சத்தியம் உங்களுக்கு எந்தளவு அருமையானது?
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32.
1. ‘சத்தியம்’ என்ற சொல்லை பிலாத்து பயன்படுத்தியது, இயேசு பயன்படுத்தியதிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்தது?
“சத்தியமாவது என்ன?” இந்தக் கேள்வியை பிலாத்து கேட்டபோது, பொதுவாக சத்தியமென்றால் என்ன என்பதை அறிவதிலேயே அக்கறை காட்டினார் என தெரிகிறது. மறுபட்சத்தில், அப்போதுதான் இயேசு இவ்வாறு சொல்லியிருந்தார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:37, 38) ‘சத்தியம்’ என்று இயேசு குறிப்பிட்டபோது “அந்த” என்ற சுட்டிடைச் சொல்லை பயன்படுத்தினார் என்பதை மூல கிரேக்க வாக்கியம் காட்டுகிறது. அவர் தேவ சத்தியத்தைக் குறித்து பேசினார்.
சத்தியத்திடம் இந்த உலகின் மனப்பான்மை
2. இயேசு சொன்ன என்ன குறிப்பு சத்தியத்தின் மதிப்பை சுட்டிக் காட்டுகிறது?
2 பவுல் இவ்வாறு சொன்னார்: “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.” (2 தெசலோனிக்கேயர் 3:2) சத்தியத்தைப் பொருத்ததிலும் இதுவே உண்மை. பைபிளில் ஆதாரங்கொண்ட சத்தியத்தை அறியும்படி வாய்ப்பு கொடுக்கப்படுகிறபோதும், பலர் அதை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனர். ஆனால் சத்தியம் எந்தளவு அருமையானது! இயேசு இவ்வாறு சொன்னார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32.
3. வஞ்சக போதகங்களைப் பற்றிய என்ன எச்சரிக்கைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்?
3 மனித தத்துவங்களிலும் பாரம்பரியங்களிலும் சத்தியம் இல்லை என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார். (கொலோசெயர் 2:8) நிச்சயமாகவே, அத்தகைய போதகங்கள் வஞ்சகமானவை. அவற்றில் விசுவாசம் வைத்தால், ஆவிக்குரிய குழந்தைகளைப்போல், ‘மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாய்’ இருப்பார்களென்று எபேசிய கிறிஸ்தவர்களை பவுல் எச்சரித்தார். (எபேசியர் 4:14) இன்று “மனுஷருடைய சூது,” தேவ சத்தியத்தை எதிர்ப்போரின் பிரச்சாரத்தால் பரப்பப்படுகிறது. “பிரச்சாரம்” என்பது “மற்ற ஜனங்களின் நம்பிக்கைகளை, மனப்பான்மைகளை, அல்லது செயல்களை சூழ்ச்சி திறத்துடன் கையாளுவதற்கு எடுக்கும் திட்டவட்டமான முயற்சி” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா தொகுத்துரைக்கிறது. இத்தகைய பிரச்சாரம் சத்தியத்தை பொய் என தந்திரமாக திரித்துக் கூறி, பொய்களை சத்தியமென பரப்புகிறது. இத்தகைய நயவஞ்சக வலையில் சிக்காமல் சத்தியத்தைக் கண்டடைய நாம் வேதவசனங்களை கவனமாய் ஆராய்ந்தறிய வேண்டும்.
கிறிஸ்தவர்களும் உலகமும்
4. சத்தியம் யாருக்குக் கிடைக்கிறது, அதைப் பெறுவோரின் கடமை என்ன?
4 தம் சீஷர்களாக ஆனவர்களைக் குறித்து இயேசு கிறிஸ்து இவ்வாறு யெகோவாவிடம் ஜெபித்தார்: “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) இத்தகையோர் யெகோவாவை சேவிப்பார்கள், அவருடைய பெயரையும் ராஜ்யத்தையும் அறிவிக்கும் நோக்கத்திற்காக பரிசுத்தமாக்கப்படுவார்கள், அல்லது பிரித்து வைக்கப்படுவார்கள். (மத்தேயு 6:9, 10; 24:14) யெகோவாவின் சத்தியம் எல்லாருக்கும் சொந்தமானதாக இல்லாதபோதிலும், அதை நாடும் எல்லாருக்கும் அது இலவச பரிசாக கிடைக்கிறது; அவர்கள் எந்த நாட்டவராக, இனத்தவராக, சமுதாயத்தவராக இருந்தாலும் அது கிடைக்கிறது. அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு கூறினார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
5. கிறிஸ்தவர்கள் ஏன் அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர்?
5 கிறிஸ்தவர்கள் பைபிள் சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள், ஆனால் அவர்களை எல்லாரும் வரவேற்பதில்லை. “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” என இயேசு எச்சரித்தார். (மத்தேயு 24:9) 1817-ல் அயர்லாந்தைச் சேர்ந்த ஜான் ஆர். காட்டர் என்ற மதகுரு இந்த வசனத்திற்கு இவ்வாறு விளக்கம் அளித்தார்: “பிரசங்கிப்பதன் மூலம் மனிதரின் வாழ்க்கையைச் சீர்திருத்தும் அவர்களுடைய [கிறிஸ்தவர்களுடைய] முயற்சிகள், ஜனங்கள் நன்றியுணர்வோடு நடந்துகொள்வதற்கு பதிலாக, தங்கள் குற்றங்குறைகளை வெட்டவெளிச்சமாக்குவதற்காக சீஷர்களைப் பகைத்து துன்புறுத்தவே செய்யும்.” துன்புறுத்தும் இப்படிப்பட்ட ஆட்கள், “இரட்சிக்கப்படுவதற்குச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை ஏற்றுக்கொள்”வதில்லை. ஆகையால் “சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.”—2 தெசலோனிக்கேயர் 2:10-12; தி.மொ.
6. என்ன ஆசையை ஒரு கிறிஸ்தவன் வளர்க்கக் கூடாது?
6 பகைமை காட்டும் இந்த உலகத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு அறிவுரை கூறினார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; . . . மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” (1 யோவான் 2:15, 16) ‘எல்லாம்’ என்று சொல்வதில் யோவான் எதையும் ஒதுக்கி விடுகிறதில்லை. எனவே, சத்தியத்திலிருந்து நம்மை வழிவிலகச் செய்யும் எதை இந்த உலகம் அளித்தாலும் அதனிடம் நாம் ஆசையை வளர்க்கக்கூடாது. யோவானின் அறிவுரைக்கு செவிகொடுப்பது, நம்முடைய வாழ்க்கையில் வல்லமைவாய்ந்த செல்வாக்கு செலுத்தும். எவ்வாறு?
7. எவ்வாறு சத்தியத்தின் அறிவு, நல்மனமுள்ளோரை தூண்டுகிறது?
7 உலகமெங்கும் 2001-ஆம் ஆண்டின்போது யெகோவாவின் சாட்சிகள் நாற்பத்தைந்து லட்சத்திற்கும் அதிகமான பைபிள் படிப்புகளை ஒவ்வொரு மாதமும் நடத்தினார்கள்; ஜீவனைப் பெற விரும்புகிறவர்களிடம் கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என தனிப்பட்டவர்களுக்கும் தொகுதிகளுக்கும் போதித்தார்கள். இதன் பலனாக, 2,63,431 பேர் முழுக்காட்டப்பட்டார்கள். இந்தப் புதிய சீஷர்களுக்கு சத்தியத்தின் ஒளி மிக அருமையானதாக இருந்ததால், கெட்ட சகவாசங்களையும் இந்த உலகத்தில் மலிந்து கிடக்கும் பாலுறவு ஒழுக்கக்கேட்டையும் கடவுளுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வழிகளையும் வெறுத்து ஒதுக்கினார்கள். முழுக்காட்டப்பட்ட சமயத்திலிருந்து, கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் யெகோவா வைத்திருக்கிற தராதரங்களுக்கு இசைய அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். (எபேசியர் 5:5) சத்தியம் உங்களுக்கு அந்தளவு அருமையானதாக இருக்கிறதா?
யெகோவா நம்மை கவனித்துக் காக்கிறார்
8. நம்முடைய ஒப்புக்கொடுத்தலை யெகோவா எவ்வாறு ஏற்கிறார், ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவது’ ஏன் ஞானமானது?
8 நம்முடைய அபூரணங்களைப் பொருட்படுத்தாமல், யெகோவா நம் ஒப்புக்கொடுத்தலை இரக்கத்துடன் ஏற்கிறார்; அடையாள அர்த்தத்தில் சொல்லப்போனால், குனிந்து தம்மிடம் நம்மை இழுத்துக்கொள்கிறார். இவ்வாறு, உயர்ந்த இலக்குகளையும் ஆசைகளையும் கொண்டிருக்கும்படி நமக்கு கற்பிக்கிறார். (சங்கீதம் 113:6-8) அதே சமயத்தில், தம்மோடு நெருங்கிய உறவை அனுபவிக்கவும் யெகோவா அனுமதிக்கிறார்; மேலும், நாம் ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் . . . தொடர்ந்து தேடினால்’ நம்மை கவனித்துக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறார். இதை செய்வதன் மூலம் ஆவிக்குரிய விதத்தில் நம்மை பாதுகாத்துக்கொண்டால் ‘மற்ற அனைத்தும் நமக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்’ என அவர் வாக்குறுதி அளிக்கிறார்.—மத்தேயு 6:33, NW.
9. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” யார், இந்த ‘அடிமையின்’ மூலம் யெகோவா எவ்வாறு நம்மை கவனித்துக் காக்கிறார்?
9 இயேசு கிறிஸ்து தமது 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்து, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபைக்கு அவர்களை அஸ்திவாரமாக்கினார். அவர்கள் “கடவுளின் இஸ்ரவேல்” என்று அழைக்கப்பட்டார்கள். (கலாத்தியர் 6:16, தி.மொ.; வெளிப்படுத்துதல் 21:9, 14) பின்னால் இவர்கள், “ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிரு”ப்பதாக விவரிக்கப்பட்டார்கள். (1 தீமோத்தேயு 3:15) அந்த சபையை சேர்ந்த குறிப்பிட்ட சிலரை, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” எனவும், “உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன்” எனவும் இயேசு குறிப்பிட்டார். அந்த உண்மையுள்ள அடிமையே கிறிஸ்தவர்களுக்கு “ஏற்ற காலத்திலே படி கொடுக்கும்படி”யான பொறுப்பு உடையவன் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:3, 45-47, NW; லூக்கா 12:42) சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் நாம் சாவோம். அவ்வாறே ஆவிக்குரிய உணவை உட்கொள்ளாதிருந்தால், நாம் பலவீனமடைந்து ஆவிக்குரிய ரீதியில் சாவோம். ஆகையால், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” இருப்பது, யெகோவா நம்மைக் கவனித்துக் காக்கிறார் என்பதற்கு இன்னுமொரு நிரூபணமாக இருக்கிறது. இந்த “அடிமை” மூலமாய் நமக்கு அருளப்படுகிற அருமையான ஆவிக்குரிய உணவுக்கான ஏற்பாடுகளை நாம் நன்றியோடு உயர்வாய் மதிப்போமாக.—மத்தேயு 5:3.
10. தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வது ஏன் முக்கியம்?
10 ஆவிக்குரிய உணவை உட்கொள்வது தனிப்பட்ட படிப்பை உட்படுத்துகிறது. மேலும், பிற கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு கொள்வதையும் சபை கூட்டங்களுக்கு வருவதையும் இது உட்படுத்துகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு, அல்லது ஏன் ஆறு வாரங்களுக்கு முன்பு என்ன சாப்பிட்டீர்கள் என்பது உங்களுக்கு தெளிவாக நினைவிருக்கிறதா? பெரும்பாலும் இராது. இருப்பினும், நீங்கள் என்ன சாப்பிட்டிருந்தாலும் அது உங்களை பலப்படுத்துவதற்கு தேவையான ஊட்டமளித்தது. அதற்குப் பின்னும் நீங்கள் அதைப் போன்ற உணவை சாப்பிட்டிருக்கலாம். நம்முடைய கிறிஸ்தவக் கூட்டங்களில் அளிக்கப்படும் ஆவிக்குரிய உணவைக் குறித்ததிலும் அதுவே உண்மை. கூட்டங்களில் நாம் கேட்ட ஒவ்வொரு குறிப்பையும் நம் நினைவுக்குக் கொண்டுவர ஒருவேளை முடியாமல் போகலாம். மேலும் அதைப் போன்ற தகவல் அடிக்கடி கொடுக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், அது ஆவிக்குரிய உணவு, அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு அவசியமானது. எப்பொழுதும் சிறந்த ஆவிக்குரிய போஷாக்கை ஏற்ற சமயத்தில் நம்முடைய கூட்டங்கள் அளிக்கின்றன.
11. கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நாம் ஆஜராகையில் என்ன பொறுப்புகள் நமக்கு இருக்கின்றன?
11 கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்வதும் ஒரு பொறுப்பை நம்மீது சுமத்துகிறது. ‘ஒருவருக்கொருவர் புத்திசொல்லி [“ஊக்கமளித்து,” NW],’ சபையிலுள்ள சக நண்பர்களை “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும்” ஏவும்படி கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. கிறிஸ்தவக் கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் நாம் செல்வதும், அவற்றிற்காக தயாரிப்பதும், அவற்றில் பங்குகொள்வதும் தனிப்பட்ட முறையில் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதுடன் மற்றவர்களையும் ஊக்குவிக்கிறது. (எபிரெயர் 10:23-25) சிறுபிள்ளைகளைப்போல் ருசியாக இருப்பதை மட்டுமே தேர்ந்தெடுக்கும் சிலரை, ஊட்டச்சத்துமிக்க ஆவிக்குரிய உணவை உட்கொள்ளும்படி தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டியிருக்கலாம். (எபேசியர் 4:11) இத்தகையோர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாகும்படி, தேவைப்படுகையில் இந்த ஊக்குவிப்பை அவர்களுக்கு அளிப்பது அன்புள்ள செயலாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.”—எபிரெயர் 5:14
ஆவிக்குரிய பிரகாரம் நம்மை கவனித்தல்
12. சத்தியத்தில் நாம் நிலைத்திருக்க விரும்பினால், யாருக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது? விளக்கவும்.
12 நம்முடைய மணத்துணை அல்லது பெற்றோர், சத்தியத்தின் வழியில் செல்லும்படி நம்மை ஊக்குவிக்கலாம். அவ்வாறே, சபை மூப்பர்கள் தங்கள் கவனிப்பின்கீழுள்ள மந்தையிலிருக்கும் நம்மை மேய்க்கலாம். (அப்போஸ்தலர் 20:28) ஆனால், சத்தியத்தின் மீது ஆதாரங்கொண்ட நமது வாழ்க்கை முறையில் விடாமுயற்சியோடு முன்னேற விரும்பினால், யாருக்கு முக்கிய பொறுப்புள்ளது? நம் ஒவ்வொருவருக்கும்தான் என்பதில் சந்தேகமில்லை. சாதகமான காலத்திலும் பாதகமான காலத்திலும் பொறுப்பு நம்முடையதே. பின்வரும் சம்பவத்தை கவனியுங்கள்.
13, 14. ஓர் ஆட்டுக்குட்டியின் அனுபவத்தில் பார்த்தபடி, தேவைப்படும் ஆவிக்குரிய உதவியை நாம் எப்படி பெறலாம்?
13 ஸ்காட்லாந்தில் சில ஆட்டுக்குட்டிகள் புல் மேய்கையில் அவற்றில் ஒன்று மலைச்சரிவில் வழிதவறிச் சென்று பாறை விளிம்பிலிருந்து தடுமாறி விழுந்தது; அதற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் அது பயந்துபோய் திரும்பவும் மேலேற தெரியாமல் திண்டாடியது. ஆகையால் வேதனையோடு கத்தத் தொடங்கியது. அந்த சத்தத்தைக் கேட்ட அதன் தாய் ஆடும், மேய்ப்பன் வந்து அந்த ஆட்டுக்குட்டியை மீட்கும் வரையில் கத்திக்கொண்டே இருந்தது.
14 ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நடந்தவற்றை கவனியுங்கள். அந்த ஆட்டுக்குட்டி உதவிக்காக கத்தியது, அதன் தாயும் குரல்கொடுத்தது, அபயக் குரலைக் கேட்ட மேய்ப்பனும் மீட்பதற்கு ஓடோடி வந்தான். இவ்வாறு, விலங்கினத்தைச் சேர்ந்த சின்னஞ்சிறு குட்டியும் அதன் தாயுமே ஆபத்தை உணர்ந்து, உதவிக்காக உடனடியாக கத்துமானால், ஆவிக்குரிய பிரகாரம் தடுமாறுகையில், அல்லது சாத்தானுடைய உலகிலிருந்து வரும் எதிர்பாராத ஆபத்துகளை எதிர்ப்படுகையில் நாமும் அவ்வாறே உதவி கேட்டு மன்றாட வேண்டுமல்லவா? (யாக்கோபு 5:14, 15; 1 பேதுரு 5:8) நிச்சயம் மன்றாட வேண்டும். முக்கியமாய், நாம் இளைஞராக, அல்லது சத்தியத்தில் புதியவர்களாக, அனுபவமற்றவர்களாக இருந்தால் அவ்வாறு செய்ய வேண்டும்.
கடவுளின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதால் மகிழ்ச்சி
15. கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவுகொள்ள தொடங்கினபோது ஓர் அம்மாள் எவ்வாறு உணர்ந்தார்?
15 பைபிளைப் புரிந்துகொள்வதன் மதிப்பையும், சத்தியத்தின் கடவுளை சேவிப்போருக்கு அது தரும் மனசமாதானத்தையும் சிந்தித்துப் பாருங்கள். சர்ச் ஆஃப் இங்லண்டின் அங்கத்தினராக இருந்து தன் வாழ்நாளை கழித்த 70 வயதான ஓர் அம்மாள், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருடன் பைபிளைப் படிக்க சம்மதித்தார். கடவுளின் பெயர் யெகோவா என்பதை அவர் விரைவில் கற்றுக்கொண்டார், அவ்விடத்து ராஜ்ய மன்றத்தில் இருதயப்பூர்வமாக ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களுக்கு “ஆமென்” சொன்னார். அவர் உணர்ச்சி பொங்க இவ்வாறு கூறினார்: “கடவுள் அண்ட முடியாத அளவுக்கு மிகத் தொலைவானவராக இருப்பதால் அற்ப மனிதர்களால் அவரிடம் நெருங்கவே முடியாது என காட்டுவதற்கு பதிலாக, நம் மத்தியிலேயே இருக்கும் நேசத்திற்குரிய நண்பராக அவரை காட்டுகிறீர்கள். இது எனக்கு புதிய அனுபவம்.” ஆர்வம் காட்டிய அன்புள்ள அந்த அம்மாள், சத்தியத்தின்மீது தனக்கு ஏற்பட்ட அந்த முதல் அபிப்பிராயத்தை ஒருபோதும் மறக்கமாட்டாரென தோன்றுகிறது. அவ்வாறே நாமும், சத்தியத்தை முதன்முதலில் ஏற்றபோது, அது நமக்கு எந்தளவு அருமையானதாக இருந்தது என்பதை ஒருபோதும் மறவாதிருப்போமாக.
16. (அ) பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தால் நமக்கு என்ன நேரிடலாம்? (ஆ) மெய்யான சந்தோஷத்தை நாம் எவ்வாறு கண்டடையலாம்?
16 தங்களுக்கு இன்னுமதிக பணம் இருந்தால் சந்தோஷமாய் வாழலாம் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தால், “சொல்ல முடியாத மனவேதனைகளை”யே நாம் அனுபவிக்க வேண்டிவரும். (1 தீமோத்தேயு 6:10, ஃபிலிப்ஸ்) கட்டுக்கட்டாக பணத்தைப் பார்க்கும் ஆசையில், எத்தனை பேர் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குகிறார்கள், சூதாட்ட களங்களில் பணத்தை விரயமாக்குகிறார்கள், அல்லது பங்கு சந்தையில் துணிந்து கொட்டுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். வெகு சிலரே தாங்கள் கனவு நனவாகி திடீர் பணக்காரர்களாகிறார்கள். அவர்களுங்கூட, அந்தப் பணத்தால் தங்களுக்கு சந்தோஷத்தை வாங்க முடியாது என்பதை பிற்பாடு புரிந்துகொள்கிறார்கள். இதற்கு எதிர்மாறாக, நிலையான சந்தோஷம் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதிலிருந்தே கிடைக்கிறது; யெகோவாவின் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுடனும் அவருடைய தூதர்களின் உதவியுடனும் கிறிஸ்தவ சபையோடு சேர்ந்து உழைப்பதால் பெற முடிகிறது. (சங்கீதம் 1:1-3; 84:4, 5; 89:15) இதை நாம் செய்கையில், எதிர்பாராத ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம். அத்தகைய ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிப்பதற்கு சத்தியம் உங்களுக்கு அவ்வளவு அருமையானதாக இருக்கிறதா?
17. தோல் பதனிடும் சீமோனுடன் அப்போஸ்தலன் பேதுரு தங்கியது, அவருடைய மனப்பான்மையைப் பற்றி என்ன வெளிப்படுத்தினது?
17 அப்போஸ்தலன் பேதுருவின் அனுபவத்தைக் கவனியுங்கள். பொ.ச. 36-ஆம் ஆண்டில், ஒருமுறை மிஷனரி பயணத்தில் சாரோன் சமவெளிக்கு சென்றார். பயணத்தின் இடையே லித்தாவில் அவர் திமிர்வாதமாய்க் கிடந்த ஐனேயாவை சுகப்படுத்தினார், பின்பு துறைமுகப் பட்டணமான யோப்பாவுக்குச் சென்றார். அங்கு தொற்காளை உயிர்த்தெழுப்பினார். அப்போஸ்தலர் 9:43 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்.” ரத்தன சுருக்கமான இந்தக் குறிப்பு, பேதுரு தப்பெண்ணமின்றி அந்தப் பட்டணத்தாருக்கு ஊழியம் செய்ததைக் காட்டுகிறது. எவ்வாறு? பைபிள் அறிஞர் ஃபிரெட்ரிக் டபிள்யு. ஃபாரர் இவ்வாறு எழுதுகிறார்: “தோல் பதனிடுபவனின் வீட்டில், [நியாயப்பிரமாண] வாய்மொழி சட்டத்தை உறுதியாகவும், விட்டுக்கொடுக்காமலும் பின்பற்றிய எவரும் தங்குவது சாமானியமான விஷயமல்ல. இந்தத் தொழிலை பொறுத்தமட்டில், பல்வேறு மிருகங்களின் தோல்களையும் உடல்களையும் அதற்குத் தேவைப்பட்ட பிற பொருள்களையும் அன்றாடம் உபயோகிக்க வேண்டியிருந்தது. சட்டத்தை அப்படியே பின்பற்றிய எல்லோரின் கண்களுக்கும் அது அசுத்தமும் அருவருப்புமானது.” ‘கடலோரத்திலிருந்த சீமோனின் வீடு’ அவன் தோல் பதனிடும் இடத்திற்கு அருகில் இல்லாவிட்டாலும் சீமோன் செய்து வந்த தொழில் “அருவருப்பானதாய் கருதப்பட்டது, அதில் ஈடுபட்ட யாவரின் சுயமரியாதையையும் தாழ்த்தியது” என்று ஃபாரர் சொல்லுகிறார்.—அப்போஸ்தலர் 10:6.
18, 19. (அ) தான் கண்ட தரிசனத்தைக் குறித்து பேதுரு ஏன் குழப்பமடைந்தார்? (ஆ) எதிர்பாராத என்ன ஆசீர்வாதம் பேதுருவுக்கு அருளப்பட்டது?
18 சீமோனின் உபசரிப்பை தப்பெண்ணமற்ற பேதுரு ஏற்றார். அங்கு பேதுரு, எதிர்பாராத தேவ வழிநடத்துதலை பெற்றார். அவர் ஒரு தரிசனம் கண்டார். அதில் யூத சட்டத்தின்படி அசுத்தமானதாக கருதப்பட்ட மிருகங்களைப் புசிக்கும்படி கட்டளையிடப்பட்டார். பேதுரு, “தீட்டும் அசுத்தமுமான யாதொன்றையும் நான் ஒருகாலும் சாப்பிட்டதில்லையே” என்று மறுத்தார். ஆனால், “கடவுள் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என மூன்று தடவை அவருக்கு சொல்லப்பட்டது. ‘தாம் கண்ட காட்சியின் பொருள் என்ன என்பது பற்றிப் பேதுரு தமக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தது’ (பொ.மொ.) புரிந்துகொள்ளத்தக்கதே.—அப்போஸ்தலர் 10:5-17, தி.மொ.; 11:7-10.
19 அதற்கு முந்தின நாளில், 50 கிலோமீட்டர் தூரத்திலிருந்த செசரியாவில், கொர்நேலியு என்ற ஒரு புறதேசத்தார் தரிசனம் ஒன்றைக் கண்டது பேதுருவுக்குத் தெரியாது. தோல் பதனிடுபவராகிய சீமோனின் வீட்டில் இருக்கும் பேதுருவை கண்டுபிடித்து அழைத்துவர ஊழியக்காரரை அனுப்பும்படி கொர்நேலியுவிடம் யெகோவாவின் தூதன் கட்டளையிட்டிருந்தார். கொர்நேலியு தன் ஊழியக்காரரை சீமோனின் வீட்டுக்கு அனுப்பினார், பேதுரு அவர்களோடுகூட செசரியாவுக்கு வந்தார். அங்கு கொர்நேலியுவுக்கும் அவருடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பிரசங்கித்தார். இதன் பலனாக, ராஜ்ய சுதந்தரவாளிகளாக பரிசுத்த ஆவியைப் பெற்ற, விருத்தசேதனமில்லாத முதலாவது புறஜாதி விசுவாசிகளானார்கள். ஆண்கள் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக இருந்தபோதிலும், பேதுருவின் வார்த்தையைக் கேட்ட எல்லாரும் முழுக்காட்டப்பட்டார்கள். யூதருடைய நோக்குநிலையில் அசுத்தமானவர்களாக கருதப்பட்ட தேசத்தார், கிறிஸ்தவ சபையின் உறுப்பினராவதற்கு இது வழியைத் திறந்தது. (அப்போஸ்தலர் 10:1-48; 11:18) பேதுருவுக்கு மாபெரும் சிலாக்கியம் கிடைத்தது! இதற்கெல்லாம் காரணம், சத்தியம் அவருக்கு அருமையானதாக இருந்ததே. மேலும், யெகோவாவிடமிருந்து வரும் வழிநடத்துதலுக்குச் செவிசாய்க்கவும் விசுவாசத்துடன் செயல்படவும் அது அவரை வழிநடத்தியது.
20. சத்தியத்திற்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கையில் கடவுளிடமிருந்து என்ன உதவி நமக்கு கிடைக்கிறது?
20 பவுல் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “சத்தியத்தைப் பேசுவோராய், தலைவராகிய கிறிஸ்துவுக்குள் எல்லா காரியங்களிலும் அன்பில் நாம் வளருவோமாக.” (எபேசியர் 4:15, NW) ஆம், சத்தியத்திற்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து, யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாய் நம் நடைகளை வழிநடத்தும்படி அனுமதித்தால், ஒப்பற்ற சந்தோஷத்தை சத்தியம் இப்போது தரும். மேலும், பரிசுத்த தேவதூதர்கள் நம்முடைய சுவிசேஷ ஊழியத்திற்கு ஆதரவளிப்பதையும் மனதில் வையுங்கள். (வெளிப்படுத்துதல் 14:6, 7; 22:6) செய்யும்படி யெகோவா நம்மிடம் ஒப்படைத்துள்ள ஊழியத்தில் அத்தகைய ஆதரவு நமக்கு இருப்பதற்கு நாம் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோம்! உத்தமத்தைக் காத்துவருவது, சத்தியத்தின் கடவுளாகிய யெகோவாவை நித்திய காலமும் துதிக்கும்படி நம்மை வழிநடத்தும். இதைப் பார்க்கிலும் அருமையானது எதுவும் இருக்க முடியுமா?—யோவான் 17:3.
நாம் என்ன கற்றோம்?
• ஏன் பலர் சத்தியத்தை ஏற்பதில்லை?
• சாத்தானின் உலகிலுள்ள காரியங்களை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருத வேண்டும்?
• கூட்டங்களை நாம் எப்படி கருத வேண்டும், ஏன்?
• ஆவிக்குரிய விதத்தில் நம்மை கவனித்துக் கொள்வதற்கு என்ன பொறுப்பு நமக்கு இருக்கிறது?
[பக்கம் 18-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பெருங்கடல்
செசரியா
சாரோன் சமவெளி
யோப்பா
லித்தா
எருசலேம்
[படம்]
கடவுளுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்த பேதுரு எதிர்பாராத ஆசீர்வாதங்களை அடைந்தார்
[படத்திற்கான நன்றி]
வரைபடம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 13-ன் படம்]
இயேசு சத்தியத்திற்கு சாட்சி பகர்ந்தார்
[பக்கம் 15-ன் படம்]
சரீர உணவைப்போல், ஆவிக்குரிய உணவு நம் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது