உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w21 அக்டோபர் பக். 8-13
  • “மகா இரக்கமுடைய” கடவுளை நாம் வணங்குகிறோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மகா இரக்கமுடைய” கடவுளை நாம் வணங்குகிறோம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா ஏன் இரக்கம் காட்டுகிறார்?
  • சபைநீக்கம்—இரக்கமான ஒரு செயல்
  • இரக்கம் காட்ட நம் எல்லாருக்கும் எது உதவும்?
  • ‘உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • தொடர்ந்து இரக்கம் காட்டுவது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • இரக்கமுள்ளோர் சந்தோஷமானோர்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இரக்கமுள்ளவர்கள், மகிழ்ச்சியுள்ளவர்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
w21 அக்டோபர் பக். 8-13

படிப்புக் கட்டுரை 41

“மகா இரக்கமுடைய” கடவுளை நாம் வணங்குகிறோம்

“யெகோவா எல்லாருக்கும் நல்லது செய்கிறார். அவருடைய இரக்கம் அவருடைய எல்லா செயல்களிலும் தெரிகிறது.”—சங். 145:9.

பாட்டு 44 சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்

இந்தக் கட்டுரையில்...a

1. இரக்கம் என்று சொன்னவுடனே உங்களுக்கு எந்தக் கதை ஞாபகத்துக்கு வருகிறது, இரக்கமுள்ள ஒருவர் எப்படி நடந்துகொள்வார்?

இரக்கமுள்ள ஒருவரை நீங்கள் எப்படி வர்ணிப்பீர்கள்? அவர் அன்பாக இருப்பார்... அவருக்கு இளகிய மனம் இருக்கும்... கரிசனையோடு நடந்துகொள்வார்... தாராள குணத்தைக் காட்டுவார். இதைப் பற்றி யோசிக்கும்போது, இயேசு சொன்ன சமாரியனைப் பற்றிய கதை உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். அந்த நபர் ஒரு யூதனாக இல்லாவிட்டாலும், கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டு அடிபட்டுக் கிடந்த யூதனிடம் ‘இரக்கத்தோடு நடந்துகொண்டார்.’ அந்த யூதனைப் பார்த்தவுடனே சமாரியனின் ‘மனம் உருகியது.’ அவன்மேல் இருந்த அன்பால் அவனை நன்றாகக் கவனித்துக்கொண்டார். (லூக். 10:29-37) இந்தக் கதையிலிருந்து யெகோவா காட்டும் ஓர் அருமையான குணத்தைப் பற்றி, அதாவது இரக்கத்தைப் பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அவர் நம்மேல் அளவுகடந்த அன்பு வைத்திருப்பதால் ஒவ்வொரு நாளும் நம்மிடம் இரக்கத்தோடு நடந்துகொள்கிறார்.

2. இரக்கத்தோடு நடந்துகொள்கிற ஒருவர் வேறு எதையும் செய்வார்?

2 இரக்கமுள்ள ஒருவர் இன்னொன்றையும் செய்வார். அதாவது, ஒருவரைத் தண்டிக்க வேண்டியிருந்தாலும், நியாயமான காரணம் இருக்கும்போது தண்டிக்காமல் மன்னித்துவிடுவார். நம் ஒவ்வொருவருடைய விஷயத்திலும் யெகோவா இதைத்தான் செய்கிறார். சங்கீதக்காரர் சொல்வதுபோல், ‘நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நம்மை நடத்துவது’ கிடையாது. (சங். 103:10) ஆனால், கண்டித்துத் திருத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது அதைச் செய்யாமல் இருக்க மாட்டார்.

3. என்னென்ன கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில்களைப் பார்ப்போம்?

3 இந்தக் கட்டுரையில் மூன்று கேள்விகளுக்குப் பதில்களைப் பார்ப்போம். (1) யெகோவா ஏன் இரக்கம் காட்டுகிறார்? (2) மற்றவர்களைக் கண்டித்துத் திருத்தும்போதும் அவர் இரக்கத்தோடு நடந்துகொள்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்? (3) மற்றவர்களிடம் இரக்கம் காட்ட எது நமக்கு உதவும்?

யெகோவா ஏன் இரக்கம் காட்டுகிறார்?

4. யெகோவா ஏன் இரக்கம் காட்டுகிறார்?

4 இரக்கம் காட்டுவது யெகோவாவுக்கு ரொம்பப் பிடிக்கும். கடவுள் ‘மகா இரக்கமுடையவர்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். பாவ இயல்புள்ள மனிதர்களில் சிலரைப் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கடவுள் அவர்கள்மேல் இரக்கம் காட்டினார். இதை மனதில் வைத்துதான் பவுல் அப்படி எழுதினார். (எபே. 2:4-7) பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் யெகோவா இரக்கம் காட்டுகிறார். “யெகோவா எல்லாருக்கும் நல்லது செய்கிறார். அவருடைய இரக்கம் அவருடைய எல்லா செயல்களிலும் தெரிகிறது” என சங்கீதக்காரரான தாவீது எழுதினார். (சங். 145:9) தன்னுடைய மக்களை யெகோவா ரொம்ப நேசிக்கிறார். நியாயமான காரணம் இருக்கும்போது அவர்கள்மீது இரக்கம் காட்டுகிறார்.

5. யெகோவாவின் இரக்க குணத்தைப் பற்றி இயேசு எப்படித் தெரிந்துகொண்டார்?

5 இரக்கம் காட்டுவது யெகோவாவுக்கு ரொம்பப் பிடிக்கும் என்பது வேறு யாரையும்விட இயேசுவுக்குத்தான் நன்றாகத் தெரியும். ஏனென்றால், அவர் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பு கோடிக்கணக்கான வருஷங்களாக பரலோகத்தில் யெகோவாவோடு இருந்தார். (நீதி. 8:30, 31) பாவ இயல்புள்ள மனிதர்கள்மேல் யெகோவா எந்தளவுக்கு இரக்கம் காட்டினார் என்பதை இயேசு நிறைய சமயங்களில் பார்த்திருக்கிறார். (சங். 78:37-42) அதனால், யெகோவாவைப் பற்றி மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்தபோது அவரிடம் இருக்கிற இந்த அருமையான குணத்தைப் பற்றி அதிகமாகப் பேசினார்.

ஊதாரி மகனின் அப்பா, அவனை அவமானப்படுத்தவில்லை. மறுபடியும் அவனை அன்பாக குடும்பத்தில் சேர்த்துக்கொண்டார் (பாரா 6)c

6. யெகோவாவின் இரக்கத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு இயேசு என்ன கதையைச் சொன்னார்?

6 இரக்கம் காட்டுவது யெகோவாவுக்கு எந்தளவுக்குப் பிடிக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இயேசு ஒரு கதை சொன்னார். அதைப் பற்றி முந்தின கட்டுரையிலும் பார்த்தோம். அந்தக் கதையில் வரும் மகன், வீட்டைவிட்டுப் போய் “தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான்.” (லூக். 15:13) அதற்குப் பின்பு, தன்னுடைய ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை மாற்றிக்கொண்டு மனம் திருந்தினான், தன்னையே தாழ்த்திக்கொண்டான், வீட்டுக்குத் திரும்பினான். தன்னுடைய அப்பா தன்னை ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா என்று தெரிந்துகொள்ள அவன் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால், “அவன் ரொம்பத் தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார். உடனே அவருடைய மனம் உருகியது, ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.” இந்தக் கதையில் வருகிற அப்பா தன்னுடைய மகனை அவமானப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, இரக்கத்தோடு அவனை மன்னித்தார். மறுபடியும் தன்னுடைய குடும்பத்தில் அவனை சேர்த்துக்கொண்டார். அவன் செய்தது ரொம்ப மோசமான பாவம்தான். ஆனால், அவன் மனம் திருந்தியதால் அவனை மன்னித்தார். இந்தக் கதையில் வருகிற அப்பாவைப் போல்தான் யெகோவாவும் இருக்கிறார். மோசமான பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது, அவர்களை மன்னிக்க யெகோவா எந்தளவுக்கு ஆசைப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளத்தான் மனதைத் தொடுகிற இந்தக் கதையை இயேசு சொன்னார்.—லூக். 15:17-24.

7. யெகோவா இரக்கம் காட்டும் விதம் அவர் ஞானமுள்ளவர் என்பதை எப்படிக் காட்டுகிறது?

7 யெகோவா ரொம்ப ஞானமுள்ளவராக இருப்பதால் இரக்கம் காட்டுகிறார். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதை மனிதர்களுடைய நன்மைக்காகத்தான் எடுப்பார். அதனால்தான், “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ . . . இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக” இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (யாக். 3:17) பாசமான அப்பா அம்மா, தங்களுடைய பிள்ளைகளின் நன்மைக்காகத்தான் இரக்கம் காட்டுகிறார்கள். யெகோவாவும் அப்படித்தான்! (சங். 103:13; ஏசா. 49:15) அவர் அப்படி இரக்கம் காட்டுவதால்தான், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் நமக்கு எதிர்கால நம்பிக்கை கிடைத்திருக்கிறது. யெகோவா ஞானமுள்ளவராக இருப்பதால் நியாயமான காரணம் இருக்கும்போது மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார். அதே சமயத்தில், தவறு நடக்கும்போது அதைக் கண்டும்காணாமலும் இருக்க மாட்டார்.

8. சில சமயங்களில் என்ன செய்ய வேண்டியிருக்கிறது, ஏன்?

8 ஒரு சகோதரனோ சகோதரியோ வேண்டுமென்றே பாவம் செய்தால் என்ன செய்வது? ‘அப்படிப்பட்டவர்களோடு பழகுவதை விட்டுவிட வேண்டும்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 5:11) தவறு செய்துவிட்டு மனம் திருந்தாதவர்கள் சபைநீக்கம் செய்யப்படுகிறார்கள். யெகோவாவுக்கு உண்மையாய் இருக்கிற சகோதர சகோதரிகளைப் பாதுகாக்கவும், யெகோவாவின் நீதிநெறிகளின் பக்கம் உறுதியாக நிற்கவும் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனாலும், ‘சபைநீக்கம் செய்றது எப்படி இரக்கமான செயலா இருக்கும்?’ என்று சிலர் நினைக்கிறார்கள்.

சபைநீக்கம்—இரக்கமான ஒரு செயல்

மந்தையிலிருந்து தனியாகப் பிரித்து வைக்கப்பட்ட ஓர் ஆட்டின் அருகே மேய்ப்பர் செல்கிறார்.

வியாதியாக இருக்கிற ஓர் ஆட்டை மேய்ப்பர் தனியாகப் பிரித்து வைக்கிறார். ஆனாலும், அதை அன்பாகக் கவனித்துக்கொள்கிறார் (பாராக்கள் 9-11)

9-10. பாவம் செய்தவர்களை சபைநீக்கம் செய்வது ஒரு இரக்கமான செயல்தான் என்பதை எபிரெயர் 12:5, 6 எப்படிக் காட்டுகிறது? உதாரணத்துடன் விளக்குங்கள்.

9 நமக்கு ரொம்ப நெருக்கமான ஒருவர் “இனிமேலும் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை” என்று சபையில் அறிவிக்கும்போது நம் மனதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அவர் நமக்கு அவ்வளவு நெருக்கமாக இருப்பதால், அவரை சபைநீக்கம் செய்துதான் ஆக வேண்டுமா என்று நாம் யோசிக்கலாம். அப்படியென்றால், சபைநீக்கம் என்பது ஒரு இரக்கமான செயலா? ஆமாம், நிச்சயமாக! ஒருவரைக் கண்டித்துத் திருத்த வேண்டியிருக்கும்போது அப்படிச் செய்யாவிட்டால் அது ஞானமான... இரக்கமான... அன்பான... செயலாக இருக்காது. (நீதி. 13:24) தவறு செய்தவர்களை சபைநீக்கம் செய்யும்போது அவர்கள் மனம் திருந்த வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. தவறு செய்தவர்களை சபைநீக்கம் செய்ததால்தான், அவர்களில் நிறைய பேர் தாங்கள் செய்த தவறை உணர்ந்து தங்களை மாற்றிக்கொண்டு மறுபடியும் யெகோவாவிடம் வந்திருக்கிறார்கள்.—எபிரெயர் 12:5, 6-ஐ வாசியுங்கள்.

10 இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: மந்தையில் இருக்கும் ஓர் ஆடு வியாதியாக இருப்பதை மேய்ப்பர் கவனிக்கிறார். அந்த ஆட்டைக் குணமாக்க வேண்டுமென்றால், அதை மற்ற ஆடுகளிலிருந்து தனியாகப் பிரித்து வைக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரிகிறது. ஆனால், ஆடுகள் எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கும். அதனால், அந்த ஆட்டை மட்டும் தனியாகப் பிரித்து வைக்கும்போது, அதற்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அப்படியென்றால், அந்த ஆட்டை மேய்ப்பர் இரக்கம் இல்லாமல் நடத்துகிறார் என்று அர்த்தமா? இல்லை. அந்த ஆட்டை அப்படித் தனியாகப் பிரித்து வைத்தால்தான் அந்த வியாதி மற்ற ஆடுகளுக்கும் வராமல் இருக்கும்... முழு மந்தையும் பாதுகாப்பாக இருக்கும்... என்றெல்லாம் அந்த மேய்ப்பருக்குத் தெரியும். அதனால்தான், அவர் அப்படிச் செய்கிறார்.—லேவியராகமம் 13:3, 4-ஐ ஒப்பிடுங்கள்.

11. (அ) சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் எந்த விதத்தில் வியாதிப்பட்ட ஓர் ஆட்டைப் போல் இருக்கிறார்கள்? (ஆ) சபைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு என்ன உதவி கிடைக்கும்?

11 சபைநீக்கம் செய்யப்படுகிற ஒருவர் வியாதிப்பட்ட அந்த ஆட்டைப் போல்தான் இருக்கிறார். ஒருவிதத்தில் அவரும் வியாதிப்பட்டுத்தான் இருக்கிறார். அதாவது, அவருக்கும் யெகோவாவுக்கும் இருக்கிற பந்தத்தில் ஒரு பெரிய விரிசல் விழுந்திருக்கிறது. (யாக். 5:14) ஒருவருக்கு வியாதி இருந்தால் எப்படி அது மற்றவர்களைப் பாதிக்குமோ, அதேமாதிரி மனம் திருந்தாத ஒருவர் சபையில் இருக்கும்போது மற்ற சகோதர சகோதரிகளும் பாதிக்கப்படுவார்கள். அதனால், அவரை சபையிலிருந்து விலக்கி வைக்க வேண்டியிருக்கிறது. தனக்கு உண்மையாக இருப்பவர்கள்மேல் யெகோவாவுக்கு அன்பு இருப்பதால்தான், தவறு செய்தவர்களை அவர் கண்டித்துத் திருத்துகிறார். அப்படிச் செய்வதால், தவறு செய்தவர் தன்னுடைய தவறை உணர்ந்து மனம் திருந்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. சபைநீக்கம் செய்த பின்பும் அவர் தொடர்ந்து கூட்டங்களில் கலந்துகொண்டு தன்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளலாம். அதோடு, அவருக்குப் பிரசுரங்களும் கிடைக்கும், JW பிராட்காஸ்டிங்கையும்® அவர் பார்க்கலாம். அவர் எந்தளவுக்கு முன்னேற்றம் செய்கிறார் என்பதை மூப்பர்கள் கவனிப்பார்கள். யெகோவாவோடு அவருக்கு இருக்கிற பந்தத்தைச் சரிசெய்ய, தேவைப்படுகிற சமயங்களிலெல்லாம் அவருக்கு ஆலோசனை கொடுப்பார்கள். அவர் மனம் திருந்திய உடனே மறுபடியும் சபையில் சேர்த்துக்கொள்வார்கள்.b

12. மனம் திருந்தாதவர்களை என்ன செய்வது ஓர் அன்பான, இரக்கமான செயலாக இருக்கும்?

12 யெகோவா ‘சரியான அளவுக்குத்தான் கண்டித்துத் திருத்துவார்’ என்பது மூப்பர்களுக்கு நன்றாகத் தெரியும். (எரே. 30:11) அதனால், ஒருவரை சபைநீக்கம் செய்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்றாக யோசிப்பார்கள். உண்மையிலேயே ஒருவர் மனம் திருந்தவில்லை என்றால்தான் சபைநீக்கம் செய்வார்கள். சபையில் இருக்கும் மற்ற சகோதர சகோதரிகளுக்கு யெகோவாவோடு இருக்கும் பந்தத்தில் எந்த விரிசலும் விழுந்துவிடக் கூடாது என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனால், தவறு செய்துவிட்டு மனம் திருந்தாதவர்களை சபைநீக்கம் செய்வதுதான் அன்பான... இரக்கமான... செயலாக இருக்கும்.

13. கொரிந்து சபையிலிருந்த ஒருவன் ஏன் சபைநீக்கம் செய்யப்பட்டான்?

13 சபைநீக்கம் செய்வதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன சொன்னார் என்று இப்போது பார்க்கலாம். கொரிந்து சபையிலிருந்த ஒருவன் தன்னுடைய அப்பாவின் மனைவியோடு தவறான உறவு வைத்திருந்தான். அது எவ்வளவு அருவருப்பான ஒரு விஷயம்! இப்படிப்பட்ட காரியத்தை முன்பு ஓர் இஸ்ரவேலன் செய்திருந்தால் அவனை என்ன செய்ய வேண்டும் என்று லேவியராகமம் 20:11 சொல்கிறது. “தன்னுடைய அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவன் தன் அப்பாவை அவமானப்படுத்துகிறான். அவனும் அவளும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்” என்று அது சொல்கிறது. அதற்காக, இப்போது தவறு செய்தவனைக் கொல்லும்படி அப்போஸ்தலன் பவுலால் சொல்ல முடியாது. அவனை சபைநீக்கம் செய்யும்படிதான் அவர் சொன்னார். ஏனென்றால், அவனுடைய நடத்தை ஏற்கெனவே சபையில் இருந்தவர்களைப் பாதித்திருந்தது. சொல்லப்போனால், அவன் செய்தது எவ்வளவு பெரிய பாவம் என்றே உணராத அளவுக்கு அங்கிருந்த சிலருடைய மனம் மழுங்கிப்போயிருந்தது.—1 கொ. 5:1, 2, 13.

14. சபைநீக்கம் செய்யப்பட்டவனிடம் பவுல் எப்படி இரக்கம் காட்டினார், ஏன் காட்டினார்? (2 கொரிந்தியர் 2:5-8, 11)

14 கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, தவறு செய்தவன் நிறைய மாற்றங்கள் செய்திருந்ததை அப்போஸ்தலன் பவுல் கேள்விப்பட்டார். அவன் உண்மையிலேயே மனம் திருந்தியிருந்தான்! சபைக்கு அவனால் அவமானம் ஏற்பட்டிருந்தாலும் அவனிடம் ‘கடுமையாக’ நடந்துகொள்ள தான் விரும்பவில்லை என்று மூப்பர்களிடம் பவுல் சொன்னார். “அவனை மனதார மன்னித்து ஆறுதல்படுத்த வேண்டும்” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஏன் அப்படிக் கேட்டுக்கொண்டார்? ஏனென்றால், ‘அவன் ஒரேயடியாகச் சோகத்தில் மூழ்கிவிட’ கூடாது என்று அவர் விரும்பினார். அவன்மேல் பவுல் உண்மையிலேயே இரக்கம் காட்ட ஆசைப்பட்டார். தான் செய்த தவறையே நினைத்துக் கூனிக்குறுகி, மன்னிப்புக் கேட்க முடியாதளவுக்கு அவன் போய்விடக் கூடாது என்று பவுல் நினைத்தார்.—2 கொரிந்தியர் 2:5-8, 11-ஐ வாசியுங்கள்.

15. மூப்பர்கள் எப்படி உறுதியாகவும் இரக்கமாகவும் நடந்துகொள்ளலாம்?

15 யெகோவாவைப் போலவே, மூப்பர்களும் இரக்கம் காட்ட ஆசைப்படுகிறார்கள். தேவையான சமயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கிறார்கள். நியாயமான காரணங்கள் இருக்கும்போது இரக்கம் காட்டுகிறார்கள். ஒருவேளை, தவறு செய்தவர்களைக் கண்டித்துத் திருத்தாவிட்டால் அவர்கள் உண்மையிலேயே இரக்கம் காட்டுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அதைக் கண்டும்காணாமல் விட்டுவிட்டார்கள் என்றுதான் சொல்ல முடியும். ஆனால், இப்போது ஒரு கேள்வி: மூப்பர்கள் மட்டும்தான் இரக்கம் காட்ட வேண்டுமா?

இரக்கம் காட்ட நம் எல்லாருக்கும் எது உதவும்?

16. இரக்கம் காட்டாதவர்களுக்கு யெகோவா என்ன செய்வார் என்று நீதிமொழிகள் 21:13 சொல்கிறது?

16 நாம் எல்லாருமே மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும். இல்லையென்றால், யெகோவா நம்முடைய ஜெபத்தைக் கேட்க மாட்டார். (நீதிமொழிகள் 21:13-ஐ வாசியுங்கள்.) நம்முடைய ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டும் என்றுதானே நாம் எல்லாருமே விரும்புவோம். அதனால், மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட நாம் தவறக் கூடாது. நம் மனம் கல்லாகிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். சகோதர சகோதரிகள் வேதனையில் இருக்கும்போது, நாம் அவர்களைக் கண்டும்காணாமல் இருந்துவிடக் கூடாது. “ஏழை கதறும்போது” அதைக் கவனமாகக் கேட்பதற்கு எப்போதுமே நாம் தயாராக இருக்க வேண்டும். அதேசமயத்தில், “இரக்கம் காட்டாதவன் இரக்கமில்லாமல் நியாயந்தீர்க்கப்படுவான்” என்று யாக்கோபு 2:13 சொல்வதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய இரக்கம் நமக்கு எந்தளவுக்குத் தேவை என்று நினைத்துப் பார்க்கும்போது நாமும் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவோம். முக்கியமாக, பாவம் செய்தவர் மனம் திருந்தி மறுபடியும் ஒரு யெகோவாவின் சாட்சி ஆகும்போது நாம் அவருக்கு இரக்கம் காட்டுவோம்.

17. தாவீது ராஜா எப்படி மற்றவர்களுக்கு இரக்கம் காட்டினார்?

17 மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளாமல் இரக்கத்தோடு நடந்துகொள்ள, பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற கடவுளுடைய ஊழியர்கள் சிலருடைய வாழ்க்கை அனுபவம் நமக்கு உதவும். உதாரணத்துக்கு தாவீதைப் பற்றிச் சொல்லலாம். அவர் நிறைய சமயங்களில் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டினார். அவரைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா துடியாய்த் துடித்தார். ஆனால், சவுல் யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவாக இருந்ததால் அவரைக் கொல்ல வேண்டும் என்றோ அவருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்றோ தாவீது நினைக்கவில்லை.—1 சா. 24:9-12, 18, 19.

18-19. எந்த இரண்டு சமயங்களில் தாவீது இரக்கமில்லாமல் நடந்துகொண்டார்?

18 ஆனால், தாவீது எல்லா சமயங்களிலும் இரக்கத்தோடு நடந்துகொள்ளவில்லை. ஒரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம். நாபால் என்ற ஒரு முரடன் தாவீதை மரியாதை இல்லாமல் பேசினான், அவருக்கும் அவருடன் இருந்த ஆட்களுக்கும் உணவு தர மறுத்தான். அப்போது தாவீதுக்கு பயங்கர கோபம் வந்தது. அவனையும் அவன் வீட்டில் இருக்கிற எல்லா ஆண்களையும் கொல்ல முடிவு செய்தார். ஆனால், அன்பாக... பொறுமையாக... நடந்துகொள்கிற மனைவி நாபாலுக்கு இருந்தாள். அவள் பெயர் அபிகாயில். தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் தேவையான உணவை அவள் உடனே கொண்டுபோய்க் கொடுத்தாள். அதனால், நாபாலையும் அவன் வீட்டில் இருக்கிற ஆண்களையும் தாவீது கொல்லாமல் விட்டுவிட்டார்.—1 சா. 25:9-22, 32-35.

19 இப்போது இன்னொரு சம்பவத்தைப் பார்க்கலாம். ஒருதடவை நாத்தான் தீர்க்கதரிசி தாவீதிடம் வந்து, பணக்காரன் ஒருவன் ஏழையிடமிருந்து ஓர் ஆட்டைத் திருடிவிட்டதாகச் சொன்னார். உடனே, தாவீதுக்குப் பயங்கர கோபம் வந்தது. “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன், அந்த மனிதன் கொல்லப்பட வேண்டும்” என்று அவர் சொன்னார். (2 சா. 12:1-6) ஆனால், ஒருவன் ஓர் ஆட்டைத் திருடினால், அதற்கு நஷ்ட ஈடாக நான்கு ஆடுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. (யாத். 22:1) அது தாவீதுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் அந்த மனிதனைக் கொல்ல வேண்டும் என்று அவர் சொன்னார். தாவீது எவ்வளவு இரக்கம் இல்லாமல் தீர்ப்புக் கொடுத்தார், பார்த்தீர்களா? சொல்லப்போனால், நாத்தான் சொன்னது ஒரு கதைதான். தாவீது அடுத்தடுத்து செய்த பாவங்களைப் புரிய வைப்பதற்காகத்தான் அவர் இந்தக் கதையைச் சொன்னார். இந்தக் கதையில் வருகிற பணக்காரனுக்கு தாவீது கொஞ்சம்கூட இரக்கம் காட்டவில்லை. ஆனால், அதைவிட பெரிய பாவம் செய்த தாவீதுக்கு யெகோவா இரக்கம் காட்டினார். இரக்கம் காட்டும் விஷயத்தில் தாவீதைவிட யெகோவா எவ்வளவு தாராளமாக நடந்துகொண்டார் பார்த்தீர்களா?—2 சா. 12:7-13.

நாத்தான் சொன்ன கதையில் வரும் மனிதனுக்கு தாவீது ராஜா இரக்கம் காட்டவில்லை (பாராக்கள் 19-20)d

20. தாவீதிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

20 நாபாலையும் அவனுடைய ஆட்களையும் கொல்ல வேண்டும் என்று தாவீது சொன்னதைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவர் பயங்கர கோபமாக இருந்ததால்தான் அப்படிச் சொன்னார். நாத்தான் சொன்ன கதையில் வந்தவரையும் கொல்ல வேண்டும் என்று சொன்னார். ‘பொதுவா தாவீது இளகிய மனசுள்ளவராச்சே, அவர் ஏன் இப்படி ஒரு கடுமையான தீர்ப்பு கொடுத்தாரு?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். நாத்தான் பேசிய சமயத்தில் தாவீதின் மனசாட்சி ஏற்கெனவே அவரைக் குத்திக்கொண்டிருந்தது. பயங்கர கோபத்தோடு இருக்கிறவர்களுக்கும் மற்றவர்களைக் கடுமையாக நியாயந்தீர்க்கிறவர்களுக்கும் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தம் இருக்காது. அதனால்தான், அவர் அப்படியொரு கடுமையான தீர்ப்பைக் கொடுத்தார். “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்” என்று இயேசுவும் சொன்னார். (மத். 7:1, 2) அதனால், மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளாமல், “மகா இரக்கமுடைய” கடவுளான நம் அப்பா யெகோவாவைப் போலவே நாம் நடந்துகொள்ள வேண்டும்.

21-22. நாம் என்னென்ன வழிகளில் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டலாம்?

21 இரக்கம் என்பது வெறுமனே ஓர் உணர்வு மட்டுமல்ல. அந்த உணர்வைச் செயலில் காட்டுவதுதான் உண்மையான இரக்கம். அதனால், நம்முடைய குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கும் சபையில் இருக்கிறவர்களுக்கும் நம்மைச் சுற்றி இருக்கிறவர்களுக்கும் எப்படியெல்லாம் உதவலாம் என்று எப்போதுமே யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது, இரக்கம் காட்ட நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். சிலரை நாம் ஆறுதல்படுத்த வேண்டியிருக்கலாம். சிலருக்கு மற்ற உதவிகள் செய்ய வேண்டியிருக்கலாம். ஒருவேளை, சாப்பாடோ அல்லது சின்னச் சின்ன வேலைகளோ செய்துகொடுக்க வேண்டியிருக்கலாம். சில சமயங்களில், மறுபடியும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆன சகோதரனுக்கோ சகோதரிக்கோ நாம் ஆறுதல் தர வேண்டியிருக்கலாம், அவருக்கு ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டியிருக்கலாம். இப்படிப்பட்ட சமயங்களில் நாம் தாராளமாக இரக்கத்தைக் காட்டலாம். அதோடு, நம்மைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ஆறுதலான செய்தியை நாம் சொல்ல வேண்டும். மற்றவர்களுக்கு நாம் இரக்கம் காட்டுவதற்கான முக்கியமான வழிகளில் இதுவும் ஒன்று.—யோபு 29:12, 13; ரோ. 10:14, 15; யாக். 1:27.

22 மற்றவர்களுக்கு என்ன தேவை என்று நாம் எப்போதுமே கவனமாக யோசித்துப் பார்க்கும்போது இரக்கம் காட்ட நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அப்படிக் காட்டும்போது, “மகா இரக்கமுடைய” கடவுளான நம்முடைய அப்பா யெகோவா நம்மைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார்!

உங்கள் பதில் என்ன?

  • யெகோவா ஏன் இரக்கம் காட்டுகிறார்?

  • இரக்கம் இருப்பதால்தான் மனம் திருந்தாதவர்களை சபைநீக்கம் செய்கிறோம் என்று ஏன் சொல்லலாம்?

  • மற்றவர்களிடம் இரக்கம் காட்ட நமக்கு எது உதவும்?

பாட்டு 43 நெஞ்சமெல்லாம் நன்றி

a யெகோவாவுடைய அருமையான குணங்களில் இரக்கமும் ஒன்று. அவரைப் போல் நாமும் இரக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டும். யெகோவா ஏன் இரக்கம் காட்டுகிறார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, மற்றவர்களைக் கண்டித்து திருத்தும்போதும் யெகோவா இரக்கத்தோடுதான் நடந்துகொள்கிறார் என்று எப்படிச் சொல்லலாம் என்பதையும் பார்ப்போம். இந்த அருமையான குணத்தை நாம் எப்படிக் காட்டலாம் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

b மறுபடியும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை எப்படிச் சரிசெய்யலாம் என்பதையும் மூப்பர்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதையும் தெரிந்துகொள்ள, “நட்பு என்ற வீட்டைத் திரும்பக் கட்ட யெகோவா உங்களுக்கு உதவுவார்” என்ற கட்டுரையை இந்த இதழில் பாருங்கள்.

c படவிளக்கம்: ஊதாரி மகன் திரும்பி வருவதை அவனுடைய அப்பா தனது வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்க்கிறார். உடனே, ஓடிப் போய் அவனைக் கட்டித் தழுவுகிறார்.

d படவிளக்கம்: தாவீது ராஜா ஏற்கெனவே குற்றவுணர்ச்சியோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததால் நாத்தான் சொன்ன கதையைக் கேட்டவுடனே ரொம்ப உணர்ச்சிவசப்பட்டார். பயங்கர கோபத்தோடு அந்த மனிதனைக் கொல்ல வேண்டும் என்று சொன்னார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்