விழித்திருங்கள், தைரியமாக முன்னேறுங்கள்!
விசேஷ கூட்டங்கள் அறிக்கை
‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? நாம் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தாலும் “கடைசி நாட்களில்” வாழ்வதால் வரும் அழுத்தங்களிலிருந்து விடுபட்டவர்கள் அல்ல. (2 தீமோத்தேயு 3:1-5, NW) ஆனால் மக்களுக்கு உதவி தேவை என்பதை நாம் உணருகிறோம். உலக நிலைமைகள் சீரழிவதற்கான காரணத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தேவை. நம் அயலாருக்கு உதவ நாம் முக்கியமாய் என்ன செய்ய வேண்டும்?
ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும் வேலையை கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். (மத்தேயு 24:14) இந்தப் பரலோக ராஜ்யம்தான் மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை என்பதை மக்கள் அறிய வேண்டும். என்றாலும் நம் செய்தியை அனைவரும் விருப்பத்தோடு ஏற்பதில்லை. சில நாடுகளில் நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கிறது, நம் சகோதரர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் நாம் சோர்ந்துவிடுவதில்லை. யெகோவாவில் முழு நம்பிக்கை வைத்து விழித்திருக்கவும், தைரியமாக முன்னேறவும், தொடர்ந்து நற்செய்தியை பிரசங்கிக்கவும் தீர்மானமாயிருக்கிறோம்.—அப்போஸ்தலர் 5:42.
அக்டோபர் 2001-ல் நடந்த விசேஷ கூட்டங்களில் அந்தத் திடத்தீர்மானம் தெளிவாக தெரிந்தது. உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தர கூட்டம், அக்டோபர் 6-ம் தேதி, சனிக்கிழமை அன்று ஐக்கிய மாகாணங்கள், நியூ ஜெர்ஸி, ஜெர்ஸி சிட்டியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றத்தில் நடைபெற்றது.a மறுநாள், ஐக்கிய மாகாணங்களில் மூன்று, கனடாவில் ஒன்று என நான்கு இடங்களில் கூடுதல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.b
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினர் சாம்யல் எஃப். ஹெர்ட் அக்கூட்டத்தின் சேர்மெனாக இருந்தார். அவருடைய ஆரம்ப குறிப்புகளில் சங்கீதம் 92:1, 4-ஐக் குறிப்பிட்டு, “நன்றியுள்ளவர்களாய் இருக்க விரும்புகிறோம்” என்று கூறினார். பூமியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஐந்து அறிக்கைகள், நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கான காரணங்களை அளித்தன.
நாலாபுறங்களிலிருந்தும் வந்த அறிக்கைகள்
முன்னர் கோல்டு கோஸ்ட் என அறியப்பட்ட கானாவில் ஏற்படும் பிரசங்க வேலையின் முன்னேற்றத்தைப் பற்றி சகோதரர் அல்ஃபிரட் க்வாசீ கூறினார். பல வருடங்களாக அந்நாட்டில் நம் வேலை தடை செய்யப்பட்டிருந்தது. “ஏன் உங்களுக்குத் தடை விதித்திருக்கிறார்கள்? என்ன செய்தீர்கள்?” என மக்கள் கேட்பர். இது சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை அளித்ததாக சகோதரர் க்வாசீ விளக்கினார். 1991-ல் தடையுத்தரவு நீக்கப்பட்டபோது கானாவில் 34,421 யெகோவாவின் சாட்சிகள் இருந்தனர். ஆகஸ்ட் 2001-ல் அந்த எண்ணிக்கை 68,152-ஐ எட்டியது; இது 98 சதவிகித அதிகரிப்பாகும். இப்போது 10,000 பேர் அமரும் வசதி படைத்த மாநாட்டு மன்றம் கட்ட திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கானாவிலுள்ள நம் ஆவிக்குரிய சகோதரர்கள் தங்களுக்கு கிடைத்த மத சுதந்திரத்தை மிகச் சிறந்த விதத்தில் உபயோகிக்கிறார்கள் என்பது தெளிவாக உள்ளது.
அயர்லாந்தில் அரசியல் குழப்பம் நிலவுகிற போதிலும் அங்குள்ள நம் சகோதரர்கள் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றனர், நடுநிலை வகிப்பதற்காக அவர்கள் மதிக்கப்படுகின்றனர். அயர்லாந்தில் 6 வட்டாரங்களும் 115 சபைகளும் உள்ளன என்று கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் பீட்டர் ஆன்ட்ரூஸ் கூறினார். பயப்படாமல் பள்ளியில் சாட்சி கொடுக்கும் லியம் என்ற பத்து வயது சிறுவனின் அனுபவத்தை சகோதரர் ஆன்ட்ரூஸ் கூறினார். லியம், யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை சக மாணவர்களில் 25 பேருக்கும் தன் ஆசிரியைக்கும் கொடுத்திருக்கிறான். அவன் முழுக்காட்டுதல் எடுக்க விரும்பியபோது, ரொம்ப சின்னவனாக இருக்கிறாயே என யாரோ கூறினர். அதற்கு லியம், “என் வயதை பாக்காதீங்க யெகோவா கிட்ட உள்ள என் அன்பை பாத்து தீர்மானீங்க. அவரிடம் கொள்ளை அன்பு வைத்திருப்பதை என் முழுக்காட்டுதல் காட்டும்” என்றான். ஒரு மிஷனரியாவதே லியமின் இலட்சியம்.
வெனிசுவேலாவில் 1968-ல் நற்செய்தியை பிரசங்கிக்கும் 5,400 பிரஸ்தாபிகள் இருந்தனர். இப்போதோ அங்கே 88,000-த்திற்கும் அதிகமானோர் உள்ளனர் என கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் ஸ்டீஃபன் யோஹன்சன் குறிப்பிட்டார். 2001-ன் நினைவு ஆசரிப்பிற்கு 2,96,000-த்திற்கும் அதிகமானோர் வந்திருந்ததால் இன்னும் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 1999-ல் பலத்த மழை பெய்ததால் நிலச் சரிவுகள் ஏற்பட்டு சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர்; அதில் அநேக சாட்சிகளும் இருந்தனர். ஒரு ராஜ்ய மன்றம் கிட்டத்தட்ட முழுவதுமே மண்ணால் நிரம்பியிருந்தது, கூரையிலிருந்து அரை மீட்டர்தான் வெளியே தெரிந்தது. அந்தக் கட்டடத்தை மறந்துவிட வேண்டியதுதான் என யாரோ ஆலோசனை கூறியபோது சகோதரர்கள் இவ்வாறு பதிலளித்தனர்: “முடியவே முடியாது! இது எங்கள் ராஜ்ய மன்றம், இப்போது இதை விட்டுவிடமாட்டோம்.” சுத்திகரிக்கும் வேலையை ஆரம்பித்து டன்கணக்கில் மண், கற்கள், குப்பைக்கூளங்களை நீக்கினர். கட்டடம் மாற்றியமைக்கப்பட்டது; பேரழிவு ஏற்படுவதற்கு முன்பிருந்ததைவிட இப்போது அது புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதாக சகோதரர்கள் கூறுகின்றனர்!
பிலிப்பீன்ஸில் மொத்தம் 87 மொழிகளும் பிராந்திய மொழிகளும் பேசப்படுவதாக கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் சகோதரர் டென்டன் ஹாப்கின்சன் கூறினார். அந்நாட்டில் பேசப்படும் சிபுவானோ, இலோகோ, டாகலாக் ஆகிய மூன்று முக்கிய மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு கடந்த ஊழிய ஆண்டில் வெளியிடப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு என்ற புத்தகத்தை வாசித்த ஒன்பது வயது சிறுவனுடைய அனுபவத்தை சகோதரர் ஹாப்கின்சன் கூறினார். அச்சிறுவன் கிளை காரியாலயத்திலிருந்து மற்ற பிரசுரங்களையும் பெற்று வாசித்தான், குடும்பத்தாரோ அவனை எதிர்த்தனர். பல வருடங்கள் கழித்து மருத்துவ கல்லூரியில் படிக்கையில் அவர் பைபிள் படிக்க ஆசைப்படுவதாக கிளை காரியாலயத்திற்கு எழுதினார். 1996-ல் முழுக்காட்டப்பட்டு சீக்கிரத்திலேயே முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தார். இன்றோ மனைவியோடு கிளை காரியாலயத்தில் சேவிக்கிறார்.
“பியூர்டோ ரிகோ ‘சாட்சிகளை ஏற்றுமதி’ செய்கிறது” என்பதாக கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் ரானல்ட் பார்கன் கூறினார். அத்தீவில் சுமார் 25,000 பிரஸ்தாபிகள் உள்ளனர், பல வருடங்களாக அந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஏன்? பியூர்டோ ரிகோவிலிருந்து வருடத்திற்கு சுமார் 1,000 பிரஸ்தாபிகள் ஐக்கிய மாகாணங்களுக்கு “ஏற்றுமதி” செய்யப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது; இவர்களில் அநேகர் பொருளாதார காரணங்களுக்காக குடிபெயர்கின்றனர். வெள்ளணு புற்றுநோய் தாக்கியிருந்த 17 வயது சாட்சியான லூயிஸ் விஷயத்தில் திருப்புகட்டமாக அமைந்த நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி சகோதரர் பார்கன் கூறினார். லூயிஸ் இரத்தமேற்றிக் கொள்ள மறுத்ததால் அவர் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிபதி அவரோடு நேரடியாக பேச விரும்பியதால் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரை சந்தித்தார். லூயிஸ் அவரிடம் கேட்டதாவது: “ஒரு மோசமான குற்றம் செய்தால் என்னை வயது வந்தவனாக கருதி தண்டிக்கும் நீங்கள், கடவுளுக்கு கீழ்ப்படிய விரும்புகையில் என்னை வயது வராத சிறுவனாக ஏன் கருதுகிறீர்கள்?” அவர் சுயமாக தீர்மானம் செய்ய முடிந்த முதிர்ச்சியுள்ள சிறுவன் என்ற நம்பிக்கை நீதிபதிக்கு ஏற்பட்டது.
தொலைதூர நாடுகளிலிருந்து வந்த அறிக்கைகளுக்கு பிறகு ஐ.மா. கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் ஹரல்ட் கார்கர்ன், பல வருடங்களாக யெகோவாவை சேவிக்கும் நான்கு பேரை பேட்டி கண்டார். இப்போது ஈக்வடார் கிளை காரியாலய குழுவில் சேவிக்கும் ஆர்தர் போனோ 51 வருடங்கள் முழுநேர ஊழியராக சேவித்திருக்கிறார். ஆன்ஜேலோ காடான்ட்ஷாரோ தன் 59 வருட முழுநேர சேவையின் பெரும்பகுதியில் பயணக் கண்காணியாக இருந்திருக்கிறார். 1953-ல் கிலியட் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற ரிச்சர்ட் ஏப்ரஹாம்சன், புரூக்ளின் பெத்தேலுக்கு திரும்புவதற்கு முன் 26 வருடங்கள் டென்மார்க்கில் வேலையை மேற்பார்வை செய்தார். கடைசியாக, 96 வயதான கேரி டபிள்யூ. பார்பரின் அனுபவத்தை கேட்ட அனைவரும் பரவசமடைந்தனர். 1921-ல் முழுக்காட்டப்பட்ட சகோதரர் பார்பர் 78 வருடங்கள் முழுநேர சேவை செய்து, 1978-லிருந்து ஆளும் குழு அங்கத்தினராக இருக்கிறார்.
உற்சாகமளிக்கும் பேச்சுகள்
வருடாந்தர கூட்டத்தில் சிந்தையைத் தூண்டும் சில பேச்சுகளும் இடம் பெற்றன. “தம் பெயருக்கென்று ஒரு ஜனம்” என்ற தலைப்பில் ராபர்ட் டபிள்யூ. வாலன் பேசினார். நாம் கடவுளுடைய பெயருக்கான ஜனம், 230-க்கும் அதிகமான நாடுகளில் இருக்கிறோம். யெகோவா நமக்கு ‘எதிர்காலத்தையும் நம்பிக்கையையும்’ அளித்திருக்கிறார். (எரேமியா 29:11, NW) ஆறுதல் தரும் அருமையான செய்தியை பகிர்ந்துகொள்வதன் மூலம் நாம் கடவுளுடைய ராஜ்யத்தை எங்கும் தெரிவிக்க வேண்டும். (ஏசாயா 61:1) “ஒவ்வொரு நாளும் யெகோவாவின் சாட்சிகள் என்ற நம் பெயருக்கு இசைய வாழ்வோமாக” என்று கூறி சகோதரர் வாலன் பேச்சை நிறைவு செய்தார்.—ஏசாயா 43:10.
ஆளும் குழு அங்கத்தினர்கள் மூன்று பேர் கொடுத்த ஒரு தொடர்பேச்சு நிகழ்ச்சியின் கடைசி பகுதியாகும். “விழித்திருந்து, நிலைத்திருந்து, திடன்கொள்ள இதுவே சமயம்” என்பதே அதன் தலைப்பு.—1 கொரிந்தியர் 16:13.
முதலாவதாக, “இந்தக் கடைசி நேரத்தில் விழித்திருங்கள்” என்ற தலைப்பில் சகோதரர் ஸ்டீவன் லெட் பேசினார். சரீர தூக்கம் ஒரு வரம் என சகோதரர் லெட் விளக்கினார். அது புத்துயிரூட்டுகிறது. ஆவிக்குரிய தூக்கமோ ஆபத்தானது. (1 தெசலோனிக்கேயர் 5:6) அப்படியென்றால், நாம் எவ்வாறு ஆவிக்குரிய விதத்தில் விழித்திருக்கலாம்? மூன்று ஆவிக்குரிய ‘மாத்திரைகளை’ சகோதரர் லெட் குறிப்பிட்டார்: (1) கர்த்தருடைய வேலையில் எப்போதும் அதிகத்தை செய்யுங்கள். (1 கொரிந்தியர் 15:58) (2) உங்கள் ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருங்கள். (மத்தேயு 5:3, NW) (3) ஞானமாய் செயல்பட பைபிள் அடிப்படையிலான ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 13:20.
“சோதனையின் மத்தியிலும் நிலைத்திருங்கள்” என்ற ஆர்வமூட்டும் பேச்சை சகோதரர் தியோடர் ஜாரக்ஸ் கொடுத்தார். வெளிப்படுத்துதல் 3:10-ஐக் குறிப்பிட்டு, “‘சோதனை காலம்’ எது?” என சகோதரர் ஜாரக்ஸ் கேட்டார். அந்தச் சோதனை நாம் வாழும் “கர்த்தருடைய நாளில்” வருகிறது. (வெளிப்படுத்துதல் 1:10) அச்சோதனை, கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தை ஆதரிக்கிறோமா அல்லது சாத்தானின் பொல்லாத காரிய ஒழுங்குமுறையை ஆதரிக்கிறோமா என்ற முக்கிய பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டது. அந்தச் சோதனை காலம் முடியும் வரை நாம் பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை நிச்சயம் சந்திப்போம். நாம் யெகோவாவுக்கும் அவருடைய அமைப்பிற்கும் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்போமா? ‘அப்படிப்பட்ட உண்மைத்தன்மையை நாம் ஒவ்வொருவரும் காட்ட வேண்டும்’ என சகோதரர் ஜாரக்ஸ் கூறினார்.
கடைசியாக, “ஆவிக்குரிய நபராக திடன்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் சகோதரர் ஜான் ஈ. பார் பேசினார். லூக்கா 13:23-25-ஐ அவர் குறிப்பிட்டு, “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க” பிரயாசப்பட வேண்டும் என்று கூறினார். அநேகர் திடன்கொள்வதற்கு கடினமாய் உழைக்காததாலேயே வீழ்ந்துவிடுகின்றனர். முழு வளர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களாவதற்கு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பைபிள் நியமங்களை பொருத்த பழக வேண்டும். சகோதரர் பார் இவ்வாறு ஊக்குவித்தார்: “(1) யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பதற்கும், (2) திடன் கொள்வதற்கும், (3) யெகோவாவின் சித்தத்தை செய்வதில் மும்முரமாக ஈடுபடுவதற்கும் இதுவே சமயம் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என அறிந்திருக்கிறேன். இவ்வாறு செய்தால், முடிவில்லாத அருமையான வாழ்க்கைக்கு வழிநடத்தும் இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க முடியும்.”
வருடாந்தர கூட்டம் முடிந்தபோதிலும் ஒரு கேள்விக்கு பதில் கிடைக்காமலே இருந்தது: 2002-ம் ஊழிய ஆண்டிற்கான வருடாந்தர வசனம் என்ன? அடுத்த நாளே இக்கேள்விக்கு பதில் கிடைத்தது.
கூடுதல் கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை காலையில் கூடுதல் கூட்டத்திற்கான நிகழ்ச்சி ஆரம்பித்தபோது ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவின. நிகழ்ச்சியின் ஆரம்பமாக அந்த வார காவற்கோபுர பாடத்தின் சுருக்கமும் அதன் பின் வருடாந்தர கூட்டத்தின் சில முக்கிய குறிப்புகளும் சுருக்கமாக அளிக்கப்பட்டன. அடுத்து, 2002-ன் வருடாந்தர வசனமாகிய “என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்பதன் அடிப்படையில் அமைந்த பேச்சை கேட்பதில் அனைவரும் அகமகிழ்ந்தனர். (மத்தேயு 11:28) அந்தப் பேச்சு, 2001, டிசம்பர் 15, தேதியிட்ட காவற்கோபுர பிரதியில் பின்னர் வெளியான படிப்பு கட்டுரைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது.
அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2001-ல் பிரான்சிலும் இத்தாலியிலும் நடந்த “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” விசேஷ மாநாடுகளுக்கு சென்று வந்த சில பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.c கடைசியாக, அந்த நாள் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, புரூக்ளின் பெத்தேலிலிருந்து விசேஷ பேச்சாளர்களாக வந்திருந்த இருவர் முடிவான இரண்டு பேச்சுக்களை கொடுத்தனர்.
“இந்தக் கொடிய காலங்களில் தைரியமாக யெகோவா மீது நம்பிக்கை வைத்தல்” என்பதே முதல் பேச்சின் தலைப்பாகும். பின்வரும் முக்கிய குறிப்புகளை பேச்சாளர் விரிவாக்கினார்: (1) தைரியமாக யெகோவா மீது நம்பிக்கை வைப்பது அவருடைய மக்களுக்கு எக்காலத்திலும் முக்கியமாகும். எதிர்ப்பின் மத்தியிலும் தைரியத்தையும் விசுவாசத்தையும் காண்பித்த அநேகரின் உதாரணங்கள் பைபிளில் உள்ளன. (எபிரெயர் 11:1-12:3) (2) யெகோவா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பதற்கு போதுமான ஆதாரத்தை அவர் நமக்கு அளிக்கிறார். தமது ஊழியர்கள் மீது அக்கறை வைத்திருக்கிறார், அவர்களை ஒருபோதும் மறக்க மாட்டார் என அவருடைய செயல்களும் அவருடைய வார்த்தையும் உத்தரவாதமளிக்கின்றன. (எபிரெயர் 6:10) (3) தைரியமும் நம்பிக்கையும் இன்று முக்கியமாய் தேவை. இயேசு முன்னறிவித்தபடி நாம் ‘பகைக்கப்படுகிறோம்.’ (மத்தேயு 24:9) சகித்திருப்பதற்கு, கடவுளுடைய வார்த்தை மீது சார்ந்திருப்பதும், அவருடைய ஆவி நம்மோடுள்ளது என்ற நம்பிக்கையும், தொடர்ந்து நற்செய்தியை பிரசங்கிக்க தைரியமும் அவசியம். (4) இன்றே நாம் எதிர்ப்பை சந்திக்கிறோம் என உதாரணங்கள் காட்டுகின்றன. ஆர்மீனியா, கஸக்ஸ்தான், துர்க்மேனிஸ்தான், பிரான்சு, ரஷ்யா, ஜார்ஜியா ஆகிய இடங்களில் நம் சகோதரர்கள் சகித்த துன்பங்களை பேச்சாளர் விவரிக்கையில் அனைவரின் மனங்களும் இளகிவிட்டன. ஆம், தைரியமும் யெகோவாவில் நம்பிக்கையும் வைப்பதற்கான சமயம் இதுவே!
“யெகோவாவின் அமைப்போடு ஐக்கியமாக முன்னேறுதல்” என்ற தலைப்பில் கடைசி பேச்சாளர் பேசினார். காலத்திற்கேற்ற அநேக குறிப்புகள் அந்தப் பேச்சில் நிறைந்திருந்தன. (1) யெகோவாவின் மக்கள் முன்னேறுவதை அநேகர் கவனிக்கின்றனர். நம் பிரசங்க வேலையும் மாநாடுகளும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. (2) ஐக்கியப்பட்ட ஓர் அமைப்பை யெகோவா ஸ்தாபித்திருக்கிறார். ‘சகலத்தையும்’ அதாவது, பரலோக நம்பிக்கை உள்ளவர்களையும் பூமியில் வாழும் எதிர்பார்ப்பு உள்ளவர்களையும் கடவுளுடைய ஐக்கியப்பட்ட குடும்பத்தின் அங்கத்தினராக்குவதற்காக இயேசு பொ.ச. 29-ல் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார். (எபேசியர் 1:8-10) (3) மாநாடுகள், சர்வதேச ஐக்கியத்திற்கு அருமையான அத்தாட்சி அளிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் பிரான்சிலும் இத்தாலியிலும் நடந்த விசேஷ மாநாடுகளில் இது தெளிவாக தெரிந்தது. (4) பிரான்சிலும் இத்தாலியிலும் கிளர்ச்சியூட்டும் ஓர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கிளர்ச்சியூட்டும் அந்த உறுதிமொழியிலிருந்து சில பகுதிகளை பேச்சாளர் பகிர்ந்துகொண்டார். அந்த முழு உறுதிமொழியும் கீழே காணப்படுகிறது.
கடைசிப் பேச்சின் முடிவில் ஆளும் குழுவின் உருக்கமான ஓர் அறிவிப்பை விசேஷ பேச்சாளர் வாசித்தார். அதன் ஒரு பகுதி இதோ: “உலக மேடையில் நிகழ்ச்சிகள் எவ்வாறு அரங்கேறுகின்றன என்று பகுத்தறிந்து, விழித்திருந்து, கவனம் செலுத்துவதற்கான சமயம் இதுவே. . . . உங்கள் மீதும் கடவுளுடைய மக்கள் அனைவர் மீதும் ஆளும் குழு வைத்திருக்கும் அன்பான அக்கறையை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். முழு ஆத்துமாவோடு அவருடைய சித்தத்தை செய்கையில் அவர் உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக.” இந்தக் கொடிய காலங்களில் விழித்திருக்கவும், யெகோவாவின் ஐக்கியப்பட்ட அமைப்போடு தொடர்ந்து தைரியமாய் முன்னேறவும் எங்குமுள்ள யெகோவாவின் மக்கள் தீர்மானமாய் இருக்கின்றனர்.
[அடிக்குறிப்புகள்]
a வருடாந்தர கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் மின்னணுவியல் தொடர்பால் பல இடங்களோடு இணைக்கப்பட்டிருந்ததால் ஆஜரானோரின் மொத்த எண்ணிக்கை 13,757 ஆகும்.
b கூடுதல் கூட்டங்கள் பின்வரும் இடங்களில் நடந்தன: கலிபோர்னியாவிலுள்ள லாங் பீச், மிச்சிகனிலுள்ள பான்டியக், நியூ யார்க்கிலுள்ள யூனியன்டேல், ஒன்டாரியோவிலுள்ள ஹாமில்டன். இணைக்கப்பட்டிருந்த மற்ற இடங்களையும் சேர்த்து கூட்டத்தாரின் மொத்த எண்ணிக்கை 1,17,885.
c பிரான்சிலுள்ள பாரிஸ், போர்டியாக்ஸ், லயான்ஸ் ஆகிய மூன்று இடங்களில் விசேஷ மாநாடுகள் நடத்தப்பட்டன. இத்தாலியில் ஒரே சமயத்தில் ஒன்பது மாநாடுகள் நடந்தபோதிலும், ரோமிற்கும் மிலானுக்கும் ஐக்கிய மாகாணங்களிலிருந்து பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர்.
[பக்கம் 29-31-ன் பெட்டி/படங்கள்]
உறுதிமொழி
ஆகஸ்ட் 2001-ல் பிரான்சிலும், இத்தாலியிலும் “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” விசேஷ மாநாடுகள் நடத்தப்பட்டன. அம்மாநாடுகளில் கிளர்ச்சியூட்டும் ஓர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அந்த உறுதிமொழி பின்வருமாறு:
“‘க டவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்’ மாநாட்டிற்கு வந்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் அனைவரும் அதிக நன்மையளிக்கும் போதனையை பெற்றிருக்கிறோம். இந்தப் போதனையின் ஊற்றுமூலம் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இது மனித ஊற்றுமூலத்திலிருந்து வரவில்லை. நமது ‘மகத்தான போதகர்’ என பூர்வ தீர்க்கதரிசி ஏசாயா விவரித்தவரிடமிருந்தே அது வருகிறது. (ஏசாயா 30:20, NW) ஏசாயா 48:17-ல் உள்ள யெகோவாவின் நினைப்பூட்டுதலை கவனியுங்கள்: ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.’ இதை அவர் எவ்வாறு செய்கிறார்? அதற்கான முக்கிய வழி, உலகிலேயே மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ள புத்தகமாகிய பைபிள் மூலமாகும். அதில், ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது’ என சந்தேகத்திற்கு இடமில்லாத வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளது.—2 தீமோத்தேயு 3:16, 17, NW.
“அப்படிப்பட்ட பயனுள்ள போதனை இன்று மனிதவர்க்கத்திற்கு மிகவும் தேவை. ஏன் அவ்வாறு கூறுகிறோம்? இவ்வுலகின் மாறிவரும், குழப்பமிக்க காட்சிகளைக் கவனிக்கிற சிந்தனையாளர்கள் எதை ஒப்புக்கொள்கின்றனர்? இதையே: இந்த உலகின் கல்வி துறைகள் கோடிக்கணக்கானோருக்கு கல்வி புகட்டுகிற போதிலும் உண்மையான மதிப்பீடுகள் படுமோசமாக குறைவுபடுகின்றன, சரியானதற்கும் தவறானதற்கும் வித்தியாசத்தைக் காட்ட தவறுகின்றன. (ஏசாயா 5:20, 21) பைபிளைப் பற்றிய அறிவின்மை எங்கும் நிறைந்திருக்கிறது. தொழில்நுட்பத்தின் பலனாக, கம்ப்யூட்டர்கள் மூலம் ஏகப்பட்ட தகவலை பெற முடிகிறபோதிலும் பின்வரும் அதிமுக்கிய கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை: வாழ்க்கையின் நோக்கமென்ன? நம் நாளைய சம்பவங்களின் அர்த்தத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? எதிர்காலத்திற்கு உறுதியளிக்கும் நம்பிக்கை ஏதும் உள்ளதா? சமாதானமும் பாதுகாப்பும் என்றாவது நிஜமாகுமா? மேலும், மனிதன் முயற்சி செய்திருக்கும் அநேகமாக எல்லா துறையைப் பற்றியும் எண்ணிறந்த ஆராய்ச்சி புத்தகங்கள் நூலகங்களில் அடுக்கப்பட்டுள்ளன. இருந்தும், முன்னாளைய தவறுகளை மனிதர்கள் இன்றும் செய்கின்றனர். குற்றச்செயல் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கிறது. சுவடு தெரியாமல் மறைந்துவிட்டதாக கருதப்பட்ட பல நோய்கள் மறுபடியும் தலைதூக்கியுள்ளன, அதே சமயம் எய்ட்ஸ் போன்ற மற்ற நோய்கள் படுவேகமாக பரவுகின்றன. மலைக்கச் செய்யும் வேகத்தில் குடும்ப வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. தூய்மைக்கேடு சுற்றுச்சூழலை பாழாக்குகிறது. தீவிரவாதமும் பலரைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஓடவோட விரட்டுகின்றன. தீர்வு காண முடியாத பிரச்சினைகள் கிடுகிடுவென அதிகரிக்கின்றன. இந்தக் கொடிய காலங்களில் நம் அயலாருக்கு உதவ நாம் எதை செய்வது பொருத்தமாக இருக்கும்? மனிதவர்க்கம் படுமோசமான நிலைமையில் அல்லல்படுவதற்கான காரணத்தை விளக்கி, இன்று மேம்பட்ட வாழ்க்கை வாழ வழிசெய்வதோடுகூட எதிர்காலத்தைப் பற்றி பிரகாசமான, நிச்சயமான நம்பிக்கை தரும் போதகம் ஏதாவது உள்ளதா?
“‘புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, கிறிஸ்து கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்’ என்பதே நமக்கு கிடைத்த வேதப்பூர்வ பொறுப்பு. (மத்தேயு 28:19, 20) இந்தப் பொறுப்பை, மரித்து, உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரத்தையும் பெற்ற இயேசு கிறிஸ்து கொடுத்தார். மனிதர்கள் செய்யும் எந்த வேலையையும்விட இது மேலானது. கடவுளுடைய கண்ணோட்டத்தில், நீதியின் மேல் பசி தாகமுடையோரின் ஆவிக்குரிய தேவைகளில் கவனம் செலுத்தும் நமது பொறுப்பிற்கே முதல் முக்கியத்துவம். இந்தப் பொறுப்பை முக்கியமானதாய் கருத நமக்கு பலமான, வேதப்பூர்வ காரணங்கள் உள்ளன.
“எனவே நம் வாழ்க்கையில் அந்த வேலைக்கே முதலிடம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த உலகளாவிய கல்வி திட்டத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்காகவே திட்டமிடப்பட்ட திசை திருப்பும் பல செல்வாக்குகளும், தடைகளும், மத, அரசியல் தொகுதிகளிடமிருந்து எதிர்ப்புகளும் வருகிறபோதிலும் கடவுளுடைய ஆசீர்வாதத்தோடும் உதவியோடும் அந்த வேலை நிச்சயம் செய்து முடிக்கப்படும். இந்த வேலை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, முற்றுமுழுமையாக செய்து முடிக்கப்படும் என்பதில் நமக்கு நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளது. நாம் ஏன் அவ்வளவு நிச்சயமாக இருக்கலாம்? ஏனெனில், கடவுள் கொடுத்திருக்கும் இந்த ஊழியத்தில், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரை நம்மோடு இருப்பதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
“துயரப்படும் மனிதவர்க்கம் அதன் முடிவை நெருங்கிவிட்டது. முடிவு வருவதற்கு முன்பு நமது தற்போதைய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். ஆகவே, யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் பின்வரும் உறுதிமொழியை எடுக்கிறோம்:
“முதலாவது: ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக ராஜ்ய அக்கறைகளையே வாழ்க்கையில் முதலாவதாக வைத்து, தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் வளர தீர்மானமாய் இருக்கிறோம். அதை அடைவதற்கு, ‘உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்’ என சங்கீதம் 143:10-ல் உள்ள வார்த்தைகளுக்கு இசைவாகவே நம் ஜெபமும் இருக்கும். இதற்கு, தினந்தோறும் பைபிளை வாசிப்பது, தனிப்பட்ட படிப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட முயலும் நல்ல மாணவர்களாக இருக்க வேண்டும். நம் முன்னேற்றத்தை எல்லாரும் அறிவதற்காக சபை கூட்டங்களிலும், வட்டார, மாவட்ட, தேசிய, சர்வதேச மாநாடுகளிலும் அளிக்கப்படும் தேவராஜ்ய கல்விக்காக தயாரித்து, அதிலிருந்து முழுமையாக பயனடைய நம்மாலான அனைத்து முயற்சியையும் செய்வோம்.—1 தீமோத்தேயு 4:15; எபிரெயர் 10:23-25.
“இரண்டாவது: கடவுளால் போதிக்கப்படுவதற்காக அவருடைய மேசையில் மட்டுமே உணவருந்துவோம், தவறாக வழிநடத்தும் பேய்களின் போதகங்களைப் பற்றிய பைபிள் எச்சரிப்புகளுக்கு கவனமாக செவிசாய்ப்போம். (1 கொரிந்தியர் 10:21; 1 தீமோத்தேயு 4:1) மத பொய்கள், பயனற்ற விவாதங்கள், வெட்கங்கெட்ட பாலுறவு பிறழ்வுகள், ஆபாசம் என்ற கொள்ளைநோய், கீழ்த்தரமான பொழுதுபோக்கு, ‘ஆரோக்கியமான வசனங்களுக்கு ஏற்றதாயிராத’ எல்லாவற்றோடுங்கூட ஆபத்து ஏற்படுத்தும் காரியங்களை தவிர்க்க விசேஷ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்போம். (ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 3:20; 1 தீமோத்தேயு 6:3; 2 தீமோத்தேயு 1:13) ஆரோக்கியமானதை போதிக்க தகுதி பெற்றிருக்கும் ‘மனிதர்களில் வரங்கள்’ மேலுள்ள மரியாதை காரணமாக அவர்களுடைய முயற்சிகளை உண்மையாய் மதிப்போம்; கடவுளுடைய வார்த்தையின் சுத்தமும் நீதியுமான தார்மீக, ஆவிக்குரிய தராதரங்களை பின்பற்றுவதில் முழு மனதோடு அவர்களுடன் ஒத்துழைப்போம்.—எபேசியர் 4:7, 8, 11, 12, NW; 1 தெசலோனிக்கேயர் 5:12, 13; தீத்து 1:9.
“மூன்றாவது: கிறிஸ்தவ பெற்றோராக, சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் நம் பிள்ளைகளுக்கு கற்பிக்க முழு இருதயத்தோடு முயலுவோம். ‘இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை’ சிசு பருவம் முதல் அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதே நமது முக்கிய அக்கறையாகும். (2 தீமோத்தேயு 3:15) யெகோவாவுக்கு ஏற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்த்தால்தான், அவர்களுக்கு ‘நன்மை உண்டாகும், பூமியிலே அவர்கள் வாழ்நாள் நீடித்திருக்கும்’ என்ற கடவுளுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அனுபவிக்க முடியும் என்பதை எப்போதும் மனதில் வைத்திருப்போம்.—எபேசியர் 6:1-4.
“நான்காவது: கவலைகளை அல்லது மோசமான பிரச்சினைகளை சந்தித்தால், ‘எல்லா மனித புத்திக்கும் மேலான தேவ சமாதானம்’ நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் முதலில் அவற்றை ‘தேவனுக்கு தெரியப்படுத்துவோம்.’ (பிலிப்பியர் 4:6, 7) நாம் கிறிஸ்துவின் நுகத்தின்கீழ் வந்திருப்பதால் நிச்சயம் புத்துணர்ச்சி பெறுவோம். கடவுள் நம்மீது அக்கறை வைத்திருக்கிறார் என்பதை அறிந்திருப்பதால் நம் கவலைகளை அவர் மீது போட தயங்க மாட்டோம்.—மத்தேயு 11:28-30; 1 பேதுரு 5:6, 7.
“ஐந்தாவது: அவருடைய வார்த்தையின் போதகர்களாய் இருக்கும் சிலாக்கியத்திற்காக யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ‘அவருடைய சத்திய வசனத்தை சரியாய் கையாளவும்,’ ‘நம் ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்றவும்’ இன்னுமதிக முயற்சி எடுப்போம். (2 தீமோத்தேயு 2:15; 4:5; NW) இதில் உட்பட்டுள்ளதை நன்றாய் அறிந்திருப்பதால், தகுதியானவர்களை தேடிக் கண்டுபிடித்து, விதைத்த விதையை வளர்ப்பதே நமது இருதயப்பூர்வ விருப்பமாகும். அதிகமான பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலம் நமது போதிக்கும் திறமையை மேலுமாக முன்னேற்றுவிப்போம். இது, ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’ விரும்பும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நம்மை செயல்பட வைக்கும்.—1 தீமோத்தேயு 2:3, 4.
“ஆறாவது: கடந்த நூற்றாண்டு முழுவதிலும் சரி, இந்த நூற்றாண்டிலும் சரி யெகோவாவின் சாட்சிகள் பல நாடுகளில் பல்வேறு விதமான எதிர்ப்பையும் துன்புறுத்துதலையும் சந்தித்திருக்கின்றனர். ஆனாலும் யெகோவா நம்மோடு இருந்திருக்கிறார். (ரோமர் 8:31) ராஜ்ய பிரசங்கிப்பு, போதிப்பு வேலையை தடுக்க, வேகத்தை குறைக்க அல்லது நிறுத்த ‘நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும்’ வெற்றி பெறாது என ஒருபோதும் பொய்யாகாத அவருடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறது. (ஏசாயா 54:17) சாதகமான சமயமாயிருந்தாலும் சரி பிரச்சினை மிக்க சமயமாயிருந்தாலும் சரி சத்தியத்தை பேசுவதை நம்மால் நிறுத்த முடியாது. பிரசங்கித்து, போதிக்கும் நமது பொறுப்பை அவசர உணர்வோடு செய்து முடிப்பதே நமது தீர்மானமாகும். (2 தீமோத்தேயு 4:1, 2) கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை நம்மால் முடிந்தளவு எல்லா தேசத்தாருக்கும் அறிவிப்பதே நமது குறிக்கோளாகும். இவ்வாறு, நீதியான புதிய உலகில் நித்திய ஜீவனை பெறுவதற்கான ஏற்பாட்டைப் பற்றி கற்றுக்கொள்ள அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். கடவுளுடைய வார்த்தையை கற்பிக்கும் ஓர் ஐக்கியப்பட்ட கூட்டத்தாராக, பெரிய போதகராகிய இயேசு கிறிஸ்துவின் உதாரணத்தை தொடர்ந்து பின்பற்றுவதும் அவருடைய தெய்வீக குணங்களை வெளிக்காட்டுவதுமே நமது தீர்மானமாகும். நமது மகத்தான போதகரும் உயிரின் ஊற்றுமூலருமான யெகோவா தேவனுடைய மகிமைக்கும் கனத்திற்குமாக இவை அனைத்தையும் செய்வோம்.
“இந்த மாநாட்டில் ஆஜராயிருப்போரில் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிற அனைவரும் தயவுசெய்து ஆம் என்று சொல்லுங்கள்!”
பிரான்சில் நடைபெற்ற மூன்று மாநாடுகளில் ஆஜராகியிருந்த 1,60,000 பேரிடமும் இத்தாலியில் நடைபெற்ற ஒன்பது மாநாடுகளில் ஆஜராகியிருந்த 2,89,000 பேரிடமும் உறுதிமொழியின் கடைசி கேள்வி கேட்கப்பட்டபோது பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் “ஆம்” என உரத்த குரலில் ஏகமாய் பதிலளித்தனர்.