தீய சக்திகள் செயல்படுகின்றனவா?
“ஒன்றுவிடாமல் எல்லா எமர்ஜன்ஸி வழிகளையும் மாயமந்திர சக்திகள் அடைத்து வைக்க முயல்கிற மாதிரி இந்த உலகம் தப்பிக்க வழி தெரியாமல் ஒரே குழப்பத்தில் தவிக்கிறது.”—ஷான் க்ளோட் சூலேரி, பத்திரிகையாளர்.
‘ஒருவரின் ஆதரவற்ற உணர்வே மிகப்பெரிய தீய சக்தி செயல்படுகிறது என்ற எண்ணத்தை அவரில் ஏற்படுத்துகிறது.’—ஜோஸப் பார்டன், சரித்திராசிரியர்.
தீவிரவாதிகளின் தாக்குதலால் செப்டம்பர் 11, 2001-ல் ஏற்பட்ட மாபெரும் பயங்கரம், அநேகரை சிந்திக்க வைத்தது. “எந்த ஒரு மிருகமும் இவ்வளவு காட்டுமிராண்டித்தனமாய் நடந்துகொள்ளாது அல்லது நடந்துகொள்ள முடியாது” என இங்கிலாந்தின் ஃபினான்ஷியல் டைம்ஸ் என்ற செய்தித்தாளில் மைக்கேல் ப்ரௌஸ் குறிப்பிட்டார். நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கம் குறிப்பிட்டபடி, “தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்த எந்தளவுக்கு திட்டமிட்டிருக்க வேண்டும் என்பதை மட்டும் நாம் சிந்தித்தால் போதாது, அவர்கள் எந்தளவுக்கு வெறுப்புணச்சியோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை சிந்திப்பதும் முக்கியம். இந்த வெறுப்பு, சாதாரண போர்களைத் தூண்டிவிடும் பகைமையைவிட பயங்கரமானது, கட்டுப்பாடுகளே இல்லாதது, எந்த ஒப்பந்தத்திற்கும் இணங்காதது.”
இதற்கு ஏதோ தீய சக்தி காரணமாக இருக்குமோ என பல்வேறு நம்பிக்கைகளை உடையவர்கள் நினைத்தார்கள். போஸ்னியாவில் நடந்த இனப் பகைமையின் பயங்கரத்தைக் கண்ணாரக் கண்ட சரஜெவோவைச் சேர்ந்த ஒரு பிஸினஸ்மேன் இவ்வாறு குறிப்பிட்டார்: “போஸ்னிய போர் நடந்து ஓர் ஆண்டுக்குப் பின்பு, சாத்தான்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என நன்றாக புரிந்துவிட்டது. அது முற்றிலும் வெறித்தனமான செயல்.”
பிசாசு இருப்பதை நம்புகிறீர்களா என சரித்திராசிரியர் ஷான் டெலூமோவிடம் கேட்டபோது அவர் கொடுத்த பதில்: “நான் பிறந்தது முதற்கொண்டு இப்போதுவரை நடந்துவந்திருக்கும் சம்பவங்களையெல்லாம் வைத்து பார்க்கும்போது தீய சக்தி இருப்பதை நான் எப்படித்தான் மறுக்க முடியும்: நான்கு கோடிக்கும் அதிகமானோரின் உயிரை குடித்த இரண்டாம் உலகப் போர்; ஆஸ்விட்ச் முகாமும் மரண முகாம்களும்; கம்போடியாவில் நடந்த இனப் படுகொலை; சாசெஸ்கு ஆட்சியின் இரத்த வெறியுடைய கொடுங்கோன்மை; உலகம் முழுவதும் பல இடங்களில் சித்திரவதையே அரசின் நியமமாக இருக்கும் நிலை. இப்படியாக பயங்கரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. . . . ஆகவே, அச்செயல்கள் ‘பேய்த்தனமானவை’ என்று நாம் சொல்வது சரிதான் என நினைக்கிறேன்; கொம்புகளையும் பிளவுபட்ட கால்களையும் உடைய பிசாசினால் அவை தூண்டப்படுகின்றன என்பதல்ல, ஆனால் இந்த உலகை ஆட்டிப்படைக்கும் செல்வாக்கிற்கும் இதில் செயல்படுகிற தீய சக்திக்கும் அடையாளமாக விளங்கும் பிசாசினாலேயே அவை தூண்டப்படுகின்றன.”
ஷான் டெலூமோவைப் போல, சர்வதேச அளவில் சமுதாயத்தில் நடந்துவரும் இந்தப் பயங்கரங்களை ‘பேய்த்தனமானவை’ என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இது எதை அர்த்தப்படுத்துகிறது? இந்தப் பயங்கரங்களை எல்லாம் தூண்டிவிடுகிற புலனுக்கு அப்பாற்பட்ட தீய சக்திகள் இருக்கின்றனவா? அல்லது மனிதர் சாதாரணமாக செய்கிற கெட்ட காரியங்களைவிட படுமோசமான குற்றங்களை தூண்டிவிடுகிற தீய ஆவிகள் இருக்கின்றனவா? அந்த சக்திகள் தீமைக்கு மன்னனாகிய பிசாசாகிய சாத்தானின் தலைமையில் செயல்படுகின்றனவா?
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
பிள்ளைகள்: U.S. Coast Guard photo