உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 7/15 பக். 5-7
  • நரகம் என்றால் உண்மையில் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நரகம் என்றால் உண்மையில் என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மரணத்திற்குப்பின் வாழ்க்கை?
  • முடிவில்லாத சித்திரவதையா பொதுவான பிரேதக் குழியா?
  • எரிநரகம்​—⁠மொத்த அழிவா?
  • ஹேடீஸ் காலி செய்யப்படுகிறது!
  • யார் நரகத்திற்குப் போகிறார்கள்?
    பைபிள் தரும் பதில்கள்
  • நரகம் எப்படிப்பட்ட இடம்?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • நரகம் என்பது என்ன? அது என்றென்றும் சித்திரவதை செய்யப்படுகிற இடமா?
    பைபிள் தரும் பதில்கள்
  • நரகம் வாதிக்கும் ஓர் இடமா?
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 7/15 பக். 5-7

நரகம் என்றால் உண்மையில் என்ன?

‘நரகம்’ என்ற வார்த்தை உங்களுடைய மனதிற்கு எந்தவொரு எண்ணத்தைக் கொண்டு வந்தாலும்சரி, பாவங்களுக்கு தண்டனை அளிக்கப்படும் ஓர் இடம் என்றே பொதுவாக மக்கள் எண்ணுகிறார்கள். பாவத்தையும் அதன் விளைவையும் குறித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) அதோடு, “பாவத்தின் சம்பளம் மரணம்” என்றும் பைபிள் கூறுகிறது. (ரோமர் 6:23) பாவத்திற்கு தண்டனையே மரணம் என்பதால், நாம் மரிக்கும்போது என்ன நேரிடுகிறது? என்பதே நரகத்தின் உண்மையான அர்த்தத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை கேள்வி.

மரணத்திற்குப் பிறகு ஏதோ ஒருவகை உயிர், ஏதோ ஒரு உருவில் தொடர்ந்து வாழ்கிறதா? நரகம் என்றால் என்ன, எப்படிப்பட்ட ஜனங்கள் அங்கே போகிறார்கள்? நரகத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு உண்மையான, திருப்தியளிக்கும் பதில்களை பைபிள் தருகிறது.

மரணத்திற்குப்பின் வாழ்க்கை?

நமக்குள் இருக்கும் ஏதோவொன்று, அதாவது ஆத்துமா அல்லது ஆவி, நாம் மரிக்கும்போது உடலைவிட்டு தப்பிச் செல்கிறதா? முதல் மனிதனாகிய ஆதாம் எப்படி உயிர் பெற்றான் என்பதை கவனியுங்கள். பைபிள் இவ்வாறு கூறுகிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்.” (ஆதியாகமம் 2:7) அவன் சுவாசித்தது தொடர்ந்து உயிர் பிழைத்திருக்கச் செய்தது என்றாலும், அவனுடைய நாசியில் “ஜீவ சுவாசத்தை” கடவுள் ஊதியது வெறுமனே காற்றை அவனுடைய நுரையீரலுக்குள் செலுத்தியதை அர்த்தப்படுத்தவில்லை. ஆதாமின் உயிரற்ற உடலில் உயிர்த்துடிப்பை​—⁠‘உயிர் சக்தியை’​—⁠கடவுள் கொடுத்தார் என்றே அர்த்தப்படுத்தியது; இந்த ‘உயிர் சக்தி’ பூமியில் வாழும் சிருஷ்டிகள் அனைத்திலும் செயல்படுகிறது. (ஆதியாகமம் 6:17; 7:22, NW) உயிர்த் துடிப்பூட்டும் இச்சக்தியை “ஆவி” என பைபிள் குறிப்பிடுகிறது. (யாக்கோபு 2:26) ஓர் இயந்திரமோ அல்லது ஒரு கருவியோ இயங்குவதற்கு துணைபுரிகிற மின்சக்திக்கு இந்த ஆவியை ஒப்பிடலாம். அந்த மின்சக்தி எந்த உபகரணத்தை இயக்குகிறதோ அதற்குரிய இயல்புகளை பெறுவதில்லை. அது போலவே உயிர் சக்தியும் அது உயிர்ப்பிக்கிற ஜீவராசிகளின் எந்த இயல்புகளையும் பெறுவதில்லை. அதற்கு ஆளுமையோ சிந்திக்கும் திறனோ கிடையாது.

ஒருவர் இறக்கும்போது அந்த ஆவிக்கு என்ன ஏற்படுகிறது? சங்கீதம் 146:4 இவ்வாறு சொல்கிறது: “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” ஒருவர் மரிக்கையில், அருவமான அவருடைய ஆவி வேறொரு உலகிற்கு சென்று ஓர் ஆவி சிருஷ்டியாக தொடர்ந்து உயிர் வாழ்வதில்லை. அது ‘தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது.’ (பிரசங்கி 12:7) அந்த நபரின் எதிர்கால வாழ்க்கைக்குரிய எந்த நம்பிக்கையும் இனி கடவுளையே சார்ந்திருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.

ஒருவருக்குள் இருக்கும் ஆத்துமா மரணத்திற்குப் பிறகும் உயிர் வாழ்கிறது, அது ஒருபோதும் சாவதில்லை என்று கிரேக்க தத்துவஞானிகள் சாக்ரடீஸும் பிளாட்டோவும் நம்பினர். ஆத்துமாவைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது? ஆதாம் “ஜீவாத்துமாவானான்” என ஆதியாகமம் 2:7 சொல்கிறது. அவன் ஓர் ஆத்துமாவைப் பெறவில்லை; அவன்தானே ஓர் ஆத்துமாவாக​—⁠ஒரு முழு ஆளாக​—⁠இருந்தான். ஆத்துமா வேலை செய்வதாகவும் உணவுக்காக ஆசைப்படுவதாகவும் திருடிச் செல்லப்படுவதாகவும் தூக்கமில்லாமல் அவதியுறுவதாகவும் இன்னும் இது போன்ற பிற காரியங்களை செய்வதாகவும் பைபிள் சொல்கிறது. (லேவியராகமம் 23:30; உபாகமம் 12:20, NW; 24:7, NW; சங்கீதம் 119:28) ஆம், மனிதனே ஓர் ஆத்துமா. ஒருவர் மரிக்கும்போது அந்த ஆத்துமா சாகிறது.​—⁠எசேக்கியேல் 18:4.

அப்படியானால், இறந்தவர்களுடைய நிலைமை என்ன? ஆதாமுக்கு தண்டனை தீர்ப்பை அளிக்கும்போது, யெகோவா இவ்வாறு கூறினார்: “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) மண்ணிலிருந்து ஆதாமை கடவுள் உருவாக்கி உயிர் கொடுப்பதற்கு முன்பு அவன் எங்கே இருந்தான்? அவன் எங்குமே இல்லை! அவன் இறந்தபோது, ஆதாம் முற்றிலும் இல்லாத அந்த நிலைக்கே சென்றுவிட்டான். பிரசங்கி 9:5, 10-⁠ல் மரித்தோருடைய நிலைமை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது, அங்கே நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” பைபிளின்படி, மரணம் என்பது ஒன்றுமில்லாத நிலைமை. மரித்தோருக்கு விழிப்புணர்வோ உணர்ச்சிகளோ எண்ணங்களோ எதுவுமே கிடையாது.

முடிவில்லாத சித்திரவதையா பொதுவான பிரேதக் குழியா?

மரித்தோருக்கு எந்தவித உணர்வுள்ள வாழ்க்கையும் இல்லாததால், நரகம் என்பது மரணத்திற்குப்பின் பொல்லாதவர்கள் சித்திரவதை அனுபவிக்கும் அக்கினிமயமான ஓர் இடமாக இருக்க முடியாது. பைபிள் எழுத்தாளர்கள் பயன்படுத்திய ஹேடீஸ் என்ற கிரேக்க வார்த்தையை பூர்வ கிரேக்கர்கள், மரித்த ஆத்துமாக்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் நரகம்-போன்ற மரித்தவர்களின் உலகத்தை குறிப்பிடுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தியதால்தான் இந்த குழப்பமே எழுந்தது. சில இடங்களில் இந்த வார்த்தை நரகம் என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது. இருந்தாலும், பைபிள் எழுத்தாளர்கள் ஹேடீஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தியபோது அவர்கள் எதை அர்த்தப்படுத்தினார்கள்? நம்முடைய தமிழ் பைபிளில் இந்த வார்த்தை எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தால் இந்தக் கேள்விக்குப் பதிலை கண்டுபிடித்துவிடலாம். இயேசு இறந்தப்பின் என்ன நடந்தது என்பதை பைபிள் எழுத்தாளராகிய லூக்கா இவ்வாறு விவரிக்கிறார்: ‘கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே [கிரேக்கில் “ஹேடீஸ்”] விடப்படுவதில்லை . . . அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லை.’ (அப்போஸ்தலர் 2:31) இயேசு சென்ற அந்த பாதாளம் அல்லது ஹேடீஸ் எங்கே இருந்தது? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நான் உங்களுக்கு ஒப்புவித்தது என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.’ (1 கொரிந்தியர் 15:3, 4) ஆகவே இயேசு பாதாளத்தில் அல்லது ஹேடீஸில், அதாவது பிரேதக் குழியில் இருந்தார்; ஆனால் அவர் அங்கேயே நிரந்தரமாக விடப்படவில்லை, ஏனென்றால் அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார்.a

அதிக துன்பங்களை அனுபவித்த நீதிமானாகிய யோபுவின் விஷயத்தையும் கவனியுங்கள். தான் படும் கஷ்டத்திலிருந்து வெளியேற விரும்பி, அவர் இவ்வாறு மன்றாடினார்: ‘நீர் என்னைப் பாதாளத்தில் [எபிரெயுவில் “ஷியோல்,” கிரேக்கில் “ஹேடீஸ்”] ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.’ (யோபு 14:13) யோபு பாதுகாப்புக்காக அக்கினிமயமான ஓர் இடத்திற்குச் செல்ல ஆசைப்பட்டதாக நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்! யோபுவைப் பொருத்தவரை “ஷியோல்” அல்லது “ஹேடீஸ்” என்பது வேதனைக்கு முடிவு கட்டுகிற வெறும் பாதாளம் அல்லது பிரேதக் குழியே. அப்படியானால், பைபிளில் ஷியோல் அல்லது ஹேடீஸ் என்பது மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக் குழி, அங்கே நல்லவர்களும் போகிறார்கள், தீயவர்களும் போகிறார்கள்.b

எரிநரகம்​—⁠மொத்த அழிவா?

எரிநரகம் என்பது எல்லாவற்றையும் பஸ்பமாக்கிவிடும் மொத்த அழிவை அடையாளப்பூர்வமாக குறிக்கக்கூடுமா? வெளிப்படுத்துதல் 20:14-⁠ல் அக்கினி என்ற பதம் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். அது இவ்வாறு கூறுகிறது: ‘மரணமும் பாதாளமும் (கிரேக்கில் ஹேடீஸ்) அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன.’ இங்கே ‘கடல்’ என்பது அடையாளப்பூர்வமானது, ஏனென்றால் அதற்குள் தள்ளப்படும் மரணத்தையும் பாதாளத்தையும் (ஹேடீஸ்) நிஜமாகவே நெருப்பில் எரிக்க முடியாது. “இது [அக்கினிக்கடல்] இரண்டாம் மரணம்”​—⁠மீண்டும் உயிருக்கு வரும் நம்பிக்கை அளிக்காத மரணம்.

அக்கினிக் கடல் என்பதன் அர்த்தமும் இயேசு பேசிய ‘எரிநரகத்தின்’ [கிரேக்கில் கெஹென்னா] அர்த்தமும் ஒன்றே. (மத்தேயு 5:22; மாற்கு 9:47, 48) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கெஹென்னா என்ற சொல் 12 தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அது எருசலேமின் மதிற்சுவர்களுக்கு வெளியே இருந்த இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கிறது. இயேசு பூமியில் இருந்த காலத்தில், இந்தப் பள்ளத்தாக்கு குப்பைகள் கொட்டப்படும் இடமாக பயன்படுத்தப்பட்டது. “குற்றவாளிகளுடைய பிரேதங்களும் மிருகங்களுடைய சடலங்களும் மற்றெல்லா கழிவுப்பொருட்களும் அங்கே போடப்பட்டன.” (ஸ்மித்ஸ் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள்) அங்கே இருந்த குப்பைகள் எரிக்கப்பட்டன, நெருப்பு தொடர்ந்து எரிவதற்காக அதில் கந்தகம் போடப்பட்டது. இந்தப் பள்ளத்தாக்கை நித்திய அழிவுக்குப் பொருத்தமான ஓர் அடையாளமாக இயேசு பயன்படுத்தினார்.

கெஹென்னாவைப் போல, அக்கினிக் கடல் என்பது நித்திய அழிவைக் குறிக்கிறது. மரணமும் பாதாளமும் (ஹேடீஸ்) அதில் “தள்ளப்பட்டன,” அதாவது மனிதகுலம் பாவத்திலிருந்தும் மரணத் தீர்ப்பிலிருந்தும் விடுவிக்கப்படும்போது அவை முற்றிலும் இராதபடி நீக்கப்படும் என்பதைக் குறிக்கிறது. மனந்திரும்பாமல் பிடிவாதமாக இருக்கும் பாவிகளும் அந்தக் கடலில் “பங்கடைவார்கள்.” (வெளிப்படுத்துதல் 21:8) அவர்களும் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். மறுபட்சத்தில், பாதாளத்தில் (ஹேடீஸில்)​—⁠மனிதவர்க்கத்தின் பொது பிரேதக் குழியில்​—⁠கடவுளுடைய ஞாபகத்தில் இருப்பவர்களுக்கு மகத்தான எதிர்காலம்.

ஹேடீஸ் காலி செய்யப்படுகிறது!

வெளிப்படுத்துதல் 20:13 இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் (ஹேடீஸ்) தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.’ ஆம், பைபிளில் விவரிக்கப்படும் ஹேடீஸ் காலி செய்யப்படும். இயேசு வாக்குறுதி அளித்தபடி, ‘காலம் வருகிறது; அப்போது [“ஞாபகார்த்த,” NW] கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்.” (யோவான் 5:28, 29, பொது மொழிபெயர்ப்பு) இறந்துபோனவர்களுக்கு இப்பொழுது எந்தவொரு ரூபமும் இல்லாதபோதிலும், யெகோவா தேவனுடைய ஞாபகத்திலிருக்கிற அந்த லட்சக்கணக்கானோர் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.​—⁠லூக்கா 23:43; அப்போஸ்தலர் 24:15.

கடவுளுடைய புதிய உலகில், அவருடைய நீதியுள்ள சட்டங்களுக்கு இசைவாக வாழும் உயிர்த்தெழுப்பப்பட்ட நபர்கள் மீண்டும் சாகவே வேண்டியதில்லை. (ஏசாயா 25:8) “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி மரணமுமில்லை. துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” சொல்லப்போனால், “முந்தினவைகள் ஒழிந்துபோயி[ருக்கும்].” (வெளிப்படுத்துதல் 21:4) பாதாளத்தில் (ஹேடீஸில்)​—⁠‘ஞாபகார்த்த கல்லறைகளில் உள்ளவர்களுக்கு’​—⁠எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியான எதிர்காலம்! யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி அதிகமாக தெரிந்துகொள்வதற்கு இந்த ஆசீர்வாதமே போதுமான காரணத்தைத் தருகிறது.​—⁠யோவான் 17:3.

[அடிக்குறிப்புகள்]

a தமிழ் பைபிளில், ஹேடீஸ் என்ற கிரேக்க வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ள பத்து இடங்களில் ‘பாதாளம்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. லூக்கா 16:19-31 வசனங்கள் பாதாளத்தில் வேதனைப்படுவதைப் பற்றி குறிப்பிடுகின்றன; ஆனாலும் அந்த முழு விவரப்பதிவும் அடையாளப்பூர்வமானது. யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தில் 88-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

b ஷியோல் என்ற எபிரெய வார்த்தை மூல எபிரெய வேதாகமத்தில் 65 தடவை வருகிறது; அதை பெரும்பாலும் ‘பாதாளம்’ என தமிழ் பைபிள் மொழிபெயர்த்திருக்கிறது.

[பக்கம் 5-ன் படம்]

தன்னை பாதாளத்தில் பாதுகாக்கும்படி யோபு ஜெபித்தார்

[பக்கம் 6-ன் படம்]

எரிநரகம்​—⁠நித்திய அழிவுக்கு அடையாளம்

[பக்கம் 7-ன் படம்]

‘ஞாபகார்த்த கல்லறைகளில் உள்ளவர்கள் வெளிவருவார்கள்’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்