எதில் உங்கள் பாதுகாப்பு?
மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு குக்கிராமம். ஜோசுவா என்ற ஓர் இளைஞன் சொந்த பந்தங்களிடமிருந்து விடைபெற்று புறப்படுகிறான்.a கைநிறைய சம்பாதித்து பணம் எனும் கோட்டைக்குள் பாதுகாப்பாக வாழலாம் என்ற ஆசை கனவை நெஞ்சில் சுமந்துகொண்டு பெரிய நகரத்தில் அடியெடுத்து வைக்கிறான். ஆனால் அங்கு போய் சேர்ந்தவுடன்தான் அவனுக்குப் புரிகிறது, நகரத்தில் ஒன்றும் பணம் வீதியில் கொட்டி கிடப்பதில்லை என்பது; அவனுடைய நம்பிக்கை ஒளி மங்குகிறது.
நகர வாழ்க்கைக்கு தன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வதற்குள் ஜோசுவாவுக்கு பெரும்பாடாகிவிடுகிறது. அவனுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அந்தப் பெரிய நகரம் அவன் கனவு கண்டதைப் போல் இல்லை. நகர வாடையே வீசாத அந்த எளிமையான கிராமத்துக்கே திரும்பிவிட வேண்டும், குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் பழையபடி சேர்ந்து வாழ வேண்டும் என்று மனம் கிடந்து துடிக்கிறது. ஆனால் கிராமத்தார் கேலி செய்வார்களே என்ற பயம் ஒரு பக்கம் பாடாய் படுத்துகிறது. ‘நகரத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் போன வேகத்தில் திரும்பிவிட்டான், ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் என்று சொல்வார்களே’ என கவலைப்படுகிறான்.
அப்படி செய்தால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தபோது அவன் நெஞ்சு இன்னும் கனத்தது. பாவம், பணத்துக்காக அவர்கள் இவனைத்தானே மலைபோல் நம்பியிருக்கிறார்கள். மனம் படும் பாட்டை ஒருபுறம் சமாளித்துக் கொண்டிருக்கையில், மதிப்புக் குறைவான ஒரு வேலையில் போய் ஜோசுவா சேருகிறான்; பல மணிநேரம் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்ததுதான் மிச்சம், நினைத்ததைவிட அற்பசொற்ப சம்பளமே கிடைக்கிறது. கடும் உழைப்பால் சோர்ந்து போகிறான். அவன் பொக்கிஷமாய் போற்றும் கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கென்று அவனுக்கு எஞ்சியிருக்கும் நேரம் ஒவ்வொரு வாரமும் குறைந்துகொண்டே போகிறது. குடும்பத்தாரிடமிருந்தும் பழைய நண்பர்களிடமிருந்தும் பிரிந்து தொலைதூரத்தில் வாழும் இவனை தனிமை வாட்டி வதைக்கிறது. சோகம் கவ்விக்கொள்கிறது. அவன் பெரிதும் ஆசைப்பட்ட அந்தப் பாதுகாப்பு, நகரத்தில் மருந்துக்கும் இல்லை என்பது அவனுக்கு தெள்ளத் தெளிவாகிறது.
பெயர்களும் இடங்களும் மாறினாலும் இதுபோன்ற அனுபவங்கள் பெரும்பாலும் சர்வசாதாரணம். ஜோசுவா சுயநலவாதியாக இருந்ததால் நகரத்தை நாடி சென்றான் என்று சொல்ல முடியாது. பாதுகாப்பை நாடியே அங்கு சென்றான். தன்னுடைய குக்கிராமத்தில் இருப்பதைவிட நகரங்களில் வாய்ப்பு வளங்கள் அதிகம் என்று அவன் மனதார நம்பித்தான் போனான். சில சமயங்களில் ஒருவருடைய பொருளாதாரம் மேம்படலாம் என்பது நிஜம்தான், ஆனால் அது உண்மையான பாதுகாப்பை அளிக்காது. ஜோசுவாவைப் பொறுத்தவரை அவன் ஆசைப்பட்டது அவனுக்குக் கைகூடவில்லை. அவனைப் போலத்தான் அநேகருடைய கதையும். இதனால், உண்மையில் ‘பாதுகாப்பு என்பது என்ன?’ என்று நமக்குக் கேட்க தோன்றுகிறது.
பாதுகாப்பு என்பது பலருக்கு பலவிதமான அர்த்தங்களைத் தரும் சொல். பாதுகாப்பு என்பது “ஆபத்திலிருந்து விடுதலை” அல்லது “பயம் அல்லது கவலையிலிருந்து விடுதலை” என்று ஒரு அகராதி விளக்கமளிக்கிறது. முழுமையாக “ஆபத்திலிருந்து விடுதலை” பெறுவது என்பது இன்று நடக்காத ஒன்று என்பதை அநேகர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றி ஆயிரம் ஆபத்துக்கள் இருந்தாலும் தாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் அதுவே போதும் என்று அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.
நீங்களும் அப்படித்தானா? உண்மையான பாதுகாப்பை எங்கே கண்டடையலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஜோசுவா நினைத்தது போல அது கிராமத்தில் கிடைக்காமல் நகரத்தில்தான் கிடைக்குமா? அல்லது பணத்தை எங்கே அல்லது எப்படி சம்பாதித்தாலும் அதுவே பாதுகாப்பின் உறைவிடமா? சமுதாயத்தின் ஏணிப்படியில் உயர்வதால் அது கிடைத்துவிடுமா? எதில் உங்கள் பாதுகாப்பு இருப்பதாக நினைத்தாலும் சரி, அந்தப் பாதுகாப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எவ்வளவு காலத்துக்கு கைகொடுத்து உதவும்?
மக்கள் பாதுகாப்பை தேடும் மூன்று வழிகளை நாம் சிந்திப்போம்—வாழுமிடம், பணம், அந்தஸ்து. அதன் பிறகு நிரந்தரமான பாதுகாப்பை எங்கே கண்டடையலாம் என்பதை நாம் ஆராயலாம்.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.