பொன் விதி—அனைவருக்கும் பொதுவான போதனை
“பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 7:12, பொது மொழிபெயர்ப்பு.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பிரசித்தி பெற்ற மலைப்பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளை கூறினார். அந்த சமயத்திலிருந்து நூற்றாண்டுகளாக இந்த எளிய கூற்றைப் பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது, எழுதப்பட்டிருக்கிறது. உதாரணமாக, “அதுவே வேதாகமத்தின் சாராம்சம்,” “அயலாருக்கு ஒரு கிறிஸ்தவன் செய்ய வேண்டிய கடமைகளின் ரத்தினச் சுருக்கம்,” “அடிப்படை தார்மீக நியமம்” என்றெல்லாம் அதற்கு புகழ்மாலை சூட்டப்பட்டிருக்கிறது. அது அவ்வளவு பிரபலமாக அறியப்பட்டிருப்பதால் பொன் விதி என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பொன் விதி, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளும் கருத்தல்ல. யூத மதத்திலும், புத்த மதத்திலும், கிரேக்க தத்துவத்திலும் இந்தத் தார்மீக நியமம் பல விதங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய ஞானியாகவும் போதகராகவும் கிழக்கில் போற்றப்படும் கன்பூசியஸின் ஒரு கூற்று முக்கியமாக தூர கிழக்கில் வாழ்பவர்கள் மத்தியில் பிரபலமானது. அது, கன்பூசியரின் நான்கு நூல்களில் மூன்றாவது நூலாகிய தி அனலெக்ட்ஸ் என்பதில் மூன்று முறை குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். இரண்டு முறை தன் மாணவர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் கன்பூசியஸ் இவ்வாறு கூறினார்: “பிறர் உனக்கு என்ன செய்யக்கூடாதென்று நினைக்கிறாயோ அதை நீ அவர்களுக்கு செய்யாதிரு.” மற்றொரு சமயம் “பிறர் எனக்கு என்ன செய்யக்கூடாதென்று நான் நினைக்கிறேனோ அதை நானும் அவர்களுக்கும் செய்ய விரும்புவதில்லை” என்று அவருடைய மாணவன் டிசெகாங் பெருமையாக சொல்லிக் கொண்டபோது, ஆசிரியர் மிக அமைதியாக “சரிதான், ஆனால் இதை இன்னும் உன்னால் செய்ய முடியவில்லையே” என்று கூறினார்.
கன்பூசியஸின் வார்த்தைகளை வாசிக்கும்போது, பின்னர் இயேசு சொன்ன அதே விஷயத்தை அவர் எதிர்மறையாக கூறியிருப்பதை காண முடிகிறது. வித்தியாசம் என்னவென்றால், இயேசு கூறிய பொன் விதி, மற்றவர்களுக்கு நன்மையான செயல்கள் செய்வதை தேவைப்படுத்துகிறது. இயேசு கூறிய ஆக்கபூர்வமான பொன் விதிப்படி நடப்பதென்பது மற்றவர்கள்மீது அக்கறை காட்டுவதை, அவர்களுக்கு உதவ முயற்சி செய்வதை, தினந்தோறும் இந்த விதிக்கு இசைய வாழ்வதை அர்த்தப்படுத்தும். இப்படி செய்தால் இன்றைய உலகம் வாழ்வதற்கு இன்பமான ஓரிடமாக மாறிவிடும் அல்லவா? அதில் துளிக்கூட சந்தேகமில்லை.
இந்தப் பொன் விதி நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ வேறு எந்த வகையிலோ கூறப்பட்டாலும் சரி, பல்வேறு காலங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் வித்தியாசமான பின்னணிகளிலும் வாழ்ந்திருப்பவர்கள் இதில் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதே குறிப்பிடத்தக்கது. இயேசு மலைப்பிரசங்கத்தில் கூறியது எவ்விடத்திலும் எக்காலத்திலும் வாழும் எல்லாருக்கும் பொதுவான ஒரு போதனை என்பதையே இது காட்டுகிறது.
உங்களையே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் மரியாதையுடன், பாரபட்சமில்லாமல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேனா?’ இனவெறி, குற்றச்செயல், போர் ஆகியவை இல்லாத ஓர் உலகில் வாழ விரும்புகிறேனா? மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கும் நலனுக்கும் அக்கறை காட்டும் ஒரு குடும்பத்தில் வாழ விரும்புகிறேனா?’ இந்தக் கேள்விகளுக்கு யார்தான் விருப்பமில்லை என்று பதில் சொல்வார்கள்? ஆனால் இவற்றை உண்மையில் அனுபவிப்பவர்கள் வெகு சிலரே என்பதுதான் சோகமான உண்மை. பெரும்பாலானவர்களுக்கு இவை எட்டாக் கனியாகவே இருக்கின்றன.
கறைபட்டிருக்கும் பொன் விதி
வரலாறு முழுவதிலும், மனித சமுதாயத்திற்கு எதிராக குற்றச் செயல்கள் நடப்பிக்கப்பட்டிருக்கின்றன; இவை மக்களின் உரிமைகளை அறவே புறக்கணித்திருக்கின்றன. ஆப்பிரிக்காவின் அடிமை வியாபாரம், நாசி மரண முகாம்கள், பலவந்தமாக வேலையில் ஈடுபடுத்தப்படும் குழந்தை தொழிலாளர்கள், பல இடங்களில் கொடூர இனப் படுகொலை ஆகியவையும் அடங்கும். அதிர்ச்சியூட்டும் இந்தப் பட்டியல் இன்னும் நீளமாக இருக்கலாம்.
இன்று ஜெட் வேகத்தில் முன்னேறும் நம்முடைய உயர்-தொழில் நுட்ப உலகம் சுயநலத்தில் மூழ்கியுள்ளது. பெரும்பாலானவர்கள், சொந்த சௌகரியங்களுக்கோ உரிமைகளுக்கோ ஆபத்து ஏற்படும் என்றால் மற்றவர்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதே இல்லை. (2 தீமோத்தேயு 3:1-5) இன்று ஏன் அநேகர் சுயநலவாதிகளாக, கொடுமை செய்கிறவர்களாக, உணர்ச்சிகள் மரத்துப்போனவர்களாக, தன்னலமே கருதுபவர்களாக மாறிவிட்டனர்? பொன் விதி இன்னும் பிரபலமாக இருந்தாலும், நடைமுறைக்கு ஒத்துவராத தார்மீக “சின்னமாக” ஒதுக்கப்படுவதால்தான் அல்லவா? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என உரிமை பாராட்டுகிறவர்கள் மத்தியிலும் இதுவே உண்மையாக இருப்பது வருந்தத்தக்க ஒரு விஷயம். போகிற போக்கைப் பார்த்தால், மக்கள் இன்னும் அதிக சுயநலவாதிகளாகவே ஆவார்கள் போல் தெரிகிறது.
ஆகவே சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்விகள்: பொன் விதிப்படி வாழ்வதில் என்ன உட்பட்டிருக்கிறது? இதன்படி வாழ்கிறவர்கள் இன்னும் யாராவது இருக்கிறார்களா? எல்லாரும் பொன் விதியை மதித்து வாழும் காலம் என்றாவது வருமா? இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதில்களைப் பெற தயவுசெய்து அடுத்த கட்டுரையை வாசிக்கவும்.
[பக்கம் 3-ன் படம்]
கன்பூசியஸும் மற்றவர்களும் பொன் விதியை பல்வேறு விதங்களில் கற்பித்தார்கள்