யோகாசனம்—வெறும் உடற்பயிற்சியா அல்லது வேறெதாவதா?
தேகத்தை ஒல்லியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இன்று பலரது ஆசைக் கனவு. இதனால் பலர் ஜிம்னேஸியங்ளையும் ஹெல்த் கிளப்களையும் தேடிச் செல்கின்றனர். இதற்காக மேற்கத்திய உலகில் வாழும் லட்சக்கணக்கானோர் யோகாசனம் என்ற கிழக்கத்திய கலையின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
அழுத்தமும் மனச்சோர்வும் ஏமாற்றமும் வாட்டியெடுக்கும்போது ஆறுதல் பெறவும் அவற்றிலிருந்து விடுபடவும் மக்கள் யோகாசனத்தை நாடுகிறார்கள். குறிப்பாக, ஹிப்பிக்கள் பிரபலமாக இருந்த 1960-கள் முதற்கொண்டு கிழக்கத்திய மதங்களிலும் அவற்றின் மாய பழக்கவழக்கங்களிலும் ஏற்பட்ட ஆர்வம் மேற்கத்திய உலகில் பரவ ஆரம்பித்தது. யோகாசனத்திலிருந்து தோன்றிய ஆழ்நிலை தியானத்தை (Transcendental meditation) திரைப்பட நட்சத்திரங்களும் ராக் இசை கலைஞர்களும் பொது மக்களிடையே பிரபலமாக்கியிருக்கின்றனர். யோகாசனத்தில் ஆர்வம் அதிகரித்து வருவதை காணும்போது, நாம் இவ்வாறு கேட்டுக் கொள்ளலாம்: யோகாசனம் என்பது ஆரோக்கியமான, ஒல்லியான உடலையும் மன அமைதியையும் அளிக்கும் வெறும் உடற்பயிற்சிதானா? எந்தவித மத ஈடுபாடுமின்றி யோகாசனத்தை செய்ய முடியுமா? யோகாசனம் கிறிஸ்தவர்களுக்கு தகுந்ததா?
யோகாசனம் பிறந்த கதை
“யோகா” என்ற வார்த்தை மூல சமஸ்கிருதத்தில், ஒன்றாக சேர்த்து இணைப்பதை அல்லது பிணைப்பதை அல்லது நுகத்தடியின்கீழ் கொண்டுவருவதை, சேணம்பூட்டுவதை அல்லது கட்டுப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது. ஓர் இந்து மதத்தவருக்கு யோகா என்பது இயல்புக்கு அப்பாற்பட்ட மாபெரும் சக்தியோடு அல்லது ஆவியோடு இணைய வழிவகுக்கும் ஓர் உத்தி அல்லது கட்டுப்பாடாகும். “உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் சக்திகளை இறைவனோடு இணைய வைப்பது” என அது விளக்கப்படுகிறது.
வரலாற்றில் யோகாசனம் எப்போது பிறந்தது? தற்போதுள்ள பாகிஸ்தானில், சிந்து சமவெளியில் பல்வேறு யோகாசன நிலைகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் உருவங்கள் முத்திரைகளில் காணப்படுகின்றன. சிந்து சமவெளி நாகரிகம் பொ.ச.மு. 3000-க்கும் 1000-க்கும் இடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்தது என புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது மெசபொத்தேமிய நாகரிகத்திற்கு வெகு அண்மை காலத்தது. சிந்து சமவெளியையும் மெசபொத்தேமியாவையும் சேர்ந்த கலைப்பொருட்கள் தெய்வத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு மனிதன் விலங்கின் கொம்புகளை சூடிக்கொண்டு விலங்குகள் சூழ இருப்பதை சித்தரிக்கின்றன. இவை ‘பலத்த வேட்டைக்காரன்’ நிம்ரோதுவை நமக்கு நினைப்பூட்டுகின்றன. (ஆதியாகமம் 10:8, 9) யோகாசன நிலையில் வீற்றிருக்கும் உருவங்கள் விலங்குகளின் கடவுளும் யோகாவின் கடவுளுமாகிய சிவபெருமானுடையது என இந்துக்கள் கூறுகிறார்கள்; ஆண்குறியை அடையாளப்படுத்தும் லிங்கத்தின் மூலம் இக்கடவுளை அவர்கள் பெரும்பாலும் வழிபடுகின்றனர். இதனால், யோகாசனம் என்பது “ஆரியர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே காணப்படும், பல பண்டைய கருத்துக்களிலிருந்தும் சடங்குகளிலிருந்தும் வந்த துறவுற பழக்கங்களின் விதிமுறை தொகுப்பு” என்று இந்து உலகம் என்ற ஆங்கில நூல் கூறுகிறது.
முதலில் யோகாசன முறைகள் வாய்மொழியாக கடத்தப்பட்டன. பிற்பாடு இந்திய யோகாசன சாது பட்டான்ஜலி என்பவரால் விலாவாரியாக விளக்கப்பட்டு யோகா சூத்ரா என்ற நூலாக எழுத்து வடிவம் பெற்றன; இதுவே யோகாசன போதனைக்கு அடிப்படை நூலாக விளங்குகிறது. பட்டான்ஜலி சொல்கிறபடி, யோகாசனம் என்பது “மனித இயல்பின் உடல் மற்றும் மனம் சார்ந்த வித்தியாசப்பட்ட அம்சங்களைக் கட்டுப்படுத்தி பூரணத்தை அடைய உதவும் முறைப்படியான முயற்சி.” யோகாசனம் பிறந்த காலம் முதல் இன்று வரை கிழக்கத்திய மதங்களில், முக்கியமாக இந்து மதம், ஜைன மதம், புத்த மதம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. எங்கும் வியாபித்திருக்கும் ஆவியுடன் இரண்டற கலப்பதன் மூலம் மோட்சம் அல்லது முத்தி அடைய அது வழிவகுக்கும் என யோகாசனம் செய்வோர் சிலர் நம்புகிறார்கள்.
ஆகவே, மறுபடியும் இவ்வாறு கேட்கிறோம்: யோகாசனம் என்பது மதத்தில் எந்த ஈடுபாடுமின்றி உடலை ஆரோக்கியமாகவும் மனதை ஆசுவாசமாகவும் வைத்திருப்பதற்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக மட்டுமே இருக்க முடியுமா? அதன் பின்னணியைப் பார்க்கையில், அவ்வாறு இருக்க முடியாது என்பதே அதற்கு பதில்.
யோகாசனம் எதற்கு உங்களை வழிநடத்தும்?
மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆவியின் “நுகத்தடியில்” வருவது அல்லது அதோடு இணைவது என்ற ஆன்மீக அனுபவத்தை ஒருவர் பெறுவதற்கு வழிநடத்துவதே யோகாசனத்தின் நோக்கம். ஆனால் அந்த ஆவி எதுவாக இருக்கும்?
இந்து உலகம் என்ற ஆங்கில புத்தகத்தில் ஆசிரியர் பென்ஜமின் வாக்கர் யோகாசனத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “இது மாயவித்தை சடங்காச்சாரத்தின் ஆரம்பகால முறையாக இருந்திருக்கலாம்; யோகாசனம் இன்றும் மாயமந்திரம், மாந்திரீகம் ஆகியவற்றின் தாக்கத்தை தன்னில் கொண்டிருக்கிறது.” இதுவே அதன் நோக்கமாக இல்லை என்று பொதுவாக சொல்லிக்கொண்டாலும், யோகாசனம் செய்வதால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பெறலாம் என இந்து தத்துவஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, இந்திய தத்துவஞானம் என்ற ஆங்கில புத்தகத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அங்க நிலைகளின் வாயிலாக உடலை கட்டுப்படுத்துவதால் உஷ்ணமோ குளிரோ [யோகியை] பாதிப்பதில்லை. . . . அந்த யோகியால் தூரத்திலிருந்தவாறே காணவும் கேட்கவும் முடியும் . . . இயல்பான எந்தவித பேச்சுத்தொடர்பு முறைகளையும் பயன்படுத்தாமலேயே ஒருவர் மற்றொருவரிடம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும். . . . கண்ணுக்குப் புலப்படாதவாறு தன் உடலை மறைக்கவும் யோகியால் முடியும்.”
ஒரு யோகி ஆணிகள் பொருத்தப்பட்ட படுக்கையில் தூங்குவதோ தீயை மிதிப்பதோ சிலருக்கு கண்கட்டு வித்தையாக தோன்றலாம்; வேறு சிலருக்கு அது கேலிக்குரியதாக தோன்றலாம். ஆனால் இந்தப் பழக்கங்களும், ஒற்றை காலில் மணிக்கணக்காக சூரியனை நேராக பார்த்தபடி நிற்பது, ஒருவர் நீண்ட நேரத்திற்கு மூச்சைக் கட்டுப்படுத்தி மணலுக்குள் புதைந்திருப்பது போன்றவையும் இந்தியாவில் சகஜம். மூன்றரை வயது பெண் குழந்தை ஒன்று மெய் மறந்த நிலையில் கிடக்க, 750 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள கார் அதன் வயிற்றின் மீது ஏறிச் சென்றதைப் பற்றி ஜூன் 1995-ல் த டைம்ஸ் ஆஃப் இண்டியா குறிப்பிட்டது. அவள் எந்தத் தீங்குமின்றி எழுந்து வந்ததைக் கண்ட கூட்டத்தினருக்கு வியப்பு தாளவில்லை. “அது முழுக்க முழுக்க யோகாசன சக்தியால்தான்” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
எந்தவொரு சாதாரண மனிதனுக்கும் இவற்றில் எதையும் செய்யும் திறமையில்லை என்பதில் சந்தேகமில்லை. ஆகவே ஒரு கிறிஸ்தவன் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: இத்தகைய வியப்பூட்டும் செயல்கள் எதைக் குறிக்கின்றன? அவை ‘பூமியனைத்தின் மேலும் உன்னதமானவரான’ யெகோவா தேவனின் தூண்டுதலால் நிகழுபவையா அல்லது வேறு ஏதாவது ஊற்றுமூலத்திலிருந்து வருபவையா? (சங்கீதம் 83:17) இந்த விஷயத்தை பைபிள் தெளிவாக விளக்குகிறது. கானானியர்கள் குடியிருந்த தேசத்திற்குள்—வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள்—இஸ்ரவேலர் நுழையவிருந்த தறுவாயில், “அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டாம்” என மோசேயின் மூலம் இஸ்ரவேல் புத்திரருக்கு யெகோவா கூறினார். என்ன ‘அருவருப்புகள்’? ‘குறிசொல்லுகிறவனுக்கும், நாள் பார்க்கிறவனுக்கும், அஞ்சனம் பார்க்கிறவனுக்கும், சூனியக்காரனுக்கும்’ எதிராக மோசே எச்சரித்தார். (உபாகமம் 18:9, 10) இவை கடவுளுக்கு அருவருப்பானவை; ஏனெனில் இவை பேய்களின் செய்கைகள், மாம்சத்தின் செயல்கள்.—கலாத்தியர் 5:19-21.
கிறிஸ்தவர்களுக்குரியதல்ல
மேற்கூறப்பட்ட விஷயத்திற்கு முரணாக உடற்பயிற்சியாளர்கள் என்னதான் விளக்கமளித்தாலும் யோகாசனம் வெறும் உடற்பயிற்சி அல்ல. இந்துக்களின் நடத்தை, பழக்கவழக்கம், சடங்காச்சாரம் என்ற ஆங்கில புத்தகம் யோகாசன கலை பயில ஒரு குருவிடம் சென்ற இருவரின் அனுபவங்களை குறிப்பிடுகிறது. அதில் ஒருவர் சொன்னது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “நான் என்னுடைய சக்திக்கு மிஞ்சி எவ்வளவு நேரத்திற்கு முடியுமோ அவ்வளவு நேரத்திற்கு மூச்சை அடக்கினேன், ஏறக்குறைய மயங்கி விழுந்துவிடும் நிலைக்கு வந்தபோதுதான் சுவாசித்தேன். . . . ஒருநாள் நண்பகலில் ஒரு பிரகாசமான நிலாவைப் பார்ப்பதாக நினைத்தேன், அது அங்குமிங்கும் அசைந்தாடுவது போல் தெரிந்தது. மற்றொரு சமயம் பட்டப்பகலில் என்னை காரிருள் மூடிக்கொண்டதுபோல் தோன்றியது. இந்தக் காட்சிகளைப் பற்றி . . . என் குருவிடம் சொன்னபோது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். . . . என் தவத்துக்கு வெகு சீக்கிரத்தில், வியப்பூட்டும் பலன்கள் கிடைக்கும் என அவர் உறுதி கூறினார்.” இரண்டாம் நபர் இவ்வாறு கூறுகிறார்: “கண் இமைக்காமல் அல்லது ஆடாமல் அசையாமல் தினமும் வானத்தை தொடர்ந்து பார்ப்பதற்கு அவர் எனக்கு உதவினார். . . . சில சமயங்களில் வானத்தில் தீச்சுடர்களைப் பார்ப்பது போல உணர்ந்தேன்; இன்னும் சில சமயங்களில் எரிகோள்களையும் எரிநட்சத்திரங்களையும் பார்ப்பது போல் உணர்ந்தேன். நான் இந்தளவு முன்னேறியதைப் பார்த்து என் ஆசிரியர் அதிக சந்தோஷப்பட்டார்.”
இந்த விசித்திர காட்சிகள், யோகாசன பயிற்சிகளின் உண்மையான நோக்கத்தை அடைய வழிவகுக்கும் சிறந்த பலன்கள் என அந்த குருக்கள் கருதினதாக தெரிகிறது. ஆம், யோகாசனத்தின் இலட்சியமே மோட்சம் அடைவதுதான், அதாவது ஆளுருவற்ற ஒரு மகத்தான ஆவியுடன் இணைவதுதான். “இயல்பான சிந்தனா திறமையை (வேண்டுமென்றே) நிறுத்திவிடுவது” என இது விவரிக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள இலக்கிற்கு முரணாக உள்ளது தெளிவாக தெரிகிறது; அவர்களுக்குக் கொடுக்கப்படும் அறிவுரை: “உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடு[ங்கள்] . . . இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”—ரோமர் 12:1, 2.
உடற்பயிற்சியை தேர்ந்தெடுப்பது தனிப்பட்ட விதத்தில் தீர்மானிக்க வேண்டிய விஷயம். இருந்தாலும், உடற்பயிற்சி, சாப்பிடுதல், குடித்தல், உடை உடுத்துதல், பொழுதுபோக்கு அல்லது வேறெதுவும் யெகோவா தேவனுடன் தங்கள் உறவை பாதிப்பதை கிறிஸ்தவர்கள் அனுமதிப்பதில்லை. (1 கொரிந்தியர் 10:31) உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமே உடற்பயிற்சி செய்வதற்கு, இப்படிப்பட்ட ஆபத்தான ஆவியுலகத் தொடர்போடும் மாந்திரீகத்தோடும் சம்பந்தப்படாத அநேக வழிகள் இருக்கின்றன. பொய் மதத்தில் வேரூன்றிய பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தவிர்ப்பதன் மூலம் நீதியுள்ள புதிய ஒழுங்குமுறையில் கடவுளுடைய ஆசீர்வாதங்களை நாம் எதிர்நோக்கலாம்; அங்கே உடலிலும் மனதிலும் காலாகாலத்துக்கும் பூரண ஆரோக்கியத்தை அனுபவித்து மகிழலாம்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 22-ன் படங்கள்]
அநேகர் ஆவியுலக சம்பந்தமற்ற ஆரோக்கியமான உடற்பயிற்சிகளை அனுபவித்து மகிழ்கிறார்கள்