உண்மையான விசுவாசம் உங்களுக்கு சாத்தியமே
சேரா ஜேனுக்கு 19 வயதாக இருந்தபோது கருப்பையில் புற்றுநோய் இருப்பதை அறிந்தாள். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவள் ஆரோக்கியமாக உணர்ந்தாள், எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கினாள். அவள் அந்தளவு நம்பிக்கையோடு இருந்ததால் 20 வயதாகையில் திருமணத்திற்காக நிச்சயம் செய்துகொண்டாள், அதற்கான ஏற்பாடுகளும் மளமளவென நடந்தன. அந்த வருடமே அவளுக்கு மறுபடியும் புற்றுநோய் வந்தது, இன்னும் சில வாரங்கள்தான் உயிர்வாழ முடியும் என்பதை அறிந்தாள். 21-ம் வயதில் அடியெடுத்து வைப்பதற்கு சற்று முன்பு ஜூன் 2000-ல் சேரா ஜேன் இறந்துவிட்டாள்.
எதிர்காலத்தை பற்றிய அவளுடைய நிதானமான நம்பிக்கையும், கடவுளிலும் அவருடைய வார்த்தையாகிய பைபிளிலும் அவள் வைத்திருந்த உறுதியான விசுவாசமுமே ஆஸ்பத்திரிக்கு வந்து சேரா ஜேனை சந்தித்தவர்களை கவர்ந்தன. அவளுடைய நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தபோதிலும் தன் நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்போம் என்ற உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் மிகவும் உறுதியாக இருந்தாள். (யோவான் 5:28, 29) “கடவுளுடைய புதிய உலகில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்” என அவள் கூறினாள்.
அப்படிப்பட்ட விசுவாசம் வெறும் மனபிரமையே என சிலர் ஒதுக்கித் தள்ளலாம். “மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது பாதுகாப்பற்றவர்கள் மத்தியில் நிலவும் ஒரு நம்பிக்கைதானே? கடைசி எக்காள சத்தத்தின்போது கேக்குகளும், மதுபானங்களும், அருமையான மீன்களும் கிடைக்கும், எக்காள சத்தங்களும்கூட கேட்கும் என்றும் பசுமையான ஏதோவொரு ஏதேனில் தங்களுக்கு முன்பு இறந்தவர்களோடும் பிறகு இறப்பவர்களோடும் சந்தோஷமாக நேரத்தை செலவிடலாம் என்ற நம்பிக்கைதானே?” என்ற கேள்வியை லூடோவிக் கென்னடி எழுப்புகிறார். ஆனால், அவருடைய இந்த வாதத்திற்கு எதிர்வாதம் ஒன்றையும் நாம் எழுப்பலாம். எது அதிக நியாயமானதாக தோன்றுகிறது—“வாழ்க்கை என்பது இவ்வளவுதான், ஆகவே இதை முழுமையாக அனுபவியுங்கள்” என கென்னடி கூறுவதை நம்புவதா அல்லது கடவுளையும் உயிர்த்தெழுதல் பற்றி அவர் கொடுத்த வாக்குறுதியையும் நம்புவதா? சேரா ஜேன் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தாள். அப்படிப்பட்ட விசுவாசத்தை அவள் எவ்வாறு வளர்த்துக்கொண்டாள்?
‘கடவுளை தடவியாகிலும் கண்டுபிடியுங்கள்’
ஒருவர் மீது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்க்க முதலாவதாக நீங்கள் அவரை அறிந்துகொண்டு, அவர் எவ்வாறு யோசிக்கிறார், செயல்படுகிறார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்வதில் மனமும் இருதயமும் உட்பட்டுள்ளன. கடவுள் மீது உண்மையான விசுவாசத்தை வளர்ப்பதிலும் இதுவே உண்மை. நீங்கள் அவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அவருடைய குணங்களையும் ஆளுமையையும் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும், அவர் சொன்ன, செய்த எல்லாவற்றிலும் எவ்வளவு உண்மையுள்ளவராகவும் நம்பகமானவராகவும் இருந்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.—சங்கீதம் 9:10; 145:1-21.
ஆனால் அது முடியாத காரியம் என சிலர் நினைக்கலாம். கடவுள் என ஒருவர் இருந்தாலும் அவர் மிகவும் தொலைவில், அறிந்துகொள்ள முடியாதவராக இருக்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர். “சேரா ஜேன் போன்ற கிறிஸ்தவர்களுக்கு கடவுள் அவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தால் அவர் ஏன் மற்றவர்களுக்கும் தம்மை அவ்வாறே வெளிப்படுத்துவதில்லை?” என சந்தேகவாதி கேட்கிறார். ஆனால், உண்மையிலேயே கடவுள் அவ்வளவு தொலைவிலும் கண்டுபிடிக்க முடியாதவராகவும் இருக்கிறாரா என்ன? அப்போஸ்தலன் பவுல் அத்தேனே பட்டணத்திலுள்ள தத்துவ ஞானிகளிடமும் அறிவுஜீவிகளிடமும் பேசுகையில், “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர்” “தம்மை . . . தடவியாகிலும் கண்டுபிடிக்க” தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார் என கூறினார். உண்மையில், “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” என்றும் பவுல் சொன்னார்.—அப்போஸ்தலர் 17:24-27.
அப்படியென்றால், நாம் எவ்வாறு ‘கடவுளை தடவியாகிலும் கண்டுபிடிக்கலாம்’? தங்களை சுற்றியுள்ள அண்டத்தை பார்த்தே சிலர் அவரை கண்டுபிடித்திருக்கின்றனர். சிருஷ்டிகர் இருப்பதை நம்புவதற்கு அதுவே அநேகருக்கு போதுமான அத்தாட்சியை கொடுத்திருக்கிறது.a (சங்கீதம் 19:1; ஏசாயா 40:26; அப்போஸ்தலர் 14:16, 17) “காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என உணர்ந்த அப்போஸ்தலன் பவுலை போலவே அவர்களும் உணருகின்றனர்.—ரோமர் 1:20; சங்கீதம் 104:24.
பைபிள் உங்களுக்கு அவசியம்
ஆனால், சிருஷ்டிகர் மீது உண்மையான விசுவாசத்தை வளர்க்க அவர் கொடுத்திருக்கும் மற்றொன்றும் உங்களுக்கு தேவை. அது என்ன? அதுவே பைபிள்; அது கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும் அவருடைய ஏவப்பட்ட வார்த்தையாகும். (2 தீமோத்தேயு 3:16, 17) “ஆனால், பைபிளை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்வோரின் கொடுஞ்செயல்களை பார்க்கையில் அது சொல்வதை எப்படி நம்ப முடியும்?” என சிலர் கேட்கலாம். மாய்மாலம், கொடூரம், ஒழுக்கயீனம் போன்ற மிகவும் மோசமான பதிவை கிறிஸ்தவமண்டலம் ஏற்படுத்தியிருப்பது உண்மையே. ஆனால், பைபிள் நியமங்களை பின்பற்றுவதாக கிறிஸ்தவமண்டலம் வெறுமனே நாடகமாடுகிறது என நியாயத்தன்மையுள்ள எவரும் ஒப்புக்கொள்வார்.—மத்தேயு 15:8.
கடவுளை வணங்குவதாக அநேகர் சொல்லிக் கொண்டாலும், “தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலி”ப்பார்கள் என பைபிளே எச்சரித்தது. “அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்” என அப்போஸ்தலன் பேதுரு கூறினார். (2 பேதுரு 2:1, 2) அவர்கள் “அக்கிரமச் செய்கைக்கார[ர்]” என இயேசு கிறிஸ்து கூறினார்; அவர்களுடைய மோசமான செயல்களே அவர்களை தெளிவாக காட்டிக்கொடுக்கும். (மத்தேயு 7:15-23) கிறிஸ்தவமண்டலத்தின் பதிவு காரணமாக கடவுளுடைய வார்த்தையை நிராகரிப்பது, ஒரு நம்பகமான நண்பரின் கடிதத்தை கொண்டுவந்தவர் மோசமானவர் என்பதற்காக அந்த கடிதத்தை புறக்கணிப்பதற்கு சமமாகும்.
கடவுளுடைய வார்த்தை இல்லாமல் உண்மையான விசுவாசத்தை வளர்ப்பது முடியாதது. பைபிள் மூலமாகவே யெகோவா தமது பிரதிவாதங்களை சமர்ப்பிக்கிறார் என்று சொல்லலாம். அவர் ஏன் துன்பத்தையும் துயரத்தையும் அனுமதித்திருக்கிறார், அதற்காக அவர் என்ன செய்யப்போகிறார் போன்ற காலங்காலமாக கேட்கப்படுகிற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார். (சங்கீதம் 119:105; ரோமர் 15:4) பைபிள், கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை என்பதை சேரா ஜேன் நம்பினாள். (1 தெசலோனிக்கேயர் 2:13; 2 பேதுரு 1:19-21) எப்படி? அவளுடைய பெற்றோர் சொன்னதால் அல்ல, மாறாக பைபிள் கடவுளிடமிருந்து வந்த ஒரு விசேஷித்த வெளிப்படுத்துதல் என்பதை நிரூபிக்கும் எல்லா அத்தாட்சிகளையும் அலசிப் பார்க்க அவளே நேரத்தை செலவழித்ததால் நம்பினாள். (ரோமர் 12:2) உதாரணமாக, பைபிள் நியமங்களை பின்பற்றுவோரின் வாழ்க்கையில் அதன் வல்லமையான செல்வாக்கை அவள் கவனித்தாள். பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா?b (ஆங்கிலம்) போன்ற பிரசுரங்களின் உதவியோடு, தெய்வீக ஏவுதலை நிரூபிக்கும் மலைப்போன்ற உட்புற அத்தாட்சிகளையும் அவள் கவனமாக ஆராய்ந்தாள்.
“விசுவாசம் கேள்விப்படுதலினாலே வரும்”
என்றாலும், வெறுமனே பைபிளை வைத்திருப்பதோ அது ஏவப்பட்டு எழுதப்பட்டது என நம்புவதோகூட போதுமானதல்ல. “விசுவாசம் கேள்விப்படுதலினாலே வரும்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 10:17, NW) வெறுமனே பைபிளை வைத்திருப்பது அல்ல அது சொல்வதை கேட்பதே விசுவாசத்தை வளர்க்கும். கடவுளுடைய வார்த்தையை வாசிக்கையிலும், படிக்கையிலும் நீங்கள் அவர் கூறுவதை ‘கேட்கிறீர்கள்.’ இளைஞர்களும் இதை செய்யலாம். தீமோத்தேயுவிற்கு அவருடைய தாயும் பாட்டியும் “பரிசுத்த வேத எழுத்துக்களை . . . சிசு பருவம் முதல்” போதித்தனர் என பவுல் சொல்கிறார். அப்படியென்றால், அவர்கள் ஏதோவொரு விதத்தில் அவருடைய மூளையை சலவை செய்தனர் என்று அர்த்தமா? இல்லவேயில்லை! தீமோத்தேயு எந்த விதத்திலும் தவறாக வழிநடத்தப்படவோ ஏமாற்றப்படவோ இல்லை. அவர் கேள்விப்பட்டதையும் வாசித்ததையும் ‘நம்பும்படி அவருக்கு நிரூபித்துக் காட்டப்பட்டது.’—2 தீமோத்தேயு 1:5; 3:14, 15; NW.
சேரா ஜேனுக்கும் அவ்வாறே நிரூபித்துக் காட்டப்பட்டது. முதல் நூற்றாண்டு பெரோயா பட்டணத்தாரைப் போலவே அவளும் தன் பெற்றோரிடமிருந்தும் மற்ற போதகர்களிடமிருந்தும் “மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்”டாள். சிறுமியாக இருக்கையில் தன் பெற்றோர் கூறியவற்றை அவள் இயல்பாகவே நம்பியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வளர்ந்த பிறகு, தனக்கு கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் அவள் கண்மூடித்தனமாகவோ கேள்வி கேட்காமலோ ஏற்றுக்கொள்ளவில்லை. “காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்”தாள்.—அப்போஸ்தலர் 17:11.
உண்மையான விசுவாசம் உங்களுக்கு சாத்தியமே
நீங்களும்கூட உண்மையான விசுவாசத்தை, எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் விவரித்ததைப் போன்ற விசுவாசத்தை வளர்க்கலாம். அப்படிப்பட்ட ‘விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது’ என்று அவர் கூறினார். (எபிரெயர் 11:1) அப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கு இருந்தால், உயிர்த்தெழுதல் பற்றிய கடவுளுடைய வாக்குறுதி உட்பட, உங்களுடைய எல்லா நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் என்பதில் முழு நிச்சயமாக இருப்பீர்கள். அந்த நம்பிக்கைகள் வெறுமனே அருமையான கற்பனைகளில் அல்ல மாறாக நிச்சயமான வாக்குறுதிகளில் சார்ந்திருக்கின்றன என்பதில் உறுதியாக இருப்பீர்கள். தம் வாக்குறுதிகளை நிறைவேற்ற யெகோவா ஒருபோதும் தவறியதில்லை என்பதை அறிவீர்கள். (யோசுவா 21:45; 23:14; ஏசாயா 55:10, 11; எபிரெயர் 6:18) அப்போது, கடவுள் வாக்குறுதியளித்த புதிய உலகம் ஏற்கெனவே வந்துவிட்டதைப் போல உங்களுக்கு அவ்வளவு நிஜமானதாக இருக்கும். (2 பேதுரு 3:13) யெகோவா தேவனும், இயேசு கிறிஸ்துவும், கடவுளுடைய ராஜ்யமும் உண்மை, வெறும் கற்பனை அல்ல என்பதை விசுவாசக் கண்களால் நீங்கள் தெளிவாக காண்பீர்கள்.
உண்மையான விசுவாசத்தை வளர்க்க நீங்கள் தன்னந்தனியாக போராட வேண்டியதில்லை. அவருடைய வார்த்தை எளிதாக கிடைக்கும்படி செய்திருப்பதோடு, நல்மனமுள்ளவர்கள் கடவுளில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உதவுவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஓர் உலகளாவிய கிறிஸ்தவ சபையையும் யெகோவா ஸ்தாபித்திருக்கிறார். (யோவான் 17:20; ரோமர் 10:14, 15) அந்த அமைப்பு மூலமாக யெகோவா கொடுக்கும் எல்லா உதவிகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். (அப்போஸ்தலர் 8:30, 31) மேலும், விசுவாசமானது கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்றாதலால் உண்மையான விசுவாசத்தை வளர்க்க உதவும்படி அந்த ஆவிக்காக தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள்.—கலாத்தியர் 5:22.
கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் விசுவாசம் வைப்பவர்களை ஏளனம் செய்யும் சந்தேகவாதிகளைக் கண்டு பயந்துவிடாதீர்கள். (1 கொரிந்தியர் 1:18-21; 2 பேதுரு 3:3, 4) அப்படிப்பட்ட எதிர்ப்புகளை சமாளிக்கும் உங்கள் தீர்மானத்தில் உறுதியோடிருக்க உண்மையான விசுவாசம் பெரும் உதவியாக இருக்கும். (எபேசியர் 6:16) அது உண்மை என்பதை சேரா ஜேன் கண்டாள்; தன்னைக் காண ஆஸ்பத்திரிக்கு வந்த அனைவரிடமும் தங்கள் விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ளும்படி அவள் தொடர்ந்து உற்சாகப்படுத்தினாள். “சத்தியத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். கடவுளுடைய வார்த்தையை படியுங்கள். கடவுளுடைய அமைப்போடு சேர்ந்திருங்கள். தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள். யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக இருங்கள்” என அவள் சொல்லுவாள்.—யாக்கோபு 2:17, 26.
கடவுளிலும் உயிர்த்தெழுதலிலும் அவளுக்கிருந்த விசுவாசத்தை கண்ட ஒரு நர்ஸ் இவ்வாறு கூறினாள்: “இதை நீ உண்மையிலேயே நம்புகிறாய் அல்லவா?” அத்தனை சோதனைகள் மத்தியிலும் அவளால் எப்படி நம்பிக்கையான மனநிலையை காத்துக்கொள்ள முடிகிறது என கேட்டபோது, “யெகோவாவில் வைக்கும் விசுவாசத்தினால்தான். அவர் எனது நெருக்கமான நண்பர், நான் அவரை மிகவும் நேசிக்கிறேன்” என்று அவள் கூறினாள்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? என்ற ஆங்கில புத்தகத்தை காண்க.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 6-ன் படம்]
தீமோத்தேயுவிற்கு அவருடைய தாயும் பாட்டியும் “பரிசுத்த வேத எழுத்துக்களை . . . சிசு பருவம் முதல்” போதித்தனர்
[பக்கம் 6-ன் படம்]
வேதவாக்கியங்களை தினந்தோறும் ஆராய்ந்ததற்காக பெரோயா பட்டணத்தார் பாராட்டப்பட்டனர்
[படத்திற்கான நன்றி]
“ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” 1914-லிருந்து
[பக்கம் 7-ன் படங்கள்]
விசுவாசத்தை வளர்க்க பைபிளை வைத்திருப்பது மட்டுமல்ல, அது சொல்வதை கேட்டு கீழ்ப்படிவதே முக்கியம்
[பக்கம் 7-ன் படம்]
“கடவுளுடைய புதிய உலகில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்”