சடலத்தைப் பாதுகாத்தல்—கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதா?
உண்மையுள்ள முற்பிதாவாகிய யாக்கோபு மரணத்தை நெருங்குகையில் இந்தக் கடைசி கோரிக்கையை விடுத்தார்: “ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் . . . அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது.” —ஆதியாகமம் 49:29-31.
அந்தச் சமயம் எகிப்தில் பிரபலமாயிருந்த ஒரு பழக்கத்தைப் பின்பற்றி யோசேப்பு தன் தகப்பனுடைய ஆசையை நிறைவேற்றினார். “தன் தகப்பனுக்குச் சுகந்த வர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்கு” கட்டளையிட்டார். வைத்தியர்கள் சடலத்தை தயார்படுத்த வழக்கப்படியே 40 நாட்களை செலவழித்தார்கள் என ஆதியாகமம் 50-ம் அதிகாரத்திலுள்ள பதிவு கூறுகிறது. யாக்கோபின் சடலத்தை எபிரோனில் அடக்கம் செய்ய சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அவருடைய சடலம் முறையாக பாதுகாக்கப்பட்டிருந்ததால், குடும்ப அங்கத்தினர்களும் எகிப்திய அதிகாரிகளும் அடங்கிய பெரிய கூட்டம் மெதுவாக அங்கு சென்று சேருவதற்கு அவகாசம் அளித்தது.—ஆதியாகமம் 50:1-14.
பாதுகாக்கப்பட்ட யாக்கோபின் சடலம் என்றாவது ஒரு நாள் கண்டுபிடிக்கப்படுமா? அதற்கு மிகக் குறைந்த சாத்தியமே உள்ளது. இஸ்ரவேல் தேசம் நீர் வளம் நிறைந்த இடமாதலால் சில வகையான தொல்பொருள் கலைப்பொருட்களே அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (யாத்திராகமம் 3:8) உலோகத்தாலும் கல்லாலும் ஆன பூர்வ கால பொருட்கள் அங்கு ஏராளம் உள்ளன; ஆனால் அழியும் பொருட்களான துணி, தோல், பாதுகாக்கப்பட்ட சடலங்கள் போன்றவற்றால் ஈரப்பதத்தையும் காலத்தின் கோலத்தையும் எதிர்த்து நிற்க முடியவில்லை.
சடலத்தைப் பாதுகாப்பது என்றால் என்ன? அந்தப் பழக்கம் ஏன் கடைப்பிடிக்கப்பட்டது? அது கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதா?
இப்பழக்கம் பிறந்தது எங்கே?
சடலத்தை பாதுகாப்பதை, இறந்த மனித அல்லது மிருக உடலைப் பாதுகாத்து வைப்பது என விவரிக்கலாம். இப்பழக்கம் எகிப்தில் ஆரம்பித்தாலும் பூர்வ அசீரியர்களும், பெர்சியர்களும், சீத்தியர்களும் அதை கடைப்பிடித்ததாக சரித்திராசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பாலை நிலத்தில் புதைக்கப்பட்டு, இயற்கையாகவே அழியாது பாதுகாக்கப்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே சடலத்தைப் பாதுகாப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அந்த முறை பரிசோதிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு புதைப்பது ஈரப்பதமும் காற்றும் சடலத்தை அண்டவிடாமல் செய்வதால் அது சிதைவதும் தாமதமாகிறது. மற்றவர்களுடைய ஊகத்தின்படி, எகிப்திலும் அதைச் சுற்றிலும் ஏராளமாயிருந்த காரப்பொருளான நேட்ரனில் (சோடியம் கார்போனேட்டில்) பாதுகாக்கப்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே சடலங்களை பாதுகாப்பது ஆரம்பமானது.
இறந்த சில மணிநேரத்தில் ஆரம்பமாகி சடலத்தை சிதைவுறச் செய்யும் நுண்ணுயிரிகளின் இயற்கையான செயல்பாட்டை தடுப்பதே சடலத்தைப் பாதுகாப்பவரின் நோக்கமாகும். இது தடுக்கப்பட்டால் சிதைவுறுவது நின்றுவிடும் அல்லது பெருமளவு தாமதப்படுத்தப்படும். இதற்கு பின்வரும் மூன்று காரியங்கள் அவசியம்: உயிருடன் இருப்பதைப் போலவே சடலத்தைப் பாதுகாப்பது, அழுகுவதை தடுப்பது, பூச்சிகள் சடலத்தை அரிக்காமலிருக்க செய்வது.
பூர்வ எகிப்தியர்கள் முக்கியமாக மத காரணங்களுக்காகவே மரித்தோரின் சடலங்களை பாதுகாத்தனர். மரித்தோர் உயிருள்ளவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பியதற்கும் மரணத்திற்கு பின் வாழ்க்கை பற்றிய அவர்களுடைய கோட்பாட்டிற்கும் சம்பந்தமிருந்தது. தங்கள் உடல்கள் நித்தியத்திற்கும் உபயோகிக்கப்படும், மறுபடியும் உயிரைப் பெறும் என அவர்கள் நம்பினர். சடலத்தைப் பாதுகாக்கும் பழக்கம் பரவலாக பின்பற்றப்பட்ட போதிலும், அது எவ்வாறு செய்யப்பட்டது என்பதை விவரிக்கும் எகிப்திய பதிவு எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க சரித்திராசிரியன் ஹிராடட்டஸின் விவரிப்பே மிகச் சிறந்த பதிவாகும். என்றாலும், ஹிராடட்டஸின் விவரிப்புக்கு இசைய சடலத்தைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
அது கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதா?
யாக்கோபின் மத நம்பிக்கைகளை பின்பற்றாதவர்களே அவருடைய சடலத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டனர். அந்தச் சமயம் எகிப்தில், சடலங்கள் பாதுகாக்கப்படுகையில் அநேகமாக ஜெபங்களும் சடங்குகளும் செய்யப்பட்டன. ஆனால், தன் தகப்பனுடைய உடலை பாதுகாக்க வைத்தியர்களிடம் ஒப்படைக்கையில் இவற்றை செய்யும்படி யோசேப்பு சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், யாக்கோபுக்கும் யோசேப்புக்கும் உறுதியான விசுவாசம் இருந்தது. (எபிரெயர் 11:21, 22) யெகோவா கட்டளையிடவில்லை என்றாலும் யாக்கோபின் உடல் பாதுகாக்கப்பட்டதை வேதவாக்கியங்கள் கண்டிக்கவில்லை. யாக்கோபின் உடல் பாதுகாக்கப்பட்டது இஸ்ரவேல் தேசத்திற்கோ கிறிஸ்தவ சபைக்கோ முன்னோடியாக இருக்கவில்லை. உண்மையில், இதைப் பற்றி கடவுளுடைய வார்த்தையில் குறிப்பான எந்த அறிவுரைகளும் இல்லை. யோசேப்பின் உடல் எகிப்தில் பாதுகாக்கப்பட்டதைப் பற்றி கூறிய பிறகு அந்தப் பழக்கத்தைப் பற்றி பைபிளில் வேறு எங்கும் கூறப்படவில்லை.—ஆதியாகமம் 50:26.
பலஸ்தீனிய கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித சடலங்கள் மிகவும் அழுகிய நிலையில் உள்ளன; இது, நீண்ட காலத்திற்கு சடலங்களை பாதுகாப்பது எபிரெயர்களின் வழக்கமல்ல என்பதையே நிரூபிக்கிறது. உதாரணமாக, லாசருவின் உடல் பாதுகாக்கப்படவில்லை. அவருடைய உடல் துணியால் சுற்றப்பட்டிருந்த போதிலும், அந்தக் கல்லறையை மூடிய கல்லை அகற்றவிருந்த சமயத்தில் அங்கிருந்தோர் கவலைப்பட்டனர். லாசரு நான்கு நாட்களுக்கு முன்பே மரித்துவிட்டதால் கல்லறையை திறந்தால் துர்நாற்றம் வீசும் என அவருடைய சகோதரி கூறினாள்.—யோவான் 11:38-44.
இயேசு கிறிஸ்துவின் உடல் பாதுகாக்கப்பட்டதா? சுவிசேஷ பதிவுகள் அவ்வாறு சொல்வதில்லை. அந்தச் சமயத்தில், உடலை அடக்கம் பண்ணுவதற்கு முன்பு சுகந்தவர்க்கமும் பரிமள தைலமும் உபயோகித்து உடலை தயார் செய்வதே யூதர்களின் வழக்கமாக இருந்தது. உதாரணமாக, இயேசுவின் உடலை இந்த விதத்தில் தயார் செய்வதற்காகவே நிக்கொதேமு ஏராளமான சுகந்தவர்க்கங்களை அளித்தார். (யோவான் 19:38-42) ஏன் இவ்வளவு அதிக சுகந்தவர்க்கங்கள்? இயேசுவின் மீதிருந்த உள்ளப்பூர்வமான அன்பும் மரியாதையுமே தாராளமாய் அள்ளிக் கொடுக்க அவரை தூண்டியிருக்கலாம். அந்தச் சுகந்தவர்க்கங்கள் உடலை பாதுகாக்க உபயோகிக்கப்பட்டன என்று நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை.
உடல் பாதுகாக்கப்படுவதை ஒரு கிறிஸ்தவர் மறுக்க வேண்டுமா? உண்மையைச் சொன்னால், தவிர்க்க இயலாத ஒரு காரியத்தை அது தள்ளிப்போட மட்டுமே செய்கிறது. நாம் மண்ணாய் இருக்கிறோம், மரிக்கையில் மண்ணுக்கே திரும்புவோம். (ஆதியாகமம் 3:19) ஆனால், மரித்த பிறகு அடக்கம் பண்ண எவ்வளவு நேரமாகும்? குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் தொலைவிலிருந்து வர வேண்டும், உடலைப் பார்க்க வேண்டும் என்றால் உடலை ஓரளவிற்காவது பாதுகாக்க வேண்டியிருக்கும்.
ஆகவே வேதப்பூர்வமாக பார்த்தால், உடலை பாதுகாக்க வேண்டுமென உள்ளூர் சட்டங்கள் கூறினாலோ குடும்ப அங்கத்தினர்கள் விரும்பினாலோ அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) அவர்கள் கடவுளுடைய ஞாபகத்தில் இருந்தால் அவர் வாக்குக் கொடுத்திருக்கும் புதிய உலகில் மீண்டும் உயிர் பெறுவார்கள்.—யோபு 14:13-15; அப்போஸ்தலர் 24:15; 2 பேதுரு 3:13.
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
சடலத்தைப் பாதுகாத்தல்—அன்றும், இன்றும்
பூர்வ எகிப்தில், சடலத்தைப் பாதுகாப்பது ஒரு குடும்பத்தின் சமுதாய அந்தஸ்தைப் பொருத்திருந்தது. வசதியான குடும்பம் அநேகமாக பின்வரும் முறையை தெரிவு செய்திருக்கும்:
ஓர் உலோக கருவியை உபயோகித்து நாசித் துவாரம் வழியாக மூளை வெளியே எடுக்கப்படும். அதற்கு பிறகு, பொருத்தமான மருந்துகளை உபயோகித்து மண்டையோடு சுத்திகரிக்கப்படும். அடுத்ததாக, இருதயத்தையும் சிறுநீரகங்களையும் தவிர உள் உறுப்புகள் அனைத்தும் வெளியே எடுக்கப்படும். வயிற்றுக்குள் இருப்பதை எடுக்க அதை அறுக்க வேண்டியிருக்கும், ஆனால் இது பாவமாக கருதப்பட்டது. சர்ச்சைக்குரிய இப்பிரச்சினையிலிருந்து தப்புவதற்காக எகிப்திலுள்ள சடலங்களைப் பாதுகாத்தவர்கள், அறுப்பதற்கு ஒரு நபரை நியமித்தனர்; உடலை அறுப்பதே அவருடைய வேலை. அறுத்தவுடன் அவர் ஓடிவிடுவார்; ஏனெனில் சாபங்களும், கல்லடி கொடுப்பதுமே இந்தக் ‘குற்றத்திற்கான’ தண்டனை.
வயிற்றில் உள்ளவை எல்லாம் நீக்கப்பட்ட பிறகு அது சுத்தமாக கழுவப்படும். சரித்திராசிரியன் ஹிராடட்டஸ் இவ்வாறு எழுதினார்: “மிகவும் சுத்தமான இடிக்கப்பட்ட வெள்ளைப்போளம், இலவங்கப்பட்டை ஆகியவற்றோடு தூபவர்க்கத்தைத் தவிர மற்ற எல்லா விதமான சுகந்தவர்க்கங்களும் சேர்த்து அது நிரப்பப்பட்டு, பிறகு தைக்கப்படும்.”
பிறகு 70 நாட்கள் நேட்ரனில் ஊற வைப்பதன் மூலம் உடலிலுள்ள நீர் முழுவதும் நீக்கப்படும். பின்பு, சடலம் கழுவப்பட்டு மெல்லிய துணியால் திறமையாக மூடப்படும். பிறகு அந்தத் துணியின் மீது பசைபோல் செயல்பட பிசின் அல்லது வேறு பிசுபிசுப்பான பொருள் தடவப்படும். பிறகு படாடோபமாக அலங்கரிக்கப்பட்ட மனித உருவிலுள்ள மரப் பெட்டியில் அந்த மம்மி வைக்கப்படும்.
இன்று, சடலத்தைப் பாதுகாக்கும் பணி சில மணிநேரத்தில் செய்யப்படலாம். சடலத்தைப் பாதுகாக்கும் திரவத்தை தமனிகள், சிரைகள், வயிறு, மார்பு ஆகியவற்றில் போதுமான அளவு நிரப்புவதன் மூலம் இது வழக்கமாய் செய்யப்படுகிறது. பல வருடங்களாக பல வித்தியாசப்பட்ட கரைசல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளன. என்றாலும், செலவு காரணமாகவும் பாதுகாப்பு கருதியும் ஃபார்மால்டிஹைடே மிகவும் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.
[படம்]
ராஜா டூடன்காமனின் தங்க சவப் பெட்டி