நீதியைத் தேடுவது நம்மைப் பாதுகாக்கும்
‘முதலாவது தேவனுடைய . . . நீதியை [தொடர்ந்து] தேடுங்கள்.’—மத்தேயு 6:33.
1, 2. ஓர் இளம் கிறிஸ்தவப் பெண் எடுத்தத் தீர்மானம் என்ன, அவள் ஏன் அப்படியொரு தீர்மானம் எடுத்தாள்?
ஆசியாவில் வசிக்கும் ஓர் இளம் கிறிஸ்தவப் பெண் அரசாங்க அலுவலகத்தில் செகரெட்டரியாக பணிபுரிந்து வந்தாள். அவள் கடின உழைப்பாளி, சீக்கிரமே வேலைக்கு வந்துவிடுவாள், வேலை நேரத்தில் வீணாகப் பொழுதைக்கழிக்க மாட்டாள். அவளுடைய வேலை நிரந்தரமாகவில்லை என்பதால், அவளுடைய தகுதி மறுபரிசீலனைக்கு வந்தது. அவளை நிரந்தரமாக வேலையில் அமர்த்துவதாகவும், ஏன் அவளுக்கு உயர்பதவி தருவதாகவும்கூட அந்த இலாக்கா தலைவர் கூறினார்—ஆனால் ஒரு நிபந்தனை, அவருடன் அவள் “உறவாட” வேண்டும். வேலை பறிபோய்விடும் நிலையில்கூட அதற்கு அவள் சம்மதிக்கவே இல்லை.
2 அந்த இளம் கிறிஸ்தவப் பெண்ணின் நடத்தை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றா? இல்லை, ‘முதலாவது தேவனுடைய . . . நீதியை [தொடர்ந்து] தேடுங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றுவதில் அவள் கவனமாக இருந்தாள். (மத்தேயு 6:33) ஒழுக்கங்கெட்ட செயலில் ஈடுபட்டு ஆதாயம் தேடுவதைவிட நீதியுள்ள நியமங்களைப் பின்பற்றுவதே அவளுக்கு அதிமுக்கியமாக இருந்தது.—1 கொரிந்தியர் 6:18.
நீதியின் முக்கியத்துவம்
3. நீதி என்றால் என்ன?
3 “நீதி” என்பது நெறிமுறை பிறழாமல் நேர்மையாக நடக்கும் நிலையைக் குறிக்கிறது. பைபிளில், இதற்குரிய கிரேக்க மற்றும் எபிரெய வார்த்தைகள் “நேரான” அல்லது “சரியான” என்ற அர்த்தத்தைத் தருகின்றன. ஒருவர் தனது சொந்த தராதரங்களின்படி நியாயந்தீர்க்கும் சுயநீதியை இது குறிப்பதில்லை. (லூக்கா 16:15) மாறாக, யெகோவாவுடைய தராதரங்களின்படி நேர்மையாக நடப்பதைக் குறிக்கிறது. இது கடவுளுடைய நீதியைக் குறிக்கிறது.—ரோமர் 1:17; 3:21.
4. ஒரு கிறிஸ்தவருக்கு ஏன் நீதி முக்கியம்?
4 நீதி ஏன் முக்கியம்? ஏனென்றால் தம்முடைய மக்கள் நீதியைக் கடைப்பிடிக்கும்போது ‘நீதியின் தேவனான’ யெகோவா அவர்களுக்குத் தயவு காட்டுகிறார். (சங்கீதம் 4:1; நீதிமொழிகள் 2:20-22; ஆபகூக் 1:13) அநீதியான காரியங்களை நடப்பிக்கிற எவரும் அவருடன் நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க முடியாது. (நீதிமொழிகள் 15:8) அதனால்தான் தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி” அதிமுக்கியமான பிற குணங்களோடு “நீதியை . . . நாடு.” (2 தீமோத்தேயு 2:22) ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தின் பல்வேறு பாகங்களைப் பவுல் பட்டியலிட்டபோது, “நீதியென்னும் மார்க்கவசத்தை” அதில் சேர்த்துக்கொண்டதும் அதனால்தான்.—எபேசியர் 6:14.
5. அபூரண மனிதர்களால் எப்படி நீதியைத் தேட முடியும்?
5 உண்மைதான், முழுமையான கருத்தில் பார்த்தால் எந்தவொரு மனிதனும் நீதிமான் அல்ல. அனைவருமே ஆதாமிடமிருந்து அபூரணத்தைப் பெற்றிருக்கிறோம், அதனால் பிறவியிலேயே பாவிகளாகவும் அநீதிமான்களாகவும் இருக்கிறோம். என்றாலும், நாம் நீதியைத் தேட வேண்டுமென இயேசு கூறினார். இது எப்படிச் சாத்தியம்? இயேசு நமக்காகத் தமது பரிபூரண உயிரையே மீட்கும்பலியாகக் கொடுத்திருப்பதால், அந்தப் பலியில் நாம் விசுவாசம் வைக்கையில் யெகோவா நம் பாவங்களை மன்னிக்கத் தயாராய் இருக்கிறார். (மத்தேயு 20:28; யோவான் 3:16; ரோமர் 5:8, 9, 12, 18) இதன் அடிப்படையில், நாம் யெகோவாவின் நீதியான தராதரங்களைக் கற்றுக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க நம்மாலான எல்லாவற்றையும் செய்யும்போது—நம்முடைய பலவீனங்களை மேற்கொள்வதற்கு ஜெபிக்கும்போது—யெகோவா நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார். (சங்கீதம் 1:6; ரோமர் 7:19-25; வெளிப்படுத்துதல் 7:9, 14) அது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
அநீதியான உலகில் நீதி
6. ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு ஏன் உலகம் ஓர் ஆபத்தான இடமாக இருந்தது?
6 “பூமியின் கடைசி பரியந்தமும்” இயேசுவுக்குச் சாட்சிகளாக இருக்க வேண்டுமென்ற கட்டளையை அவரது சீஷர்கள் பெற்றபோது, அது ஒரு சவாலை அவர்களுக்கு முன்வைத்தது. (அப்போஸ்தலர் 1:8) ஏனெனில் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட முழு பிராந்தியமும் ‘பொல்லாங்கனாகிய [சாத்தானுடைய] கட்டுப்பாட்டில்’ இருந்தது. (1 யோவான் 5:19, NW) அந்த உலகம் அவன் தூண்டுவிக்கிற பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டிருந்தது, எனவே அதன் தீய செல்வாக்கை கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட வேண்டியிருந்தது. (எபேசியர் 2:2) அப்படிப்பட்ட உலகம் அவர்களுக்கு ஓர் ஆபத்தான இடமாக இருந்தது. முதலாவது கடவுளுடைய நீதியைத் தேடுவதன் மூலமே அவர்களால் சகித்திருந்து உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும். அவர்களில் பெரும்பாலோர் சகித்திருந்தார்கள், சிலரோ ‘நீதியின் பாதையை’விட்டு விலகிச்சென்றார்கள்.—நீதிமொழிகள் 12:28; 2 தீமோத்தேயு 4:10.
7. என்ன பொறுப்புகளின் காரணமாக ஒரு கிறிஸ்தவர் மோசமான செல்வாக்குகளை எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது?
7 இன்று கிறிஸ்தவர்களுக்கு இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கிறதா? நிச்சயமாகவே இல்லை! முதல் நூற்றாண்டில் இருந்ததைவிட இன்று அதிக மோசமாய் இருக்கிறது. அதோடு, சாத்தான் இந்தப் பூமிக்குத் தள்ளப்பட்டிருப்பதால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, அதாவது ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய [ஸ்திரீயின்] சந்ததியான மற்றவர்களுக்கு,’ எதிராக அவன் வெறித்தனமாய் சண்டை செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12, 17) அந்தச் ‘சந்ததியை’ ஆதரிக்கும் எவரையும் அவன் தாக்குகிறான். என்றாலும், கிறிஸ்தவர்கள் இந்த உலகிலிருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் இந்த உலகத்தின் பாகமில்லாதிருந்தாலும்கூட, அதில்தான் வாழ வேண்டியிருக்கிறது. (யோவான் 17:15, 16) நல்மனமுள்ள மக்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கற்பித்து, கிறிஸ்துவின் சீஷர்களாய் ஆக்குவதற்கு அவர்கள் அங்குதான் பிரசங்கிக்க வேண்டியிருக்கிறது. (மத்தேயு 24:14; 28:19, 20) ஆகவே, இந்த உலகின் மோசமான செல்வாக்குகளிலிருந்து கிறிஸ்தவர்கள் முற்றிலும் தப்பிக்க முடியாதிருப்பதால், அவர்கள் அவற்றை எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. அந்தச் செல்வாக்குகளில் நான்கை இப்பொழுது நாம் சிந்திக்கலாம்.
ஒழுக்கக்கேடு எனும் கண்ணி
8. இஸ்ரவேலர் ஏன் மோவாபிய கடவுட்களை வழிபட ஆரம்பித்தார்கள்?
8 வனாந்தரத்தில் இஸ்ரவேலருடைய 40 ஆண்டு கால பயணம் முடிவடையவிருந்த தறுவாயில், அநேகர் நீதியின் பாதையைவிட்டு விலகினார்கள். யெகோவாவுடைய மீட்பின் செயல்கள் பலவற்றை அவர்கள் கண்ணாரக் கண்டிருந்தார்கள், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் தறுவாயில் இருந்தார்கள். ஆனால், அந்த முக்கியமான கட்டத்தில், மோவாபியருடைய கடவுட்களை வழிபட ஆரம்பித்தார்கள். ஏன்? ஏனென்றால் “மாம்சத்தின் இச்சை”க்கு அவர்கள் இணங்கிவிட்டார்கள். (1 யோவான் 2:16) “ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள்” என பைபிள் பதிவு சொல்கிறது.—எண்ணாகமம் 25:1.
9, 10. தவறான மாம்ச இச்சைகளின் கறைபடுத்தும் செல்வாக்கைப் பற்றி எப்பொழுதும் கவனமாக இருப்பதன் முக்கியத்துவத்தை இன்றுள்ள என்ன சூழ்நிலை காட்டுகிறது?
9 விழிப்புடன் இல்லாதவர்களைத் தவறான மாம்ச இச்சைகள் எப்படிக் கறைபடுத்தக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. நாம் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது நல்லது, ஏனென்றால் ஒழுக்கக்கேடான நடத்தையில் எந்தத் தவறும் இல்லை என்ற கருத்து இன்று பரவலாக உள்ளது. (1 கொரிந்தியர் 10:6, 8) ஐக்கிய மாகாணங்களிலிருந்து வரும் ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “சேர்ந்து வாழ்வது [மணமுடிக்காத ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வது] அமெரிக்காவில் உள்ள எல்லா மாகாணங்களிலும் 1970-கள் வரை சட்டவிரோதமாக இருந்தது. இப்பொழுதோ, அது சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது. முதல்முறையாக மணமுடிக்கும் தம்பதியரில் பாதிக்கும் அதிகமானோர் தங்களுடைய திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தவர்கள்.” இதுவும் இதுபோன்ற ஒழுக்கங்கெட்ட பிற செயல்களும் அந்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் காணப்படுகின்றன. வருத்தகரமாக, கிறிஸ்தவர்கள் சிலரும் அந்தப் பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்—அதனால் கிறிஸ்தவ சபையில் தங்களுடைய நற்பெயரை இழந்துவிட்டிருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 5:11.
10 மேலும், ஒழுக்கயீனம் இன்றைக்கு எல்லா இடங்களிலும் ஊக்குவிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இளைஞர்கள் பாலுறவு கொள்வதில் எந்தத் தவறுமில்லை என சினிமாக்களும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளும் மறைமுகமாகத் தெரிவிக்கின்றன. ஓரினப்புணர்ச்சி சர்வ சாதாரணமாகச் சித்தரித்துக் காட்டப்படுகிறது. ஆபாசக் காட்சிகள் அப்பட்டமாகக் காட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்கள் இன்டர்நெட்டில் எளிதாகக் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, நிர்வாணமான பெண்கள் பாலுறவு கொள்ளும் காட்சியை பள்ளிக்கூட நண்பன் இன்டர்நெட்டில் பார்த்ததாக தனது ஏழு வயது பையன் பள்ளியிலிருந்து வந்ததுமே பரபரப்புடன் தன்னிடம் சொன்னான் என்று செய்தித்தாள் பத்தி எழுத்தாளர் ஒருவர் அறிவித்தார். அந்தத் தகப்பனுக்கு ஒரே அதிர்ச்சி, ஆனால் இன்னும் எத்தனை பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களிடம் சொல்லாமல் இத்தகைய இன்டர்நெட் சைட்களைப் பார்க்கிறார்களோ? அதோடு, தங்களுடைய பிள்ளைகளின் வீடியோ கேம்ஸுகளில் என்னென்ன இருக்கிறது என்பதை எத்தனை பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களோ? பிரபலமான விளையாட்டுகள் பல, அருவருப்பான ஒழுக்கயீனத்தையும் பேய்த்தனத்தையும் வன்முறையையுமே சிறப்பித்துக் காட்டுகின்றன.
11. இந்த உலகத்தின் ஒழுக்கயீனத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் தங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?
11 இத்தகைய இழிவான “பொழுதுபோக்கை” ஒரு குடும்பத்தினர் எப்படித் தவிர்க்க முடியும்? முதலாவது கடவுளுடைய நீதியைத் தேடி, ஒழுக்கயீனமான எந்தவொரு காரியத்திலும் ஈடுபடாதிருப்பதன் மூலமே. (2 கொரிந்தியர் 6:14; எபேசியர் 5:3) பிள்ளைகளின் நடவடிக்கைகளைத் தகுந்த முறையில் கண்காணித்து, யெகோவா மற்றும் அவருடைய நீதியுள்ள சட்டங்கள் மீதான அன்பை பிள்ளைகளின் மனதில் பதியவைக்கிற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆபாசத்திற்கும், ஆபாச வீடியோ விளையாட்டுகளுக்கும், ஒழுக்கங்கெட்ட திரைப்படங்களுக்கும், அநீதியான மற்ற சபலங்களுக்கும் எதிராகப் பாதுகாக்கிறார்கள்.—உபாகமம் 6:4-9.a
சமுதாய அழுத்தத்தால் வரும் ஆபத்து
12. முதல் நூற்றாண்டில் என்ன பிரச்சினை எழுந்தது?
12 ஆசியா மைனரிலுள்ள லீஸ்திரா பட்டணத்தில் பவுல் இருந்தபோது, ஒரு மனிதனை அற்புதகரமாய் சுகப்படுத்தினார். அந்தப் பதிவு இவ்வாறு கூறுகிறது: “பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷ ரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.” (அப்போஸ்தலர் 14:11, 12) பிற்பாடு அதே கூட்டத்தார் பவுலையும் பர்னபாவையும் கொலை செய்ய விரும்பினார்கள். (அப்போஸ்தலர் 14:19) அந்த ஜனங்கள் சமுதாய அழுத்தத்திற்கு அடிபணிந்தார்கள் என்பது இதிலிருந்தே தெளிவாகிறது. அந்தப் பகுதியிலிருந்த சிலர் கிறிஸ்தவர்களான பிறகும் தங்களுடைய மூடநம்பிக்கைகளைக் கைவிடாதிருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் கொலோசே பட்டணத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதியபோது, “தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனை”க்கு எதிராக அவர்களை எச்சரித்தார்.—கொலோசெயர் 2:19.
13. ஒரு கிறிஸ்தவர் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள் சில யாவை, அவற்றைத் தவிர்ப்பதற்குத் தேவையான பலத்தை எப்படி அவர் பெறலாம்?
13 கிறிஸ்தவ நியமங்களுக்கு முரணான பொய்மத கருத்துகளில் வேரூன்றிய பிரபல பழக்கவழக்கங்களை இன்று உண்மை கிறிஸ்தவர்களும் அதேபோல் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, பிறப்புடனும் மரணத்துடனும் சம்பந்தப்பட்ட ஏராளமான சடங்காசாரங்கள் சில நாடுகளில் உள்ளன; மரணத்திற்குப்பின் உயிர்வாழும் ஆவி இருக்கிறது என்ற பொய்யின் அடிப்படையில் அவை செய்யப்படுகின்றன. (பிரசங்கி 9:5, 10) சிறுமிகளின் பிறப்புறுப்பை அறுக்கும் பழக்கமுடைய நாடுகள் இருக்கின்றன.b இது கொடூரமான, அவசியமற்ற ஒரு பழக்கம்; பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவ பெற்றோர் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள அன்பான கவனிப்புக்கு எதிரானது. (உபாகமம் 6:6, 7; எபேசியர் 6:4) சமுதாய அழுத்தங்களை எதிர்த்து நின்று, எப்படி இத்தகைய பழக்கங்களை கிறிஸ்தவர்கள் விட்டொழிக்க முடியும்? யெகோவாமீது முழு நம்பிக்கை வைப்பதன் மூலமே. (சங்கீதம் 31:6) “நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர்” என்று உள்ளப்பூர்வமாக சொல்கிறவர்களை நீதியுள்ள கடவுள் பலப்படுத்துவார், கவனித்துக்கொள்வார்.—சங்கீதம் 91:2; நீதிமொழிகள் 29:25.
யெகோவாவை மறந்துவிடாதீர்கள்
14. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்குச் சற்று முன்பு இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த எச்சரிக்கை என்ன?
14 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் நுழைவதற்கு சற்று முன்பு, தம்மை மறந்துவிடாதிருக்கும்படி அவர்களை யெகோவா எச்சரித்தார். அவர் இவ்வாறு கூறினார்: ‘உன் தேவனாகிய யெகோவாவை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமல் . . . உன் தேவனாகிய யெகோவாவை நீ மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.’—உபாகமம் 8:11-17.
15. நாம் யெகோவாவை மறக்கவில்லை என்பதை எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?
15 இதுபோல் இன்றைக்கும் நடக்கக்கூடுமா? ஆம், தவறான காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தால் நடக்கக்கூடும். என்றாலும், கடவுளுடைய நீதியை முதலாவது தேடினால், நம்முடைய வாழ்க்கையில் சுத்தமான வணக்கம் மிக முக்கியமானதாக இருக்கும். பவுல் நமக்கு ஊக்கமூட்டுகிறபடி, ‘வாய்ப்பான காலத்தை வாங்கி,’ நம்முடைய ஊழியத்தில் அவசர உணர்வைக் காட்டுவோம். (கொலோசெயர் 4:5, NW; 2 தீமோத்தேயு 4:2) ஆனால், கூட்டங்களையும் வெளி ஊழியத்தையும்விட ஓய்வெடுப்பது அல்லது ஜாலியாகப் பொழுதுபோக்குவது நமக்கு முக்கியமானதாக இருந்தால், நம் வாழ்க்கையில் யெகோவாவை இரண்டாம் ஸ்தானத்திற்குத் தள்ளி, அவரை மறந்தே போய்விடுவோம். கடைசி நாட்களில், ஜனங்கள் ‘தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராய்’ இருப்பார்கள் என பவுல் கூறினார். (2 தீமோத்தேயு 3:4) அத்தகைய சிந்தையால் கறைபடாதிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தவறாமல் தங்களை ஆராய்ந்து பார்க்கிறார்கள்.—2 கொரிந்தியர் 13:5.
சுதந்திரமாகச் செயல்படும் மனப்பான்மையைக் குறித்து ஜாக்கிரதை
16. ஏவாளும் பவுலின் நாளிலிருந்த சிலரும் காட்டிய தவறான மனப்பான்மை என்ன?
16 ஏதேனில், சுதந்திரமாகச் செயல்படும் சுயநல ஆசையைக் காட்டி ஏவாளை சாத்தான் வெற்றிகரமாக ஏமாற்றினான். எது சரி எது தவறு என்பதைப் பற்றி சொந்த தீர்மானங்கள் எடுப்பதற்கு ஏவாள் விரும்பினாள். (ஆதியாகமம் 3:1-6) முதல் நூற்றாண்டில், கொரிந்து சபையிலிருந்த சிலருக்குச் சுயமாகச் செயல்படும் இதுபோன்ற மனப்பான்மை இருந்தது. பவுலைவிட தங்களுக்கு அதிகம் தெரியுமென அவர்கள் நினைத்தார்கள், அவர்களை மகா பிரதான அப்போஸ்தலர்களென அவர் ஏளனமாக அழைத்தார்.—2 கொரிந்தியர் 11:3-5; 1 தீமோத்தேயு 6:3-5.
17. சுதந்திரமாகச் செயல்படும் மனப்பான்மையை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
17 இன்றைய உலகில், அநேகர் “துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்” இருக்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் சிலரையும் இத்தகைய சிந்தனை பாதித்திருக்கிறது. சிலர் சத்தியத்தைக்கூட எதிர்த்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:4; பிலிப்பியர் 3:18) தூய வழிபாடு சம்பந்தப்பட்டதில், வழிநடத்துதலுக்காக யெகோவாவின் உதவியை நாடுவதும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யுடனும் சபை மூப்பர்களுடனும் ஒத்துழைப்பதும் முக்கியம். அதுவே நீதியைத் தேடுவதற்கு ஒரு வழியாகும், சுதந்திரமாகச் செயல்படும் மனப்பான்மையை வளர்க்காதிருக்க இது நமக்கு உதவுகிறது. (மத்தேயு 24:45-47, NW; சங்கீதம் 25:9, 10; ஏசாயா 30:21) அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாலான சபை “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.” நம்மைப் பாதுகாப்பதற்கும் வழிநடத்துவதற்கும் யெகோவா அந்தச் சபையைக் கொடுத்திருக்கிறார். (1 தீமோத்தேயு 3:15) யெகோவாவின் நீதியான சித்தத்திற்கு நாம் மனத்தாழ்மையுடன் கீழ்ப்பட்டு வருகையில், அந்தச் சபை வகிக்கும் முக்கிய பங்கை உணருகிறோம், அவ்வாறு உணருவது ‘ஒன்றையும் வீண் பெருமையினால் செய்யாதிருக்க’ நமக்கு உதவும்.—பிலிப்பியர் 2:2-4; நீதிமொழிகள் 3:4-6.
இயேசுவைப் பின்பற்றுவோராக இருங்கள்
18. எந்தெந்த வழிகளில் இயேசுவைப் பின்பற்றுவதற்கு நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்?
18 இயேசுவைப் பற்றி தீர்க்கதரிசனமாக பைபிள் இவ்வாறு கூறுகிறது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்.” (சங்கீதம் 45:7; எபிரெயர் 1:9) பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த மனப்பான்மை! (1 கொரிந்தியர் 11:1) யெகோவாவின் நீதியான தராதரங்களை இயேசு வெறுமனே அறிந்திருக்கவில்லை, அவற்றை அவர் நேசித்தார். ஆகவே, வனாந்தரத்தில் அவரை சாத்தான் சோதித்தபோது, அதை எதிர்த்து நிற்க அவர் தயங்கவில்லை, ‘நீதியின் வழியிலிருந்து’ விலகாதிருப்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.—நீதிமொழிகள் 8:21; மத்தேயு 4:3-11.
19, 20. நீதியைத் தேடுவதால் வரும் நல்ல பலன்கள் யாவை?
19 உண்மைதான், மாம்சத்தின் அநீதியான ஆசைகள் பலமாக இருக்கலாம். (ரோமர் 7:19, 20) என்றாலும், நீதி நமக்கு அருமையானதாக இருந்தால், பொல்லாப்பை எதிர்த்து நிற்க அது நம்மைப் பலப்படுத்தும். (சங்கீதம் 119:165) நீதியின் பேரிலான ஆழ்ந்த அன்பு தவறான காரியங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். (நீதிமொழிகள் 4:4-6) நினைவிற்கொள்ளுங்கள், சோதனைக்கு இணங்கிவிடும்போதெல்லாம் சாத்தானை நாம் வெற்றிபெறச் செய்கிறோம். அப்படிச் செய்வதற்குப் பதிலாக, அவனை எதிர்த்து நின்று யெகோவாவை வெற்றிபெறச் செய்வது எவ்வளவு சிறந்தது!—நீதிமொழிகள் 27:11; யாக்கோபு 4:7, 8.
20 உண்மை கிறிஸ்தவர்கள் நீதியை நாடுவதால், அவர்கள் ‘தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசு கிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகிறார்கள்.’ (பிலிப்பியர் 1:10, 11) அவர்கள் ‘மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுகிறார்கள்.’ (எபேசியர் 4:24) அவர்கள் யெகோவாவுக்கே உரியவர்கள்; தங்களைப் பிரியப்படுத்த அல்ல, ஆனால் யெகோவாவுக்குச் சேவை செய்யவே அவர்கள் வாழ்கிறார்கள். (ரோமர் 14:8; 1 பேதுரு 4:2) அதுதான் அவர்களுடைய சிந்தைகளையும் செயல்களையும் ஆட்கொள்கிறது. தங்கள் பரம பிதாவை அவர்கள் எவ்வளவாய் மகிழ்விக்கிறார்கள்!—நீதிமொழிகள் 23:24.
[அடிக்குறிப்புகள்]
a ஒழுக்கங்கெட்ட செல்வாக்குகளிலிருந்து குடும்பத்தைப் பாதுகாப்பதைப் பற்றிய பயனுள்ள ஆலோசனைகள் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் காணப்படுகின்றன, இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b பெண் பாலுறுப்பை அறுக்கும் பழக்கம் பெண் விருத்தசேதனம் என முன்பு அழைக்கப்பட்டது.
உங்களால் விளக்க முடியுமா?
• நீதியைத் தேடுவது ஏன் முக்கியம்?
• அபூரண கிறிஸ்தவர் ஒருவர் எப்படி நீதியைத் தேட முடியும்?
• இவ்வுலகில் ஒரு கிறிஸ்தவர் தவிர்க்க வேண்டிய காரியங்கள் சில யாவை?
• நீதியைத் தேடுவது எப்படி நம்மைப் பாதுகாக்கிறது?
[பக்கம் 26-ன் படம்]
இயேசுவைப் பின்பற்றினோருக்கு உலகம் ஆபத்தான இடமாக இருந்தது
[பக்கம் 27-ன் படம்]
யெகோவாவை நேசிக்கக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள் ஒழுக்கயீனத்திற்கு எதிராகப் பாதுகாக்கப்படுவார்கள்
[பக்கம் 28-ன் படம்]
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் செல்வச்செழிப்பாக ஆனபிறகு இஸ்ரவேலர் சிலர் யெகோவாவை மறந்துபோனார்கள்
[பக்கம் 29-ன் படம்]
இயேசுவைப் போல், கிறிஸ்தவர்கள் அநீதியை வெறுக்கிறார்கள்