பொன் விதி—நடைமுறையானதே
பெரும்பாலானோர் பொன் விதியை இயேசு சொன்ன தார்மீக போதனையாக கருதினாலும், அவரே இவ்வாறு கூறினார்: “நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல; அது என்னை அனுப்பினவருடையது.”—யோவான் 7:16, பொ.மொ.
ஆம், இயேசு கற்பித்த பொன் விதியை உள்ளிட்ட அனைத்து போதனைகளுக்கும் மூலகாரணர் அவரை அனுப்பினவரே, அதாவது படைப்பாளராகிய யெகோவா தேவனே.
பிறர் தங்களை எப்படி நடத்த வேண்டும் என்று எல்லா மனிதரும் விரும்புகிறார்களோ அப்படியே தாங்களும் பிறரை நடத்த வேண்டும் என்பதே கடவுளுடைய ஆதி நோக்கம். பிறருடைய நலனில் அக்கறை காட்டுவதில் அவர் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருப்பது மனிதனை படைத்த விதத்திலிருந்து தெரிகிறது: “கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.” (தொடக்க நூல் [ஆதியாகமம்] 1:27, பொ.மொ.) அப்படியென்றால், தமது தலைசிறந்த பண்புகளை மனிதரும் ஓரளவுக்கு பிரதிபலிக்கும் வண்ணமாக அன்புடன் அவர்களுக்கும் அருளியிருக்கிறார் என்று அர்த்தம். இதன் மூலம் அவர்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் என்றென்றும் அனுபவிக்க வழிசெய்தார். கடவுள் அருளிய மனசாட்சியை அவர்கள் சரியாக பயிற்றுவித்தால், தாங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படியே பிறரை நடத்துவதற்கு உதவும்.
தன்னலம் ஆதிக்கம் செலுத்துகிறது
மனிதகுலம் இத்தனை அழகான ஆரம்பத்தைக் கொண்டிருக்க, பிறகு என்ன நடந்தது? சுருக்கமாக சொன்னால், அருவருப்பான குணமாகிய சுயநலத்தை மக்கள் காண்பிக்க ஆரம்பித்தனர். ஆதியாகமம் அதிகாரம் 3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, முதல் மானிட தம்பதி என்ன செய்தனர் என்ற பைபிள் பதிவு பலருக்கு நன்றாக தெரியும். கடவுளுடைய நீதியுள்ள எல்லா தராதரங்களையும் எதிர்ப்பவனாகிய சாத்தானின் தூண்டுதலால், ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய ஆட்சியை தன்னலத்துடன் நிராகரித்துவிட்டு, நல்லது கெட்டதை தாங்களே தீர்மானித்து சுதந்திரமாக வாழ விரும்பினர். அவர்களுடைய தன்னலமான, கலகத்தனமான செயலால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதோடு, அவர்களுடைய எதிர்கால சந்ததியினர் அனைவருக்கும் மோசமான விளைவுகள் ஏற்பட ஆரம்பித்தன. இது பொன் விதி என்று அறியப்படலான போதனையை அசட்டை செய்ததால் வந்த மோசமான விளைவு என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. இதன் காரணமாகவே, “ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.”—உரோமையர் [ரோமர்] 5:12, பொ.மொ.
யெகோவா தேவனுடைய அன்பான வழிகளை மொத்தத்தில் முழு மனிதகுலமும் நிராகரித்துவிட்ட போதிலும் அவர் அவர்களை உதறித் தள்ளிவிடவில்லை. உதாரணமாக, இஸ்ரவேல் தேசத்தாரை வழிநடத்த யெகோவா அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். அது, தாங்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென எதிர்பார்த்தார்களோ அதே போல பிறரை நடத்த அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது. அடிமைகள், தகப்பனில்லா பிள்ளைகள், விதவைகள் ஆகியோர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அது அறிவுரைகளைத் தந்தது. தாக்குதல், கடத்தல், திருட்டு ஆகியவை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என சொன்னது. சுகாதார சட்டங்கள் பிறருடைய உடல்நலத்தில் அக்கறையை காண்பித்தன. பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் சட்டங்கள் இருந்தன. யெகோவா தம்முடைய நியாயப்பிரமாணத்தின் சுருக்கத்தை இவ்வாறு கூறினார்: “உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக.” இதைத்தான் இயேசு பிற்பாடு மேற்கோள் காட்டினார். (லேவியராகமம் 19:18, பொ.மொ.; மத்தேயு 22:39, 40) இஸ்ரவேலர் மத்தியில் இருந்த அந்நியர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் சட்டங்கள் இருந்தன. நியாயப்பிரமாணம் இவ்வாறு கூறியது: “அன்னியரை நீ ஒடுக்காதே. அன்னியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராக இருந்தீர்கள்.” வேறு வார்த்தைகளில் சொன்னால், இஸ்ரவேலர் பிறர் நிலையில் தங்களை வைத்துப் பார்த்து, அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களை புரிந்துகொண்டு தயவுகாட்ட வேண்டியிருந்தது.—விடுதலைப் பயணம் [யாத்திராகமம்] 23:9, பொ.மொ.; லேவியராகமம் 19:34; உபாகமம் 10:19.
நியாயப்பிரமாணத்தை உண்மையுடன் இஸ்ரவேலர் பின்பற்றிய வரையில் யெகோவா அந்தத் தேசத்தை ஆசீர்வதித்தார். தாவீது, சாலொமோன் ஆகியோருடைய ஆட்சியில் தேசம் செழித்தோங்கியது, மக்கள் மனமகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தனர். சரித்திர பதிவு ஒன்று இவ்வாறு கூறுகிறது: “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:20, 25.
ஆனால் தேசத்தின் அமைதியும் பாதுகாப்பும் அதிக காலம் நீடிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. கடவுள் தந்த நியாயப்பிரமாணத்தை வைத்திருந்த போதிலும் இஸ்ரவேலர் அதைக் கைக்கொள்ளாமல் போனார்கள்; பிறர் மீதிருந்த அக்கறையை சுயநலம் நசுக்கிப்போட அனுமதித்தார்கள். இதன் காரணமாகவும் விசுவாசதுரோகத்தின் காரணமாகவும், தனிப்பட்டவர்களாகவும் ஒரு தேசமாகவும் அவர்கள் கஷ்டங்களை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். கடைசியாக, பொ.ச.மு. 607-ல், யூத ராஜ்யத்தையும் எருசலேம் நகரத்தையும் அங்கிருந்த மகத்துவமுள்ள ஆலயத்தையும்கூட பாபிலோனியர் அழிப்பதற்கு யெகோவா அனுமதித்தார். காரணம் என்ன? “நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால், இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல் போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்.” (எரேமியா 25:8, 9) யெகோவாவின் தூய வணக்கத்தை உதறித்தள்ளியதற்காக அவர்கள் எப்பேர்ப்பட்ட துன்பத்தை விலை கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று!
பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரி
மறுபட்சத்தில், இயேசு கிறிஸ்து பொன் விதியை போதித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் அதைக் கடைப்பிடிப்பதிலும் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார். பிறர் நலனில் உண்மையான அக்கறை காட்டினார். (மத்தேயு 9:36; 14:14; லூக்கா 5:12, 13) ஒரு சமயம் நாயீன் ஊரில், தன் ஒரே மகனை பறிகொடுத்துவிட்டு தாளா துயரத்துடன் சவ அடக்க ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த ஒரு விதவையை இயேசு பார்த்தார். அவர் “அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி”னார் என பைபிள் பதிவு கூறுகிறது. (லூக்கா 7:11-15) வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் ஓல்டு அண்டு நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ்-ன் பிரகாரம், ‘மனதுருகுவது’ என்பது “ஒருவருடைய உள்ளத்திற்குள் தூண்டப்படுதல்” என்று அர்த்தம் தருகிறது. அவளுக்கு இருந்த மனவேதனையை அவர் உணர்ந்தார், அவளுடைய வேதனையை நீக்க சாதகமான நடவடிக்கை எடுக்கும்படி அது அவரைத் தூண்டியது. அந்தப் பையனை இயேசு உயிர்த்தெழுப்பி “அவன் தாயினிடத்தில் ஒப்புவித்த”போது அந்த விதவை எந்தளவுக்கு சந்தோஷத்தில் பூரித்திருப்பாள்!
கடைசியாக, கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக, பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைகளாக இருக்கும் மனிதவர்க்கத்தை விடுதலை செய்ய இயேசு மனமுவந்து தமது உயிரை மீட்கும் பொருளாக அளித்தார். பொன் விதிப்படி வாழ்வதற்கு இதுவே தலைசிறந்த உதாரணமாகும்.—மத்தேயு 20:28; யோவான் 15:13; எபிரெயர் 4:15.
பொன் விதிப்படி வாழ்கிறவர்கள்
பொன் விதிப்படி வாழ்வோர் இன்றும் இருக்கின்றனரா? ஆம் இருக்கின்றனர், ஆனால் தங்களுக்கு வசதியாக இருக்கும்போது மட்டும் அதன்படி வாழ்பவர்கள் அல்ல இவர்கள். உதாரணமாக, இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நாசி ஜெர்மனியில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் கடவுள் மீதுள்ள விசுவாசத்தையும் அடுத்தவர் மீதுள்ள அன்பையும் காத்துக்கொண்டு பொன் விதியை மீற மறுத்தார்கள். எல்லா யூதர்களுக்கும் எதிராக பகைமையையும் பாகுபாட்டையும் அரசு பரப்பிய போதிலும் சாட்சிகள் தொடர்ந்து பொன் விதியைக் கடைப்பிடித்து வந்தார்கள். சித்திரவதை முகாம்களில்கூட அவர்கள் சகமனிதரிடம் அக்கறை காண்பித்து, மிக குறைவாக கிடைத்த உணவையும் பசியால் வாடிய யூதர்களோடும் யூதரல்லாதவர்களோடும் சமமாக பகிர்ந்து உண்டனர். மற்றவர்களை கொலை செய்வதற்கு ஆயுதங்களை கையில் எடுக்க அரசாங்கம் கட்டளையிட்ட போதிலும் அவர்கள் அதை செய்ய மறுத்துவிட்டார்கள். மற்றவர்கள் தங்களைக் கொல்வதை எப்படி அவர்கள் விரும்பவில்லையோ அப்படியே மற்றவர்களைக் கொல்லவும் அவர்கள் விரும்பவில்லை. தங்களைப் போலவே நேசிக்கப்பட வேண்டியவர்களை அவர்கள் எவ்வாறு கொலை செய்ய முடியும்? இவ்வாறு மறுத்ததற்காக அவர்களில் அநேகர் சித்திரவதை முகாம்களுக்கு மட்டுமல்ல, மயானத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.—மத்தேயு 5:43-48.
இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கையில், பொன் விதி செயல்பட்டு வருவதை காட்டும் மற்றொரு உதாரணத்திலிருந்தும் நீங்கள் நன்மை அடைகிறீர்கள். இன்று அநேகர் நம்பிக்கையின்றியும் உதவியின்றியும் அல்லாடுவதை யெகோவாவின் சாட்சிகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, பைபிள் தரும் நம்பிக்கையையும் நடைமுறைக்கு பயனுள்ள அறிவுரைகளையும் கற்றுக்கொள்ள பிறருக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் மனமுவந்து பயன்தரும் செயலை செய்கிறார்கள். இதெல்லாம் முன்னொரு போதுமில்லாத வகையில் இன்று உலகெங்கிலும் செய்யப்பட்டுவரும் கல்விபுகட்டும் வேலையின் பாகமாக உள்ளது. விளைவு? ஏசாயா 2:2-4-ல் (NW) முன்னுரைக்கப்பட்டபடி, “திரளான ஜனங்கள்” அதாவது உலகம் முழுவதிலும் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘யெகோவாவின் வழிகளில் போதிக்கப்பட்டு அவர் பாதைகளில் நடக்கிறார்கள்.’ அடையாள அர்த்தத்தில் அவர்கள் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடி”க்க கற்றிருக்கிறார்கள். இந்தக் கொந்தளிப்பான காலங்களில் அவர்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நீங்கள் எப்படி?
ஏதேன் தோட்டத்தில் பிசாசாகிய சாத்தான் கலகத்தை தூண்டிவிட்ட சமயத்திலிருந்து பொன் விதியை அசட்டை செய்திருப்பதால் மனிதகுலம் அனுபவிக்கும் வேதனையையும் துன்பத்தையும் பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள். சீக்கிரத்தில் இந்த நிலைமையை மாற்றுவதே யெகோவாவின் நோக்கம். அதை எப்படி செய்வார்? “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.” (1 யோவான் 3:8) கடவுளுடைய ராஜ்ய ஆளுகையில் இது நடக்கும். பொன் விதியைக் கற்பித்தும் கடைப்பிடித்தும் வந்த ஞானமும் திறமையும் படைத்த இயேசு கிறிஸ்துவின் தலைமையில் அந்த ஆட்சி நடக்கும்.—சங்கீதம் 37:9-11; தானியேல் 2:44.
பண்டைய இஸ்ரவேல் அரசனாகிய தாவீது இவ்வாறு கூறினார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.” (சங்கீதம் 37:25, 26) “இரங்கிக் கடன் கொடு”ப்பதற்கு பதிலாக இன்று அநேகர் பிடுங்கவும் அபகரிக்கவும்தான் செய்கிறார்கள் அல்லவா? பொன் விதியைக் கடைப்பிடித்தால் அது உண்மையான சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் வழிநடத்தும் என்பதில் சந்தேகமில்லை; ஏனென்றால் இன்றும், எதிர்காலத்தில் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள அது வழிசெய்கிறது. கடவுளுடைய ராஜ்யம் பூமியிலுள்ள சுயநலத்தையும் துன்மார்க்கத்தையும் தடயமே இன்றி நீக்கிவிடும். மனித ஆட்சியின் தற்போதைய சீர்கெட்ட ஒழுங்குமுறைக்கு பதிலாக கடவுள் உண்டுபண்ணும் புதிய ஒழுங்குமுறை இருக்கும். அப்போது எல்லா மனிதரும் பொன் விதிப்படி வாழ்வதில் மகிழ்ச்சியைக் காண்பார்கள்.—சங்கீதம் 29:11; 2 பேதுரு 3:13.
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
பொன் விதியை கற்பித்தது மட்டுமின்றி, அதை கடைப்பிடிப்பதிலும் இயேசு தலைசிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்
[பக்கம் 7-ன் படங்கள்]
பொன் விதியைப் பின்பற்றுவது உண்மையான சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் வழிநடத்தலாம்