உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 10/1 பக். 29-30
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • இதே தகவல்
  • அவிசுவாசிகளுடன் உங்களைப் பிணைத்துக்கொள்ளாதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • பைபிள் புத்தக எண் 47—2 கொரிந்தியர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 10/1 பக். 29-30

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று பைபிள் சொல்வதால், ஓர் அவிசுவாசியுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபடுவது ஒரு கிறிஸ்தவருக்குப் பொருத்தமானதாக இருக்குமா?

அந்த அறிவுரையை நாம் 2 கொரிந்தியர் 6:14-16-ல் பார்க்கிறோம்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?”

ஒரு கிறிஸ்தவர் ஓர் அவிசுவாசியுடன்கூட சேர்ந்து வியாபாரம் செய்வது போன்றவற்றிற்கு எதிராகக் குறிப்பிட்ட தடைவிதிப்புகளைக் கொடுக்கும் நோக்கோடு இந்த அறிவுரை பவுலால் கொடுக்கப்பட்டது என்று நம்புவதற்கு எவ்வித காரணமுமில்லை. இருந்தாலும், அந்த அறிவுரை அதற்கும், வாழ்க்கையின் மற்ற அம்சங்களுக்கும் நிச்சயமாகப் பொருந்தும்.

பவுல் இந்த அறிவுரையைப் பண்டைய கொரிந்துவிலிருந்த தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எழுதினார். குறிப்பாகச் சீரழிந்த ஒரு பட்டணத்தில் வாழ்ந்து வந்ததால், தினமும் ஒழுக்கம் சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய அபாயங்களுடன் அவர்கள் போராட வேண்டியதாய் இருந்தது. அவர்கள் கவனமாக இராவிட்டால், ஆரோக்கியமற்றச் செல்வாக்குகளுக்கு வெளிப்படுத்தப்படுவது அவர்களை ஒரு தனிப்பட்ட மக்களாக, “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்த ஜனமாயும்,” இருப்பதற்கான அவர்களுடைய தீர்மானத்தை அது படிப்படியாகப் பலவீனப்படுத்தலாம்.—1 பேதுரு 2:9.

பவுல், 2 கொரிந்தியர் 6:14-16-ல் காணப்படுவதை எழுதுவதற்குமுன், தன்னுடைய கொரிந்திய சகோதரர்கள் மத்தியில் ஒரு கடுமையான பிரச்னையைக் கையாண்டிருந்தார். அவர்கள் படுமோசமான ஒழுக்கக்கேடான காரியத்தைச் செய்த ஓர் ஆளைத் தங்கள் மத்தியில் அனுமதித்திருந்தனர்; ஆகையால், அந்த மனந்திரும்பாத பாவியை வெளியேற்றும்படி, அல்லது சபைநீக்கம் செய்யும்படி பவுல் அவர்களுக்குக் கட்டளையிட்டார். (1 கொரிந்தியர் 5:1) கெட்டக் கூட்டுறவு அல்லது உலகின் ஒழுக்க சூழலில் கட்டுப்பாடற்ற ஈடுபாடு கிறிஸ்தவர்களைப் பாதிக்கலாம் என்பதை அந்த மனிதனின் தவறு காண்பித்தது.

கிறிஸ்தவர்கள் அந்தப் புறம்பாக்கப்பட்ட மனிதனுடன் கூட்டுறவைத் தவிர்க்கவேண்டியவர்களாய் இருந்தார்கள்; ஆனால் அது அவர்கள் அவிசுவாசிகளைவிட்டு முழுமையாகப் பிரிந்திருக்கவேண்டும் என்பதை அர்த்தப்படுத்தியதா? அவர்கள் நடைமுறையில் கிறிஸ்தவர்களல்லாதவர்களுடன் எல்லா தொடர்பையும் செயல்தொடர்புகளையும் தவிர்த்து, சவக்கடலுக்கு அருகிலுள்ள கும்ரானுக்குள் ஒதுங்கிய யூதர்களைப்போன்ற ஒரு வகையான துறவிகள் பிரிவாக ஆகவேண்டுமா? பவுல் பதிலளிக்கட்டும்: “விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், . . . இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.”—1 கொரிந்தியர் 5:9, 10.

அந்த வார்த்தைகள் எதைச் சுட்டிக்காண்பிக்கின்றன என்பது தெளிவாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் இன்னும் இந்தக் கிரகத்தில்தான் வாழ்கின்றனர்; கீழ்த்தரமான ஒழுக்கங்களையும் வித்தியாசமான தராதரங்களையும் கொண்டுள்ள அவிசுவாசிகளுடன் ஏறக்குறைய தினசரி தொடர்புகொண்டு அவர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதைப் பவுல் உணர்ந்திருந்தார். அது அடிப்படையில் தவிர்க்கப்பட முடியாததால், அத்தகைய தொடர்புகளின் அபாயங்களைக் குறித்துக் கிறிஸ்தவர்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்கவேண்டும்.

இப்போது நாம் திரும்பவும் பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் கடிதத்தைக் கவனிப்போம். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ஊழியர்களாகத் தகுதிபெற்றிருக்கின்றனர் என்றும், கிறிஸ்துவுக்குப் பதிலாகத் தூதுவராக இருக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார். அவர்களுடைய ஊழியத்தைத் தவறான அபிப்பிராயத்திற்குக் கொண்டுவராதபடி, அவர்கள் இடறலுக்கான எந்தக் காரணத்திற்கும் எதிராகத் தங்களைக் காத்துக்கொள்ளும்படி அவர் சொன்னார். (2 கொரிந்தியர் 4:1–6:3) தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளைப்போல் இருந்த கொரிந்திய சகோதரர்கள், தங்களுடைய பாசத்தைக் காண்பிப்பதில் விரிவடையும்படி பவுல் நேரடியாக உந்துவித்தார். (2 கொரிந்தியர் 6:13) அதற்குப்பின் அவர் உந்துவித்தார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.” அந்தக் குறிப்பை அழுத்திக்காண்பிப்பதற்கு அவர் ஒரு தொடரான சொல்லாட்சித்திறம்படைத்த வேறுபாடுகளைப் பயன்படுத்தினார்.

வியாபாரம் அல்லது வேலை போன்ற வாழ்க்கையின் ஏதாவது குறிப்பிட்ட பகுதிக்குக் கவனஞ்செலுத்தி, அமல்படுத்தப்படுவதற்கு ஒரு சட்ட விதிமுறையைப் பவுல் அமைத்துக்கொண்டிருக்கவில்லை என்பதைச் சூழமைவு காண்பிக்கிறது. மாறாக, அவர் தான் அன்பாக நேசித்த சகோதரர்களுக்குப் பரந்த, முழுநிறைவான, உதவியுள்ள ஆலோசனையைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

உதாரணமாக, திருமணத்தில் அக்கறை கொண்டிருக்கும் ஒரு கிறிஸ்தவரின் காரியத்தில் இந்த அறிவுரை பொருந்துமா? நிச்சயமாக. தன்னுடைய முதல் கடிதத்தில், திருமணம் செய்துகொள்ள விரும்பிய கிறிஸ்தவர்களுக்கு “கர்த்தருக்கு உட்பட்டவனை மாத்திரமே” மணம் செய்ய அப்போஸ்தலன் அறிவுரை கூறினார். (1 கொரிந்தியர் 7:39, NW) அந்த வார்த்தைகளிலிருந்த ஞானத்தை, 2 கொரிந்தியர் 6:14-18-ல் அவரால் பின்னால் எழுதப்பட்ட வார்த்தைகளின்மூலம் அழுத்திக்காண்பித்தார். யெகோவாவின் ஊழியக்காரராகவும் கிறிஸ்துவைப் பின்பற்றாதவருமாக இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்ய ஒரு கிறிஸ்தவர் ஆழ்ந்து சிந்திப்பவராக இருந்தால், அவர் அல்லது அவள் ஓர் அவிசுவாசியுடன் தொடர்புகொள்வதைப்பற்றி சிந்திப்பவராக இருப்பார். (ஒப்பிடவும்: லேவியராகமம் 19:19; உபாகமம் 22:10.) தெளிவாகவே, அடிப்படையான இசைவுபொருத்தமில்லாமை ஆவிக்குரிய பிரச்னைகளும் உட்பட, பிரச்னைகள் எழும்புவதை அதிகரிக்கும். உதாரணமாக, அவிசுவாசி தற்போது அல்லது எதிர்காலத்தில் ஒரு பொய்க் கடவுளை வணங்குவதைப் பின்தொடரக்கூடும். பவுல் வாதாடினார்: “கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது?”

வாழ்க்கையின் மற்றொரு அம்சத்தை—ஓர் அவிசுவாசியுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபடுவதை—பற்றியதென்ன? சில சந்தர்ப்பங்களில், தன் வாழ்க்கைக்குத் தேவையானதைச் சம்பாதிப்பதற்கும், தன்னுடைய குடும்பத்தைக் கவனிப்பதற்கும், கிறிஸ்தவரல்லாத ஒருவருடன் சேர்ந்து வியாபார தொடர்பில் ஈடுபடுவதன் அவசியத்தை ஒரு கிறிஸ்தவர் உணரக்கூடும். (1 தீமோத்தேயு 5:8) வெறும் உதாரணங்களாக இருப்பவற்றைக் கவனியுங்கள்:

ஒரு வகை சரக்குகளை விற்கும் வியாபாரத்தைத் துவங்கும்படி ஒரு கிறிஸ்தவர் விரும்பலாம்; ஆனால் அதைச் செய்வதற்கு ஒரே வழி, தேவையான பொருட்கள் அல்லது நிதியைப் பெறும் வாய்ப்புடைய ஓர் ஆளுடன் சேர்ந்து கூட்டுவியாபாரம் செய்வதே ஆகும். மற்றொரு கிறிஸ்தவர் விவசாயம் செய்ய (அல்லது ஒரு வகை விலங்குகளை வளர்க்க) விரும்புகிறார்; இருந்தாலும் அவருக்கு நிலம் கிடைக்கவில்லை; அப்போது தனக்கு நிலத்தைக் குத்தகைக்கு அளிக்க மனமுள்ளவராக இருக்கும் ஒருவரோடு, எந்த லாபத்திலும் பங்குகொள்ளும்படியாக சேர்ந்து அவர் அதைச் செய்யவேண்டியதிருக்கும். ஒருவேளை, அரசாங்கம் ஒருசில உரிமங்களையே (licences) வழங்குவதாலும், அவை ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதாலும், மற்றொரு கிறிஸ்தவரால் நீர்குழாய்ச் சம்பந்தப்பட்ட (plumbing) வேலைகளைத் துவங்கமுடியாமல் இருக்கலாம்; அப்போது ஏற்கெனவே உரிமம் பெற்றிருக்கும் ஓர் அவிசுவாசியான உறவினருடன் சேர்ந்துகொள்வதே அவருக்கு ஒரே வழியாக இருக்கும்.—மாற்கு 12:17.

இவை வெறுமனே உதாரணங்களே. வாய்ப்புகளை இழக்கச்செய்வதற்கோ, அங்கீகரிக்க அல்லது அங்கீகரிக்காமலிருக்க எந்தக் கூற்றையும் சொல்வதற்கோ நாங்கள் முயற்சி செய்கிறதில்லை. ஆனால் இந்த உதாரணங்களை மனதில் கொண்டு, 2 கொரிந்தியர் 6:14-18-லுள்ள அறிவுரை ஏன் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதை உங்களால் காண முடிகிறதா?

உறவினராக அல்லது அவ்வாறு இல்லாத அவிசுவாசியுடன் சேர்ந்து ஒரு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒரு கிறிஸ்தவர், எதிர்பாராத பிரச்னைகளையும் சோதனைகளையும் எதிர்ப்படுவார். அரசாங்கச் சட்டங்களை மீறுவதாக இருந்தாலுங்கூட, சம்பாதிப்பதற்குக் குறைவாகக் கணக்குக்காட்டுவதும், பதிவுகளில் கொண்டிராத வேலையாட்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்வதுமே நியாயமான லாபத்தை அடைவதற்கு வழியாகும் என்று அந்தக் கூட்டாளி முடிவு செய்யலாம். முறைப்படியான பொருள் விவரப்பட்டியலில் குறிப்பிடப்படாத பொருட்களைப்பெற சரக்கு வழங்குபவருக்குத் திருட்டுத்தனமாகப் பணமளிக்க அவர் மனமுள்ளவராய் இருக்கக்கூடும். அதில் அல்லது அதைப்போன்ற நேர்மையின்மையில் ஒரு கிறிஸ்தவர் எந்தப் பங்கையாவது கொண்டிருப்பாரா? வரிக்குரிய தாள்கள் அல்லது அவர்கள் வியாபாரத்தை எப்படிச் செய்கிறார்கள் என்பதைப்பற்றிய மற்றச் சட்டப்பூர்வ பத்திரங்களில் அவர்கள் இருவரும் கையொப்பம் இடவேண்டிய நேரம் வருகையில் அந்தக் கிறிஸ்தவர் என்ன செய்வார்?—யாத்திராகமம் 23:1; ரோமர் 13:1, 7.

அல்லது புறமத விடுமுறைகளுடன் சம்பந்தப்பட்ட சாமான்களைச் சேகரித்து வைக்க, கம்பெனியின் பெயரில் விடுமுறை வாழ்த்து இதழ்களை அனுப்ப, வியாபார இடத்தை மதவிடுமுறைகளுக்கு அலங்கரிக்க வேண்டுமென அந்த அவிசுவாசியான கூட்டாளி விரும்பலாம். பவுல் கேட்டார்: “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? . . . நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.” “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்” கொள்வேன் என்ற இந்தக் குறிப்பு எவ்வளவு பொருத்தமானது! (2 கொரிந்தியர் 6:16-18) அந்த ஞானமான அறிவுரையைப் பொருத்திப்பிரயோகிக்கையில், அநேக கிறிஸ்தவர்கள், கூடுமானவரை தாங்கள் குறைவான பிரச்னைகளை எதிர்ப்படுவதற்கு வாய்ப்பைக் கொண்டிருக்கும் வகையான உலகப்பிரகாரமான வேலைகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.—எபிரெயர் 13:5, 6, 18.

வேலைசெய்பவர்களாகவோ வியாபாரங்களின் சொந்தக்காரர்களாகவோ, தங்களுடைய உலகப்பிரகாரமான வேலையில் கிறிஸ்தவர்கள் செய்கிற எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு அல்லது விசாரித்துக்கொண்டிருக்க சபை போதிக்கப்படவில்லை. நிச்சயமாக, பொய் வணக்கத்தில் ஈடுபடுவதில் அல்லது ஏதோ ஒரு வகை பொய்ச்சொல்லுதல் அல்லது திருடுதலில் ஒரு கிறிஸ்தவர் உடந்தையாக இருப்பது தெரியவந்தால், யெகோவாவின் தராதரங்களை நிலைநாட்டுவதற்கு சபை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதிருக்கும்.

எனினும், முக்கிய குறிப்பு என்னவெனில், ஏவுதலால் எழுதப்பட்ட “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக,” என்ற பவுலின் அறிவுரை, பிரச்னைகளையும் தேவைப்படக்கூடிய எந்த நீதிவிசாரணை நடவடிக்கையையும் தவிர்க்க கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்யும். ஞானமான கிறிஸ்தவர்கள் அந்த அறிவுரையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, பைபிள் நியமங்களை விட்டுக்கொடுப்பதற்காக கூடுதலான அழுத்தத்தின்கீழ் வரும் எந்த நிலைமைகளுக்கும் ஆளாவதைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள். எவராவது ஒருவர் ஓர் அவிசுவாசியுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபடவேண்டும் என்று நினைத்தால், தன்னுடைய தெரிவுக்குத் தான் பொறுப்புள்ளவராக இருப்பார் என்பதை உணர்ந்தவர்களாக, மற்றவர்கள் அவரை உடனடியாக நியாயந்தீர்க்கவோ குறைசொல்லவோ வேண்டியதில்லை. அடிப்படையாக, ஓர் அவிசுவாசியுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு எதிராக ஒரு விதிமுறையான, அமல்படுத்தவேண்டிய சட்டத்தைப் பவுல் அமைத்துக்கொண்டிருக்கவில்லை. இருந்தாலும், அவருடைய அறிவுரை புறக்கணிக்கப்படக்கூடாது. அந்த அறிவுரையைக் கடவுள் ஏவி, நம்முடைய நன்மைக்காக பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கும்படி செய்தார். அதற்குக் கவனம் செலுத்துகையில் நாம் ஞானமுள்ளவர்களாய் இருக்கிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்