நற்கிரியைகளைச் செய்ய சுத்திகரிக்கப்பட்ட ஒரு ஜனம்
“மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.”—2 கொரிந்தியர் 7:1.
1. யெகோவா தம் வணக்கத்தாரிடம் எதை எதிர்பார்க்கிறார்?
“யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?” யெகோவா அங்கீகரிக்கும் வணக்கத்தின் சம்பந்தமாக சிந்திக்க வைக்கும் இந்தக் கேள்வியை பண்டைய இஸ்ரவேலின் தாவீது ராஜா எழுப்பினார். பிறகு அதற்கு அவரே பதிலையும் அளித்தார்: “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.” (சங்கீதம் 24:3, 4) பரிசுத்தத்தின் உருவாக திகழும் யெகோவா, ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு அவர் சுத்தமாயும் பரிசுத்தமாயும் இருக்க வேண்டும். இதற்கு முன்னால் யெகோவா இஸ்ரவேலரிடம் இவ்வாறு கூறியிருந்தார்: “நான் பரிசுத்தர்; ஆகையால், . . . உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.”—லேவியராகமம் 11:44, 45; 19:2.
2. உண்மை வணக்கத்தில் சுத்தத்தின் முக்கியத்துவத்தை பவுலும் யாக்கோபும் எவ்வாறு வலியுறுத்தினார்கள்?
2 பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், ஒழுக்கத்தில் சீர்குலைந்திருந்த கொரிந்து பட்டணத்தில் வாழ்ந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) கடவுளோடு நல்லுறவைக் காத்துக்கொண்டு, அவர் வாக்குறுதி அளித்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, ஒருவர் உடலிலும் ஆன்மீகத்திலும் அழுக்கும் கறையும் இன்றி சுத்தமாய் இருக்க வேண்டும் என்ற குறிப்பே மறுபடியும் வலியுறுத்தப்படுகிறது. அதே விதமாகவே கடவுள் அங்கீகரிக்கும் வணக்கத்தைப் பற்றி சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”—யாக்கோபு 1:27.
3. நம்முடைய வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொள்வதற்கு எதில் நாம் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
3 சுத்தமாகவும், பரிசுத்தமாகவும், மாசில்லாதவர்களாகவும் இருப்பது உண்மை வணக்கத்தில் மிகவும் முக்கியமாக இருப்பதால், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிற எவரும் அப்படியிருப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று சுத்தத்தைப் பற்றியதில் மக்களின் தராதரங்களும் கருத்துக்களும் வெகுவாய் வித்தியாசப்படுகின்றன. ஆகவே யெகோவா எதை சுத்தமாகவும் ஏற்புடையதாகவும் கருதுகிறார் என்பதை நாம் புரிந்துகொண்டு அதன்படி வாழ வேண்டும். இந்த விஷயத்தில் கடவுள் தம்முடைய வணக்கத்தாரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதையும் அவருக்கு முன் சுத்தமானவர்களாகவும் ஏற்புடையோராகவும் ஆவதற்கும் நிலைத்திருப்பதற்கும் உதவியாக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.—சங்கீதம் 119:9; தானியேல் 12:10.
உண்மை வணக்கத்துக்காக சுத்தமுள்ளவர்கள்
4. சுத்தம் பற்றிய பைபிளின் கருத்தை விளக்கவும்.
4 பெரும்பாலோருக்கு சுத்தம் என்பது தூசிபடாதிருப்பதை அல்லது கறைபடாதிருப்பதை மட்டுமே குறிக்கிறது. ஆனால் பைபிளில், சுத்தம் என்பதற்கு பல்வேறு எபிரெய, கிரேக்க சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை உடல் சுத்தத்தை மட்டுமல்லாமல் ஒழுக்க மற்றும் ஆன்மீக சுத்தத்தையே பெரும்பாலும் விவரிக்கின்றன. எனவே ஒரு பைபிள் கலைக்களஞ்சியம் இவ்வாறு கூறுகிறது: “‘சுத்தம்’ மற்றும் ‘அசுத்தம்’ என்ற பதங்கள் அரிதாகவே வெறும் சுகாதார விஷயங்களோடு சம்பந்தப்பட்டுள்ளன, அவை முக்கியமாக மத சம்பந்தமான கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளக்கத்தின்படி ‘சுத்தம்’ என்ற நியமம் ஏறக்குறைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உட்படுத்துகிறது.”
5. மோசேயின் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர் எந்தளவுக்கு சுத்தமாக வாழ வழி செய்தது?
5 மோசேயின் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருடைய வாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் எது சுத்தமானது, எது ஏற்கத்தக்கது, எது ஏற்கத்தகாதது என்பதை திட்டவட்டமாக காட்டியது. உதாரணமாக, லேவியராகமம் 11 முதல் 15 வரையான அதிகாரங்களில் சுத்தம், அசுத்தம் சம்பந்தமாக விலாவாரியான அறிவுரைகளை நாம் காண்கிறோம். சில மிருகங்கள் அசுத்தமானவையாக கருதப்பட்டன, அவற்றை இஸ்ரவேலர் சாப்பிடக்கூடாது என சொல்லப்பட்டது. பிள்ளைப்பேறு, குறிப்பிட்ட காலப் பகுதிக்கு ஒரு பெண்ணை அசுத்தமானவளாக ஆக்கியது. குறிப்பாக குஷ்டரோகம் போன்ற சில தோல் வியாதிகளும், ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்புக்களிலிருந்து வெளிப்பட்ட கசிவுகளும் ஒருவரை அசுத்தமுள்ளவராக்கின. அசுத்தமான சூழ்நிலைகளில் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும்கூட நியாயப்பிரமாணம் கூறியது. உதாரணமாக எண்ணாகமம் 5:2-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.”
6. சுத்தத்தைப் பற்றிய சட்டங்கள் என்ன நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டன?
6 விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்த விஷயங்களை சரிவர புரிந்துகொள்வதற்கு வெகு காலத்துக்கு முன்பே யெகோவா இச்சட்டங்களையும் மற்றவற்றையும் இஸ்ரவேலருக்கு கொடுத்திருந்தார். இவற்றை கடைப்பிடித்தபோது மக்கள் நன்மையடைந்தார்கள். ஆனால் இந்தச் சட்டங்கள் சுகாதார சட்டமாக அல்லது மருத்துவ வழிகாட்டியாக இருப்பதற்காக மட்டுமே கொடுக்கப்படவில்லை. அவை உண்மை வணக்கத்தின் அம்சமாக இருந்தன. மக்களுடைய தினசரி வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள்—சாப்பிடுவது, பிள்ளை பெறுவது, திருமண உறவுகள், போன்றவை—குறித்து சட்டங்கள் கொடுக்கப்பட்டன; யெகோவாவுக்கென்றே ஒப்புக்கொடுத்த ஜனமாக இருந்த இவர்களுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடைய கடவுளுக்கு இருந்தது என்பதையே அவை வலியுறுத்தின.—உபாகமம் 7:6; சங்கீதம் 135:4.
7. நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிகையில் இஸ்ரவேலர் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வர்?
7 நியாயப்பிரமாண சட்டம் இஸ்ரவேலரைச் சுற்றியிருந்த தேசத்தாரின் அசுத்தமான பழக்க வழக்கங்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது. யெகோவாவின் பார்வையில் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருப்பதற்கு தேவைப்படும் எல்லாவற்றையும் உட்படுத்திய நியாயப்பிரமாணத்திற்கு உண்மையுடன் கீழ்ப்படிகையில், இஸ்ரவேலர் கடவுளை சேவிக்கவும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும் தகுதியுள்ளவர்களாக இருப்பார்கள். இதைக் குறித்து யெகோவா அந்தத் தேசத்தாரிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.”—யாத்திராகமம் 19:5, 6; உபாகமம் 26:19.
8. சுத்தத்தைப் பற்றி நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டவற்றுக்கு இன்று கிறிஸ்தவர்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
8 சுத்தமானவராக, பரிசுத்தமானவராக, அவரால் ஏற்கத்தக்கவராக ஆவது எப்படி என்பதை இஸ்ரவேலருக்கு போதிக்க யெகோவா இப்படிப்பட்ட விவரங்களை நியாயப்பிரமாணத்தில் கொடுத்திருந்ததால், இந்தத் தேவைகளை இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு பூர்த்தி செய்கிறார்கள் என்று கவனமாக எண்ணிப் பார்ப்பது சரியாக இருக்குமல்லவா? கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லாவிட்டாலும் பவுல் விளக்கியபடி அவற்றிலுள்ளவை எல்லாம் “வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.” (கொலோசெயர் 2:17; எபிரெயர் 10:1) “நான் மாறாதவர்” என்று சொல்லும் யெகோவா தேவன் அன்றே, சுத்தமாகவும் கறையில்லாமலும் இருப்பதை உண்மை வணக்கத்தில் அவ்வளவு முக்கிய அம்சமாக கருதினாரென்றால் இன்றும் உடலிலும் ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் சுத்தமாக இருப்பதை நாம் முக்கியமானதாக கருத வேண்டும். அப்போதுதான் அவருடைய அங்கீகாரமும் ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும்.—மல்கியா 3:6; ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11, 31.
உடல் சுத்தம் நம்மை சிபாரிசு செய்கிறது
9, 10. (அ) உடல் சுத்தம் ஒரு கிறிஸ்தவனுக்கு ஏன் முக்கியம்? (ஆ) யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகள் பற்றி அடிக்கடி என்ன சொல்லப்பட்டிருக்கின்றன?
9 உடல் சுத்தம் உண்மை வணக்கத்தில் இன்னும் முக்கிய அம்சமாக இருக்கிறதா? உடல் சுத்தம் மாத்திரமே ஒருவரை கடவுளின் உண்மை வணக்கத்தாராக ஆக்காதபோதிலும் அவருடைய சூழ்நிலைமைகள் அனுமதிப்பதைப் பொறுத்து அவர் முடிந்தவரை சுத்தமாக இருப்பதே சரியானது. விசேஷமாக இன்று தங்களையோ தங்கள் ஆடைகளையோ சுற்றுப்புறத்தையோ சுத்தமாக வைப்பதற்கு மக்கள் அதிக கவனம் செலுத்தாதபோது, அப்படி சுத்தமாக வைத்துக்கொள்பவர்களை சுற்றியுள்ளவர்கள் கூர்ந்து கவனிக்கத்தான் செய்கிறார்கள். இது நல்ல பலன்களைத் தரலாம், பவுல் கொரிந்திய கிறிஸ்தவர்களிடம் சொன்னதுபோல இருக்கலாம்: “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.”—2 கொரிந்தியர் 6:3, 4.
10 விசேஷமாக, பெரிய மாநாடுகள் நடைபெறுகையில் பொது துறை அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளை அவர்களுடைய சுத்தம், ஒழுங்கு, மரியாதைக்குரிய நடத்தை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை குறித்து பல தடவை பாராட்டியிருக்கிறார்கள். உதாரணமாக, இத்தாலியில் சாவோனா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டைக் குறித்து லா ஸ்டாம்ப்பா என்ற செய்தித்தாள் இவ்வாறு கூறியது: “அந்த வளாகத்தில் நடந்துசெல்கையில் அதை பயன்படுத்துபவர்களின் சுத்தமும் ஒழுங்கும் நம்மை உடனடியாக கவர்ந்துவிடுகின்றன.” பிரேஸிலில் சாவோ பாலோவில் ஒரு ஸ்டேடியத்தில், சாட்சிகளின் மாநாட்டிற்குப் பின்பு, ஸ்டேடியத்தின் அதிகாரி ஒருவர், சுத்தம் செய்யும் பணியாளர்களின் சூப்பர்வைசரிடம் “யெகோவாவின் சாட்சிகள் இந்த ஸ்டேடியத்தை சுத்தம் செய்ததைப் போல இனிமேல் இதை சுத்தம் செய்ய வேண்டும்” என்றார். அதே ஸ்டேடியத்தின் மற்றொரு அதிகாரி இவ்வாறு கூறினார்: “யெகோவாவின் சாட்சிகள் ஸ்டேடியத்தை வாடகைக்கு எடுக்கும்போது நாங்கள் கவலையாயிருப்பது எந்த நாட்கள் என்பதுதான். எங்களுக்கு வேறு எந்த கவலையும் இருப்பதில்லை.”
11, 12. (அ) தனிப்பட்ட சுத்தம் சம்பந்தமாக எந்த பைபிள் நியமத்தை நாம் மனதில் வைக்க வேண்டும்? (ஆ) நம்முடைய தனிப்பட்ட பழக்கங்கள், வாழும் முறை ஆகியவை சம்பந்தமாக என்ன கேள்விகள் கேட்கப்படலாம்?
11 நம்முடைய வணக்க ஸ்தலத்தில் காணப்படும் சுத்தமும் ஒழுங்கும் நாம் வணங்கும் கடவுளுக்கு துதியை சேர்க்கிறதென்றால், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்தக் குணங்களை வெளிக்காட்டுவது உண்மையிலேயே அதிக முக்கியம். ஆனால் நம்முடைய வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்க நமக்கு உரிமை இருப்பதாக நாம் நினைக்கலாம். உடை, சிகை அலங்காரம் ஆகியவற்றைக் குறித்ததில் நமக்கு செளகரியமாகவும் அழகாகவும் இருப்பதைத் தேர்ந்தெடுக்க நமக்கு நிச்சயமாகவே சுதந்திரம் உண்டு! ஆனால், பெரும்பாலும் இந்த சுதந்திரத்துக்கும் வரையறை உண்டு. குறிப்பிட்ட வகை உணவுகளை உண்பதற்கான நம்முடைய விருப்பத்தைப் பற்றி குறிப்பிடுகையில் பவுல் சககிறிஸ்தவர்களுக்கு இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்: “இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.” அதன் பின்பு அவர் மதிப்புள்ள ஒரு நியமத்தை கூறினார்: “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.” (1 கொரிந்தியர் 8:9; 10:23) சுத்தத்தைப் பற்றியதில் பவுலின் புத்திமதி எவ்வாறு பொருந்துகிறது?
12 கடவுளின் ஊழியர் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வாழ வேண்டும் என்று மக்கள் நியாயமாகவே எதிர்பார்ப்பார்கள். ஆகவே நம்முடைய வீடும் சுற்றுப்புறமும் நம்மை கடவுளுடைய ஊழியர் என மதிக்குமளவுக்கு இருக்க வேண்டும். யாரும் குறைகூறும்படி இருக்கக்கூடாது. நம்மையும் நம்முடைய நம்பிக்கைகளையும் பற்றி நம்முடைய வீடு என்ன விதமான சாட்சி கொடுக்கிறது? நாம் ஆணித்தரமாக மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யும் சுத்தமும் ஒழுங்கும் நிலவும் நீதியுள்ள புதிய உலகில் வாழ்வதற்காக நாம் உண்மையிலேயே ஏங்குவதை அவை காட்டுகின்றனவா? (2 பேதுரு 3:13) அதே விதமாகவே, ஓய்வு நேரத்தில் அல்லது ஊழியத்தில் கலந்துகொள்கையில் நம்முடைய தோற்றம், நாம் பிரசங்கிக்கும் செய்திக்கு அழகை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். உதாரணமாக, மெக்ஸிகோவில் ஒரு செய்தித்தாள் நிருபர் கூறியதை கவனியுங்கள்: “யெகோவாவின் சாட்சிகளில் ஏராளமான 44இளைஞர் இருக்கின்றனர், அதில் கவனிக்கத்தக்கது அவர்கள் சிகையலங்காரமும், சுத்தமும், கண்ணியமான உடையுமே. நம் மத்தியில் இப்படிப்பட்ட இளைஞர் இருப்பது எத்தனை ஆனந்தமான விஷயம்!”
13. நம்முடைய அன்றாட வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்யலாம்?
13 நம்முடைய உடலும், உடைமைகளும், வீடும் எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்கு தொழில்நுட்பம் மிக்க, விலையுயர்ந்த எந்தக் கருவிகளும் சாதனங்களும் தேவை இல்லை. நல்ல திட்டமிடுதலும் இடைவிடாத முயற்சியும் இருந்தாலே போதும். நம்முடைய உடலை, துணிமணிகளை, வீட்டை, காரை, இன்னும் பிறவற்றை சுத்தம் செய்வதற்கென்று நேரத்தை ஒதுக்க வேண்டும். ஊழியம், கூட்டங்களுக்கு செல்வது, தனிப்பட்ட படிப்பு ஆகியவற்றையும் அதோடு தினசரி வாழ்க்கையின் மற்ற பொறுப்புகளையும் கவனித்துக்கொள்வதில் நாம் பிஸியாக இருக்கலாம்; ஆனாலும் அவை கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக சுத்தமானவராயும் ஏற்கத்தக்கவராயும் இருப்பதிலிருந்து நமக்கு விலக்களிப்பதில்லை. “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்ற பிரபலமான நியமம் வாழ்க்கையின் இந்த அம்சத்துக்கும் பொருந்தும்.—பிரசங்கி 3:1.
கறைபடாத இருதயம்
14. உடல் சுத்தத்தைவிடவும் ஒழுக்க சுத்தமும் ஆன்மீக சுத்தமும் அதிக முக்கியமானவை என்று ஏன் சொல்லலாம்?
14 உடல் சுத்தத்துக்கு கவனம் செலுத்துவது முக்கியம்தான்; அதைவிடவும் முக்கியம் ஒழுக்க சுத்தத்துக்கும் ஆன்மீக சுத்தத்துக்கும் கவனம் செலுத்துவது. இஸ்ரவேலர் உடல் ரீதியில் அசுத்தமுள்ளவர்களாக இருந்ததற்காக அவர்களை யெகோவா நிராகரிக்கவில்லை, அவர்கள் ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் சீர்கெட்டு போனதற்காகவே அவர் அவர்களை நிராகரித்தார் என்பதை எண்ணிப் பார்க்கையில் நாம் இந்த முடிவுக்கு வருகிறோம். அவர்கள் ‘பாவமுள்ள ஜாதியாயும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமாயும்’ இருந்ததால் அவர்கள் செலுத்திய பலிகளும், அவர்கள் ஆசரித்த மாதப்பிறப்பும் ஓய்வுநாளும், ஏன் அவர்களுடைய ஜெபங்களும்கூட யெகோவாவுக்குப் பாரமாயிருப்பதாக ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் அவர்களிடம் சொன்னார். மறுபடியும் கடவுளுடைய தயவை பெறுவதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? “உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்” என்று யெகோவா சொன்னார்.—ஏசாயா 1:4, 11-16.
15, 16. எது ஒருவனை தீட்டுப்படுத்துவதாக இயேசு சொன்னார், இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
15 சீஷர்கள் சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவாதிருந்ததால் அவர்கள் அசுத்தமாயிருப்பதாக பரிசேயர்களும் சதுசேயர்களும் கூறியபோது இயேசு என்ன சொன்னார் என்பதை கவனிப்பது ஒழுக்க சுத்தமும் ஆன்மீக சுத்தமும் எந்தளவு முக்கியம் என்பதை நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவும். அவர் பின்வருமாறு சொல்லி, அவர்களைத் திருத்தினார்: “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.” இயேசு பிறகு இவ்வாறு விளக்கினார்: “வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும் பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது.”—மத்தேயு 15:11, 18-20.
16 இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இருதயத்திலுள்ள பொல்லாத, ஒழுக்கங்கெட்ட, அசுத்தமான எண்ணங்களில் இருந்துதான் பொல்லாத, ஒழுக்கங்கெட்ட, அசுத்தமான செயல்கள் பிறப்பதை இயேசு சுட்டிக்காட்டினார். சீஷனாகிய யாக்கோபு, “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்” என்று கூறினார். (யாக்கோபு 1:14, 15) ஆகவே இயேசு அங்கே விவரித்த மோசமான பாவங்களை நாம் செய்ய விரும்பாவிட்டாலும் இப்படிப்பட்ட காரியங்களிடமாக நமக்கிருக்கும் மனச்சாய்வுகளை இருதயத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும். இதற்கு நாம் வாசிப்பவற்றையும், பார்க்கிறவற்றையும், கேட்பவற்றையும் குறித்து கவனமாக இருக்க வேண்டும். வரம்பற்ற பேச்சு உரிமை, கலையுணர்வு என்ற பெயரில் இன்று பொழுதுபோக்கு, விளம்பரம் ஆகிய துறைகள் பாவ மாம்சத்தின் ஆசைகளை திருப்திப்படுத்தும் ஒலிகளையும் உருவங்களையும் தாராளமாக வழங்கி வருகின்றன. இப்படிப்பட்ட எண்ணங்கள் நம்முடைய இருதயத்தில் வேர்கொள்ள அனுமதிக்காதிருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். கடவுளைப் பிரியப்படுத்தவும் அவருடைய அங்கீகாரத்தைப் பெறவும், சுத்தமானதும் கறையில்லாததுமான இருதயத்தைக் காத்துக்கொள்வதற்கு நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய குறிப்பாகும்.—நீதிமொழிகள் 4:23.
நற்கிரியைகளுக்காக சுத்திகரிக்கப்படுதல்
17. யெகோவா ஏன் தம்முடைய மக்களை சுத்தமான நிலைக்குள் கொண்டு வந்திருக்கிறார்?
17 யெகோவாவின் உதவியோடு அவருக்கு முன்னால் சுத்தமான நிலைநிற்கையை நாம் காத்துக்கொள்ளலாம் என்பது உண்மையிலேயே மதிப்புமிக்க பாக்கியமும் பாதுகாப்புமாகும். (2 கொரிந்தியர் 6:14-18) ஆனால், யெகோவா ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தம்முடைய மக்களை சுத்தமான நிலைக்குள் கொண்டு வந்திருக்கிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு “நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரி”த்தார் என்று தீத்துவிடம் பவுல் கூறினார். (தீத்து 2:14) சுத்திகரிக்கப்பட்ட ஜனமாக நாம் என்ன செயல்களைச் செய்வதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
18. நற்கிரியைகள் செய்ய நாம் ஆர்வமாய் இருப்பதை எவ்வாறு காட்டலாம்?
18 முக்கியமாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதில் நாம் மும்முரமாக ஈடுபட வேண்டும். (மத்தேயு 24:14) அவ்வாறு செய்கையில் எல்லா இடங்களிலுமுள்ள ஆட்களுக்கு, எந்த விதமான தூய்மைக்கேடும் இல்லாத பூமியில் என்றும் வாழும் நம்பிக்கையின் செய்தியை அளிக்கிறோம். (2 பேதுரு 3:13) கடவுளுடைய ஆவியின் கனியை அன்றாட வாழ்க்கையில் வெளிக்காட்டுவதும் நம்முடைய பரலோக தகப்பனை மகிமைப்படுத்தும் நற்கிரியைகளில் அடங்கும். (கலாத்தியர் 5:22, 23; 1 பேதுரு 2:12) அதோடு, இயற்கை பேரழிவுகளால் அல்லது மனிதராலேயே ஏற்படுத்தப்படும் பயங்கரங்களால் படுமோசமாக பாதிக்கப்படும் சத்தியத்தில் இல்லாத ஜனங்களையும் நாம் மறந்துவிடுவதில்லை. பவுலின் பின்வரும் புத்திமதியை நாம் மனதில் வைத்திருப்போம்: “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) சுத்தமான இருதயத்தோடும் தூய்மையான உள்நோக்கத்தோடும் செய்யப்படும் இப்படிப்பட்ட சேவைகள் அனைத்தும் கடவுளுக்கு மிகவும் பிரியமானவை.—1 தீமோத்தேயு 1:5.
19. உடலிலும், ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும் தொடர்ந்து சுத்தத்தின் உயர்ந்த தராதரத்தைக் கடைப்பிடிக்கையில் நமக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?
19 மகா உன்னதரின் ஊழியர்களாக நாம் பவுலின் பின்வரும் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிறோம்: “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” (ரோமர் 12:1) யெகோவாவால் சுத்திகரிக்கப்பட்டவர்களாக இருக்கும் பாக்கியத்தை தொடர்ந்து பொக்கிஷமாக போற்றி, உடலிலும் ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் சுத்தத்தின் உயர்ந்த தராதரத்தைக் கடைப்பிடிக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்வோமாக. இவ்வாறு செய்வதால் நாம் சுயமரியாதையையும் மனநிறைவையும் பெற்றுக்கொள்வதோடு, கடவுள் ‘சகலத்தையும் புதிதாக்கும்போது’ “முந்தினவைகள்” அதாவது தற்போதைய பொல்லாத, கறைபடிந்த ஒழுங்குமுறை அழிந்துபோவதையும் கண்ணார காண்போம்.—வெளிப்படுத்துதல் 21:4, 5.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• சுத்தம் சம்பந்தமாக இஸ்ரவேலருக்கு அநேக சட்டங்கள் ஏன் கொடுக்கப்பட்டன?
• உடல் சுத்தம் எவ்வாறு நாம் பிரசங்கிக்கும் செய்திக்கு அழகை கூட்டுகிறது?
• உடல் சுத்தத்தைவிடவும் ஒழுக்க சுத்தமும் ஆன்மீக சுத்தமும் ஏன் அதிக முக்கியம்?
• “நற்கிரியைகளைச் செய்ய” சுத்திகரிக்கப்பட்ட ஒரு ஜனமாக இருப்பதை நாம் எப்படி காட்டலாம்?
[பக்கம் 21-ன் படங்கள்]
உடல் சுத்தம் நாம் பிரசங்கிக்கும் செய்திக்கு அழகைக் கூட்டுகிறது
[பக்கம் 22-ன் படம்]
பொல்லாத சிந்தனைகள் பொல்லாத செயல்களுக்கு வழிநடத்தும் என்று இயேசு எச்சரித்தார்
[பக்கம் 23-ன் படங்கள்]
சுத்திகரிக்கப்பட்ட ஒரு ஜனமாகிய யெகோவாவின் சாட்சிகள் நற்கிரியைகள் செய்வதில் அதிக ஆர்வமுள்ளவர்கள்