தனிமையை சமாளிக்கலாம்
“தனிமையில் வாடும் இதயத்தின்மீது காற்று பட்டாலே போதும், அது நொறுங்கிவிடும்.” அயர்லாந்து நாட்டு கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸின் இவ்வார்த்தைகள், இதயத்தையே சுக்கு நூறாக்கும் அளவுக்கு தனிமை கொடியது என்று காட்டுகின்றன.
தனிமை தரும் வேதனையை அனுபவித்ததே இல்லை என யாரால் அடித்துச் சொல்ல முடியும்? அநேக அம்சங்கள் நம் தனிமை உணர்வுக்குக் காரணமாகலாம். குறிப்பாக, திருமணம் ஆகாத, கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன பெண்கள் அனுபவிக்கும் தனிமை வாட்டி வதைக்கும் ஒன்றாகும்.
உதாரணமாக, ஃபிரான்சஸ் என்ற இளம் கிறிஸ்தவ பெண் சொல்வதாவது: “எனக்கு 23 வயதானபோது, என் நண்பர்களுக்கெல்லாம் கல்யாணமாகிவிட்டது, நான் மட்டும் தனிமையில் விடப்பட்டதுபோல் தோன்றியது.”a வயது ஆக ஆக, அதே சமயத்தில் திருமணம் ஆகும் வாய்ப்பு குறையக் குறைய, தனித்து விடப்பட்டு விட்டோமே என்ற உணர்வு மேலிடலாம். “நான் ஒண்டியாகவே இருக்கப் போவதாக நினைக்கவே இல்லை; இன்னும்கூட வாய்ப்பு கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள விருப்பம்தான்” என 50 வயதைத் தொடவிருக்கும் சன்ட்ரா ஒப்புக்கொள்கிறார். ஆஞ்சலா 50 வயதைத் தாண்டிவிட்டவர்; அவர் குறிப்பிடுவதாவது: “கல்யாணம் வேண்டாம் என்று நானாக முடிவு செய்யவில்லை; ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை எனக்கு அமைந்துவிட்டது. நான் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டிருந்த ஏரியாவில் கல்யாணம் ஆகாத சகோதரர்கள் மிகக் குறைவாகவே இருந்தார்கள்.”
அநேக கிறிஸ்தவ பெண்கள், ‘கர்த்தருக்குட்பட்டவரை மட்டும்’ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யெகோவாவின் ஆலோசனையை உண்மையோடு பின்பற்றுவதற்காக, திருமணம் செய்யாதிருக்க தீர்மானித்திருப்பது மெச்சத்தக்கது. (1 கொரிந்தியர் 7:39, NW) சிலர் திருமணமாகாத தங்கள் சூழ்நிலையை நன்றாக சமாளிக்கின்றனர்; மற்றவர்களோ வருடங்கள் செல்லச் செல்ல திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற முடியாத ஏக்கம் அதிகரிப்பதைக் காண்கின்றனர். “என்னைக் கரம் பிடிக்க ஒருவர் இல்லாத குறையால் எனக்குள் வெறுமை உணர்வு நிரந்தரமாக குடிகொண்டுவிட்டது” என சன்ட்ரா மனந்திறந்து பேசுகிறார்.
வயதான பெற்றோரை பராமரிப்பது போன்ற பிற அம்சங்களாலும் தனிமை உணர்வு அதிகரிக்கலாம். “எனக்கு திருமணம் ஆகாததால் வயதான பெற்றோரை நான் கவனித்துக்கொள்ளும்படி குடும்பத்தாரும் எதிர்பார்த்தனர்” என்கிறார் சன்ட்ரா. “ஆறு பிள்ளைகளில் ஒருத்தியே நான்; இருந்தாலும் 20 வருடங்களாக இந்தப் பொறுப்பின் பெரும்பகுதி என் தலைமீதுதான். எனக்கென்று ஒரு கணவன் இருந்திருந்தால் என் சுமைகளுக்கு அவரும் தோள்கொடுத்திருப்பார்; அது வாழ்க்கைக்கு எத்தனையோ உதவியாய் இருந்திருக்கும்.”
தன் தனிமை உணர்வை இன்னும் மோசமாக்கும் மற்றொரு அம்சத்தை ஃபிரான்சஸ் குறிப்பிடுகிறார். அவர் கூறுகிறார்: “‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்காம இருக்குற?’ என்று ஆட்கள் சில சமயங்களில் என்னிடம் நேரடியாகவே கேட்பதுண்டு. அப்படியெல்லாம் கேட்கும்போது, எனக்கு திருமணம் ஆகாதது என் தவறுபோல் நினைக்க தோன்றுகிறது. கிட்டத்தட்ட நான் எந்த வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டாலும் சரி, ‘அப்போ, உன் கல்யாணம் எப்போ?’ என்ற தர்மசங்கடமான கேள்வியை யாராவது கேட்டுவிடுகின்றனர். இதனால், ‘ஆன்மீக கண்ணோட்டமுள்ள சகோதரர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையென்றால், ஒருவேளை எனக்கு போதிய கிறிஸ்தவ குணங்கள் இல்லையோ; அல்லது நான் கவர்ச்சியாக இல்லையோ’ என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்து விடுகிறேன்.”
தனிமை உணர்வுகளை எவ்வாறு சமாளிக்கலாம்? மற்றவர்கள் உதவ நினைத்தால், எவ்வாறு கைகொடுக்கலாம்?
யெகோவாவில் சார்ந்திருங்கள்
“கர்த்தர்மேல் [“யெகோவாவின் மேல்,” NW] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 55:22) எபிரெய வசனத்தில் ‘பாரம்’ என்ற வார்த்தை, “பங்கு” என்று சொல்லர்த்தமாக பொருள் தருகிறது; இது ஒருவருடைய வாழ்க்கையில் கவலைகளுக்கும் ஆதங்கங்களுக்கும் இருக்கும் பங்கை குறிக்கிறது. இதுபோன்ற பாரங்களை மற்ற எவரையும்விட யெகோவா நன்றாக அறிந்திருப்பதால் அவற்றை சமாளிக்க தேவையான பலத்தை நமக்கு அவரால் அளிக்க முடியும். யெகோவா தேவனை சார்ந்திருந்தது தனிமை உணர்வை சமாளிக்க ஆஞ்சலாவுக்கு உதவியிருக்கிறது. முழுநேர ஊழியத்தைக் குறிப்பிட்டு அவர் சொல்கிறதாவது: “நான் பயனியர் செய்ய ஆரம்பித்த போது, நானும் என் பார்ட்னரும் சபையிலிருந்து வெகு தொலைவில் வசித்தோம். யெகோவாவில் முழுமையாக சார்ந்திருக்க கற்றுக்கொண்டோம்; இவ்வாறு சார்ந்திருந்தது என் வாழ்நாள் முழுவதும் உதவியிருக்கிறது. எதிர்மறை உணர்வுகள் எனக்குள் தலைதூக்கும்போது, யெகோவாவிடம் பேசுகிறேன்; அவர் எனக்கு உதவுகிறார். சங்கீதம் 23 என்னை எப்பொழுதுமே தேற்றியிருக்கிறது; அதை அடிக்கடி வாசிப்பேன்.”
குறிப்பிடத்தக்க பாரத்தை அப்போஸ்தலன் பவுல் தாங்கினார். அவர் குறைந்தபட்சம் மூன்று சந்தர்ப்பங்களில், ‘தன் மாம்சத்திலிருந்த முள் தன்னைவிட்டு நீங்கும்படிக்கு கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டார்.’ பவுலுக்கு அற்புத நிவாரணம் அளிக்கப்படவில்லை; ஆனால் கடவுளுடைய தகுதியற்ற தயவு அவரை தாங்கும் என்ற வாக்குறுதியைப் பெற்றார். (2 கொரிந்தியர் 12:7-9) போதுமென்ற மனதின் ரகசியத்தையும் பவுல் கண்டுபிடித்தார். பின்னர் அவர் எழுதினார்: “எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே [“என்னைப் பலப்படுத்துகிறவராலே,” NW] எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.”—பிலிப்பியர் 4:12, 13.
ஒருவர் சோர்வுற்று இருக்கையில் அல்லது தனிமையை உணருகையில் கடவுளுடைய பலத்தை எவ்வாறு பெற முடியும்? பவுல் எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) சன்ட்ரா இந்த ஆலோசனைப்படி நடக்கிறார். அவர் விளக்குகிறார்: “ஒண்டியாக இருப்பதால், அதிக நேரத்தை தனிமையிலேயே கழிக்கிறேன். இது யெகோவாவிடம் ஜெபிக்க நிறைய வாய்ப்பை தருகிறது. அவரிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதை உணருகிறேன்; என் இன்ப துன்பங்களை மனம் விட்டு அவரிடம் பேச முடிகிறது.” ஃபிரான்சஸ் சொல்கிறார்: “எனக்குள் எழும் எதிர்மறை உணர்வுகளுக்கு எதிராக சதா போராட்டம்தான். ஆனால் யெகோவாவிடம் என் உணர்வுகளை மனம் திறந்து கொட்டுவது எனக்கு பெரிதும் உதவுகிறது. என் ஆன்மீக, உணர்ச்சிப்பூர்வ நலனைப் பாதிக்கும் எதுவானாலும் அதை யெகோவா பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”—1 தீமோத்தேயு 5:5.
“ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து”
கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் மத்தியில், பாரத்தை தனிமையில் சுமக்க வேண்டிய தேவையில்லை. “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” என அப்போஸ்தலன் பவுல் உற்சாகமூட்டினார். (கலாத்தியர் 6:2) உடன் கிறிஸ்தவர்களின் கூட்டுறவு தரும் “நல்வார்த்தை” எனும் உற்சாகம் தனிமையெனும் சுமையை குறைக்கலாம்.—நீதிமொழிகள் 12:25.
இஸ்ரவேலின் நியாயாதிபதி யெப்தாவின் மகளைப் பற்றி வேதாகமம் சொல்வதையும் சற்று கவனியுங்கள். எதிரிகளான அம்மோனியர்களின் படையை வெல்லுவதற்கு முன்பு, தன் வீட்டு வாசற்படியிலிருந்து தன்னை பாராட்ட முதலில் வருவது யாராயினும் அவரை கர்த்தருக்கு அர்ப்பணிப்பதாக யெப்தா பொருத்தனை செய்திருந்தார். அவ்வாறு எதிர்கொண்டு வந்ததோ அவருடைய மகள். (நியாயாதிபதிகள் 11:30, 31, 34-36) யெப்தாவின் மகள், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் இயல்பான ஆசையை ஓரங்கட்டிவிட்டு ஒண்டியாகவே இருக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்தும் அந்த பொருத்தனைக்கு மனமுவந்து தலைவணங்கினாள்; தன் வாழ்நாள் முழுவதும் சீலோவிலிருந்த தேவனுடைய வீட்டில் சேவை செய்தாள். அவள் செய்த தியாகம் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டதா? இல்லை, அதற்கு மாறாக, “இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலுநாள் கிலெயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைப் பாடிக்கொண்டாடுவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.” (நியாயாதிபதிகள் 11:40, தி.மொ.) ஆம், பாராட்டு ஒருவரை உற்சாகப்படுத்தும். ஆகவே, உரியவரை பாராட்ட நாம் மறந்துவிடக்கூடாது.
இயேசுவின் உதாரணத்தையும் நாம் கவனிப்பது நல்லது. பெண்களிடம் ஆண்கள் பேசுவது யூத வழக்கமாய் இராதபோதிலும், மார்த்தாள், மரியாளுடன் இயேசு நேரம் செலவிட்டார். அவர்கள் விதவைகளாக அல்லது திருமணம் செய்திராத பெண்களாக இருந்திருக்கலாம். தம் நட்புறவிலிருந்து ஆவிக்குரிய பலன்களை இருவருமே அனுபவிக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். (லூக்கா 10:38-42) நம்மிடையே உள்ள திருமணமாகாத ஆவிக்குரிய சகோதரிகளை சமூக கூட்டங்களில் நம்முடன் சேர்ந்துகொள்ளும்படி அழைப்பதன் மூலமாகவும், அவர்களுடன் சேர்ந்து பிரசங்க வேலையில் ஈடுபடுவதன் மூலமாகவும் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றலாம். (ரோமர் 12:13) அவ்வாறு கவனம் செலுத்துவதற்கு அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்களா? ஒரு சகோதரி இவ்வாறு கூறினார்: “சகோதரர்கள் என்னை நேசிக்கிறார்கள், என்னை ஒரு பொருட்டாக மதிக்கிறார்கள் என்றெல்லாம் எனக்கு தெரியும்; ஆனால் என்னிடம் இன்னும் தனிப்பட்ட வகையில் அக்கறை காட்டும்போது அதற்கு நன்றிக்கடன் பட்டவளாக உணருகிறேன்.”
“எங்களுக்கென்று ஒரு குடும்பம் இல்லாததால் எங்களுக்கு இன்னுமதிக அன்பு தேவைப்படுகிறது, ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் அடங்கிய குடும்பத்தில் நாங்களும் அங்கத்தினர்கள் என்ற உணர்வும் அதிகமாக தேவைப்படுகிறது” என சன்ட்ரா விவரிக்கிறார். அப்படிப்பட்டவர்களை யெகோவா கவனித்துக்கொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை; அவர்கள் உபயோகமானவர்கள், நேசிக்கப்படுபவர்கள் என்று உணரும்படி செய்வதன் மூலம் அவருடன் சேர்ந்து நாமும் ஒத்துழைக்கிறோம். (1 பேதுரு 5:6, 7) அவ்வாறு நாம் காட்டும் அக்கறை கவனிக்கப்படாமல் போகாது; ஏனெனில் “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் [“யெகோவாவுக்கு,” NW] கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் [யெகோவா தேவன்] திரும்பக் கொடுப்பார்.”—நீதிமொழிகள் 19:17.
“ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக் கொள்ளட்டும்”
மற்றவர்கள் உதவி செய்ய முடியும் என்றாலும், அந்த உதவி அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றாலும், “ஒவ்வொருவரும் அவரவர் சுமையைத் தாங்கிக் கொள்ள” வேண்டும். (கலாத்தியர் 6:5, பொ.மொ.) என்றாலும், தனிமை என்ற சுமையை சுமப்பதில் சில அபாயங்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். உதாரணமாக, மனதுக்குள் இருப்பதை வெளியே காட்டாமல் பொத்தி பொத்தி வைத்தால் தனிமை நம்மை சிறைப்படுத்தலாம். மறுபட்சத்தில், தனிமையை நாம் அன்பால் வெல்லலாம். (1 கொரிந்தியர் 13:7, 8) நம் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் சரி, பிறருக்குக் கொடுத்து பகிர்ந்துகொள்வது சந்தோஷத்தைக் காண மிகச் சிறந்த வழியாகும். (அப்போஸ்தலர் 20:35) “தனிமையாய் இருப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட எனக்கு நேரம் இருப்பதில்லை” என்கிறார் கடினமாக உழைக்கும் ஒரு பயனியர் சகோதரி. “பயனுள்ள நபராகவும், செய்வதற்கு நிறைய வேலை இருப்பதாகவும் நான் உணரும்போது, என் தனிமை உணர்வு பறந்துவிடுகிறது.”
தனிமை காரணமாக காதல் விவகாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிடாமலிருக்கவும் நாம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, சத்தியத்தில் இராத ஒருவரை திருமணம் செய்துகொள்வதால் எழும் எக்கச்சக்கமான பிரச்சினைகளை எண்ணிப் பார்க்காத அளவுக்கு நம் கண்களை மறைத்துவிட அனுமதிப்பது எத்தனை வருத்தமான விஷயம்! அதிலும் குறிப்பாக அப்படிப்பட்ட பந்தத்தை தவிர்க்கும்படி சொல்லும் வேதப்பூர்வ ஆலோசனைக்குச் செவிகொடாதிருப்பது எவ்வளவு வருந்தத்தக்கது! (2 கொரிந்தியர் 6:14) விவாகரத்து செய்யப்பட்ட ஒரு கிறிஸ்தவ பெண் சொன்னார்: “ஒண்டியாய் இருப்பதைவிட படுமோசமான ஒரு விஷயம் பொருத்தமற்ற ஒருவரை திருமணம் செய்துகொள்வதுதான்.”
தீர்க்கப்பட முடியாத ஒரு பிரச்சினையை தற்காலிகமாகவாவது சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். கடவுளுடைய உதவியுடன், தனிமை உணர்வை சகித்துக்கொள்ளலாம். தொடர்ந்து யெகோவாவை நாம் சேவிக்கையில், ஒரு நாள் நம் மனதின் ஆசைகளெல்லாம் முடிந்தமட்டும் மிகச் சிறந்த முறையில் திருப்தி செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் இருப்போமாக.—சங்கீதம் 145:16.
[அடிக்குறிப்பு]
a கருத்தைத் தெரிவித்திருக்கும் பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 28-ன் படங்கள்]
பிறருக்குக் கொடுத்து பகிர்ந்துகொள்வதன் மூலம் தனிமையை வெல்லலாம்