வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு நபர் முழுக்காட்டுதல் [பாப்டிஸம்] பெற விரும்பியும் அவர் மிகவும் ஊனமுற்றவராக அல்லது மிகவும் உடல்நலம் குன்றியவராக இருப்பதால் முழுக்காட்டுதல் கொடுப்பது கடினமாக இருக்கையில் அவரை முழுமையாக தண்ணீரில் முழுக்குவது அவசியமா?
“பாப்டைஸ்” என்ற வார்த்தை பாப்டோ என்ற கிரேக்க வினைச் சொல்லிலிருந்து பிறந்தது, இதன் அர்த்தம் “நீரில் அமிழ்த்தி எடு” என்பதாகும். (யோவான் 13:26, NW) பைபிளில் “முழுக்காட்டுதல் கொடு,” “முழுக்கு” ஆகியவை ஒரே அர்த்தத்தைத் தருபவை. பிலிப்பு, எத்தியோப்பிய மந்திரிக்கு கொடுத்த முழுக்காட்டுதல் குறித்து ராதர்ஹாமின் தி எம்ஃபாஸைஸ்ட் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினார்கள். பிலிப்பு அவனை முழுக்கி எடுத்தான்.” (அப்போஸ்தலர் 8:38) ஆகவே, முழுக்காட்டுதல் பெறும் நபர் உண்மையில் தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுக்கப்படுகிறார்.—மத்தேயு 3:16; மாற்கு 1:10.
இயேசு தம்முடைய சீஷர்களிடம் ‘ஆகவே, நீங்கள் புறப்பட்டுப் போய், சகல தேசத்தாரையும் சீஷராக்கி, அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுங்கள்’ என்று கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20, NW) இதனால் யெகோவாவின் சாட்சிகள் முழுமையாக முழுக்குவதற்கு போதுமான தண்ணீருள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகள் அல்லது மற்ற இடங்களில் முழுக்காட்டுதல் கொடுக்க ஏற்பாடு செய்கிறார்கள். முழுமையாக முழுக்கி முழுக்காட்டுதல் கொடுக்க வேண்டும் என்பது வேதப்பூர்வ கட்டளையாக இருப்பதால் முழுக்காட்டப்படுவதிலிருந்து ஒருவருக்கு விலக்களிப்பதற்கு மனிதர்களுக்கு உரிமை கிடையாது. ஆகவே, ஒரு நபரின் நிலைமையினால் அசாதாரணமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதாக இருந்தாலும் அவர் கண்டிப்பாக முழுக்காட்டப்பட வேண்டும். உதாரணமாக, ரொம்பவே வயதானவருக்கு அல்லது மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய குளியல் தொட்டிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொட்டி தண்ணீர் இலேசாக சூடாக்கப்படலாம், முழுக்காட்டுதல் பெறும் நபரை மெதுவாக அந்தத் தண்ணீரில் இறக்கி, அவர் தன்னை அதற்கு பழக்கிக்கொண்ட பிறகு முழுக்காட்டுதல் கொடுக்கலாம்.
மிக மோசமான உடல் ஊனமுற்றவர்களும்கூட முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் அதனால் தொண்டையில் நிரந்தரமான ஓட்டையை உடையவர்கள் அல்லது இயந்திர மூச்சுக்கருவியை பயன்படுத்துபவர்கள்கூட முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் முழுக்காட்டுதல் பெறுவதற்கு கவனத்தோடு முன்னேற்பாடுகள் செய்யப்படுவது அவசியமாக இருக்கும். முடிந்தால் பயிற்சி பெற்ற நர்ஸை அல்லது ஒரு டாக்டரை பக்கத்தில் வைத்திருப்பது நல்லது. எல்லாருடைய விஷயத்திலும் விசேஷ கவனிப்பு அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், எந்த நிலையிலும் ஒருவர் முழுக்காட்டப்படலாம். ஆகவே, முழுக்காட்டப்படுவது ஒரு நபரின் உண்மையான ஆவலாக இருந்து, அதில் உட்பட்டிருக்கும் அபாயங்களை ஏற்றுக்கொள்ள அவர் மனமுள்ளவராய் இருந்தால் அவரை தண்ணீரில் முழுக்காட்டுதல் கொடுப்பதற்கு நியாயமான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்.