அழுத்தத்திலிருந்து விடுதலை—நடைமுறையான பரிகாரம்
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] தருவேன்.”—மத்தேயு 11:28.
1, 2. (அ) அளவுக்கதிகமான அழுத்தத்திலிருந்து விடுதலை பெற பைபிளில் என்ன உள்ளது? (ஆ) இயேசுவின் போதகங்கள் எவ்வளவு பயனளிப்பவையாக இருந்தன?
அளவுக்கு அதிகமான அழுத்தம் நல்லதல்ல என நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள், அது கடும் வேதனைக்கு வழிநடத்துகிறது. மனிதர்கள் அனைவருமே பிரச்சினைகளால் பெருமளவு ஒடுக்கப்படுவதால் அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற அநேகர் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர் என பைபிள் கூறுகிறது. (ரோமர் 8:20-22) ஆனால் இப்பொழுதேகூட வேதனையிலிருந்து ஓரளவு விடுதலை பெறும் வழியையும் வேதவசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓர் இளம் மனிதரின் அறிவுரையையும் முன்மாதிரியையும் பின்பற்றினால் அந்த விடுதலை கிடைக்கும். அவர் ஒரு தச்சன், என்றாலும் தச்சு வேலையைவிட மக்கள்மீதே அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். அவருடைய பேச்சு மக்களின் இருதயங்களை தொட்டது, அவர்களுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தார், பலவீனருக்கு உதவினார், சோர்ந்து போனவர்களை தேற்றினார். அதையும்விட முக்கியமாக, ஆவிக்குரிய விதத்தில் முழு திறனை அடைய அநேகருக்கு உதவினார். இவ்வாறு, அவர்கள் அளவுக்கதிகமான அழுத்தத்திலிருந்து விடுதலை பெற்றனர், அதைப் போலவே நீங்களும்கூட விடுதலை பெறலாம்.—லூக்கா 4:16-21; 19:47, 48; யோவான் 7:46.
2 நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே அந்த மனிதர். சிலர் உலகப்பிரகாரமான அறிவைப் பெற, பூர்வ ரோம், ஆதன்ஸ், அல்லது அலெக்ஸாந்திரியா போன்ற நகரங்களுக்கு சென்றனர், இவரோ அப்படிப்பட்ட அறிவால் வழிநடத்தப்படவில்லை. என்றாலும் அவருடைய போதகங்கள் புகழ்பெற்றவை. அவற்றிற்கு ஒரு கரு இருந்தது; அது இந்த பூமியை சீரும் சிறப்புமாக ஆளப்போகும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியது. வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை நியமங்களையும் இயேசு விளக்கினார்; இவை இன்றும் அதிக மதிப்புமிக்கவை. அவர் போதித்தவற்றை கற்று கடைப்பிடிப்பவர்கள், அளவுக்கதிகமான அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவது உட்பட உடனடியான நன்மைகளை பெறுவர். நீங்களும் அதைத்தான் விரும்புகிறீர்கள் அல்லவா?
3. இயேசு என்ன சிறப்புவாய்ந்த அழைப்பு விடுத்தார்?
3 ஆனால், ‘அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் இன்று என்னுடைய வாழ்க்கையில் எந்த விதத்திலாவது செல்வாக்கு செலுத்த முடியுமா?’ போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு வரலாம். அப்படியென்றால், இயேசுவின் இதமான வார்த்தைகளை கவனியுங்கள்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28-30) அவர் கூறியதன் அர்த்தம் என்ன? அந்த வார்த்தைகளை இன்னும் கவனமாக ஆராய்ந்து, கொடிய அழுத்தத்திலிருந்து விடுதலை பெற அவை நமக்கு எவ்வாறு உதவும் என்று கவனிப்போம்.
4. இயேசு யாரிடம் பேசினார், அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை செய்வது அவர்களுக்கு ஏன் கடினமாக இருந்திருக்கும்?
4 யூத தலைவர்கள் மதத்தை பாரமான ஒன்றாக ஆக்கியதால் ஜனங்கள் “பாரஞ்சும”ந்தார்கள். என்றாலும், நியாயப்பிரமாணத்திற்கு இசைவாக நடக்க மனதார முயன்ற, பாரஞ்சுமந்த அப்படிப்பட்ட ஜனங்களிடமே இயேசு பேசினார். (மத்தேயு 23:4) பெரும்பாலும் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உட்படுத்தும் முடிவில்லாத சட்டங்களுக்கே மதத்தலைவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். ‘இதை செய்யாதே, அதை செய்யாதே’ என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தால் உங்களுக்கு எரிச்சலாக இருக்காதா? இதற்கு மாறாக, தமக்கு செவிசாய்ப்போரை சத்தியத்திடமும், நீதியிடமும், நல்வாழ்க்கையிடமும் வழிநடத்துவதாக இயேசு அழைப்பு விடுத்தார். ஆம், இயேசு கிறிஸ்துவிற்கு செவிகொடுப்பது உண்மையான கடவுளை அறிவதற்கான ஒரு வழியாக இருந்தது. ஏனெனில், யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை மனிதர்கள் இயேசுவில் கண்டனர், இன்றும் காண்கின்றனர். “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று இயேசுவும் கூறினார்.—யோவான் 14:9.
உங்கள் வாழ்க்கை அதிக அழுத்தம் நிறைந்ததா?
5, 6. இயேசுவின் நாளிலும் இன்றும் வேலை சூழ்நிலையும் ஊதியமும் எவ்வாறு உள்ளன?
5 இந்த விஷயம் உங்களுக்கும் அக்கறைக்குரியதாக இருக்கலாம்; ஏனெனில் வேலையில் அல்லது குடும்ப சூழ்நிலையில் நீங்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கலாம் அல்லது மற்ற பொறுப்புகள் உங்களை திணறடிக்கலாம். அப்படியிருந்தால், இயேசு சந்தித்து, உதவிசெய்த உண்மை மனமுள்ளவர்களை போலவே நீங்களும் இருக்கிறீர்கள். வயிற்றுப் பிழைப்புக்காக சம்பாதிப்பதை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். இன்று அநேகர் அதற்காக போராடுகின்றனர், இயேசுவின் நாட்களிலும் அதே நிலைதான்.
6 அன்று ஒரு தொழிலாளி, நாட்கூலியாக ஒரு பணம் சம்பாதிக்க தினமும் 12 மணிநேரம் என்ற கணக்கில் வாரத்திற்கு 6 நாட்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. (மத்தேயு 20:2-10) அதை உங்களுடைய அல்லது உங்கள் நண்பருடைய ஊதியத்தோடு ஒப்பிட்டால் எவ்வளவு பணம் தெரியுமா? பூர்வகால பணத்தை நவீன கால பணத்தோடு ஒப்பிடுவது கடினமானதே. என்றாலும், அந்த பணத்தை வைத்து எதை வாங்க முடியும் என்பதை ஒப்பிடுவது ஒரு வழியாகும். இயேசுவின் நாளில், நான்கு கோப்பை கோதுமை மாவால் செய்யப்பட்ட ஒரு ரொட்டியை வாங்க சுமார் ஒரு மணிநேர ஊதியம் தேவை என ஒரு அறிஞர் கூறுகிறார். ஒரு கோப்பை நல்ல திராட்சரசம் வாங்க சுமார் இரண்டு மணிநேர ஊதியத்தை செலவழிக்க வேண்டும் என மற்றொரு அறிஞர் விளக்குகிறார். இந்த விவரங்களிலிருந்து, அன்றிருந்தோர் வயிற்றுப்பாட்டிற்காக ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் கடினமாக உழைத்தனர் என்பதை நீங்கள் தெளிவாக காணலாம். நம்மை போலவே அவர்களுக்கும் ஆறுதலும் புத்துணர்ச்சியும் தேவைப்பட்டன. நீங்கள் வேலை செய்பவர் என்றால், அதிக திறமையாய் வேலை செய்ய அழுத்தம் இருப்பதை உணருவீர்கள். அநேக சமயங்களில், நிதானமாக யோசித்து தீர்மானம் செய்யவே நேரம் இருப்பதில்லை. ஆறுதலுக்கான அவசியத்தை நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள்.
7. இயேசுவின் செய்திக்கு என்ன பிரதிபலிப்பு இருந்தது?
7 “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற” அனைவரையும் இயேசு அழைத்தது அன்று வாழ்ந்த அநேகருக்கு அதிக கவர்ச்சியூட்டுவதாக இருந்திருக்கும். (மத்தேயு 4:25; மாற்கு 3:7, 8) “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] தருவேன்” என்ற வாக்குறுதியையும் இயேசு கொடுத்தார் என்பதை நினைவில் வையுங்கள். அந்த வாக்குறுதி இன்றும் செல்லுபடியாகும். நாம் “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற”வர்களாக இருந்தால் அது நமக்கும் பொருந்தும். அதேபோன்ற நிலைமையிலுள்ள நம் அன்பானவர்களுக்கும் அது பொருந்தும்.
8. பிள்ளை வளர்ப்பும் வயோதிகமும் எவ்வாறு நம் அழுத்தத்தை அதிகரிக்கின்றன?
8 ஜனங்களுக்கு பாரமாக இருக்கும் மற்ற விஷயங்களும் உள்ளன. பிள்ளைகளை வளர்ப்பது மாபெரும் சவாலாகும். பிள்ளையாக இருப்பதும்கூட சவால் மிக்கதே. எந்த வயதினராக இருந்தாலும் பெரும்பாலானோர் உடலிலும் உள்ளத்திலும் அநேக பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மக்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும், மருத்துவத்தில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், வயோதிகர்களுக்கே உரிய பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.—பிரசங்கி 12:1.
நுகத்தின்கீழ்
9, 10. பூர்வ காலங்களில் நுகம் எதை அடையாளப்படுத்தியது, தமது நுகத்தை தங்கள் மேல் ஏற்றுக்கொள்ளும்படி இயேசு ஏன் ஜனங்களுக்கு அழைப்புவிடுத்தார்?
9 மத்தேயு 11:28, 29-லிருந்து மேற்கோள் காட்டப்பட்ட வார்த்தைகளில், “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” என இயேசு கூறியதை கவனித்தீர்களா? அன்று வாழ்ந்த ஒரு சராசரி மனிதன் நுகத்தின்கீழ் வேலை செய்வதைப் போல் உணர்ந்திருக்கலாம். பூர்வ காலங்களிலிருந்தே நுகம் அடிமைத்தனத்திற்கு அடையாளமாக இருந்திருக்கிறது. (ஆதியாகமம் 27:40; லேவியராகமம் 26:13; உபாகமம் 28:48) இயேசு சந்தித்த தினக்கூலி ஆட்களில் அநேகர் அதிக பாரமிக்க, உண்மையான நுகத்தையே தங்கள் தோள்களில் சுமந்து வேலை செய்தனர். ஒரு நுகத்தின் வடிவத்தை பொருத்து அது கழுத்திற்கும் தோள்களுக்கும் இலகுவாக இருக்கலாம் அல்லது புண்படுத்துவதாக இருக்கலாம். இயேசு தச்சனாக இருந்ததால் அநேக நுகங்களை செய்திருப்பார், ‘மெதுவாக’ இருக்கும் நுகத்தை தயாரிப்பதையும் அவர் அறிந்திருக்கலாம். ஒரு நுகம் மெதுவாக இருப்பதற்கு, அது கழுத்திலும் தோள்களிலும் பொருந்தும் இடத்தில் தோல் அல்லது துணி வைத்து அவர் தயாரித்திருக்கலாம்.
10 “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொ”ள்ளுங்கள் என இயேசு சொன்னபோது ஓர் உழைப்பாளியின் கழுத்திற்கும் தோள்களுக்கும் ‘மெதுவாக’ இருக்கும் விதத்தில், நுகங்களை சிரத்தையோடு தயாரித்து கொடுப்பவருக்கு அவர் தம்மை ஒப்பிட்டிருக்கலாம். அதனால்தான், ‘என் சுமை இலகுவாய் இருக்கிறது’ என்றும் இயேசு கூறினார். அந்த நுகத்தடி ஏற்பதற்கு கடினமானதாக இருக்காது, வேலையும் அடிமைப்படுத்துவதாக இருக்காது என்பதையே இது குறித்தது. இயேசு தமது நுகத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்புவிடுக்கையில், அப்போதிருந்த ஒடுக்கும் நிலைமைகள் அனைத்தையும் உடனடியாக நீக்கிவிடுவதாக கூறவில்லை என்பது உண்மையே. இருந்தாலும் அவர் கூறிய வித்தியாசமான நோக்குநிலை ஓரளவு புத்துணர்ச்சியை அளிக்கும். அவர்களுடைய வாழ்க்கை பாணியையும் வேலை பாங்கையும் மாற்றிக்கொள்வதுகூட அவர்களுக்கு விடுதலையளிக்கும். அதைவிட முக்கியமாக, அவர்களுக்கு தெளிவான, பலமான நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை அந்தளவுக்கு அழுத்தம் நிறைந்ததாக இருக்காது.
நீங்கள் புத்துணர்ச்சி அடையலாம்
11. வெறுமனே ஒரு நுகத்திற்கு பதிலாக மற்றொன்றை பெறுவதை பற்றி ஏன் இயேசு கூறவில்லை?
11 ஜனங்கள் ஒரு நுகத்திற்கு பதிலாக மற்றொன்றை பெறுவார்கள் என இயேசு கூறவில்லை என்பதை தயவுசெய்து கவனியுங்கள். இன்று கிறிஸ்தவர்கள் வாழும் நாடுகளில் அரசாங்கங்கள் ஆளுவதைப் போலவே யூத தேசத்தின்மீது ரோம ஆதிக்கமே தொடர்ந்திருக்கும். முதல் நூற்றாண்டிலிருந்த ரோம வரி நீங்கிவிடாது. உடல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளும் தொடர்ந்து இருக்கும். அபூரணமும், பாவமும் மனிதர்களை இன்னமும் பாதிக்கும். இருந்தாலும், இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்டால் அவர்கள் புத்துணர்ச்சி அடைவார்கள், இன்று நாமும் அடைவோம்.
12, 13. புத்துணர்ச்சியளிக்கும் எதை இயேசு வலியுறுத்திக் காட்டினார், சிலர் என்ன செய்தார்கள்?
12 நுகம் பற்றி இயேசு கூறிய உவமையின் முக்கிய பொருத்தம் சீஷராக்கும் வேலை சம்பந்தப்பட்டதில் தெளிவானது. கடவுளுடைய ராஜ்யத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களுக்கு போதிப்பதே இயேசுவின் முக்கிய வேலையாக இருந்ததில் சந்தேகமில்லை. (மத்தேயு 4:23) ஆகவே, “என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொ”ள்ளுங்கள் என அவர் கூறியபோது, அதே வேலையை செய்வதில் அவரை பின்பற்றுவதும் அதில் நிச்சயமாக உட்பட்டிருக்கும். அநேகரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த வாழ்க்கை தொழிலையே மாற்றிக்கொள்ள உண்மை மனதுள்ளவர்களை இயேசு தூண்டினார் என சுவிசேஷ பதிவு காட்டுகிறது. பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரை அவர் அழைத்த விதத்தை நினைவுகூருங்கள்: “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்.” (மாற்கு 1:16-20) அவர் தமது வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து செய்த வேலையை அந்த மீனவர்களும் தம் வழிநடத்துதலோடும் உதவியோடும் செய்தால் எவ்வளவு திருப்தியளிக்கும் என்பதை செய்து காண்பித்தார்.
13 அவருக்கு செவிகொடுத்த யூதர்களில் சிலர் அதை புரிந்துகொண்டு அதன்படி வாழ்ந்தார்கள். லூக்கா 5:1-11-ல் கூறப்பட்டுள்ள கடற்கரையோர காட்சியை கற்பனை செய்து பாருங்கள். நான்கு மீனவர்கள் இரவு முழுவதும் கஷ்டப்பட்டும் ஒரு மீன்கூட சிக்கவில்லை. திடீரென அவர்களுடைய வலைகளில் மீன்கள் நிரம்பி வழிகின்றன! இது தற்செயலாக நிகழவில்லை, இயேசு தலையிட்டதாலேயே நடந்தது. அவர்கள் கரையை நோக்கி பார்க்கையில் இயேசுவின் போதனையில் அதிக ஆர்வம் காட்டிய ஏராளமானோரை கண்டனர். ‘இதுமுதல் நீங்கள் மனுஷரைப் பிடிக்கிறவர்களாய் இருப்பீர்கள்’ என அந்த நான்கு பேரிடம் இயேசு கூறியதை புரிந்துகொள்ள அது அவர்களுக்கு உதவியது. அவர்கள் என்ன செய்தார்கள்? “அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.”
14. (அ) இன்று நாம் எவ்வாறு புத்துணர்ச்சியைப் பெறலாம்? (ஆ) புத்துணர்ச்சி தரும் என்ன நற்செய்தியை இயேசு பிரசங்கித்தார்?
14 நீங்களும்கூட அவ்வாறே செய்யலாம். பைபிள் சத்தியத்தை மக்களுக்கு போதிக்கும் வேலை இன்றும் நடைபெறுகிறது. உலகமுழுவதிலும் உள்ள சுமார் 60 லட்சம் யெகோவாவின் சாட்சிகள், ‘அவருடைய நுகத்தை ஏற்றுக்கொள்ளும்படியான’ இயேசுவின் அழைப்பை ஏற்று, “மனுஷரைப் பிடிக்கிறவர்களா”க மாறியிருக்கிறார்கள். (மத்தேயு 4:19) சிலர் அதை முழுநேரமாக செய்கிறார்கள், மற்றவர்களோ பகுதிநேரமாக தங்களால் முடிந்தளவு செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே அது புத்துணர்ச்சி அளிக்கிறது, அதனால் அவர்கள் வாழ்க்கையில் அழுத்தம் குறைகிறது. அவர்கள் அனுபவித்து மகிழும் வேலையாகிய, “ராஜ்யத்தின் சுவிசேஷத்தை” மற்றவர்களிடம் அறிவிப்பது இதில் உட்பட்டுள்ளது. (மத்தேயு 4:23) நல்ல செய்திகளைப் பகிர்ந்துகொள்வது எப்போதுமே சந்தோஷத்தை தரும், இந்த நற்செய்தியோ அதிக சந்தோஷத்தை தருகிறது. அழுத்தத்தைக் குறைக்கும் வாழ்க்கை வாழலாம் என அநேகரை நம்ப வைக்க நமக்கு உதவும் அடிப்படை விஷயம் பைபிளில் உள்ளது.—2 தீமோத்தேயு 3:16, 17.
15. வாழ்க்கை பற்றிய இயேசுவின் போதனைகளிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம்?
15 கடவுளுடைய ராஜ்யத்தை பற்றி சமீபத்தில் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பவர்கள்கூட எப்படி வாழ வேண்டும் என்ற இயேசுவின் போதனைகளிலிருந்து ஓரளவு பயன் அடைந்திருக்கின்றனர். இயேசுவின் போதனைகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியளித்து, அவர்களுடைய வாழ்க்கையை அடியோடு மாற்ற உதவியுள்ளது என்பதை அநேகர் மனதார ஒப்புக்கொள்வர். இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய விவரிப்புகளில், முக்கியமாக மத்தேயு, மாற்கு, லூக்கா சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நியமங்கள் சிலவற்றை ஆராய்வதன் மூலம் அதை உங்களுக்கு நீங்களே நிரூபித்துக் கொள்ளலாம்.
புத்துணர்ச்சிக்கு வழி
16, 17. (அ) இயேசுவின் முக்கிய போதனைகளில் சிலவற்றை எங்கே காணலாம்? (ஆ) இயேசுவின் போதனைகளை கடைப்பிடித்து, புத்துணர்ச்சி பெற என்ன தேவை?
16 பொ.ச. 31-ன் வசந்தகாலத்தில் இயேசு ஒரு சொற்பொழிவு ஆற்றினார்; அது இன்றும் உலகப் புகழ் பெற்ற ஒன்றாகும். அது பொதுவாக மலைப் பிரசங்கம் என அழைக்கப்படுகிறது. மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்களிலும் லூக்கா 6-ம் அதிகாரத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்தப் பிரசங்கம், அவருடைய போதனைகளில் பெரும்பாலானவற்றை ரத்தின சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இயேசுவின் மற்ற போதனைகளை பிற சுவிசேஷங்களிலும் காணலாம். அவர் பிரசங்கித்ததில் அதிகமானவற்றிற்கு விளக்கமே தேவையில்லை; ஆனால் அவற்றை நடைமுறையில் பின்பற்றுவதே கடினமாக இருக்கலாம். அந்த அதிகாரங்களை கவனமாகவும் ஆழ்ந்த சிந்தனையுடனும் ஏன் வாசித்து பார்க்கக் கூடாது? அவர் கூறிய கருத்துக்களின் வல்லமை உங்கள் சிந்தனையிலும் மனப்பான்மையிலும் ஆதிக்கம் செலுத்த அனுமதியுங்கள்.
17 இயேசுவின் போதனைகளை பல விதங்களில் வரிசைப்படுத்தலாம் என்பது உண்மையே. என்றாலும், மாதத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று என்ற கணக்கில் அவருடைய முக்கிய போதனைகளை தொகுப்போம். உங்கள் வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதே குறிக்கோள். எப்படி பின்பற்றுவது? குறிப்புகளை வெறுமனே மேலோட்டமாக பார்க்காதீர்கள். “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என இயேசு கிறிஸ்துவிடம் கேட்ட பணக்கார அதிபதியை நினைத்துக் கொள்ளுங்கள். கடவுளுடைய சட்டத்தின் முக்கிய தேவைகளை இயேசு எடுத்துரைத்தபோது அவற்றை எல்லாம் ஏற்கெனவே செய்து வருவதாக அவன் கூறினான். ஆனால் அதுமட்டுமே போதாது என்பதை அவன் உணர்ந்தான். தெய்வீக நியமங்களை நடைமுறையில் பின்பற்ற இன்னும் அதிக முயற்சி செய்யும்படி, அதாவது அதற்கேற்ப வாழும் சீஷனாக இருக்கும்படி இயேசு அவனிடம் கூறினார். அந்தளவுக்கு அதிகத்தை செய்ய அவன் தயாராக இல்லை என்பது தெளிவாக இருந்தது. (லூக்கா 18:18-23) ஆகவே, இன்று இயேசுவின் போதனைகளை கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர், அவற்றை வெறுமனே ஏற்றுக்கொள்வதற்கும் அவற்றை உண்மையில் கடைப்பிடிப்பதற்கும் இடையில் வேறுபாடு இருப்பதை நினைவில் வைக்க வேண்டும். அவற்றை பின்பற்றினால் மட்டுமே அழுத்தம் குறையும்.
18. அருகிலுள்ள பெட்டியை எவ்வாறு பிரயோஜனமான விதத்தில் பயன்படுத்தலாம் என்பதை விளக்குங்கள்.
18 இயேசுவின் போதனைகளை ஆராய்ந்து பின்பற்றுவதில் முதல் படியாக, அருகிலுள்ள பெட்டியின் முதல் குறிப்பை கவனியுங்கள். அது மத்தேயு 5:3-9-ஐ குறிப்பிடுகிறது. அந்த வசனங்களிலுள்ள அருமையான ஆலோசனையை பற்றி நாம் பல மணிநேரத்திற்கு தியானிக்கலாம். என்றாலும், அவற்றை முழுமையாக நோக்குகையில் மனப்பான்மை பற்றி என்ன முடிவுக்கு வருகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அளவுக்கதிகமான அழுத்தத்தை உண்மையில் சமாளிக்க விரும்பினால் எது உங்களுக்கு உதவும்? ஆவிக்குரிய காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்தி, அவற்றின் சிந்தனைகளால் மனதை நிரப்பினால் உங்கள் நிலைமை எவ்வாறு மேம்படலாம்? ஆவிக்குரிய விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்த உதவியாக, உங்கள் வாழ்க்கையில் குறைந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் எவையாவது உள்ளனவா? நீங்கள் அதை செய்தால் இப்பொழுதே உங்கள் சந்தோஷம் அதிகரிக்கும்.
19. அதிக உட்பார்வையும் புரிந்துகொள்ளுதலும் பெற நீங்கள் என்ன செய்யலாம்?
19 இப்போது இன்னும் ஒருபடி மேலே செல்லுங்கள். கடவுளுடைய ஊழியரான மற்றொருவரோடு, உங்கள் மணத்துணை, நெருக்கமான உறவினர் அல்லது நண்பரோடு அந்த வசனங்களை ஏன் கலந்துபேச கூடாது? (நீதிமொழிகள் 18:24; 20:5) பொருத்தமான ஒரு விஷயத்தை பற்றி அந்த பணக்கார அதிபதி மற்றொருவரிடம், அதாவது இயேசுவிடம் கேட்டார் என்பதை மனதில் வையுங்கள். அதற்கேற்ப நடந்திருந்தால் சந்தோஷத்தையும் நிலையான வாழ்க்கையையும் பெற அவருக்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கலாம். அந்த வசனங்களை நீங்கள் கலந்து பேசும் உடன் வணக்கத்தார் இயேசுவுக்கு ஒப்பாக முடியாது என்றாலும், இயேசுவின் போதனைகள் பற்றி பேசுவது உங்கள் இருவருக்குமே பலனளிக்கும். அதை சீக்கிரமாகவே செய்ய முயலுங்கள்.
20, 21. இயேசுவின் போதனைகளை கற்றுக்கொள்ள என்ன திட்டத்தை நீங்கள் பின்பற்றலாம், உங்கள் முன்னேற்றத்தை எவ்வாறு அளவிடலாம்?
20 “உங்களுக்கு உதவும் போதனைகள்” என்ற அருகிலுள்ள பெட்டியை மறுபடியும் பாருங்கள். ஒரு நாளைக்கு ஒன்றையாவது சிந்தித்துப் பார்க்கும்படி அந்த போதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மேற்கோள் காட்டப்பட்ட வசனங்களில் இயேசு என்ன சொன்னார் என்பதை முதலில் வாசியுங்கள். பிறகு அவருடைய வார்த்தைகளை பற்றி சிந்தியுங்கள். அவற்றை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பின்பற்றலாம் என தியானியுங்கள். ஏற்கெனவே அதை செய்வதாக உணர்ந்தால், அந்த தெய்வீக போதனையின்படி வாழ இன்னும் என்னென்ன செய்யலாம் என யோசித்துப் பாருங்கள். அன்றைய தினம் அதை பின்பற்ற முயலுங்கள். அதை புரிந்துகொள்வதற்கோ எவ்வாறு பின்பற்றலாம் என அறிவதற்கோ கஷ்டப்பட வேண்டியிருந்தால் அதற்காக இன்னொரு நாளை ஒதுக்குங்கள். அதில் முற்றிலும் தேறின பிறகே அடுத்த போதனைக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதில்லை என நினைவில் வையுங்கள். அடுத்த நாள் மற்றொரு போதனையை சிந்திக்கலாம். வாரத்தின் முடிவில், இயேசுவின் போதனைகளில் நான்கு அல்லது ஐந்தை கடைப்பிடிப்பதில் எந்தளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை பரிசீலனை செய்யலாம். இரண்டாவது வாரமும், ஒரு நாளைக்கு ஒன்றாக சிந்தித்துக்கொண்டே வாருங்கள். ஏதாவது ஒரு போதனையை கடைப்பிடிப்பதில் தவறிவிட்டதாக உணர்ந்தால் மனமுடைந்து போகாதீர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவ்வாறு ஏற்படுவது சகஜம்தான். (2 நாளாகமம் 6:36; சங்கீதம் 130:3; பிரசங்கி 7:20; யாக்கோபு 3:8) அவ்வாறே, மூன்றாவது, நான்காவது வாரங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் போதனைகளையும் தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.
21 ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பிறகு பெட்டியிலுள்ள 31 குறிப்புகளையும் நீங்கள் சிந்தித்திருக்கலாம். இல்லையென்றாலும்கூட, அதன் விளைவாக நீங்கள் எவ்வாறு உணருவீர்கள்? முன்பைவிட கொஞ்சம் சந்தோஷமாக, அதிக அமைதியாக உணர மாட்டீர்களா? கொஞ்சம் முன்னேற்றமே செய்திருந்தாலும் இப்போது குறைவான அழுத்தத்தையே எதிர்ப்படுவீர்கள் அல்லது அதை சிறப்பாக சமாளித்து வருவீர்கள்; அதை தொடர்ந்து செய்வதற்கான வழியும் உங்கள் கைவசம் உள்ளது. இந்த பட்டியலில் இல்லாத, மற்ற அநேக அருமையான குறிப்புகள் இயேசுவின் போதனைகளில் உள்ளன என்பதை மறவாதீர்கள். அவற்றில் சிலவற்றை தேடிப் பார்த்து கடைப்பிடிக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது?—பிலிப்பியர் 3:16.
22. இயேசுவின் போதனைகளை பின்பற்றினால் என்ன பயன் கிடைக்கலாம், ஆனால் மேலும் என்ன அம்சத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும்?
22 இயேசுவின் நுகம் பாரமற்றதாக இல்லையென்றாலும் உண்மையிலேயே மெதுவாக இருப்பதை காண்பீர்கள். அவருடைய போதனைகளின் சுமையும், சீஷராக இருப்பதன் சுமையும் இலகுவானவை. இயேசுவின் பிரியத்திற்குரிய நண்பனாகிய அப்போஸ்தலன் யோவான், 60-க்கும் அதிக வருட அனுபவத்திற்கு பிறகு இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) நீங்களும் அதே போன்ற நம்பிக்கையை பெறலாம். இயேசுவின் போதனைகளை நீங்கள் எவ்வளவு காலத்திற்கு பின்பற்றுகிறீர்களோ அவ்வளவு அதிகமாக, இன்று அநேகருக்கு வாழ்க்கையை அழுத்தம் நிறைந்ததாக்கும் காரியங்கள் உங்களுக்கு அதிக வேதனை அளிக்காததை காண்பீர்கள். ஓரளவு விடுதலையை பெற்றிருப்பதையும் உணருவீர்கள். (சங்கீதம் 34:8) என்றாலும், இயேசுவின் மெதுவான நுகத்திற்கு மற்றொரு அம்சமும் உள்ளது, அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். தாம் “சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இரு”ப்பதாகவும் இயேசு கூறினார். இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டு, அவரை பின்பற்றுவதோடு அதற்கு என்ன சம்பந்தம் உள்ளது? அடுத்த கட்டுரையில் இதை சிந்திப்போம்.—மத்தேயு 11:29.
உங்களுடைய பதில் என்ன?
• அளவுக்கதிகமான அழுத்தத்திலிருந்து விடுதலை பெற நாடுகையில் நாம் ஏன் இயேசுவிடம் செல்ல வேண்டும்?
• நுகம் எதற்கு அடையாளமாக இருந்தது, ஏன்?
• தமது நுகத்தை ஏற்றுக்கொள்ளும்படி இயேசு ஜனங்களை அழைக்க காரணம் என்ன?
• நீங்கள் எவ்வாறு ஆவிக்குரிய புத்துணர்ச்சி பெறலாம்?
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
“என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்பதே 2002-ம் ஆண்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர வசனமாகும்.—மத்தேயு 11:28.
[பக்கம் 12, 13-ன் பெட்டி/படம்]
உங்களுக்கு உதவும் போதனைகள்
மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்களில் என்ன நல்ல விஷயங்களை காண முடியும்? திறம்பட்ட போதகரான இயேசு, கலிலேயாவிலுள்ள ஒரு மலையருகே கற்பித்த போதனைகள் இந்த அதிகாரங்களில் அடங்கியுள்ளன. உங்களுடைய பைபிளை திறந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை தயவுசெய்து வாசியுங்கள். பிறகு, அதோடு சம்பந்தப்பட்ட கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
1. 5:3-9 என்னுடைய பொதுவான மனப்பான்மை பற்றி இது என்ன சொல்கிறது? அதிகமான சந்தோஷத்தை பெற நான் எவ்வாறு உழைக்கலாம்? என் ஆவிக்குரிய தேவைகளுக்கு எவ்வாறு அதிக கவனம் செலுத்தலாம்?
2. 5:25, 26 சண்டையிடும் மனப்பான்மை உள்ள அநேகரை பின்பற்றுவதைக் காட்டிலும் எது சிறந்தது?—லூக்கா 12:58, 59.
3. 5:27-30 பாலுறவு சார்ந்த கனவுகளை பற்றி இயேசுவின் வார்த்தைகள் எதை வலியுறுத்துகின்றன? அவற்றை தவிர்ப்பது என் சந்தோஷத்தையும் மன அமைதியையும் எவ்வாறு அதிகரிக்கும்?
4. 5:38-42 இன்றைய உலகம், தன் விருப்பத்தை வலியுறுத்தும் இயல்பிற்கே முக்கியத்துவம் கொடுப்பதால் அதை தவிர்க்க நான் ஏன் உழைக்க வேண்டும்?
5. 5:43-48 இதுவரை எதிரிகளாக கருதிய கூட்டாளிகளை இன்னும் நன்றாக அறிந்துகொள்வதால் எவ்வாறு நன்மையடைவேன்? அழுத்தத்தை குறைக்க அல்லது நீக்க இது எவ்வாறு உதவும்?
6. 6:14, 15 நான் சில சமயங்களில் மன்னியாதிருந்தால், பொறாமையோ மனக்கசப்போ அதற்கு முக்கிய காரணமாக இருக்குமா? அதை எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம்?
7. 6:16-18 நான் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதைவிட வெளித்தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேனா? எதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்?
8. 6:19-32 பணம், உடைமைகள் ஆகியவற்றை பற்றியே அதிகம் கவலைப்பட்டால் என்ன ஏற்படலாம்? எதை பற்றி சிந்திப்பது, இந்த விஷயத்தில் சமநிலையை காத்துக்கொள்ள எனக்கு உதவும்?
9. 7:1-5 எப்போதுமே கண்டனம் செய்து, குற்றம் கண்டுபிடிக்கிற நபர்கள் மத்தியில் இருக்கையில் நான் எவ்வாறு உணருகிறேன்? நான் அவ்வாறு இருப்பதை தவிர்க்க வேண்டியது ஏன் முக்கியம்?
10. 7:7-11 நான் கடவுளிடம் ஜெபிக்கையில் விடாமுயற்சி தேவை என்றால் வாழ்க்கையின் மற்ற அம்சங்களை பற்றி என்ன சொல்லலாம்?—லூக்கா 11:5-13.
11. 7:12 பொன் விதியை அறிந்திருந்தாலும் மற்றவர்களை நடத்தும் விஷயத்தில் இந்த அறிவுரையை எவ்வளவு அடிக்கடி பின்பற்றுகிறேன்?
12. 7:24-27 என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பாளி என்பதால் துன்ப புயல்களையும் துயர வெள்ளங்களையும் சமாளிக்க என்னை நானே எவ்வாறு இன்னும் நன்கு தயார்படுத்திக் கொள்ளலாம்? இதை பற்றி இப்போது ஏன் சிந்திக்க வேண்டும்?—லூக்கா 6:46-49.
சிந்திப்பதற்கு கூடுதலான போதனைகள்:
13. 8:2, 3 இயேசு அடிக்கடி செய்ததைப்போல வாய்ப்பு வசதியற்றவர்களிடம் நான் எவ்வாறு பரிவிரக்கத்தை காண்பிக்கலாம்?
14. 9:9-38 இரக்கம் காட்டுவது என் வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்கிறது, அதை இன்னும் அதிகமாக எவ்வாறு காட்டலாம்?
15. 12:19 இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனத்திலிருந்து கற்றுக்கொண்டு கடும் வாக்குவாதங்களை தவிர்க்க முயலுகிறேனா?
16. 12:20, 21 வார்த்தைகளாலோ செயல்களாலோ மற்றவர்களை நொறுக்கிவிடாமல் இருப்பதன் மூலம் நான் எப்படி நன்மை செய்யலாம்?
17. 12:34-37 பெரும்பாலான சமயங்களில் நான் எதை பற்றி பேசுகிறேன்? ஆரஞ்சை நசுக்கினால் ஆரஞ்சு சாறு வெளிவரும் என்பதை அறிவேன்; ஆகவே எனக்குள், என் உள்ளத்திற்குள் இருப்பவற்றிற்கு நான் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?—மாற்கு 7:20-23.
18. 15:4-6 வயதானவர்களிடம் அன்பான அக்கறை காட்டுவதை பற்றிய இயேசுவின் குறிப்புகளிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறேன்?
19. 19:13-15 எதை செய்ய நேரம் செலவழிக்க வேண்டும்?
20. 20:25-28 அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதை உபயோகிப்பது ஏன் பிரயோஜனமற்றது? இந்த விஷயத்தில் நான் இயேசுவை எவ்வாறு பின்பற்றலாம்?
மாற்கு பதிவு செய்த முத்தான குறிப்புகள்:
21. 4:24, 25 நான் மற்றவர்களை நடத்தும் விதம் ஏன் முக்கியமானது?
22. 9:50 என் சொல்லும் செயலும் நயமாக இருந்தால் என்ன சிறந்த பலன்கள் கிடைக்கலாம்?
கடைசியாக, லூக்கா பதிவு செய்த சில போதனைகளை கவனியுங்கள்:
23. 8:11, 14 கவலை, செல்வம், சுகபோகம் ஆகியவற்றிற்கு என் வாழ்க்கையில் அதிக இடம் கொடுத்தால் என்ன நேரிடலாம்?
24. 9:1-6 வியாதிப்பட்டவர்களை குணமாக்க இயேசுவுக்கு வல்லமை இருந்தபோதிலும் அவர் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?
25. 9:52-56 நான் எளிதில் புண்பட்டுவிடுகிறேனா? பழிவாங்கும் எண்ணத்தை தவிர்க்கிறேனா?
26. 9:62 கடவுளுடைய ராஜ்யத்தை பற்றி பேசும் என் பொறுப்பை எவ்வாறு கருத வேண்டும்?
27. 10:29-37 நான் ஒரு நண்பன்தான், அன்னியன் அல்ல என்பதை எவ்வாறு நிரூபிக்க முடியும்?
28. 11:33-36 என் வாழ்க்கையை இன்னும் எளிமையாக்க என்ன மாற்றங்களை செய்யலாம்?
29. 12:15 உயிருக்கும் உடைமைகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது?
30. 14:28-30 தீர்மானங்களை கவனமாக ஆராய நேரம் செலவழித்தால் எதை தவிர்க்கலாம், என்ன நன்மைகள் கிடைக்கும்?
31. 16:10-12 உத்தமத்தன்மையை காத்துக்கொள்வதால் எனக்கு என்ன நன்மைகள் கிடைக்கலாம்?
[பக்கம் 10-ன் படங்கள்]
இயேசுவின் நுகத்தின்கீழ் செய்யும் உயிர் காக்கும் வேலை புத்துணர்ச்சி அளிக்கிறது