இன்று பாதுகாப்பான உணர்வு—என்றும் பாதுகாப்பான வாழ்வு
பாதுகாப்பை கண்டடைவது ஏன் பெரும்பாலும் கடினமாக உள்ளது, அப்படியே அது கிடைத்தாலும் ஏன் நிலைத்திருப்பதில்லை? ஒருவேளை பாதுகாப்பு உணர்வு என்பது கற்பனையின் அடிப்படையிலானதா? அடைய முடிந்தவற்றின் மீதல்லாமல் அடைய விரும்புகிறவற்றின் மீது சார்ந்திருக்கிறதா? அப்படிப்பட்ட ஒரு பிரமையை கற்பனை உலகில் சஞ்சரிப்பது என்று சொல்லலாம்.
நிலையற்ற இந்த நிஜ வாழ்க்கையை விட்டுவிட்டு, அழகும் பாதுகாப்புமான மாய வாழ்க்கையில் மனம் லயித்திருப்பதற்கு கற்பனை வழிகாட்டுகிறது; இந்தக் கற்பனை உலகின் கனவைக் கலைக்கும் எதையும் மனம் அண்டவிடுவதில்லை. ஆனால் நிஜ உலகின் பிரச்சினைகள் அடிக்கடி கனவுலகில் நுழைந்து அந்த சுகமான உணர்வை இரக்கமில்லாமல் அழித்து, கனவுலகில் சஞ்சரிப்பவரை இந்த உலகுக்கு அழைத்துவந்துவிடுகின்றன.
மக்கள் பாதுகாப்பைத் தேடிச் செல்லும் ஒரு அம்சமாகிய வாழுமிடத்தை எடுத்துக்கொள்வோம். உதாரணமாக, பெரிய நகரங்களுக்குச் சென்றால் வாழ்க்கை ஜாம் ஜாமென்றிருக்கும், சந்தோஷமாக பொழுதைக் கழிக்கலாம், கைநிறைய சம்பாதிக்கலாம், பெரிய சொகுசான வீடுகளில் வாழலாம் என்று மக்கள் நினைக்கலாம். நீண்ட காலம் ஆசைப்படி பாதுகாப்பாக வாழலாம் என நினைக்கலாம். ஆனால் இது எதார்த்தமான எதிர்பார்ப்பா?
இடம்—பெரிய நகரமா அல்லது பெரிய கனவுகளா?
வளரும் நாடுகளில், பெரிய நகரங்கள் மீது கவர்ச்சியைத் தூண்டி கட்டுக்கடங்காத கற்பனைகளுக்குத் தீனிபோடுவது விளம்பரங்களாகும். இப்படி விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் பாதுகாப்பில் துளியும் அக்கறை கிடையாது, அவர்களுடைய குறியெல்லாம் அவர்களுடைய வியாபாரத்தின்மீதுதான். பாதுகாப்பை தருவது போன்ற காட்சிகளால் நிஜ உலகிலுள்ள பிரச்சினைகளை மூடி மறைத்துவிடுகிறார்கள். இதனால் பாதுகாப்பு என்பது அவர்கள் விளம்பரம் செய்யும் பொருளோடும் பெரிய நகரத்தோடும் சம்பந்தப்பட்ட ஒன்றாகிவிடுகிறது.
இந்த உதாரணத்தை சற்று எண்ணிப்பாருங்கள். மேற்கு ஆப்பிரிக்க நகரமொன்றில் இருந்த அதிகாரிகள், புகைபிடிப்பதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எரித்து சாம்பலாக்குவதும் ஒன்றே என்பதை தெளிவாக சித்தரிக்கும் விளம்பர பலகைகளைத் தயாரித்து பார்வைக்கு வைத்தார்கள். புகைப்பதற்கு எதிராக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்துடன் இதை செய்தார்கள். சிகரெட் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் இந்த விளம்பரங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் புகைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் வெற்றி காண்பவர்களாகவும் இருப்பதைப் போன்ற காட்சிகளை கண்ணைக்கவரும் வகையில் வெகு சாமர்த்தியமாக தயாரித்து விளம்பரப்படுத்தினார்கள். அதோடு ஒரு சிகரெட் கம்பெனி, தன் பணியாளர்களுக்கு விசேஷ சீருடைகளையும் ஸ்டைலான பேஸ்பால் தொப்பிகளையும் அணிவித்து தெருவில் இளைஞருக்கு சிகரெட்டை விநியோகிக்க ஏற்பாடு செய்தது; “புகைத்துப் பாருங்களேன்” என்று சொல்லி, வருகிற போகிற இளைஞர் எல்லாருக்கும் சிகரெட்டைக் கொடுத்தனர். இந்த இளைஞர்களில் பலர் பட்டணப் பிரவேசம் செய்த கிராமத்துவாசிகள், விளம்பரதாரர்களின் சூட்சுமத்தை அறியாதவர்கள், இந்த அழைப்புக்கு அடிபணிந்து ஏமாந்து போனார்கள். அவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள். குடும்பத்தைக் காப்பாற்றி கரைசேர்க்க வேண்டும் அல்லது கைநிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கிராமத்திலிருந்து நகரத்தைத் தேடி வந்த இளைஞர்கள் இவர்கள். வந்த நோக்கத்தை விட்டு, அநேக நல்ல காரணங்களுக்காக பயன்பட்டிருக்கும் பணத்தை சாம்பலாக்கிக் கொண்டிருந்தார்கள்.
மாநகர வாழ்க்கையை ஆகா ஓகோவென்று சித்தரித்துக்காட்டும் விளம்பரங்களை தயாரிப்பவர்கள் எப்போதுமே வியாபாரிகள் அல்ல. பெரிய நகரங்களை நம்பி பிழைக்க வந்துவிட்டு, தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல சங்கடப்படுபவர்களிடமிருந்தும் இந்த எண்ணங்கள் உதிக்கக்கூடும். எதையும் சாதிக்கவில்லை என மற்றவர்கள் தங்களைப் பற்றி நினைத்துவிடக் கூடாது என்பதற்காக நகரத்தில் ஏராளமான செல்வத்தை சேர்த்து சாதனை படைத்துவிட்டதைப் போல அவர்கள் பெருமையடித்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய உண்மையான நிலையை ஆராய்ந்தால், அது முந்தைய கிராம வாழ்க்கையைவிட எந்த விதத்திலும் மேம்பட்டதாக இல்லை என்பது புரிந்துபோகும். பல நகரவாசிகளைப் போலவே இவர்களும் பொருளாதார ரீதியில் அல்லல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாதுகாப்பைத் தேடி முதன்முறையாக மாநகரங்களில் காலடி வைப்பவர்கள்தான் முக்கியமாய் மோசடிக்காரர்களிடம் ஏமாந்து போகிறார்கள். ஏன்? பொதுவாக நெருக்கமான நட்புறவுகளை வளர்த்துக்கொள்ள இவர்களுக்கு நேரமிருப்பதில்லை; குடும்பத்தினரை விட்டும் தொலை தூரத்தில் இருக்கிறார்கள். பொருளாசை வெறிபிடித்த நகர வாழ்க்கையின் படுகுழிகளை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு ஆலோசனை சொல்லி உதவ யாருமில்லை.
ஜோசுவா புகைபிடிக்கும் கண்ணியில் சிக்கவில்லை. அதோடு, நகர வாழ்க்கைக்கு வளைந்துகொடுப்பதற்கு தனக்கு சக்தியில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான். நகரத்தால் அவனுக்கு தர முடிந்ததெல்லாம் நிறைவேறாத பெரும் கனவுகள் மட்டுமே. நகரத்தில் தனக்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது அவனுக்குத் தெளிவாக புரிந்துவிட்டது. நகர வாழ்க்கை அவனுக்கு கொஞ்சமும் ஒத்துவரவில்லை. வெறுமை, தாழ்வு மனப்பான்மை, தோல்வி என இவையே அவனை ஆட்டிப்படைத்தன. கடைசியாக மனதை தேற்றிக்கொண்டு ஒருவழியாக கிராமத்துக்கே திரும்பிவிட்டான்.
கேலி கிண்டல் செய்வார்களே என்ற பயம் அவன் மனதை அரித்திருந்தது. ஆனால் அவனுடைய குடும்பத்தாரும் உண்மை நண்பர்களும் அவனை ஓடோடி வரவேற்றார்கள். குடும்பத்தாரின் பாசம், பரிச்சயமான கிராமத்துச் சூழல், கிறிஸ்தவ சபையிலிருந்த நண்பர்களின் அன்பு ஆகியவை மீண்டும் கிடைத்தபோது, அநேகருடைய ஆசை கனவுகள் கொடுங்கனவாக மாறுகிற பெரிய நகரத்தில் கிடைக்காத பாதுகாப்பான உணர்வு மனம் முழுவதும் வியாபித்தது. வயலில் அப்பாவோடு சேர்ந்து கடினமாக வேலை செய்தான், நகரத்தில் உழைத்து ஓடாய் தேய்ந்தபோது கிடைத்ததைவிட அதிக வருமானம் அவனுக்கும் குடும்பத்துக்கும் கிடைத்தபோது அவனுக்கே ஆச்சரியம் தாளவில்லை.
பணம்—உண்மையான பிரச்சினைதான் என்ன?
பணம் உங்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தருமா? கனடாவைச் சேர்ந்த லிஸ் இவ்வாறு கூறுகிறாள்: “பணமிருந்தா கவலையே இல்லாம ஜாலியா இருக்கலாம்ணு நான் சின்ன பெண்ணாக இருந்தப்போ நினைச்சேன்.” அவள் ஒரு பணக்கார பையனை காதலித்தாள். கலியாணமும் செய்துகொண்டாள். அப்போது அவளுக்கு அந்தப் பாதுகாப்பு உணர்வு கிடைத்ததா? லிஸ் தொடர்ந்து சொல்வதைக் கேளுங்கள்: “திருமணம் செய்துகொண்டபோது, எங்களுக்கு அழகான ஒரு வீடு, இரண்டு கார்கள் இருந்தன. பணத்துக்கு பஞ்சமே இல்லாததால் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் வாங்க முடிந்தது, போகாத இடமில்லை, அனுபவிக்காத பொழுதுபோக்கில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அப்போதும் நான் பணம் பணமென பணத்தைப் பற்றியே ஓயாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.” காரணத்தை அவள் விளக்குகிறாள்: “கையைவிட்டு போய்விடுமோ என பயப்பட எங்களிடம் ஏராளமிருந்தன. எவ்வளவு அதிகம் பெற்றிருக்கிறோமோ, அவ்வளவு அதிகம் பாதுகாப்புணர்வை இழப்போமென தெரிகிறது. பணம் கவலையிலிருந்து விடுதலை தரவில்லை.”
பாதுகாப்பாக உணரும் அளவுக்கு உங்களிடம் பணமில்லை என்று நீங்கள் நினைத்தால், “உண்மையில் பிரச்சினை என்ன? பணமே இல்லையா அல்லது பணத்தை எப்படி பொறுப்பாக செலவழிப்பது என தெரியவில்லையா?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கடந்து வந்த காலத்தை எண்ணிப்பார்த்து லிஸ் இவ்வாறு கூறுகிறாள்: “நான் சிறுமியாக இருந்தபோது என் குடும்பத்தில் பணப் பிரச்சினை இருந்ததற்குக் காரணம் பணத்தை சரியாக செலவழிக்க தெரியாததுதான் என்பது இப்போது புரிகிறது. நாங்கள் கடனில் பொருட்கள் வாங்கினோம், ஆகவே எப்போதும் கடன் சுமை அழுத்திக்கொண்டே இருந்தது. இது கவலைக்கு காரணமானது.”
ஆனால் இன்று லிஸ்ஸும் அவள் கணவனும் குறைவாக பணம் வைத்திருந்தாலும் அதிக பாதுகாப்பாக உணருகிறார்கள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியத்தை அவர்கள் கற்றபோது, பணம் பாதாளம்வரை பாயும் போன்ற கருத்துக்களுக்கு காதை அடைத்துக்கொண்டார்கள், கடவுளுடைய ஞானத்துக்கு செவிசாய்க்க ஆரம்பித்தார்கள். அதில் இந்த வார்த்தைகளையும் அவர்கள் கண்டார்கள்: “எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.” (நீதிமொழிகள் 1:33) வங்கியில் பெரியதோர் சேமிப்பு தொகை தரக்கூடியதைவிட அதிக அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இன்று லிஸ்ஸும் அவளுடைய கணவனும் தொலை தூர தேசத்தில் மிஷனரிகளாக இருக்கிறார்கள்; யெகோவா தேவன் சீக்கிரத்தில் உலகம் முழுவதிலும் உண்மையான பாதுகாப்பை ஸ்தாபிக்கப் போகிறார் என்பதை பணக்காரருக்கும் ஏழைகளுக்கும் கற்பித்து வருகிறார்கள். இந்த வேலை அவர்களுக்கு ஆழ்ந்த திருப்தியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. இது பொருளாதார ஆதாயத்தால் கிடைப்பதில்லை, ஆனால் உயர்ந்த நோக்கத்தாலும் நெறிகளாலும் கிடைக்கிறது.
இந்த அடிப்படை உண்மையை மறந்துவிடாதீர்கள்: கடவுளிடம் ஐசுவரியமுள்ளவர்களாக இருப்பது சொத்து சுகங்களைவிட பெரும் மதிப்புள்ளது. பரிசுத்த வேதாகமம் முழுவதிலும், யெகோவாவோடு நல்ல நிலைநிற்கையைக் காத்துக்கொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர பொருட்செல்வங்களைக் கட்டிக் காப்பதற்கு அல்ல. இந்த நல்ல நிலைநிற்கையைக் காத்துக்கொள்வதற்கு, தொடர்ந்து விசுவாசத்தோடு கடவுளுடைய சித்தத்தைச் செய்வது அவசியம். கிறிஸ்து இயேசு ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாயிருந்து,’ ‘பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கும்படி’ நம்மை உற்சாகப்படுத்தினார்.—லூக்கா 12:21, 33.
அந்தஸ்து—உங்களை எங்கு அழைத்து செல்கிறது?
சமுதாயத்தில் உயர்ந்த பதவியை பிடிப்பதுதான் பாதுகாப்புக்கான ஒரே வழி என நீங்கள் நினைத்தால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இன்று சமுதாய ஏணியின் உயர் நிலையில் இருப்பவர்களில் யார் உண்மையான பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள்? அதை கண்டடைய இன்னும் எந்தளவுக்கு நான் முயல வேண்டும்?’ வாழ்க்கையில் நல்ல வேலை பொய்யான பாதுகாப்பு உணர்வை அளிக்கலாம்; அது ஏமாற்றத்துக்கு அல்லது இன்னும் மோசமான வீழ்ச்சிக்கு வழிநடத்தலாம்.
கடவுளிடம் நல்ல பெயர் எடுப்பது மனிதனிடம் நல்ல பெயர் எடுப்பதைவிட அதிக பாதுகாப்பளிப்பதை உண்மை அனுபவங்கள் காட்டுகின்றன. யெகோவா மட்டுமே மனிதர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்க முடியும். அப்படியென்றால் நம்முடைய பெயர் ஏதாவதொரு சமுதாயத்தின் முக்கியமானோர் பட்டியலில் பதிவானால் போதாது, அது கடவுளுடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட வேண்டும்.—யாத்திராகமம் 32:32; வெளிப்படுத்துதல் 3:5.
நப்பாசைகளை எல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, உங்களுடைய தற்போதைய நிலையை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள், மேலும் எதிர்காலத்தைக் குறித்த உங்கள் நியாயமான எதிர்பார்ப்பு என்ன? யாரிடமும் எல்லாமே இருப்பதில்லை. “வாழ்க்கையில் அதுவும் இதுவும் கிடைக்காது, அது அல்லது இது ஏதோவொன்றுதான் கிடைக்கும் என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது” என ஞானமுள்ள ஒரு கிறிஸ்தவர் சொன்னார். இப்போது நீங்கள் சற்று நிதானித்து, “பெனினில் சொல்லப்பட்டது” என்ற பெட்டியை தயவுசெய்து வாசிக்கவும்.
வாசித்த பிறகு இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்: என் வாழ்க்கையின் முக்கிய இலட்சியம் அல்லது இலக்கு என்ன? அதை அடைவதற்கு நேர்வழி பாதை எது? நான் பாதுகாப்பற்ற நீண்ட சுற்றுவழி பாதையில் போய்க்கொண்டிருக்கிறேனா? அல்லது நான் விரும்புவதையும் எதார்த்தமாக பெற முடிந்ததையும் அடைவதற்கு சிக்கலற்ற பாதை ஏதாவது இருக்கிறதா?
ஆன்மீக காரியங்களின் மதிப்பைவிட, பொருளாதார காரியங்களின் மதிப்பு குறைவாக இருப்பதை குறித்து இயேசு புத்திமதி சொன்ன பிறகு, கண்ணை ‘தெளிவாய்’ அல்லது ஒருமுகப்படுத்தி வைக்கும்படி சொன்னார். (மத்தேயு 6:22) வாழ்க்கையில் மிக முக்கியமானவை கடவுளுடைய பெயரையும் அவருடைய ராஜ்யத்தையும் மையமாக கொண்ட ஆன்மீக மதிப்பீடுகளும் இலக்குகளுமே என்பதை அவர் தெளிவுபடுத்தினார். (மத்தேயு 6:9, 10) மற்ற அனைத்தும் குறைந்த முக்கியத்துவம் உள்ளவை அல்லது ஒருமுகப்பட்ட கவனத்தை பெற வேண்டியவை அல்ல.
இன்றுள்ள பல காமிராக்கள் தொலை தூரத்திலுள்ளவற்றையும் அருகிலுள்ளவற்றையும் தானாகாவே ஃபோக்கஸ் செய்கின்றன. உங்கள் கண்களையும் அதைப் போல வைத்திருக்கிறீர்களா? நீங்கள் பார்க்கும் அனைத்துமே ஃபோக்கஸ் செய்யப்பட்டதாக அல்லது ஒருமுகப்படுத்தப்பட்டதாக இருக்கிறதா? அதாவது, அவை முக்கியமானவையாக, விரும்பத்தக்கவையாக, பெறத்தக்கவையாக இருக்கின்றனவா? இந்நிலை ஓரளவுக்கே உண்மையாக இருந்தால்கூட, பல காட்சிகள் உங்கள் கவனத்தை ஈர்க்க முயலுவதால், கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும் ராஜ்யத்தை அவை எளிதில் ஒருபுறம் ஒதுக்கிவிடக்கூடும். இயேசு கொடுத்த உறுதியான புத்திமதி இதுவே: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:33.
இன்றும் என்றும் பாதுகாப்பு
நமக்கும் நம் சொந்த பந்தங்களுக்கும் நல்லவை பல கிடைக்க வேண்டும் என்று நாம் அனைவரும் கனவு காணலாம். ஆனால் நாமும் குறைபாடுள்ளவர்கள், நாம் வாழும் உலகமும் குறைபாடுள்ளது, நம் வாழ்நாளும் குறுகியது. இவற்றின் காரணமாக நாம் விரும்பும் அனைத்தையும் எதார்த்த வாழ்வில் பெற முடிவதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பைபிள் எழுத்தாளர் இவ்வாறு விளக்கினார்: “நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச் செயலும் நேரிட வேண்டும் [“எதிர்பாராத சம்பவமும் நேரிடுகிறது,” NW].”—பிரசங்கி 9:11.
சில சமயங்களில் அன்றாட அலுவல்களில் நாம் ஏறத்தாழ மூழ்கியேவிடுவதால், அதிமுக்கியமான விஷயங்களை—நாம் யார் என்றும் உண்மையில் பாதுகாப்பாக உணருவதற்கு நமக்கு என்ன தேவை என்றும்—சிந்தித்துப் பார்க்க மறந்துவிடுகிறோம். ஞானமுள்ள இந்த வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.” (பிரசங்கி 5:10, 12) ஆம், எதில் உங்கள் பாதுகாப்பு இருக்கிறது?
நிறைவேறாத கனவுலகில் சஞ்சரித்த ஜோசுவாவைப் போல உங்கள் நிலைமையும் இருந்தால், உங்கள் திட்டங்களை மாற்றிக்கொள்ள முடியுமா? ஜோசுவாவின் குடும்பத்தாரும் கிறிஸ்தவ சபையிலிருந்த நண்பர்களும் அவனுக்கு பக்க பலமாய் இருந்தது போலவே உங்களை பாசத்தோடு நேசிப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் உங்களை சுரண்டி பிழைக்க முயற்சிக்கும் பட்டணவாசிகள் மத்தியில் இருப்பதைவிட, ஏழ்மையான சூழலில் உங்கள்மீது பாசத்தைப் பொழிபவர்களோடு இருப்பது பெரும் பாதுகாப்பை அளிக்கும்.
நீங்கள் ஏற்கெனவே வசதியுள்ளவர்களா? அப்படியென்றால் லிஸ்ஸும் அவளுடைய கணவரும் செய்ததை போல உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள முடியுமா? இவ்வாறு, பணக்காரரும் ஏழைகளும் உண்மையான பாதுகாப்பை அனுபவிக்க வழிசெய்யவிருக்கும் ராஜ்யத்தைப் பற்றிக் கற்றுக்கொடுக்க அதிக நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க முடியுமா?
சமுதாயத்திலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ அந்தஸ்து என்ற ஏணியில் உச்சிக்கு போக முயன்று கொண்டிருந்தால், அதற்குரிய காரணத்தை நேர்மையாக எண்ணிப்பார்க்க விரும்பலாம். சில தனிப்பட்ட சௌகரியங்கள் வாழ்க்கைக்கு இன்பத்தை சேர்க்கும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், நிரந்தரமான பாதுகாப்பை கண்டடைவதற்கு ஒரே வழியாக இருக்கும் ராஜ்யத்தை உங்களால் முதலிடத்தில் வைக்க முடிகிறதா? இயேசுவின் இந்த வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்: ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதிலே அதிக சந்தோஷமுண்டு.’ (அப்போஸ்தலர் 20:35, NW) கிறிஸ்தவ சபையின் பல்வேறு நடவடிக்கைகளில் பங்குகொண்டால், பலன்தரும் பாதுகாப்பை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
யெகோவாமீதும் அவருடைய ராஜ்யத்தின்மீதும் முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இப்போதே மனதுக்கு இதமான பாதுகாப்பை அனுபவித்து களிக்கிறார்கள், எதிர்காலத்தில் கிடைக்கும் முழுமையான பாதுகாப்புக்காக காத்திருக்கிறார்கள். சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.”—சங்கீதம் 16:8, 9.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
பெனின் நாட்டில் சொல்லப்பட்டது
கொஞ்சம் மாற்றி மாற்றி பல்லாயிரம் தடவை கூறப்பட்டிருக்கும் கதை இது. சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெனின் நாட்டில் வயதான ஒரு கிராமவாசி இளையவர்களுக்கு இந்தக் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.
மீனவன் ஒருவன் தன் சிறு படகில் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறான். இந்நாட்டில் வேலைபார்க்கும் வெளிநாட்டு வியாபார புள்ளி ஒருவர் இந்த மீனவனை சந்திக்கிறார். ஏன் இவ்வளவு சீக்கிரமாக வீடு திரும்புகிறாய் என அவர் மீனவனைக் கேட்கிறார். இன்னும் அதிக நேரம் மீன் பிடிக்க நேரமிருந்தாலும் தன் குடும்பத்தை பராமரிக்க போதுமானது கிடைத்துவிட்டதால் வீடு திரும்புவதாக மீனவன் பதில் சொல்கிறான்.
“சரி, இப்போது மீதமிருக்கும் நேரத்தில் நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று அந்த நிபுணர் கேட்கிறார்.
“நான் கொஞ்சம் மீன் பிடிப்பேன். என் பிள்ளைகளோடு விளையாடுவேன். வெயில் அதிகமாகும்போது நாங்கள் கொஞ்ச நேரம் தூங்குவோம். சாயங்காலம் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவோம். அதன் பிறகு நண்பர்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் பாட்டு பாடி பொழுதைக் கழிப்போம், அவ்வளவுதான்” என்று மீனவன் பதில் சொல்கிறான்.
அந்த வியாபார நிபுணர் குறுக்கிட்டு இவ்வாறு கூறுகிறார்: “இதோ பார், என்னிடம் பல்கலைக்கழக பட்டம் இருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் நான் படித்திருக்கிறேன். உனக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன். இன்னும் அதிக நேரம் நீ மீன்பிடித்தால் அதிகம் சம்பாதிக்கலாம், இதைவிட பெரிய படகை வாங்கலாம். பெரிய படகு இருந்தால் இன்னும் அதிக பணம் சம்பாதிக்கலாம், சீக்கிரமே, மீன்பிடிக்க வசதியுள்ள பல பெரிய படகுகளை வாங்கலாம்.”
“அப்புறம்” என்று மீனவன் கேட்கிறான்.
“அப்புறம், இடைத்தரகர் மூலமாக மீனை விற்பதற்கு பதில் தொழிற்சாலையிடமே நேரடியாக பேரம் பேசி வியாபாரத்தை முடித்துக்கொள்ளலாம் அல்லது மீனை பதனப்படுத்தும் ஒரு தொழிற்சாலையை சொந்தமாக ஆரம்பிக்கலாம். இந்தக் கிராமத்தை விட்டுவிட்டு கோட்டனூ, பாரிஸ் அல்லது நியூ யார்க்குக்குப் போய்விடலாம். அங்கிருந்துகொண்டே வியாபாரத்தை நடத்தலாம். பங்கு சந்தையிலும் பணத்தை முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.”
“இதை எல்லாம் செய்ய எவ்வளவு நாளெடுக்கும்?” என்று மீனவன் கேட்கிறான்.
“ஒருவேளை 15-லிருந்து 20 வருடங்கள் ஆகலாம்” என்று நிபுணர் கூறுகிறார்.
“அப்புறம்” என்கிறான் மீனவன்.
“அப்புறம்தான் வாழ்க்கையே சுவாரஸியமாக இருக்கும்” என்று அவர் விளக்குகிறார். “அப்போது நீ ஓய்வெடுத்துக்கொள்ளலாம். நகரத்தில் அரக்கப்பரக்க வாழும் வாழ்க்கையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ஏதாவது ஒரு கிராமத்துக்குப் போய் நிம்மதியாக செட்டில் ஆகிவிடலாம்.”
“அப்புறம் என்ன நடக்கும்?” என்கிறான் மீனவன்.
“அப்புறம் கொஞ்சம் மீன் பிடிக்க உனக்கு நேரமிருக்கும். பிள்ளைகளோடு விளையாடலாம். வெயில் அதிகமாகும்போது கொஞ்ச நேரம் தூங்கலாம். சாயங்காலம் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாம். அதன் பிறகு நண்பர்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் பாட்டு பாடி பொழுதைக் கழிக்கலாம்.”
[பக்கம் 7-ன் படங்கள்]
பதவி உயர்வு பாதுகாப்பளிக்குமா?
[பக்கம் 8-ன் படங்கள்]
சக கிறிஸ்தவர்கள் உண்மையில் உங்கள் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்கள்