்கானா மணமுடித்திருந்தார். அன்னாள் பிள்ளையற்ற மலடியாக இருந்தாள்; இஸ்ரவேல பெண்ணுக்கு இது நிந்தையாக கருதப்பட்டது. பெனின்னாளுக்கோ அநேக பிள்ளைகள் இருந்தனர். (1 சாமுவேல் 1:1-3; 1 நாளாகமம் 6:16, 33, 34) அன்னாளுக்கு ஆறுதலாக இருப்பதற்கு பதிலாக, அவள் மனக்கசப்புற்று, சாப்பிட மனமில்லாமல் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு அன்பற்ற விதத்தில் பெனின்னாள் நடந்துகொண்டாள். அதிலும் கொடுமை, “வருஷந்தோறும்” அந்தக் குடும்பம் சீலோவில் இருந்த யெகோவாவின் ஆலயத்திற்குப் போய்வரும் ஒவ்வொரு சமயத்திலும் இது நடந்தது. (1 சாமுவேல் 1:4-8) எவ்வளவு இரக்கமற்றவளாக பெனின்னாள் நடந்துகொண்டாள், எப்பேர்ப்பட்ட சோதனையை அன்னாள் அனுபவித்தாள்! இருப்பினும், அன்னாள் யெகோவாவை குறைகூறவே இல்லை; அத்துடன் தன் கணவன் சீலோவுக்குப் போகும் சமயத்தில் உடன் செல்ல மறுத்து வீட்டிலேயே தங்கிவிடவுமில்லை. ஆகையால், பெரும் ஆசீர்வாதம் முடிவில் அவளுக்கு நிச்சயமாகவே பின்தொடரவிருந்தது.
18. அன்னாள் என்ன முன்மாதிரியை வைத்தாள்?
18 இன்று யெகோவாவின் ஜனங்களுக்கு, முக்கியமாய் மற்றவர்களின் புண்படுத்தும் சொற்களால் மன வேதனையை அனுபவிப்பவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி அன்னாள். இத்தகைய சந்தர்ப்பங்களில், தனிமையில் ஒதுங்கி இருப்பது பிரச்சினையைத் தீர்த்துவிடாது. (நீதிமொழிகள் 18:1) கடவுளுடைய வார்த்தை போதிக்கப்படுகிற, வணக்கத்திற்காக கடவுளுடைய ஜனங்கள் கூடிவருகிற இடத்தில் இருப்பதற்கான தன் ஆசையை தனக்கு வந்த சோதனைகள் குறைத்துப்போட அன்னாள் அனுமதிக்கவில்லை. ஆகையால், ஆவிக்குரியப் பிரகாரமாய் அவள் பலமுள்ளவளாக இருந்தாள். அவள் எந்தளவுக்கு ஆவிக்குரிய மனம் படைத்தவளாக இருந்தாள் என்பது 1 சாமுவேல் 2:1-10-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அவளுடைய அழகிய ஜெபத்திலிருந்து தெரிகிறது.a
19. ஆவிக்குரிய காரியங்களுக்கான மதித்துணர்வை நாம் எவ்வாறு வெளிக்காட்டலாம்?
19 இன்று யெகோவாவின் ஊழியர்களாக நாம் வணக்கத்திற்காக ஆசரிப்புக் கூடாரத்தில் ஒன்றுகூடுவதில்லை. இருப்பினும், அன்னாளைப் போலவே, ஆவிக்குரிய காரியங்களுக்காக நாம் மதித்துணர்வை வெளிக்காட்ட முடியும். உதாரணமாக, கிறிஸ்தவக் கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றில் தவறாமல் கலந்துகொள்வதன் மூலம் ஆவிக்குரிய செல்வங்களிடம் ஆழ்ந்த மதித்துணர்வை நாம் காட்டலாம். யெகோவாவின் உண்மை வணக்கத்தில் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த இந்தச் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக. “உண்மைப் பற்றுறுதியோடும் நீதியோடும் தமக்குப் பரிசுத்த சேவையை பயமில்லாமல் செய்யும் சிலாக்கியத்தை” அவரே நமக்கு அளித்திருக்கிறார்.—லூக்கா 1:74, 75, NW; எபிரெயர் 10:24, 25.
20, 21. தன்னுடைய தேவபக்திக்காக அன்னாள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டாள்?
20 அன்னாளின் தேவபக்தியை யெகோவா கவனித்து, அவளை அபரிமிதமாய் ஆசீர்வதித்தார். குடும்பமாக சீலோவுக்குச் செல்லும் வருடாந்தர பயணத்தின்போது, ஒருசமயம் கடவுளிடம் ஊக்கமாய் கண்ணீருடன் ஜெபித்து, அன்னாள் இவ்வாறு பொருத்தனை செய்தாள்: “சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உமது அடியாளின் சிறுமையைப் பார்த்து, உமது அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தருள்வீரானால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்.” (1 சாமுவேல் 1:9-11, தி.மொ.) அன்னாளின் விண்ணப்பத்திற்கு கடவுள் செவிசாய்த்தார், ஒரு குமாரனை அவளுக்குத் தந்து ஆசீர்வதித்தார். அவனுக்கு சாமுவேல் என்று அவள் பெயரிட்டாள். அவனை பால் மறக்க செய்த பின்பு, ஆசரிப்பு கூடாரத்தில் சேவை செய்வதற்காக அவனை சீலோவுக்கு அழைத்துச் சென்றாள்.—1 சாமுவேல் 1:20, 24-28.
21 அன்னாள் கடவுளிடம் அன்பு காட்டினாள், சாமுவேல் சம்பந்தமாக தான் செய்த பொருத்தனையை நிறைவேற்றினாள். மேலும், தங்கள் அன்பு மகன் யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்தில் சேவை செய்ததால் அவளும் எல்க்கானாவும் அனுபவித்த நிறைவான ஆசீர்வாதத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! தங்கள் மகன்களும் மகள்களும் முழுநேர பயனியர்களாக, பெத்தேல் குடும்ப உறுப்பினர்களாக அல்லது யெகோவாவை கனப்படுத்தும் மற்ற வழிகளில் அவரை சேவிப்பதனால், கிறிஸ்தவ பெற்றோர் பலர் அதேபோன்ற ஆனந்தத்தையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கிறார்கள்.
தொடர்ந்து யெகோவாவுக்குச் செவிசாயுங்கள்!
22, 23. (அ) யெகோவாவின் குரலுக்கு தொடர்ந்து செவிசாய்த்தோமானால், எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்? (ஆ) அடுத்தக் கட்டுரையில் எது கலந்தாலோசிக்கப்படும்?
22 தொடர்ந்து யெகோவாவுக்குச் செவிசாய்த்தால் எதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்? முழு ஆத்துமாவோடு கடவுளை நேசித்து, அவருடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் என்பதை நம்முடைய வாழ்க்கையில் வெளிக்காட்டினால், நாம் ஆவிக்குரிய விதத்தில் செல்வந்தர்களாய் இருப்போம். அப்படி செய்து வருகையில் கடும் சோதனைகளைச் சகிக்க வேண்டியதாக இருந்தாலும்கூட யெகோவாவின் ஆசீர்வாதம் நிச்சயமாகவே நாம் எதிர்பார்க்காத விதத்தில் அதிகளவில் நம்மைப் பின்தொடரும்.—சங்கீதம் 37:4; எபிரெயர் 6:10.
23 எதிர்காலத்தில் கடவுளுடைய ஜனங்கள் அநேக ஆசீர்வாதங்களை அனுபவிக்க இருக்கின்றனர். யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலுடன் செவிசாய்ப்பதன் காரணமாக, ‘திரள் கூட்டத்தார்,’ ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ பாதுகாக்கப்பட்டு கடவுளுடைய புதிய உலகில் வாழ்க்கையின் சந்தோஷங்களை அனுபவிப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9-14; 2 பேதுரு 3:13) அங்கு யெகோவா தம்முடைய ஜனங்கள் எல்லாருடைய நியாயமான ஆசைகளையும் முழுமையாக திருப்தி செய்வார். (சங்கீதம் 145:16) எனினும், அடுத்த கட்டுரையில் காணப் போகிறபடி, யெகோவாவின் சத்தத்திற்கு தொடர்ந்து செவிசாய்ப்போர் இப்போதேகூட ‘பரத்திலிருந்து வரும் நன்மையான ஈவுகளாலும் பூரணமான வரங்களாலும்’ ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.—யாக்கோபு 1:17.
[அடிக்குறிப்பு]
a அன்னாள் சொன்னவை கன்னியாக இருந்த மரியாள், தான் மேசியாவின் தாயாக போவதை அறிந்தபோது சொன்னவற்றிற்கு ஓரளவு ஒத்துள்ளது.—லூக்கா 1:46-55.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கடவுளுடைய ஆசீர்வாதங்களைப் பற்றி இஸ்ரவேலின் சரித்திரம் நமக்கு என்ன கற்பிக்கிறது?
• போவாஸும் நாபாலும் எவ்வாறு வேறுபடுகிறார்கள்?
• அன்னாளின் மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
• நாம் ஏன் யெகோவாவின் சத்தத்திற்கு தொடர்ந்து செவிசாய்க்க வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
சாலொமோன் ராஜா கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்காக ஜெபித்தார், யெகோவா ஞானத்தைத் தந்து அவரை ஆசீர்வதித்தார்
[பக்கம் 12-ன் படம்]
போவாஸ் மற்றவர்களை மரியாதையுடனும் தயவுடனும் நடத்தினார்
[பக்கம் 15-ன் படம்]
யெகோவாவில் நம்பிக்கை வைத்ததற்காக அன்னாள் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கப்பட்டாள்