தொடர்ந்து இரக்கம் காட்டுவது எப்படி?
“யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.”—கலாத்தியர் 6:10.
1, 2. நல்ல சமாரியன் உவமையிலிருந்து இரக்கத்தைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
“எனக்குப் பிறன் யார்?” இயேசுவிடம் பேசிக்கொண்டிருக்கையில் நியாயசாஸ்திரி ஒருவன் இக்கேள்வியைக் கேட்டான். பின்வரும் உவமையின் மூலமாக இயேசு அவனுக்குப் பதிலளித்தார். “ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.” இயேசு இதைக் கூறிய பிறகு, “இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது” என்று அவனிடம் கேட்டார். அதற்கு, “அவனுக்கு இரக்கஞ் செய்தவனே” என்று அவன் பதிலளித்தான்.—லூக்கா 10:25, 29-37அ.
2 காயமுற்ற மனிதனை அந்தச் சமாரியன் கவனித்துக்கொண்ட விதத்திலிருந்து இரக்கம் உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறதென தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? காயமுற்ற மனிதனைக் காப்பாற்ற பரிவும் கருணையும் அந்தச் சமாரியனைத் தூண்டின. இத்தனைக்கும், காயமுற்ற அந்த மனிதனை அவருக்கு முன்பின் தெரியாது. நாடு, மதம், கலாச்சாரம் போன்ற பாகுபாடெல்லாம் இரக்கம் காட்டுவதற்குக் கிடையாது. நல்ல சமாரியனைப் பற்றிய இந்த உவமையைச் சொல்லிவிட்டு, “நீயும் போய் அந்தப்படியே செய்” என்று அந்த நியாயசாஸ்திரியிடம் இயேசு கூறினார். (லூக்கா 10:37ஆ) இந்த அறிவுரையை மனதில் வைத்து, பிறரிடம் இரக்கம் காட்ட நாமும் முடிந்தவரை முயற்சி செய்யலாம். ஆனால் எப்படிச் செய்வது? நம்முடைய அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விதங்களில் நாம் தொடர்ந்து இரக்கம் காட்டலாம்?
‘ஒரு சகோதரன் வஸ்திரமில்லாமல் இருக்கும்போது’
3, 4. கிறிஸ்தவ சபையில் இருப்போரிடம் தொடர்ந்து இரக்கம் காட்டுவதை நாம் ஏன் அதிமுக்கியமாய் கருத வேண்டும்?
3 “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” என்று அப்போஸ்தலன் பவுல் கூறினார். (கலாத்தியர் 6:10) எவ்வாறு விசுவாச குடும்பத்தாரிடம் இரக்கத்தை அதிகமதிகமாய் செயலில் காட்டலாம் என்பதை முதலில் கவனிப்போம்.
4 “இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்” என்று எழுதுவதன் மூலம் ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டும்படி உண்மைக் கிறிஸ்தவர்களை சீஷனாகிய யாக்கோபு ஊக்கப்படுத்தினார். (யாக்கோபு 2:13) பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகளின் சூழமைவிலிருந்து, மற்றவர்களிடம் தொடர்ந்து இரக்கம் காட்டுவதற்கான சில வழிகளைத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, யாக்கோபு 1:27 பின்வருமாறு குறிப்பிடுகிறது: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” யாக்கோபு 2:15, 16 இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?”
5, 6. நம்முடைய சபையில் உள்ளவர்களிடம் நாம் எவ்வாறு இரக்கத்தை அதிகமதிகமாய் செயலில் காட்டலாம்?
5 மற்றவர்களை அக்கறையோடு கவனித்துக்கொள்வதும், தேவையிலிருப்போருக்கு உதவுவதும் உண்மை வணக்கத்தின் அடையாளமாய் இருக்கிறது. ஆகவே, உண்மை வணக்கத்தாரான நாம், ‘எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று மற்றவர்களிடம் வாய் வார்த்தையில் வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக்கொள்வதில்லை; மாறாக, அவசரத் தேவையில் இருப்போருக்கு உதவ பரிவு நம்மைத் தூண்டுகிறது. (1 யோவான் 3:17, 18) நோயுற்றோருக்குச் சமைத்துக் கொடுப்பது, வயதானவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்வது, தேவைப்படும் சமயங்களில் அவர்களைக் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது, உதவி பெற தகுந்தவர்களுக்குத் தாராளமாய் உதவுவது ஆகியவை நாம் செய்ய வேண்டிய இரக்க செயல்களில் சில.—உபாகமம் 15:7-10.
6 வளர்ந்து வரும் கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களுக்கு நாம் பொருளுதவி அளிப்பது முக்கியமானாலும், ஆன்மீக உதவி அளிப்பது அதைவிட முக்கியமாகும். “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள்” என்று பைபிள் நம்மைத் தூண்டுகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14) ‘நற்காரியங்களைப் போதிக்கிறவர்களாயிருக்கும்படி முதிர்வயதுள்ள ஸ்திரீகள்’ ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். (தீத்து 2:5) கிறிஸ்தவ கண்காணிகள், “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்” இருக்க வேண்டும் என்று பைபிள் கூறுகிறது.—ஏசாயா 32:2.
7. இரக்கம் காட்டுவதுபற்றி, சீரியாவின் அந்தியோகியாவிலிருந்த சீஷர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 முதல் நூற்றாண்டு சபைகளில் இருந்தவர்கள், தங்கள் சபையைச் சேர்ந்த விதவைகள், ஆதரவற்றோர், ஊக்கமும் உதவியும் தேவைப்படுவோர் ஆகியோரைக் கவனித்துக்கொண்டதோடுகூட, சில சமயங்களில் மற்ற இடங்களில் உள்ள விசுவாசிகளுக்கும் நிவாரணப் பொருள்களை அனுப்பினார்கள். உதாரணமாக, அகபு தீர்க்கதரிசி, “உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும்” என்று முன்னுரைத்தபோது, சீரியாவின் அந்தியோகியாவிலிருந்த சீஷர்கள், “அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்ப வேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.” பிறகு அதை, “பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து” அவ்விடத்திலிருந்த மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள். (அப்போஸ்தலர் 11:28-30) இன்றும் அவ்விதமாகச் செய்யப்படுகிறதா? சூறாவளிகள், பூமியதிர்ச்சிகள், அல்லது சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கிற நம்முடைய சகோதரர்களைக் கவனித்துக்கொள்ள “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” நிவாரண குழுக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. (மத்தேயு 24:45, NW) நம்முடைய நேரம், சக்தி, வளங்கள் ஆகியவற்றை இத்தகைய ஏற்பாட்டிற்காக மனமுவந்து அளிப்பது இரக்கம் காட்டுவதற்கான சிறந்த வழியாகும்.
“பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால்”
8. இரக்கம் காட்டுவதற்கு பட்சபாதம் எவ்வாறு தடைக்கல்லாகிவிடுகிறது?
8 இரக்கம் காட்டுவதைத் தடைசெய்கிறதும், அன்பென்ற ‘ராஜரிக பிரமாணத்திற்கு’ எதிரானதுமான ஒன்றைப்பற்றி யாக்கோபு எச்சரித்தார். “பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்.” (யாக்கோபு 2:8, 9) பணக்காரர்களுக்கோ உயர் பதவியிலுள்ளவர்களுக்கோ அநாவசியமாக சலுகை காட்டுவதில் நம் கவனம் திரும்பினால், ‘ஏழையின் கூக்குரல்’ நம் காதில் விழாமல் போகலாம். (நீதிமொழிகள் 21:13) பட்சபாதமாக நடந்துகொள்ளும் ஒருவரால் இரக்கம் காட்ட முடியாமல் போகும். பட்சபாதமின்றி பிறரிடம் நடந்துகொள்வதன்மூலம் நாம் இரக்கம் காட்டலாம்.
9. தகுதியுள்ளவர்களிடம் விசேஷ அக்கறை காட்டுவது ஏன் தவறல்ல?
9 பட்சபாதமின்றி நடந்துகொள்ள வேண்டுமென்றால், யாரிடமுமே விசேஷ அக்கறை காட்டக்கூடாது என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை. தன் உடன் வேலையாளாகிய எப்பாப்பிரோதீத்துவைக் குறித்து பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் பின்வருமாறு எழுதினார்: “இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.” ஏன்? “ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.” (பிலிப்பியர் 2:25, 29, 30) எப்பாப்பிரோதீத்துவின் உண்மையுள்ள சேவை விசேஷ கவனிப்பிற்குத் தகுந்ததாயிருந்தது. மேலும், 1 தீமோத்தேயு 5:17-ல் இவ்விதமாக வாசிக்கிறோம்: “நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ண வேண்டும்.” (1 தீமோத்தேயு 5:17) சிறந்த ஆன்மீக குணங்களும் பாராட்டுக்கு உரியவை. இந்த விதத்தில் விசேஷ அக்கறை காட்டுவது பட்சபாதமாக நடந்துகொள்வதை அர்த்தப்படுத்தாது.
‘பரத்திலிருந்து வருகிற ஞானம் . . . இரக்கம் நிறைந்ததாயிருக்கிறது’
10. நாம் ஏன் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்?
10 நாவைக் குறித்து யாக்கோபு பின்வருமாறு கூறினார்: “அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது.” இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் மேலும் இவ்வாறு கூறினார்: “உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.”—யாக்கோபு 3:8-10அ, 14-17.
11. நம்முடைய நாவைப் பயன்படுத்தும் விஷயத்தில் நாம் எவ்வாறு இரக்கம் காட்டலாம்?
11 ஆகவே, நம்முடைய ஞானம் ‘இரக்கம் நிறைந்ததாய்’ இருக்கிறதா என்பதை நாம் மற்றவர்களிடம் பேசும் விதமே வெளிக்காட்டிவிடும். பெருமையடித்துக் கொண்டாலோ பொய் சொன்னாலோ நம்மைப்பற்றி என்ன தெரிவிக்கிறோம்? பொறாமையாலோ தகராறாலோ பிறரைப்பற்றி அவதூறுகளைப் பரப்பினால் நம்மைப்பற்றி என்ன தெரிவிக்கிறோம்? “தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர்” என்று சங்கீதம் 94:4 (பொது மொழிபெயர்ப்பு) அழைக்கிறது. அவதூறான பேச்சு அப்பாவியான ஒருவரின் நற்பெயரைச் சட்டென்று நாசமாக்கிவிடலாம். (சங்கீதம் 64:2-4) அதோடு, ‘மூச்சுக்கு மூச்சு பொய் பேசுகிற பொய்ச்சாட்சியால்’ ஏற்படும் தீங்கைக் குறித்து சற்று யோசித்துப்பாருங்கள். (நீதிமொழிகள் 14:5, பொ.மொ.; 1 இராஜாக்கள் 21:7-13) நாவைத் தவறாகப் பயன்படுத்துவதைப்பற்றி சொன்ன பிறகு, “என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது” என்று யாக்கோபு கூறினார். (யாக்கோபு 3:10ஆ) நாம் உண்மையிலேயே இரக்கமுள்ளவர்களாய் இருந்தால் நம்முடைய பேச்சு கற்புள்ளதாயும் சமாதானமுள்ளதாயும் நியாயத்தன்மையுள்ளதாயும் இருக்கும். “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 12:36) இரக்கம் காட்டும் விதத்தில் நாவைப் பயன்படுத்துவது மிக முக்கியமல்லவா?
‘மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியுங்கள்’
12, 13. (அ) எஜமானிடம் பெரிய தொகையைக் கடன் வாங்கியிருந்த அடிமையின் உவமையிலிருந்து இரக்கம் காட்டுவதுபற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) நம் சகோதரரை “ஏழெழுபதுதரமட்டும்” மன்னிப்பது என்றால் என்ன?
12 தன் எஜமானாகிய அரசரிடமிருந்து 6,00,00,000 தினாரிகளைக் கடன் வாங்கியிருந்த அடிமையைப் பற்றிய ஓர் உவமையை இயேசு கூறினார்; இரக்கம் காட்டுவதற்கான மற்றொரு வழியை இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். கடனை அடைக்க வழியில்லாததால், தனக்கு இரக்கம் காட்டும்படி அரசரிடம் அந்த அடிமை கெஞ்சினான். அவரும் “மனதிரங்கி” அந்தக் கடனை மன்னித்துவிட்டார். அந்த அடிமை அங்கிருந்து வெளியே சென்றபோது, தன்னிடம் நூறு தினாரிகள் மட்டுமே கடன் வாங்கியிருந்த சக அடிமையைக் கண்டான்; இரக்கமின்றி அவனை சிறையில் தள்ளினான். நடந்ததைக் கேள்விப்பட்ட எஜமான், மன்னிப்பைப் பெற்ற அடிமையை வரவழைத்தார். “பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ” என்று அவனிடம் கேட்டார். பிறகு, அவனை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்” என்று சொல்லி இயேசு அந்த உவமையை முடித்தார்.—மத்தேயு 18:23-35.
13 மன்னிக்க தயாராயிருப்பதும் இரக்கம் காட்டுவதன் ஓர் அம்சமே என்பதை மேற்குறிப்பிடப்பட்ட உவமை எவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொல்கிறது! நம்முடைய மிகப் பெரிய பாவக்கடனை யெகோவா மன்னித்திருக்கிறார். அப்படியிருக்க, நாமும் ‘மனுஷருடைய தப்பிதங்களை . . . அவர்களுக்கு மன்னிக்க’ வேண்டுமல்லவா? (மத்தேயு 6:14, 15) இரக்கம் காட்டாத அடிமையைப் பற்றிய உவமையை இயேசு கூறுவதற்கு முன்னால், பேதுரு அவரிடம் “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரமட்டுமோ” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்று பதிலளித்தார். (மத்தேயு 18:21, 22) ஆம், இரக்கமுள்ளவர் “ஏழெழுபதுதரமட்டும்,” அதாவது கணக்கில்லாமல் மன்னிக்கத் தயாராயிருக்கிறார்.
14. மத்தேயு 7:1-4-ன்படி நாம் எவ்வாறு தினசரி இரக்கம் காட்டலாம்?
14 இரக்கம் காட்டுவதற்கான இன்னொரு வழியை தம் மலைப்பிரசங்கத்தில் இயேசு குறிப்பிட்டார்: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; . . . நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?” (மத்தேயு 7:1-4) சதா குறைகாண்பவர்களாய் இல்லாமல், மற்றவர்களுடைய தவறுகளைப் பொறுத்துக்கொள்வதன்மூலம் நாம் தினசரி இரக்கம் காட்டலாம்.
‘யாவருக்கும் நன்மைசெய்யக்கடவோம்’
15. சபையில் இருப்பவர்களிடம் மட்டுமே இரக்கம் காட்டுவது ஏன் போதாது?
15 சபையில் உள்ளவர்களிடம் இரக்கம் காட்டுவதை யாக்கோபு புத்தகம் சிறப்பித்துக் காட்டினாலும், அவர்களிடம் மட்டுமே இரக்கம் காட்ட வேண்டும் என்று அர்த்தப்படுத்தவில்லை. “கர்த்தர் எல்லார் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது” என்று சங்கீதம் 145:9 சொல்கிறது. நாம் “தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி” ‘யாவருக்கும் நன்மைசெய்யும்படி’ ஊக்குவிக்கப்படுகிறோம். (எபேசியர் 5:1; கலாத்தியர் 6:10) “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும்” நாம் அன்புகூராதிருந்தாலும், உலகத்தாரின் தேவைகளை நாம் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதில்லை.—1 யோவான் 2:15.
16. நாம் பிறரிடம் இரக்கம் காட்டும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைக்க வேண்டும்?
16 “எதிர்பாராத சம்பவங்களால்” பாதிக்கப்பட்டவர்களுக்கும் பேராபத்தில் சிக்கியிருப்பவர்களுக்கும் நம்மாலான உதவியை அளிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் மனமுள்ளவர்களாய் இருக்கிறோம். (பிரசங்கி 9:11, NW) நம்முடைய சூழ்நிலைகளைப் பொறுத்து, நாம் என்ன செய்வது, எவ்வளவு செய்வது என்பதைத் தீர்மானிக்கலாம். (நீதிமொழிகள் 3:27) மற்றவர்களுக்குப் பொருளாதார ரீதியில் நாம் உதவுவது நல்லது போல் தோன்றினாலும் அது அவரை சோம்பேறியாக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாயிருக்க வேண்டும். (நீதிமொழிகள் 20:1, 4; 2 தெசலோனிக்கேயர் 3:10-12) ஆகவே, பரிவோடும் கருணையோடும்கூடிய தெளிந்த புத்தியினால் செய்யப்படும் செயலே உண்மையான இரக்கச் செயலாகும்.
17. கிறிஸ்தவ சபையில் இல்லாதவர்களுக்கு இரக்கம் காட்டுவதற்கான மிகச் சிறந்த வழி எது?
17 கிறிஸ்தவ சபையில் இல்லாதவர்களிடம் இரக்கம் காட்டுவதற்கான மிகச் சிறந்த வழி அவர்களுக்கு பைபிள் சத்தியத்தைப் பிரசங்கிப்பதே. ஏன்? ஏனெனில், பெரும்பாலோர் இன்று ஆன்மீக இருளில் தடுமாறுகிறார்கள். தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர வழி தெரியாததாலும், உண்மையான எதிர்கால நம்பிக்கை எதுவும் இல்லாததாலும் அநேக ஜனங்கள் ‘மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்’ இருக்கிறார்கள். (மத்தேயு 9:36) கடவுளுடைய வார்த்தை ‘அவர்களுடைய கால்களுக்குத் தீபமாய்’ இருந்து, வாழ்க்கையின் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான உதவியை அளிக்கிறது. அதேசமயம், எதிர்காலத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்கத்தை முன்னறிவிப்பதன்மூலமும் பிரகாசமான எதிர்கால நம்பிக்கையை அவர்களுக்கு அளிப்பதன்மூலமும் அது ‘அவர்களுடைய பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.’ (சங்கீதம் 119:105) இந்த அருமையான சத்தியத்திற்காக ஏங்குவோரின் ஆன்மீக தாகத்தைத் தணிப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! “மிகுந்த உபத்திரவம்” நெருங்கி வருவதால், ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும், சீஷராக்குவதிலும் மும்முரமாக ஈடுபடுவதற்கு இதுவே காலம். (மத்தேயு 24:3-8, 21, 22, 36-41; 28:19, 20) இரக்கம் காட்டுவதற்கு இதைவிடச் சிறந்த வழி வேறேதுமில்லை.
“உட்புறத்தில் உள்ளவற்றை” கொடுங்கள்
18, 19. நம் வாழ்க்கையில் இரக்கத்தை அதிகமதிகமாய் வெளிக்காட்ட நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
18 “உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்” என்றார் இயேசு. (லூக்கா 11:41, பொ.மொ.) ஒரு நற்செயல் உண்மையான இரக்க செயலாய் இருப்பதற்கு அது உட்புறத்தால், அதாவது அன்பும் விருப்பமும் நிறைந்த இருதயத்தால் தூண்டப்பட்டதாய் இருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 9:7) கொடூரம், சுயநலம், பிறருடைய துன்பத்தையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவை வியாபித்திருக்கும் இந்த உலகில், இப்படிப்பட்ட இரக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறதல்லவா?
19 ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் இரக்கத்தை அதிகமதிகமாய் வெளிக்காட்ட முயற்சி செய்வோமாக. நாம் எந்தளவுக்கு இரக்கத்தைக் காட்டுகிறோமோ, அந்தளவுக்கு நாம் கடவுளைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம். பயனுள்ள, திருப்திகரமான வாழ்க்கை வாழ இது நமக்கு உதவும்.—மத்தேயு 5:7.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• சக விசுவாசிகளிடம் இரக்கம் காட்டுவது ஏன் அதிமுக்கியமானது?
• கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களிடம் எவ்வாறு இரக்கம் காட்டலாம்?
• கிறிஸ்தவ சபையில் இல்லாதவர்களுக்கு எவ்வாறு நன்மை செய்யலாம்?
[பக்கம் 26-ன் படம்]
சமாரியன் இரக்கம் காட்டினார்
[பக்கம் 27-ன் படங்கள்]
கிறிஸ்தவர்கள் அதிகளவில் இரக்கத்தைச் செயலில் காட்டுகிறார்கள்
[பக்கம் 30-ன் படம்]
பைபிள் சத்தியத்தைப் பிரசங்கிப்பதே கிறிஸ்தவ சபையில் இல்லாதவர்களிடம் இரக்கம் காட்டுவதற்கான மிகச் சிறந்த வழி