யெகோவாவின் நீதியில் மகிழ்ச்சி காணுங்கள்
“நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.”—நீதிமொழிகள் 21:21.
1. இன்றுள்ள மக்களின் என்ன வழிகள் பேராபத்தான விளைவுகளுக்கு வழிநடத்தியுள்ளன?
“மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதிமொழிகள் 16:25) இன்றுள்ள பெரும்பாலோர் பின்பற்றும் பாதையை இந்த பைபிள் நீதிமொழி எத்தனை தெள்ளத் தெளிவாய் படம்பிடித்துக் காட்டுகிறது! மற்றவர்களின் அடிப்படை தேவைகளைக்கூட அலட்சியம் செய்துவிட்டு, தங்களுக்கு சரி என்று படுவதை செய்வதில் மட்டுமே பொதுவாக மக்கள் அக்கறை காட்டுகின்றனர். (நீதிமொழிகள் 21:2) தேசத்தின் சட்டங்களையும் தராதரங்களையும் மதிப்பதாக வாயளவில் சொல்லிக் கொண்டு, வாய்ப்பு கிடைக்கையில் சட்டத்தை மீறாமலேயே அதன் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி தேடுகிறார்கள். இதன் விளைவுதான் பிளவுபட்ட, குழப்பங்கள் நிறைந்த சமுதாயம்.—2 தீமோத்தேயு 3:1-5.
2. மனிதகுலம் நன்மையடைவதற்கு எது அவசரமாக தேவைப்படுகிறது?
2 நம்முடைய நன்மைக்காகவும் முழு மனித குடும்பத்தின் சமாதானம், பாதுகாப்பிற்காகவும் நீதியும் நியாயமுமான சட்டம் அல்லது தராதரம் நமக்கு மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது. எல்லாரும் ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படிய விரும்பும் சட்டமாக அல்லது தராதரமாக அது இருக்க வேண்டும். எவ்வளவு புத்திசாலியாக அல்லது நல்லெண்ணம் படைத்தவராக இருந்தாலும் எந்தவொரு மனிதன் இயற்றும் சட்டமும் அந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. (எரேமியா 10:23; ரோமர் 3:10, 23) அப்படி நல்லதொரு தராதரம் இருக்கிறதென்றால் அதை எங்கே காண முடியும், அது எப்படிப்பட்டதாய் இருக்கும்? ஆனால் அதிமுக்கியமான கேள்வி என்னவென்றால், அப்படியொரு தராதரம் இருக்குமானால், அதை மகிழ்ச்சியோடு எந்த ஆட்சேபணையுமின்றி நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
நீதியுள்ள தராதரத்தைக் கண்டுபிடித்தல்
3. அனைவரும் ஏற்றுக்கொண்டு பயனடையும் தராதரத்தைக் கொடுக்க முழுக்க முழுக்க தகுதி பெற்றவர் யார், ஏன்?
3 அனைவரும் ஏற்றுக்கொண்டு பயனடையும் ஒரு தராதரத்தை கண்டுபிடிப்பதற்கு இன, கலாச்சார, அரசியல் எல்லைகள் அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒருவரிடம் நாம் செல்ல வேண்டும். மனிதரின் குறுகிய பார்வையும் பலவீனங்களும் அவருக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. இதற்கு முழுக்க முழுக்க தகுதி பெற்றவர் சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவன் மட்டுமே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவர் சொல்வதை கவனியுங்கள்: “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” (ஏசாயா 55:9) மேலுமாக பைபிள் யெகோவாவை “நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” என்று விவரிக்கிறது. (உபாகமம் 32:4) பைபிள் முழுவதிலும் “கர்த்தர் [யெகோவா] நீதியுள்ளவர்” என்ற சொற்றொடரை நாம் காண்கிறோம். (யாத்திராகமம் 9:27; 2 நாளாகமம் 12:6; சங்கீதம் 11:7; 129:4; புலம்பல் 1:18; வெளிப்படுத்துதல் 19:2, NW அடிக்குறிப்பு) ஆம், மிகச் சிறந்த தராதரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் யெகோவாவை எதிர்நோக்கியிருக்கலாம், ஏனென்றால் அவர் உண்மையுள்ளவர், நியாயமுள்ளவர், நீதியுள்ளவர்.
4. ‘நீதியான’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
4 ‘நீதியான’ என்ற வார்த்தை இன்று அனைவரும் விரும்பும் வார்த்தை இல்லை. சொல்லப்போனால், இன்று அநேக மக்கள் அதை ஏற்கத்தகாததாக, மட்டமானதாகவே நினைக்கிறார்கள். பரிசுத்தவான் போல் காட்டிக்கொள்வதுடன் அல்லது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி பக்திமானாக வெளி வேஷம் போடுவதுடன் சமமானதாக கருதுகிறார்கள். ஆனால் பைபிள் நீதியைப் பற்றி பேசும்போது நியாயமான, நேர்மையான, ஒழுக்கமான, குற்றமில்லாத, பாவமில்லாத; கடவுளின் சட்டத்துக்கு அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்க தராதரங்களுக்கு கீழ்ப்படிதல், சரியாக அல்லது நியாயமாக செயல்படுதல் என்ற அர்த்தத்தையே தருகிறது. இப்படிப்பட்ட சிறந்த பண்புகள் ஒருங்கிணைந்த சட்டம் அல்லது தராதரம் இருந்தால் அதைக் குறித்து சந்தோஷப்பட மாட்டீர்களா?
5. பைபிளில் சொல்லப்பட்டபடி நீதி என்ற குணத்தை விவரிக்கவும்.
5 நீதி என்ற குணத்தைப் பற்றி என்ஸைக்ளோப்பீடியா ஜூடேயிக்கா இவ்விதமாக விவரிக்கிறது: “அது கோட்பாட்டளவில் உள்ள கருத்து அல்ல, மாறாக அது எல்லா உறவுகளிலும் நியாயமாகவும் நீதியாகவும் நடந்துகொள்வதைக் குறிக்கிறது.” உதாரணமாக கடவுளுடைய நீதி என்பது பரிசுத்தம், தூய்மை போல அவருக்குள் இருக்கும் ஒரு தனிப்பட்ட குணமன்று. மாறாக, அது நியாயமும் நேர்மையுமான வழிகளில் அவருடைய இயல்பை வெளிப்படுத்தும் குணமாக இருக்கிறது. யெகோவா பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் இருப்பதால் அவர் செய்கிற, அவரிடமிருந்து வருகிற அனைத்துமே நீதியானவை என்று சொல்லப்படலாம். பைபிளின்படி, “கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.”—சங்கீதம் 145:17.
6. பவுல் தன் நாளிலிருந்த சில விசுவாசியாத யூதர்களைப் பற்றி என்ன சொன்னார், ஏன்?
6 அப்போஸ்தலனாகிய பவுல் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் இந்தக் குறிப்பை வலியுறுத்தினார். விசுவாசியாத சில யூதர்களைக் குறித்து அவர் இவ்வாறு எழுதினார்: “அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.” (ரோமர் 10:3) இப்படிப்பட்டவர்களை ‘தேவநீதியை அறியாதவர்கள்’ என்று பவுல் ஏன் குறிப்பிட்டார்? கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை உள்ளடக்கிய நியாயப்பிரமாணம் அவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லையா? கற்பிக்கப்பட்டது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நீதி என்பது தனிப்பட்ட ஒரு குணம் என்றும், மதசம்பந்தமான சட்டங்களை நுணுக்கமாக நம்மையே வருத்திக்கொண்டு கடைப்பிடிப்பதன் மூலமே அதை அடையலாம் என்றும் நம்பினர்; சக மனிதர்களை நடத்தும் விதத்தில் அது வழிகாட்டும் தராதரமாக அமைய வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. இயேசுவின் நாளில் இருந்த மதத் தலைவர்களைப் போலவே, நீதி, நியாயம் ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்.—மத்தேயு 23:23-28.
7. யெகோவாவின் நீதி எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?
7 இதற்கு நேர் மாறாக, யெகோவாவின் நீதி அவருடைய எல்லா செயல்தொடர்புகளிலும் வெளிப்படுத்தப்படுகிறது, அது தெளிவாகவும் தெரிகிறது. அவருடைய நீதி, வேண்டுமென்றே சட்டங்களை மீறுகிறவர்களின் தவறுகளுக்கு கண்ணை மூடிக்கொள்ள விடுவதில்லை. என்றாலும், அது அவரை உணர்ச்சிகளில்லாத, அதிகத்தை வற்புறுத்தும் கடவுளாகவும், பயந்து நடுங்க வேண்டிய, நெருங்க முடியாத கடவுளாகவும் ஆக்கிவிடுவதில்லை. அதற்கு மாறாக, அவருடைய நீதியுள்ள செயல்கள்தான் மனிதகுலம் அவரை அணுகுவதற்கும், பாவத்தின் மோசமான பாதிப்புகளிலிருந்து காப்பாற்றப்படுவதற்கும் வழி செய்திருக்கின்றன. ஆகவே யெகோவா ‘நீதிபரரும் இரட்சகரும்’ என்று விவரிக்கப்படுவது முழுக்க முழுக்க பொருத்தமே.—ஏசாயா 45:21.
நீதியும் இரட்சிப்பும்
8, 9. என்ன விதங்களில் நியாயப்பிரமாணம் கடவுளுடைய நீதியை வெளிப்படுத்திக் காட்டியது?
8 கடவுளுடைய நீதிக்கும் இரட்சிப்புக்கான அவருடைய அன்பான ஏற்பாட்டுக்கும் இடையே இருக்கும் சம்பந்தத்தைப் புரிந்துகொள்வதற்கு மோசேயின் மூலமாக இஸ்ரவேலருக்கு அவர் கொடுத்த நியாயப்பிரமாணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நியாயப்பிரமாணம் நீதியுள்ளதாக இருந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. கடைசியாக இஸ்ரவேலரோடு பேசும்போது மோசே அவர்களுக்கு பின்வருமாறு நினைப்பூட்டினார்: “இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் [“நீதித் தீர்ப்புகளையும்,” NW] பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?” (உபாகமம் 4:8) பல நூற்றாண்டுகளுக்குப்பின், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது இவ்வாறு அறிவித்தார்: “கர்த்தருடைய நியாயங்கள் [“நீதித் தீர்ப்புகள்,” NW] உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.”—சங்கீதம் 19:9.
9 நியாயப்பிரமாணத்தின் மூலமாக யெகோவா எது சரி, எது தவறு என்பது குறித்து தம்முடைய பரிபூரண தராதரங்களை தம் மக்களுக்கு தெளிவாக சொல்லியிருந்தார். மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமல்லாமல், வியாபார தொடர்புகளில், திருமண உறவுகளில், உணவு, சுகாதாரம் சம்பந்தப்பட்ட பழக்கங்களில், நீதித் தீர்ப்புகளில் இஸ்ரவேலர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற நுட்பமான விவரங்களும் நியாயப்பிரமாணத்தில் இடம் பெற்றிருந்தன. மீறுகிறவர்களுக்கு கண்டிப்பான தண்டனையை, சில சந்தர்ப்பங்களில் மரண தண்டனையைக்கூட நியாயப்பிரமாணம் விதித்தது.a நியாயப்பிரமாணத்தில் இருந்த கடவுளுடைய நீதியுள்ள கட்டளைகள் மக்களுக்கு கடுமையானவையாக, சோர்வூட்டும் சுமையாக இருந்தனவா? இன்று அநேகர் நினைப்பது போல, அவர்களுடைய சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் அவை பறித்துக்கொண்டனவா?
10. யெகோவாவை நேசித்தவர்கள் அவருடைய கட்டளைகளை எப்படி கருதினார்கள்?
10 யெகோவாவை நேசித்தவர்கள் அவருடைய நீதியுள்ள கட்டளைகளையும் பிரமாணங்களையும் குறித்து அதிகம் மகிழ்ந்தார்கள். உதாரணமாக, தாவீது ராஜா யெகோவாவின் நீதித் தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை என்பதை ஒப்புக்கொண்டார்; அதோடுகூட அவற்றுக்காக அவர் இருதயப்பூர்வமான பிரியத்தையும் போற்றுதலையும் வைத்திருந்தார் என்பதையும் பார்த்தோம். யெகோவாவின் கட்டளைகளையும் நீதித் தீர்ப்புகளையும் குறித்து அவர் இவ்வாறு எழுதினார்: “அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.”—சங்கீதம் 19:7, 10, 11.
11. நியாயப்பிரமாணம் எவ்வாறு “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” நிரூபித்தது?
11 பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், நியாயப்பிரமாணத்துக்கு மேலுமதிக மதிப்பிருப்பதை பவுல் சுட்டிக்காட்டினார். கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில், “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது” என்று அவர் எழுதினார். (கலாத்தியர் 3:24) பவுலின் நாளில், உபாத்தியாயர் ஒரு பெரிய குடும்பத்தில் பணிவிடைக்காரராக அல்லது அடிமையாக இருந்தார். பிள்ளைகளை பாதுகாப்பதும் பத்திரமாக அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும் அவருடைய கடமை. அதே விதமாகவே, நியாயப்பிரமாணம் இஸ்ரவேலரை அவர்களைச் சுற்றியிருந்த தேசத்தாரின் கீழ்த்தரமான ஒழுக்க சம்பந்தமான, மத சம்பந்தமான பழக்கவழக்கங்களிலிருந்து பத்திரமாக பாதுகாத்தது. (உபாகமம் 18:9-13; கலாத்தியர் 3:23) மேலுமாக, இஸ்ரவேலர் பாவிகள், அவர்களுக்கு மன்னிப்பும் இரட்சிப்பும் தேவை என்பதை நியாயப்பிரமாணம் அவர்களுக்கு உணர்த்தியது. (கலாத்தியர் 3:19) பலி சம்பந்தப்பட்ட காரியங்கள், மீட்கும் பலிக்கான தேவையை சுட்டிக்காட்டி உண்மையான மேசியாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு தீர்க்கதரிசன மாதிரியை அளித்தன. (எபிரெயர் 10:1, 11, 12) இவ்வாறு யெகோவா நியாயப்பிரமாணத்தின் வாயிலாக தம்முடைய நீதியை வெளிப்படுத்தியபோது, மக்களின் நலனையும் அவர்களுடைய நித்திய இரட்சிப்பையும் மனதில் வைத்திருந்தார்.
கடவுளால் நீதிமான்களாய் கருதப்படுகிறவர்கள்
12. நியாயப்பிரமாணத்திற்கு கவனமாக கீழ்ப்படிந்திருப்பதன் மூலம் இஸ்ரவேலர் எதைப் பெற்றிருக்கலாம்?
12 யெகோவாவின் நியாயப்பிரமாணம் எல்லா வகையிலும் நீதியுள்ளதாக இருந்தது; எனவே அதற்கு கீழ்ப்படிந்திருப்பதன் மூலம் இஸ்ரவேலர் கடவுளுக்கு முன்பாக நீதியுள்ள நிலைநிற்கையை பெற்றிருக்கலாம். இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு சற்று முன்பு, “நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும்” என மோசே அவர்களுக்கு நினைப்பூட்டினார். (உபாகமம் 6:25) அதோடுகூட, யெகோவா இந்த வாக்குறுதியையும் அவர்களுக்கு கொடுத்திருந்தார்: “என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் [“நீதித் தீர்ப்புகளையும்,” NW] கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.”—லேவியராகமம் 18:5; ரோமர் 10:5.
13. நீதியுள்ள நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி தம்முடைய மக்களைக் கேட்டதனால் யெகோவா அநீதியுள்ளவராக இருந்தாரா? விளக்கவும்.
13 ஒரு தேசமாக இஸ்ரவேலர் “அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்ய” தவறியதால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளாமல் போனார்கள் என்பது வருந்தத்தக்கது. கடவுளுடைய கட்டளைகள் அனைத்தையும் அவர்கள் கைக்கொள்ள தவறினார்கள், ஏனென்றால் நியாயப்பிரமாணம் பரிபூரணமாக இருந்தது, அவர்களோ பரிபூரணராக இல்லை. அப்படியென்றால் கடவுள் அநியாயமானவர் அல்லது அநீதியுள்ளவர் என இது அர்த்தப்படுத்துமா? இல்லவே இல்லை. “ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே” என்று பவுல் எழுதினார். (ரோமர் 9:14) நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, தனிநபர்கள் அபூரணராகவும் பாவமுள்ளவராகவும் இருந்தபோதிலும் கடவுளால் நீதிமான்களாக கருதப்பட்டது உண்மை. அவ்வாறு கடவுளிடம் பயபக்தியோடு இருந்தவர்களின் வரிசையில் நோவா, ஆபிரகாம், யோபு, ராகாப், தானியேல் ஆகியோர் அடங்குவர். (ஆதியாகமம் 7:1; 15:6; யோபு 1:1; எசேக்கியேல் 14:14; யாக்கோபு 2:25) அப்படியென்றால் கேள்வி: எதன் அடிப்படையில் இவர்கள் கடவுளால் நீதிமான்களாக கருதப்பட்டார்கள்?
14. பைபிள் ஒரு மனிதனை ‘நீதிமான்’ என்று சொல்லுகையில் அது எதை அர்த்தப்படுத்துகிறது?
14 பைபிள் ஒரு மனிதனை ‘நீதிமான்’ என்று சொல்லுகையில் அவர் பாவமில்லாதவர் அல்லது பரிபூரணமானவர் என்று அர்த்தப்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக தன் கடமைகளை சரிவர செய்து முடிப்பவரையே குறிக்கிறது. உதாரணமாக, நோவா “தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்” என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.” (ஆதியாகமம் 6:9, 22; மல்கியா 3:18) முழுக்காட்டுபவராகிய யோவானின் பெற்றோராகிய சகரியாவும் எலிசபெத்தும் “கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.” (லூக்கா 1:6) இஸ்ரவேலன் அல்லாத கொர்நேலியு என்ற இத்தாலிய படைத்தலைவன் “நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரு”மாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளார்.—அப்போஸ்தலர் 10:22.
15. நீதி எதோடு நெருங்கிய தொடர்புடையது?
15 மேலுமாக மனிதர்களிடம் காணப்படும் நீதி என்பது ஒருவரின் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதோடு நெருங்கிய தொடர்புடையது. கடவுள் எதிர்பார்ப்பவற்றை செய்வது மாத்திரமல்ல, யெகோவாவிடமும் அவருடைய வாக்குறுதிகளிடமும் விசுவாசமும் போற்றுதலும் அன்பும் அவர் இருதயத்தில் இருப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஆபிரகாம் “கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்” என்று பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 15:6) ஆபிரகாம், கடவுள் இருக்கிறார் என்று மட்டுமல்ல, “வித்து” பற்றிய அவருடைய வாக்குறுதியையும் விசுவாசித்தார். (ஆதியாகமம் 3:15; 12:2; 15:5; 22:18) இப்படிப்பட்ட விசுவாசமும் அதை வெளிக்காட்டும் செயல்களும் இருந்தபடியால், அபூரணராய் இருந்த ஆபிரகாமோடும் மற்ற உண்மையுள்ளவர்களோடும் யெகோவாவால் ஒரு உறவை வைத்திருக்கவும் அவர்களை ஆசீர்வதிக்கவும் முடிந்தது.—சங்கீதம் 36:10; ரோமர் 4:20-22.
16. மீட்பில் விசுவாசம் வைப்பது என்ன பலனை அளித்திருக்கிறது?
16 கடைசியாக, மனிதர்களிடம் காணப்படும் நீதி, இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பதை சார்ந்துள்ளது. “இலவசமாய் அவருடைய [கடவுளுடைய] கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” என முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களைக் குறித்து பவுல் எழுதினார். (ரோமர் 3:24) இங்கே பவுல் பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடனே உடன் சுதந்தரவாளிகளாக இருக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்களைப் பற்றி குறிப்பிட்டார். ஆனால் இயேசுவின் மீட்கும் பலி, இன்னும் லட்சக்கணக்கானோர் கடவுளுக்கு முன்பாக நீதியுள்ள நிலைநிற்கையை பெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது. அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு தரிசனத்தில், “ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, . . . சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்” கண்டார். வெள்ளை அங்கி கடவுளுக்கு முன்பாக அவர்கள் சுத்தமும் நீதியுமுள்ளவர்களாய் இருப்பதை அடையாளப்படுத்துகிறது; ஏனென்றால், “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்”திருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
யெகோவாவின் நீதியில் மகிழ்ச்சி காணுங்கள்
17. நீதியை நாடுகையில் ஒருவர் என்னென்ன படிகளை எடுக்க வேண்டும்?
17 மனிதர்கள் நீதியுள்ள நிலைநிற்கையை பெறும்படி மிகுந்த அன்புடன் யெகோவா தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை அளித்திருந்தாலும் நீதியுள்ள நிலைநிற்கை தானாக வந்துவிடாது. அதற்கு ஒருவர் மீட்பின் பலியில் விசுவாசம் வைத்து, தன்னுடைய வாழ்க்கையை கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக மாற்றி அமைத்து, யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தண்ணீர் முழுக்காட்டுதலால் அதை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும். அதன் பிறகும் அவர் நீதியையும் மற்ற ஆன்மீக குணங்களையும் தொடர்ந்து நாட வேண்டும். பரலோக அழைப்பைப் பெற்றிருந்த, முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவரான தீமோத்தேயுவுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீதியையும், தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.” (1 தீமோத்தேயு 6:11; 2 தீமோத்தேயு 2:22) தொடர்ந்து முயற்சி செய்வதன் அவசியத்தை இயேசுவும்கூட வலியுறுத்துபவராக, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடிக்கொண்டே இருங்கள்’ என்று கூறினார். கடவுளுடைய ராஜ்ய ஆசீர்வாதங்களை நாடுவதற்கு நாம் அதிக பிரயாசப்படலாம். ஆனால் யெகோவாவின் நீதியுள்ள வழிகளைப் பின்பற்ற அதேயளவு கடினமாக உழைக்கிறோமா?—மத்தேயு 6:33, NW.
18. (அ) நீதியை நாடுவது ஏன் சுலபமல்ல? (ஆ) லோத்துவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
18 நீதியை நாடுவது சுலபமில்லை என்பது உண்மையே. ஏனென்றால் நாம் எல்லோருமே அபூரணர், அநீதியை நாடும் மனப்பான்மை இயல்பாகவே நமக்கு இருக்கிறது. (ஏசாயா 64:6) அதுமட்டுமல்லாமல் நம்மைச் சூழ்ந்திருப்பவர்களும் யெகோவாவின் நீதியுள்ள வழிகளிடம் அக்கறையில்லாதவர்கள். நம்மைச் சுற்றியுள்ள நிலைமையும் துன்மார்க்கத்துக்கு பேர்போன சோதோம் நகரத்தில் வாழ்ந்து வந்த லோத்துவின் காலத்துக்கு ஒத்ததாகவே இருக்கிறது. அதற்கு வரவிருந்த அழிவிலிருந்து லோத்துவை யெகோவா ஏன் பாதுகாத்தார் என்பதை அப்போஸ்தலன் பேதுரு விளக்கினார். “நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்”தார் என்று பேதுரு சொன்னார். (2 பேதுரு 2:7, 8) ஆகவே நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘நம்மைச் சுற்றிலும் காணும் ஒழுக்கமற்ற பழக்கவழக்கங்களை நான் மெளனமாக என் இருதயத்தில் அங்கீகரிக்கிறேனா? எல்லாரும் விரும்பும் வன்முறை நிறைந்த பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு எனக்கு பிடிக்காததாக மட்டுமே இருக்கிறதா? அல்லது இப்படிப்பட்ட அநீதியான செயல்களினால் வாதிக்கப்பட்டதாக உணர்ந்த லோத்துவைப் போல உணருகிறேனா?’
19. கடவுளுடைய நீதியில் மகிழ்ந்தால் என்ன ஆசீர்வாதங்கள் நமக்கு கிடைக்கும்?
19 இந்த ஆபத்தான, நிலையற்ற காலத்தில் யெகோவாவின் நீதியில் மகிழ்வது நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது. “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?” என்ற கேள்விக்கு தாவீது ராஜா இவ்வாறு பதிலளித்தார்: “உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.” (சங்கீதம் 15:1, 2) கடவுளுடைய நீதியை நாடி அதில் மகிழ்ச்சி காண்கையில் அவரோடு நல்லுறவைக் காத்துக்கொள்வதோடு அவருடைய தயவையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து அனுபவிக்கலாம். இது நம்முடைய வாழ்க்கைக்கு திருப்தியையும், சுயமரியாதையையும் மனசமாதானத்தையும் அளிக்கும். “நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 21:21) மேலுமாக, நம்முடைய முயற்சிகள் அனைத்திலும் நீதியானதையும் சரியானதையும் நடப்பிக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்தால் தனிப்பட்ட உறவுகளில் மகிழ்ச்சி காண்போம். தார்மீக, ஆன்மீக ரீதியில் நம்முடைய வாழ்க்கை தரம் மேம்படும். “நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்” என சங்கீதக்காரன் கூறினார்.—சங்கீதம் 106:3.
[அடிக்குறிப்புகள்]
a மோசேயின் நியாயப்பிரமாணம் எந்தளவு விலாவாரியாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகள் ஆங்கிலத்தில் பிரசுரித்திருக்கும் வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொகுதி 2-ல் பக்கங்கள் 214-20 வரை உள்ள “நியாயப்பிரமாண உடன்படிக்கையின் சில அம்சங்கள்” என்ற தலைப்பின்கீழ் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• நீதி என்றால் என்ன?
• இரட்சிப்பு எவ்வாறு கடவுளுடைய நீதியோடு சம்பந்தப்பட்டுள்ளது?
• எதன் அடிப்படையில் மனிதர்கள் கடவுளால் நீதிமான்களாக கருதப்படுகிறார்கள்?
• யெகோவாவின் நீதியில் நாம் எவ்வாறு மகிழ்ச்சி காணலாம்?
[பக்கம் 15-ன் படங்கள்]
கடவுளுடைய கட்டளைகளுக்கு தாவீது ராஜா இருதயப்பூர்வமான பிரியத்தை வெளிப்படுத்தினார்
[பக்கம் 16-ன் படங்கள்]
நோவா, ஆபிரகாம், சகரியா, எலிசபெத், கொர்நேலியு ஆகியோர் கடவுளால் நீதிமான்களாக கருதப்பட்டார்கள். ஏன் என தெரியுமா?