வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
யெகோவாவின் இரக்கம் அவருடைய நீதியை கட்டுப்படுத்துகிறது என சொல்வது சரியா?
இவ்வாறு உபயோகித்து வந்திருந்தபோதிலும் இச்சொற்றொடரை தவிர்ப்பதே சாலச்சிறந்தது. ஏனெனில் இது, யெகோவாவின் இரக்கம் அவருடைய நீதியை தணிக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுபோல் தொனிக்கிறது; கடுமையான குணமாகிய நீதியைவிட இரக்கம் மேம்பட்ட குணம் என்பதைப் போல தோன்றச் செய்கிறது. இது தவறான கருத்து.
“நீதி” என்பதற்கான எபிரெய சொல் “நியாயத்தீர்ப்பு” என்றும் அர்த்தப்படலாம். நீதியும் நியாயமும் நெருங்கிய தொடர்புடையவை. என்றாலும், நீதி பொதுவாக சட்டப்பூர்வ அர்த்தமுள்ளது. நியாயமோ பொதுவாக அப்படி அர்த்தம் தருவதில்லை. தகுந்த தண்டனை கொடுப்பது யெகோவாவின் நீதியில் உட்பட்டுள்ளது உண்மையே; அதேசமயம், தகுதியுள்ளவர்களுக்கு இரட்சிப்பை அளிப்பதும் அதில் உட்பட்டிருக்கலாம். (ஆதியாகமம் 18:20-32; ஏசாயா 56:1; மல்கியா 4:2) ஆகவே, யெகோவாவின் நீதி கடுமையானது, தணிக்கப்பட வேண்டியது என்று கருதக்கூடாது.
“இரக்கம்” என்பதற்கான எபிரெய சொல், நியாயந்தீர்க்கையில் கட்டுப்பாடுடன் இருப்பதை குறிக்கலாம். முன்வந்து பரிவு காட்டுவதையும் துன்பப்படுவோருக்கு ஆறுதல் அளிப்பதையும்கூட அது உட்படுத்தலாம்.—உபாகமம் 10:18; லூக்கா 10:29-37.
யெகோவா நீதியும் இரக்கமுமுள்ள தேவன். (யாத்திராகமம் 34:6, 7; உபாகமம் 32:4; சங்கீதம் 145:9) அவருடைய நீதியும் இரக்கமும் பரிபூரணமானவை, அவை இரண்டும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படுகின்றன. (சங்கீதம் 116:5; ஓசியா 2:19) இந்த இரண்டு குணங்களும் ஒன்றையொன்று பரிபூரணமாக சமநிலைப்படுத்துகின்றன அல்லது நிறைவு செய்கின்றன. ஆகவே, யெகோவாவின் இரக்கம் அவருடைய நீதியை கட்டுப்படுத்துகிறது என்று சொன்னால் அவருடைய நீதி அவருடைய இரக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் சொல்ல வேண்டும்.
“உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதி செய்கிற தேவன்” என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். (ஏசாயா 30:18) யெகோவாவின் இரக்கம் அவருடைய நீதியை தணிக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது என்று சொல்வதற்கு பதிலாக, அவருடைய நீதி இரக்கத்தின் செயல்களை தூண்டுவிக்கிறது என ஏசாயா இங்கு கூறுகிறார். யெகோவா நீதியும், அன்பும் உள்ளவராக இருப்பதால்தான் இரக்கம் காட்டுகிறார்.
“நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” என பைபிள் எழுத்தாளர் யாக்கோபு எழுதியது உண்மையே. (யாக்கோபு 2:13ஆ) என்றாலும், சூழமைவை கவனிக்கையில் யாக்கோபு யெகோவாவை பற்றியல்ல, சிறுமையானவர்களுக்கும் எளியவர்களுக்கும் இரக்கம் காட்டுகிற கிறிஸ்தவர்களை பற்றியே பேசுகிறார் என்பது தெளிவாகிறது. (யாக்கோபு 1:27; 2:1-9) அவ்வாறு இரக்கம் காண்பிக்கிறவர்கள் நியாயத்தீர்ப்பை எதிர்ப்படுகையில், யெகோவா அவர்களுடைய நடத்தையை கவனத்தில் வைத்து தமது குமாரனுடைய பலியின் அடிப்படையில் அவர்களை இரக்கத்தோடு மன்னிக்கிறார். இவ்வாறு, அவர்களுடைய இரக்கமுள்ள நடத்தை, அவர்களுக்கு வரவிருந்த தண்டனைக்குரிய நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்களை விடுவிக்கிறது.—நீதிமொழிகள் 14:21; மத்தேயு 5:7; 6:12; 7:2.
ஆகவே, யெகோவாவின் நீதியை இரக்கத்தால் குறைக்க வேண்டும் என்பது போல, அவருடைய இரக்கம் அவருடைய நீதியை கட்டுப்படுத்துகிறது என்று சொல்வது சரியல்ல. இந்த இரண்டு குணங்களுமே யெகோவாவிடம் பரிபூரண சமநிலையில் உள்ளன. அவை ஒன்றையொன்றும், அன்பு, ஞானம் போன்ற யெகோவாவின் மற்ற குணங்களையும் சமநிலைப்படுத்துகின்றன; அதேபோல அவை மற்ற குணங்களாலும் சமநிலைப்படுத்தப்படுகின்றன.