இதயத்தாலும் மனதாலும் கடவுளைத் தேடுங்கள்
கடவுளுக்குப் பிரியமான விதத்தில் விசுவாசத்தை கட்டியமைக்க இருதயத்தையும் மனதையும் பயன்படுத்தும்படி உண்மை கிறிஸ்தவம் உற்சாகப்படுத்துகிறது.
சொல்லப்போனால், “முழு இருதயத்தோடும்” “முழு ஆத்துமாவோடும்” மட்டுமல்லாமல் நம் “முழு மனதோடும்” அல்லது அறிவுத்திறனோடும் கடவுளிடம் அன்பு காட்டும்படி கிறிஸ்தவத்தின் ஸ்தாபகரான இயேசு கிறிஸ்து கற்பித்தார். (மத்தேயு 22:37) ஆம், நம்முடைய வணக்கத்தில் மனதின் திறன்கள் முக்கிய பங்கு வகிப்பது அவசியம்.
தம்முடைய போதகத்தைக் குறித்து சிந்திக்கும்படி தமக்குச் செவிசாய்ப்பவர்களிடம் சொல்கையில் பெரும்பாலும், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என இயேசு கேட்டார். (மத்தேயு 17:25; 18:12; 21:28; 22:42) அதே விதமாக, தன்னுடைய சக விசுவாசிகளுடைய ‘தெளிவான சிந்திக்கும் திறன்களை தூண்டி எழுப்புவதற்காகவே’ அப்போஸ்தலன் பேதுரு அவர்களுக்கு எழுதினார். (2 பேதுரு 3:1, NW) பெருமளவு பயணித்திருந்த ஆரம்ப கால மிஷனரியான அப்போஸ்தலன் பவுல், தங்கள் “பகுத்தறியும் திறனை” பயன்படுத்தி “கடவுளுடைய நன்மையும் உகந்ததும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று [தங்களுக்குத் தாங்களே] நிச்சயப்படுத்திக்கொள்ளு”ம்படி கிறிஸ்தவர்களுக்குப் புத்திமதி கூறினார். (ரோமர் 12:1, 2, NW) இப்படி, முழுமையாகவும் கவனமாகவும் தங்களுடைய நம்பிக்கைகளைக் குறித்து கிறிஸ்தவர்கள் ஆராயும் போது மட்டுமே கடவுளுக்குப் பிரியமானதும், வாழ்க்கையில் எதிர்ப்படும் சோதனைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு உதவுவதுமான விசுவாசத்தை அவர்கள் பெற முடியும்.—எபிரெயர் 11:1, 6.
இத்தகைய விசுவாசத்தை மற்றவர்களும் பெற உதவுவதில் ஆரம்ப கால சுவிசேஷகர்கள் தாங்கள் கற்பித்த காரியங்களுக்கு “வேதவாக்கியங்களிலிருந்து நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி . . . விளக்கிக்காட்டினா”ர்கள். (அப்போஸ்தலர் 17:1-3, திருத்திய மொழிபெயர்ப்பு) நியாயமாக சிந்திப்பதற்கு வழிவகுத்த இத்தகைய அணுகுமுறை, சாதகமாக செயல்பட நேர்மை மனமுள்ளோரைத் தூண்டியது. உதாரணமாக, மக்கெதோனியாவிலுள்ள பெரோயா பட்டணத்தார் “மனோவாஞ்சையாய் [கடவுளுடைய] வசனத்தை ஏற்றுக்கொண்டு, [பவுலும் அவருடைய கூட்டாளிகளும் விளக்கிய] காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை [“கவனமாய்,” NW] ஆராய்ந்துபார்த்[தார்கள்].” (அப்போஸ்தலர் 17:11) இந்த வசனத்திலுள்ள இரண்டு குறிப்புகளுக்கு கவனம் செலுத்துவது நல்லது. முதலாவதாக, பெரோயா பட்டணத்தார் கடவுளுடைய வார்த்தைக்குச் செவிசாய்க்க மனோவாஞ்சையோடு இருந்தார்கள்; இரண்டாவதாக, தாங்கள் கேட்டவற்றைப் பற்றி துளியும் யோசிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக தாங்கள் கேட்டவை உண்மையானவைதானா என வேதவசனங்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தார்கள். இதற்காக கிறிஸ்தவ மிஷனரியான லூக்கா அவர்களை மதித்து, ‘பரந்த மனப்பான்மை உடையவர்கள்’ (பொ.மொ.) என பணிவார்ந்த விதத்தில் பாராட்டினார். ஆவிக்குரிய விஷயங்களை அணுகும் விதத்தில் நீங்களும் அத்தகைய பரந்த மனப்பான்மையை வெளிக்காட்டுகிறீர்களா?
மனமும் இருதயமும் சேர்ந்து செயல்படுகையில்
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போலவே உண்மை வணக்கம் மனதையும் இருதயத்தையும் உட்படுத்துகிறது. (மாற்கு 12:30) முந்தைய கட்டுரையில் சிந்தித்த, வீட்டிற்குத் தவறான வர்ணங்களைப் பூசிய பெயிண்டர் பற்றிய உதாரணத்தை சற்று நினைத்துப் பாருங்கள். தன்னுடைய எஜமானரின் அறிவுரைகளுக்கு அவர் கவனமாய் செவிசாய்த்திருந்தால் தன்னுடைய வேலையில் மனதையும் இருதயத்தையும் ஈடுபடுத்தி இருப்பார், அவ்வேலை தன் எஜமானரின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையும் அவருக்கு கிடைத்திருக்கும். அதுவே நம்முடைய வணக்கத்திற்கும் பொருந்துகிறது.
‘உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வார்கள்’ என இயேசு சொன்னார். (யோவான் 4:23) “நாங்கள் . . . உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், . . . தேவனை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் [“யெகோவாவுக்குப்,” NW] பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், . . . வேண்டுதல் செய்கிறோம்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கொலோசெயர் 1:9-11) அத்தகைய ‘திருத்தமான அறிவு’ நம்பிக்கையைத் தந்து, மனதையும் இருதயத்தையும் வணக்கத்தில் ஈடுபடுத்த உண்மை மனமுள்ளோருக்கு உதவும்; ஏனெனில் அவர்கள் ‘அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்கிறார்கள்.’—யோவான் 4:22.
இவற்றின் நிமித்தமே, பச்சிளங்குழந்தைகளுக்கோ, பைபிளைத் திருத்தமாக இன்னமும் கற்றறியாத, ஆர்வம் காட்டும் புதியவர்களுக்கோ யெகோவாவின் சாட்சிகள் முழுக்காட்டுதல் கொடுப்பதில்லை. “சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” என இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20) கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக் கொண்ட பின்னரே அதன் அடிப்படையில் வணக்கம் சம்பந்தமான தீர்மானத்தை உண்மை மனமுள்ள பைபிள் மாணாக்கர்கள் எடுக்க முடியும். அத்தகைய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள நீங்கள் பெரும் முயற்சி செய்கிறீர்களா?
கர்த்தருடைய ஜெபத்தைப் புரிந்துகொள்ளுதல்
பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் மேலோட்டமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண மத்தேயு 6:9-13-ல் பதிவு செய்யப்பட்டுள்ள, பரமண்டல ஜெபம் அல்லது கர்த்தருடைய ஜெபம் என பொதுவாக அழைக்கப்படும் ஜெபத்தை சிந்திப்போம்.
லட்சோப லட்சம் பேர் சர்ச்சில் இயேசுவின் மாதிரி ஜெபத்தை தவறாமல் சொல்கின்றனர். ஆனால் அதன் அர்த்தம், முக்கியமாய் கடவுளுடைய பெயரையும் ராஜ்யத்தையும் பற்றிய அதன் முதல் பாகத்தின் அர்த்தம் எத்தனை பேருக்கு போதிக்கப்பட்டிருக்கிறது? இந்த விஷயங்கள் அதிமுக்கியமானவையாய் இருந்ததால் இயேசு அவற்றை அந்த ஜெபத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.
“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என அந்த ஜெபம் ஆரம்பிக்கிறது. கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்கு ஜெபிக்கும்படி இயேசு சொன்னதை கவனியுங்கள். இது அநேகருடைய மனதில் குறைந்தது இரண்டு கேள்விகளையாவது எழுப்புகிறது. முதலாவது, கடவுளுடைய பெயர் என்ன? இரண்டாவது, அதை ஏன் பரிசுத்தப்படுத்த வேண்டும்?
முதல் கேள்விக்கான பதிலை, பைபிளின் மூல பாஷைகளில் 7,000-க்கும் அதிகமான இடங்களில் காணலாம். அந்தப் பெயர் காணப்படும் இடங்களில் ஒன்று, சங்கீதம் 83:17: ‘யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணருவார்கள்.’ யெகோவா என்ற தம் பெயரைப் பற்றி யாத்திராகமம் 3:15-ல் கடவுள் இவ்வாறு சொல்கிறார்: “இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.”a ஆனால், தூய்மை, பரிசுத்தம் ஆகியவற்றின் உருவாகவே திகழும் கடவுளுடைய பெயரை ஏன் பரிசுத்தப்படுத்த வேண்டும்? ஏனெனில் மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே அப்பெயருக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டிருக்கிறது, அவதூறு சொல்லப்பட்டிருக்கிறது.
ஏதேனில், விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் ஆதாமும் ஏவாளும் சாவார்கள் என கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 2:17) கடவுள் சொன்னதற்கு நேர்மாறாக, “நீங்கள் சாகவே சாவதில்லை” என ஏவாளிடம் சாத்தான் ஆணவத்தோடு சொன்னான். இப்படி, கடவுள் பொய் சொன்னதாக சாத்தான் அவர்மீது குற்றம் சாட்டினான். எனினும் அத்தோடு அவன் நிறுத்திக்கொள்ளவில்லை. சிறந்த அறிவை ஏவாள் பெறாதபடி செய்வதன் மூலம் நியாயமற்ற விதத்தில் கடவுள் நடந்துகொள்வதாக சொல்லி அவருடைய பெயர்மீது இன்னும் அநேக நிந்தைகளை அவன் குவித்தான். “நீங்கள் இதைப் [நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்] புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” எப்பேர்ப்பட்ட பழிதூற்றுதல்!—ஆதியாகமம் 3:4, 5.
விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதன் மூலம் ஆதாமும் ஏவாளும் சாத்தானை ஆதரித்தார்கள். ஆரம்பத்தில் கற்பிக்கப்பட்ட களங்கம் போதாதென்று, அது முதற்கொண்டு பெரும்பாலானோர் தெரிந்தோ தெரியாமலோ கடவுளுடைய நீதியான தராதரங்களைப் புறக்கணிப்பதன் மூலம் மேலும் களங்கம் கற்பித்திருக்கிறார்கள். (1 யோவான் 5:19) தங்களுடைய மோசமான வழிகளே தங்கள் வேதனைக்கு காரணமாக இருந்தாலும் அவற்றிற்குக் கடவுள்மீது பழிபோடுவதன் மூலம் ஜனங்கள் அவரை அவதூறாக பேசத்தான் செய்கிறார்கள். “மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்; ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்” என நீதிமொழிகள் 19:3 (பொ.மொ.) சொல்கிறது. தம்முடைய தகப்பனை உண்மையிலேயே நேசித்த இயேசு அவருடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என ஏன் ஜெபித்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
“உம்முடைய ராஜ்யம் வருவதாக”
கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என ஜெபித்த பின்பு “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என இயேசு சொன்னார். (மத்தேயு 6:10) அந்த வாக்கியங்களைக் குறித்து பின்வருமாறு நாம் கேட்கலாம்: ‘கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்கும் அதன் வருகைக்கும் சம்பந்தமென்ன?’
பைபிளில் “ராஜ்யம்” என்ற வார்த்தை முக்கியமாய் “முடி ஆட்சியை” குறிக்கிறது. அப்படியென்றால், தர்க்கரீதியாக, கடவுளுடைய ராஜ்யம் அரசாட்சியை, அல்லது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசரை உடைய அவருடைய அரசாங்கத்தைக் குறிக்கும். இந்த அரசர், “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா”வாகிய உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவே ஆவார். (வெளிப்படுத்துதல் 19:16; தானியேல் 7:13, 14) இயேசு கிறிஸ்துவின் கைகளிலுள்ள கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தைக் குறித்து, “அந்த ராஜாக்களின் [இப்போது ஆட்சி செய்யும் மனித அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” என தானியேல் தீர்க்கதரிசி எழுதினார்.—தானியேல் 2:44.
ஆம் கடவுளுடைய ராஜ்யம் பூமியின் மீது முழு அளவில் அதிகாரத்தை ஏற்று, எல்லா துன்மார்க்கத்தையும் ஒழித்துக்கட்டி, “என்றென்றைக்கும்” ஆட்சி செய்யும். இந்த விதத்தில் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் யெகோவா தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறார், சாத்தானும் துன்மார்க்கரும் குவித்திருக்கும் பொய்யான எல்லா நிந்தைகளையும் நீக்குகிறார்.—எசேக்கியேல் 36:23.
எல்லா அரசாங்கங்களையும் போலவே, கடவுளுடைய ராஜ்யத்திற்கும் பிரஜைகள் இருக்கிறார்கள். அந்தப் பிரஜைகள் யார்? “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என பைபிள் பதிலளிக்கிறது. (சங்கீதம் 37:11) அவ்விதமாகவே, “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என இயேசு சொன்னார். இவர்கள், ஜீவனடைய தேவைப்படும் திருத்தமான அறிவை உண்மையிலேயே பெற்றவர்கள்.—மத்தேயு 5:5; யோவான் 17:3.
கடவுளையும் ஒருவரையொருவரும் உண்மையிலேயே நேசிக்கும் சாந்தமும் கனிவும் மிக்க ஆட்களால் முழு பூமியும் நிரம்பியிருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? (1 யோவான் 4:7, 8) “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என சொல்கையில் அதற்காகத்தான் இயேசு ஜெபித்தார். அவ்வாறு ஜெபிக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏன் கற்பித்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா? அதைவிட முக்கியமாக, அந்த ஜெபத்தின் நிறைவேற்றம் உங்களைத் தனிப்பட்ட விதத்தில் எப்படி பாதிக்கும் என்பதைக் காண்கிறீர்களா?
லட்சக்கணக்கானோர் பைபிளின் அடிப்படையில் பகுத்தாராய்கிறார்கள்
வரவிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கும் ஆவிக்குரிய உலகளாவிய கல்வி திட்டத்தைப் பற்றி இயேசு முன்னறிவித்தார். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது [இந்த உலகின் அல்லது ஒழுங்குமுறையின்] முடிவு வரும்” என சொன்னார்.—மத்தேயு 24:14.
உலகெங்கும் சுமார் 60 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் அண்டை அயலாரிடம் அந்த நற்செய்தியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பகுத்தறியும் திறனை பயன்படுத்தி, “வேதவாக்கியங்களை கவனமாய் ஆராய்ந்து பார்”ப்பதன் மூலம் கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அவ்வாறு செய்வது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும், பரதீஸிய பூமியில் வாழ்க்கை பற்றி எண்ணுகையில் நம்பிக்கை ஒளியால் உங்கள் கண்கள் பிரகாசிக்கும். அப்போது “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:6-9.
[அடிக்குறிப்புகள்]
a “யெகோவா” என்பதற்குப் பதிலாக “யாவே” என சொல்லப்படுவதை சில கல்விமான்கள் விரும்புகிறார்கள். எனினும் பெரும்பாலான பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் எந்த விதத்திலும் தங்கள் பதிப்புகளில் கடவுளுடைய பெயரை பயன்படுத்தாமல் நீக்கிவிட்டு, அந்த இடங்களில் “கர்த்தர்” அல்லது “கடவுள்” என்ற பொதுவான பட்டப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடவுளுடைய பெயர் சம்பந்தமான விரிவான கலந்தாராய்ச்சிக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும் என்ற சிற்றேட்டை தயவுசெய்து காண்க.
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
பெரிய போதகரைப் பின்பற்றுங்கள்
பெரும்பாலும் குறிப்பிட்ட பைபிள் விஷயத்திடம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இயேசு கற்பித்தார். உதாரணமாக, அவருடைய மரணத்தைக் குறித்து குழம்பிப் போயிருந்த இரு சீஷர்களிடம் உயிர்த்தெழுதலுக்குப் பின், கடவுளுடைய நோக்கத்தில் தம்முடைய பங்கைக் குறித்து விளக்கினார். “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” என லூக்கா 24:27 சொல்கிறது.
அந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு குறிப்பிட்ட விஷயத்தைத் தேர்ந்தெடுத்து பேசியதைக் கவனியுங்கள். மேசியாவாகிய, “தம்மைக் குறித்து” அவர் பேசினார். அந்தக் கலந்தாலோசிப்பில் அவர் “வேதவாக்கியங்களெல்லாவற்றி[ல்]” இருந்தும் மேற்கோள் காட்டினார். புதிரை கண்டுபிடிக்க அதன் வெவ்வேறு பாகங்களை இணைப்பதுபோல பொருத்தமான பைபிள் வசனங்களை இயேசு ஒன்றோடொன்று இணைத்தார்; இப்படி செய்தது ஆவிக்குரிய சத்தியத்தின் மாதிரியை அவருடைய சீஷர்கள் தெளிவாக காண்பதற்கு உதவியது. (2 தீமோத்தேயு 1:13) இதனால், அவர்கள் அறிவொளியூட்டப்பட்டதோடு செயல்படவும் தூண்டப்பட்டார்கள். “அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்[டார்கள்].”—லூக்கா 24:32.
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ஊழியத்தில் இயேசுவின் பாணியையே பின்பற்ற முயலுகிறார்கள். பைபிளைக் கற்பிக்க அவர்கள் முக்கியமாய் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேட்டையும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ஆர்வத்தைத் தூண்டும் எண்ணற்ற பைபிள் தலைப்புகள் கலந்தாராயப்படுகின்றன. இதோ அவற்றில் சில: “கடவுள் யார்?,” “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?,” “உண்மை மதத்தை நீங்கள் எப்படி கண்டறியலாம்?,” “இவை கடைசி நாட்கள்!,” “கடவுளைக் கனப்படுத்தும் ஒரு குடும்பத்தைக் கட்டுதல்.” இந்தப் பாடங்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான பைபிள் வசனங்கள் உள்ளன.
இவற்றையும் இன்னும் பிற தலைப்புகளையும் பற்றி பைபிள் படிப்பின் மூலம் கற்றறிவதற்கு உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்ளும்படி அல்லது இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்திலுள்ள விலாசத்திற்கு எழுதும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
[படம்]
குறிப்பிட்ட பைபிள் தலைப்புகளிடம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் உங்கள் மாணாக்கரின் இருதயத்தை எட்டுங்கள்
[பக்கம் 7-ன் படங்கள்]
இயேசுவின் மாதிரி ஜெபத்தினுடைய அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்களா?
“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக . . .”
“உம்முடைய [மேசியானிய] ராஜ்யம் வருவதாக . . .”
“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக”