உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 5/1 பக். 4-7
  • ஊனத்திற்கு முடிவு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊனத்திற்கு முடிவு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசுவின் அற்புதங்கள்​—⁠உலகளாவிய சுகப்படுத்துதலுக்கு முற்காட்சி
  • வலியோ விலையோயின்றி சுகப்படுத்தினார்
  • முதலில் ஆவிக்குரிய சுகப்படுத்துதல்!
  • நிரந்தரமாக சுகமடைதல் அருகாமையில் இருக்கிறது
    விழித்தெழு!—1988
  • அவர் மக்களை நேசித்தார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • மனிதவர்க்கத்துக்கு அற்புதமான சுகப்படுத்துதல் சமீபமாயிருக்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • இயேசு எவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 5/1 பக். 4-7

ஊனத்திற்கு முடிவு

சற்று கற்பனை செய்து பாருங்கள்: குருடர் காண்கிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், ஊமையர் மகிழ்ச்சிபொங்க பாடுகிறார்கள். முடவர் நடக்கிறார்கள்! மருத்துவ சாதனையைப் பற்றி நாங்கள் இங்கு சொல்லவில்லை; ஆனால், மனிதருக்காக கடவுள் செய்யப்போகும் அற்புதமான காரியங்களைப் பற்றியே சொல்கிறோம். பைபிள் இவ்வாறு முன்னறிவிக்கிறது: “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.” (ஏசாயா 35:5, 6, பொது மொழிபெயர்ப்பு) ஆனால், திகைக்க வைக்கும் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும் என நாம் எப்படி நம்பலாம்?

முதலாவதாக, இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில், எல்லாவித நோயையும் ஊனத்தையும் சுகப்படுத்தினார். அது மட்டுமல்லாமல், அவருடைய அற்புதங்களில் பெரும்பாலானவற்றை பலர் கண்ணாரக் கண்டனர். ஏன், அவருடைய விரோதிகளும் கண்டார்களே. சொல்லப்போனால், அவரை விரோதித்த சந்தேகப் பேர்வழிகள் இயேசுவில் அவநம்பிக்கை ஏற்படுத்துவதற்காக ஒரு சந்தர்ப்பத்திலாவது அவர் செய்த சுகப்படுத்துதலை துருவி ஆராய்ந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது; அவர்கள் செய்தது அந்த அற்புதத்தை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. (யோவான் 9:1, 5-34) மறுக்க முடியாத மற்றுமொரு அற்புதத்தை இயேசு செய்த பின்பு விரக்தியடைந்த அவர்கள், “நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே” என்று சொன்னார்கள். (யோவான் 11:47) இருந்தாலும், பொதுமக்கள் கண்டும் காணாதவர்களாய் இருக்கவில்லை, பலரும் இயேசுவில் விசுவாசம் வைக்க ஆரம்பித்தார்கள்.​—⁠யோவான் 2:23; 10:41, 42; 12:9-11.

இயேசுவின் அற்புதங்கள்​—⁠உலகளாவிய சுகப்படுத்துதலுக்கு முற்காட்சி

இயேசுவின் அற்புதங்கள், இயேசுவே மேசியா, கடவுளுடைய குமாரன் என்பதை நிரூபிப்பதோடு நின்றுவிடவில்லை. கீழ்ப்படிதலுள்ள மனிதர் எதிர்காலத்தில் சுகமடைவர் என்பதாக பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதற்கு அவை ஆதாரத்தை அளித்தன. இந்த வாக்குறுதிகளில், முதல் பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏசாயா 35-⁠ம் அதிகாரத்தின் தீர்க்கதரிசனமும் ஒன்று. தேவ பயமுள்ள மனிதர் எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வதைப் பற்றி ஏசாயா 33:24 குறிப்பிடுவதாவது: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” வெளிப்படுத்துதல் 21:4-ம் இவ்வாறே வாக்குறுதி அளிக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் [இன்றைய சோதனைகளும் கஷ்டங்களும்] ஒழிந்துபோயின.”

இயேசு கற்பித்த மாதிரி-ஜெபத்தை ஜனங்கள் திரும்பத் திரும்ப சொல்லி அந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்காக தவறாமல் ஜெபம் செய்கிறார்கள்; அதன் ஒரு பகுதி இவ்வாறு சொல்கிறது: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) ஆம், கடவுளுடைய சித்தம் பூமியையும் மனிதகுலத்தையும் உட்படுத்துகிறது. வியாதியும் ஊனமும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற போதிலும், அவை வெகு விரைவில் துடைத்தழிக்கப்படும் நாள் வருகிறது; அவை கடவுளுடைய ‘பாதபடியை’ என்றென்றைக்குமாக பாழ்ப்படுத்தாது.​—⁠ஏசாயா 66:1.a

வலியோ விலையோயின்றி சுகப்படுத்தினார்

ஜனங்கள் எந்தவித துன்பத்தை அனுபவித்தாலும்சரி, வலியும் விலையும் இன்றி இயேசு அவர்களை உடனடியாக சுகப்படுத்தினார். இந்த விஷயம் காட்டுத்தீ போல எங்கும் பரவியது; சீக்கிரத்தில், “பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.” ஜனங்கள் எப்படி பிரதிபலித்தனர்? கண்கண்ட சாட்சியாகிய மத்தேயுவின் பதிவு தொடர்ந்து சொல்வதாவது: “பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.”​—⁠மத்தேயு 15:30, 31, பொ.மொ.

இயேசு கூட்டத்தாரிலிருந்து குறிப்பிட்டவர்களை தேர்ந்தெடுத்து​—⁠போலி ஆசாமிகளின் ஏமாற்று வேலையை போல​—⁠சுகப்படுத்தவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, சுகவீனரின் உறவினர்களும், நண்பர்களும் அவர்களை “[இயேசுவின்] காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார்.” குணப்படுத்துவதற்கு இயேசுவுக்கு திறமை இருப்பதை சில உதாரணங்களிலிருந்து நாம் காணலாம்.

பார்வையின்மை: இயேசு எருசலேமில் இருக்கையில், ‘பிறவியிலேயே குருடனாயிருந்த’ ஒருவனுக்கு பார்வையளித்தார். அவன் பார்வையற்ற பிச்சைக்காரன் என்பது அந்தப் பட்டணத்திலிருந்த அனைவருக்கும் தெரியும். அவன் பார்வையடைந்து, சுற்றித்திரிவதை ஜனங்கள் பார்த்தபோது வியந்து ஆரவாரித்ததை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்! ஆனாலும் இதைப் பார்த்து எல்லாரும் சந்தோஷமடையவில்லை. தங்களுடைய துன்மார்க்கத்தை இயேசு ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருந்ததால் பரிசேயர்கள் எனப்படும் செல்வாக்குமிக்க யூதமதப் பிரிவினர்களில் சிலர் நொந்துபோயிருந்தார்கள்; ஆகவே, இயேசு ஏதாவது தந்திர மந்திரம் செய்கிறாரோ என கண்டுபிடிக்க துணிந்தார்கள். (யோவான் 8:13, 42-44; 9:1, 6-31) ஆகவே, அவர்கள் முதலாவதாக குணமடைந்த அந்த குருடனையும் அதற்குப்பின் அவனுடைய பெற்றோரையும் பிறகு மீண்டும் அந்த குருடனையும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு விசாரணை செய்தார்கள். ஆனால் பரிசேயர்களின் விசாரணைகளோ இயேசுவின் அற்புதத்தை உண்மையென உறுதிப்படுத்துவதாகவே இருந்தன; அவர்களை இன்னும் ஆத்திரமடையச் செய்தன. மத மாய்மாலக்காரரின் அற்பத்தனத்தால் கலவரமடைந்த அந்த மனிதனே இவ்வாறு சொன்னான்: “பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது.” (யோவான் 9:32, 33, பொ.மொ.) அவர் ஒளிவு மறைவின்றி தன் விசுவாசத்தை விவேகத்துடன் வெளிப்படுத்தியதைக் கேட்ட பரிசேயர்கள் “அவனை புறம்பே தள்ளிவிட்டார்கள்.” குருடனாயிருந்தவனை ஜெப ஆலயத்திலிருந்து நீக்கிவிட்டதையே அது அர்த்தப்படுத்துகிறது.​—⁠யோவான் 9:22, 34.

காது கேளாமை: இயேசு யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியான தெக்கப்போலியில் இருக்கையில், “காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை” ஜனங்கள் அவரிடத்தில் அழைத்து வந்தார்கள். (மாற்கு 7:31, 32, பொ.மொ.) இயேசு அவரை சுகப்படுத்தியது மட்டுமல்லாமல், கூட்டத்தின் மத்தியில் அவர் மனது சங்கடப்படாமல் இருக்கும்படி அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டார். இயேசு அந்தக் காது கேளாதவரை “கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று” சுகப்படுத்தினார் என பைபிள் சொல்கிறது. இப்போதும் அதைப் பார்த்தவர்கள், “அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ‘இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!’” என்று சொன்னார்கள்.​—⁠மாற்கு 7:33-37, பொ.மொ.

முடக்குவாதம்: இயேசு கப்பர்நகூமில் இருக்கையில், படுத்த படுக்கையாய் கிடந்த ஒரு முடக்குவாதக்காரரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். (மத்தேயு 9:2, பொ.மொ.) என்ன நடந்தது என்பதை 6 முதல் 8 வசனங்கள் (பொ.மொ.) காட்டுகின்றன. “அவர் [இயேசு] முடக்குவாதமுற்றவரை நோக்கி, ‘நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ’ என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.” இந்த அற்புதத்தையும் தம் சீஷர்கள் மற்றும் விரோதிகள் முன்னிலையிலேயே செய்தார். இயேசுவின் சீஷர்களோ பகைமையும் தப்பெண்ணமும் தங்களை குருடாக்க அனுமதிக்காமல், கண்ணாரக் கண்டவற்றைக் குறித்து கடவுளைப் ‘போற்றிப் புகழ்ந்ததை’ கவனியுங்கள்.

நோய்: “தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ‘நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்’ என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ‘நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!’ என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.” (மாற்கு 1:40-42, பொ.மொ.) இயேசு அவரை வேண்டா வெறுப்புடன் சுகப்படுத்தவில்லை, மாறாக உள்ளப்பூர்வமான பரிவுகாட்டி சுகப்படுத்தினார் என்பதை கவனியுங்கள். உங்களை ஒரு தொழுநோயாளியின் இடத்தில் வைத்து கற்பனை செய்து பாருங்கள். உங்களுடைய உடலை படிப்படியாக உருக்குலைத்து, ஊரைவிட்டே ஒதுங்கியிருக்க வைக்கும் இந்தக் கொடிய நோயிலிருந்து உடனடியாக, வலியின்றி சுகமளிக்கப்பட்டால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? அற்புதமாய் சுகம் பெற்ற மற்றொரு தொழுநோயாளி, ஏன் “அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார்” என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.​—⁠லூக்கா 17:12-16, பொ.மொ.

காயம்: இயேசு கைது செய்யப்பட்டு கழுமரத்தில் அறையப்படுவதற்கு முன்பு கடைசியாக செய்த அற்புதமும் ஒரு சுகப்படுத்துதலே. இயேசுவைப் பிடித்துச் செல்ல வந்தவர்களிடத்தில் அப்போஸ்தலனாகிய பேதுரு துடுக்காக நடந்துகொண்டு, “தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.” (யோவான் 18:3-5, 10) அதன்பின் இயேசு, “காதைத் தொட்டு அவனைச் சொஸ்தப்படுத்தினார்” என அதே சம்பவத்தை லூக்கா சொல்கிறார். (லூக்கா 22:50, 51) இப்போதும்கூட அவர் தம் நண்பர்களுக்கு முன்பு மாத்திரமல்ல தம்முடைய பகைவர்களுக்கு முன்பாகவும் இந்த பரிவான செயலை செய்தார்; இந்த சந்தர்ப்பத்தில் அவரைக் கைது செய்ய வந்தவர்களே அவருடைய பகைவர்கள்.

ஆம், இயேசு செய்த அற்புதங்களை எந்தளவுக்கு நுணுக்கமாக ஆராய்கிறோமோ அந்தளவுக்கு அவற்றை உண்மையென நிரூபிக்கும் தனிச்சிறப்புமிக்க அம்சங்களை நாம் அறிந்துகொள்வோம். (2 தீமோத்தேயு 3:16) ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, அவ்வாறு ஆராய்வது கீழ்ப்படிதலுள்ள மனிதரை சுகப்படுத்துவதைக் குறித்த கடவுளுடைய வாக்குறுதியில் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்த வேண்டும். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு பைபிள் இவ்வாறு விளக்கம் தருகிறது: “நம்பப்படும் விஷயங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய மெய்ப்பிப்பு.” (எபிரெயர் 11:1, NW) கண்மூடித்தனமாக நம்பும்படியோ நப்பாசை கொள்ளும்படியோ அல்ல, ஆனால் அத்தாட்சியின் அடிப்படையில் உறுதியான விசுவாசம் வைக்கும்படியே கடவுள் ஊக்குவிக்கிறார். (1 யோவான் 4:1) அப்படிப்பட்ட விசுவாசத்தைப் பெறுகையில் நாம் ஆவிக்குரிய விதமாக திடமுள்ளவர்களாகவும் ஆரோக்கியமுள்ளவர்களாகவும் சந்தோஷமுள்ளவர்களாகவும் ஆகிறோம்.​—⁠மத்தேயு 5:3; ரோமர் 10:17.

முதலில் ஆவிக்குரிய சுகப்படுத்துதல்!

உடல் ரீதியில் திடகாத்திரமாக இருக்கிற பலரிடத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலரோ எதிர்காலத்தைக் குறித்ததில் எந்த நம்பிக்கையுமின்றி இருப்பதால் அல்லது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஆட்டிப்படைப்பதால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ளவும் துணிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் ஆன்மீக ரீதியில் ஊனமுற்றிருக்கிறார்கள், அதாவது கடவுளுடைய பார்வையில் உடல் ஊனத்தைவிட மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். (யோவான் 9:41) மறுபட்சத்தில், முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கிறிஸ்சன், ஜூன்யர் போன்ற சரீர ஊனமுற்ற பலர் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் ஆன்மீக ரீதியில் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், பைபிள் அடிப்படையிலான உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு உயிர்ப்பூட்டுகிறது.

மனிதருக்கு தேவைப்படும் பிரத்தியேகமான ஒன்றைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத்தேயு 4:4) ஆம், நாம் மிருகங்களைப் போல இல்லை, நமக்கு வயிராற சாப்பிட உணவு கிடைத்தால் மட்டும் போதாது. நாம் கடவுளுடைய ‘சாயலில்’ படைக்கப்பட்டிருப்பதால், நமக்கு ஆன்மீக உணவும் தேவை. அது, கடவுளைப் பற்றிய அறிவையும், அவருடைய நோக்கத்தில் நாம் வகிக்கும் பங்கையும், அவருடைய சித்தத்தை செய்வதையும் குறிக்கும். (ஆதியாகமம் 1:27; யோவான் 4:34) கடவுளைப் பற்றிய அறிவு வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது, ஆன்மீக தெம்பு அளிக்கிறது. பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் நித்திய வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டுகிறது. “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்றார் இயேசு.​—⁠யோவான் 17:3.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவரை “சுகமளிப்பவர்” என அழைக்காமல் ‘போதகர்’ என அழைத்தது கவனிக்கத்தக்கது. (லூக்கா 3:12; 7:40) ஏன்? ஏனெனில், இயேசு மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தர பரிகாரமாக விளங்கும் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து போதித்தார். (லூக்கா 4:43; யோவான் 6:26, 27) இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த பரலோக அரசாங்கம் முழு பூமியையும் ஆட்சி செய்யும்; நீதியுள்ள மனிதரும் அவர்கள் வாழப்போகும் பூமியும் முழுமையாகவும் நித்தியமாகவும் நிலைநாட்டப்படுவதைப் பற்றிய பைபிள் வாக்குறுதிகள் அனைத்தையும் அது நிறைவேற்றும். (வெளிப்படுத்துதல் 11:15) ஆகவேதான், மாதிரி ஜெபத்தில், வரப்போகும் ராஜ்யத்தையும் பூமியில் கடவுளுடைய சித்தம் நிறைவேற்றப்படுவதையும் இயேசு இணைத்து குறிப்பிட்டார்.​—⁠மத்தேயு 6:10.

ஊனமுற்றோர் பலரும் ஆர்வமூட்டும் இந்த நம்பிக்கையைப் பற்றி கற்றுக்கொள்கையில் அவர்களுடைய வேதனை கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியிருக்கிறது. (லூக்கா 6:21) சொல்லப்போனால், நோயையும், ஊனத்தையும் நீக்கிவிடுவதோடு மனித துன்பங்களுக்குக் காரணமான பாவத்தையும்கூட கடவுள் துடைத்தழிப்பார். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஏசாயா 33:24, மத்தேயு 9:2-7 ஆகிய வசனங்கள் நோய்க்கும் நம்முடைய பாவத்திற்கும் சம்பந்தமிருப்பதைக் காட்டுகின்றன. (ரோமர் 5:12) ஆகவே, பாவம் முறியடிக்கப்பட்டிருப்பதால், முடிவாக மனிதகுலம் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை,” அதாவது, பரிபூரண உடலையும் உள்ளத்தையும் உட்படுத்தும் சுயாதீனத்தை அனுபவிக்கும்.​—⁠ரோமர் 8:20.

ஓரளவு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் அதை சட்டை செய்வதில்லை. ஊனத்தின் அவலத்தை அனுபவிப்பவர்களுக்குத்தான் ஆரோக்கியத்தின் அருமை தெரியும். உயிரும் ஆரோக்கியமும் எவ்வளவு அருமையானவை என்றும் காரியங்கள் எப்படி திடீரென எதிர்பாரா விதமாக மாறிவிடலாம் என்றும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (பிரசங்கி 9:11) ஆகவே, எமது வாசகர்களில் ஊனமுற்றவர்களாய் இருப்பவர்கள் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளின் அருமையான வாக்குறுதிகளுக்கு விசேஷித்த கவனம் செலுத்துவார்கள் என நாங்கள் நம்புகிறோம். அவை நிறைவேறுவதை உறுதிப்படுத்துவதற்கு இயேசு தம் ஜீவனையே கொடுத்தாரே. இதற்கு மேல் வேறு என்ன உத்தரவாதம் வேண்டும்?​—⁠மத்தேயு 8:16, 17; யோவான் 3:⁠16.

[அடிக்குறிப்பு]

a கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார் என்பதன் பேரில் கூடுதலான விளக்கத்தை பெறுவதற்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டைக் காண்க.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்