வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வேறொரு மதத் தொகுதியிடமிருந்து ஒரு கட்டடத்தை விலைக்கு வாங்கி அதை ராஜ்ய மன்றமாக மாற்றுவது ஒரு விதமான கலப்பு விசுவாசமாகுமா?
பொதுவாக, யெகோவாவின் சாட்சிகள் மற்ற மதத்தினருடன் அப்படிப்பட்ட விவகாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கிறார்கள். அப்படியே ஈடுபட்டாலும் அத்தொடர்பு ஒரு விதமான கலப்பு விசுவாசமாகாது. ஒரே தடவை ஈடுபடும் வியாபார விவகாரமாகவே எண்ணப்படலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபை மற்றொரு மதத் தொகுதியுடன் கூட்டு சேர்ந்து வணக்கத்திற்காக இரு தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ளும்படி ஒரு கட்டடத்தை கட்டுவதில்லை.
யெகோவாவைப் பொறுத்தவரை எது ஒரு விதமான கலப்பு விசுவாசமாக உள்ளது? அப்போஸ்தலன் பவுலின் ஆலோசனையை சற்று கவனியுங்கள்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களை ஏற்றுக் கொ[ள்வேன்].” (2 கொரிந்தியர் 6:14-18) ‘சம்பந்தம்,’ ‘ஐக்கியம்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்துகையில் பவுல் எதை அர்த்தப்படுத்தினார்?
பவுல் குறிப்பிடும் சம்பந்தம் என்ற வார்த்தை, விக்கிரக ஆராதனைக்காரருடனும் அவிசுவாசிகளுடனும் வணக்கத்திலும் ஆன்மீக விஷயங்களிலும் தொடர்பு வைத்துக்கொள்வதை உட்படுத்துகிறது. ‘பேய்களோடே ஐக்கியமாயிருத்தலுக்கு’ எதிராக கொரிந்தியர்களை அவர் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 10:20, 21) எனவே, கலப்பு விசுவாச செயல் என்பது, பிற மத அமைப்புகளின் வணக்கத்தில் பங்கெடுப்பது அல்லது ஆன்மீக ரீதியில் சம்பந்தம் வைப்பதாகும். (யாத்திராகமம் 20:5; 23:13; 34:12) ஒரு மத அமைப்பு பயன்படுத்திய கட்டடத்தை வாங்குகையில், ராஜ்ய மன்றத்திற்கு ஒரு கட்டடத்தைப் பெறுவதற்காகவே அந்தத் தொடர்பு வைத்துக்கொள்ளப்படுகிறது. அதை ராஜ்ய மன்றமாக பயன்படுத்துவதற்கு முன்பு, பொய் வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட எந்தவித அடையாள சின்னங்களும் அகற்றப்படும். இவ்வாறு மாற்றியமைத்ததும், யெகோவாவை வணங்கும் நோக்கத்துடனேயே அது அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஆகவே மெய் மற்றும் பொய் வணக்கத்துக்கு இடையே எந்த பங்கோ, சம்பந்தமோ இருப்பதில்லை.
அவ்வாறு கட்டடத்தை வாங்கும் விஷயத்தில் காரியங்களை கலந்தாலோசிக்கையில், மறுதரப்பினருடன் வைத்துக்கொள்ளும் தொடர்பை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும், அதுவும் இந்தக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான தொடர்பை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்ற பவுலின் எச்சரிப்பை கிறிஸ்தவ சபையிலுள்ளவர்கள் மனதில் வைக்க வேண்டும். பிற மதத்தாரைவிட உயர்ந்தவர்களாக நம்மை நினைக்காவிட்டாலும் அவர்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்வதையோ அவர்களுடைய வணக்கத்தில் பங்குகொள்வதையோ நாம் தவிர்க்கிறோம்.a
ஒரு மத அமைப்புக்குச் சொந்தமான கட்டடத்தை ஒரு சபை வாடகைக்கு எடுக்கையில் என்ன செய்வது? வாடகைக்கு எடுக்கையில், அப்படிப்பட்டவர்களுடன் அடிக்கடி தொடர்பு வைக்க வேண்டியிருக்கும்; எனவே அதை தவிர்க்க வேண்டும். ஒரேவொரு கூட்டத்துக்கு பயன்படுத்த அப்படிப்பட்ட ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்தாலும், பின்வரும் விஷயங்களை மூப்பர் குழு பரிசீலிக்க வேண்டும்: கட்டடத்திற்கு உள்ளேயோ வெளியேயோ ஏதாவது விக்கிரகம் அல்லது மத சின்னங்கள் இருக்குமா? அப்பகுதியில் உள்ளோர் அந்தக் கட்டடத்தை உபயோகிப்பதை எப்படி கருதுவார்கள்? இந்தக் கட்டடத்தை பயன்படுத்துவதால் சபையில் யாராவது இடறலடைவார்களா? (மத்தேயு 18:6; 1 கொரிந்தியர் 8:7-13) இந்த அம்சங்களை மூப்பர்கள் கவனமாக சீர்தூக்கிப் பார்த்து பிறகு அதற்கேற்ப தீர்மானிப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கட்டடத்தை விலைக்கு வாங்கி அதை ராஜ்ய மன்றமாக்க முடிவு செய்கையில், தங்களுடைய மனசாட்சியோடு பொதுவாக சபையாரின் மனசாட்சியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவால் அங்கீகரிக்கப்படாத அமைப்புகளுடன் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களை வைத்துக்கொள்வதற்கு பொருத்தமான சந்தர்ப்பங்களைப் பற்றி அறிய காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1999, பக்கங்கள் 28, 29-ஐக் காண்க.
[பக்கம் 27-ன் படம்]
ஜெபாலயமாக இருந்த இந்தக் கட்டடம், விலைக்கு வாங்கப்பட்டு ராஜ்ய மன்றமாக புதுப்பிக்கப்பட்டது