வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இயேசுவை கருத்தரிக்கையில், கன்னிப் பெண்ணான மரியாளின் அபூரணம் ஏதாவது தீங்கான விளைவை ஏற்படுத்தியதா?
‘இயேசுவின் ஜெநநத்தை’ பற்றி ஏவப்பட்ட பதிவு கூறுவதாவது: “அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.” (மத்தேயு 1:18) மரியாள் கருவுறுவதில் கடவுளுடைய பரிசுத்த ஆவி ஒரு முக்கிய பங்கு வகித்தது.
ஆனால், மரியாளை பற்றி என்ன? மரியாளின் கருத்தரிப்பில் அவருடைய கருமுட்டை ஏதேனும் பங்களித்ததா? மரியாளின் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யூதா, தாவீது ராஜா ஆகியோருக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளின்படி, பிறக்கும் குழந்தை அவர்களுடைய சந்ததியில் வந்த உண்மையான வாரிசாக இருக்க வேண்டும். (ஆதியாகமம் 22:18; 26:24; 28:10-14; 49:10; 2 சாமுவேல் 7:16) இல்லையென்றால், மரியாளுக்கு பிறக்கும் குழந்தை கடவுளுடைய இந்த வாக்குறுதிகளுக்கு எவ்வாறு உரிமையுள்ள வாரிசாக இருக்க முடியும்? அவர் மரியாளின் சொந்த மகனாக இருக்க வேண்டும்.—லூக்கா 3:23-34.
யெகோவாவின் தூதன் கன்னிப் பெண்ணான மரியாள் முன் தோன்றி இவ்வாறு கூறியிருந்தார்: “மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.” (லூக்கா 1:30, 31) ஒரு கருமுட்டை முதிர்ந்திருந்தால்தான் கருத்தரிக்க முடியும். யெகோவா தேவன் தம் ஒரேபேறான குமாரனுடைய உயிரை ஆவி பிரதேசத்திலிருந்து பூமிக்கு மாற்றுவதன் மூலம் மரியாளின் கருப்பையிலுள்ள ஒரு கருமுட்டை முதிரும்படி அவரே செய்திருக்க வேண்டும்.—கலாத்தியர் 4:5.
இவ்வாறு ஓர் அபூரண பெண்ணால் கருத்தரிக்கப்பட்ட குழந்தை பரிபூரணமானவராக, சரீரத்தில் பாவமில்லாதவராக பிறக்க முடியுமா? பரிபூரணமும் அபூரணமும் சேரும்போது மரபியல் சட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? கடவுளுடைய குமாரனின் பரிபூரண உயிர் சக்தியை பூமிக்கு மாற்றுவதிலும் கருத்தரிக்கும்படி செய்வதிலும் பரிசுத்த ஆவி பயன்படுத்தப்பட்டதை மறந்துவிடாதீர்கள். இது, மரியாளின் கருமுட்டையிலிருந்த அபூரணத்தை துடைத்தழித்துவிட்டு, ஆரம்பத்திலிருந்தே பரிபூரணமாக இருந்த ஒரு மரபியல் அமைப்பை ஏற்படுத்தியது.
எப்படியிருந்தாலும், அந்தச் சமயத்தில் கடவுளுடைய பரிசுத்த ஆவி செயல்பட்டதால் அவருடைய நோக்கம் வெற்றியடைவதை உறுதிப்படுத்தியிருக்கும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். “பரிசுத்த ஆவி உன் மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என காபிரியேல் தூதன் மரியாளிடம் விவரித்திருந்தார். (லூக்கா 1:35) ஆம், கருவுற்றது முதல் அபூரணமோ வேறெந்த தீங்கான சக்தியோ அந்தக் கருவை தாக்காதபடி கடவுளுடைய பரிசுத்த ஆவி பாதுகாப்பான சுவர்போல அதை சூழ்ந்து கொண்டது.
இயேசுவின் பரிபூரண மனித உயிருக்கு அவருடைய பரலோக தகப்பனே காரணம், வேறு எந்த மனிதனுமல்ல. யெகோவா, இயேசுவுக்காக ‘ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணினார்’; ஆக இயேசு, கருவாக உருவான சமயத்திலிருந்து உண்மையிலேயே “மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரு”மாக இருந்தார்.—எபிரெயர் 7:26; 10:5.
[பக்கம் 19-ன் படம்]
“நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்”