மூடநம்பிக்கைகள் உங்கள் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கின்றனவா?
மூடநம்பிக்கைகள் உலகெங்கிலும் காணப்படுகின்றன. சில சமயங்களில் கலாச்சாரத்தின் சொத்தாகவும் அவை மதிக்கப்படுகின்றன. அல்லது வாழ்க்கைக்கு சுவையூட்டும் சுவாரஸ்யமான விஷயங்களாக கருதப்படுகின்றன. மேற்கத்திய உலகில் வாழ்கிறவர்கள் மூடநம்பிக்கைகளை அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலோ, மூடநம்பிக்கைகள் மக்களின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கை செலுத்துகின்றன.
ஆப்பிரிக்க கலாச்சாரம் பெருமளவு மூடநம்பிக்கைகளில் ஊறிப்போனது. ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் ஆகியவற்றில் மாயமந்திரம், மூதாதையர் வழிபாடு, தாயத்துக்கள் ஆகியவை இல்லாமல் இருக்கவே இருக்காது. மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகள் ஏன் இத்தனை செல்வாக்கு செலுத்துகின்றன, மேலும் மூடநம்பிக்கைகள் எப்படி தோன்றின?
மூடநம்பிக்கைகள் உருவாக காரணம்
முக்கியமாக மரித்துப்போனவர்களின் ஆவிகளின்மீது அல்லது வேறு ஏதாவது ஆவிகளின்மீது உள்ள பயமே பல மூடநம்பிக்கைகள் உருவாக காரணம். இந்த ஆவிகள் உயிருள்ளோரை அச்சுறுத்துவதற்காக, எச்சரிப்பதற்காக, அல்லது ஆசீர்வதிப்பதற்காக எடுக்கும் முயற்சிகளின் விளைவாகவே சம்பவங்கள் நிகழ்வதாக சொல்லப்படுகிறது.
மூடநம்பிக்கைகளுக்கு குணப்படுத்துவதோடும் மருந்துகளோடும் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் எண்ணப்படுகிறது. வளரும் நாடுகளில் யானை விலைகொடுத்து மருந்துகள் வாங்குவது இன்று பெரும்பாலோருக்கு கட்டுப்படியாவதே இல்லை. ஆகவே அவர்கள் மூதாதையரின் பழக்கவழக்கங்கள், ஆவியுலகத் தொடர்பு, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக குணமடைய அல்லது நோய் வராமல் காக்க முயற்சி செய்கிறார்கள். அதோடு ஒரு டாக்டரிடம் தங்களுடைய நோயைப் பற்றி பேசுவதைவிட தங்கள் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்தவரும், தங்கள் பாஷையைப் பேசுகிறவருமான ஒரு பில்லிசூனிய வைத்தியரிடம் பேசுவது அவர்களுக்கு சுலபமாக உள்ளது. இப்படித்தான் மூடநம்பிக்கைகள் அழியாமல் இருந்து வருகின்றன.
நோய்கள் வருவதும் விபத்துக்கள் ஏற்படுவதும் ஏதோ தற்செயலாக நிகழுபவை அல்ல, அவற்றிற்கு ஆவி உலகிலுள்ள சக்திகளே காரணம் என்கிறது மூடநம்பிக்கைகளின் பாரம்பரியம். ஏதோ ஒரு விஷயத்தின் பேரில் மரித்துப்போன முன்னோருக்கு மனவருத்தமிருப்பதாக பில்லிசூனிய வைத்தியர்கள் கூறுவார்கள். அல்லது யாரோ ஒருவர் இன்னொரு பில்லிசூனிய வைத்தியரை உபயோகித்து சூனியம் வைத்திருப்பதால்தான் நோய் வந்துள்ளது அல்லது விபத்து நேர்ந்துள்ளது என்று ஆவி மத்தியஸ்தர்கள் கூறலாம்.
உலகம் முழுவதிலும் வித்தியாசமான பல மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன. பாரம்பரியங்கள், பழங்கால புராணங்கள், சூழ்நிலைமைகள் ஆகியவற்றைப் பொறுத்து அவை பரவியிருக்கின்றன. ஆனால் காணக்கூடாத ஆவி உலகிலுள்ள யாரோ ஒருவரை அல்லது ஏதோவொன்றை சாந்தப்படுத்துவது அவசியம் என்பதே பொதுவாக நிலவும் நம்பிக்கை.
தீங்கற்றவையா, ஆபத்தானவையா?
பெரும்பாலான குடும்பங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டால் அது மிகவும் விசேஷமான, குதூகலமான சம்பவம். ஆனால் மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கோ அது ஒரு சகுனம். மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டால் தேவதைகள் பிறந்துவிட்டதாக கருதி அவர்களை வணங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இரட்டைக் குழந்தைகளில் ஒன்று அல்லது இரண்டுமே இறந்துவிட்டால், அவற்றின் சிறிய உருவச்சிலைகளை உண்டுபண்ணி குடும்பத்தினர் அவற்றின் முன் உணவு படைக்கிறார்கள். மற்ற இடங்களில், இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால் அதை சாபமாக கருதி, சில பெற்றோர் அவற்றில் ஒன்றை கொன்றும் விடுகிறார்கள். ஏன்? இரண்டு பிள்ளைகளும் பிழைத்துக்கொண்டால் ஒருநாள் அவர்கள் தங்கள் பெற்றோரையே கொன்றுவிடுவார்களாம்.
சில மூடநம்பிக்கைகள் விநோதமானவையாகவும் தீங்கற்றவையாகவும் தோன்றினாலும், மற்றவை ஆபத்தானவையாக, சாவுக்கேதுவானவையாகவும் இருக்கலாம் என்பதை இப்படிப்பட்ட உதாரணங்கள் காட்டுகின்றன. தவறாக காரணம் சொல்லப்பட்டால், சாதாரண சம்பவம்கூட ஆபத்தானதாக மாறிவிடலாம்.
சொல்லப்போனால், மூடநம்பிக்கை என்பது ஒரு வகை மதமாக இருக்கிறது. மூடநம்பிக்கையில் உட்பட்டுள்ள ஆபத்தான அம்சங்களை எண்ணிப் பார்க்கையில் இக்கேள்வியைக் கேட்பது பொருத்தமானது: மூடநம்பிக்கைகளாலும் செயல்களாலும் உண்மையில் நன்மை அடைவது யார்?
மூடநம்பிக்கைகளின் பிறப்பிடம்
சாத்தான் நிஜமானவன் என்பதற்கு அத்தாட்சிகள் இருக்கிறபோதிலும் இன்று சிலர் சாத்தானோ பொல்லாத ஆவிகளோ இருப்பதை நம்புவதில்லை. ஆனால் போர் காலங்களில் எதிரணியில் ஆபத்தான எதிரி இருப்பதை நம்ப மறுத்தால் அது பெரிய அழிவுக்குத்தான் வழிநடத்தும். மனிதரைக் காட்டிலும் சக்தி படைத்த ஆவி சிருஷ்டிகளோடு போராடும்போது இதுவே உண்மை. ஏனென்றால் ‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதியுள்ளார்.—எபேசியர் 6:12.
நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் பொல்லாத ஆவி சிருஷ்டிகள் உண்மையில் இருக்கின்றன. “பல குரல் மன்னன்” ஒருவன், பேசாத ஒரு பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு அது பேசுவதுபோல தோன்ற செய்யலாம்; அது போலவே காணக்கூடாத ஆவி ஆள் ஒருவன் சர்ப்பம் ஒன்றைப் பயன்படுத்தி முதல் மனுஷியாகிய ஏவாளிடம் பேசி, அவள் கடவுளுக்கு எதிராக கலகம் செய்வதற்கு வழிநடத்தினான் என்பதாக பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 3:1-5) பைபிள் இந்த ஆவி ஆளை “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” என்று அடையாளம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) இந்த சாத்தான்தான் மற்ற தூதர்களையும் கலகம் செய்ய தூண்டிவிட்டான். (யூதா 6) இந்தப் பொல்லாத தேவதூதர்களே பேய்களாக, கடவுளின் சத்துருக்களாக மாறினார்கள்.
இயேசுவும் அவருடைய சீஷர்களும் மக்களிடமிருந்து பேய்களை விரட்டினார்கள். (மாற்கு 1:34; அப்போஸ்தலர் 16:18) இந்த ஆவிகள் உண்மையில் மரித்த மூதாதையர் அல்ல, காரணம் மரித்தோர் “ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) ஆனால் இவர்கள் சாத்தானால் தவறாக வழிநடத்தப்பட்ட கலகக்கார தேவதூதர்களே ஆவர். இவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது அல்லது இவர்களுக்கு அடிபணிந்துபோவது சாதாரண விஷயமல்ல, ஏனென்றால் இவர்களுடைய தலைவனாகிய பிசாசாகிய சாத்தானைப் போலவே இவர்களும் நம்மை விழுங்க காத்திருக்கிறார்கள். (1 பேதுரு 5:8) மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாகிய கடவுளுடைய ராஜ்யத்திலிருந்து நம் கவனத்தை திசைதிருப்பிவிட வேண்டும் என்பதே இவர்களின் ஒரே குறிக்கோள்.
சாத்தானும் அவனுடைய பேய்களும் கையாளுகிற ஒரு முறையை பைபிள் வெளிப்படுத்துகிறது; “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே” என்கிறது. (2 கொரிந்தியர் 11:14) இதைவிட மேம்பட்ட வாழ்க்கையை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்க தன்னால் முடியும் என்று சாத்தான் நம்மை நம்பச் செய்து வஞ்சித்துவிடலாம். ஆகவே இந்தப் பொல்லாத ஆவிகள் தலையிடுகையில் ஏதோ தற்காலிக நன்மைகள் கிடைப்பது போல தோன்றலாம். ஆனால் நிரந்தர தீர்வுகளை இவர்கள் கொடுக்க முடியாது. (2 பேதுரு 2:4) இவர்களால் யாருக்கும் நித்திய ஜீவனைக் கொடுக்க முடியாது, இவர்கள் சீக்கிரத்தில் அழிக்கப்பட இருக்கின்றனர். (ரோமர் 16:20) நம்முடைய படைப்பாளர் மாத்திரமே நித்திய ஜீவனையும் உண்மையான மகிழ்ச்சியையும் பொல்லாத ஆவி சேனைகளிடமிருந்து மிகச் சிறந்த பாதுகாப்பையும் அளிக்க முடியும்.—யாக்கோபு 4:7.
ஆவியுலகுடன் தொடர்புகொள்ளும் பழக்கங்களால் உதவி பெறுவதை கடவுள் கண்டனம் செய்கிறார். (உபாகமம் 18:10-12; 2 இராஜாக்கள் 21:6) அது எதிரியோடு கூட்டுச்சேர்ந்து கொள்வதையும், கடவுளுக்கு துரோகம் செய்தவர்களோடு கைகோர்த்து கொள்வதையும் போன்றது! ஜாதகம் பார்ப்பது, மந்திரவாதியிடம் குறிகேட்பது, அல்லது மூடநம்பிக்கை சார்ந்த எந்தவொரு பழக்கவழக்கத்தையும் கடைப்பிடிப்பது என்பது நீங்கள் வாழ்க்கையில் செய்யும் தீர்மானங்களை பொல்லாத ஆவிகள் கட்டுப்படுத்த அனுமதிப்பதாக இருக்கிறது. அது கடவுளுக்கு எதிராக கலகம் செய்வதில் அவர்களுக்குத் துணைபோவதற்கு சமம்.
தீமையிலிருந்து பாதுகாப்பு—சாத்தியமா?
ஆடேa நைஜரில் வாழ்ந்துவருகிறார். இவர் யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர பிரசங்கி ஒருவரிடம் பைபிளை படித்து வந்தார். ஆடே தன் கடையில் மந்திரசக்தி மிக்க ஒரு பொருளை வைத்திருந்தார்; காரணம், “எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்” என்றார். ஆடேவுக்கு பைபிளை கற்றுக்கொடுத்தவர், உண்மையான பாதுகாப்பைப் பெற யெகோவாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்பதை அவருக்கு விளக்கினார். ஆடேவுக்கு சங்கீதம் 34:7-ஐ வாசித்துக் காண்பித்தார். அது இவ்வாறு கூறுகிறது: “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” ஆகவே, “யெகோவாவால் உண்மையில் என்னை பாதுகாக்க முடியுமென்றால் இனிமேலும் இந்த மந்திரப்பொருளை நான் வைத்துக்கொள்ள போவதில்லை” என ஆடே முடிவுசெய்தார். இப்போது பல வருடங்கள் உருண்டோடிவிட்டன, அவர் ஒரு மூப்பராகவும் முழுநேர ஊழியராகவும் சேவிக்கிறார். அவருடைய எதிரிகள் யாரும் அவருக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.
நமக்கு மூடநம்பிக்கைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமயமும் எதிர்பாராத சம்பவங்களும் நம் அனைவருக்கும் நேரிடுகின்றன என்று பைபிள் கூறுகிறது. (பிரசங்கி 9:11, NW) ஆனால் யெகோவா பொல்லாத காரியங்களால் நம்மை ஒருபோதும் சோதிப்பதில்லை. (யாக்கோபு 1:13) ஆதாமிடமிருந்து நாம் சுதந்தரித்த பாவமே மரணத்துக்கும் அபூரணத்துக்கும் காரணமாகும். (ரோமர் 5:12) இதனால்தான் அனைவருமே அவ்வப்போது நோய்வாய்ப்படுகிறோம், தவறுகளைச் செய்துவிடுகிறோம், இத்தவறுகளால் மோசமான விளைவுகளையும் சந்திக்கிறோம். ஆகவே நமக்கு வரும் எல்லா நோய்களுக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் முழுக்க முழுக்க பொல்லாத ஆவிகளே காரணம் என்று கூறுவது தவறு. இப்படி ஒரு எண்ணம் இருந்தால், அந்த ஆவிகளை எப்படியாவது சாந்தப்படுத்த வேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றும்.b நமக்கு நோய் வந்துவிட்டால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமே ஒழிய ‘பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாகிய’ பிசாசாகிய சாத்தானிடமிருந்து அறிவுரை பெற செல்லக்கூடாது. (யோவான் 8:44) மூதாதையரைப் பற்றிய மூடநம்பிக்கைகள் வேரூன்றிய இடங்களில் வாழ்பவர்கள், மற்ற நாடுகளில் உள்ளவர்களைவிட நீண்ட ஆயுசு வாழ்வதில்லை அல்லது அவர்களைவிட மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதில்லை என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆகவே மூடநம்பிக்கைகள் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரிபவை அல்ல என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது.
எந்த ஒரு பொல்லாத ஆவியையும்விட கடவுள் அதிக சக்தி படைத்தவர், நம் நலனில் அக்கறை உள்ளவர். “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது.” (1 பேதுரு 3:12) பாதுகாப்பையும் ஞானத்தையும் பெற அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். (நீதிமொழிகள் 15:29; 18:10) அவருடைய பரிசுத்த வார்த்தையாகிய பைபிளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவுதான் நாம் பெறக்கூடிய மிகச் சிறந்த பாதுகாப்பாகும். ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன, சர்வ வல்லமையுள்ள கடவுளின் தயவை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பவற்றை புரிந்துகொள்ள அது நமக்கு உதவும்.
தேவனை அறியும் அறிவினால் நன்மைகள்
யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவு அறியாமைக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிர்மாறானது. இதுவே உண்மையான பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள ஒரே வழியாகும். பெனினை சேர்ந்த ஷான் என்பவரின் வாழ்க்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஷானின் குடும்பம் மூடநம்பிக்கைகளில் ஆழமாக ஊறிப்போன குடும்பம். மூடநம்பிக்கை சார்ந்த அவர்களுடைய குல வழக்கப்படி ஆண் குழந்தை பிறந்தால் தாய் பிரத்தியேகமாக கட்டப்பட்ட ஒரு குடிசையில் ஒன்பது நாட்களுக்கு தங்க வேண்டும். அவள் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அந்தக் குடிசையில் ஏழு நாட்கள் தங்க வேண்டும்.
1975-ல் ஷானின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது, அவனுக்கு அவர்கள் மார்க் என்று பெயர் சூட்டினார்கள். பைபிள் அறிவைப் பெற்றிருந்த ஷானும் அவருடைய மனைவியும் பொல்லாத ஆவிகளோடு எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், பிள்ளையைப் பெற்றெடுத்த தாய் குடிசையில் தங்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை சார்ந்த பழக்கத்துக்கு பயத்தினாலும் வற்புறுத்தலினாலும் அவர்கள் இணங்கிப் போய்விட்டார்களா? இல்லை, அவர்கள் இந்த மூடநம்பிக்கைக்கு இணங்கிப் போகவில்லை.—ரோமர் 6:16; 2 கொரிந்தியர் 6:14, 15.
இதனால் ஷானின் குடும்பத்துக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததா? பல வருடங்கள் உருண்டோடிவிட்டன, மார்க் இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய சபை ஒன்றில் உதவி ஊழியனாக இருக்கிறான். மூடநம்பிக்கைகள் தங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தவும் தங்கள் ஆவிக்குரிய நலனை கெடுக்கவும் அனுமதியாமல் இருந்ததால் அந்த குடும்பம் முழுவதும் இப்போது சந்தோஷமாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 10:21, 22.
உண்மை கிறிஸ்தவர்கள் இருளுக்குரிய மூடநம்பிக்கைகள் சார்ந்த பழக்கங்களை கடைப்பிடிக்காமல் படைப்பாளராகிய யெகோவாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அளித்துவரும் ஆன்மீக ஒளியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது கடவுளுடைய பார்வையில் சரியானதைச் செய்கிறோம் என்று அறிந்திருப்பதால் கிடைக்கும் உண்மையான மன சமாதானத்தை அனுபவித்து மகிழலாம்.—யோவான் 8:32.
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b செப்டம்பர் 1, 1999, காவற்கோபுரம் பத்திரிகையில் வெளிவந்த “பேயால் நோயா?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
உலகிலுள்ள பொதுவான சில மூடநம்பிக்கைகள்
• சோற்று கிண்ணத்தில் ‘சாப்ஸ்டிக்ஸ்’ நேராக இருப்பது சாவுக்கு அறிகுறி
• பகலில் ஆந்தையைப் பார்த்தால் துரதிர்ஷ்டம்
• ஒரு சடங்கு நடைபெறும்போது மெழுகுவர்த்தி அணைந்துவிடுவது கெட்ட ஆவிகள் அருகில் இருப்பதற்கு அடையாளம்
• குடையை கீழே போட்டுவிடுவது அந்த வீட்டில் கொலை விழும் என்று அர்த்தம்
• படுக்கையில் தொப்பியை வைத்தால் துரதிர்ஷ்டம்
• மணியோசை பேய்களை விரட்டுகிறது
• பிறந்த நாள் ‘கேக்’கிலுள்ள மெழுகுவர்த்திகள் அனைத்தையும் ஒரே ஊதில் அணைத்துவிட்டால் எண்ணியது கைகூடும்
• துடைப்பத்தை படுக்கை மீது சாய்த்து வைத்தால் அதிலுள்ள கெட்ட ஆவிகள் அந்தப் படுக்கை மீது மந்திரம் ஓதிவிடும்
• கறுப்பு பூனை உங்கள் குறுக்கே சென்றால் கெட்ட சகுனம்
• ‘ஃபோர்க்கை’ கீழே தவறவிட்டால் வீட்டிற்கு விருந்தாளி வருகிறார் என்று அர்த்தம்
• யானைகள் போட்ட படம் வாசலைப் பார்த்தவாறு இருந்தால் நல்ல யோகம்
• வாசலில் குதிரை லாடத்தை தொங்கவிடுவது நல்ல யோகம்
• வீட்டின் மீது கொடி படருவது தீவினையிலிருந்து பாதுகாக்கிறது
• ஏணிக்கு கீழே செல்வது கெட்ட சகுனம்
• முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்துவிட்டால் ஏழு வருஷத்திற்கு துரதிர்ஷ்டம்
• மிளகை கொட்டிவிடுவது ஆருயிர் நண்பருடன் வாக்குவாதம் வரும் என்று அர்த்தம்
• உப்பு கொட்டிவிடும்போது தோளின் இடப்பக்கத்தின் மேல் ஒரு சிட்டிகை உப்பை வீசவில்லையென்றால் கெட்ட சகுனம்
• சாய்ந்தாடும் நாற்காலியில் யாரும் அமராதபோது அப்படியே ஆடவிட்டுவிடுவது பேய்கள் வந்து அமர அழைப்பு விடுப்பதாகும்
• ஷூவை கவிழ்த்திப் போடுவது கெட்ட சகுனம்
• யாராவது இறந்துவிட்டால், ஆத்துமா வெளியேற ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்
[பக்கம் 6-ன் பெட்டி]
மூடநம்பிக்கையின் பிடியிலிருந்து விடுதலை
தென் ஆப்பிரிக்காவில் ஒரு பிராந்தியத்தில் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு வீட்டில் கதவை தட்டியபோது சூனியக்காரி (சாங்கோமா) ஒருத்தி கதவைத் திறந்தாள். அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற விரும்பினார்கள். ஆனால் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும் என்று அந்தப் பெண் வற்புறுத்தினாள். சாட்சிகளில் ஒருவர் ஆவியுலகத் தொடர்பு பற்றிய பைபிளின் கருத்தை உபாகமம் 18:10-12-லிருந்து வாசித்துக் காண்பித்தார். அந்தச் சூனியக்காரி செய்திக்குச் செவிசாய்த்து, பைபிளை படிக்க ஒத்துக்கொண்டாள். ஒரு சங்கோமாவாக வேலை செய்வது யெகோவாவின் சித்தத்துக்கு எதிரானது என்பது பைபிள் படிப்பில் திட்டவட்டமாக தெரிய வந்தால் அதை விட்டுவிடுவதாக சொன்னாள்.
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில் 10-ஆம் அதிகாரத்தை கலந்தாலோசித்த பிறகு, பில்லிசூனியத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் அவள் எரித்துவிட்டாள். ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள். அதோடு, கணவனிடமிருந்து பிரிந்து 17 ஆண்டுகள் ஆனபின்னும் தன் மண வாழ்க்கையை மீண்டும் சரிப்படுத்திக் கொண்டாள். இப்போது தம்பதியர் இருவரும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த, முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக இருக்கின்றனர்.
[பக்கம் 6-ன் படம்]
ஒரு “சாங்கோமா” நோயாளியின் நோயை மந்திர சக்தியால் கண்டறிய எலும்புகளை தூக்கி எறிகிறார்
[பக்கம் 7-ன் படங்கள்]
கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு உண்மையான பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது