மூடநம்பிக்கையின் கட்டுப்பாட்டில் வாழ்க்கை
வீட்டைவிட்டு கிளம்பும்போது யாராவது எதிரில் வந்துவிடுவார்கள். கல்லில் கால் தடுக்கிவிடும். இரவில் ஒரு வகை பறவை கத்தும். திரும்பத் திரும்ப ஒரே கனவு. இதெல்லாம் பலருக்கு சாதாரணமான, சகஜமான விஷயங்கள். ஆனால் மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் சிலருக்கோ இவை எல்லாம் ஆவியுலகிலிருந்து வரும் அடையாளங்கள், சகுனங்கள் அல்லது செய்திகள். அந்த அடையாளத்தையும் அதன் அர்த்தத்தையும் பொறுத்து அது அதிர்ஷ்டத்திற்கோ ஆபத்திற்கோ அறிகுறியாக இருக்கலாம்.
ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. நாத்தீக நம்பிக்கையுடைய சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடுகளில் பல வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கும் மக்களில்கூட பலர் இன்னமும் மூடநம்பிக்கையை பற்றிக்கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. மேற்கத்திய உலகில் அநேகர் ஜாதகம் பார்க்கிறார்கள், 13-ம் தேதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதை எண்ணி பயப்படுகிறார்கள். கறுப்பு பூனை கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். உலகின் வடக்கு அரை கோளத்தில் வாழும் சிலர், வட துருவ விண்ணொளியைப் பார்த்துவிட்டால் போரும் கொள்ளை நோயும் வருவதற்கு அது அடையாளம் என்று எண்ணுகிறார்கள். உஷ்ணமான நாட்களில் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைக்கும் டிரக் டிரைவர்கள்தான் இந்தியாவில் எய்ட்ஸ் நோயை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானில், ஒரு குகை பாதையை கட்டி முடிப்பதற்கு முன்பாக அதற்குள் ஒரு பெண் நுழைந்துவிட்டால் அது கெட்ட சகுனம் என்று நினைக்கிறார்கள். தொழில்முறை விளையாட்டுக்களிலும்கூட மூடநம்பிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. கைப்பந்து ஆட்டக்காரர் ஒருவர் வெள்ளை காலுறைகளுக்குப் பதிலாக கறுப்பு காலுறைகள் அணிந்ததால் தொடர்ந்து வெற்றி பெற்றதாக கூறுகிறார். இப்படி எத்தனையோ காரியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நீங்கள் எப்படி? வெளியே சொல்ல முடியாத, இனம் புரியாத பயம் ஏதாவது உங்களுக்கும் ஒருவேளை இருக்கிறதா? “அறிவுக்கு ஒவ்வாத [ஏதாவதொரு] நம்பிக்கை, அல்லது பழக்கம்” உங்களையும் பாதிக்கிறதா? மூடநம்பிக்கைகள் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறதா இல்லையா என்பதை இதற்கான பதில் வெளிப்படுத்திவிடும். ஏனென்றால் இப்படித்தான் ஒரு புத்தகம் “மூடநம்பிக்கை” என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கிறது.
தான் எடுக்கும் தீர்மானங்களையும் அன்றாட வாழ்க்கை போக்கையும் மூடநம்பிக்கைகள் செல்வாக்கு செலுத்த ஒருவர் அனுமதித்தால் அவர் தன்னால் புரிந்துகொள்ள முடியாத ஏதோவொன்று தன்னை ஆட்டிப்படைக்க அனுமதிக்கிறார். இப்படி செய்வது ஞானமான செயலா? தெளிவாக தெரியாத, ஒருவேளை தீமையாகவே இருக்கும் அப்படிப்பட்ட செல்வாக்குக்கு நாம் அடிபணிந்து செல்ல வேண்டுமா? மூடநம்பிக்கை என்பது தீங்கற்ற பலவீனமா அல்லது ஆபத்தான அச்சுறுத்தலா?