சாத்தான்—கற்பனைக் கதாபாத்திரமா நிஜமான கொடூரனா?
தீய செயல்களின் பிறப்பிடத்தைக் கண்டறியும் ஆர்வம் தொன்றுதொட்டே சிந்தனையாளர்களுக்கு இருந்திருக்கிறது. ஜேம்ஸ் ஹேஸ்டிங்ஸ் என்பவரால் வெளியிடப்பட்ட எ டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனிதன் விழிப்புணர்வு பெற்றது முதற்கொண்டு தன் பலத்துக்கு மீறிய சக்திகளால் கட்டுப்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறான்; அவை தீங்கு விளைவித்திருக்கின்றன அல்லது அழிவுக்கு வழிநடத்தியிருக்கின்றன.” மேலும், “பண்டைய காலத்தவர் இயல்புணர்வின் தூண்டுதலால் காரணங்களை அறிய முயன்றனர்; இயற்கை சக்திகளுக்கும் அவற்றின் வெளிப்பாடுகளுக்கும் ஆள் வடிவம் கொடுத்தனர்” என்றும் அந்த டிக்ஷ்னரி கூறுகிறது.
சரித்திராசிரியர்களின்படி, பேய் கடவுட்களிலும் தீய ஆவிகளிலும் உள்ள நம்பிக்கை மெசபொத்தோமிய சரித்திரத்தின் ஆரம்ப காலம் முதற்கொண்டே இருந்து வந்ததை கண்டறியலாம். “சுட்டெரிப்பவர்” என அறியப்படும் நேர்கால் என்ற கொடூர தெய்வத்தின் மேற்பார்வையில் கீழுலகம் அல்லது “திரும்பி வரமுடியாத இடம்” இருந்ததாக பூர்வ பாபிலோனியர் நம்பினர். அவர்கள் பேய்களுக்கும் பயந்தனர்; அதனால், மந்திரங்களை ஓதி அவற்றை சாந்தப்படுத்த முயன்றனர். எகிப்திய புராணத்தில் தீமையின் கடவுளாக கருதப்பட்ட செட், “வளைந்து ஒடுங்கிய மூக்கையும், நேரான சதுர காதுகளையும், விறைப்பான கவை முள் போன்ற வாலையும் உடைய விசித்திரமான மிருகமாக சித்தரிக்கப்பட்டது.”—லாரோஸ் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி.
கிரேக்கர்களுக்கும் ரோமர்களுக்கும் நன்மையும் தீமையும் செய்கிற தெய்வங்கள் பல இருந்தாலும் தீங்கு விளைவிக்கும் பிரதான கடவுள் இருக்கவில்லை. எதிரும் புதிருமான இரண்டு நியமங்கள் இருப்பதாக தத்துவஞானிகள் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். எம்பெடாகிலிஸை பொறுத்தவரை அன்பும் இணக்கமின்மையுமே அந்த நியமங்கள். பிளேட்டோவைப் பொறுத்தவரை அவற்றில் ஒன்று நன்மை தருவது மற்றொன்று தீமை செய்வது. லா டையாப்லா (பிசாசு) என்ற புத்தகத்தில் ஷார்ஷ் மின்வா குறிப்பிடுகிறபடி, “பண்டைய [கிரேக்க-ரோம] புற மதத்தினர் பிசாசு இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.”
அஹுரா மஸ்டா அல்லது ஆர்மஸ்ட் என்ற உன்னத தெய்வம் ஆங்ரா மைன்யூவை அல்லது ஆரிமனை படைத்ததாகவும், இந்த ஆரிமன் தீமை செய்ய தெரிந்துகொண்டு அழிக்கும் ஆவியாக மாறியதாகவும் ஈரானிலுள்ள சொராஸ்டிரிய மதம் கற்பித்தது.
பாவத்தை வருவித்த கடவுளுடைய எதிரியாக சாத்தானை யூத மதம் எளிமையாக சித்தரிக்கிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு பின்பு அந்த விளக்கம் புறமத கருத்துக்களோடு சேர்ந்து கலப்படமானது. என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா இவ்வாறு குறிப்பிடுகிறது: “பொ.ச.மு. கடைசி நூற்றாண்டுகளுக்குள் . . . ஒரு பெரிய மாற்றமே ஏற்பட்டிருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் [யூத] மதம் இரட்டை தத்துவத்தின் பல கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டது; அதன்படி பரலோகத்திலும் சரி பூமியிலும் சரி, கடவுளையும் நன்மையும் சத்தியமுமான சக்திகளையும் தீயதும் வஞ்சகமுமான ஆற்றல்மிக்க சக்திகள் எதிர்த்தன. பெர்சிய மதத்தின் செல்வாக்கே இக்கருத்து உருவாக காரணமென தெரிகிறது.” “கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும் தாயத்துகளை அணிவதுமே பேய்களிலிருந்து பாதுகாப்பளித்தன” என த கன்ஸைஸ் ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா அறிவிக்கிறது.
விசுவாசதுரோக கிறிஸ்தவ இறையியல்
சாத்தானையும் பேய்களையும் குறித்து யூத மதம் பைபிளுக்குப் புறம்பான கருத்துக்களை ஏற்றுக்கொண்டது போலவே, விசுவாசதுரோக கிறிஸ்தவர்களும் வேதப்பூர்வமற்ற கருத்துக்களை உருவாக்கினார்கள். “சாத்தானிடம் விலைகொடுத்து தம் மக்களை அவனிடமிருந்து கடவுள் விடுவித்தார் என்பதே பண்டைய இறையியல் கருத்துக்களில் மிகவும் எல்லைமீறிபோன ஒன்று” என தி ஆங்கர் பைபிள் டிக்ஷ்னரி குறிப்பிடுகிறது. இந்தக் கருத்தை தெரிவித்தவர் ஐரீனியஸ் (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு). இக்கருத்து ஆரஜன் (பொ.ச. மூன்றாம் நூற்றாண்டு) என்பவரால் மேலும் விரிவுபடுத்தப்பட்டது; “மனிதர் மீது பிசாசுக்கு சட்டப்பூர்வ உரிமை இருந்தது” என வலியுறுத்தினார், “கிறிஸ்துவின் மரணம் . . . பிசாசுக்கு செலுத்தப்பட்ட மீட்கும்பொருள்” என்றும் அவர் கருதினார்.—அடால்ஃப் ஹார்னாக் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் டாக்மா.
த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறபடி, “[பிசாசுக்கு மீட்கும்பொருள் செலுத்தப்பட்டதைப் பற்றிய கருத்து] சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு இறையியல் வரலாற்றில் முக்கிய பாகம் வகித்தது,” அது சர்ச்சின் நம்பிக்கைகளில் ஒன்றாகவும் இருந்தது. மீட்கும்பொருள் சாத்தானுக்கு செலுத்தப்பட்டதைப் பற்றிய கருத்தை அகஸ்டீன் (பொ.ச. நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு) என்பவர் உட்பட பிற சர்ச் ஃபாதர்களும் ஆமோதித்தனர். கடைசியாக, பொ.ச. 12-ம் நூற்றாண்டில், கத்தோலிக்க இறையியலர்களான ஆன்ஸெல்மும் அபீலரும் கிறிஸ்துவின் பலி சாத்தானுக்கு அல்ல, கடவுளுக்கே செலுத்தப்பட்டது என்ற முடிவுக்கு வந்தனர்.
இடைக்கால மூடநம்பிக்கைகள்
பெரும்பாலான கத்தோலிக்க சர்ச் பேரவைகள் சாத்தானைப் பற்றிய பேச்சை எடுக்கவே தயங்கியது குறிப்பிடத்தக்கது; ஆனாலும், பொ.ச. 1215-ல் நான்காம் லேட்டரன் பேரவை “விசுவாசத்தின் பக்திப்பூர்வ அறிவிப்பு” என நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுவதை அறிமுகப்படுத்தியது. முதல் கோட்பாடு இவ்வாறு குறிப்பிடுகிறது: “பிசாசையும் மற்ற பேய்களையும் கடவுள் நல்லவர்களாகவே படைத்தார், ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த செயல்களால் தீயவர்களாக மாறினர்.” மனிதகுலத்தை வசப்படுத்த அவர்கள் மும்முரமாக பாடுபடுவதாகவும் அது குறிப்பிடுகிறது. இந்த பயம் இடைக்காலங்களில் வாழ்ந்த அநேகரை கவ்வியது. விநோத வியாதி, திடீர் மரணம், நல்ல விளைச்சல் இல்லாமை போன்ற வழக்கத்திற்கு மாறான எந்த சம்பவத்திற்கும் சாத்தானே காரணம் என நினைத்தனர். பொ.ச. 1233-ல் ஒன்பதாம் போப் கிரகோரி, பிசாசை வணங்குவதாக கருதப்பட்டோர் உட்பட திருச்சபைக்கு எதிரான முரண் சமய கோட்பாட்டாளர்களுக்கு எதிராக பல கட்டளைகளை பிறப்பித்தார்.
பிசாசோ அவனுடைய பேய்களோ ஜனங்களை ஆட்கொள்ளலாம் என்ற நம்பிக்கை சீக்கிரத்தில் அவர்களை மொத்தமாக ஒரு பிரமைக்கு—மாந்திரீகம், பில்லிசூனியம் குறித்த இனம்புரியாத பயத்திற்கு—ஆளாக்கியது. 13-ம் நூற்றாண்டிலிருந்து 17-ம் நூற்றாண்டிற்குள் சூனியக்காரர்களைப் பற்றிய இந்த பயம் ஐரோப்பா முழுவதிலும் பரவி ஐரோப்பிய குடியேறிகள் மூலம் வட அமெரிக்கா வரை எட்டியது. புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகளான மார்டின் லூத்தர், ஜான் கால்வின் போன்றோரும்கூட சூனியக்காரிகள் கொலை செய்யப்படுவதை ஆதரித்தனர். ஐரோப்பாவில், பில்லிசூனியம் சம்பந்தப்பட்ட வதந்தி அல்லது மோசமான பழிபேச்சுகள் அடிப்படையிலான விசாரணைகள் கத்தோலிக்க நீதிமன்றங்களிலும் பொது நீதிமன்றங்களிலும் நடத்தப்பட்டன. ஏதோ குற்றம் செய்ததாக அப்பாவி ஆட்களை ஒத்துக்கொள்ள வைக்க பொதுவாக கையாளப்பட்ட முறை சித்திரவதையாகும்.
இவ்வாறு குற்றம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தீக்கு இரையாக்கப்பட்டனர்; இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலுமோ அப்படிப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கையைப் பற்றி த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “சில சரித்திராசிரியர்கள் சொல்கிறபடி பில்லிசூனியத்தில் ஈடுபட்டதால் 1484 முதல் 1782 வரை சுமார் 3,00,000 பெண்களை கிறிஸ்தவ சர்ச் கொலை செய்தது.” இடைக்காலத்தின் அந்த அவலத்திற்கு சாத்தானே காரணம் என்றால், அவனுக்கு கைப்பாவைகளாக இருந்தவர்கள் யார்—பலியானவர்களா அல்லது மதவெறி காரணமாக அவர்களை துன்புறுத்தினவர்களா?
இன்றைய நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை
18-ம் நூற்றாண்டு, அறிவொளி என அறியப்பட்ட பகுத்தறிவு வாத இயக்கத்தை அமல்படுத்தியது. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு குறிப்பிடுகிறது: “அறிவொளி இயக்கத்தின் தத்துவமும் இறையியலும், பிசாசை இடைக்கால புராணத்தின் கற்பனையில் உருவான கதாபாத்திரமாக சித்தரித்து அவனை கிறிஸ்தவர்களின் மனங்களிலிருந்து எடுத்துப்போட முயன்றது.” ரோமன் கத்தோலிக்க சர்ச்சோ இதற்கு எதிராக பிரதிபலித்து, பிசாசாகிய சாத்தான் இருப்பதை நம்புவதாக அதன் முதல் வாடிகன் பேரவையில் (1869-70) உறுதியாக எடுத்துரைத்தது; பின்னர் இரண்டாம் வாடிகன் பேரவையில் (1962-65) சற்று தயக்கத்தோடு மீண்டும் இந்த நம்பிக்கையை வலியுறுத்தியது.
அதிகாரப்பூர்வமாக, நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா ஒத்துக்கொள்கிறபடி, “தேவதூதர்களையும் பேய்களையும் குறித்த நம்பிக்கையை சர்ச் அங்கீகரிக்கிறது.” எனினும், “இந்த உலகத்தின் தீய செயல்களுக்கு பிசாசுதான் காரணம் என்பதை இன்று அநேக கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை” என கத்தோலிக்க கோட்பாடுகளைப் பற்றிய டேயா என்ற பிரெஞ்சு அகராதி குறிப்பிடுகிறது. சமீப ஆண்டுகளில் கத்தோலிக்க இறையியலாளர்கள், ஒருபுறம் அதிகாரப்பூர்வ கத்தோலிக்க கோட்பாட்டையும் விட்டுக்கொடுக்காமல் மறுபுறம் இன்றைய கருத்துக்களையும் புறக்கணிக்காமல், நிலைமையை மிக ஜாக்கிரதையாக கையாண்டிருக்கிறார்கள். “கிறிஸ்தவ முற்போக்கு இறையியல், சாத்தானை பற்றிய பைபிள் விவரிப்பை சொல்லர்த்தமாக அல்ல, ஆனால் அடையாள அர்த்தத்தில் எடுத்துக்கொள்கிறது; அதாவது, அண்டத்தில் தீமை இருப்பதையும் அது பரவியுள்ள அளவையும் புராணக்கதை வாயிலாக எடுத்துக்காட்ட முயற்சி செய்யப்பட்டிருப்பதாக கருதுகிறது” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. இதே என்ஸைக்ளோப்பீடியா புராட்டஸ்டன்டினரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது: “புராட்டஸ்டன்டின் இன்றைய முற்போக்கு கொள்கை, பிசாசை ஒரு ஆளாக ஏற்க வேண்டிய அவசியமில்லை என்கிறது.” ஆனால், சாத்தானைப் பற்றி பைபிள் சொல்வதை உண்மை கிறிஸ்தவர்கள் வெறும் அடையாள அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
பைபிள் என்ன கற்பிக்கிறது
தீமையின் பிறப்பிடத்தைப் பற்றியதில் சிறந்த விளக்கத்தை தருவது பைபிள் மட்டுமே, மனித தத்துவமோ இறையியலோ அல்ல. சாத்தானைப் பற்றி பைபிள் கொடுக்கும் விளக்கம், தீமையும் மனிதரின் துன்பங்களும் எப்போது ஆரம்பித்தன, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வன்முறை ஒவ்வொரு வருடமும் அதிகரிப்பது ஏன் என்பதையெல்லாம் அறிந்துகொள்வதற்கு அடிப்படையானது.
சிலர் இவ்வாறு கேட்கலாம்: ‘கடவுள் அன்புள்ள நல்ல படைப்பாளராக இருந்தால், சாத்தானைப் போன்ற ஒரு தீய ஆவி சிருஷ்டியை அவரால் எப்படி படைக்க முடியும்?’ யெகோவா தேவனின் செயல்கள் அனைத்தும் பூரணமானவை, புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் அனைத்தும் சுயாதீனத்துடன் படைக்கப்பட்டவை என்பதே பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நியமம். (உபாகமம் 30:19; 32:4; யோசுவா 24:15; 1 இராஜாக்கள் 18:21) ஆகவே, சாத்தானாக மாறிய அந்த ஆவி ஆளும் பரிபூரணமாகவே படைக்கப்பட்டிருக்க வேண்டும்; பிற்பாடு வேண்டுமென்றே சத்தியமும் நீதியுமான பாதையிலிருந்து விலகியிருக்க வேண்டும்.—யோவான் 8:44; யாக்கோபு 1:14, 15.
சாத்தானுடைய கலகத்தனமான போக்கு ஏறக்குறைய ‘தீரு ராஜாவின்’ மனப்போக்கை ஒத்திருக்கிறது; அந்த ராஜா, ‘பூரண அழகுள்ளவர்’ என்றும் ‘சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி அவரில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது மட்டும், தன் வழிகளில் குறையற்றிருந்தார்’ என்றும் கவிதை நடையில் வருணிக்கப்பட்டார். (எசேக்கியேல் 28:11-19) சாத்தான், யெகோவாவுடைய உன்னதத் தன்மைக்கு எதிராகவோ படைப்பாளர் என்ற ஸ்தானத்திற்கு எதிராகவோ போட்டி போடவில்லை. அவனை கடவுள் படைத்திருக்க அவன் எப்படி போட்டி போட முடியும்? என்றாலும், யெகோவா தம் பேரரசுரிமையை நிர்வகிக்கும் விதத்தைக் குறித்து சாத்தான் சவால்விட்டான். ஏதேன் தோட்டத்தில், முதல் மனித தம்பதிக்கு உரியதான, அவர்களுடைய நலன் சார்ந்த ஏதோவொன்றை கடவுள் கொடுக்க மறுத்ததாக சாத்தான் மறைமுகமாக குறிப்பிட்டான். (ஆதியாகமம் 3:1-5) யெகோவாவின் நீதியான பேரரசுரிமைக்கு எதிராக கலகம் செய்யும்படி ஆதாம் ஏவாளை தூண்டுவதில் அவன் வெற்றி கண்டான்; அது அவர்களுக்கும் அவர்களது சந்ததியாருக்கும் பாவத்தையும் மரணத்தையும் பெற்றுத் தந்தது. (ஆதியாகமம் 3:6-19; ரோமர் 5:12) ஆகவே, மனித துன்பங்களுக்கு சாத்தானே மூலகாரணன் என பைபிள் காட்டுகிறது.
ஜலப்பிரளயத்திற்கு சற்று முன்பு, வேறு தூதர்களும் சாத்தானுடன் கலகம் செய்வதில் சேர்ந்துகொண்டனர். அவர்கள் பூமியிலுள்ள பெண்களோடு பாலியல் இன்பங்களை அனுபவிக்க மனித உருவெடுத்தனர். (ஆதியாகமம் 6:1-4) ஜலப்பிரளயத்தின்போது இந்தக் கலகக்கார தூதர்கள் ஆவி பிரதேசத்துக்கு திரும்பினர்; ஆனால், பரலோகத்தில் கடவுளுடன் அனுபவித்த ‘ஆதிமேன்மைக்கு’ அல்ல. (யூதா 6) அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் இருளடைந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். (1 பேதுரு 3:19, 20; 2 பேதுரு 2:4) அவர்கள் பேய்களாக மாறினர்; இனியும் யெகோவாவின் பேரரசுரிமைக்கு கட்டுப்பட்டு சேவை செய்யாமல், சாத்தானுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களாயினர். அந்தப் பேய்களால் மீண்டும் மனித உருவெடுக்க முடியாமல் போனாலும் மனிதரின் மனங்களிலும் வாழ்க்கையிலும் இன்னும் மிகுந்த செல்வாக்கு செலுத்த முடியும்; இன்று நாம் காணும் பெரும்பாலான வன்முறைகளுக்கு இந்தப் பேய்களே காரணம் என்பதில் சந்தேகமே இல்லை.—மத்தேயு 12:43-45; லூக்கா 8:27-33.
சாத்தானுடைய ஆட்சிக்கு முடிவு சமீபம்
இன்றைய உலகில் தீய சக்திகள் செயல்பட்டு வருவது இப்போது தெளிவாகிறது. “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார்.—1 யோவான் 5:19.
என்றாலும், தான் சிறைப்படுத்தப்படுவதற்கு முன்பு பேரழிவுகளை ஏற்படுத்த தனக்கு ‘கொஞ்ச காலம்’ மாத்திரமே இருப்பதை பிசாசு அறிந்திருப்பதால், அவன் பூமியில் துயரங்களை இன்னும் தீவிரமாக்குகிறான் என நிறைவேறிய பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 12:7-12; 20:1-3) சாத்தானுடைய ஆட்சியின் முடிவு, நீதி நிலவும் புதிய உலகுக்கு வழிவகுக்கும்; அங்கு கண்ணீரோ, மரணமோ, வேதனையோ ‘இருக்காது.’ அப்போது, கடவுளுடைய சித்தம், ‘பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படும்.’—வெளிப்படுத்துதல் 21:1-4; மத்தேயு 6:10.
[பக்கம் 4-ன் படங்கள்]
காடூர தெய்வமாகிய நேர்காலை (இடது கோடி) பாபிலோனியர்கள் நம்பினர்; எதிரும் புதிருமான இரண்டு நியமங்கள் இருப்பதை பிளேட்டோ (இடது) நம்பினார்
[படங்களுக்கான நன்றி]
உருளை: Musée du Louvre, Paris; பிளேட்டோ: National Archaeological Museum, Athens, Greece
[பக்கம் 5-ன் படங்கள்]
ஐரீனியஸ், ஆரஜன், அகஸ்டீன் போன்றவர்கள் பிசாசுக்கு மீட்கும்பொருள் செலுத்தப்பட்டதாக கற்பித்தனர்
[படங்களுக்கான நன்றி]
ஆரஜன்: Culver Pictures; அகஸ்டீன்: From the book Great Men and Famous Women
[பக்கம் 6-ன் படம்]
சூனியக்காரர்களைப் பற்றிய பயம் லட்சக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு வழிநடத்தியது
[படத்திற்கான நன்றி]
From the book Bildersaal deutscher Geschichte