எல்லா தேசத்தாரையும் கடவுள் வரவேற்கிறார்
ஜான் என்பவர் மாலி நாட்டிற்கு முதன்முறையாக சென்றபோது மமடூவும் அவர் குடும்பத்தாரும் காண்பித்த கனிவான உபசரிப்பால் கவரப்பட்டார். அவர் தரையில் அமர்ந்து அனைவருக்கும் பொதுவான தட்டிலிருந்து சாப்பிடத் தெரியாமல் சாப்பிட்டார். அப்போது, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து ராஜ்ய நற்செய்தி என்ற மதிப்புமிக்க பரிசை தனக்கு விருந்தளிப்பவரின் மனதைக் கவரும் விதத்தில் எவ்வாறு சொல்வது என்ற யோசனையில் ஆழ்ந்தார். மாலியில் பேசப்படும் ஒரு பாஷையான ஃபிரெஞ்சு மொழி ஜானுக்கு தெரியும்; என்றாலும், முற்றிலும் வித்தியாசமான மதமும் சிந்தனைப் போக்கும் உடையவர்களிடம் எவ்வாறு பேசுவது என அவர் யோசித்தார்.
பைபிளில் கூறப்பட்டுள்ள பாபேல் நகரத்தைப் பற்றி ஜான் யோசித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அங்கே, கலகம் செய்த மக்களின் மொழியை யெகோவா தாறுமாறாக்கினார். (ஆதியாகமம் 11:1-9) அதன் விளைவாகவே பல மொழிகளும், மதங்களும், சிந்தனைப் போக்கும் உடைய ஜனங்கள் பூமி முழுவதிலும் தோன்ற ஆரம்பித்தனர். பயணிப்பதும் இடம் பெயர்வதும் இன்று சர்வசாதாரணம் ஆகிவிட்டதால், அநேகர் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே ஜான் எதிர்ப்பட்டதைப் போன்ற பிரச்சினையை சந்திக்கின்றனர். பைபிள் அடிப்படையிலான தங்கள் நம்பிக்கையை வேறொரு பின்னணியைச் சேர்ந்தவர்களிடம் எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதே அந்தப் பிரச்சினை.
பூர்வ கால உதாரணம்
இஸ்ரவேலிலிருந்த மற்ற தீர்க்கதரிசிகளைப் போல யோனாவும் முக்கியமாக இஸ்ரவேலர்களிடமே பேசினார். விசுவாச துரோக பத்து கோத்திர ராஜ்யம், கடவுளை அவமதிக்கும் காரியங்களை வெளிப்படையாக செய்த சமயத்தில் அவர் தீர்க்கதரிசியாக சேவித்தார். (2 இராஜாக்கள் 14:23-25) தன் நாட்டைவிட்டு அசீரியா சென்று நினிவே பட்டணத்தாரிடம் பிரசங்கிக்க வேண்டும் என்ற விசேஷ நியமிப்பை பெற்றபோது யோனா எவ்வாறு உணர்ந்திருப்பார் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அந்த மக்களுடைய மதமும் கலாச்சாரமும் முற்றிலும் வேறுபட்டது. நினிவே பட்டணத்தாரின் மொழிகூட யோனாவுக்கு தெரிந்திருக்காது; அப்படியே தெரிந்திருந்தாலும் சரளமாக பேச அறிந்திருக்க மாட்டார். எது எப்படியோ, அந்த நியமிப்பு மிகவும் கடினமானது என யோனா உணர்ந்ததால் அதை ஏற்காமல் ஓடிப்போனார்.—யோனா 1:1-3.
யெகோவா தேவன் வெளித்தோற்றத்தை அல்ல மாறாக இருதயத்தை ஆராய்கிறவர் என்பதை யோனா அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. (1 சாமுவேல் 16:7) கடலில் மூழ்குவதிலிருந்து யோனாவை அற்புதகரமாக காப்பாற்றிய பிறகு நினிவே பட்டணத்தாரிடம் பிரசங்கிக்கும்படி யெகோவா இரண்டாவது முறை அவரிடம் கூறினார். யோனா கீழ்ப்படிந்ததன் விளைவாக நினிவே பட்டணத்தார் ஒட்டுமொத்தமாக மனந்திரும்பினர். ஆனாலும், யோனாவின் கண்ணோட்டம் சரியானதாக இருக்கவில்லை. நடைமுறையான ஓர் உதாரணத்தை உபயோகித்து யோனா தன் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டுமென யெகோவா அவருக்கு கற்பித்தார். “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ” என யெகோவா யோனாவிடம் கேட்டார். (யோனா 4:5-11) இன்று நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? வித்தியாசப்பட்ட பின்னணியை சேர்ந்தவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்?
சமாரியர்களையும் யூதரல்லாதவர்களையும் வரவேற்றல்
முதல் நூற்றாண்டில், எல்லா தேசத்தாரையும் சீஷராக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு கட்டளை கொடுத்தார். (மத்தேயு 28:19) அவர்களுக்கு இது கடினமாகவே இருந்திருக்கும். யூதர்களாயிருந்த இயேசுவின் சீஷர்கள் யோனாவைப் போல, அதே பின்னணியும் கலாச்சாரமும் உடையவர்களிடம் பேசியே பழக்கப்பட்டிருந்தனர். அக்காலத்தில் நிலவிய பொதுவான தப்பெண்ணங்களும் அவர்களை அதிகமாக பாதித்திருக்கும். என்றாலும், தமது ஊழியர்களுக்கான தம் சித்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும் விதத்தில் யெகோவா காரியங்களை வழிநடத்தினார்.
யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையிலிருந்த தப்பெண்ணத்தை தகர்ப்பதே முதல் படியாகும். யூதர்கள் சமாரியர்களோடு எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. இருந்தாலும், எதிர்காலத்தில் சமாரியர்கள் நற்செய்தியை ஏற்பதற்கு இயேசு அநேக தடவை அவர்களுக்காக வழியை ஆயத்தம் செய்தார். ஒரு சமாரிய பெண்ணிடம் பேசுவதன் மூலம் தமக்கு பட்சபாதமில்லை என காட்டினார். (யோவான் 4:7-26) மற்றொரு சந்தர்ப்பத்தில் அயலானுக்கு உதவிய சமாரியன் உவமையைக் கூறி, யூதரல்லாதவர்கள்கூட அயலாரிடம் அன்புகாட்டுவர் என்பதை மதப்பற்றுள்ள ஓர் யூதனுக்கு புரிய வைத்தார். (லூக்கா 10:25-37) சமாரியர்களை கிறிஸ்தவ சபைக்குள் ஏற்றுக்கொள்வதற்கான யெகோவாவின் சமயம் வந்தபோது யூதராயிருந்த பிலிப்பு, பேதுரு, யோவான் ஆகியோர் சமாரியரிடம் பிரசங்கித்தனர். அவர்கள் பிரசங்கித்ததால் அந்தப் பட்டணத்தில் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.—அப்போஸ்தலர் 8:4-8, 14-17.
யூதர்களின் தூரத்து உறவினர்களான சமாரியர்களை நேசிப்பதே யூத கிறிஸ்தவர்களுக்கு கடினமாக இருந்ததென்றால், யூதர்கள் வெறுத்து ஒதுக்கிய யூதரல்லாதவர்களிடம் அல்லது புறமதத்தாரிடம் அயலான் போன்று அன்பு காண்பிப்பது இன்னும் கடினமாக இருந்திருக்கும் அல்லவா? என்றாலும், இயேசு மரித்த பிறகு யூத கிறிஸ்தவர்களுக்கும் புறமதத்தினருக்கும் இடையிலிருந்த சுவர் நீக்கப்பட முடிந்தது. (எபேசியர் 2:13, 14) இந்தப் புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள உதவியாக யெகோவா பேதுருவுக்கு ஒரு தரிசனத்தை காண்பித்தார். அதில், “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என அவரிடம் கூறினார். பிறகு யெகோவாவின் ஆவி, கொர்நேலியு என்ற புறமதத்தானிடம் அவரை வழிநடத்தியது. புறமதத்தானாகிய இவரை கடவுள் சுத்தமாக்கியதால் அவரை அசுத்தமானவரென அழைக்கக்கூடாது என்ற கடவுளுடைய கண்ணோட்டத்தை பேதுரு புரிந்துகொண்டபோது ஆவியின் தூண்டுதலால் இவ்வாறு கூறினார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 10:9-35) கொர்நேலியு மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் பரிசுத்த ஆவியை ஊற்றி அவர்களை தாம் ஏற்றுக்கொண்டதை யெகோவா காண்பித்தபோது பேதுரு அசந்து போனார்!
பவுல்—புறதேசத்தாருக்காக தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம்
எல்லா விதமான மக்களையும் நேசித்து, அவர்களுக்கு உதவ தம் ஊழியர்களை யெகோவா எவ்வாறு சிறிது சிறிதாக தயார்படுத்துகிறார் என்பதற்கு பவுலின் ஊழியமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. புறதேசத்தாருக்கு தம் பெயரை அறிவிக்க தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக பவுல் இருப்பார் என்பதை அவர் மதமாறிய சமயத்தில் இயேசு அவரிடம் கூறினார். (அப்போஸ்தலர் 9:15) பிறகு பவுல் அரபி தேசத்திற்கு சென்றார்; ஒருவேளை, புறதேசத்தாருக்கு நற்செய்தியை அறிவிக்க தன்னை கடவுள் உபயோகிக்கவிருப்பதைப் பற்றி தியானிக்க அங்கு சென்றிருக்கலாம்.—கலாத்தியர் 1:15-17.
பவுல் தனது முதல் மிஷனரி பயணத்தின்போது, யூதரல்லாதவர்களிடம் பிரசங்கிப்பதில் தீவிரம் காட்டினார். (அப்போஸ்தலர் 13:46-48) பவுலின் ஊழியத்தை யெகோவா ஆசீர்வதித்தார்; இது, யெகோவாவின் ஏற்பாட்டிற்கு இசைவாகவே அந்த அப்போஸ்தலன் செயல்பட்டார் என்பதை நிரூபித்தது. பேதுரு ஒரு சமயம், யூதரல்லாத சகோதரர்களோடு கூட்டுறவு கொள்வதை தவிர்த்து பட்சபாதத்துடன் நடந்துகொண்டார்; பவுல் அதை தைரியமாக கண்டித்தபோது யெகோவாவின் நோக்குநிலையை முழுமையாக புரிந்துகொண்டிருப்பதை காண்பித்தார்.—கலாத்தியர் 2:11-14.
பவுலின் முயற்சிகளை கடவுளே வழிநடத்தினார் என்பதற்கு மேலுமான அத்தாட்சி, அவருடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது கிடைத்தது. அப்போது ரோம மாகாணமாகிய பித்தினியாவில் பிரசங்கிக்க பரிசுத்த ஆவி பவுலை அனுமதிக்கவில்லை. (அப்போஸ்தலர் 16:7) அதற்கு ஏற்ற காலம் இன்னும் வரவில்லை போலும். ஆனால், பிறகு பித்தினியா நாட்டவர் சிலர் கிறிஸ்தவர்களானார்கள். (1 பேதுரு 1:1) மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் தரிசனத்தில் தோன்றி, “நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று” பவுலிடம் மன்றாடினான். உடனே, அந்த ரோம மாகாணத்தில் நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக தன் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டுமென பவுல் தீர்மானித்தார்.—அப்போஸ்தலர் 16:9, 10.
மாற்றியமைத்துக் கொள்வதற்கான பவுலின் பக்குவம் அத்தேனே பட்டணத்தாரிடம் பிரசங்கிக்கையில் கடுமையாக சோதிக்கப்பட்டது. புதிய கடவுட்களையும், புதிய மத ஆசாரங்களையும் அறிமுகப்படுத்துவதை கிரேக்க, ரோம சட்டங்கள் தடை செய்தன. பவுல் அந்த மக்கள் மீது அன்பு வைத்திருந்ததால் அவர்களுடைய மத பழக்கங்களை கவனமாக ஆராய தூண்டப்பட்டார். “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தை அத்தேனே பட்டணத்தில் கண்டார். இந்தத் தகவலை தன் பிரசங்கத்தில் உபயோகித்தார். (அப்போஸ்தலர் 17:22, 23) அவருடைய செய்தியை தயவாகவும் மரியாதையோடும் அறிமுகப்படுத்த எப்பேர்ப்பட்ட அருமையான வழி இது!
புறதேசத்தாருக்கு அப்போஸ்தலனாக இருந்ததால் பெற்ற பலன்களை எண்ணிப் பார்க்கையில் பவுல் எந்தளவு சந்தோஷம் அடைந்திருப்பார்! கொரிந்து, பிலிப்பி, தெசலோனிக்கே, கலாத்தியாவிலுள்ள பட்டணங்கள் போன்ற இடங்களில் சபைகளை ஸ்தாபிக்க அவர் உதவினார்; இச்சபைகளில் யூதரல்லாத பின்னணியிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களே அநேகர் இருந்தனர். தாமரி, தியொனீசியு, செர்கியு பவுல், தீத்து போன்ற விசுவாசமுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் பவுல் உதவினார். யெகோவாவையோ பைபிளையோ அறியாதிருந்தவர்கள் கிறிஸ்தவத்தின் சத்தியத்தை ஏற்பதைக் காண்பது என்னே மகத்தான பாக்கியம்! யூதரல்லாதவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள தான் உதவியதைப் பற்றி பவுல் இவ்வாறு கூறினார்: “அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் . . . கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.” (ரோமர் 15:20, 21) நம் கலாச்சாரத்தைப் பின்பற்றாதவர்களிடம் நற்செய்தியை அறிவிப்பதில் நாம் பங்குகொள்வோமா?
பூமியிலுள்ள எல்லா மக்களுக்கும் உதவுதல்
எருசலேமிலிருந்த ஆலயத்தில் வணங்க வரும் யூதரல்லாதவர்களுக்காக சாலொமோன் ஜெபித்தார். ‘உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் . . . உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக’ என அவர் மன்றாடினார். (1 இராஜாக்கள் 8:41-43) அநேக நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான ராஜ்ய அறிவிப்பாளர்களும் அதைப் போலவே உணருகின்றனர். ஆவிக்குரிய அர்த்தத்தில் தங்கள் “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத” நினிவே பட்டணத்தார் போன்றவர்களை அவர்கள் சந்திக்கின்றனர். பல்வேறு நாடுகளிலிருந்தும் உண்மை வணக்கத்தாரைக் கூட்டிச் சேர்ப்பது சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் பங்குகொள்ள ராஜ்ய அறிவிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.—ஏசாயா 2:2, 3; மீகா 4:1-3.
பைபிளிலுள்ள நம்பிக்கையின் செய்தியை, கிறிஸ்தவமண்டலத்தை சேர்ந்தோர் ஏற்றுக்கொண்டதைப் போலவே மற்ற மதத்தாரும் ஏற்கின்றனர். தனிப்பட்ட விதமாக இது உங்களை என்ன செய்ய தூண்ட வேண்டும்? உங்களை நீங்களே நேர்மையாக ஆராய்ந்து பாருங்கள். தப்பெண்ணம் உங்களுக்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதை உணர்ந்தால் அன்பை வளர்ப்பதன் மூலம் அதை நீக்கிப்போடுங்கள்.a கடவுள் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கும் மக்களை நீங்கள் ஒதுக்கித் தள்ளாதீர்கள்.—யோவான் 3:16.
வேறொரு பின்னணியைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதற்கு முன்பு மனதளவில் உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். அவர்களுடைய நம்பிக்கைகள், அக்கறைகள், சிந்தனைப் போக்கு ஆகியவற்றை அறிந்துகொள்ளுங்கள்; பிறகு பொதுவாயிருக்கும் காரியங்களைக் கண்டறியுங்கள். மற்றவர்களிடம் நற்குணத்தையும் பரிவிரக்கத்தையும் காண்பியுங்கள். வாக்குவாதங்களை தவிருங்கள், வளைந்து கொடுக்கிறவராகவும் உற்சாகப்படுத்துகிறவராகவும் இருங்கள். (லூக்கா 9:52-56) அவ்வாறு செய்தால், ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் சித்தமாயிருக்கிற’ யெகோவாவைப் பிரியப்படுத்துவீர்கள்.—1 தீமோத்தேயு 2:4.
பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்கள் நம் சபைகளில் இருப்பது எவ்வளவு சந்தோஷத்தை அளிக்கிறது! (ஏசாயா 56:6, 7) இன்று, மேரி, ஜான், சுனில், டோனி போன்ற பெயர்களை மட்டுமல்ல மமடூ, ஜீகன், ரேஸா, ச்சான் போன்ற பெயர்களையும் கேள்விப்படுவது இருதயத்திற்கு எவ்வளவாய் இதமளிக்கிறது! உண்மையில், ‘பெரிதும் அநுகூலமுமான கதவு நமக்காக திறக்கப்பட்டிருக்கிறது.’ (1 கொரிந்தியர் 16:9) எல்லா தேசத்தாரையும் வரவேற்க பட்சபாதமற்ற கடவுளாகிய யெகோவா அழைப்பு கொடுக்கிறார்; இதை அனைவருக்கும் தெரிவிக்க நமக்கிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோமாக!
[அடிக்குறிப்பு]
a 1996, ஜூலை 8, விழித்தெழு!-வில் பக்கங்கள் 5-7-ல் உள்ள “கருத்துப் பரிமாற்றத்தைத் தடை செய்யும் சுவர்கள்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 23-ன் படங்கள்]
பவுல், மாற்றியமைத்துக் கொள்பவராக இருந்ததால் எங்குமுள்ள மக்களிடம் நற்செய்தியை பகிர்ந்து கொண்டார்
. . . அத்தேனே பட்டணத்தில்
. . . பிலிப்பியில்
. . . பயணிக்கையில்